July 28, 2008

பயங்கரவாதத்தின் மூன்று முகங்கள்!


பெங்களுரைத் தொடர்ந்து அஹமதாபாத்திலும் தொடர் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அடுத்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு குறி வைத்திருப்பதாக பயங்கரவாதிகள் மிரட்டுகின்றனர். தமிழகத்தில் கூட திருநெல்வேலியில் ஒருவர் பிடிபட்டுள்ளார். இந்த பயங்கரவாதச் செயல்களுக்கு இந்திய முஜாஹீதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக அவர்கள் கூறும் போது 1992ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்று கூறுகின்றனர்.
பயங்கரவாதிகள் எந்தப் பெயரில் வந்தாலும் அது மக்களுக்கு எதிரானதே! குறிப்பாக சாதாரண - ஏழை எளிய உழைப்பாளி மக்கள்தான் இதுபோன்ற செயல்களால் உயிர் பலியாகின்றனர். அப்பாவி மக்களை இவ்வாறு கொல்வதன் மூலம் பயங்கரவாதிகள் எதைச் சாதிக்க விரும்புகின்றனர்? இசுலாமிய மத அடிப்படைவாதம் - குறிப்பாக ஜீகாதி - புனிதப் போர் என்ற பெயரில் மக்களைக் கொல்வதில் இன்பம் கான்பதை இசுலாமிய மதம் அனுமதிக்கிறதா என்பதுதான் சாதாரண மக்களின் கேள்வி? எந்த மதமும் இதனை அனுமதிக்காது! எனவே மத அடிப்படைவாதிகள் உள்நாட்டு - வெளிநாட்டு பயங்கரவாதிகளோடு தொடர்பு வைத்துக் கொண்டு நமது நாட்டின் ஒற்றுமையை துண்டாடுவதையே அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகும். இதற்கு மதச் சாயம் என்பது மிகவும் எளிதில் தீப் பிடிக்கும் மருந்தாகிறது அவ்வளவுதான்.
பயங்கரவாதம் எந்த முகத்தோடு வந்தாலும் அதனை நாம் முறியடிக் வேண்டும். அதனை வேறுடன் பிடுங்க வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதம் - இது இந்து மத உணர்வை பயன்படுத்தி சுயநல அரசியல் ஆதாயம் அடையும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக கலகத்தை தூண்டி விட்டு படுகொலையை நிகழ்த்துகிறது. இந்துத்துவ பயங்கரவாத்தின் உச்ச கட்டம்தான் குஜராத் மோடித்துவ பாசிசம்தான். இந்த இந்துத்துவ பாசிசம் துவக்கி வைத்த பயங்கரவாத விளையாட்டு இந்தியாவை பல்வேறு வடிவங்களில் சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் முறியடிக் வேண்டிய பயங்கரவாதத்தில் முதன்மையானது பெரும்பான்மை இந்துத்துவ பயங்கரவாதமே!
அடுத்து, இந்த இந்துத்துவ பயங்கரவாதத்தை காரணமாகக் கூறிக் கொண்டு பழிக்கு பழி வாங்குவதாக புனிதப் போர் என்ற பெயரில் இந்திய மக்கள் மீது மறைமுகப் போரைத் - குண்டு வெடிப்பு கலாச்சரத்தை நிகழ்த்தும் இன்னொரு பாசிசம் இசுலாமிய மத அடிப்படைவாத பாசிசம்! குறிப்பாக சமீப காலத்தில் இந்த இசுலாமிய மக்கள் மதச்சார்பற்ற - ஜனநாயக சக்திகளுக்கு அணி திரள்வதற்கு மாறாக மத அடிப்படைவாத கண்ணோட்டம் என்ற அமைப்பின் பின்னால் அணி திரள்வதும் - அதனைத் தொடர்ந்து இந்த வாலிபர்களுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டு இத்தயை வெட்கம் கெட்ட பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடச் செய்வதும் கோழைத்தனத்தின் உச்ச கட்டம் என்றே சொல்லலாம். இத்தகைய இசுலாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதத்தையும் நாம் உறுதியாக முறியடிக்க வேண்டும்.
அடுத்து உலகளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா செய்யும் அட்டூழியம். இந்த பயங்கரவாதிகள் பின்லேடனுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரால் ஆப்கானிஸ்தானையும், ஈராக்கையும் தற்போது ஈரானையும் குறி வைத்து செயல்பட்டு வருகின்றனர். ஆப்கானும் - ஈராக்கும் முழுமையாக கபளிகரம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏகாதிபத்திய பயங்கரவாதம் என்பது அனைத்து பயங்கரவாத்திற்கும் தலைமையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் கூட இந்துத்துவ - சங்பரிவார கும்பல் யாருடன் சுகமான கூட்டு வைத்துள்ளது இந்த ஏகாதிபத்திய அமெரிக்காவுடன்தான் அவர்கள் கூட்டு வைத்துக் கொண்டுள்ளனர். அவர்களைத்தான் அவர்கள் உற்ற நன்பர்களாக கருதுகிறார்கள். இத்ன் மூலம் இவர்களுக்கான பாடத்தை வழங்குவது அமெரிக்க பயங்கரவாதம்தான்.

மொத்தத்தில் இன்றைய இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதம், இசுலாமிய பயங்கரவாதம், அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய பயங்கரவாதம் ஆகியவற்றை உறுதியாக முறியடிக்க வேண்டும். இவைகள் ஒன்றுடன் ஒன்று மறைமுகமாகவும், நேரடியாகவும் கூட்டு வைத்துக் கொண்டு தங்களது சுயநல அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. எனவே ஜனநாயக சக்திகள் - இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போர்த் தொடுக்க வேண்டும். அப்போதுதான் மனித குலத்திற்கு முழுமையான விடுதலை கிடைக்கும். மேலும் இந்த பயங்கரவாதம் என்பது தற்போதைய அரசியல் பிரச்சினைகளைக் கூட உணர்வு ரீதியாக பின்னுக்குத் தள்ளும் கருவியாக ஆளும் வர்க்கத்திற்கு பயன்படுகிறது. மக்கள் ரொட்டிக்கும், கூழுக்கும் ஆளாய்ப் பறக்கையில், விலை வாசி உயர்வு என்ற பிரச்சினையால் வதைபட்டு இருக்கையில், அணு சக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய மக்களின் கழுத்தில் பெரிய சுருக்கைப் போடும் மத்திய அரசுக்கு எதிரான போக்கை கண்டுக்கும் தருவாயில் இந்த பயங்கரவாம் நம்மை அச்சுறுத்துகிறது. எனவே பயங்கரவாதம் உழைக்கும் மக்களின் அடிப்படை எதிரி இதை அனுமதிக்கக் கூடாது! இதனை உறுதியாக முறியடிப்போம்!

July 23, 2008

மன்மோகனின் கொத்தடிமைத்தனம்!


பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, தன்னை இடதுசாரிகள் கொத்தடிமை போல நடத்த முயன்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுவாக அடிமையாகவோ அல்லது கொத்தடிமையாகவோ இருப்பவர்கள் அடிமைத்தனத்திற்கு எதிராக போராடி மீள்வது வழக்கம். ஆனால் மன்மோகன் என்ன செய்தார்?
தன்னை அடிமைப்படுத்த முயன்ற இடதுசாரிகளிடம் இருந்து விடுதலைப் பெறுவதற்காக அவர்களிடம் தங்களுக்கு கொடுக்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு கூறினாரா? அல்லது உங்கள் ஆதரவு வேண்டாம் என்று கூறினாரா? இல்லையே!
இடதுசாரிகள்தான் மன்மோகன் சிங்கின் அமெரிக்க அடிமைத்தனத்தை கண்டு - அணு சக்தி என்ற பெயரால் இந்த நாட்டையும் - நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தும் துரோகத்திற்கு எதிராக வெகுண்டு எழுந்து ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
தற்போது இதனை தலை கீழாக பேசி கயிறு திரிக்கிறார் மன்மோகன். நாட்டு மக்களை சந்திக்காமல் புறவழியாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டிருக்கும் மன்மோகனுக்கு எப்படி நாட்டு மக்கள் மீது மரியாதையோ, விசுவாசமோ இருக்கும்? என்ற கேள்விதான் எழுகிறது!
மன்மோகன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இவர்களது சந்தர்ப்பவாத கூட்டும் - ஊழலும் நாட்டு மக்களை வெட்கித் தலைக் குனிய வைத்துள்ளது. நாட்டு மக்களின் நம்பிக்கையை மன்மோகன் இழந்து விட்டார்!

