November 27, 2008

தேசத்தின் முதல் எதிரி பயங்கரவாதம்!உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் கடந்த 60 ஆண்டு காலமாக தேசத்திற்கே சவாலாக விளங்கும் பிரச்சனைகள் எழாமல் இருப்பதும் (காஷ்மீர் விதிவிலக்கு), பாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு வருவதும், பொதுவாக அமைதியான முறையில் நமது மக்களின் வாழ்க்கை முறை அமைந்துள்ளதும் நமது நாட்டின் பலத்திற்கு சான்றாகும்.

மேலும் இந்தியாவை உலக மக்கள் பார்ப்பது காந்தியின் கண்ணாடி வழியாகத்தான். அதாவது இந்திய தேசம் பெளத்த தத்துவத்தை மட்டும் உலகிற்கு வழங்கவில்லை. அது அகிம்சையை போதித்த காந்திய போராட்ட முறைகளையும் உலகிற்கு அளித்துள்ளது. (இது குறித்து சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்)பல இனங்கள், மொழிகள், மாநிலங்கள், சாதிகள் என பிரிந்திருந்தாலும் இந்திய தேசம் ஒரே மனிதனாக எழுந்து நிற்பது இன்றைக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய நாடு சிறிது சிறிதாக பயங்கரவாதிகளின் பிடிக்குள் செல்கிறதோ என்ற அச்சம் மக்கள் மனதை ஆட்டிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நேற்றைய தினம் இதுவரை இல்லாத அளவிற்கு பயங்கரவாதிகள் மும்பை நகரத்தையே தங்களது பிடிக்குள் கொண்டு வந்து விட்டார் போன்ற பயங்கரவமான - மிருகத்தனமான - இரத்தவெறிப்பிடித்த பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதுவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குள் இயங்கக் கூடிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களான தாஜ், ஒபராய்... போன்ற ஓட்டல்களில் பயங்கரவாதிகள் தங்களது கைக்குள் கொண்டு வந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுத் தள்ளியுள்ளனர்.

