Showing posts with label தலித். Show all posts
Showing posts with label தலித். Show all posts

April 17, 2009

தலித் மக்களுக்காக கண்ணீர் வடிக்கும் அத்வானி!


ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்! அந்தக் கதையாக, பா.ஜ.க. பிதமர் வேட்பாளர் அத்வானிக்கு தலித்துகள் மீது கரிசனம் வந்து விட்டது. டாக்டர் அம்பேத்கரின் 118வது பிறந்த நாளையொட்டி, "தலித் சேதன ரத யாத்திரை" ஒன்றை துவக்கி வைத்துள்ளார்.
தேர்தல் வந்து விட்டாலே பா.ஜ.க.வுக்கு என்ன செய்வது என்றே புரியாது? ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு ரத யாத்திரை நடத்துவது பா.ஜ.க.வுக்கு வழக்கம். ஏற்கனவே நடத்திய "ரத யாத்திரைகள்" எல்லாம் ராமரின் பெயரால் நடத்தப்பட்டு ரத்த யாத்திரையாக முடிந்தது. ராம ஜன்ம பூமி என்று கதைவிட்டு அப்பாவி இந்து மக்களின் மத உணர்வுகளை பயன்படுத்தி, மதவெறி அஜன்டாவை முன்வைத்த பா.ஜ.க. இசுலாமிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதலை நடத்தி 3000த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களை கொலை செய்து மதவெறி ரத்தத்தில் மூழ்கடித்தது.
பா.ஜ.க.வின் சாயம் மக்களிடம் எடுபடவில்லை. ராம ஜன்ம பூமி என்று கதையளந்த உத்திரப்பிரதேசத்திலேயே அதனை ஓட விட்டனர் மக்கள். ஒவ்வொரு தேர்தலிலும் பின்னடைவை சந்தித்த பா.ஜ.க. தற்போது உத்திரப்பிரதேசத்தில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
வட மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனது தளத்தை விரிவுபடுத்திக் கொண்டே வரும் தருவாயில், தற்போது தலித் மக்களின் நன்பனாக தன்னை முன்னிலைப்படுத்த துடிக்கிறது பா.ஜ.க.!
பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில், ஹரியானாவில் செத்துப்போன மாட்டின் தோலை உரித்தற்காகவே விஸ்வ ஹீந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் நான்கு தலித் அப்பாவி வாலிபர்களை கல்லால் அடித்தே கொன்றார்கள். பா.ஜ.க.விற்கும் ஆர்.எஸ்.எஸ்.சிற்கும் ஒரு தலித்தின் உயிரை விடவும் பசுவின் உயர் மேலானது என்ற சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர்கள் அல்லவா! அதனால் ராமபக்தர்கள் அன்றைக்கு தலித்துக்களின் உயிரை பலிகொடுத்து தனது சித்தாந்தத்திற்கு புத்துயிர் ஊட்டினர்.
அத்துடன் நின்றார்களா! மகாராஷ்டிர மாநிலம், பந்தாரா மாவட்டத்தில் உள்ள கயர்லாஞ்சி கிராமத்தில் பெளத்த மதத்தைத் தழுவிய - சுயகாலில் நின்ற தலித் போட்மாங்கே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மகன்கள் என்று நான்கு பேரை நேருக்கு நேர் கற்பழித்து - சின்னாபின்னப்படுத்தி - நிர்வாணப்படுத்தி கொலை செய்தார்களே உயர்சாதி ஆதிக்க வெறிர்கள். இதனைக் கண்டு நாடும், நாட்டு மக்களும் கொதித்து எழுந்த போது அந்த பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும்., பா.ஜ.க. எம்.பி.யும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக வாயை மூடிக்கொண்டிருந்தார்களே அதன் பின்னால் ஒளிந்துக் கொண்டுள்ள தத்துவம் என்ன? இந்துத்துவ சனாதன மதவெறி சித்தாந்தம்தானே!
அப்போதெல்லாம் தலித் மக்களைப் பற்றி கவலைப்படாத பா.ஜ.க. தேர்தல் நேரத்தில் திடீரென தலித் மக்கள் மீது கரிசனம் காட்டுவதென்ன! இது கசாப்புக் கடையில் காந்தியின் படம் தொங்கவிட்டிருப்பது போலத்தான் பா.ஜ.க. தனது ஓட்டு வங்கியை பெருக்கிக் கொள்ள தலித் ஆதரவு வேடம் பூண்டிருக்கிறது. ஏற்கனவே குஜராத்தில் காந்திய தத்துவத்திற்கு புதை குழி தோண்டிய பா.ஜ.க. காந்தியின் ராமராஜ்யமே எங்களது இந்துத்துவம் என்று புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கையில் தற்போது தலித்துக்களின் சகோதரர்களாக தன்னை அடையாளப்படுத்த முனைகிறார் அத்வானி.
இந்துத்துவம் என்பது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட தத்துவங்களையும், புராணங்களையும், கட்டுக்கதைகளையும், ஏன் மனுதர்மத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த மனுதர்மம்தான் தலித்துக்களை பார்க்கக் கூடாது, தொடக் கூடாது, பேசக் கூடாது, படிக்கக் கூடாது, ஒரு தலித்தை ஒரு மேல்ஜாதி பார்ப்பனன் கொலை செய்தால் அதற்கு தண்டனை வெறும் ஆடு, மாடுகளை கொல்லுவது போன்று என்று கருதி மன்னித்து விடலாம் என்று கூறிய அந்த சனாதர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் இந்துத்துவத்திற்கு சொந்தக்காரர்தான் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் அத்வானி.
உண்மை இப்படியிருக்கும் போது, ஏன் இந்த போலி வேடம்! யாரை ஏமாற்ற இந்த போலி வேடம்! தலித் மக்களின் இடஒதுக்கீடு உட்பட அனைத்திற்கும் வேட்டு வைக்கும் பா.ஜ.க. தலித் மீது பரிவு காட்டுவது வேடிக்கையிலும் வேடிக்கைதான். அது மட்டுமா? மகாராஷ்டிரத்தில் உள்ள மராத்வாடா பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்ற போது அதற்கு வானத்திற்கும் பூமிக்கும் எகிறிக் குறித்து சண்ட மாருதம் செய்தவர்கள்தான் இந்த இந்துத்துவாவாதிகள். எனவே, ஆர்.எஸ்.எஸ்.சின் அடிமையான அத்வானி தலித் நன்பனாக வேடம் பூணுவது தலித் மக்களை ஆட்சிக்கு வந்த பின் ஒடுக்குவதற்காகத்தனே ஒழிய வேறில்லை!
ஒடுக்கப்பட்ட மக்களே உஷார் ஓநாய் வருகிறது! வாக்குகளைப் பெறுவதற்காக அல்ல நம்மையே இரையாக்குவதற்காக!