July 17, 2008

சிங் இஸ் சிங்...சிங் இஸ் சிங்...


சிங் இஸ் சிங்...
சிங் இஸ் சிங்...
சிங் இஸ் சிங்...


இதுதான் தற்போது காங்கிரஸ் கட்சியின் புதிய இசை ஆல்பம். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியின் போது காங்கிரஸ் காரர்களால் இசைக்கப்பட்ட புதிய கீதம். இந்த வாசிப்பு யாருக்கானது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். ஜார்ஜ் புஷ் தன்னுடைய ஐ-பாடில் இதனை நிரந்தரமாக ரீ மேக் செய்து கேட்கிறாராம். அது மட்டும் அல்ல. அவரது மொபைல் ரிங்டோன் கூட சிங் இஸ் சிங்... சிங் இஸ் சிங்... என்றே ஒளிக்கிறதாம் அந்த அளவிற்கு மன்மோனாமிக்ஸ் வேலை செய்கிறது.சரி இந்தக் கூட்டத்தில் முழங்கிய சோனியாவின் பேச்சை மகாராஷ்டிர விவசாயிகள் கேட்டிருக்க மாட்டார்கள் என்று நம்பலாம். அப்படி என்ன பேசினார் என்று கேட்கிறீர்களா? ஒன்றும் இல்லை.காங்கிரஸ் கட்சி விவசாயிகள் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து வேலை செய்கிறார்களாம்!அணு சக்தி ஒப்பந்தம் இந்த நாட்டிற்கு நலன் பயக்குமாம்! இதன் மூலம் சிறந்த தொழில்நுட்பங்களும், யுரேனியமும் கிடைக்குமாம்!வெளியுறவுத் துறை சம்பந்தப்பட்ட கொள்கையில் யாருடனும் சமரசம் செய்துக் கொள்ள மாட்டார்களாம்!எந்தக் கட்சியின் சான்றிதழும் காங்கிரசிற்கும் தேவையில்லையாம்!இப்படி பல்வேறு முத்துக்களை உதிர்ந்துள்ளார் சோனியா! உண்மை என்ன என்பதை மகாராஷ்டிர மற்றும் ஆந்திர விவசாயிகளுக்கே தெரியும். கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பார்கள். ஆனால் சோனியா முழு பூசனியை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்.பத்திரிகையாளர் சாய்நாத் மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை குறித்து ஆராய்ந்து அதிர்ச்சிதரும் உண்மைகளை நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி கடந்த 10 ஆண்டு காலத்தில் 1,20,000 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இந்த உண்மையை அப்படியே மறைத்து விட்டு விவசாயிகளுக்கு தங்கள் அரசு நண்மை செய்வதாக கோயாபல்ஸ் பிரச்சாரத்தை கட்டவிழித்து விட்டுள்ளார் சோனியா! பா.ஜ.க. கடைப்பிடித்த அதே பொருளாதார கொள்கையை கடைப்பிடித்து விவசாயிகளை போட்டிப் போட்டு தற்கொலைப் பாதையில் தள்ளியதுதான் இந்த அரசின் சாதனை என கூறலாம்.அணு சக்தி ஒப்பந்தத்தின் மூலம் என்ன நன்மை கிடைக்கும் என்று சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். சமீபத்தில் காங்கிரஸ் கட்சி அணு சக்தி ஒப்பந்தம் குறித்து அவர்களது கட்சி அணிகளுக்காக வெளியிட்ட பிரசும் ஒன்றில் குறிப்பிட்டுள்ளபடி 2020 வாக்கில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியுமாம்! அதாவது இது 7 முதல் 8 சதவி்கிதம் மட்டுமே மொத்த மின்சார உற்பத்தியில் அங்கம் வகிக்கும். இதற்காக நாம் செலவு செய்ய வேண்டிய தொகை எவ்வளவு என்பதை அந்தப் பிரசுரம் மறைத்து விட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடிக்கும் மேல் நாம் கொட்டியழ வேண்டியிருக்கும். மேலும் அணு சக்தியின் மூலம் தயாரிக்கும் மின்சாரத்திற்கான யூனிட் ஒன்றுக்கு தற்போது நாம் கொடுக்கும் விலையை விட மூன்று மடங்கு அதிகம் இருக்கும் என்ற உண்மையை நாட்டு மக்களுக்கு சோனியா சொல்லத் தயாரா? இந்த தொகைக்கு நீங்கள் என்ன மானியமா தரப்போகிறீர்கள்? அல்லது விலை உயர்ந்த இந்த மின்சாரத்தை விவசாயிகளுக்குத்தான் இலவசமாக தரப் போகிறீர்களா? இல்லையே! அதாவது இந்த அணு சக்தி மின்சாரத்தின் மூலம் கூடுதலாக இன்னும் ஒரு லட்சம் விவசாயிகளை பரலோகத்திற்கு அனுப்பலாம் இதுதான் காங்கிரஸ் மற்றும் சோனியாவின் மகத்தான திட்டம். அதைவிட முக்கியமான விசயம் என்ன தெரியுமா? அணு உலைகள் மேம்பாட்டில் அறிவே இல்லாத அமெரிக்காவிடம் இருந்து ஒதுக்கப்பட்ட உலைகளையெல்லாம் பெரிய விலை கொடுத்து வாங்கப் போகிறோம். இதுதான் இவர்கள் புதிய தொழில்நுட்பம் என்று கூறுகிறார்கள்.சரி வாதத்திற்காக நம்முடைய இந்திய நாட்டில் தற்போது தோரியத்தின் மூலம் அணு சக்தியை பயன்படுத்தும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. பாஸ்ட் பிரீடர் தொழில்நுட்பத்தில் நாம்தான் முன்னணியில் இருக்கிறோம். அமெரிக்கா நம்மிடம் இதனை ரகசியமாக திருடக்கூடிய இடத்தில்தான் இருக்கிறது. இந்த நிலையில் நாம் எப்படி புதிய தொழில்நுட்பத்தை அவர்களிடம் இருந்து பெறப்போகிறோம் என்பதை சோனியா விளக்குவாரா? புதய தொழில்நுட்பம் என்ற வாதத்தை சோனியா வைப்பதன் மூலம் நம்முடைய அணு சக்தி தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்காக பாடுபட்ட அறிவியலாளர்களையும் அவமதிக்கிறார் சோனியா!வெளியுறவுத்துறை கொள்கையில் யாருடனும் சமரசம் செய்துக் கொள்ள மாட்டோம் என்று பெருமையடித்துக் கொள்கிறார்!இந்த விசயத்தில் நீங்கள் சமீபத்தில் நடந்துக் கொண்ட முறை என்ன? ஈரானுக்கு எதிராக ஐ.ஏ.இ.ஏ.வில் இரண்டு முறை வாக்களித்தீர்களே இது யாருடைய நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வாக்களித்தீர்கள்? அல்லது சொந்த நிலைபாடு என்றால் ஈரான் எந்த விதத்தில் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறது என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க காங்கிரஸ் தயாரா?மேலும் ஈரான் மூலம் குழய் வழி எரிவாயுத் திட்டம் இந்தியா - பாகிஸ்தான் - ஈரான் திட்டம் தொங்கல் நிலையில்தானே உள்ளது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து குழாய் வழி எரிவாயுத் திட்டத்தை அமலாக்குங்கள் என்று நச்சரிக்கிறதே காங்கிரசின் நிலைபாடு என்ன? உண்மையில் ஈரானிலிருந்து நாம் இந்த எரிவாயுத் திட்டத்தை அமலாக்கினால் நாட்டு மக்களின் எரி சக்தி பிரச்சினைக்கு பெரியத் தீர்வு கிடைக்குமே! ஏன் இதை கைவிடுகிறீர்கள்? ஊசலாடுகிறீர்கள். இந்த துறையின் மந்திரியாக இருந்த மணி சங்கர் ஐய்யர் மாற்றப்பட்டாரே யாருடைய நிர்ப்பந்தத்தில்? இதுதானே உங்கள் அயலுவுறக் கொள்கை!இந்த முதுகெலும்பில்லாத கொள்கைகளைத்தானே இடதுசாரிகள் விமர்சனம் செய்து வந்தார்கள். இதற்கெல்லாம் எந்தவிதமான உருப்படியான பதிலையும் சொல்லாமல் புறவழியாக இந்த உடன்பாட்டை நிறைவேற்றத் துடிக்கிறீர்களே இது யாருடைய நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் என்று நாட்டு மக்கள் கேட்கிறார்கள்!இறுதியாக, எந்தக் கட்சி சான்றிதழும் தங்களுக்கு தேவையில்லை என்று கூறியுள்ளார். நல்ல விசயம்தான். அதுவரை இப்படி கூறியதற்காக சோனியாவை நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஏனெனன்றல் இந்திய மக்களின் சான்றிதழ் கூட தங்களுக்கு தேவையில்லை என்று சொல்லாமல் விட்டாரே! அதற்காகத்தான். இவர்களுக்கென்ன ஜார்ஜ் புஷ்ஷீன் பாராட்டு இருந்தால் போதும், கொலைகாரன் சிபு சோரனின் பாராட்டு இருந்தால் போதும், அப்புறம் என்ன அம்பானிகளின் ஆசி இருக்கும் போது எந்தக் கட்சியின் பாராட்டும் இவர்களுக்கு தேவையில்லைதான்!

