November 28, 2006

இந்தியா 126 : மனித வளத்தில் நாம் எங்கேயிருக்கிறோம்!

மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2006-யை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கை உலக நாடுகளின் மனிதவளம் குறித்து ஆராய்ந்து, அதன் தற்போதைய நிலையை ஒவ்வொரு ஆண்டும் மதிப்பிட்டு வெளியிடுகிறது.
இவ்வாண்டு மனிதவள மேம்பாட்டு அறிக்கை தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதற்காக தற்போது போரிடும் ஏகாதிபத்தியங்கள், அடுத்து தண்ணீருக்காக இதனை செய்யலாம்! உலகம் முழுவதிலும் தண்ணீருக்கான பற்றாக்குறை அதிகரித்து வருவதாக அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக, தூய்மையான குடிநீரின்மையால் ஆண்டுதோறும் 20 லட்சம் குழந்தைகள் மடிவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும் 100 கோடி மக்களுக்கு சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை. மேலும் 260 கோடி மக்களுக்கு சுகாதார வசதி கிடைக்கவில்லை குட்டியுள்ளது.
குறிப்பாக இந்தியாவில், ஆண்டுக்கு 4,50,000 குழந்தைகள் டயோரியாவால் இறப்பதாக இவ்வாய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. எல்லைத்தாண்டும் பயங்கரவாதத்திற்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் செலவு செய்யும் இந்திய அரசு, அத்தகைய பயங்கரவாதிகளின் நாசச் செயல்களால் ஏற்படும் இறப்புகளைவிட நூறு மடங்கு மரணத்தை உண்டாக்கும் டயோரியாவை கட்டுப்படுத்த செலவிடவில்லை என்பது முரண்பாடான விஷயமே!
மும்பை, சென்னை, கல்கத்தா, டெல்லி போன்ற பெரு நகரங்களில் மக்கள் தொகை பிதுங்கி வழிகிறது. இவர்கள் பெரும் சுகாதார சீர்கேட்டிலேயே தங்களது வாழ்க்கையை கழிக்கின்றனர். அதே கிராமப்புறங்களிலும் ஊட்டச்சத்துக் குறைவு, சுகாதாரமின்மை, தூய்மையான குடிநீரின்மை போன்ற காரணங்களுக்களை ஒழிப்பதற்hக அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பதில்லை என்பதையே இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. 2020இல் இந்தியா வல்லரசு கனவை சுமந்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும் இந்த அறிக்கை வெளிச்சத்தை தருமா?
156 நாடுகளைக் கொண்ட பட்டியலில் மனிதவள மேம்பாட்டில் இந்தியாவுக்கு 126வது இடம் கிடைத்துள்ளது. 2005ஆம் ஆண்டு இந்தியா 127வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு ஒரு இலக்கம் முன்னுக்கு வந்திருப்பது பெருமைப்படத்தக்க விஷயமா? ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம்! நம்மைவிட சிறிய நாடு இலங்கை 93வது இடத்திலும், மக்கள் தொகை அதிகம் கொண்டு சீனா 81வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்பிரிக்க நாடுகள் என்றாலே அதன் கறுப்பு நிறைந்த அளவிற்கு வறுமையும் நீடித்திருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தென்னாப்பிரிக்கா கூட 121வது இடத்தில் உள்ளது. அதேபோல் ஜமைய்கா, அல்ஜீரியா போன்ற நாடுகள் நம்மைவிட முன்னணியில் உள்ளது. முதல் இடத்தை நார்வே பிடித்துள்ளது. உலகின் செல்வத்தை தன்னகத்தே குவித்து வைத்துள்ள அமெரிக்காவிற்கு 8வது இடமே கிடைத்துள்ளது.
மேலும் இந்தியாவில் நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவாக பெறுபவர்கள் 79.9 சதவீதம் உள்ளதாக அம்பலப்படுத்தியுள்ளது. இந்திய அரசு வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் எண்ணிக்கையை 28.6 சதவீதம் என்று கூறுகிறது.