April 14, 2009

தீண்டாத குழந்தைகளும் அம்பேத்கர் பிறந்த நாளும்!

ஏப்ரல் 12, 2009 அன்று "சிங்காரவேலர் 150வது பிறந்த ஆண்டு" சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் "கவிதை வட்டத்தினர்". இக்கூட்டத்திற்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். "சிங்காரவேலரும் சாதி ஒழிப்பும்" என்ற தலைப்பில் நான் பேசினேன். கூட்டம் நடைபெற்ற இடம் சென்னை, தண்டையார் பேட்டையில் உள்ள, இரத்தினசபாபதி தெருவில் உள்ள, "எஸ்.சி.-எஸ்.டி. சமூக சேவகர் மையம்" என்று குறிப்பிட்டிருந்தது. அந்த இடத்திற்கு சென்றவுடனேயே சென்னை நகரில் இன்றும் நீடிக்கும் "தீண்டாமை வடிவம்" தனது கோர பற்களை காட்டி சிரித்துக் கொண்டிருந்தது.
1938-ல் துவக்கப்பட்ட இச்சங்கம் இன்று தாழ்த்தப்பட்டோர் மக்களின் நலனுக்காக சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. 70 வயதை எட்டியிருந்த அந்த கட்டிடம் அதன் முதுமையையும், சேவையையும் ஒருசேர உயர்த்திக் காட்டிக் கொண்டிருந்தது. தற்போது அரசு உதவியுடனும் பல சமூக நல சேவகர்களின் உதவியுடனும் இச்சங்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட, கைவிடப்பட்ட மாணவர்களின் விடுதியாக தற்போது செயல்பட்டு வருகிறது. பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் இங்கு தங்கியிருக்கின்றனர். நான் கண்ட காட்சி வியப்பாக இருந்தது. கிட்டத்தட்ட 65 குழந்தைகள் 12 வயதுக்கு கீழே இருந்த குழந்தைகள்தான் அங்கே தங்கி படித்து வருகின்றனர். பெரும்பாலான குழந்தைகளின் உடலில் சட்டையில்லை. வெறும் உடம்புடன் இருந்த காட்சியும், எண்ணையை பார்க்காத பரட்டைத் தலையும், அதனால் வந்த செம்பட்டை முடியும், கண்களில் வறட்சியும், வாழ்க்கைக்கான எதிர்பார்ப்புடன் இக்குழந்தைகள் இங்கே தங்கி படித்து வருகின்றனர். அக்குழந்தைகள் தங்குவதற்கும், உணவுக்கும் அந்த விடுதியில் உத்திரவாதம் செய்யப்படுகிறது. வெளியில் சென்று அக்குழந்தைகள் படித்து விட்டு மாலையில் விடுதி திரும்ப வேண்டும்.
ஓடி, ஆடி இந்த உலகத்தை ரசிக்க வேண்டிய இந்தக் குழந்தைகள் ஒட்டு மொத்தமாய் இந்த விடுதிக்குள் கூண்டுக் குருவிகளாய் அடைபட யார் காரணம்? பெற்றவர்களா? அல்லது பெற்றவர்களை ஏழ்மையில் தள்ளி ஏதும் இல்லாதவர்களாக்கிய இந்த அரசுகளா? ஆளும் வர்க்கமா? குற்றவாளி அரசும் - அதனை ஆளும் வர்க்கங்களும்தான்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு அநேகமாக மாற்று உடை கூட இருக்குமா என்பதுகூட சந்தேகம்தான். அவர்களது உடைகளை அந்த சிறுவர்களே துவைத்துக் கொள்ள வேண்டும். அவர்களை தாலாட்டுவதற்கும், சீராட்டுவதற்கும் அந்தக் குழந்தைகளுக்குள்ளேதான் நடைபெற வேண்டும். சரி! பள்ளிக்குச் செல்லும் அந்தக் குழந்தைகளுக்கு (இவர்கள் எல்லாம் திங்கட் கிமைக்கு ஒரு யூனி பார்மும், மற்ற நாட்களுக்குவேறு கலர் யூனிபார்மும், டையும் கட்டிக் கொண்டு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கொண்டு டாட்டா காட்டிச்செல்லும் பள்ளிகள் அல்ல - எல்லாம் கார்ப்பரேஷன் பள்ளிக்கூடம்தான்) தக தகவென்று மின்னும் கலர் கலரான பாலித்தீன் பையில் அடைக்கப்பட்டிருக்கும் லிட்டில் ஹார்ட்சும், லேஸ், கார்ன் பிளக்ஸ், ஜெம்ஸ், டோரா புஜீ, சூப்பர் ஸ்டார், லுக்ஸ், குர்குரே, டைமண்ட், ஏன் வேர்கடலை பர்பி இவையெல்லாம் தீண்ட முடியாத பொருட்கள் இவர்களுக்கு. எல்லாம் பகல் கனவுதான். அவர்களுக்கான பாக்கெட் மணியை யார் தருவார்கள்.