July 16, 2008

அம்பானிகள் முன்னேற்றக் கூட்டணி அரசு

மத்திய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றுக் கொண்ட பின்னர். இந்த ஆட்சியை காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் கட்சியும் அதன் எடுபிடிகளும் எடுக்கும் முயற்சிகள் நாட்டு மக்களை வெட்கித் தலைகுனிய வைக்கிறது. பெரும்பான்மையை நிருபிப்பதற்காக எம்.பி.க்கள் 30 கோடி முதல் 50 கோடி வரை விலை பேசுவதும், ஆட்சிக்கு ஆதரவு தருவதற்காக மற்ற சிறிய மற்றும் சுயேச்சைகள் தங்களது சுயநல கோரிக்கைகளை முன்னுக்கு வைத்து மிரட்டுவதும் வேடிக்கையாக அல்ல; வேதனையாக உள்ளது.

இந்திய ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள் கூட தற்போதைய குதிரை வியாபாரத்தை கண்டு வெட்கித் தலைகுனிகின்றனர். ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக தங்கள் கொள்கை - கோட்பாடுகள் என அனைத்தையும் கைவிடத் தயாராகி விட்டனர் காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும்.

இது ஒருபுறம் நடந்துக் கொண்டிருக்கையில் முகேசு அம்பானியும் - அனில் அம்பானியும் அடிக்கும் கூத்தைப் பார்க்கும் போது. இந்தியாவையே ஆட்டிப் படைக்கும் அசுரர்களாக - சர்வ வல்லமைப் படைத்தவர்களாக தங்களைக் காட்டிக் கொள்கின்றனர். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் ஏதோ இந்த இரண்டு பேருக்கும் நிகழும் குடும்பச் சண்டைப் போல இதனை காட்டி திசை திருப்பி இவர்கள் மீது ஒரு கரிசனத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். உண்மை என்ன? கடந்த 10 ஆண்டு காலமாக இந்த அம்பானிகளின் சொத்து மதிப்பு பெரும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இருவருமே உலகப் கோட்டீசுவர்களின் வரிசையில் 10 இடத்திற்குள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அனில் அம்பானி சமாஜ்வாடியைப் பயன்படுத்தி ஆட்சியைக் காப்பாற்றுகிறார். மறுபுறம் முகேசு அம்பானி மன்மோகனை பயன்படுத்தி ஆட்சியைக் காப்பாற்றுகிறார். இருவரும் செய்வது என்ன? இந்த ஆட்சியைக் காப்பாற்றுவதுதான் இருவரின் நோக்கமும். ஆனால் ஏதோ திசை மாறிச் செல்பவர்கள் போல ஒரு காட்சி இங்கே பரப்பப்பப்படுகிறது. இந்த பெரு முதலாளிகள் இந்திய மக்களின் இரத்தத்தை அட்டைப் போல் உறிகின்றனர். இந்தியாவின் முக்கிய கேந்திரமான தொழில்களில் கொடி கட்டிப் பறப்பது இந்த அம்பானிகள்தான். செல்போன் சேவை, தொலைத் தொடர்புத்துறை, பெட்ரோலியப் பொருட்கள், மளிகை வியாபாரம் முதல் மாடு பிடிக்கும் வியாபாரம் வரை இந்த அம்பானிகளின் கைகளிலேயே உள்ளது.

சமீபத்தில் இந்த பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை உயர்வைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான கோடிகளை இலாபமாக ஈட்டிய இந்த அம்பானிகள் மீது வரி விதிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் வலியுறுத்தியபோது மத்திய மன்மோகன் பே.. பே... என்று முழித்தார். என்ன காரணம்? தற்போதைய இவர்களது மாடு பிடி வியாபாரத்திற்கு பின்புலமாக இவர்கள் இருக்க வேண்டும் என்று எண்ணுவதே. மொத்தத்தில் தற்போதைய அ.மு.கூ. அரசு அம்பானிகள் முன்னேற்றக் கூட்டணி அரசாகத்தான் செயல்படுகிறது. தலைமை நிர்வாகியாக மன்மோகன் செயல்படுகிறார் அவ்வளவுதான்.

July 11, 2008

அம்பலத்துக்கு வந்த இரகசியம்!

ஐ.ஏ.இ.ஏ. ஒப்பந்த வரைவு தேச நலனிற்கு கேடானது: அணு சக்தி விஞ்ஞானிகள்!

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர பன்னாட்டு அணு சக்தி முகமையின் (IAEA) ஒப்புதலுக்கு இந்தியா தயாரித்து அனுப்பியுள்ள கண்காணிப்பு ஒப்பந்த வரைவு நமது தேச நலனிற்கு குந்தகம் விளைவிக்கக்கூடியது என்று அணு சக்தி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.“இந்த ஒப்பந்த வரைவு அணு ஆயுதம் பெற்றிராத நாடுகளுடன் பன்னாட்டு அணு சக்தி முகமை செய்துகொள்ளும் கண்காணிப்பு ஒப்பந்தம் போன்றதே தவிர எந்த விதத்திலும் இந்தியாவிற்கென்று சிறப்பாக வரைவு செய்யப்பட்டதில்லை” என்று இந்திய அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் பி.கே. ஐயங்கரும், அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணனும் கூறியுள்ளனர்.இதே கருத்தை பாபா அணு சக்தி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவரும் விஞ்ஞானியுமான ஏ.என். பிரசாத்தும் கூறியுள்ளார்.
அணு சக்தி ஒத்துழைப்பின் கீழ் நமது அணு உலைகளுக்கு யுரேனியம் எரிபொருள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டால், அதற்கு மாற்று நடவடிக்கைகள் (corrective measures) எடுக்கும் உரிமையைப் பெறுவோம் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் அளித்த உறுதியின்படி அது ஒப்பந்த வரைவில் இடம்பெற்றுள்ளதைத் தவிர, இந்தியாவிற்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தமாக இது இல்லையென்றும், அணு ஆயுதத்தைப் பெற்றிராத நாடுகளுடன் (சுற்றறிக்கை 66ன் கீழ்) செய்துகொள்ளும் ஒப்பந்தம் போன்றே இதுவும் என்று விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்த வரைவு நமது அணு ஆயுத ஆராய்ச்சியில் தலையிடவில்லை என்பதைத் தவிர எந்தவிதத்திலும் நமக்கு சிறப்பு நிலையை அளிக்கவில்லையென்றும், அணு சக்தி ஒத்துழைப்பின் முக்கிய அம்சமான தொடர்ந்து எரிபொருள் வழங்கல் உறுதிமொழி அளிக்கப்படவில்லை என்றும் விஞ்ஞானி பி.கே. ஐயங்கர் கூறியுள்ளார்.
“அமெரிக்க இணையத் தளம் ஒன்று இந்த ஒப்பந்த வரைவை வெளியிட்ட பிறகே நமது அரசு அதனை வெளிப்படுத்தியுள்ளது சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆன பிறகும் தொடரும் காலனிய அடிமைப் புத்தியையே காட்டுகிறது” என்று ஐயங்கர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
“மத்திய அரசால் நேற்று ரகசியமான ஆவணம் என்று வர்ணிக்கப்பட்டது இன்று பொது மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது சுவராஸ்யமாகவுள்ளது” என்றும் ஐயங்கர் கூறியுள்ளார்.அணு சக்தி முகமையின் தீவிரமான கண்காணிப்பிற்கு வழவகுக்கும் அதன் விதிமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூடுதல் ஒப்பந்தம் குறித்தும் விவாதித்திருக்கலாம் என்று விஞ்ஞானி பிரசாத் கூறியுள்ளார்.