மேலும் 102 நாடுகளைக் கொண்ட மனித வறுமைக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியாவுக்கு 55 இடம் கிடைத்துள்ளது. அறிக்கை இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் இந்தியாவில் ஜி.டி.பி. வளர்ச்சி 8 சதவீதம் என்றுச் சொல்லிக் கொண்டாலும் கூட, அது அம்மக்களுக்கு பயன்பட்டதாகத் தெரியவில்லை. எனவே இந்திய மக்களை உண்மையிலேயே மேம்படுத்த வெளிப்படையான மைக்ரோ பைனான்° நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் இந்தியாவில் செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவதாக கூறுகிறது. இந்திய அரசின் கொள்கை ஏழைகளை வாழ்விப்பதற்காக அல்ல; மாறாக மில்லினியர்களை பில்லினியர்களாக்கவும், பில்லினியர்களை டிரில்லினியர்களாக்கவும்தான் என்றுத் தெரிகிறது.
(குறிப்பு : பத்திரிகைகளில் வந்த செய்திவை வைத்து மட்டுமே இங்கு எழுதப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை மேலும் விமர்சன ரீதியாக அணுக வேண்டியுள்ளது.)
Read Blelow:

November 24, 2006

சென்னை ஐ.டி. சிட்டியா? அழுக்கு சிட்டியா?

தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. அதுவும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய தென்மாநிலங்களில் ஐ.டி.த்துறை அசுர வளர்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம் புதிய வசதிப்படைத்த - நவீன நடுத்தர வர்க்கம் உருவாகியுள்ளது. சென்னையில் இதற்கான வாய்ப்புகள் மேலும், மேலும் பெருகி வருகிறது. நாளொரு திட்டங்களை நமது தகவல்-தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தமிழகத்திற்கு அள்ளிக் கொடுக்கிறார் இதனால் தமிழகமே தலைகீழாக மாறப்போகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியப்போகிறது என்றெல்லாம் கதைக்கிறார்கள். சரி இருக்கட்டும்.
சென்னையில் ஐ.டி. சிட்டியின் ஆரம்பமே டைடல் பார்க்கிலிருந்துதான், தரமணியில் ஆரம்பித்து பெருங்குடி சாலைகள் எங்கும் பளபளக்கும் கட்டிடங்கள், நவீன தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும் சாதாரண மனிதர்களுக்கு ஏதோ வேற்று நாட்டிற்குள் புகுந்துவிட்ட எண்ணம்தான் தோன்றும். ஆனால், அந்த எண்ணத்தை, கற்பனையை குண்டும், குழியுமான, அதாள - பாதாளமான அழுக்கடைந்த, தூசிகள் சுதந்திரமாக பறப்பதும், சாலைகளில் மோட்டார் பைக்குகளின் இறைச்சல், கடுமையான டிராபிக் நெருக்கடியும் கலைத்துவிடுகிறது. அடடா, நாம் தப்பாக எண்ணி விட்டோம். நாம் இருப்பது அதே அழுக்கடைந்த சிட்டியில்தான் என்ற எண்ணத்தை தோற்றுவித்து விடுகிறது.
ஐ.டி. சிட்டியில் கட்டிடங்கள் பளபளக்கும் அளவிற்கு நமது சாலைகள் பளபளக்க வேண்டாம். குறைந்தபட்சம் தரமான சாலையாவது போட வேண்டாமா? இந்த வளர்ச்சி ஆரோக்கியமான வளர்ச்சியாகத் தெரியவில்லை. எப்படி துரித உணவைச் சாப்பிடும் குழந்தைகள், குண்டு குழந்தைகளாக வளர்க்கிறதோ அதுபோலத்தான் இருக்கிறது. இந்தச் சாலையில் செல்லும் புதிய நடுத்தர வர்க்க ஜீவிகள் இது குறித்து ஏதாவது சிந்திக்கிறார்களா? என்றும் தெரியவில்லை? இந்த சாலையில் ஒரு மாதத்திற்கு பைக்கில் பயணிக்கும் எந்த ஆரோக்கிய மனிதனுக்கும் கடுமையான - சொல்ல முடியாத நோய்கள் தாக்குவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கிறது.
ஐ.டி.யில் வளம் வரும் கம்ப்யூட்டர் ஜாம்பவான்கள் சமூகத்தைப் பற்றி கவலைப்படா விட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் தாங்கள் செல்லும் சாலையையாவது சுத்தமாக - தரமாக பராமரித்திட கவனம் செலுத்தலாமே! இவ்வளவு மோசமான சாலைகளை வைத்துக் கொண்டு அமெரிக்காவில் இருக்கும் பீலிங் எப்படி ஏற்படுகிறது என்றுத் தெரியவில்லை. மேலும், இந்த அடிப்படை கட்டமைப்புகளை வைத்துக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே தொழில் ஆரம்பிக்கிறார்கள் என்றால் என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் தெரிவது ஒன்றுதான் இந்திய ரத்தத்தை உறிஞ்சுவதைத் தவிர வேறு என்னவாக இருக்கும்!

