September 30, 2008

தி.மு.க.வின் அரசியல் அனானி சுப.வீ.


பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தமிழக அரசியல் கட்சிகளால் மட்டுமல்ல அனைத்து தரப்பினராலும் மதிக்கப்படும் ஒரு பண்பாளர். தமிழ் மற்றும் முற்போக்கு சிந்தனைகளை சமூகத்தில் பரப்பி வருவதில் அவரது பங்கு அனைவராலும் போற்றப்படுகிறது.
பேராசிரியர் சுப.வீ. அவர்களின் இன்றைய பணி. தி.மு.க.வின் - கருணாநிதியின் கொள்கைப் பரப்பும் செயலாளராக மாறிவிட்டதுதான். தமிழகம் முழுவதும் நடைபெறும் தி.மு.க. கூட்டங்களில் சுப.வீ. முக்கிய பேச்சாளராக மாறிவிட்டார். இது குறித்து அவரிடம் கேட்டால் அண்ணா நூற்றாண்டு கூட்டம். அதனால் கலந்து கொள்கிறேன் என்று சப்பைக் கட்டு கட்டுவார். அண்ணா நூற்றாண்டுக்காக அவர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் யாரும் இதனை பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால் ஊருக்கு ஊர் தி.மு.க. அரசியல் மேடைகளில் சுப.வீ. காட்சியளிப்பதும்... அந்த இடங்களில் இவர் பேசும் அரசியலும்தான் நம்மை கேள்விக்கு உள்ளாக்கி தூண்டுகிறது.
குறிப்பாக திருவொற்றியூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசுகிறார். பெரியாரும் - அண்ணாவும் அரும்பாடுபட்டு இந்த சமூகத்தை முன்னேற்றினர் இதற்காக ஏராளமான தியாங்கள் செய்தனர். அவர்களது கொள்கைகளை கருணாநிதி இன்று வரை கட்டிக்காத்து வருகிறார்... ஆனால் இன்றைக்கு யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள். விஜயகாந்த முதல் வடிவேலு வரை ஏன் நமீதா கூட வரலாம்... என்று தி.மு.க. பேச்சாளர்களுக்கு எள்ளவும் குறையாத அளவில் குஷீயாக பேசினார்.
இங்கே நமது கேள்வி என்ன? பெரியாரும் - அண்ணாவும் வளர்த்தெடுத்த திராவிட கொள்கைகள் மக்களிடம் இன்றைக்கு செல்வாக்கிழந்து ஏன் விஜயகாந்திடமும் - வடிவேலுவிடமும் - நமீதாவிடமும் சரணடைந்தது என்று இந்த பேராசிரியர் விளக்க வேண்டாமா? அது குறித்து ஆய்வு நடத்த வேண்டாமா? திராவிட இயக்க கொள்கைகளை குழிதோண்டி புதைத்து விட்டு - தங்கள் குடும்பத்தை மட்டுமே வளர்த்துக் கொண்டவர்கல்லவா தி.மு.க.வினர்.
அது மட்டுமா? 1967 இல் அண்ணா காங்கிரசை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்று கூறினார். காங்கிரசை தமிழகத்தில் அரசியல் ரீதியாக விரட்டியடித்தவர் அண்ணா. ஆனால் இன்று நிலைமை என்ன? தி.மு.க.தானே அந்த மூழ்கும் கப்பலை கரையேற்றிக் கொண்டிருக்கிறது. தோளில் தூக்கி காவடி சுமந்து வருகிறது.
தி.மு.க. காங்கிரசை மட்டுமா சுமந்தது? பா.ஜ.க.வையும்தானே! இவைகள் எல்லாம் அண்ணா நூற்றாண்டில் பரிசீலிக்க வேண்டாமா? அடுத்து அவர் கூறுகிறார். பெரியார் கடவுளின் எதிரி என்பது போல் சித்தரித்து விட்டார்கள். அவரது மற்ற கொள்கைகளை பேசுவது கிடையாது என்று அதே மேடையில் கூறினார். யார் பெரியாரை அவ்வாறு சித்தரித்தார்கள் என்று விளக்க வேண்டாமா? ஒரு வேளை பெரியாரின் கடவுள் மறுப்பு சித்தாந்தத்திலிருந்து விலகி, ஒன்றே ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்று அண்ணா முழங்கினாரே அந்த விலகல் சரியானது என்கிறாரா? இந்த பேராசிரியர்.
மேலும் போகிற போக்கில் தி.மு.க. தொண்டர்களுக்கு கிக் ஏற்றும் வகையில் வடிவேலுவின் கட்சி ஆரம்பித்தால் அவர்களுடன் கூட இடதுசாரி கட்சிகள் உறவு வைத்துக் கொள்வார்கள்... என்று கிண்டல் வேறு.
கேள்வி என்ன? தி.மு.க.வுடன் இடதுசாரி கட்சிகள் கூட்டு வைத்துக் கொள்ள மாட்டோம் என்று சொல்லவில்லையே! இந்த தேசத்திற்கு பெரும் ஆபத்தாக உள்ள அணு சக்தி ஒப்பந்தத்தை மத்திய காங்கிரஸ் நிறைவேற்றத் துணிந்தபோது அதற்கு துணை போக வேண்டாம் என்று தி.மு.க.வை இடதுசாரிகள் எச்சரித்தார்கள். ஆனால் எப்போதும் அவர்களுக்கு கொள்கை என்ற கோமணம் (பதவி)தான் பெரியது என்றால் அதனை விடாமல் பிடித்துக் கொள்ள இன்றும் உறவைத் தொடர்கிறார்கள். எனவேதான் இந்த நிலையில் காங்கிரஸ் - பா.ஜ.க.வுடன் கூட்டு வைத்துக் கொள்ளாத கட்சிகளுடன் ஒரு மூன்றாவது மாற்றை அமைப்போம் என்று நாடு முழுவதும் அதற்காக முயற்சி எடுத்து வருகிறார்கள் இடதுசாரித் தலைவர்கள். இந்நிலையில், சுப.வீ. அணு சக்தி ஒப்பந்தம் பற்றி அறியாதவரா? இதில் அவரது நிலை என்ன? தி.மு.க.வின் நிலையோடு ஒத்து ஊதுகிறாரா? அல்லது மேடை கிடைத்து விட்டால் போதும் கொள்கை கோமணத்தை அப்புறம் சரி செய்து கொள்ளலாம் என்று சிந்திக்கிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
மொத்தத்தில் சுப.வீ.யின் சொந்த கட்சிக்கு தெருமுனைக் கூட்டம் நடத்துவதற்கு கூட ஆள் கிடைக்காத நிலையில் பாவம் அவர் என்ன செய்வார். தி.மு.க.வின் அரசியல் அனானியாக மாறுவதைத் தவிர!

September 29, 2008

அமைதியை எதிர்நோக்கும் காஷ்மீர்!