சில நேரங்களில் பெற்றோர்கள் உள்ள குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ வரும் போது கிடைக்கும் சில்லறை காசுகளை வைத்துக் கொண்டுதான் தானும், தனது நண்பர்களும் இதுபோன்ற நொறுக்குத் தீனிகளை சுவைக்க வேண்டும்.
ஒரு விளையாட்டுத் திடல் உள்ளது. அதுவும் தனது வயதான தண்மையை வெளிக்காட்டிக் கொண்டுள்ளது. அதாவது, அந்த வெண்யைமான மண் ஆப்பிரிக்கன் கலருக்கு மாறிவிட்டிருந்தது. அந்த மாணவர்களின் நிறத்திலிருந்து எந்தக் காரணத்தைக் கொண்டும் தான் வித்தியாசப்படக் கூடாது என அது நினைத்திருக்கலாம். அவர்களது விளையாட்டுக்கள் எல்லாம் ஓடி ஆடுவதும், மண்ணில் புரள்வதும்தான். செஸ், கேரம், கிரிக்கெட், கோலி, பம்பரம், ஏற்றம், இறக்கம், இராட்டினம், உடற் பயிற்சி எல்லாம் கனவில் மட்டுமே! அவர்களால் போகோ, சுட்டி, ஜெட்டெக்ஸ் டி.வி. எல்லாம் பார்க்க முடியாது. மொத்தத்தில் குழந்தைகளுக்கே உரிய அனைத்தையும் இழந்த நிலைதான் இவர்களுக்கு இப்படி வளரும் மாணவர்களால் எப்படி ஒரு சிறந்த சமூகத்தை படைக்க முடியும்! ஆட்சியாளர்களுக்கு இது தெரியாதா?
இந்த ஹாஸ்டலில் 1-ம் வகுப்பு முதல் + 2 படிக்கும் மாணவர்கள் வரை தங்கலாம். தங்கிக் கொண்டுள்ளனர். தற்போது 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை என்பதால் அவர்கள் எல்லாம் ஊருக்குச் சென்று விட்டதாக கூறினார்கள்.
இங்குள்ள மாணவர்கள் ஒருவருக்கு அரசாங்கம் ஒரு நாளைக்கு 5 ரூபாய் ஒதுக்குகிறதாம். இந்த ஐந்து ரூபாயில் அந்த மாணவர்கள் மூன்று வேளையும் தரமான சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்றால் உலகில் இதைவிட வேறு கின்னஸ் சாதனை இருக்க முடியுமா? ஆனால் தமிழகத்தில் சிறையில் உள்ள கைதிகள் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 12 ஒதுக்கப்படுகிறது. இதுவே குறைவு என்பது வேறு கதை இருந்தாலும், ஒதுக்கப்பட்டு, சீண்டப்படாமல் இருக்கும் இந்த குழந்தைகளின் எண்ணிக்கை கைதிகளின் எண்ணிக்கையை விட மிக மிகக் குறைவாகவே இருக்கும். அப்படியிருக்கும் போது பெரியாரின் வழிவந்த, அண்ணாவின் வழி வந்த திமுக ஆட்சியாளர்களால் ஏன் இதை உயர்த்த முடியாதா? ஏதே தோ இலவசம் என்று வாரி வழங்கும் இந்த ஆட்சியாளர்கள் இந்தக் குழந்தைகளுக்கு வருடத்திற்கு நான்கு சட்டைகளும், கால் சட்டைகளும், இரண்டு ஜோடி செருப்பும், போஷாக்கான உணவும் கொடுத்து ஒரு நல்ல கல்வியும் கொடுத்து உயர்த்த முடியாதா? தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நாலெல்லாம் பாடுபடுகிறோம் என்று கூறுவதெல்லாம் இதுபோன்ற ஹாஸ்டல்களை பார்க்கும் எவருக்கும் அது பெரும் பொய் என்றே தோன்றும்.
இன்றைக்கு டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் இன்று ஒரு நாள் ஒருவேளை அந்தக் குழந்தைகளுக்கு சில கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய இனிப்புகள் வழங்கப்படலாம். தீண்டாமை ஒழிப்புக் குறித்து வீராவேசமான பேச்சுக்கள் பேசலாம். ஆனால் அந்த மாணவர்களின் எதிர்கால வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றால் அது அரசால் மட்டுமே முடியும். ஆட்சியாளர்களால் மட்டுமே முடியும்!
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ஒரிடத்தில் கூறுகிறார், "தீண்டாமையை தீண்டி விட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமா என்று? அதாவது தீண்டாமை ஒழிந்து விட்டால், அந்த தீண்டாமையால் ஏற்பட்ட வறுமையும், நோயும், கல்வியின்மையும், வேலையிண்மையும், வீடின்மையும், சொத்தின்மையும் ஒழிந்து விடுமா?" என்று கேட்கிறார். அதுதான் நினைவுக்கு வருகிறது இந்த விடுதியைப் பார்க்கும் போது. தாழ்த்தப்பட்ட, சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட ஏன் கிராமப்புறத்தில் படித்தாலே ஆதிக்க சாதியினருக்கு பிடிக்காத என்ற நிலையிலிருந்து சென்னை மாநகரத்திற்கு வந்து தனது கல்வியைத் தொடர நினைக்கும் இந்த மாணவர்களுக்கு ஆரோக்கியமான, ஒரு சராசரி மாணவன் வீட்டில் என்னென்ன வசதிகளை அனுபவிப்பானோ அதுபோன்ற குறைந்தபட்ச வசதிகளை இந்த அரசால் ஏற்படுத்த முடியதா? என்பதே எனது கேள்வி!

அரசின் முயற்சியை வலியுறுத்தும் அதே தருணத்தில், சமூகத்தில் ஓரளவு உயர்வு பெற்றவர்கள் இதுபோன்ற குழந்தைகளின் கல்விச் செலவினையும், அவர்களுக்கான உடை போன்றவற்றையும் வழங்கி உயர்த்திட முன்வருவதும் அத்தியாவசியமாகிறது. திருப்பதி வெங்கடாசல பெருமாளுக்கு கோடிக்கணக்கில் காணிக்கையாகவும், சபரிமலை ஐயப்பனுக்கு வாரி வாரி வழங்கும் நமது பக்தர்கள் கோவிலின் சொத்துக்களை பெருக்க வைக்க உதவிடுமே ஒழியே வேறு எதற்கும் பயன்படப்போவதில்லை. இப்படி வீண் விரயம் செய்யும் பொருளுதவிகளை இதுபோன்ற குழந்தைகளுக்கு உதவலாமே!
மேற்கண்ட கருத்துக்கள் உடனடி நிவாரணம் மட்டுமே! இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்பது சமூக மாற்றத்தால் மட்டுமே நிகழும். ஒரு மக்கள் ஜனநாயக புரட்சியை நடத்துவதன் மூலமும், நிலமற்ற ஏழை - எளிய தலித் உட்பட இதர பகுதி மக்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்துவதோடு, அவர்களுக்கான இதர உதவிகளையும் புரிந்து சட்ட ரீதியான பாதுகாப்புகளையும் வழங்குவதன் மூலமே நிரந்தர விடுதலைக்கு வழிவகுக்கும். இருட்டு விடியும் வரை தற்காலிகமாக மின்சார பல்பாக தொண்டாற்றலாமே! மேலும் ஆளும் ஆட்சியாளர்களை இதுபோன்ற விசயங்களில் கவனம் செலுத்திட வலுவான போராட்டங்கள் அத்தியாவசியம். இதுவே டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளில் நாம் முன்னெடுக்க வேண்டிய கடமையாக கருதுகிறேன்.