November 23, 2006

அடங்கித்தான் போகவேண்டும்!

இந்திய பொருளாதாரத்தின் தலைநகரமாகத் திகழும் மும்பை அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலம், பந்தாரா மாவட்டத்தில் உள்ள கயர்லாஞ்சி கிராமத்தில்தான் இந்த கொலைபாதகம் நடந்தேறியுள்ளது.தீண்டாமை கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைக்காத நம்நாட்டில்தான், இந்தியா ஒளிர்கிறது! 2020-ல் இந்தியா வல்லரசு நாடு! ஐ.டி. உலகில் ஜாம்பவான் என்றெல்லாம் புளகாங்கிதம் அடைகிறது ஆளும் வர்க்கம்!
தலித் என்றாலே அடங்கித்தான் போகவேண்டும்! அவன் பிறருக்கு அடிமை சேவகம் புரியவே பிறப்பெடுத்தவன் என்ற மேல்ஜாதி - வர்ணாசிரம ஆதிக்கவெறி எங்கும் வியாபித்து - தொடர்கிறது. அதன் தற்போதைய உதாரணம்தான் கயர்லாஞ்சி!
கயர்லாஞ்சி கிராமத்தில் மூன்று தலித் குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. இவர்கள் அனைவரும் பௌத்த மதத்தை தழுவியவர்கள். தமிழகத்தில் சிங்காரவேலர் - பெரியார் வலியுறுத்திய சுயமரியாதையோடு வாழ்ந்து வருபவர்கள். இத்தகைய சுயமரியாதையை ஏற்குமா ஆதிக்கஜாதி!பையாலால் போட்மாங்கேவின் மனைவி சுரேகா, மகள் பிரியங்கா மகன்கள் சுதிர், ரோஷன் ஆகியோரைக் கொண்ட சிறிய குடும்பம் வெறும் செங்கற்களால் அடுக்கப்பட்ட ஓலை வீட்டில் வசித்து வந்தது. இவர்களுக்கென்று இருக்கும் 2.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வந்தனர். இந்த நிலத்தை ஆக்கிரமிக்க திட்டமிட்டது ஆதிக்கஜாதி வர்க்கம். அத்துடன் சாலை போடுவதற்கு இவர்களது நிலத்தை கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.விவசாய கூலி சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையை காரணமாக வைத்துக் கொண்டு 40க்கும் மேற்பட்ட ஜாதியாதிக்க சக்திகள் செப்டம்பர் 29, 2006 அன்று விடியற்காலையில் பையாலால் போட்மாங்கே வீட்டிற்குள் நுழைந்து தாய், மகள், மகன்கள் என நான்கு பேரையும் அடித்து, உதைத்து நிர்வானமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று கிராமத்தின் மையத்தில் நிற்க வைத்து சகோதரனை - சகோதரரியோடு உடலுறவு கொள்ள வேண்டும் என நிர்ப்பந்தித்துள்ளனர். இந்த மனித அரக்கர்கள் அத்துடன் நிற்கவில்லை. இந்த இளம் சகோதரிகளை மிருகத்தனமாக கும்பலாக கற்பழித்ததோடு, சின்னபின்னமாக்கியதோடு, சைக்கிள் செயின்களாலும், பயங்கரமான அயுதங்களாலும் தாக்கி கொலை செய்து விட்டு, அந்த ஊரிலிருந்து தொலைவில் இருக்கும் ஏரியருகே வீசியெறிந்து விட்டுச் சென்று விட்டனர்.
உயர் ஜாதி அடையாளம் ஒன்றே இவையெல்லாவற்றையும் செய்வதற்கு வழங்கப்பட்ட லைசன்சு போல நடந்துக் கொண்டுள்ளன இந்த மனித மிருகங்கள். இந்த சம்பவம் நடைபெற்று ஒரு சில வாரங்கள் கழித்தே வெளியுலகிற்கு தெரியவந்தது. அந்த அளவிற்கு அங்குள்ள காவல்துறையும், அதிகார வர்க்கமும் இந்த கொலைபாதக செயலை மூடிமறைத்துள்ளனர். மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூட ஆதிக்கவெறியர்களின் பக்கமே நின்று பொய் சான்றிதழ் வழங்கியுள்ளனர். மொத்தத்தில் நாகரீக சமூகம் வெட்கித் தலைக்குனியும் அளவிற்கு ஜாதி ஆதிக்கவெறியர்களோடு கைகோர்த்துள்ளது அரசு நிர்வாகம்.