புத்தக அறிமுகம்

உலகில் தீர்வு காணப்படாத பிரச்சினைகளில் ஒன்று காஷ்மீர். எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தார் போன்று அமர்நாத் நிலப்பிரச்சினை விசுவரூபம் எடுத்து காஷ்மீரை ரணகளமாக்கியுள்ளது. எழிலாடும் காஷ்மீர் ராணியின் இதயத்தில் எண்ணற்ற தீவிரவாத மற்றும் பயங்கரவாத குழுக்களின் அபஸ்வரம் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
இந்தியர்கள் மனதில் எண்ணற்ற கேள்வி ஓட்டங்களை காஷ்மீர் எழுப்பியுள்ளது. இந்த பிரச்சனையின் ஆதியும் - அந்தமும் என்ன? பயங்கரவாத குழுக்களின் விதை எப்போது? யாரால் தூவப்பட்டது? இதன் பின்னணி என்ன? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை பகரும் முகமாக, காஷ்மீர் பிரச்சினையின் ஆழத்தையும் - அகலத்தையும் உணர்ந்து கொள்ளும் வகையில் தமிழுக்கு அலைகள் வெளியீட்டகத்தின் மூலம் புதிய வரவாக வந்துள்ளது.
திரு. கி. இலக்குவன் அவர்களது தொடரும் காஷ்மீர் யுத்தம் என்ற புத்தகம். 150 பக்கத்தில் 21 தலைப்புகளில் காஷ்மீர் சிக்கலின் முடிச்சுகளை அவிழ்க்க முனைந்திருக்கிறார் ஆசிரியர். குறிப்பாக இந்திய அரசியலின் பிரிக்க முடியாத அங்கமாக மாறியுள்ள நிகழ்ச்சி நிரலில் ஒன்று 370வது சட்டப் பிரிவு. இந்துத்துவ மற்றும் சங்பரிவார சக்திகள் தொடர்ந்து இந்த 370வது பிரிவுக்கு சாவு மணி அடிக்க வேண்டும் என்று பிரசங்கித்து வருவதை அறிவோம். காஷ்மீரின் உயிர் நாதமே இந்த 370வது பிரிவுதான். தற்போது இந்த சட்டப்பிரிவு குற்றுயிரும், கொலையுருமாகவே இருக்கிறது. அதன் முழுமையான சாரம் எப்படியெல்லாம் மத்திய ஆட்சியாளர்களால், குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியாளர்கால் அரிக்கப்பட்டது; அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை இந்தப் புத்தகம் விலாவரியாக படம் பிடித்துக் காட்டுவதோடு இதுபோன்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூடுதல் அதிகாரம் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற சிந்தனையோட்டத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.
அதேபோன்று பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் இந்தியாவை எப்படி மத அடிப்படையில் துண்டாடினார்கள் என்பதை ஆரம்பத்திலேய அம்பலப்படுத்தும் இப்புத்தகம். அதன் தொடர் விளைவுகளில் ஒன்றாக காஷ்மீர் இன்றைக்கு எப்படி மாறியுள்ளது என்று விளக்குவதோடு, இன்றைக்கும் காஷ்மீரின் அமைதியை குலைப்பதில் அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகளின் பங்கு என்ன? என்று உரைப்பதோடு, மறுபக்கத்தில் பாகிஸ்தான் ஆரம்பம் முதற்கொண்டே காஷ்மீரை முற்றிலுமாக அபகரிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் எத்தனை எத்தனை என்று விளக்கியுள்ளதோடு, இன்றைக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகளால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் எப்படி காஷ்மீருக்குள் நுழைந்து கலகத்தையும், பிரிவினைவாதத்தையும் தூண்டுகிறார்கள் என்பதை விளக்குவதோடு, தற்போது பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதி மக்கள் எப்படி பாகிஸ்தானிய அரசோடு முரண்பட்டுள்ளார்கள் என்பதையும் மிக அழுத்தமாக வரைந்துள்ளார்.
காஷ்மீரின் கலாச்சார பாரம்பரியம் எப்படி மதச்சார்பற்ற கொள்கையின் உயிர் மூச்சாக இருந்தது. காஷ்மீரின் தன்னிகரில்லா தலைவராக உருவெடுத்த ஷேக் அப்துல்லாவின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிலச்சீர்திருத்தம்தான் இந்தியாவிலேயே முதன்மையானது என்று சுட்டிக்காட்டும் ஆசிரியர், இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்த பிறகு அதன் பிரதமராக இருந்த ஷேக் அப்துல்லாவை எப்படி தங்களது கைப்பாவையாக மாற்ற காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எப்படியெல்லாம் முனைந்தார்கள். குறிப்பாக ஷேக் அப்துல்லாவை சிறையில் தள்ளி பொம்மை அரசை கொண்டு வந்த இந்திய அரசின் சதிச் செயல்களால் அம்மக்கள் இந்தியாவிடமிருந்து விலகும் புள்ளிகள் ஆரம்பித்ததையும் பின்னர் ஒரு கட்டத்தில் 370வது சட்டப் பிரிவை நீர்த்துப் போகச் செய்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்ததும் அப்போது ஆளுநராக இருந்த ஜக்மோகனின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஜனநாயகப் படுகொலைகளையும் - அடக்குமுறைகளையும் பட்டியலிட்டு எப்படியெல்லாம் காஷ்மீர் நம் கையை விட்டு நழுவுவதற்கான வாய்ப்பை இந்திய அரசே உருவாக்கியது என்பதை தெளிவாக விளக்குகிறார். ஜே.கே.எல்.எப்., ஹிஸ்புல் முஜாஹிதீன், அல்பத்தா, அல் ஜீஹாத் என்று டசன் கணக்கில் உருவெடுத்துள்ள பிரிவினைவாத மற்றும் தீவிரவாத - பயங்கரவாதி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் ஒரு அறிமுகத்தை வாசகர்களுக்கு முன்வைப்பதன் மூலம் அங்குள்ள நிலைமையை அறிந்து கொள்வதற்கு உதவிகரமாக உள்ளது.
அதேபோல் காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வு காண பல்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் குறிப்பாக 1972 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தம் துவங்கி, அயலுறவு அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விவரம் - முன்னேற்றம் குறித்தும் அதன் சாதகமான அம்சங்களை அமலாக்குவதில் பாகிஸ்தான் காட்டும் சுணக்கம் போன்றவற்றையும் விளக்கிச் செல்கிறது இப்புத்தகம். இது தவிர, இந்திய ஆட்சியாளர்கள் எப்படியெல்லாம் காஷ்மீரில் ஜனநாயகத்த சித்தார்கள். குறிப்பாக சட்டமன்ற - நாடாளுமன்ற தேர்தல்கள் எப்படி கேலிக்கூத்தாக்கப்பட்டது.
தேர்தல் ஜனநாயகமே சிதைக்கப்பட்டது இதனால் அம்மக்கள் மத்தியில் ஏற்பட்ட நம்பிக்கையின்மை போன்றவைகள் எல்லாம் எப்படி பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாட்டுக்கு துணை போகும் நிலைக்குச் இட்டுச் சென்றது என்று பல உதாரணங்களோடு விளக்கிச் செல்கிறார். மேலும், தற்போது இந்துத்துவவாதிகள் காஷ்மீர் பிரச்சினைக்கு காஷ்மீரை லடாக், ஜம்மு, காஷ்மீர் என்று மூன்று பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்று மேலும் ஒரு பிரிவினைக்கு வித்திட்டு காய்களை நகர்த்தும் போது, அது இயல்பாகவே காஷ்மீரியம் என்ற உயர்ந்த பண்பாட்டுக்கு எதிரானதாகவும் அம்மக்கைள மேலும் பிரிவினைக்கு உள்ளாக்கி அந்நியப்படுத்தும் நிலையை பா.ஜ.க. தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், காஷ்மீரில் அமைதியை - தீர்வை விரும்பும் இடதுசாரி உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் 370வது பிரிவில் அரிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கவும், பிரதேச சுயாட்சி உரிமைகளை வழங்கி, ஜனநாயக ரீதியாக அம்மக்களை நம்பிக்கையூட்டி ஒரு வெளிப்படையானத் தன்மையோடு அணுக வேண்டும் என்ற கருத்தையும், காஷ்மீர் மீது அக்கறைக் கொண்ட குழுக்களையும், பிரிவினை எண்ணம் கொண்ட குழுக்களையும் வேறுபடுத்திப் பார்த்து ஜனநாயக நீரோட்டத்தில் அனைத்துப் பகுதி மக்களையும் ஈர்ப்பதை நோக்கி இந்திய அரசு பயணிக்க வேண்டும் என்று தீர்வுக்கான பாதைகளில் பல்வேறு விஷயங்களோடு அடிப்படையோன இந்த அம்சங்களையும் இப்புத்தகம் கொண்டு வந்துள்ளது. மொத்தத்தில் காஷ்மீர் குறித்து ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்துவதற்கு இப்புத்தகம் உதவிடும்.
தொடரும் காஷ்மீர் யுத்தம்
ஆசிரியர் : கி. இலக்குவன்
அலைகள் வெளியீட்டகம்
4/9, 4வது முதன்மைச் சாலை,
யுனைடெட் இந்தியா காலனி,
சென்னை - 600 024
விலை ரூ. 80.00


காஷ்மீர் குறித்த எனது விரிவான பதிவு

மதவெறிக்கு எதிராய் போர்க்குரலெழுப்ப.... நீயும் வா... தோழா...

கடந்த 22 செப், 2008 அன்று போரூரில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தமுஎச 11-வது மாநின மாநாட்டு பிரச்சாரத் துவக்க விழாவில், இந்து முன்னணி மதவெறியர்களின் தாக்குதலைக் கண்டித்து
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
நடத்தும் கண்டனக்கூட்டம்.

30-09-2008, செவ்வாய்க்கிழமை
மாலை 5.30 மணி
ஆற்காடு ரோடு,காரம்பக்கம்
(அண்ணா சிலை அருகில்) போரூர்தப்பாட்டம் - போக்குவரத்து தொழிலாளர்கள்.
இசைப்பாடல்கள் - தமுஎச தோழர்கள்.

தபேலா - சுந்தர்

கண்டனம் முழங்கிட...

ச. தமிழ்ச்செல்வன்
மாநில பொதுச்செயலாளர், தமுஎச.

விடுதலை ராஜேந்திரன்,
பெரியார் திராவிடர் கழகம்
வழக்கறிஞர் ச. செந்தில்நாதன்
கவிஞர் இன்குலாப்
எழுத்தாளர் பிரபஞ்சன்
கவிஞர் சூரியதீபன்,
தமிழ்படைப்பாளிகள் முன்னணி
பேராசிரியர் அ.மார்க்ஸ்
எழுத்தாளர் இராசேந்திரச் சோழன்,
தமிழ்படைப்பாளிகள் முன்னணி
திருமிகு. த. வெள்ளையன்
வணிகர் சங்கத் தலைவர்
இயக்குனர் சீமான்
கூத்துப்பட்டறை ந. முத்துசாமி
பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால்
பத்திரிக்கையாளர் ஜவஹர்
தோழர்.சு.பொ.அகத்தியலிங்கம்
கவிஞர். இரா.தெ. முத்து
ஓவியர் சந்துரு
ஓவியர் வீரசந்தானம்,
தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்
பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன்
ஓவியர் மறுத்து
தலித்முரசு புனித பாண்டியன்
பேராசிரியர். சி. லட்சுமணன்
தோழர் அன்புத் தென்னவன்
திராவிட இயக்கப் பேரவை
ஓவியர் புகழேந்தி
புலவர் பா. வீரமணி
நாடகக் கலைஞர் காளீஸ்வரன்
கவிஞர் பச்சியப்பன்
கவிஞர் கார்முகில்
ஓவியர் நடராஜ்
ஓவியர் கார்த்திகேயன்
ஓவியர் மனோகர்
ஓவியர் வின்சி
திருமிகு கிருபானந்த சாமி
துறைமுகத் தமிழ்ச்சங்கம்
கருப்புப் பிரதிகள் நீலகண்டன்
உதயம் வ.செல்வம்
தோழர் கருணாகரன்
போக்குவரத்து சம்மேளனம், சி.ஐ.டி.யு.
தோழர் ச. அசோகன்
நாடகக் கலைஞர் ஜெசுடோச்ஸ்
தோழர் சந்தோஷ்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
தோழர் ஸ்டாலின்
இந்திய மாணவர் சங்கம்
வழக்கறிஞர் அ. காரல் மொழி
தோழர் எம். சேகர்
ஆட்டோ சங்கம், சி.ஐ.டி.யு.
நாடகக் கலைஞர். கி. அன்பரசன்
கவிஞர் நா.வே.அருள்
எழுத்தாளர் மணிநாத்
எழுத்தாளர் பா.ராமச்சந்திரன்

இவர்களுடன்... போரூர் பகுதி
அனைத்துக் கட்சித் தலைவர்கள்

அனைவரும் வாரீர்! கண்டனம் முழங்கிட...