123 பிரகாஷ் காரத் சிறப்பு பேட்டி


நாட்டின் நலன்களைக் காவு கொடுத் துள்ள மன்மோகன் சிங் அரசாங்கத்திற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் வாக்களிக் கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறினார். இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இந்திய - அணுசக்தி ஒப்பந்தம் நடை முறைப்படுத்தப் படுவதைத் தடுத்திட, இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து செயல்படும் என்றும் பிரகாஷ்காரத் கூறி னார். மதவெறி சக்திகள் வளர்ந்து வருவ தைக் கட்டுப்படுத்தவும் கையாலாகாத நிலையில் காங்கிரஸ் உள்ளதாகக் குற் றஞ்சாட்டிய பிரகாஷ் காரத், இந்துத்துவா மற்றும் மதவெறி சக்திகளை எதிர்த்து முறியடிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியும் ஏனைய இடதுசாரிக் கட்சிகளும் தொடர்ந்து செயலாற்றும் என்றார்.


ஐமுகூ அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ஏடுகளின் செய்தியாளர்களுக்கு பிரகாஷ்காரத் சிறப்பு பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்திட்ட பதில் களும் வருமாறு:


இன்றைய இக்கட்டான சூழ்நிலை யில் இடதுசாரிக் கட்சிகள் அர சுக்கு அளித்து வந்த ஆதரவை ஏன் விலக்கிக் கொண்டுள்ளன?


பிரகாஷ்காரத்: மதவெறி சக்திகள் ஆட்சி அதிகாரத்தை பிடிக்காமல் தடுத் திட வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐமுகூ அரசாங்கத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவளிக்கத் தீர்மானித்தன. ஆனால், பிரதமரும் காங்கிரஸ் தலை மையும் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற் கான நடவடிக்கைகளில் இறங்கிடத் தீர் மானித்திருக்கின்றன. இதுதொடர்பாக 2007 நவம்பரில் இடதுசாரிக் கட்சிக ளுக்கு அவர்கள் அளித்திட்ட உறுதி மொழியையும் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள். அதாவது, சர்வதேச அணு சக்தி முகமையிடம் பேச்சு வார்த்தை களுக்காகச் செல்வோம், பின் திரும்பி வந்து பேச்சுவார்த்தையின் முடிவுகளை இடதுசாரிக் கட்சிகள் முன்வைப்போம், இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்தால், அர சாங்கம் தொடர் நடவடிக்கையை மேற் கொள்ளாது என்று உறுதிமொழி அளித் திருந்தார்கள்.


மன்மோகன்சிங் அரசாங்கம் அமெரிக் காவுடன் ராணுவக் கூட்டணியை ஏற் படுத்திக் கொள்ள முன்வந்திருப்பதுதான் அதற்கு அளித்து வந்த ஆதரவை இடது சாரிக் கட்சிகள் விலக்கிக் கொள்வதற்கு முதல் முக்கிய காரணமாகும். இதற்கு அணுசக்தி ஒப்பந்தம் ஒரு திறவுகோல். இத்தகைய கூட்டணியானது நம்முடைய நாட்டின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கைக்கு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவை அமெரிக்கா வுடனான ராணுவக் கூட்டணிக்குள் சிக்கவைத்திடும் சூழ்ச்சியே இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமாகும். நம் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளும் கூட இனி அமெரிக்காவின் கட்டளை களுக்கிணங்கவே மேற்கொள்ளப்படும்.


அமெரிக்காவில் இதுவரை இருந்து வந்த ஜனாதிபதிகளிலேயே, புஷ் மிக கொடூரமான ஏகாதிபத்தியவாதி என்ப தை மெய்ப்பித்திருக்கிறார். இத்த கையவ ரின் தலைமையில் உள்ள அரசாங்கத் துடன் கூடிக் குலாவ மன்மோகன் சிங் அர சாங்கம் ஆர்வம் காட்டுவதற்கான கார ணங்கள் என்ன? புஷ் தற்போது ஈரா னைத் தாக்கப்போவதாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு இந்தியாவும் துணைபோகப் போகிறதா? அமெரிக்கா வின் நிர்ப்பந்தத்தின் விளைவாக இப் போது மத்திய அரசு இஸ்ரேலுடன் நெருக் கமான இராணுவ உறவுகளை மேற் கொண்டுள்ளது. அரசின் இத்தகைய கொள்கைகளுக்கு இடதுசாரிகள் ஆதர வினை அளித்திட முடியாது.


இந்த அரசானது விலைவாசி உயர் வையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத் திட முழுமையாகத் தவறிவிட்டது என் பது ஐமுகூ அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதற் கான இரண்டாவது காரணமாகும். கடந்த ஓராண்டு காலமாக அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், தானியங்கள் என அனைத்து அத்தியா வசிய உணவுப் பொருள்களின் விலை களும் கடுமையாக உயர்ந்துள்ளதைப் பார்க்கிறோம். இதன் விளைவாக சாமா னியர்களின் வாழ்வில் தாங்கமுடியாத அளவிற்கு துன்பதுயரங்களை ஏற்படுத்தி யுள்ளது. நவீன தாராளமயக் கொள்கை களை பின்பற்றும் இந்த அரசாங்கமானது, விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற் குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட மறுக்கிறது. பொது விநியோக முறையை விரிவாக்கிட அது தயாராக இல்லை. இப்போதும் அது போலித்தனமான மற்றும் மோசடியான வறுமைக் கோட்டுக்கு மேலே / கீழே என்று பாகுபடுத்தியுள்ள குடும்ப அட் டைகளையே (ரேஷன் கார்டுகளையே) பயன்படுத்தி, நாட்டு மக்களில் பெரும் பாலோரை பொது விநியோக முறையிலி ருந்து அப்புறப்படுத்திடும் சூழ்ச்சியையே தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்திட இடதுசாரிகள் தரப்பில் அளிக்கப்பட்ட அனைத்து ஆலோசனைகளையும் அது நிராகரித்துவிட்டது. அத்தியாவசிய உண வுப் பொருள்கள் மீதான முன்பேர வர்த்த கத்தை அது ஏன் தடை செய்ய மறுக்கிறது? ரிலையன்ஸ் போன்ற தனியார் எண்ணெய் நிறுவனங்கள் எதிர்பாராது அடைந்திடும் கொள்ளை லாபத்தொகை (றiனேகயடட யீசடிகவை) யின் மீது வரி விதிக்க ஏன் மறுத்துக் கொண்டிருக்கிறது?