இது ஏதோ, எங்கோ நடைபெற்ற சம்பவம் அல்ல! நம் இந்தியாவில்தான்!! பா.ஜ.க. ஆட்சியின் போது ஹாரியானாவில் செத்துப்போன பசுமாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்த நான்கு தலித்துக்களை கல்லால் அடித்தே கொன்றது சங்பரிவார - சன்னியாசிக் கூட்டம். வெண்மணி, சுண்டூர், கொடியங்குளம், மாஞ்சோலை தோட்டம், கயர்லாஞ்சி என தொடரும் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக ஜோதிபாபூலே, அம்பேத்கர், சிங்காரவேலர், பி. சீனிவாசராவ், பெரியார், பகத்சிங், பாரதியார் காட்டிய வழியில் சகோதரத்துவத்தோடு வர்ணாசிரம - ஜாதி ஆதிக்க சிந்தனைக்கு முடிவு கட்டிட கிளர்ந்தெழுவோம்! தீண்டாமைக்கு தீ வைப்போம்!!

November 08, 2006

மக்கள் வாழ்வை சூறையாடும் சிறப்பு பொருளாதார மண்டலம்!

உலகமயப் பொருளாதாரம் பல்வேறு நவீன சுரண்டல் வடிவங்களை தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருக்கிறது. அதன் தற்போதைய வடிவம்தான் “சிறப்பு பொருளாதார மண்டலம்” (Special Economic Zone - SEZs) ‘இன்னொரு உலகம் சாத்தியமே!’ என்று போராடி வரும் வேளையில், உலகமயமும் அதன் பாணியில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை (SEZ) புதிய உலகமாக சித்தரிக்கிறது. இத்தகைய மண்டலங்கள் யாருடைய நலனுக்காக அமைக்கப்படுகிறது? இதனால் பாதிக்கப்படும் வர்க்கம் எது? சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை இம்மண்டலங்கள் ஏற்படுத்தப்போகிறது?சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான சட்டத்தை 2005 நவம்பரில் மன்மோகன் அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன் அடிப்படையான நோக்கம் நேரடி அந்நிய மூலதனத்தை ஈர்ப்பது. அதற்காக சர்வதேச தரத்தில் இம்மண்டலங்களை உருவாக்குவது என்பதுதான்.இந்திய வர்த்தகத்துறை அமைச்சகம் மிக வேகமாக இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது. இதுவரை 181 மண்டலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 128க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அனுமதிக்காக காத்திருக்கின்றன. கிட்டத்திட்ட நாடு முழுவதும் 309 சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.SEZசின் புதிய ஆட்சியாளர்கள்இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கப்போவது யார் என்பதை அறிந்தாலே அதன் மர்மங்கள் துலங்கிவிடும், ரிலையன்°, டாடா, சகாரா, யூனிடெக், வீடியோகான், மகேந்திரா குழுமம், கல்யாணி குழுமம்... என உள்நாட்டு பெரு முதலாளிகளும், அந்நிய நாட்டு பெரு முதலாளிகளும் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை சுதந்திரமாக அமைத்துக் கொள்வதற்கு வழிவகுத்துள்ளது மன்மோகன் சிங் அரசு. இச்சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்திட குறைந்தபட்சம் 10,000 ஏக்கரில் இருந்து 35,000 ஏக்கர் அளவில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஹரியானாவில் ரிலையன்° நிறுவனமும் - ஹரியானா மாநில வளர்ச்சி கார்ப்பரேஷனும் இணைந்து 25,000 ஏக்கர் பரப்பளவில் குர்கான் - ஜாஜர் பகுதியில் SEZ அமைக்க உள்ளனர். அதேபோல் டி.எல்.