மதவெறிக்கு எதிராய் போர்க்குரலெழுப்ப.... நீயும் வா... தோழா...

September 23, 2008

பெரியார் விழாவில் இராமகோபாலன் குண்டர்கள் தாக்குதல்


பெரியார் விழாவில் ராமகோபாலன் குண்டர்கள் தாக்குதல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 11வது மாநில மாநாட்டு துவக்க விழாவும், தந்தை பெரியார் 130வது ஆண்டு பிறந்த நாள் விழாவும் நேற்று (செப்டம்பர் 22, 2008) மாலை சென்னை போரூரில் உள்ள பெருமாள் கோவில் தெரு, ரவுண்டானா அருகில் நடைபெற்றது. இச்சிறப்பு மிகு கூட்டத்தில் வழக்கறிஞர் ச. செந்தில்நாதன், கவிஞர் இரா.தெ. முத்து உட்பட முக்கியமான கலை - இலக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாய் முற்போக்கு கலை - இலக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தப்பாட்டம், உலகை உலுக்கிய புத்தகங்கள் என்ற தலைப்பில் நாடகம் மற்றும் முற்போக்கு பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டது.


காவல்துறையின் அனுமதி பெற்று நடைபெற்றுள்ள இந்நிகழ்ச்சி துவங்கிய சில மணி நேரங்களிலேயே ஒரு காவலர் கூட்டம் நடத்துபவர்களிடம் நீங்கள் யாருடைய மனதும் புண்படாதவாறு பேசுங்கள் என்று சொல்லியுள்ளார். இந்த தகவல் எழுத்தாளரும், கவிஞருமான இரா.தெ. முத்துவுக்கு சொல்லப்பட்டது. அவர் மேடையில் ஏறி பேசும் போது, இங்கே நாம் யாருடைய மனதும் புண்படாமல் பேச வேண்டும்என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள். யாருடைய மனதும் புண்பாடமல் எப்படி பேச முடியும். நாட்டில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை கூர்ந்து நோக்கும் யாராலும் இப்படி பேச முடியாது. குறிப்பாக ஒரிசாவிலும், கர்நாடகத்திலும் கிறித்துவர்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது. இந்த தாக்குதல் குறித்து பேசும் போது எப்படி மனது புண்படாமல் பேச முடியும்? இப்படித்தான் பேச வேண்டும் என்றால் சுதந்திர இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள எழுத்துரிமையும், பேச்சுரிமையும் எதற்கு? மாற்றுக் கருத்துக்களை - கலைகளை எடுத்துச் சொல்லத்தானே இந்த உரிமைகள் என்று கூறிவிட்டு இங்கே ஒரு கலாச்சார காவலர் இருக்கிறார் அவர் யார் தெரியுமா? என்று கூட்டத்தினரைப் பார்த்து கேட்டிருக்கிறார்கள். கூட்டத்தில் இருந்த பொது மக்கள் இராமகோபாலன்என்று சொன்னதுதான் தாமதம்.


ஏற்கனவே இந்த கூட்டத்தில் கலவரத்தை நிகழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருந்த இந்து முன்னணி - ஆர்.எஸ்.ஸ். சங்பரிவார கும்பல் - 20க்கும் மேற்பட்டவர்கள் சகலவிதமான ஏற்பாடுகளுடன் முன்கூட்டியே எப்படி தாக்க வேண்டும் என்று திட்டமிட்டு வந்து செயல்படுத்தியுள்ளனர். இந்த கலாச்சார காவலரின் குண்டர் படை இப்படி பேசிய உடன் மேடைய நோக்கி பெரிய, பெரிய செங்கற்களை எரிந்ததோடு, கையில் கத்தி, இரும்பு பைப் மற்றும் செயின் என்று ஆயுதங்களால் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொது மக்களை தாக்கியதோடு, அங்கிருந்த சேர்களையும் தூக்கி எறிந்துள்ளனர். மேலும் இந்த கலாச்சார குண்டர்கள் ஒருவருக்கொருவர் அடையாளம் தெரிந்து கொள்ளும் முறையில் கையில் செந்நிற பட்டை அணிந்து கொண்டு வந்துள்ளனர். இந்த தாக்குதல் நடத்தும் போதே இராமகோபாலன் வாழ்க”, “இந்து முன்னணி வாழ்கஎன்று கோஷம் எழுப்பியவாறு இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.


கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் - குழந்தைகளுடன் கலந்து கொண்டுள்ளனர். யார் மீது தாக்குதல் தொடுக்கிறோம் என்று கூட எதையும் பார்க்காமல் பெண்கள் மீதும் - குழந்தைகள் மீதும் கூட கற்களை வீறியெறிந்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு குழந்தை தன்னுடைய கண்ணுக்கு எதிரே தன்னுடைய தந்தையை தாக்குவதை கண்ணுற்றபோதுஅதன் அலறல் கல் நெஞ்சையும் கறைய வைக்கும் அளவில் இருந்தது. இந்த குழந்தையின் மனநிலை பாதிப்பு இந்த பாசிச வெறிபிடித்த நரமாமிச சக்திகளான இந்துத்துவ வெறியர்களுக்கு புரியுமா? அல்லது காவியுடையில் வேஷம் தரித்துக் கொண்டுள்ள மனிதகுல விரோதி இராமகோபாலனுக்குத்தான் தெரியுமா? மேலும், அதே பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு த.மு.எ.ச. நடத்திய ஒரு கலை நிகழ்ச்சியிலும் இதுபோன்ற ஒரு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த விவரம் அங்குள்ள காவல்துறைக்கும் தெரியும். அப்படியிருந்தும் காவல்துறையினர் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்த நிலையிலேயே இருந்தனர். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ எதுவும் செய்யப்படவில்லை.


இந்த தாக்குதல் நடைபெறும் போது, அங்கிருந்த ஒரு பெண் ஒரு காவரைப் பார்த்து இப்படி அநியாயம் பண்றாங்க நீங்க வேடிக்கை பார்க்கறீங்களேஎன்று கேட்டபோது, நானும் மனிதன் தானே என்ற பதில்தான் வருகிறது. இந்த காவலர்கள்தான் நம்முடைய தமிழ் மக்களை காப்பாற்றப் போகிறார்களா? தேச சேவையின் போது மக்களை காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்தாவது மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனையில்லாத இந்த காவலர்களால் நாட்டுக்கு என்ன பயன்? இதுபோன்ற காவலர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும். மேலும் காவல்துறைக்கும் - அங்குள்ள ஐ.எஸ். (காவல்துறை உளவுத்துறைக்கும்) சூழல் நிச்சயம் நன்றாக புரிந்திருக்கும். இருப்பினும் சட்டம் - ஒழுங்கை ஒரு பொதுக்கூட்டத்தில் அப்பட்டமாக மறுப்பதற்கும், தாக்குதல் தொடுப்பதற்கும் யார் கொடுத்த தைரியும்?


அண்ணாவின் நூற்றாண்டும், பெரியாரின் 130வது ஆண்டும் நடைபெறும் தருவாயில் இந்துத்துவ பாசிசவாதிகளின் இந்த கொடுங்கோல்தனத்தை பார்த்துக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசு என்ன செய்யப்போகிறது? சங்பரிவாரத்திற்கு எதிராக அண்ணாவின் முழக்கம் என்ன ஆனது? பெரியாரின் பேச்சும், மூச்சும் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுள்ளதே எதனால்? எப்படி இந்த பாசிச விஷ விதை இந்த மண்ணில் முளைத்துள்ளது? இதற்கு இந்த தி.மு.க.வும் - திராவிட இயக்க சக்திகளும் பொறுப்பல்லவா? மேலும், அந்த பாசிச குண்டர்கள் ஒரு ஷட்டர் போட்ட கடைக்குள்ளே ஒளிந்துக் கொண்டிருந்த நிலையில் த.மு.எ.ச.வினர் காவல்துறையிடம் அந்த குண்டர்கள் - ரவுடிகள் இங்கேதான் ஒளிந்துக் கொண்டுள்ளார்கள் என்று கூறியபோது, நீங்கள் அமைதியாக இருங்கள் என்று சமாதானம் சொல்லிவிட்டு அவர்களை தப்ப விட்டுவிட்டனர். மொத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் உள்ள காவல்துறையே இந்துத்துவ கயவாளிகளோடு கூட்டு சேர்ந்து விட்டதா? என்ற எண்ணம்தான் மேலிடுகிறது.