பிரதமரை இடதுசாரிக் கட்சித் தலை வர்கள் சந்தித்தபோது, ‘‘விலைவாசி உயர் வால் மக்கள் கடும் துன்பத்திற்காளாகி யிருக்கிறார்கள்’’ என்று சொன்னபோது, அதற்குப் பிரதமர் ‘‘மக்களின் துன்ப துய ரங்களை அரசியல்கட்சிகள் அரசியலாக் கக் கூடாது’’ என்று எங்களிடம் கூறி னார். மக்கள் பிரச்சனைகளை எடுத்துக் கொள்ளாமல் வேறு எதனை அரசியல் கட்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்? இதுதான் இந்த அரசாங்கத்தின் சிந்தனையோட் டமாக இருக்கிறது.


மன்மோகன் சிங் அரசாங்கம் கடைப் பிடித்திடும் நவீன தாராளமயப் பொருளா தாரக் கொள்கைகளின் விளைவாகத் தான் அதனால் விவசாய நெருக்கடியை யும் விவசாயிகளின் வாழ்வு சூறையாடப் படுவதையும் தீர்த்து வைக்க முடிய வில்லை.


முந்தைய தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசாங்கம் கடைப்பிடித்து வந்த வலதுசாரி பொருளாதாரக் கொள்கை களை, ஐமுகூ அரசாங்கமானது முழுமை யாக முறித்துக் கொள்ள வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் எதிர்பார்த் தன. அதன் அடிப்படையில்தான் மக்கள் ஆதரவு கொள்கைகள் சிலவற்றை குறைந்த பட்ச பொதுச் செயல்திட்டத் தின் மூலம் பரிந்துரைத்தன. ஆனால் எதற்கெடுத்தாலும் வாஷிங்டன்னையும், உலக வங்கியையும் சர்வதேச நிதியத் தின் கட்டளைக்காகவும் காத்துக் கொண் டிருப்பவர்கள் மக்கள் நலன்சார்ந்த கொள் கைகளை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.


அணுசக்தி ஒப்பந்தம் பிரச்சனை யில் இடதுசாரிக் கட்சிகள் தனி மைப்பட்டு விட்டனவா?


பிரகாஷ்காரத்: 2005 ஜூலையில் பிரதமர் வாஷிங்டன் சென்றிருந்த சமயத் தில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக முதல் அறிவிப்பு வந்தபோதே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற இடதுசாரிக் கட்சிகளும் அமெரிக்காவுடனான இராணுவக் கூட்டையும், அணுசக்தி ஒப்பந்தத்தை யும் எதிர்க்கத் தொடங்கி விட்டோம். இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து எவ்விதப் பிசிறுமின்றி இவற்றை எதிர்த்து வந்ததன் காரணமாகத்தான், இன்றைக்கு நாட்டின் இறையாண்மையை அச்சுறுத் தக்கூடிய இத்தகைய பிரச்சனைகள் நாடு முழுதும் பிரதானமான விவாதப் பொருளாக முன்னுக்கு வந்துள்ளன. இப் பிரச்சனை மீது தனிமைப்பட்டிருப்பது நாமல்ல, மாறாக இந்த அரசாங்கம்தான். 2007 நவம்பர் - டிசம்பரில் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் நடை பெற்ற விவாதம், இப்பிரச்சனையில் இந்த அரசுக்கு எதிராகவே பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை நாட்டுக்குக் காட்டியது.


இப்பிரச்சனையை முன் வைத்து அடுத்த தேர்தலை சந்தியுங்கள் என்று காங்கிரஸ் கட்சியிடமும் நாம் ஏற்கனவே கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்கள் நிலை பாட்டை மக்கள் நிராகரிப்பார்கள் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.


அணுசக்தி ஒப்பந்தம் இப்போது நிறைவேறிவிடும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?


பிரகாஷ்காரத்: இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைப்படுத் தப்படக் கூடாது என்பதற்காக நாம் ஒவ் வொரு கட்டத்திலும் எதிர்த்து வந்திருக் கிறோம். தற்சமயம், சர்வதேச அணுசக்தி முகமையுடனான பாதுகாப்பு ஒப்பந்தத் தின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளையும் எதிர்த்துக்கொண்டிருக்கிறோம். இதன் வாசகங்களை இந்த அரசாங்கம் ஏன் ரகசியமாக வைத்திருக்கி றது? காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள சமயங்களில் எல்லாம் இதனை வழக்கமாகவே வைத்திருக்கிறது. 1991இல் நர சிம்மராவ் அரசாங்கத்தில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த சமயத்தில் இந்திய அரசாங்கமானது சர்வதேச நிதி யத்துடன் 5 பில்லியன் டாலர் கடன் ஒப் பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. அந் தக் கடனைப் பெறுவதற்காக அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள நிபந்தனைகள் என்ன என்று கேட்ட போது, ஒப்பந்தத் தின் வாசகங்களை வெளியிட அரசாங் கம் மறுத்துவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிதான் அதனை வாஷிங்டன் னிலிருந்து பெற்று அதன் முழு வாசகங் களையும் வெளி யிட்டது.


பாதுகாப்பு ஒப்பந்தம் மூலமாக நாம் பல நன்மைகளைப் பெற்றிருக்கிறோம் என்று அரசாங்கம் சவடாலடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை யில் நாம் எதுவுமே பெறவில்லை என் பதே நம்முடைய புரிதலாகும். சர்வதேச அணுசக்தி முகமை என்பது ஒழுங்கு முறை குழுமமாக செயல்படும் ஓர் அமைப்பு. அவ்வளவுதான், அது எப்படி எரிபொருள் விநியோகம் தொடர்பாக உறுதிமொழிகளை அளித்திடும்? இந்தி யாவுடன் முழுமையான அளவில் ராணு வம் சாரா அணுசக்தி ஒத்துழைப்பு என்ப தைச் சட்டப்படி செல்லாததாக்கக்கூடிய ஹைடு சட்டத்தின் அனைத்து ஷரத்துக் களும் இன்றளவும் நடைமுறையில் இருக்கின்றன.


மன்மோகன் சிங் அரசாங்கத்தின் ஆயுள்காலத்தில் இந்த ஒப்பந்தம் நடை முறைப்படுத்தப்படாதிருந்திட நாம் தொடர்ந்து போராடுவோம்.


மக்களவையில் நம்பிக்கை வாக் கெடுப்பில் வெற்றி பெற்றுவிடு வோம் என்று காங்கிரஸ் நம்பிக் கையுடன் இருக்கிறதே? ஐமுகூ அரசாங்கத்திற்கு இடதுசாரிகள் ஆதரவினை விலக்கிக்கொண் டுள்ள நிலையில் அரசியல் நிகழ்ச் சிப்போக்குகள் எப்படி இருந் திடும்?


பிரகாஷ்காரத்: இடதுசாரிக் கட்சிகள் ஆதரவை விலக்கிக்கொண்ட அந்தக் கணமே ஐமுகூ அரசாங்கமானது ஆட்சி யில் நீடிக்கக்கூடிய சட்டரீதியான தார்மீக உரிமையை இழந்துவிட்டது. அது மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப் பில் வெற்றிபெற்றாக வேண்டும். மற்ற வர்கள் என்ன நிலைபாடு எடுக்கிறார்கள் என்பதைப்பற்றிக் கவலைப்படாமல். நாட்டின் நலன்களுக்குத் துரோகம் இழைத்துவிட்ட இந்த அரசாங்கத்திற்கு எதிராக இடதுசாரிகள் வாக்களிப்பார்கள்.


காங்கிரசும் ஐமுகூ அரசாங்கமும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு வருவ தை எவரும் மறந்துவிடக்கூடாது. மார்க்சிஸ்ட் கட்சியின் சமீபத்திய அகில இந்திய மாநாடு இத்தகைய மதிப்பீட்டிற்கு வந்திருக்கிறது. காங்கிரசுடன் இணை வதன் மூலம் எவராவது தங்கள் எதிர் காலத்தை சூன்யமாக்கிக் கொள்ள விரும்பினால் அது அவர்கள் விருப்பம்.