January 06, 2009

தலித் அடையாளத்திற்குள் ஒடுங்கிக் கிடக்கும் பார்ப்பனீயம்!

அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் தற்போது தங்களது உரிமைகளுக்கான போராட்டத்தில் முத்திரைப் பதித்து வருகின்றனர். 1990களுக்குப் பிறகு தலித்திய அமைப்புகள் எழுச்சிகரமாய் ஏற்றம் பெற்று வருகின்றன. சாதிய இழிவுகளுக்கு எதிராகவும் - சனாதன மனு (அ)நீதிக்கு எதிராகவும் இவர்களது குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. இந்தியாவில் உடனடியாக சமூக மாற்றம் யாருக்குத் தேவையோ இல்லையோ தலித் மக்களுக்கு இது அடிப்படையாகவும், அத்தியாவசியமாகவும் உள்ளது. எனவே, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முதல் தற்போதைய மத்திய ஆட்சியாளர்கள் வரை நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துக் கொண்டு சாதிய நிலவுடைமைய அமைப்பை முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளனர். எனவே நமது போராட்டம் என்பது நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்துவது என்பதோடு - முதலாளித்துவத்திலும் புரையோடிப் போய் கொண்டிருக்கக்கூடிய சாதியத்தையும் சேர்த்து வீழ்த்த வேண்டியுள்ளது. இந்தியாவில் சுதந்திரப் போராட்டக் காலம் தொட்டு சாதிய விடுதலைக்கான முழக்கத்தையும் முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். கீழ்வெண்மணி இன்றைக்கும் அதற்கு சாட்சியமாய் நின்றுக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது கீரிப்பட்டி முதல் உத்தப்புரம் வரை கம்யூனிஸ்ட்டுகள் நடத்தி வரும் போராட்டம் சாட்சியமாய் விளங்குகிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு முன்முயற்சி எடுத்து செயலாற்றி வருகிறது. தலித் மக்கள் மட்டுமல்ல அடுக்கப்பட்ட மக்களில் அட மூட்டைகளாய் மாறிப்போன அருந்ததிய மக்கள் வரை... அவர்களுக்கான பிரச்சனைகளை முன்னின்று செயலாற்றி வருகிறது.

இதற்காக விரிவான அளவில் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்திற்கு முன்வரக்கூடிய பெரும் பகுதியினரை அணி திரட்டுவதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தீவிரமாய் செயலாற்றி வருகிறது. அமைப்புகள் உருவாவதும், அமைப்புகள் காணாமல் போவதும் சமகாலத்தில் நிகழக்கூடிய வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடுகள் என்பதை வரலாறு அறிந்தவர்கள் உணர்வர்.

இந்நிலையில் வளர்ந்து வரும் தலித் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை சீர்குலைக்க துவங்கியுள்ளது ம.க.இ.க. (எஸ்.ஓ.சி.) கும்பல். தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்பது ஏதோ வாக்கு வங்கி அரசியல் நடத்துவதற்காக துவங்கப்பட்டதாக கொச்சைப்படுத்துகிறது. இவ்வாறு குற்றம் சுமத்துவது ஆட்சியாளர்கள் அல்ல. அவர்கள் கூட இவ்வாறு சொல்லத் துணிய மாட்டார்கள். சொல்வது புரட்சியை (தமிழகத்திலோ - இந்தியாவிலோ) கொண்டு வருவதற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழை அமெரிக்காவில் வாங்கி வந்திருக்கும் ம.க.இ.க. தொடை நடுங்கிகள்தான். (பார்க்க வினவு-ஏகலைவன் கமெண்ட்)
இவர்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை மட்டும் எதிர்ப்பவர்கள் அல்ல. விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், அருந்ததியர் பேரவை... என்று அனைத்து தலித் அமைப்புகளையும் முதலாளித்துவ அமைப்புகளாகவும் - சாதிய அமைப்புகளாகவும் பார்க்கும் சனாதன - பார்ப்பனீய மனோபாவத்தின் வெளிப்பாடே! மொத்தத்தில் இந்த ம.க.இ.க. குழு தலித் மக்களின் எதிரியே! இதனை ஏமாற்றுவதற்காகவே தலித் அடையாளத்தோடு பவனி வருகிறது ம.க.இ.க.