அது மட்டுமின்றி மும்பை இரயில்வே நிலையத்திற்குள் சென்று அங்கும் அப்பாவி பயணிகளை சுட்டுத் தள்ளியுள்ளனர். எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி இந்திய மக்கள் மீது மாபெரும் மறைமுகப்போரை இந்த பயங்கரவாதிகள் தொடுத்துள்ளதைத்தான் இது காட்டுகிறது. மேலும் இந்த பயங்கரவாதிகள் அடுத்தடுத்த இடத்திற்கு போலீஸ் ஜீப்பிலேயே தப்பியுள்ளதாக கூறுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தொடர்ந்து இதுபோல் 7 இடங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதோடு, 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு இடத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வந்துள்ளது. அதுவும் பயங்கரவாதிகள் உள்நாட்டிலிருந்தும் - வெளிநாட்டிலிருந்தும் பயிற்சி எடுத்துக் கொண்டு திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருவதை அவ்வப்போது நமது காவல்துறை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக சமீபத்தில்தான் வி.எச்.பி.ஐயச் சார்ந்த இந்து பயங்கரவாத அமைப்பு எப்படி மலேகானில் குண்டு வைத்தது என்பதை மகாராஷ்டிரா போலீஸ் வெளிப்படுத்தியது. அதுவும் இந்த பயங்கரவாதிகள் சாதுவின் வடிவமாக காட்சியளித்து நாட்டை ரணகளமாக்கியவர்கள் என்பதையும் அம்பலப்படுத்தியது. அத்துடன் இந்த இந்து பயங்கரவாதிகளுக்கு துணையாக இராணுவத்தில் உள்ளவர்கள் எப்படி ஒத்துழைத்தார்கள் என்பதையும், இந்து பயங்கரவாதிகளின் மிலிட்டரி பள்ளியில் பயிற்சி பெற்றவர்களின் செயல்களையும் சமீபத்தில்தான் நமது மீடியாக்களும் - அரசும் வெளிப்படுத்தி வந்தது. இதுவரை எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தை மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்த இந்தியா தற்போது உள்நாட்டிலேயே காவி உடையில் பயங்கரவாதிகள் திரிவதை பார்க்க முடிந்தது. இந்த விசாரணைகளை இந்திய மகக்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில்தான் தற்போதைய மும்பை தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்த மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் எந்த மதத்தை பின்பற்றுபவராக இருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு கடுமையான தண்டனைகளை அளிக்க வேண்டும். அத்துடன் பயங்கரவாதம் இந்திய மண்ணில் வேறுன்றுவதற்கான அரசியல் காரணங்களையும் இந்திய அரசு ஆராய வேண்டும். சகிப்புத் தன்மையில்லாமல் - இந்திய மக்களிடையே மதக் காழ்ப்புணர்சிகளை தூண்டி விடும் மதவாத அமைப்புகள் அனைத்தையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். அவற்றை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக பாபர் மசூதி இடிப்பில் குற்றவாளிப் பட்டியலில் இருந்து தப்பியுள்ள அத்வானி உட்பட, குஜராத்தில் நடைபெற்ற மதப்பாசிச வன்முறைச் செயல்களுக்கு மோடி உட்பட தொடர்புள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய நாட்டில் சிறுபான்மை - பெரும்பான்மை மக்கள் ஒன்றுபட்ட சகோதரர்களாக வாழ்வதை உத்திரவாதப்படுத்துவது முதன்மையான ஒன்றாக மாறியுள்ளது. மேலும் ஏகாதிபத்திய சதியுடன் - வெளிநாட்டு பயங்கரவாதிகள் நடத்தும் இதுபோன்ற வெறியாட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு போராட வேண்டும். குறிப்பாக நமது உளவுத்துறை இன்னும் பலப்படுத்த வேண்டும். தற்போதைய மும்பை தாக்குதலில் உளவுத்துறை இப்படி அப்பாவித்தனமாக செயல்பட்டு நமது மக்கள் பலி கொள்வதற்கு காரணமாகி விட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது. மத்திய காங்கிரஸ் அரசு இதில் அரசியல் சித்து விளையாட்டுக்களில் எல்லாம் ஈடுபடாமல் நமது தேசத்தில் பாதுகாப்பை - குறிப்பாக உள்நாட்டு பாதுகாப்பு பலப்படுத்த அனைவரின் ஒத்துழைப்பை நாட வேண்டும். இது குறித்து தேசிய அளவில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு அதன் அடிப்படையில் முடிவெடுத்து நேர்மையாக செயலாற்ற வேண்டும். பயங்கரவாதிகளின் பெயர்கள் வெவ்வேறு வடிவங்களில் இருக்கலாம். ஆனால் பயங்கரவாதம் என்பது உலக மக்களின் முதல் எதிரி! அது எந்த வடிவில் வந்தாலும் அதனை முறியடிக்க வேண்டியது இந்திய மக்களின் கடமை!

November 20, 2008

அம்பேத்கர் மீது மீண்டும் திணிக்கப்பட்ட தீண்டாமை!

தாமதமான பதிவுக்கு வருந்துகிறேன். மெளனம் சில நேரங்களில் அடிப்படைவாத பிற்போக்கு சக்திகளுக்கு சாதகமாகக் கூடும்.


டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற சம்பவங்கள் தமிழகத்தையும், குறிப்பாக தாய்மார்களின் உள்ளத்தையும் உலுக்கி விட்டது. இப்படியும் நடக்குமா? இவர்கள் மனிதப் பிறவிகளா? இவர்கள் படிப்பதற்காகத்தான் கல்லூரிக்கு செல்கிறார்களா? அல்லது ரவுடித்தனம் செய்வதற்கு செல்கிறார்களா? ரத்தத்தை உறைய வைக்கும் விலை மதிக்க முடியாத இந்த ஆவேச கேள்விகள் பொத்தம் பொதுவாய் எழுந்தாலும் இவைகள் யாருக்கு எதிராய் எழுப்பப்பட்டிருக்க வேண்டிய கேள்விகள்?