இடதுசாரிகளின் நிலைபாடு, பாஜகவிற்கும் மதவெறி சக்திக ளுக்கும்தான் உதவிடும் என்று காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குற்றஞ்சாட்டுகின் றனவே, இதற்கு உங்கள் பதில் என்ன?


பிரகாஷ்காரத்: மதவெறி சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடுதான் இத்தனை ஆண்டு காலமும் ஐமுகூ அரசாங்கத் திற்கு ஆதரவினை அளித்து வந்தோம். ஆனால், 2007 தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி மதவெறி சக்திகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திட ஒரு துரும்பைக்கூட அசைக்காததை நாம் பார்த்துக்கொண்டுதான் வந்திருக்கி றோம். மாநிலங்களில் நடைபெற்ற ஒவ் வொரு தேர்தலிலுமே, காங்கிரஸ் கட்சி பாஜகவினால் தோற்கடிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஏன் இவ்வாறு நடக் கிறது? இதற்கு அடிப்படையான காரணம் என்னவெனில், எங்கெல்லாம் காங்கிரஸ் அரசாங்கங்கள் இருந்தனவோ அங்கெல் லாம் அது மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் பொருளாதாரக் கொள்கை களையே கடைப்பிடித்து வந்தன. அதன் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி பாஜக அங்கெல்லாம் மீண்டும் ஆட்சியில் அமர வசதி செய்து கொடுத்து விட்டது. மேலும், இடதுசாரிக் கட்சிகள் மேற்கொள்வதைப்போல காங்கிரஸ் கட்சியானது பாஜக-விற்கு அரசியல் ரீதியாகவோ அல்லது தத்துவார்த்த ரீதியா கவோ எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. மேலும் மத்தியில் பாஜக ஆட்சியிலிருந்த போது கடைப்பிடித்த அதே கொள்கை களைத்தான் காங்கிரசும் பின்பற்றுகிறது. அது ஏகாதிபத்தியத்திற்கு வெண்சாமரம் வீசும் அயல்துறைக் கொள்கையாக இருந்தாலும் சரி அல்லது பொருளாதாரக் கொள்கைகளாக இருந்தாலும் சரி, இந்த இரு கட்சிகளுக்கிடையே எவ்வித வேறுபாடும் இல்லை.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் இந்துத்துவா மற்றும் மதவெறி சக்திகளை எதிர்த்து முறியடித்திட தொடர்ந்து போராடும்.


மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடது சாரிக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?


பிரகாஷ்காரத்: இடதுசாரிக் கட்சிகள், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதற்கான காரணங் களை விளக்கி நாடு முழுவதும் பிரச்சாரத்தில் இறங்கப் போகிறோம். காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தின் அமெரிக்க ஆதரவு மற்றும் இன்றைய விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கான மக்கள் விரோதக் கொள்கைகளை மக்கள் மத்தியில் விளக்கிடுவோம். காங்கிரசும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம் - மாறாக ஒரு மூன்றாவது மாற்று தேவை என்று உணர்கிற மற்ற ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளை அணிசேர்ப்ப தற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவோம்.


இப்பிரச்சாரத்தின்போது, நாட்டின் எரிசக்தித் தேவையை ஈடுசெய்திட மாற்று வழிகள் என்னென்ன இருக்கின் றன என்பதையும் , விவசாயிகள் - கிராமப்புற ஏழைமக்கள், தொழிலாளர்கள் மற் றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவின ருக்கும் கேடு விளைவித்துள்ள தற்போ தைய பொருளாதாரக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் அதற்கு முற்றிலும் வேறுபட்ட மாற்றுப் பொரு ளாதாரக் கொள்கையையும் மக்கள் மத்தி யில் எடுத்துச் செல்ல உள்ளோம்.


இப்போது மூன்றாவது மாற்றுக்கு வாய்ப்பு இருக்கிறதா?


பிரகாஷ்காரத்: சமீபத்தில் நடை பெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட் டில், மூன்றாவது மாற்று குறித்த நம் புரிந் துணர்வை மிகத் தெளிவாக்கி இருக்கி றோம். அது ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டத்தின் அடிப்படையில் அமைந்திட வேண்டும், காங்கிரஸ் மற்றும் பாஜக- கடைப்பிடித்து வரும் கொள்கைகளுக்கு மாற்றாக இருந்திட வேண்டும், அவற்றை வென்றெடுக்க கூட்டுப் பிரச்சாரம் மற்றும் போராட்டங்கள் மூலமாக உருக்கு போன்று உருவாக்கப்பட வேண்டும். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி போன்ற உருவாக்கம் எல்லாம் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்பதை அனுபவம் வாயிலாக நாம் உணர்ந்திருக் கிறோம். மாற்றுக் கொள்கைகளின் அடிப் படையில் மக்கள் பிரச்சனைகளை முன் வைத்துப் போராடுவதன் வாயிலாகவே இடதுசாரி மற்றும் இதர சக்திகளை ஒன்றுபடுத்துவதன் மூலமே ஒரு மூன்றாவது மாற்று உருவாகி வலுப்பெற முடியும். தேர்தல் அல்லது மற்ற ஏதேனும் ஒரு காரணத்திற்காக அத்தகைய மாற்று உருவாவதுடன் இதனை இணைப்பது பிழையாகிவிடும். தளம் மிக விரிவானது. மற்ற சக்திகளை ஒருங்கிணைத்து இதனை வார்த்தெடுத்திட இடதுசாரி கட்சிகள் முன்முயற்சி எடுப்பார்கள்.

July 10, 2008

123... மன்மோகன் அரசு!


இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு மன்மோகன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதி தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. தேச நலனை முன்னிட்டே இதனைச் செய்வதாக கூறிக் கொள்ளும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் உண்மையில் ஜார்ஜ் புஸ்சுக்கு காவடித் தூக்கிக் கொண்டுள்ளனர் என்பதைதான் அவர்களது நடைமுறை காட்டுகிறது.


அணு சக்தி பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் கூட ஐ.ஏ.இ.ஏ.வுடனான ஒப்பந்தம் தொடர்பான உண்மையான அறிக்கையை சமர்ப்பிக்க மாட்டோம் என்று அடம் பிடித்த பிரணாப் முகர்ஜீ இது அரசின் ராஜீய ரீதியான உறவு சம்பந்தப்பட்டது. எனவே இதனை முன்வைக்க முடியாது என்று கூறினார்.


மறுபுறத்தில் ஜீ-8 கூட்டத்தில் ஒரு இளைய பங்காளியாக கலந்து கொள்ளச் சென்ற மன்மோகன் சிங், போகும் போதே இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டை நிறைவேற்றியே தீருவோம். இடதுசாரிகளின் மிரட்டலுக்கு நாங்கள் அசரப்போவதில்லை என்று சவடால் அளித்துச் சென்றார். பின்னர் அங்கு சென்று புஸ்சுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு உரையாடிய அவர். இரண்டு நாடுகளுக்கும் நெருக்கம் அதிகப்பட்டிருப்பதாகவும் - உறவு பலப்பட்டிருப்பதாகவும் பேட்டியளித்தார்.


இன்னொரு புறத்தில் இடதுசாரிகள் - காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எந்த விசயமாக இருந்தாலும் வெளிப்படையாக பேசித் தீர்த்துக் கொள்ளுவோம் என்று உறுதியளித்து பின்னர் இந்த கூட்டுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த ஐ.மு. அரசு தற்போது அறிக்கையை இடதுசாரிகளுக்கும் காட்டாமல் - நாட்டு மக்களுக்கும் காட்டாமல் துரோகம் இழைத்தது. மறுபுறத்தில் தற்போது என்ன நடந்துள்ளது. இந்த ஐ.ஏ.இ.க. பாதுகாப்பு தொடர்பான நகல் அறிக்கை தற்போது அமெரிக்க மற்றும் இந்தியத் தளங்களில் இலவசமாகவே கிடைக்கிறது. யார் வேண்டும் என்றாலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்ற நிலையில் உள்ளது. இதன் மூலம் இவர்களது ரகசியம் எல்லாம் யார் நன்மையைக் காப்பதற்காக என்று வெளிச்சமாகியுள்ளது.