உண்மை என்ன? இவர்களது சுய முகம் என்ன என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டிய அவசியமான ஒன்று... இந்த ம.க.இ.க. (எஸ்.ஓ.சி. தொடை நடுங்கி நக்சலிச) புரட்சியாளர்களின் உண்மை முகம் என்ன என்று யாருக்கும் தெரியாது? நான் தொடர்ந்து குற்றம் சுமத்தும் மிக முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று. இவர்கள் யாருக்கும் சொந்தப் பெயர் இல்லை. எல்லாம் போலிப் பெயரில் - போலி முகமூடியுடன் செயலாற்றுவதுதான்.
அது தலைமை முதல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் தொண்டர்கள் வரை.... சரி இதில் உள்ள மற்றொரு ரகசியத்தையும் இங்கே சொல்லுவது பொருத்தமாக இருக்கும். ஏதோ இவர்கள் பார்ப்பனீத்தை எதிர்ப்பதற்கு பிறந்தவர்கள் போல் பேசுவார்கள்... ஆனால் அது நடைபெறும் வர்க்கப் போராட்டத்தை திசை திருப்புவதற்கே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இவர்களது தலையே ஒரு பார்பனீயத் தலைமைதான். குறிப்பாக வல்லபேச என்கின்ற பார்ப்பனர் மருதையனாகவும், ரெங்கராஜன் என்கின்ற பார்ப்பனர் வீராச்சாமியாகவும் மாறியது ஏன்? அதுவும் மருதையன், வீராச்சாமி எல்லாம் தலித் அடையாளத்துடன் கூடிய பெயர்கள் என்பதை மறக்கக் கூடாது? இதுதான் மர்மம். ஏதோ தாங்கள் எல்லாம் தலித் மக்களின் நண்பர்கள் போல் காட்டிக் கொள்ளும் போலி மனோபாவம். உத்தப்புரத்திலாகட்டும்... கல்கேரியாகட்டும்... எந்தக் கிராமத்திலாவது தலித் மக்கள் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாகும் போது அங்கே களத்தில் நின்று போராடிய வரலாறு இவர்களுக்கு உண்டா? இல்லை! மாறாக பிரச்சாரத்திற்காக சிதம்பரத்தை எடுப்பார்களே தவிர களத்தில் இறங்க மாட்டார்கள் இந்த போலி புரட்சியாளர்கள்.

இதேபோல்தான் இவர்கள் கியூபாவையும், கியூப புரட்சியும் எப்படி நடந்தது என்று போகிற போக்கில் கேள்வி எழுப்புவார்கள். தங்களை நக்சலிசத்தின் உண்மை வாரிசாக சொல்லிக் கொள்வார்கள். ஆனால் கியூப வழியில் கடந்த 30 ஆண்டு காலமாக களத்தில் என்ன செய்தார்கள்? புதிய ஜனநாயகம் பேசி சிறு பத்திரிகைகளோடு மோதுவதும் - சி.பி.எம்.க்கு எதிராக அவதூறு பேசி ஏகாதிபத்தியத்திற்கு சேவகம் புரிவதைத் தவிர! இவர்களது தொழில் பேசுவது நக்சலிசம் ஆனால் சீர்குலைப்பது வர்க்கப் போராட்டத்தை!

அடுத்து இந்த தொடை நடுங்கி புரட்சியாளர்கள் பாராளுமன்றத்தை பன்னித் தொழுவம் என்று தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். மற்றவர்களை எல்லாம் ஓட்டுப் பொறுக்கி என்பார்கள்! இதன் மூலம் இவர்கள் செய்வது என்ன? இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் கோடிக்கணக்கான மக்களை முட்டாள்கள் என்று திட்டுவதுதான். கம்யூனிஸ்ட்டுகள் மக்கள் எங்கெல்லாம் செயல்படுகிறார்களோ அங்கெல்லாம் செயல்படுவார்கள்! இது இவர்களுக்கு பொறுந்தாது! ஏனென்றால் இவர்கள் சி.ஐ.ஏ.-வால் உருவாக்கப்பட்ட சீர்குலைவு என்.ஜீ.ஓ. கம்யூனிஸ்ட்டுகள். அதனால்தான் இவர்கள் நக்சலிசம் பேசி - அதற்காக தங்களது போராடிக் கொண்டிருக்கும் மற்ற அமைப்புகளின் தியாகத்தின் மீது சவாரி செய்து கொண்டிருப்பவர்கள்!

இந்த மகஇக என்.ஜீ.ஓ.க்கள் தற்போது இணையத்தின் மூலம் புரட்சியை நடத்துவதற்கு கனா கண்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் தங்களது அணிகளுக்கு இணையத்தில் எப்படி செயல்படுவது என்று வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 2 டசன் ம.க.இ.க. போலி புரட்சியாளர்கள் தற்போது இணையத்தில் செயலாற்றி வரும் புதிய எழுத்தாளர்களுக்கு தொல்லை கொடுத்து அவர்களை இணையத்தில் இருந்தும் - எழுத வருவதிலிருந்தும் வெளியேற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அதாவது இணையத்திலும் ஆள் புடிக்கிறேன் பேர் வழி என்று கிளம்பி... எல்லாத்துக்கும் நான் சொல்றதுதான் சரி! என்கிற பார்ப்பனீய பாசிச மனோபாவத்தில் அடாவடி அடித்துக் கொண்டிருக்கும் வினவு மற்றும் ம.க.இ.க.- எஸ்.ஓ.சி. தொடை நடுங்கிகளை அடையாளம் காண்பீர்! இவர்கள் தலித் அடையாளத்திற்குள் ஒடுங்கிக் கிடக்கும் பார்ப்பனீயத்தின் மறுவடிவ புரட்டர்களே என்பதை!

May 21, 2008

நாசா செல்லும் தலித் மாணவன்!


அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளித்துறையில் பயில்வதற்கான ஜுனியர் ஆய்வாளருக்கான தேர்வில் மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரைச் சேர்ந்த தலித் மாணவன் சீரதன் காம்ளி (வயது 17) வெற்றி பெற்று தேர்வாகியுள்ளார். சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சீதரன் உலகின் மிகவும் அந்தஸ்து பெற்ற அறிவியத்துறையான நாசாவிற்கு செல்வது பாராட்டுக்குரிய அம்சமாகும். இதன் மூலம் இவருக்கு மாதம் 1000 டாலர் உதவித் தொகையாக நாசா வழங்கும். நான்கு வருட காலம் படிப்பிற்கான தொகை 50000 டாலர் செலவாகிறதாம். இதற்காக மகாராஷ்டிர அரசும் - சமூகத்தில் உள்ள பெரியவர்களும் உதவத் தயாராக முன்வந்திருக்கிறார்கள். சீதரன் 2004 ஆம் ஆண்டு பாபா அணு சக்தி கழகத்தின் சார்பில் இளம் சயின்டிஸ்ட் பட்டத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூகத்தின் அடித்தட்டிலிருந்து இத்தகைய உயர்ந்த இடத்திற்கு செல்லும் இம்மாணவணின் முயற்சி பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் சீதரன். இந்தியாவில் இன்றைக்கும் ஐ.ஐ.டி. உட்பட பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் கோலோச்சுகிறது ஜாதியம். உயர்ஜாதி ஆதிக்கவாதிகள் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான வாய்ப்புகளை பல்வேறு வழிகளில் அடைத்து வருகின்றனர். வாய்ப்புக் கிடைத்தால் அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் - ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களும் வானில் பறக்க முடியும். சாதனைகளை படைக்க முடியும் என்பதைத்தான் சீதரனின் தேர்வு உணர்த்துகிறது. தொடரட்டும் இந்த சாதனைப் படிகள்.