இவ்வளவுப் பெரிய வன்முறை சம்பவம் நடந்துக் கொண்டிருந்தபோது கைகட்டி, வாய்பொத்தி, செல்போனில் அளவளாவிக் கொண்டிருந்த காக்கிச் சட்டைகளுக்கு இதயம் இருக்கிறதா? ஏன் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறார்கள்? இவர்களுடைய கைகளைக் கட்டிப் போட்டது யார்? என்ற கேள்விகள் அலை அலையாய் இன்னும் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சம்பவம் நடைபெற்ற இடத்தில் வழிபோக்கர்களாய் இருந்த மனிதர்களின் மனங்கள் பதைத்து போலீசே நடவடிக்கை எடு என்று கத்தியபோதும், கெ;"சியபோதும் கேளாக் காதினராய் முகம் மறைத்துக் கொண்ட காவல்துறை ஏன் அமைதிக் காத்தது? இன்றைக்கு விழுந்து விழுந்து நடவடிக்கை எடுப்பதாக தினமும் செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. இந்த வேகத்தில் ஒரு சதவிகிதம் கூட ஏன் அப்போது இல்லையே என்ற கேள்விக்கு காவல்துறை என்ன சமாதானம் சொல்லப்போகிறது?

இந்த சம்பவம் குறித்து வினவு ஒரு அற்புதமான பதிவை எழுதியிருந்தார். அதேபோல் லக்கிலுக் திரு. ஆனந்த் டெல்டும்பேவின் உண்மைக் கண்டறியும் குழுவினரின் அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு. இருப்பினும் நம் பங்கிற்கு இது குறித்து கருத்து சொல்லாமல் இருக்கலாமா? என்ற மண்டைக் குடைச்சல் உறுத்திக் கொண்டே இருந்தது...

இந்த சம்பவத்திற்கு யார் மூல காரணம் என்று ஆராய்வது புலனாய்வுத்துறையின் வேலை என்று ஒதுக்கித் தள்ள முடியுமா? முடியாது. முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தினத்தையொட்டி - கல்லுரியில் தேவர் ஜாதியைச் சார்ந்த மாணவர்கள் ஒரு விழாவை நடத்தினர். அது அவர்களது உரிமை என்றுக் கூட சொல்லலாம். ஆனால் அந்த விழாவுக்காக அடிக்கப்பட்ட சுவரொட்டியில் "சென்னை சட்டக் கல்லுரி" என்று போட்டு விட்டனர். அதாவது டாக்டர் அம்பேத்கார் என்ற பெயரை அவர்கள் உச்சரிக்கக்கூட தயாராக இல்லை என்பதை காட்டி மறைமுகமாக டாக்டர் அம்பேத்கரின் மீது மறைந்த பின்பும் தீண்டாமை என்ற இழிவை திணித்ததுதான் வேதனையானது.

ஜாதிய அமைப்பில் அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டைகளான தாழ்த்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட - தலித் ஜாதியைச் சேர்ந்த மாணவர்கள் இந்த சுவரொட்டியின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தீண்டாமை குறித்து கேள்வி எழுப்புகின்றனர். என்னை ஏற்கவில்லையென்றாலும் பரவாயில்லை. என் தலைவனை கூடவா ஏற்க மாட்டீர்கள் என்ற உள்ளக் கொதிப்பு நாடி நரம்புகளில் பரவுகிறது. இயல்பாகவே மாணவப் பருவம் தனது கருத்திற்கான எதிர்வினையை நாடித்துடிப்புகளை விட வேகமாக செயலில் காட்டும் பருவம். அந்த உணர்வுகளை - அதுவும் அடக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட அடிமைத்தனத்திற்கு எதிராக இன்னும் போராட வேண்டியிருக்கிறதே என்ற ஆவேசத்தோடு அந்த மாணவர்கள் தங்களது கருத்துக்களை நயமாக உணர்த்துகின்றனர்.