தற்போது மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றுக் கொண்டதையடுத்து, உத்திரப்பிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த முலாயமுடன் கொள்கையற்ற கூட்டுச் சேருவதற்கு காங்கிரஸ் துடித்துக் கொண்டுள்ளது. அவர்களும் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர். மறுபுறத்தில் தேர்தல் வருவதற்கு இன்னும் 6 மாதமே உள்ள நிலையில் எதற்காக இந்த காங்கிரசுடன் போக வேண்டும் என்று முலாயம் கட்சி எம்.பி.க்கள் இப்போதே கட்சி மாறி தங்கள் இடத்தை உத்திரவாதப்படுத்தத் துவங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சி தற்போது என்ன விலை கொடுத்தாவது ஆட்சியை காப்பாற்ற குதிரை வியாபாரத்தில் இறங்கியுள்ளது.


மத்திய அரசின் மீது இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாடு தவிர இந்த தேசத்தையே அமெரிக்காவுக்கு அடிமையாக்கத் துடிக்கும் இராணுவ ஒப்பந்தம் உட்பட பல்வேறு பேரங்களின் மூலம் அமெரிக்காவுக்கு சேவகம் செய்யும் இந்த காங்கிரஸ் எப்படியெல்லாம் இடதுசாரிகள் முன்வைத்த பல்வேறு முக்கிய கோரிக்கைகளை உதாசீனப்படுத்தியது என்ற குற்றப் பத்திரிகையை மக்கள் முன் வைத்துள்ளது.


குறிப்பாக ரேசன் பொருட்களை அனைத்து மக்களுக்கும் வழங்குவதில் உத்திரவாதம் வேண்டும் என்று கோரியதையும்,


பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதையும்,


ஆன் லைன் வர்த்தக சூதாட்டத்திற்கு தடை செய்ய வேண்டும் என்று கோரியதையும்,


பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையும் எடுக்காதது மற்றும் ரிலையன்ஸ் போன்ற பெரும் நிறுவனங்கள் மீது விண்ட்பால் வரி விதிக்க வேண்டும் என்று கோரியது


உட்பட எதனையும் மத்திய அரசு நிறைவேற்ற முன்வராமல் எப்படியெல்லாம் அமெரிக்க ஆதரவு கொள்கைகளுக்கு குத்தாட்டம் போடுகிறது என்பதையும் மக்கள் முன் வைத்துள்ளது.


மொத்தத்தில் இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டின் மூலம் இந்திய இறையாண்மையை பலி கொடுத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் மற்றும் ஐ.மு.கூ. ஆட்சியாளர்களுக்கு நாட்டு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். மறுபுறத்தில் அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்ற நிலையில் மதவாத பா.ஜ.க. துடித்துக் கொண்டிருக்கிறது. முற்போக்கு வேடம் போட்டுத் திரியும் அரசியல் வியாபாரிகள் மதவாதமே பெரிய ஆபத்து என்று அணு ஒப்பந்தத்திற்கு பச்சைக் கொடிக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். எனவே, இவர்களின் உண்மை முகத்தை தோலுரிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.

July 01, 2008

உலகமயத்தின் ஊளைச் சதையே பணவீக்கம்!

உலகமயமாக்கல் பந்தயத்தில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று தொடையை தட்டி பங்கேற்ற நாடு இந்தியா. அதன் ஏகப் பிரதிநிதிகளாக பிரதமர் மன்மோகன்சிங், ப. சிதம்பரம், திட்ட கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா ஆகியோர் செயலாற்றி வருகின்றனர்.


ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் கூட பொருளாதார வளர்ச்சியில் தட்டுத், தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் இந்தியா 8 சதவிகித வளர்ச்சியையும் தாண்டி நடைபோட்டது. பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் 8 சதவிகித வளர்ச்சியே தங்களது நோக்கம் என்று மார்தட்டிக் கொண்டதையும் - இந்தியா ஒளிர்கிறது என்று புளகாங்கிதம் அடைந்ததையும் யாரும் மறந்திருக்க மாட்டோம். அதே பாதையில் நாங்களும் இன்னும் வேகமாகக் சென்று சீனாவை எட்டிப் பிடித்து விடுவோம் என்று அலறினர் மன்மோகன் சிங்கும் - சிதம்பரமும்.


அந்நிய முதலீட்டிற்கு தங்கள் கதவை மிக விசாலமாக திறந்து விட்டதோடு, குப்பை கூளங்களைக் கூட இறக்குமதி செய்துக் கொள்வதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்; எதையும் விட்டு வைக்கப் போவதில்லை என்று இரு கரம் கூப்பி வரவேற்றனர். அதன் விளைவு என்ன? நாளுக்கு நாள் இராக்கெட்டின் உயரத்தை விட சென்செக்ஸ் விண்ணை தாண்டிச் சென்றது. 5000 புள்ளிகளைத் தாண்டியபோது நமது மகாத்மாக்களின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அப்புறம் என்ன 8000 புள்ளியைத் தாண்டி விட்டபோது உற்சாக பெரு வெள்ளத்தில் நீந்தினர்... பின்னர் 10,000 புள்ளியை சென்செக்ஸ் தொட்டபோது எங்கள் ஆட்சியின் சாதனையைப் பார்த்தீர்களா? நாங்கள்தான் உலகின் முன்னணியில் இருக்கிறோம் என்று ஆர்ப்பாட்டம் போட்டனர்.


இந்திய பொருளாதார ராக்கெட் செல்லும் வேகத்தை பார்த்த நமது பொருளாதார விஞ்ஞானிகள்கூட அய்யா கொஞ்சம் பிரேக் போட்டு போங்கள் இல்லையென்றால் அது கண்தெரியாத கிரகத்திற்குப் போய்விடும் என்று கூறியதையெல்லாம் வெறும் பிதற்றல் என்று ஒதுக்கித் தள்ளினர்; இந்த வேகம் தற்போது 15,000 புள்ளியைத் தொட்டு விட்டது. இந்த வளர்ச்சியை நிதியமைச்சர் சிதம்பரத்தாலேயேக் கூட நம்ப முடியவில்லை; அய்யோ இந்த ராக்கெட்டை நாம்தான் ஏவுகிறோமோ? அல்லது வேறு யாருடைய கட்டுப்பாட்டிலாவது இயங்குகிறதா என்று சின்ன சஞ்சலம் கூட அவருக்கு இருக்கலாம். இருந்தாலும் என்ன? இது குறித்து நாங்கள் மிகவும் உஷாரா செயல்படுகிறோம், பங்குச் சந்தையை கவணித்து வருகிறோம் என்றார் சிதம்பரம்.தற்போது ராக்கெட் கட்டுப்பாட்டு எல்லையை மீறி விட்டது!