மொத்தத்தில் இந்த சம்பவம் தொடர்பாக முறையான நீதிவிசாரணை செய்து உரிய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும், பொது மக்களை காக்கத்தவறிய சம்பந்தப்பட்ட காவல்நிலைய போலீசார் யார்? யார் அங்கு பணியில் இருந்தார்களே அவர்கள் மீதும் துறைபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் போலீசாருக்கு பொது மக்களை காப்பது எப்படி என்ற சிந்தனையையாவது வளர்க்க வேண்டும்.


மொத்தத்தில் பெரியாரின் ஒரு நிகழ்ச்சியில் இந்துத்துவ கலாச்சார குண்டர்கள் தாக்குதல் நடத்தி விட்டால் இதுபோன்ற நடவடிக்கைகள் நின்று விடும் என்ற பாசிஸ்ட்டுகளின் கனவை தூளாக்குவோம்! மாநிலம் முழுவதும் ஏராளமான பெரியார் நிகழ்ச்சிகளை நடத்தி இந்துத்துவ சக்திகளை - பாசிச வெறியர்களின் உண்மை முகத்தை தோலூரிப்போம்!

September 20, 2008

மொபைல் கல்ச்சர் மொக்கை சமாச்சாரமா?


உடுக்கை இழந்தவன் கைப்போல என்ற சொலவடை தமிழில் புகழ் பெற்றது. அதுவே இன்றைக்கு மொபைல் இல்லாதவன் கைப்போல என்று மாற்றிச் சொல்லக்கூடிய அளவுக்கு கல்ச்சர் வளர்ந்து விட்டது. மொபைல் இல்லாத இளையவர்களை பார்ப்பது அபுர்வமானது. அந்த அளவுக்கு அது அத்தியாவசியமான பொருளாகி விட்டது.

சரி, விசயத்திற்கு வருவோம்! மொபைல் போன் வெறுமனே பேசுவதற்கு மட்டுமே என்ற நிலையிலிருந்து மாறி அது பன்முகப் பயன்பாடுள்ள கருவியாகி நாளொரு மேனியாக பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி தேவையா? என்றால் தேவையதான். மொபைல் போன்ற தொழில்நுட்பம் வளர்ந்த அளவிற்கு நம்முடைய கலாச்சாரம் - பண்பாடு - கல்ச்சர் வளர்ந்துள்ளதா? அதாவது இந்த மொபையில் போன்ற வந்ததற்கு பிறகு உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா என்ற நிலைதான் நினைவுக்கு வருகிறது.

முன்பெல்லாம் இரயிலில் பயணம் செய்தால் பெரும்பாலானவர்கள் கையில் ஏதோ ஒரு புத்தகம் உரையாடிக் கொண்டிருக்கும். அது குமுதமாக இருக்கலாம்... அல்லது ஆனந்த விகடனாக இருக்கலாம்.... அமுதசுரபியாக இருக்கலாம்... இலக்கியம் முதல் இல்லறம் வரை இரயிலுக்குள் எப்போதும் சூடான விவாதம் நடந்துக் கொண்டே இருக்கும்.

அப்புறம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதன் மூலம் முகம் தெரியாதவர்களுடன் கூட புதிய நட்பு உலகம் கிடைத்துக் கொண்டே இருக்கும். கற்றுக் கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தது.

இப்ப என்ன நடக்கிறது. காதையும் - கண்ணையும் மூடிக் கொண்டு பக்தி பரவசமான நிலையில் உள்ளவர்களைப் போல் சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டேயிருக்கும் வாலிபர்களையும் - யுவதிகளையும்தான் பார்க்க முடிகிறது.

இதுல இந்த புதுசா நல்ல விலை உயர்ந்த மொபைல் போன் வாங்குறவங்கள் தொல்லை தாங்க முடியலை. அதாவது பக்கத்துல என்ன நடக்குது என்றுக் கூட தெரியாமல்... அவருடைய போனின் அருமை பெருமைகளை உலகுக்கே ஒலிபரப்பும் முயற்சியில் அதிகமான சவுண்டில் சினிமா பாடல்களைப் எல்லோருக்கும் கேட்கும்படியாக வைத்து விடுகிறார்கள். இதனால் இரயிலிலோ அல்லது பேருந்திலோ பயணம் செய்யும் பயணிகள் பாடு திண்டாட்டம்தான். அன்றாட பேப்பரைக் கூட படிக்க முடியாத நிலைக்கு தள்ளி விடுகிறார்கள்.

மற்றவர்கள் தங்களை ஒரு கேலிப் பொருள் போல பார்ப்பார்களே என்ற சிந்தனைக் கூட இல்லாமல் ... அடுத்தடுத்த பாடல்களை போட்டுக் கொண்டே வருகிறார்கள். யாருக்காவது ஒரு போன் கால் வந்தால்கூட இந்த சத்தத்தில் பேசவும் முடியாமல் முழிப்பதைப் பார்க்ணுமே!... அன்புமணி இராமதாஸ் பொது இடத்தில் சிகரெட் பிடிக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வரப்போகிறார். அதுபோல மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை பொது இடத்தில் மொபைலில் பாட்டு வைக்க கூடாது என்று சட்டம் கொண்டுவந்தால் கூட நல்லாத்தான் இருக்கும். பாட்டு வேண்டும் என்பவர் அவர் காதுக்கு மட்டும் கேட்கக் கூடிய கருவியை மாட்டிக் கொண்டு எவ்வளவு சவுண்ட வைத்துக் கொண்டு கேட்டாலும் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. இந்த உலகமய யுகத்தில் சிந்தனைக்கு சவால் இந்த மொபைல்தான். இதிலிருந்து விடுபடுமா? நம் தமிழ் சமூகமும்! இந்திய சமூகமும்!

குறைந்த பட்சம் நம்முடைய வலைப்பதிவுவாசிகளாவது இந்த கலாச்சாரத்தை பரப்பிட முயற்சி எடுக்கலாம். வாய்ப்பு இருப்பவர்கள் ஒரு துண்டுப் பிரசுரம் கூட அடித்து பையில் வைத்துக் கொண்டு போகிற இடத்தில் யாரெல்லாம் மொபைல் போன் வைத்திருக்கிறார்களோ அவங்களுக்கு விநியோகிக்கலாம்... எதற்றும் முயற்சிப்போமே!

September 18, 2008

காவிப் படையில் மகாத்மா!இந்திய சுதந்திரப் போரினை மக்கள் இயக்கமாக மாற்றியவர் மகாத்மா. இவரது அகிம்சை தத்துவம் இன்று உலகமயமாகி வருகிறது. இது குறித்து கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அது குறித்த அலசல் இல்லை இங்கே. குறிப்பாக இந்திய நாட்டையும் - இந்திய மக்களையும் நேசித்த மகாத்மா தனது இறுதி மூச்சு வரை மிகவும் எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்து காட்டியவர். இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிவதை இறுதி மூச்சு உள்ளவரை எதிர்த்தவர். நமது தேசத்தை இரு கூறாக பிரிப்பது எனது இதயத்தை பிளப்பது போல் என்று மிகவும் நொந்து உருகி தனது கருத்தினை வெளிப்படுத்தியவர்.

இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். இத்தகைய மிக எளிய அகிம்சாவாதியை இந்துத்துவ வெறியன் - ஆர்.எஸ்.எஸ். பரிவார பாசிஸ்ட் கோட்சே சுட்டுக் கொன்றான். அகிம்சையை இம்சித்த தத்துவமே இந்துத்துவம் என்பதை உலகுக்கு உணர்த்தியவன். இதன் மூளையாக செயல்பட்டவன் சவர்க்கார். இவன் ஒரு பச்சை துரோகி. இந்திய தேசத்தை காட்டிக் கொடுத்தவன். வெள்ளையனின் சிறையிலிருந்து விடுதலையாக எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வந்தவன். இத்தகைய பாரம்பரியத்தில் வந்த இந்துத்துவவாதிகளின் தற்போதைய வாரிசுகள் ஏதோ இந்த நாட்டின் மீது தாங்கள்தான் பெரிய நேரம் செலுத்துவது போல் வேஷம் காட்டுகின்றனர்.

இந்த பாசிச வெறியர்கள் கேரளாவில் கூத்துப்பறம்பா என்ற இடத்தில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு காவி நிறம் பூசி மகிழ்ந்துள்ளனர். அந்த பேருந்து நிலையம் முழுவதும் காவி நிறம். மகாத்மாவுக்கும் காவி நிறப் பூச்சு. அதாவது, மகாத்மாவை கூட இவர்கள் தங்களுடைய கொள்கை காப்பாளராக மாற்றி விட்டார்கள் இந்த மாபாவிகள். கேரளாவில் இவர்கள் செய்யும் பாசிச வெறித்தனத்திற்கு அளவேயில்லை. இந்த இம்சைவாதிகள் அகிம்சா மூர்த்தியான மகாத்மாவுக்கு அதுவும் தங்களது கொள்கைக்கு விரோதமாக நின்றதால் சுட்டுக் கொல்லப்பட்டவருக்கு. சிலை வைத்து காவி நிறம் பூசியுள்ளது வெட்கக்கேடானது. அங்குள்ள காங்கிரஸ்காரர்களுக்கும் இது குறித்து வருத்தமோ - எதிர்ப்போ எதுவுமேயில்லை. ஏனென்றால் அவர்கள் கூட சில நேரங்களில் இடது முன்னணியை தோற்கடிக்க இந்துத்துவவாதிகளின் வாக்கு வங்கியோடு கள்ளுக் கூட்டுச் சேருபவர்கள்தான். அதாவது சாப்ட் இந்துத்துவாவாதிகள்.