இருப்பினும் இது குறித்து ஆதிக்க ஜாதி மனோபவம் கொண்ட அந்த மாணவர்கள் இதனை அலட்சியப்படுத்துவதோடு, தலித் மாணவர்களுக்கு எதிராக தாக்குதலையும் தொடுக்க தொடர்ந்து முனைகின்றனர். டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்களான ஆறுமுகம் - பாரதி கண்ணன் ஆகியோர் இதற்கு தொடர்ந்து தலைமை தாங்குகின்றனர். குறிப்பாக பாரதி கண்ணன் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே பதியப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மாணவர்கள் தலித் மாணவர்களை தேர்வு எழுத விடாமல் செய்வதற்காக தொடர்ந்து மிரட்டப்படுகின்றனர். கடந்த ஒரு வாரகாலமாக புகைந்துக் கொண்டிருந்த இந்த பிரச்சனை குறித்து அக்கல்லூரி முதல்வருக்கும் தெரியும். காவல்துறை உளவுத்துறைக்கும் தெரியும். இருப்பினும் இதில் உடனடியாக தலையிட்டு - உரிய நேரத்தில் ஆற்றுப்படுத்த தவறி விட்டனர். நிலைமை கையை மீறிப் போய்விட்டது.

குறிப்பாக சம்பவம் நடைபெற்ற அன்று ஆறுமுகமும் - பாரதி கண்ணனும் கத்தியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு வந்துள்ளனர். இது குறித்த தகவல் கல்லூரி முதல்வருக்கும், காவல்துறையினருக்கும் தெரிந்துள்ளது. சட்டக் கல்லூரியில் வன்முறைச் சம்பவம் நிகழப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்ததால்தான் கேமிரா சகிதமாக மீடியாக்குழுவினர் ஆஜராகியுள்ளனர்.

இந்நிலையில் கல்லூரிக்குள் தேர்வு எழுதுவதற்காக தலித் மாணவர்கள் வந்தால் அவர்களை உள்ளே விடக்கூடாது என்ற நோக்கில் வெறித்தனத்தோடு திரிந்துள்ளனர் ஆதிக்க ஜாதி மாணவர்கள். அத்துடன் நிற்காமல் தலித் மாணவர்களை கத்தியை காட்டி தொடர்ந்து மிரட்டி கல்லூரிக்குள்ளேயே ஓட ஓட விரட்டியுள்ளதோடு ஒரு மாணவணை கத்தியால் கிழித்தபோது அவரது காது அறுபட்டுள்ளது. இந்நிலையில்தான் தங்களது பாதுகாப்பிற்காக தலித் மாணவர்கள் தாக்குதலைத் தொடுத்தனர். அப்போது கூட பாரதி கண்ணன் 10க்கும் மேற்பட்ட மாணவர்களை பாய்ந்து பாய்ந்து கத்தியை நீட்டி தாக்குவதை மீடியாவில் பார்க்க முடிந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் தலித் மாணவர்களின் தாக்குதலுக்கு உள்ளான பாரதி கண்ணன் மற்றும் ஆறுமுகம் இருவரையும் தங்களது ஆத்திரம் தீரும் வரை அடித்துள்ளனர்.

இந்த காட்சியை திரும்பத் திரும்ப மீடியா காட்டிக் கொண்டே இருந்தது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தையும், ஆசேகத்தையும் உண்டு பண்ணியது. இந்த இடத்தில் ஒரு விசயத்தை நாம் குறிப்பிட்டேயாக வேண்டும். பாரதி கண்ணன் கீழே விழுந்த போது தடியால் அடித்த மாணவர்களில் ஒருவர் கூட அவரது மண்டையை தாக்க முனைவில்லை என்பதுதான். அதாவது அவர்களது நோக்கம் அவரை கொல்ல வேண்டும் என்பதாக இருந்திருந்தால் தலையில் அல்லவா தாக்கியிருப்பார்கள் என்ற கேள்வியை தொலைக்காட்சியைக் கண்டவர்கள் எழுப்பும் போது அதில் நியாயம் இருப்பதாகத்தான் தெரிகிறது.

இறுதியாக மாணவர்கள் எதிர்கால மன்னர்கள் என்று அழைப்பது தமிழகத்து வழக்கம். நாட்டை ஆளப் பிறந்த மாணவர்கள் ஜாதிய விஷத்திற்கு ஆட்பட்டு தங்களது மூளையை விஷமாக்கிக் கொண்டதால் வந்த விபரீதம். இதற்கு யார் காரணம்?