எப். என்ற நிறுவனம் அதே குர்கானில் 20,000 ஏக்கரிலும், மும்பையில் ரிலையன்° நிறுவனம் 35,000 ஏக்கரிலும் SEZ அமைக்கவுள்ளது. இந்தியாவிலேயே மிகப் பெரிய SEZ திட்டம் இதுதான். சென்னையில் மகேந்திர குழுமமும், நான்குநேரி, ஓசூர் உட்பட தமிழகத்தில் ஐந்து இடங்களிலும் SEZ அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விழுங்கப்படும் விவசாய நிலங்கள்‘இந்தியாவின் ஆத்மா கிராமங்களில் வாழ்கிறது’ என காந்திஜி கூறினார். மேலும் இந்தியா என்பது வெறும் நகரங்கள் மட்டுமல்ல பல லட்சக்கணக்கான கிராமங்களைக் கொண்டது என மிக ஆழமாக வலியுறுத்தினார். அவரது வழி வந்தவர்களின் ஆட்சியில் அவரது சிந்தனைக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் சமாதி கட்டத் துவங்கி விட்டனர். பன்னெடுங்காலமாக தலைமுறை, தலைமுறையாக கலாச்சார ரீதியாக - பாரம்பரியமாக வாழ்ந்து வரும் கிராமப்புற மக்களின் நன்செய் விவசாய விளை நிலங்கள் அடிமாட்டு விலைகொடுத்து வாங்கப்படுகிறது. மார்க்கெட் விலையை விட மிகக் குறைந்த தொகையை கொடுத்து நிலக் கொள்ளை நடைபெற்று வருகிறது. நிலங்களை பறிக்கொடுத்த கிராமப்புற மக்கள், தங்கள் கிராமங்களை காலி செய்து வருகின்றனர். இவ்வாறு வெளியேறும் மக்களுக்கு மாற்று இடங்களோ அல்லது அவர்களது வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான சூழலை, அடிப்படைத் தேவைகள் பற்றி எந்தவிதமான சிரத்தையையோ மாநில அரசுகளும், இந்திய அரசும் அல்லது குறிப்பிட்ட நிறுவனங்களோ மேற்கொள்வதில்லை. இத்தகைய செயல் மூலம் சமூகத்தில் ஒரு கொந்தளிப்பான சூழல் உருவாக்கி வருகிறது ஆளும் வர்க்கம். இது குறித்து முன்னாள் பிரதமர் வி.பி. சிங் கூறும் போது, “மக்களை ஆயுதம் ஏந்துவதற்கு தள்ளி விடாதீர்கள்” என எச்சரித்துள்ளார். இந்திய நகர்ப்புறங்கள் பிதுங்கி வழிந்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அரசின் இத்தகைய போக்கு நகரங்களில் மேலும் நெருக்கடியை உண்டாக்குவதோடு, சமூகத்தில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்திட செய்யும்.இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ள 67 SEZ திட்டங்களுக்காக மட்டும் 1,34,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள திட்டங்களையும் சேர்த்தால் 2,74,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கஜினி முகமது இந்தியாவை 17 முறை கொள்ளையடித்ததை வைத்து அரசியல் நடத்தும், சங்பரிவாரக் கூட்டங்களுக்கு பல லட்சக்கணக்கான மக்களின் நிலம் கண்ணெதிரே கொள்ளையடிக்கப்படுவது ஏனோ தெரியவில்லை! பிரிட்டிஷ் இந்தியாவிற்கு பிறகு இவ்வளவு பெரிய நிலக்கொள்ளை நடப்பது நவீன வரலாற்றில் இதுதான் முதல் முறை என வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இந்திய உணவு உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கும் விவசாய நிலங்கள் இவ்வாறு கொள்ளையடிக்கப்படுவதால் எதிர்காலத்தில் பெரும் உணவு பற்றாக்குறையுடன் கூடிய பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.ஆசிர்வதிக்கப்பட்ட நவீன காலனிஇத்தகைய சிறப்பு பொருளாதார மண்டத்திற்குள் ஏற்றுமதியை நோக்கமாக கொண்டு தொழில் துவங்கும் அந்நிய நிறுவனங்களுக்கு அனைத்துவிதமான வரிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. 5 ஆண்டு காலத்திற்கு அவர்களுக்கு உற்பத்தி வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, கலால் வரி, விற்பனை வரி, சேவை வரி மற்றும் வருமான வரி உட்பட அனைத்துவிதமான வரிகளில் இருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டு காலத்தில் 50 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும், அதற்கடுத்த ஐந்தாண்டு காலத்திற்கும் மறு முதலீடு என்ற பெயரில் இத்தகைய சலுகையை நீட்டிக்க முடியும். இது தவிர இத்தகைய நவீன மண்டலத்தை உருவாக்கும் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகாலத்திற்கு எந்தவிதமான வரியும் இல்லை! மேலும், இம் மண்டலத்திற்கான பாதுகாப்பு, தொழிலாளர் நலச் சட்டங்கள், பஞ்சாயத்து சட்டங்கள் உட்பட 27 வகைகளில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திடவும், காண்ட்டிராக்ட் என்ற பெயரில் வருடத்திற்கு ஒரு முறை நீட்டித்துக் கொள்ளவும், 8 மணி நேர வேலை பாதுகாப்பு, இ.