மொத்தத்தில் மகாத்மாவின் சிலையை மட்டுமல்ல இந்த தேசத்தையே இந்த இந்துத்துவவாதிகளிடம் இருந்து மீட்க வேண்டும். இதற்காக விடப்பிடியான கொள்கைப் போராட்டம் தேவை. 

September 17, 2008

கேரளாவில் கண்டதும்! கேட்டதும்!


ஒருமுறை கேரளா சென்ற விவேகானந்தர் அதனை பைத்தியக்கார விடுதி என்று அழைத்தார். அதாவது அந்த அளவிற்கு அங்கே சாதிய ஏற்றத்தாழ்வு மண்டியிருந்தது. ஆனால் தற்போது என்ன நிலைமை?

குறிப்பாக நான் சென்றது கண்ணூர் மாவட்டம் - தலச்சேரி பகுதிக்கு. அங்கு ஜாதி முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. திருமணங்கள் ஜாதியை பார்த்து நிச்சயிப்பதில்லை. மேலும் அன்றாட வாழ்விலும் அவர்கள் ஜாதியை கடைப்பிடிப்பதில்லை. அங்கு ரிக்கார்டில் மட்டுமே ஜாதி இருப்பதாக அங்குள்ள பொதுநலவாதிகளும், மக்களும் கூறுகின்றனர். யாராவது தான் இந்த ஜாதி என்று சொல்லாத பட்சத்தில் அதனை யாரும் பொருட்படுத்துவதில்லை. தமிழகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை ஜாதி குறுக்கே நிற்கிறது.

அடுத்து முக்கியமான விசயம் தமிழகத்தில் தெருவுக்கு இரண்டு கோவில்களும், சந்து முனைக்கு ஒரு பிள்ளையார் கோவிலும் கோலோச்சுகிறது. இங்கே நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் கோவில் கட்டுவது தொடர்ந்து நடந்தேறி வருகிறது. ஆனால் கேரளாவில் அப்படி யாரும் தெருவுக்கு தெரு கோவில் கட்டுவதில்லை. ஊருக்கு ஒரு கோவில் இருப்பதே பெரிய விசயம்தான். அதுவும் திருவிழா காலங்களில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அதனை மக்கள் நினைக்கின்றனர். அந்த அளவிற்குதான் அங்கே கோவிலுக்கும் - பொது வாழ்விற்கும் - மக்களுக்கும் உள்ள நிலை.

பெரியார் பிறந்த மண் என்று பெருமை பேசும் தமிழகத்தில் இந்த இரண்டும் தலைகீழ்தான். மேலும் தற்போது திராவிட இயக்கங்களும் - அதன் நிர்வாகிகளும் - அமைச்சர்களும் - எம்.எல்.ஏ.க்களும் பணத்தை கொடுத்து கோவில் கட்டுவதும் - கோவில் விழாக்களில் கலந்து கொண்டு தங்கள் முகத்தை காட்டி பலப்படுத்திக் கொள்வதும் மிகச் சாதாரண நடைமுறையாகி விட்டது. எனவே தமிழகத்தில் மூட நம்பிக்கையை பரப்புவதில் திராவிட இயக்கத்திற்கு முக்கிய பங்குண்டு என்று இந்நேரத்தில் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.


அடுத்து, வீடுகள் அனைத்தும் நல்ல காற்றோட்டமாக - விசாலமாக கட்டப்பட்டுள்ளது. தண்ணீருக்கு மக்கள் ஏங்குவதில்லை. குறிப்பாக அங்கே கரண்ட் கட் வெறும் 1/2 மணி நேரம் மட்டுமே. (30 நிமிடம்) ஒரு நாளைக்கு. மேலும் வீடு கட்டுவதற்கு அரசாங்கமே 40 - 50 வரை இலவசமாக வழங்குகிறது. மேற்கொண்டு தொகையைப் போட்டு வீட்டைக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான். இது ஒரு சிறப்பான திட்டம். தமிழகத்தில் கூட அந்த திட்டத்தை அப்படியே கொண்டு வர தி.மு.க. அரசு முயலலாம். இதனையும் அண்ணா நூற்றாண்டு சாதனையில் சேர்த்தால் சிறிது ஓட்டும் கூடும். ஆனால் நிலத்திற்கு எங்கே போவது என்று கேட்கதீர்கள். அங்கு அநேகமாக வீடு இல்லாத மக்களே இல்லை. இங்குகூட குறைந்தபட்சம் வீடு கட்டுவதற்கு ஒரு கிரவுண்ட் நிலம் கொடுத்து - இதுபோன்ற உதவித் தொகையும் கொடுக்கலாம்.

மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டம் - கிராமப்புற வேலை உறுதித் திட்டம் கேரளாவில் சிறப்பாக செயல்படுகிறது. அங்கே ஒரு நாளைக்கு ரூ. 125 கூலியாக தரப்படுகிறது. இந்த வேலைக்கே அங்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. அதாவது அந்த அளவிற்கு அங்கு வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ரூ. 80 மட்டுமே கூலி. அதுவும் பல இடங்களில் ரூ. 40 முதல் 60 மட்டுமே தரப்படுகிறது. இன்னும் சில இடங்களில் காண்டிராக்ட் விடப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது. அல்லது எந்திரத்தை பயன்படுத்தி திருட்டுக் கணக்கு எழுதப்படுகிறது. அதைவிட முக்கியமானது. தமிழகத்தில் உழைக்காமல் சம்பளம் பெறப்படுவதாக எதிர்கால முதல்வர் கூறுகிறார். உழைக்கின்ற மக்களுக்கு நியாயமான கூலியை ஏமாற்றமால் வழங்க வேண்டும் என்று இடதுசாரிகள் கேள்வி எழுப்பினல் அவர்களை புரோக்கல் - தரகர் என்று ஏசுகிறார் எதிர்கால முதல்வராக கனா கண்டு கொண்டிருக்கும் மு.க. ஸ்டாலின்.

அங்கே சங்பரிவாரம் பல இழிவான வேலைகளில் ஈடுபட்டு எவ்வளவுதான் வலுப்படுத்திக் கொள்ள முயன்றாலும் அரசியல் ரீதியாக வெற்றிபெற முடிவதில்லை. இதற்கு அடிப்படை காரணம் திராவிட இயக்கங்கள் போல் யாரும் சங்பரிவார சன்னியாசி கூட்டத்துடன் கூட்டணி வைத்துக் கொள்வதில்லை. இங்கே வெத்து மதவாத எதிர்ப்பும் - வெத்து மதச்சார்பற்ற கொள்கையும் கடைப்பிடிக்கப்படுகிறது. அங்கேயுள்ள இடதுசாரிகள் தீவிரமாக போராடி இந்துத்துவா மற்றும் இசுலாமிய அடிப்படைவாதத்தை பின்னுக்குத் தள்ளி வருகின்றனர். மேலும் இசுலாமியர்கள் - கிறித்துவர்கள் - கணிசமாக இருந்தாலும் மதக்கலவரம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றனர். இதையெல்லாம் இந்த அண்ணா நூற்றாண்டு சிந்தனையில் சீர்தூக்கி பார்த்து தன்னை மாற்றிக் கொள்ளுமா திராவிட இயக்கங்கள்.

இவற்றையெல்லாம் விட முக்கியமானது. அங்கே கட்டப் பஞ்சாயத்து இல்லை. அதாவது, கிராமப்புறங்களில் அரச மரத்தடியிலோ அல்லது ஆல மரத்தடியிலோ அந்த ஊரில் உள்ள பெரிசுகள் அல்லது ஆதிக்க சக்திகள் தங்களைத் தாங்களே கிராம நிர்வாகிகளாக தேர்வு செய்துக் கொண்டு தமிழகத்தில் செயல்படுவது போன்ற பஞ்சாயத்து அமைப்பு இல்லை. அது முற்றிலும் ஒழிந்து விட்டது. அங்கே தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களின் செயல்பாட்டிற்ககு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அல்லது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பிரச்சினை அணுகப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் என்ன நிலைமை இந்த கட்டப் பஞ்சாயத்துக்களுக்கு தலைமை தாங்குவதே மந்திரிகளும், அதன் சொம்புகளும், தடிகளும், குண்டர்களும்தான். ஊரில் உள்ள கட்டப் பஞ்சாயத்து முறையை தனக்கு சாதகமாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கின்றனர் இங்குள்ள ஆதிக்கவாதிகள் அது ஜாதியின் பெயராலும் பணத்தின் பெயராலும், அரசியல் செல்வாக்கின் பெயராலும் அல்லது ரவுடித்தனத்தின் பெயராலும். இதுதான் தமிழக ஜனநாயகததின் மையமான செயல்பாடு. கேரளாவில் அதற்கு இடமே இல்லை.

பெரியார் பிறந்த மண் - அண்ணா பிறந்த மண் என்று மார் தட்டிக் கொள்வதில் எந்த விளைவும் ஏற்படப் போவதில்லை. அவர்களது கொள்கைகளுக்கு குழி தோண்டி புதைத்து விட்டு. எனவே மேற்கண்ட இரண்டு பெரியவர்களும் சென்ற வழியை குறைந்தபட்சம் கடைப்பிடிக்கவும் - அதனை பரப்பவும் முயற்சி எடுக்க வேண்டும் இங்குள்ள திராவிட இயக்க சல்லி வேர்கள்.