நமது சமூக அமைப்பும், இந்த ஜாதியத்தால் பலம்பெறக்கூடிய ஆதிக்க சக்திகளின் அரசியல் உள்நோக்கமும்தான். இளம் உள்ளத்திலேயே ஜாதிய விஷத்தை விதைத்து விட்டால் பின்னர் அது மரமாகி எதை கனிய வைக்கப் போகிறது?

மாணவர்களை கல்லூரிக்குள் ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரிக்கும் வகுப்புவாத மாணவர் அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். மதச்சார்பற்ற முறையில், ஜாதிய பாகுபாடற்ற முறையில் மாணவர்களின் நலனுக்காக செயல்படும் மாணவர் அமைப்புகளை அடையாளப்படுத்த வேண்டிய தருணம் இதுவே.

கருப்பின மக்களை அடிமைப்படுத்தி - உயிர்களைப் பறித்து நான்காம்தர குடிமக்களாக நடத்தி வந்த அமெரிக்காவில் கூட இன்றைக்கு ஒபாமா ஒற்றுமையின் சின்னமாக முடி சூட்டிக் கொண்டுள்ளார். இத்தகைய மாற்றத்தை உலகமே வரவேற்றுள்ளது. ஆனால் நமது நாட்டில் ஜாதிய ஏற்றத் தாழ்வு மனிதனை மனிதன் அங்கீகரிக்காத போக்கு தொடர்வதற்கான மனுவாத அரசியலை எப்போது முடிவுக்கு கொண்டு வரப்போகிறோம்?

கல்வி தனியார்மயமாவதற்கு எதிராக சென்னையில் வலுவான போராட்டத்தை நடத்திய மாணவர்களின் ஒற்றுமை ஜாதிய பிரிவினைவாதத்திற்கு இட்டுச் சென்றது எது? இன்றைய உலகமயம் அரசியல் மாணவர்கள் மற்றும் வாலிபர்களிடையே ஒற்றுமை ஏற்படுவதை விரும்பவில்லை. பிரிவினை அரசியல் அதன் உயிர் வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. எனவே, மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்திடவும், சுமூகமான முறையில் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகளை அரசும் - மாணவர் சமூகமும் உருவாக்கிட வேண்டும்.

மேலும் ஜாதிய மற்றும் மதவாத வழியில் மாணவர்களை தூண்டும் தீய சக்திகளை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும்.

ஒரு காலத்தில் பிரிட்ஷ் ஆட்சியாளர்களால் குற்றப் பரம்பரையினர் என்று இழிவுபடுத்தப்பட்டு - கள்ளர்கள் என்று பெயரிடப்பட்டதை எதிர்த்து முத்துராமலிங்கத் தேவர் உட்பட மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தி, ஜீவானந்தம் உட்பட பலரும் தொடர்ந்து போராடியதால்தான் அந்த சட்டம் குப்பையில் வீசப்பட்டது. இப்படித்தான் ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கான இழிவிலிருந்து விடுபடுவதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஒரு ஆரோக்கியமுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றால் முதலில் தேவை சமூக அமைதி. இது எப்போது வரும்? சமூகத்தில் எப்போது ஏற்றத் தாழ்வு - ஜாதிய பாகுபாடு ஒழிகிறதோ அப்போதுதான் வரும். எனவே, தொடரும் தலித் மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான மாணவர்கள் ஒன்றுபட்டு போராட முன்வரவேண்டும். இதற்கு ஜனநாயக சக்திகள் சிங்காரவேலர், பி. சீனிவாசராவ், பெரியார் போன்று தலைமை தாங்க வேண்டும். அது ஏதோ தலித்துக்களின் பிரச்சனை என்று பாராமுகமாய் இருப்பதிலிருந்து விடுபட வேண்டும்.

எனவே ஆதிக்க சாதி ஒன்று என்று சொல்லிக் கொள்ளும் ஜாதியும் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதிதான். அல்லது அதனை விட மேல் ஜாதியினரால் இன்றைக்கும் கேவலப்படுத்தப்படும் ஜாதிதான். மொத்தத்தில் மனுவின் பார்வையில் பிராமணீயத்திற்கு கட்டுப்பட்டவைகள்தான். நவீன இந்தியாவை உருவாக்கும் கனவு என்பது ஐ.டி. துறையில் சாதனைகள் நிகழ்த்துவதால் மட்டும் வந்து விடாது. அல்லது மேற்கத்திய உடைகளை உடுத்திக் கொண்டால் மட்டும் வந்து விடாது? புதிய சிந்தனைகளை மனித நேயச் சிந்தனைகளை நமக்குள் விதைத்துக் கொண்டால்தான் நாம் சந்திராயனை நோக்கிப் பயணிக்கும் மனிதனாவோம்!

