March 28, 2006

துப்பாக்கி குண்டுகளே நிரந்தர நிவாரணம்!

பறிபோகும் தங்கள் வாழ்க்கைக்காக போராடியதற்காக ஆந்திர அரசு கொடுத்த பரிசுதான் துப்பாக்கி சூடு, கண்ணீர்புகை வீச்சு, தடியடி (மரண அடி).

நேற்று தெலுங்கு மொழி தொலைக்காட்சியான தேஜா டி.வி. இந்த கங்காவரம் மீனவ மக்களின் போராட்டம் - போலீசின் துப்பாக்கி சூடு காட்சியை ஒளிபரப்பியது. இந்த காட்சியைப் பார்த்த எவருக்கும் இதயம் ஒரு நிமிடம் அதிராமல் இருக்காது. ஆந்திர போலீசின் அதிரடி தாக்குதல் எதிரிநாட்டு வீரர்களை துவம்சம் செய்வது போல், தன் சொந்த நாட்டு மக்களை - ஏதுமறியா அப்பாவி மக்களை துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டுத் தள்ளியதும், பெரும் தடிகளைக் கொண்டு - அதுவும் குறிப்பாக மண்டையைப் பார்த்து தாக்கியதும் கல்மனதையும் கலங்க வைத்திருக்கும். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், அதுவும் கைக் குழந்தைகளுடன், தங்களுடைய கைக் குழந்தைகளைக் கூட கீழே விடாமல், தங்கள் பகுதியில் என்ன நடக்கிறது என்று அறிந்துக் கொள்வதற்குள் எல்லாம் முடிந்து விட்டதுபோன்ற சூழலை போலீசின் துப்பாக்கித் தோட்டக்கள் சீறி வந்து - இரண்டு உயிர்களைப் பறித்தது. நூற்றுக்கணக்கான மக்கள் - குறிப்பாக பெண்கள் - பித்துப் பிடித்தார்போல், கையில் அந்த நேரத்தில் கூட வேப்பிலையை வைத்துக் கொண்டு சாமியாடுவதுபோல் - அந்த நேரத்திலும் தங்களது கொதித்தெழுந்த ஆவேசத்தோடு போராடிய காட்சி நெஞ்சை உலுக்கியது. இந்த சூழலிலும் போலீசின் மிருக வெறித்தனம் - கோர நர்த்தணம் ஆடியது.

எதற்காக இந்த துப்பாக்கி சூடு? யாரை காப்பதற்காக இந்த துப்பாக்கி சூடு? அப்படியென்ன தேச துரோகம் செய்து விட்டார்கள் இந்த அப்பாவி மக்கள்?

ஆந்திர மாநில அரசு (முன்னாள் - இன்னாள்) விசாகப்பட்டினத்தில் உள்ள கங்காரவத்தில் ---தனியார் துறைமுகம்--- ஒன்றை கட்டிக் கொள்ள துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கும், டி.வி.எ°. ராஜூ என்ற நிறுவனத்திற்கும் அனுமதியளித்தது. ரூ. 2000 கோடி அளவிலான இந்த திட்டம் 2007ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத் துவங்கவுள்ளது.

இந்த திட்டம் குறித்த பேச்சுவார்த்தை துவங்கும் போதே, கங்காவரம் உள்ளிட்ட மீனவ கிராம மக்களின் வாழ்க்கை குறித்த விவாதமும் முன்னுக்கு வந்தது. ஆளும் மாநில அரசு அந்த மக்களுக்கு மாற்று இடம், நிவாரணம் தருவதாக கூறியது. 3600 குடும்பங்கள் இந்தி கிராமங்களில் இருப்பதாக கூறப்படுகிறது, 18000த்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது வாழ்க்கையை கடலோடும், கட்டுமரத்தோடும், மீன்பிடித் தொழிலோடும் பிணைத்துக் கொண்டவர்கள். எழுதப்படிக்கத் தெரியாத இந்த மக்களை வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றால் என்ன செய்வார்கள்? எந்த தொழிலைச் செய்வார்கள்? அதனால்தான் இந்த மக்கள் தங்களது வாழ்க்கைக்கு நிரந்தரமாக ஒரு தொழிலுக்கான ஏற்பாடும், வாழ்விடமும் தேவை என்று தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.பெரும் முதலாளிகளும் - ஆளும் மாநில அரசுக்கும் இந்த மக்களின் குரல் எட்டாத தொலைவில் இருந்தன. இந்த சூழ்நிலையில் கட்டாயமாக இந்த தனியார் நிறுவனம் துறைமுக கட்டுமானத் திட்டத்தை அந்த பகுதியில் துவக்கியது, அதையொட்டி மீனவ மக்களின் படகுகள் உட்பட அனைத்தையும் நிர்ப்பந்தமாக அப்புறப்படுத்தத் துவங்கியது. அதை எதிர்த்துதான் இந்த மக்கள் ஒன்றுபட்டு போராடினர்.