ஒருவேளை விவேகானந்தர் தற்போது உயிருடன் இருந்து தமிழகத்திற்கும் - கேரளாவிற்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தால் இந்தக் கருத்தை தமிழகத்திற்கு மாற்றியிருப்பார்.

September 11, 2008

யாருக்காக இந்த ஒப்பந்தம்

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் இந்திய ஆளும் வர்க்கமும் - அமெரிக்க பன்னாட்டு முதலாளிகளும் இணைந்து அதிவேகமாக செயலாற்றி வருகின்றனர். இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நமது ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்திற்கும், மக்கள் மன்றத்திற்கும் கண்ணில் மண்ணைத் தூவி அம்பலப்பட்டு விழிபிதுங்கி நின்ற காட்சிகள்தான் பிம்பமாய் நிழலாடுகிறது. 


இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் புஷ்ஷின் பதவிக் காலத்திற்குள்ளாக இதனை முடிப்பதற்கு அமெரிக்க ஆட்சியாளர்கள் சிரத்தை எடுத்துச் செயலாற்றுகின்றனர். இதற்கிடையில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆதாயமடையப்போவது யார்? என்ற கேள்வி எழாமல் இல்லை. இதற்கான விவாதம் இந்தியாவிலும் - அமெரிக்காவிலும் வெகுஜோராக இப்போதே தொடங்கி விட்டது. 


இடதுசாரி கட்சிகளும் - இதர ஜனநாயக சக்திகளும் இந்த ஒப்பந்தம் 1. இந்திய நாட்டின் சுயேச்சையான அயல்துறை கொள்கைக்கு வேட்டு வைக்கப்படுகிறது, 2. நேருவின் அணி சேரா கொள்கை என்ற கோட்பாடு பலியிடப்படுகிறது, 3. ஆசியாவில் அமெரிக்காவின் கேந்திர கூட்டாளியாக இந்தியாவை மாற்றும் நோக்கம் கொண்டது, 4. சுயேச்சையான அணு சக்தி கொள்கை கை கழுவப்படுகிறது. . . என்று அடுக்கடுக்காக வைத்த குற்றப் பத்திரத்திற்கு இதுவரை சரியான பதிலை வழங்காத ஐ.மு.கூ. அரசு கிளிப் பிள்ளைப் போல் ஒரே விஷயத்தை தொடர்ந்து கூறி வருகிறது. அது என்னவென்றால், ‘இந்தியாவை கடந்த 25 ஆண்டுக் காலமாக அணு சக்தி துறையில் உலகளவில் ஒதுக்கி வைத்ததிலிருந்து விலக்கு பெறுகிறது’ என்று பெருமையடித்துக் கொள்கிறது. 


இந்த விஷயத்தில் கூட, எதிர்காலத்தில் நாம் அமைக்கக்கூடிய அணு உலைகளுக்கு தடையில்லாமல் யுரேனிய எரிபொருள் மற்றும் உயர் தொழில்நுட்பங்கள் கிடைக்குமா? என்ற கேள்விக்கு இதுவரை உருப்படியான விடையில்லை என்பதே உண்மை நிலை. மேற்கண்ட விஷயங்கள் அப்படியே தொடரும் நிலையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல், “அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்க 1962 ஆம் ஆண்டின் அணுசக்தி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர உள்ளது. இதன்படி நமது நாட்டைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் தாராளமாக முதலீடு செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளார். 


அதாவது, இதுவரை அணுசக்தி துறையில் அரசுத் துறை மட்டுமே ஈடுபட்டு வந்தது என்ற கொள்கை கைகழுவப்படுகிறது. அரசின் இந்த அறிவிப்பின் மூலம் இந்த ஒப்பந்தம் யாருடைய நலனிற்காக இவ்வளவு அவசர கதியோடு நிறைவேற்றப்படுகிறது என்பது வெளிச்சத்திற்கு வருகிறது. அதேபோல் வீடியோகான் நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத் சமீபத்தில் அணு சக்தி ஒப்பந்தம் குறித்து கூறும் போது, இந்தியாவில் நிறுவப்படவுள்ள 40 அணு உலைகளுக்கான பேச்சுவார்த்தைகள் துவங்கிவிட்டதாகவும், இதன் மூலம் வரும் 15 ஆண்டுகளில் 40,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும், இரண்டு லட்சம் கோடி ரூபாய் இத்துறையில் முதலீடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார். 


அத்துடன் நிற்காமல் அணு சக்தி துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல் அமெரிக்காவில் உள்ள ஜெனரல் எலக்ட்ரிக்கல், யூ.எஸ்.யூ., வெஸ்ட்டிங் ஹவுஸ் எலக்ட்ரிக் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ஒப்பந்தம் விரைவில் நிறைவேற்றப்படுவதை எதிர்பார்த்து இலவு காத்த கிளிபோல் காத்திருக்கின்றன. இதன் மூலம் தங்களது பங்கையும் உறுதிப்படுத்துவதற்கு இந்நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இது குறித்து இந்திய -– அமெரிக்க வர்த்தக கவுன்சில் தலைவர் ரோன் சுமர் கூறும்போது, 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கு தோராயமாக 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும் என்று கணக்கிடப்படுகிறது. இந்தியாவில் 2020 வாக்கில் 40,000 மெகாவாட் மின்சாரம் அணு சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேற்கண்ட நிறுவனங்கள் எதுவும் தற்போது அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளாக அணு உலைகள் எதுவும் கட்டியெழுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 1979 ஆம் ஆண்டு மூன்று மைல் தீவில் ஏற்பட்ட அணு விபத்தை அடுத்து புதிய அணு உலைகளை அமைப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இந்தப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும் ஆதர்சமாகத் திகழ்கிறது. மற்றொரு புறத்தில் அணு சக்தி தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ள பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளிடம்தான் பெருவாரியான அணு வர்த்தகம் நடைபெறும் என்று விவாதிக்கப்படுகிறது. எப்படியிருப்பினும் அமெரிக்கா இந்த உடன்பாட்டிற்கு முன்நின்ற நாடு என்ற முறையில் அந்நாட்டு நிறுவனங்கள் தங்கள் பங்கினை உறுதி செய்வதற்கு முந்திக் கொண்டு வருகின்றனர். 


மேற்கண்ட பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார சூதாட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு ஏற்படும் இழப்புகளையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். குறிப்பாக, ஒரு மெகாவாட் மின்சாரம் அணு சக்தி மூலம் உற்பத்தி செய்வதற்கு ரூ. 8 - 9 கோடி ஆகும். இதுவே நிலக்கரியின் மூலம் உற்பத்தி செய்வதாக இருந்தால் ரூ. 4 – 5 கோடி மட்டுமே. இதையே கே° மூலம் உற்பத்தி செய்வதாக இருந்தால் ரூ. 3 – 4 கோடி ஆக மட்டுமே இருக்கும். மேலும் அணு சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 3 – 5 வருடங்கள் எடுத்துக் கொள்ளும். ஆனால் மற்ற முறையில் மின்சாரம் உற்பத்தி செய்ய 2 – 3 வருடங்கள் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அணு மின்சார விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 6.5 இருக்கும். மற்ற மரபுசார்ந்த துறை மூலம் உற்பத்தி செய்வதில் ரூ. 2- 3 வரை மட்டுமே இருக்கும். மின் கட்டணம் உயர்ந்தால் அனைத்துப் பொருட்களின் விலையும் சொல்லாமலே உயர்ந்து விடும் என்பது எளிய உண்மை. 


இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆதாயம் அடையப்போவது பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தனியார் நிறுவனங்களே பெருத்த இலாபமும், நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு பெருத்த நட்டமும் ஏற்பட்டு பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயத்தை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தவிர இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏற்பட்டுள்ள இராணுவ ரீதியான உறவு; அதனால் ஏற்படும் வர்த்தகம் என்று தொடர் சங்கிலி போல் அமெரிக்காவின் தடுமாறும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் ஆயுதமாக இந்த ஒப்பந்தம் அச்சாணியாகியுள்ளது. இராணுவத்துறையில் இரண்டு டசன் “ஹார்புன் வகை ஏவுகணைகளை” வாங்குவதற்கு மட்டும் 170 மில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்திற்கான ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது. 


மேலும் 126 சண்டையிடும் ஜெட்களை வாங்குவதற்கு 10 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்காவிற்கு இந்த உடன்பாட்டின் மூலம் மேலும் ஒரு கூடுதல் ஆதாயம் என்னவென்றால், ‘உலகின் வர்த்தக ரீதியான 40 சதவிகித எண்ணெய் பொருட்கள் இந்திய கடல்வழியில்தான் கொண்டுச் செல்லப்படுகிறது. குறிப்பாக செங்கடல் மற்றும் மலாய்க்கா ஸ்டிரேய்ட் என்று சொல்லக்கூடிய இடங்களில் நடைபெறும் கடற்கொள்ளை வியாபாரத்தை இதன் மூலம் தடுக்க முடியும். இதற்கான பாதுகாப்பையும் - ஒத்துழைப்பையும் இந்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்று கருதுகிறது. மொத்தத்தில் இந்தியாவிற்கு இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் இலாபம் என்ன? என்ற கேள்விக்கு ஆட்சியாளர்களிடம் விடை கிடைக்குமா? அல்லது இந்த ஒப்பந்தமே இந்திய – அமெரிக்க ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக செய்துக் கொண்டதுதான் என்ற குற்றச்சாட்டையும் வழக்கம் போல் கண்டுக் கொள்ளாமல் விடுமா? என்பதே நாட்டு மக்கள் எழுப்பும் கேள்வி!