April 22, 2008

இடி அல்லது இடிப்போம்...

ஆதவன் தீட்சண்யா

நாய் பன்னி ஆடு மாடு எருமை கழுதைகோழி கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள் எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று என்னிடம் புகாரேதும் இல்லைஇனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால்.
நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க் இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக? யார் எழுப்பியது?
ஒருதாய் பிள்ளையாக இருந்தவர்களுக்கிடையே பாகப்பிரிவினை ஏற்பட்டு கட்டப்பட்டதல்ல அந்த சுவர். கடவுளே காண்ட்ராக்ட் எடுத்து கல்லும் சிமெண்ட்டும் கலந்து கட்டிவைத்த தெய்வீகச்சுவருமல்ல அது. தலித்துகள் முகத்தில் விழித்துவிடக்கூடாது, தலித்துகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று தீட்டுப் பார்க்கிற பிறவிக் கொழுப்பும், சுவர் கட்டுமளவுக்கு ‘கோவணத்தில் மூனு காசு வைத்துக்கொண்டு கோழிகூப்பிடும்போதே எழுந்தாட்டுகிற’ பணக் கொழுப்பும் கொண்ட ஆதிக்க சாதியினர் எழுப்பிய சுவர் அது. கட்டப்பட்ட காலம் கி.பி.1990.
ஈயும் பீயும் போல இந்தியர்கள்- தமிழர்கள் ஒற்மையாய் வாழ்வதாக போலி முழக்கங்களை எழுப்பி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருக்கும் தேசிய- இனப்பற்றாளர்கள் இந்த சுவர் குறித்து இதுவரை எந்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் நல்கவில்லை. ஆனால் சுவர் என்னவோ நின்று கொண்டிருக்கிறது கி.பி 2008ம் ஆண்டிலும். அதுவும் கடந்த பத்துநாட்களாக சுவற்றுக்கு மேல் மின்சாரவேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இருநாட்டு எல்லைகளுக்கிடையிலும் கூட இல்லாத இந்த தடுப்பரணின் புகைப்படத்தோடு 2008 ஏப்ரல் 17 அன்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து மின்சார ஒயர் பிடுங்கியெறியப்பட்டுள்ளது. ஒயரைத்தான் புடுங்க முடிந்ததே தவிர வேறு ஒரு மயிரையும் புடுங்கமுடியாது என்ற கொக்கரிப்போடு நிற்கிறது சுவர்.
செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் மனசாட்சியை உலுக்கிவிட்டதாகவும், நாம் நாகரீகச் சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து தொந்தரவு செய்வதாகவும் சில அன்பர்கள் தமது மனநிலையைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், தலித்தல்லாத ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றி விதவிதமாய் எழுப்பிக் கொண்டுள்ள மானசீகச் சுவர்களையும் நூல்வேலிகளையும் கண்டு வெதும்பி பழகிப்போன தலித்துகள் இந்த உத்தப்புரம் சுவர் இருப்பது குறித்து ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ புதிதாக ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் மனதளவில் வைத்திருக்கும் சாதி, தீண்டாமையுணர்வின் வெளிப்படை வடிவம்தான் அந்த சுவர் என்றே புரிந்து கொண்டுள்ளனர். தலித்துகளைப் பொறுத்தவரை தீண்டாமையின் இன்னொரு வடிவம். அவ்வளவே.
ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் ஒரு தென்னாப்பிரிக்காவை வைத்துக்கொண்டு நிறவெறியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கென்ன யோக்கியதை இருக்கிறது என்று அன்று அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இன்றும் எதிர்கொள்ளப்படாமல் இருக்கிறது குறித்து யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா ஒன்றல்ல, அது தீண்டத்தக்க இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்று அவர் வைத்த குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருப்பது குறித்தும் யாருக்கும் கவலையில்லை.
பக்கத்தில் இருக்கிற சேரிக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடுவோம் என்று அச்சமும் அசூயையும் ஆணவமும் கொண்டலைகிற இந்த சமூகத்தில், ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் வேற்று கிரகத்தில் குடியேறும் ஆராய்ச்சிகளைப் பற்றிய பெருமிதத்தில் பூமிக்குத் திரும்ப மறுக்கின்றனர். தலித்துகளுக்காக இயங்குவதாய் சொல்லிக்கொள்ளும் தலித் தலைவர்களோ திசைமாறி சினிமா புரஜக்டர் வழியாக புரட்சியை ஒவ்வொரு ஊரின் தியேட்டரிலும் ஓடவிட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நம்பி கோடம்பாக்கத்திற்கு குடிபோகத் தொடங்கிவிட்டனர். அல்லது அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தடுப்பது எப்படி என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுமே இந்த உத்தாபுரம் சுவர் பிரச்னையை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டக் குழு, 2008 பிப்-9 அன்று இம்மாவட்டத்தின் 47 மையங்களில் 107 கள ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வு நடத்தியது.
1. தீண்டாமை என்றதும் நம் நினைவுக்கு வருகிற - பழகிப் போன வடிவமான இரட்டைக்குவளை முறை பல்வேறு ரூபங்களை மாற்றிக் கொண்டு நிலைத்திருப்பதை இவ்வாய்வுக்குழு கண்டறிந்தது. தலித்துகளுக்கு தனி தம்ளர், புள்ளிவைத்த தம்ளர், சிரட்டை, தலித்துகள் குடித்த தம்ளர்களை அவர்களே கழுவி வைப்பது, ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை வழங்குவதால் தலித்துகளுக்கு ஐம்பது பைசா கூடுதல் விலையில் தேநீர் (ஒரு கப் ஐம்பது பைசாவா? தலித் தொட்டுக் கொடுக்கும் காசில் தீட்டு இருக்காதோ?), தேநீர்க்கடையின் பெஞ்சுகளில் சமமாக அமர்வதற்குத் தடை என்று இந்த கிராமங்களின் தேநீர்க்கடைகளில் தீண்டாமை நிலவுகிறது.