எ°.ஐ., மருத்துவம், பனி பாதுகாப்பு என எந்த சட்டரீதியான பாதுகாப்பும் இம்மண்டலத்திற்குள் bல்லுபடியாகாது. மொத்தத்தில் சுதந்திர இந்தியாவிற்குள் ஏகபோக மற்றும் பெரு முதலாளிகளின் நவீன காலனிகளாக இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமையவுள்ளன.அரசின் இத்தகைய கொள்கையால் ரூ. 1,75,000 கோடி அளவிற்கு வருமான இழப்பு ஏற்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கியும், நிதித்துறையும் எச்சரித்துள்ளது. இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மூலம் அரசு எதிர்பார்க்கு மூலதனம் என்பது வெறும் 3,60,000 கோடி ரூபாய் மட்டுமே!இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத் SEZ மிகப் பெரிய வேலைவாய்ப்பினை வழங்கும் என்று கதைக்கத்துவங்கியுள்ளார். தற்போது செயல்பட்டு வரும் 28 SEZசில் ஐந்து லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவாக 1,00,650 வேலைவாய்ப்பினை மட்டுமே இவைகள் வழங்கியுள்ளன. இன்னும் குறிப்பாக கேரள மாநிலம், கொச்சியில் செயல்படும் SEZசில் 79 நிறுவனங்கள் மட்டுமே முதலீடு செய்துள்ளன. இவைகளில் வெறும் 7000 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். மேலும் SEZ ஆதரவாளர்கள் கூறுவது போல அந்நிய முதலீடும் எதிர்பார்த்த அளவிற்கு வருமா? என்பதுகூட கேள்விக்குறியே!சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு முழுமையான வரிகளையும், நிலத்தினையும் வாரி வழங்கும் மத்திய - மாநில அரசுகளின் கொள்கை மாநிலத்தில் செயல்படும் சிறுதொழில் பேட்டைகளை சட்டை செய்வதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் அம்பத்தூர், கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஓசூர் போன்ற இடங்களில் செயல்படும் தொழிற்பேட்டைகளுக்கு சாலை, மின்சாரம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளைக்கூட செய்துக் கொடுப்பதில்லை. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டும் சிறு தொழில் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகள் உருவானதோடு, மறைமுகமாக மேலும் ஒரு லட்சம் வேலைவாய்ப்பை இது வழங்கியது. மத்திய - மாநில அரசின் கொள்கை வேலைவாய்ப்பினை பெருக்கிட இதுபோன்ற முயற்சிகளை தீவிரப்படுத்துவதற்கு பதிலாக பன்னாட்டு மற்றும் ஏகபோக முதலாளிகளின் நலன் காக்கும் கொள்கைகளைத்தான் வடிவமைக்கின்றனர்.நிலக் கொள்ளையும் - ரியல் எsடேட் பிசினசும்சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கும் நிறுவனங்கள் அதன் பரப்பளவில் 25 சதவீத அளவில் தொழிற்சாலைகளுக்கும், மற்ற 25 சதவீதம் சாலை, மின்சாரம், குடிநீர் உட்பட அடிப்படை கட்டமைப்புகளுக்கும் பயன்படுத்திடலாம் மீதம் உள்ள 50 சதவீத நிலத்தில் மிக நவீனமான அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி அதன் மூலம் கொழுத்த இலாபத்தை ஈட்டுவதுதான் SEZயை உருவாக்கும் நிறுவனங்களின் அடிப்படை நோக்கம். விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட நிலங்களை குறுகிய காலத்தில் பெரும் லாபமீட்டும் முதலீடாக கருதுகின்றன. உதாரணமாக ஒரு ஏக்கர் நிலத்தை ரூ. 