September 05, 2008

பெரியாரின் சிந்தனைகளை சிறை வைக்கும் வீரமணி!தமிழகத்தின் சீரிய சிந்தனையாளர்களில் முன்னணியில் நிற்பவர் தந்தை பெரியார். பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை, சமூக விடுதலை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் மறுப்பு போன்ற புரட்சிகரமான கொள்கைகளை தமிழகத்தில் துணிந்து பேசியும், எழுதியும், எதிர்ப்பு காட்டியும் களத்திலிறங்கி போராடியவர் தந்தை பெரியார்.

ஜாதிய சகதியில் மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழக மக்களை விடுவிப்பதில் பெரும் பாத்திரம் வகித்தவர். ஜாதி மறுப்புக்கு எதிராக தனது கருத்துக்களை துணிந்து கூறியவர். பிரிட்டிஷ் இந்தியாவிலும், சுதந்திர இந்தியாவிலும் தனது கருத்துக்களை கூறுவதற்கு என்றைக்குமே தயங்கியதில்லை.

இவரது சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்டவர்கள் தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றனர். இவரது சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்ததே திராவிடர் சித்தாந்தம்.

1925 - 30களில் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலருடன் இணைந்து ஈரோட்டுப் பாதையை அமைத்து ஒரு சோசலிச சமூகத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் பயணித்தவர் பெரியார். பெரியாரால் பெரிதும் மதிக்கப்பட்டவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். இந்த இரண்டு சிகரங்களும் ஒன்றிணைந்த புள்ளிகளும் - விலகிய புள்ளிகளும் சீர்தூக்கிப் பார்த்து. இன்றைக்கு பெரியார் இருந்திருந்தால் அவரது இலக்கு எதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதை நின்று நிதாணித்து சிந்திக்க வேண்டியது அவசியம். நிச்சயம் அவர் இடதுசாரி முகாமிலேதான் இருப்பார். (இது கற்பனா வாதம் ஆகாது) பெரியாரிய சிந்தனையின் எதார்த்தம்.

அந்த அடிப்படையில் இன்றைக்கு பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிட சித்தாந்தம் தேர்தல் அரசியலில் ஈடுபட்டு முனை மழுங்கிப் போய் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற புதிய சீரழிவிற்கு இட்டுச் சென்றது.

பெரியாருக்குப் பின் பெரியாரின் கொள்கைகளையும், சிந்தனைகளையும் பரவலான வெகுஜன மக்கள் மத்தியில் கொண்டுச் செல்வதற்கு மாறாக அவரது திராவிடர் கழகம் ஒரு கார்ப்பரேட் அலுவலகமாக மாறியதோடு, அவரது பெயரில் கல்லூரிகளைத் துவக்குவது, பெனிபிட் பண்ட் நடத்துவது, பெரியார் புறா நடத்துவது... என்று திசை மாறி அவரது கொள்கையிலிருந்து முற்றிலுமாக விலகி இன்றைக்கு வீரமணியின் சிந்தைக்குள் அடைப்பட்டு கிடக்கிறது திராவிடர் கழகம்.

பெரியாரின் கொள்கைகள் இன்றைக்கு மக்கள் மத்தியில் பேசப்படுவதில்லை. பெயருக்கு ஒரிரு மாநாடுகள் நடத்துவதும், பொதுக்கூட்டங்கள் நடத்துவமாக நின்று விடுகிறது. மேலும் தமிழகத்தில் ஆட்சியில் வரும் அதி்முக, திமுக என மாறி, மாறி தனது சொத்திற்கு பாதுகாப்பு தேடும் கழகமாக மாறிவிட்டது.

தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்க வேண்டிய திராவிடர் கழகம் பல நேரங்களில் வெறும் அறிக்கையோடு நின்று விடுகிறது. அதற்கான களப்பணிகள் எதனையும் செய்வதில்லை.

இந்நிலையில் வீரமணியோடு கருத்து வேறுபாடு கொண்டு வேறு களம் கண்டு பெரியார் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல முனைந்திருக்கும் பெரியார் திராவிடர் கழகத்தின் மீது வழக்குத் தொடுப்பதும். பெரியாரின் கொள்கைகளை - கருத்துக்களை முழுக்க முழுக்க தனதாக்கிக் கொண்டு உரிமைக் கொண்டாடுவதும் பெரியாருக்கு இழைக்கும் துரோகமாக கருத முடிகிறது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் உப்புச் சப்பில்லாத சொத்தை காரணம் மட்டுமே. அதாவது, யார் வேண்டும் என்றாலும் பெரியார் கருத்தை வெளியிடலாம் என்றுச் சொன்னால் அவரது கருத்தை திரித்து விடுவார்களாம்.

திரு வீரமணி அவர்கள் இதுவரை அப்படி எந்த வகையில் பெரியாரின் கருத்துக்களை அவரது எதிர் முகாமைச் சேர்ந்தவர்கள் திரித்திருக்கிறார்கள்? அல்லது வேறு யார் திரித்திருக்கிறார்கள் என்று உலகுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளார்.

மொத்தத்தில் ஒரு புரட்சிக்கரமான சிந்தனையாளரின் கருத்துக்களை கழகத்திற்குள் பூட்ட முனைவது பெரியாரின் சுதந்திர கொள்கைக்கு எதிரானது. எனவே தமிழக மக்கள் பெரியாரின் கருத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைக்க வரவேண்டும். அப்போதுதான் பெரியாரையே நாம் மீட்க முடியும். பெரியாருக்கு சிலை வைத்தால் போதாது அவரது சிந்தனையை விதைக்க வேண்டும் அதுவே தமிழகமும் - இந்தியாவும் எதிர்பார்க்கிறது. அதற்கு தடையாக இருக்கும் சக்திகள் பெரியாரிய எதிர் சிந்தனை சக்திகளே!

இணையத்தில் திராவிடம் பேசுபவர்கள் - அல்லது பெரியார் பெயரை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் இதுபற்றி சிந்திப்பார்களா? செயல்படுவார்களா? பொருத்திருந்து பார்ப்போம்! அது வரை பெரியாரை மீட்கும் சக்திகளுடன் துணை நிற்போம். இணையத்தில் இதற்காக தமிழச்சி அவர்கள் சிறப்பான போராட்டத்தை தொடுத்து வருகிறார் அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

விரைவில் இணையத்தில் "பெரியார் சிந்தனை மீட்பு கழகம்" ஏதாவது ஒன்று உருவானால் நாட்டுக்கு நல்லது என்று முடிக்கிறேன்.

September 04, 2008

நாட்டை ஆளும் ராஜாக்களுக்கு நாக்க முக்க... பாடல் கேட்குமா?


சமீபத்தில் இளம் வட்டங்களின் நரம்புகளை முறுக்கேற்றி நடனமாட விட்டுள்ள பாட்டு

நாக்க முக்க நாக்க முக்க 
நாக்க முக்க நாக்க முக்க 
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க 
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க 
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க 
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க 
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க 
நாக்க முக்க நாக்க முக்க

இந்தப் பாடலில் ஒலிக்கும் இசை ஆடாதவர்களையும் ஆடச் செய்யும். ஆனால் நமது ஆட்சியாளர்களைத் தவிர!

நாட்டுப் பிரச்சினைகளை, நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை நாலு வரியில் சொல்ல முடியுமா? சொல்லியிருக்கிறது நாக்க முக்க...

கீழ்கண்ட வரிகளை சற்று நோக்குங்கள்... அதன் அர்த்தம் என்ன என்று புரிந்து விடும்.

ஆ.... ஆ....ஆ.... 
ஏய்.... அப்படி போடு... 
ஹா ...... ஆஹா.... 
ஏய் குத்தாங்கல்லு போட்டு வச்சு ஓலகுடிசை நிக்குது 
நட்டாங்கல்லு போட்டு வச்சு நாத்தாங்காலு இருக்குது 
அச்சச்சோ மூணுபோகம் ஒருபோகம் ஆச்சுடா... 
காயவச்ச நெல்ல்லு இப்போ கடைத்தெருவே போச்சுடா... 
நட்டு வச்ச நாத்து இப்போ கருவாடா ஆச்சுடா... 
அரவயிறு காவயிறு பசி தான் பட்டினி 
சாவு தான் எத்தினி... 
எங்கே டா இங்கேடா அடிங்கடா அடிங்கடா 
ராஜாவுக்கு கேக்கட்டும்.... 
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க 

தமிழகத்தில் கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என்று அறிவித்து வரலாற்றில் அழியாத இடம் பெற்ற விட்டார். கருணாநிதி "இதை நான் போட்ட பிச்சை" என்று சொல்லாமல் இருந்தால் சரிதான்!

ஆனால் உண்மை நிலை என்ன? வெளி மார்க்கெட்டிலிருந்துதான் மக்கள் சமைப்பதற்கான அரிசியை மிக அதிகமாக உபயோகப்படுத்துகிறார்கள். அதன் விலையை குறைக்க ஆட்சியாளர்களை முயலுங்கள் என்று சொன்னால் பே.பே... காட்டி விட்டு ஆன் - லைன் கொள்ளையர்களுக்கு பச்சை கொடி காட்டி வருகிறார்கள்.