2. கிணறு, குளம் உள்ளிட்ட ஊரின் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதில் தலித்துகளுக்குத் தடை
3. முடிதிருத்தகங்களிலோ சலவைக்கடைகளிலோ தலித்துகளை முடிந்தமட்டிலும் தவிர்க்கவேண்டும் என்பதே அத்தொழில் செய்வோருக்கு ஆதிக்கசாதியினரின் எச்சரிக்கை. எனவே தலித்துகள் முடிதிருத்திக்கொள்ள பக்கத்து நகரங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே அனுமதித்தாலும் தனி இருக்கை. சலவைக்கடைகளில் ஆதிக்க சாதியினரின் துணிகளோடு கலந்துவிடாமல் தனியே ஒதுக்கி வைக்கவேண்டும். (கலந்துவிட்டால் ஏதாச்சும் புதுரகமான துணி பிறந்துவிடும் என்று பயப்படுகிறார்களாக்கும்.)
4. இன்னும் தலித்துகளுக்கு கோவிலில் நுழையத் தடை, சமுதாயக் கூடங்களில் அனுமதி மறுப்பு (சமுதாயம் என்பது இங்கு தலித்தல்லாதவர்கள் மட்டும்தான் போலும்), தூய்மைக்கேடான வேலைகளை செய்யுமாறு பணித்தல், சுயமரியாதைக்கு பங்கம் நேரும் வகையில் ஒருமையில் விளிப்பது, தலித் பெண்களிடம் பாலியல் வக்கிரங்களை வெளிப்படுத்தத் துணிவது, தலித் சுடுகாடுகளை அல்லது அதற்கான பாதைகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ரேஷன் பொருட்கள் விற்பனையிலும் வினியோகத்திலும் பாரபட்சம், குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படைத் தேவைகளில் புறக்கணிப்பு, தெருக்களில் தோளில் துண்டு போட்டுக் கொண்டோ, செருப்பணிந்தோ சைக்கிளிலோ செல்லத் தடை என தீண்டாமையின் வடிவப் பட்டியல் நீள்கிறது. கடைசியாக வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு போன்றவைகூட தலித்துகளுக்கு கிடைத்துவிடாமல் தடுப்பதற்கு பல உள்ளடி வேலைகள் உண்டு.
5. பிற மாணவர்களை பிரம்பால் அடிக்கிற ஆசிரியர்கள், தலித் மாணவர்களை தடியால் அடிப்பதற்கு பதிலாக சிறு கற்களையும் மண்ணாங்கட்டிகளையும் கொண்டே அடித்ததாகவும், அடித்தால் தலித் மாணவன்மீது படும் பிரம்பின் முனைவழியாகத் தீட்டு பாய்ந்து மறுமுனை வழியாக தம்மைத் தாக்கிவிடுவதைத் தவிர்க்கவே இத்தகைய உத்தியை ஆசிரியர்கள் கையாண்டனர் என்று அம்பேத்கர் தன் பள்ளிப்பருவத்தை நினைவுகூர்வார். மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அம்பேத்கர் காலத்து ஆசிரியர்களிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. பிற மாணவர்களை விட்டு தலித் மாணவர்களை அடிக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிரம்பு கொடுக்கும் ஆசிரியர்தான் இங்கு தீண்டாமையைக் கடந்தவர்.
இப்படி, ‘ஒக்காந்து யோசிப்பாங்களோ’ என்று மலைப்பு கொள்ளுமளவுக்கு விதவிதமான வகைகளில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளில் ஒன்றுதான் ஒன்றுதான் உத்தப்புரம் சுவர். இங்கு சுவர் மட்டுமே பிரச்னையல்ல. தமது குடியிருப்புக்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டும் என்பது தலித்துகளின் கோரிக்கை. பேருந்து நிறுத்தம் அமைந்தால் நிழற்குடைக்குள்ளிருக்கும் இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்திருப்பதை காண நேரிடுமாம். இந்த அவமானத்தை சந்திக்காமல் இருப்பதற்காக பேருந்து நிறுத்தமே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கசாதிக் கும்பல்.
தலித்துகள் தலைச்சுமையோடு நடந்துபோய் பஸ் பிடிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தப்புரம் பிள்ளைமார் சாதியினர்தான் சம்பளம் தருகிறார்கள் போலும். அவர்களும் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள் கப்சிப்பென்று. இங்குள்ள தலித் பகுதியிலுள்ள சாக்குடைக் குழாய்களுக்கு மேல் கட்டப்படும் சிறுபாலங்கள் ஆதிக்கசாதியினரால் உடைக்கப்பட்டு விடுகின்றன. அவற்றின் மீது தலித்துகள் உட்கார்ந்துவிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாததே காரணம்.
இன்னும் ஆண்டார் கொட்டாரம், தணியாமங்கலம் போன்ற கிராமங்களில் தபால்காரர் தலித்துகளுக்கு வரும் தபால்களை அவர்களது வீடுகளுக்குப் போய் வினியோகிப்பதில்லை என்ற தகவலும் தெரிய வந்தது. கிராமப்புற தபால்காரர், சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு தலித்தின் வருமானத்தை விடவும் குறைவாகவே ஊதியம் பெறுகிறவராயிருந்தாலும் அவருக்குள்ள சாதிக்கொழுப்பின் டிகிரி குறையாமல் இருக்கிறதை உணரமுடியும். சாதியுணர்வால் பீடிக்கப்பட்ட தனிமனிதர்களின் தொகுப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள அரசு நிர்வாகமும் சாதிமயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.