10,000 ஆயிரத்திற்கு வாங்கியிருந்தால் பிறகு அதே நிலத்தை 40 இலட்சத்திற்கு விற்பனை செய்வார்கள். சிறப்பு பொருளாதார மண்டலம் என்பது தொழிலை வளர்ப்பதை விட ரியல் எ°ட்டேட் பிசினஸை - பெரும் கொள்ளையை உருவாக்க வழிவகுக்கிறது. இவ்வாறான விற்பனைகளுக்கு கூட எந்தவிதமான வரியையும் அவர்கள் செலுத்த வேண்டியதில்லை. மேலும் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை மாநில அரசு கட்டுப்படுத்த முடியாது. மாநில அரசு அதிகாரிகளோ, ஏன் மந்திரிகளோ கூட தங்கள் மூக்கை நுழைக்க முடியாது. இதற்கென இருக்கும் வளர்ச்சி அதிகாரிகள்தான் இதனை கவனிப்பர். SEZயை உருவாக்கிய தனியாரின் சுதந்திரமான ஆட்சியதிகாரத்தின் கீழ்தான் இது செயல்படுத்தப்படும். குறிப்பாக, கூறுவேண்டுமானால் இது “அரசுக்குள் அரசாக அதுவும் செல்வம் விளையாடும் அரசாக” செயல்படும். சிறப்பு பொருளாதார மண்டலம் சுரண்டலின் வேர்காலாக சிறப்பு சுரண்டல் மண்டலமாக உருவாவதற்கே மன்மோகன் அரசு வழிவகுத்துள்ளது.அனைத்து மாநில அரசுகளும் நிலச்சீர்திருத்தம் செய்திட வேண்டும் என்று 50 ஆண்டு காலமாக வலியுறுத்தி வந்தாலும், இந்த விஷயத்தை காதில் போட்டுக் கொள்ளாத மாநில அரசுகள், தற்போது பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதன் மூலம் புதிய நவீன ஜமீன்தாரிகளை உருவாக்கும் நடவடிக்கைகளில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். உலகமயமாக்கல் ஆட்சியாளர்களின் சிந்தனைகளை எவ்வாறு சீரழித்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.சீனாவில் சிறப்பு பொருளாதார மண்டலம்உலகில் முதன் முதலில் 1986இல் சீனாவில்தான் டெங்சியோ பிங் வழிகாட்டலின் அடிப்படையில் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டது. சீனாவை பொறுத்தவரை “ஒரு தேசத்தில் இரண்டு கொள்கைகள்” என்ற அடிப்படையில் செயல்படும் நாடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அங்கே சோசலிசம் என்பதை சீனத்தன்மைக்கேற்ப கட்டிட வேண்டும் என்று டெங்சியோ பிங் வலியுறுத்தி வந்துள்ளார். இந்த அடிப்படைகளை நம்முடைய இந்திய அரசு புரிந்து கொண்டதாக தெரியவில்லை. சீனாவில் இயங்கி வரும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சீன மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்கு பயன்படும் அளவில் வடிவமைக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அமைக்கப்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்பது வெறும் பெயரில் மட்டும்தான் அவ்வாறு அமைந்துள்ளது. அதன் செயல்பாட்டில் முற்றிலும் மாறுபட்ட நிலையே இங்குள்ளது.சீனாவில் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை சீன அரசு மிகவும் பின்தங்கிய பகுதிகளில் அமைத்தது. இம்மண்டலத்திற்கான நிலங்களை கையகப்படுத்தும் போது விவசாயத்திற்கு லாயக்கற்ற தரிசு நிலங்களைத்தான் அரசு தேர்வு செய்கிறது. அனைத்து விதத்திலும் சர்வதேச தரத்துடன் - அடிப்படை கட்டமைப்புகளோடு சீன அரசே இம்மண்டலங்களை உருவாக்குகிறது. நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தமானது; இதில் எந்த தனியாரும் உரிமை கொண்டாட முடியாது. இத்தகைய மண்டலங்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே வரி விலக்கு அளிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக சீனாவின் மற்ற பகுதிகளுக்கு இணையாக இங்கே வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இத்தோடு நில்லாமல், இத்தகைய மண்டலங்களை உருவாக்க நிலங்களை வழங்கிய மக்களை இதில் பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டுள்ளது. அரசுக்கு வரும் இலாபத்தில் உரிய விகிதத்தை நிலம் வழங்கிய அம்மக்களுக்கு சீன அரசு வழங்கி விடுகிறது. அத்தோடு அவர்களுக்கான வேலைவாய்ப்பும் திறமைக்கு ஏற்ப இத்தகைய நிறுவனங்களுக்கு உள்ளே வழங்கப்படுகிறது. நிறுவனங்கள் ஒரு தொழிலாளியை நீக்க நினைத்தால் அத்தகைய தொழிலாளிக்கு மாற்று வேலைவாய்ப்பை அந்நிறுவனங்களே ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள், மருத்துவம், இன்சூரன்° உள்ளிட்ட சமூக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சீன அரசின் ஆரோக்கியமான செயல்பாட்டின் மூலம் இன்றைக்கு இத்தகைய பொருளாதார மண்டலங்களில் 12 சதவீதம் அளவிற்கு வளர்ச்சிப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.