விளைவு சென்செக்ஸ் தலை கீழாக வீழ்ந்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பங்குச் சந்தையை இரண்டு மணி நேரத்திற்கு நிறுத்தி வைத்தனர். இப்போது ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தை சரிந்து வருகிறது. மிக உயரமாக எழுப்பப்பட்ட கண்ணாடி மாளிகை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கி வருகிறது.மத்திய அரசின் அரசியல் தடுமாற்றமும், முரட்டுக் காளைளும், கரடிகளுமே மார்க்கெட் சரிந்து விழுவதற்கு அடிப்படையான காரணம். இப்போது திருவாளர்கள் மன்மோகன்சிங் - சிதம்பரத்தின் கவலைகள் எல்லாம் இந்த கண்ணாடி மாளிகையை காப்பாற்ற வேண்டும் என்பதுதான்! அதற்காக ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிக்க முற்படுகிறார்கள். அரசியல் சித்து விளையாட்டை துவக்கியிருக்கிறார்கள்! இடதுசாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றி மார்தட்டிக் கொள்வது; இன்னொன்று சரிந்துக் கொண்டிருக்கும் கண்ணாடி மாளிகைக்கு தற்காலிகமாக முட்டுக் கொடுப்பது!உண்மையில் இப்போது நடப்பதென்ன கடந்த மூன்று மாதத்தில் பண வீக்க விகிதம் 8 சதவிகிதத்திலிருந்து 11.42 சதவிதத்திற்கு எகிறி விட்டது. குறிப்பாக ஒரே மாதத்தில் பாய்ச்சல் வேகத்தில் எகிறி சென் செக்ஸ் ராக்கெட்டை விட நான் மிகவும் வேகமாக போகும் சக்தி படைத்தவன் என்று நிரூபித்து விட்டது பண வீக்கம்! இதன் விளைவு சாதாரண - ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்டதோடு, விலைவாசி விண்ணுக்கு ஏறிக் கொண்டிருக்கிறது. வரலாறு காணாத பண வீக்க விகிதமாக இது மாறிவிடும் ஆபத்துள்ளது; பண வீக்கம் 13 சதவிகிதம் அளவிற்கு உயரும் என்று பொருளாதார நிபுனர்களால் ஆரூடம் கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துங்கள் என்று சிதம்பரத்தை பார்த்துக் கேட்டால்! எண்ணெய் விலை உயர்வால்தான் இப்படி நடக்கிறது; உலகம் முழுவதுமே பொருளாதார நெருக்கடி நிலவுகிறது என்று மழுப்புகிறார். விளைவு பணவீக்கம் இப்போது ஊளைச் சதையாக பலூன் போன்று ஊதி பெருகிக் கொண்டிருக்கிறது. பொருளாதார வல்லுனர்களோ 1929 ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஏற்பட்டதைப் போன்று இப்போது ஏற்படுமா? என்றெல்லாம் கூட அச்சப்படுகின்றனர்.இந்தப் பணவீக்கத்தைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் உலக செல்வந்தர்கள் குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில், செல்வந்தர்களை உருவாக்குவதில் உலகளவில் முன்னணியில் இருப்பது இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. 22.7 சதவிகிதம் வளர்ச்சியை எட்டியுள்ளோம். குறிப்பாக 2007 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் புதிதாக 23,000 கோட்டீஸ்வரர்கள் உருவாகியுள்ளார்கள். கேட்டீஸ்வரர்கள் என்றால் அமெரிக்க அளவுகோள்படி ரூ. நான்கு கோடி வைத்திருப்பவர்கள் என்று அர்த்தம். இதில் அவர்களது வீட்டு மதிப்பு சேராது. ஏற்கனவே இந்தியாவில் ஒரு லட்சம் கோட்டீஸ்வரர்கள் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. மறுபுறத்தில் ஒரு நாளைக்கு ரூ. 40க்கும் குறைவான ஊதியம் பெறுபர்கள் 35 கோடி பேரும், ரூ. 80க்கும் குறைவான ஊதியம் பெறுபர்கள் 70 கோடி பேரும் உள்ள நாட்டில்தான் இந்த ராக்கெட்வேக கோட்டீஸ்வரர்கள் உருவாகி வருகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்தப் பின்னணியில் பண வீக்கம் எனும் பூதத்தை கட்டுப்படுத்த மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன தெரியுமா? சி.ஆர்.ஆர். என்று சொல்லப்படும் வங்கிகளின் இருப்பி விகிதத்தை கூட்டுவது. இந்த ஒரே ஒரு வழிதான் பணவீக்கம் எனும் பூதத்தை கட்டுப்படுத்தும் மந்திரகோல் என்று பொருளாதார புலிகளான மன்மோகனும் - சிதம்பரமும் நாட்டு மக்களிடம் கூறுகின்றனர். சரி, இதன் மூலம் இவர்கள் கட்டுப்படுத்தும் தொகை எவ்வளவு என்றால் வெறும் 20,000 கோடி ரூபாய் மட்டும்தான். அதாவது நாட்டு மக்களிடம் கிட்டத்தட்ட 10 இலட்சம் கோடி ரூபாய் பணப் புழக்கம் இருப்பதாகவும் இதில் ஒரு 20,000 கோடியை கட்டுப்படுத்தினால் பண வீக்கம் என்ற பூதம் மாயமாய் மறைந்து விடும் என்று கதை கட்டுகிறார் சிதம்பரம்.உண்மை என்ன? பண வீக்கம் என்ற பூதத்தின் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் மந்திர சக்தி எது என்றால் இந்திய நாட்டில் போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் கருப்பு பணமும், ஆன் லைன் வர்த்தகமும் என்பதை மூடி மறைக்கின்றனர். இந்தியாவின் ஜி.டி.பி.யில் (மொத்த உற்பத்தியில்) 20 முதல் 60 சதவிகிதம் அளவிற்கு கருப்பு பணம் புழங்குவதாக கூறப்படுகிறது. அதாவது ஆண்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் உருவாகிறது. 2006 ஆம் ஆண்டு உலக வங்கி கணக்குப் படி 10,2000 கோடி டாலர் கருப்பு பணம் புழங்குவதாக கூறப்படுகிறது. இந்த கருப்பு பணச் சந்தையுடன் ஒப்பிடும் போது வங்கி இருப்பி விகிதத்தை கட்டுப்படுத்துவதாக கூறப்படும் தொகை கடலில் கரைத்த பெருங்காயம் போல் காணாமல் பேகும். மொத்தத்தில் இந்த கருப்பு பணம் தான் நம் நாட்டின் பங்கு மார்கெட்டில் புகுந்து விளையாடுவதற்கும், ஆன் லைன் வர்த்தகத்தக சூதாட்டத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.மேலும், மத்திய அரசாங்கம் உணவு பொருட்கள் உட்பட 25 அத்தியாவசிய பொருட்களை ஆன் - லைன் வர்த்தகத்திற்குள் கொண்டு வந்துள்ளது. இது வர்த்தக சூதாடிகளுக்கும், கள்ளச் சந்தை பதுக்கல் பேர்வழிகளுக்கும் வசதியாக மாறியுள்ளது. இதன் விளைவே இன்றைய விலை உயர்விற்கும் - பண வீக்கத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பெருகி வரும் விலை உயர்வை கட்டுப்படுத்த 25 பொருட்களை ஆன் - லைன் வர்த்தகத்திலிருந்து தடை செய்ய வேண்டும் என்ற கோரியதோடு, 15 அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்ய வேண்டும்; இதன் மூலம் விலை உயர்விலிருந்து சாதாரண ஏழை எளிய மக்களை பாதுகாக்க முடியும் என்று கோரியது. ஆனால், மத்திய அரசோ செவிடன் காதில் ஊதிய சங்கைப் போன்ற மவுனம் சாதித்து வருகிறது.அதே போல் பெட்ரோலிய பொருட்களின் மீதான விலை உயர்வை பயன்படுத்திக் கொண்டு பெரும் இலாபம் ஈட்டிய ரிலையன்ஸ், கெயின்ஸ் உட்பட உள்ள தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது வரி (றுனேகயடட கூயஒ) விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அத்துடன் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த 5 சதவிகித இறக்குமதி வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீது அரசு விதிக்கும் 7.5 சதவிகித வரியை 2.5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு கண்டுக் கொள்ளவே இல்லை. இடதுசாரிகள் முன்வைத்த மேற்கண்ட மாற்று நடவடிக்கைகள் எதனையும் செய்ய முன்வராமல் பண வீக்கம் ஏதோ தன்னால் ஏற்படுவது போன்ற மாயையை தோற்றுகிறது மத்திய அரசு. மொத்தத்தில் உலகமய ஆதரவு பொருளாதார புலிகளான மன்மோகனும் - சிதம்பரமும் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதாக கூறும் நடவடிக்கை தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது போன்றே! எனவேதான் தற்போதைய பண வீக்கத்திற்கு ஆட்சியாளர்கள் பின்பற்றும் உலகமயக் கொள்கையின் சீரழிவின் மறுபக்கமே என்று அறுதியிட்டுக் கூறலாம்.