மதுரை மாவட்டத்தில் நிலவக்கூடிய இப்படியான தீண்டாமைக் கொடுமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக 2008 பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. மாவட்ட நிர்வாகம் மசிந்துவிடுமா அவ்வளவு சீக்கிரம்? இந்த கிராமங்களில் நிலவக்கூடிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மார்ச்-25 அன்று மதுரையில் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தி, உத்தாபுரம் சுவரை நிர்வாகம் இடிக்கவில்லையானால் நாங்களே இடிப்போம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) தலைவர்கள் அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரைப்பகுதி விடுதலை சிறுத்தை மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டது வரவேற்கக்கூடிய அம்சம்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானதின் தொடர்ச்சியாக அஸ்ஸாமிலிருந்து வெளியாகும் சென்டினல் என்ற பத்திரிகையும் உத்தப்புரம் சுவர் பிரச்னையை வெளியிட்டதாகவும் அச்செய்தி தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரியவருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் சுவர் பற்றிய விளக்கத்தைக் கோரி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தினமலர் நாளிதழ் (2008 மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளது.
சுவர் நீடிக்கக்கூடாது என்ற உணர்வு தலித்துகளிடம் ஒரு கொதிநிலையை எட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் கோயில் திருவிழா வந்துவிட்டது. தலித்துகளின் வீட்டு விசேஷங்களுக்கு தோரணம், வரவேற்பு வளைவு, அலங்காரம் செய்வது, வெடி வெடிப்பது போன்றவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடைகள் கோயில் திருவிழாவுக்கும் பொருந்தும். சாமியாயிருந்தாலும் தலித்துகளின் சாமிகள் கொஞ்சம் அடக்கியேதான் வாசிக்கனும் போல. இதற்காக எந்த சாமியும் இதுவரையிலும் யார் கண்ணையும் குத்தவில்லை என்பது வேறுவிசயம்.
ஆனபோதும் சாதியாணவத்தின் குரூரச் சின்னமாய் நிற்கிற சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பதற்றமடைந்த ஆதிக்கசாதியினர் (பெரும்பாலும் பிள்ளைமார் சாதி) சுவற்றுக்கு மேலே கம்பிகள் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சுவற்றை மின்சார தடுப்பரணாக மாற்றியுள்ளனர். இந்த மின்திருட்டை எப்படி மின்சார வாரியம் அனுமதித்தது என்பதெல்லாம் இனிமேல் வெளியாக வேண்டிய உண்மைகள். (தபால்காரருக்கு சாதியுணர்வு இருக்கும்போது மின் ஊழியருக்கு இருக்கக்கூடாதா என்பதுகூட காரணமாயிருக்கலாம்). திருட்டு வேலை செய்தாவது அவர்கள் காப்பாற்றத் துடிப்பது சுவற்றை அல்ல, சாதியைத்தான் என்பதில் நமக்கொன்றும் குழப்பமில்லை.
மின் கம்பிகளுடன் சுவர் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி இந்து நாளிதழில் 17.04.08 வெளியான நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நன்மாறன் 17.04.08 காலை தமிழக முதல்வரைச் சந்தித்து சுவற்றை அகற்ற அரசு முன்வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அன்றே சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார் (தீக்கதிர் 18.04.08).
18.04.08 அன்று உத்தப்புரத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமாகிய தோழர் பி.சம்பத் மற்றும் மதுரை மாவட்டத் தலைவர்கள் சென்று இருதரப்பையும் சந்தித்துள்ளனர்.
சுவரை உடனடியாக அகற்றுவது, தலித்துகள் புழங்க முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ள எல்லா பொதுப்பாதைகளையும் திறப்பது, தலித் குடியிருப்புக்கு அருகாமையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஆகியவை குறித்து சுவர் எழுப்பியுள்ளவர்கள் பேசும்போது 1990ல் பதினெட்டுப்பட்டி (தமிழ்ச் சினிமாவில் வருகிற அதே பதினெட்டுப்பட்டிகள் தான்) கூட்டம் போட்டு, சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்து தலித்துகளிடம் முத்திரைத்தாளில் கையெழுத்தும் பெற்றுள்ளனர். ஒரு சட்டவிரோதக் காரியத்தை சட்டப்பூர்வமானதுபோல் செய்யத் துணிந்திருக்கின்றனர். இந்த முடிவு காவல்துறைக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது என்கிற ஜம்பம் வேறு. இங்கிருக்கிற காவல்துறையினர் அந்தரலோகத்திலிருந்து அவதாரமெடுத்து வந்தவர்களா என்ன? அவர்களும் காக்கிச்சட்டைக்குள் இருக்கிற ஏதோவொரு சாதிக்காரர்தானே?
இந்த சுவரை இடித்தவுடனே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பிரிந்திருந்த இருதரப்பும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் என்றோ கல்யாணம் கருமாதிகளில் ஒருசேர கலப்பார்கள் என்றோ நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தீண்டாமை ஒரு குற்றம் என்று அரசியல் சட்டம் சொல்கிற ஒரு நாட்டில், தலித்துகளை ஒதுக்கி வைக்க என்னமும் செய்யலாம் என்கிற சாதியகங்காரத்தின் குறியீடாய் இருக்கிற அந்த சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். அது நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாகரீக சமூகத்திற்கான கனவும் விழைவும் களங்கப்படுகிறது.
சகமனிதர்பால் அன்பும் கருணையும் சகோதரத்துவமும் பொழிகிற உன்னதமான பண்பை நோக்கி நகர விரும்புகிறவர்களின் முன்னே மறித்து நிற்பது உத்தப்புரம் சுவர் மட்டுமல்ல என்றாலும் இந்தச் சுவர் இடித்தகற்றப்பட வேண்டும். நியாய சிந்தனையுள்ள ஒரு குடிமக்கள் தமது மனதுக்குள் மறித்து நிற்கும் சுவர்களைத் தகர்த்து வெளியே வந்து இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் ‘உத்தப்புரம் சுவற்றை இடி. அல்லது இடிப்போம்...’

Thanks : http://www.keetru.com/

Other Related Links

http://news.webindia123.com/news/articles/India/20080227/895128.html

http://www.hindu.com/2008/04/18/stories/2008041860891700.htm

http://pd.cpim.org/2008/0309_pd/03092008_tn.htm