இன்னொருபுறத்தில் விவசாயத்தில் பெரும் நட்டம் ஏற்பட்டு தான் விளைவித்த கரும்பையும், பருத்தியையும் தானே நெருப்பிட்டு பொசுக்கும் அவலம் நடந்து வருகிறது. என்ன விஷயம் கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழுக்குக் கூட மி;"சாது என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

இதனால் மகாராஷ்டிரத்தில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஏன் தமிழகத்தில் கூட க;"சித் தொட்டி திறக்கப்பட்டது தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் நினைவு இருக்கும்.


மக்களின் வாழ்க்கை தற்போது கருவாடாக கருகிக் கொண்டு வருகிறது. பசியாலும், பட்டினியாலும் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் காதில் எவ்வளவுதான் ஊதினாலும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.

தற்போது 

ராஜாவுக்கு கேக்கட்டும்.... 
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க 

என்ற அதிரும் அதிர்வேட்டுக்களாவது கேட்குமா? என்று சாதாரண விவசாயி ஏங்குகிறான். ஆட்சியாளர்களின் சிந்தனையோ ரகசிய கடிதங்கள் வாசிங்டன்னிலும், வியன்னாவிலும் அம்பலப்பட்டுப் போகிறதே என்ற கவலை ரேகைதான் தெரிகிறது.

அவர்களது கவலையெல்லாம் அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற 123... என்று ரேசில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் தமிழகத்தை இருட்டில் அமிழ்த்தி கின்னஸ் சாதனை படைக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. வீராசாமியின் காதுகளுக்கு ஒருபோதும் இந்த பாடல் வாரிகள் கேட்கப்போவதில்லை!

மக்களின் போராட்ட வரிகள்தான் இதற்கு பாடம் புகட்டனும்!

September 01, 2008

இருளில் மூழ்கும் தமிழகம்!


இந்தியா ஒளிர்கிறது - இந்தியா இஸ் ஷைனிங் என்று 2004ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க. - வாஜ்பாய் வகையறாக்களால் முன்வைக்கப்பட்ட கோஷம். பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் முக்கிய பங்குதாரராக இருந்தவர் தமிழகத்தின் தொல் காப்பியர் மாண்புமிகு கலைஞர் அவர்களும், அவரது திராவிட முன்னேற்றக் கழகமும்.
கடைசி நேரத்தில் இந்த கப்பல் மூழ்கும் என்று தெரிந்தவுடன் அதிரடியாக குதித்து வெளியேறிய அரசியல் வித்தகர் கலைஞர் கருணாநிதி. இருப்பினும், இந்தியா ஒளிர்கிறது கோஷத்தில் அவருக்கும் மறைமுகமாக பங்குண்டு என்று நம்பலாம்.
தமிழகம் தொழில் வளர்ச்சியில் முதலிடம் என்று அடிக்கடி மார்தட்டிக் கொள்வது கழக கண்மணிகளுக்கு கைவந்த கலை. தற்போது இவர்களது ஒன்னரை ஆண்டுகால ஆட்சியின் தலையாய ஒரே சாதனை ஒரு ரூபாய் அரிசி என்று பிதற்றி கவிதை மழையில் குளித்துக் கொண்டிருக்கின்றனர் உடன் பிறப்புகள்.
தமிழக மக்களோ இது அவர்களுக்கு போடப்பட்டுள்ள வாய்க்கரியாகத்தான் பார்க்கிறார்கள். இது குறித்து பேருந்து பயணத்தில் ஒரு பெண் பயணி சொன்னது இன்னும் காதில் ரிங்காரம் ஒளித்துக் கொண்டிருக்கிறது. அடப்போங்க! அந்த ரேஷன் அரிசியை வேக வைக்கிறதுக்குள்ள இருக்கிற கேஸ் கூட காலியாகி விடும். தமிழக மக்கள் என்ன கருதுகிறார்கள் என்றெல்லாம் கலைஞர் கவலைப்படுவாரா? தெரியாது! இன்னொருவர் அடித்த கமெண்ட் பேருந்தில் கைதட்டலையே பெற்று விட்டது. ஆமாம்பா... இன்னும் கொஞ்சம் கடத்துறதுக்கு லைசன்ஸ் கொடுத்துட்டார்! என்று தனது அரிய கண்டு பிடிப்பை தெரிவித்தார்.
உண்மை என்ன? வெளி மார்க்கெட்டில் சாதாரண மக்கள் சமைப்பதற்கான அரிசி விலை விண்ணைத் தொட்டு விடும் போல் இருக்கிறது. 22 ரூபாயிலிருந்து 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி விலை ஏறிவிட்டது. அதேபோல் சோப்பு விலை கண்ணுக்குத் தெரியாமல் உயர்ந்து விட்டது. 16 ரூபாய் விற்றுக் கொண்டிருந்த அமாம் சோப்பு ரூ. 22க்கு விற்கப்படுகிறது. திடீர் என்று 6 ரூபாய் ஏறிவிட்டது.
அடப்போங்க... டீ கூட இனிமேல் ஐந்து ரூபாய்க்குத்தான் கிடைக்குமாம்! என்று இன்னொருவர் சொன்னார். இப்படி அனைத்துப் பொருட்களின் விலைகளும் தாறுமாக ஏறிக் கொண்டிருக்கையில், இதனை கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையும் எடுக்காத முதல்வர் கலைஞர் கடிதம் எழுதி எழுதி குவித்து சாதனை படைத்து வருகிறார்! நீரோ மன்னனை இந்த நேரத்தில் நினைக்காதீர்கள். அவர் ரொம்ப நல்லவராம்!
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது 5 மணி முதல் 8 மணி நேரம் வரை அறிவிக்கப்பட்ட - அறிவிக்கப்படாத பவர் கட். இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் சாதாரண கூலித் தொழிலாளர் முதல் சொந்தமாக தொழில் நடத்தும் சிறு வியாபாரிகள் முதல், சிறுதொழில் நிறுவனங்கள் முதல் பெரும் தொழில் நிறுவனங்கள் வரை கடையை மூடி விடலாம் என்ற நிலைக்கு வந்து விட்டது.
இந்த திடீர் பவர் கட்டால் மேலும் விலை உயரும் நிலை மக்களை அச்சத்தின் படியில் தள்ளியுள்ளது. அத்துடன் 8 மணி நேரம் வேலை செய்யும் ஒரு வெல்டிங் தொழிலாளிக்கு 3 மணி நேரம் வேலை இல்லை என்றால், அவருக்கு ஏற்கனவே கிடைக்கும் கூலியிலும் வெட்டு விழப்போகிறது. இதனால் மத்தாளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பதுபோல் மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
மறு முனையில் தமிழக தொழில் வளர்ச்சி என்பது இனிமேல் வெறும் கனவாக மட்டுமே இருக்கப் போகிறது. அது தவிர ஐ.டி. தொழில் உட்பட பல முன்னணி தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் நிலவும் இந்த பவர் கட்டைக் கண்டு செய்வதறியாது திகைத்து வாடுகிறார்கள்.
இதை விட கொடுமையானது. சமீபத்தில் தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு பெருகி வரும் கொலை - கொள்ளை போன்ற சமூக விரோத சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு இந்த இருட்டு வசதி செய்து கொடுத்துள்ளது போல் அமைந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் சுதந்திரமாக இருட்டில் நடமாட முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது. எனவே தமிழகத்தின் மீது படிந்துள்ள இந்த இருள் பல சமூக விரோத செயல்களுக்கு இடம் அளித்து தமிழக மக்களின் வாழ்க்கையை மேலும் இருட்டுக்குள் தள்ளிவிடும் ஆபத்தும் உள்ளது. இதனை தமிழக அரசும், தமிழக முதல்வரும் உணர்ந்தால் சரிதான்!
ஆனால், ஆற்காடு வீராசாமி குடியிருக்கும் மன்னிக்கவும் பவர்கட் வீராசாமி பகுதியில் மட்டும் கரண்ட் கட்டாவதேயில்லையாம்! பரவாயில்லை அந்த பகுதி மக்களுக்காவது இவர் சேவை செய்கிறாரே!
25 ஆண்டு காலம் தமிழகத்தில் முதல்வராக இருந்த மூத்த குடிக்கு எதிர்கால தமிழகத்தில் என்ன நிகழப்போகிறது என்று தெரியாமல் போனது ஏனோ என்ற கேள்விதான் எழுகிறது. தமிழக வளர்ச்சிக்கு ஏற்ப மின்திட்டத்தை உருவாக்குவதில் ஏன் இந்த தடுமாற்றம்? காற்று வரவில்லை; அதனால் காற்றாலைகள் இயங்கவில்லை; நமக்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்ற வரிகளை நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை! இதைச் சொல்வதற்கு யார் வேண்டுமானாலும் அந்த முதல்வர் பதவியில் இருக்கலாம்! ஆனால்!...
கலைஞர் தினமும் தனது உடன் பிறப்புகளுக்கு கவிதை எழுதி  ஆயசப்படுத்துகிறார்! தமிழகம் இருளில் மூழ்குவது குறித்தும் ஒரு கவிதை எழுதினால் அவர் வரலாற்றில் இடம் பெற்ற இன்னொரு நீரோவாக மாறலாம்!