November 11, 2008

கேரளா இந்து பயங்கரவாதத்தின் கோர முகம்!

இன்றைய தினம் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருப்பது இந்து பயங்கரவாதம். மலேகான் குண்டு வெடிப்பில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பது கண்டுப் பிடிக்கப்பட்டன் மூலம் இந்து பயங்கரவாதத்தின் கொடூர முகம் அம்பலப்பட்டது.

தற்போது கேரளாவில், கண்ணூர் மாவட்டம், கூத்துப்பறம்பா அருகில் சிறுவன்சேரியில் இரண்டு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது, அக்குண்டு வெடித்ததால் கே. திலீப், கே. பிரதீப் என்ற ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் இருவரும் கொடூரமாக உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவரது உடல் தூக்கியெறியப்பட்டு கிணற்றில் வீசியெறியப்பட்டுள்ளது. தற்போது இந்த இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த குண்டு வெடிப்பில் 8 வயது சிறுமி ஒருவருக்கும் கால் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சிகரமான தகவல் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

கடந்த பல ஆண்டு காலமாக கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் இதுபோன்ற வெடிகுண்டு தயாரிப்பு போன்ற செயலில் ஈடுபட்டு கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக செயல்படுவது கண்டு பிடிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். வன்முறையத் தாக்குதலைத் தொடர்ந்து கேரள முதல்வர் தலைமையில் அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று. பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க இரு தரப்பினரும் ஒத்துழைப்பது என்று முடிவெடுத்தனர். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் தயாரித்துள்ள வெடிகுண்டு எதற்காக? என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, கேரளாவில் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு பாதுகாப்பிற்கும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் இந்து பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக எழுவதை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு பன்முக நடவடிக்கையின் வாயிலாக இதனை முறியடிக்க வேண்டியுள்ளது இன்றைய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.

மேலும் சமீபத்தில் கா"சிபுரத்தில்கூட பாரதிதாசன் மெட்ரிக்குலேசன் பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை அங்குள்ள முற்போக்கு சக்திகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த பயிற்சி முகாமில் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். குண்டர் படையினர் கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இவர்கள் இந்தியாவின் பல முனைகளில் இருந்தும் வந்துள்ளார்களா? என்ற சந்தேகமும் எழுகிறது. இத்தகைய பயிற்சி முகாம்களில்தான் இவர்கள் வெடிகுண்டு தயாரிப்பது உட்பட பல்வேறு சதித் தீட்டங்களை தீட்டுகின்றனர். இப்படித்தான் தனியாக இராணுவ பள்ளி ஒன்று நடத்தி அதில் பயிற்சி பெற்றவர்களை நமது புகழ்பெற்ற தியாம் மிக்க இராணுவத்தில் நுழைத்து தங்களது மதவாத - பயங்கரவாத காரியங்களுக்கு அந்த இராணு வீரர்களை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அரசு இயந்திரம் எப்படி பாசிசவாதிகளைக் கொண்ட - பயங்கரவாதிகளைக் கொண்ட இயந்திரமாக மாற்றப்படும் என்பதற்கு இதுவே பெரிய உதாணரம். எனவே. மத்திய அரசு இதில் எந்தவிதமான சமசரசமும் செய்துக் கொள்ளாமல், தற்போது பணியில் இருக்கும் இராணு வீரர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்து - ஆர்.எஸ்.எஸ்.-வுடன் தொடர்பு கொண்டுள்ள யாராவது இருந்தால் அவர்களை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தி பணி நீக்கம் செய்திட முன்வரவேண்டும். இல்லையென்றால் நமது தாய் நாட்டுக்கு வரும் ஆபத்து கேசர் போல் உள்ளிருந்தே தோண்டத் துவங்கும். மத்திய அரசு விழிக்குமா?