மேற்கு வங்கத்தில் SEZஇடது முன்னணி ஆட்சி நடைபெறும் மேற்குவங்க மாநிலத்திலும் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்திட மாநில அரசு நான்கு இடங்களில் அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக இந்தோனேசியாவில் உள்ள சலீம் குழுமம் அமைக்கவுள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் டாடா குழுமம் அமைக்கவுள்ள மண்டலங்களை குறிப்பிடலாம். இத்தகைய மண்டலங்களை பின்தங்கியிருக்கக்கூடிய வடக்கு பர்கானா 24 போன்ற மாவட்டங்களில்தான் அமைக்க அனுமதிக்கின்றனர். இத்தகைய மண்டலங்களை அமைப்பதற்காக வெறும் விவசாயத்திற்கு லாயக்கற்ற தரிசு நிலங்களை மட்டுமே அரசு கையகப்படுத்துகிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மிகக் குறைந்த அளவில் மட்டும் ஒரு போகம் விளையக்கூடிய நிலங்களை கையகப்படுத்துகின்றனர். இவ்வாறு பெறப்படும் நிலங்களுக்கு சந்தை விலையில் 152 சதவீதத்தை வழங்குகிறது. அந்த மக்களுக்கான மாற்று இடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி கொடுக்கிறது. மற்றும் அவர்களுக்கான புனர்வாழ்வாதாரங்களுக்கான ஏற்பாடுகளையும் மேற்குவங்க அரசு செய்துக் கொடுக்கிறது.உருவாகி வரும் கிளர்ச்சிகள்சிறப்பு பொருளாதார மண்டலங்களின் அசுரத்தனத்தால் இந்திய கிராமப்புறங்கள் திவாலாகி வருவதையும், விவசாயிகள் நிற்கதிக்கு ஆளாவதையும் எதிர்த்து மும்பை, ஒரிசா போன்ற இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சிமிக இயக்கங்கள் வலுப்பெற்று வருகின்றன. மற்றொரு புறம் இடதுசாரி அமைப்புகள் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களின் உருவாக்கத்தில் அரசு பல்வேறு மாற்றங்களை செய்திட வேண்டும் என்று குரலெழுப்பி வருவதோடு, நிலக்கொள்யையையும் தடுத்து நிறுத்த, சிறப்பு பொருளாதார சட்டத்தில் திருத்ததையும் கொண்டு வரவேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.குறிப்பாக, நிலம் கையகப்படுத்துவதற்கான வரையை தீர்மானிக்க வேண்டும். மேலும் நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு மார்க்கெட் விலை மற்றும் SEZ அமைக்கப்பட்டதற்கு பின் ஏற்படும் விலை நிலவரத்திற்கு ஏற்ப விலையை கொடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் மட்டுமின்றி நிலமற்ற விவசாயத் தொழிலாளியையும் கணக்கில் கொண்டு அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். மற்றும் அவர்களுக்கான மாற்று இடம், கல்வி, சுகாதாம், சமூக பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை அரசு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அத்துடன் SEZ அமைக்கும் நிறுவனங்கள் நிலத்தை இழந்த மக்களை பங்குதாரர்களாக சேர்த்திட வேண்டும் என்பதோடு, இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு உட்பட, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அரசுக்குள் ஒரு அரசாக செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது மேலும் வரி விலக்கு மிக தாராளமாக வழங்கப்படுவதை பரிசீலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கியுள்ளனர்.மொத்தத்தில் உலகமயம் வழங்கிய நவீன காலனியாக செயல்படும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிராக பெரும் திரள் கிளர்ச்சிகளை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இதில் மாற்றத்தை உருவாக்கிட முடியும்.