இந்த மக்களின் நியாயத்தை உணராத காவல்துறையும், மாநில அரசும், முதலாளிகளும் எப்படியும் தங்கள் திட்டத்தை நிறைவேற்றிட துப்பாக்கி குண்டுகளை பரிசாக அளித்து விட்டு, அதையே நிரந்தரமான நிவாரணமாக்கி விடலாம் என்று முடிவு செய்து விட்டனர்.

தனியார்மயம், உலகமயம், தாராமயம் இவையெல்லாம் யாருக்காக? உள்நாட்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கையை உயர்த்தவா? அல்லது பன்னாட்டு முதலாளிகளின் பணமூட்டையை வீங்க வைக்கவா? பிரான்சில் கூட 15 லட்சம் மாணவர்கள் - இளைஞர்கள் போராடி வருகிறார்கள். அங்கெல்லாம் கூட இத்தகைய போலீசின் அடக்குமுறைiயும், மிருகத்தனத்தையும் பார்க்க முடியவில்லை. ஏன் இந்த நிலைமை இந்திய மக்கள் ஏதுமறியாதவர்கள், எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், சுதந்திரத்தின் சுவாசக் காற்று அவர்களுக்கு தெரியாது? ஜனநாயகம், போராட்டம் இதெல்லாம் இவர்களுக்கு ஒத்துவராது - அகிம்சை வழியில் கோரிக்கை வைப்பவர்கள் - இதுதான் இந்திய பாரம்பரியம் என்று முடிவு கட்டி விட்டீர்களா? இல்லை! இந்திய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால், இந்திய மக்கள் குமுறி எழுவார்கள் - உங்களது உலகமயக் கொள்கை ஊரை விட்டே ஓட்டப்படும். துப்பாக்கிகள் உங்களுக்கு காவலாகலாம் - எங்களிடம் உழைத்து உருக்கேறிய - வலுவான கோடிக்கணக்கான கைகள் உள்ளன!

எங்கள் மீது சமாதி எழுப்பலாம் என்று கணா கண்டால், உங்கள் ஆட்சி அதிகாரத்தின் மீது நிரந்தர சமாமி எழுப்பிட உழைக்கும் மக்கள் தயாராவார்கள்!

March 27, 2006

தனியார்மயம்: பலியாகும் மனித உயிர்கள்

உலகமயக் கொள்கை உழைக்கும் மக்களின் உயிருக்கு உலை வைத்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள - கங்காவரத்தில் புதிதாக கட்டப்படவுள்ள தனியார் துறைமுக கட்டுமானத்தால் பல ஆயிரக்கணக்கான மக்கள் தலைமுறை, தலைமுறையாய் ஆண்டு, அனுபவித்து வந்த இடத்தைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து போராடிய மக்களை போலீசார் குருவிகளை சுடுவது போல் சுட்டுத் தள்ளியுள்ளனர். போலீசாரின் இந்த குண்டுக்கு ஒரு பெண் உட்பட 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் உள்ள, கங்காவரம் மற்றும் திப்பாலம் கிராமம் இருக்கும் இடத்தில், டி.வி.எ°. ராஜூ நிறுவனமும் - துபாய் துறைமுக நிறுவனமும் இணைந்து முழுக்க, முழுக்க தனியார்களால் நிர்வகிக்கப்படும் ஒரு துறைமுக திட்டத்திற்கு அனுமதி அளித்தார் அமெரிக்க தாசர் சந்திரபாபு நாயுடு. 2000 கோடி ரூபாயிலான இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு குறிப்பிட்ட கிராம மக்களிடம் இருந்து பலமான எதிர்ப்பு கடந்த ஓராண்டு காலமாகவே எழுந்து வருகிறது.


உலகமயம் எவ்வளவு வேகமாக உலகத்தை சூறையாடுகிறதோ, அதே வேகத்தோடு இந்த கிராம மக்களின் வாழ்வைப் பறிப்பது ஒன்றும் பெரிய விஷயமாக படவில்லை அவர்களுக்கு. கிட்டத்தட்ட 18,000க்கும் மேற்பட்ட மக்கள் இந்த துறைமுகத் திட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர். இந்த மக்கள் கேட்டதெல்லாம் வேறு ஒன்றும் அல்ல; நாங்கள் பல நூறாண்டுகளாக - தலைமுறை, தலைமுறையாக இங்கேயே வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு மீன்பிடித் தொழிலைத் தவிர வேறு எதுவும் தெரியாது! எனவே எங்களுக்கு இதே போல் பாதுகாப்பான மாற்று இடத்தை வழங்கிட வேண்டும் என்றும், இடப் பெயர்வுக்காக குடும்பம் ஒன்றுக்கு ரூ. மூன்று லட்சம் வழங்கிட வேண்டும் என்று கேட்டனர்.

தனியார் முதலாளிகளுக்கு இந்த ஏழைகளின் குரல்கள் வெறும் எட்டவா போகிறது? இவர்களை அடித்து விரட்டினால் ஓடி விடப்போகிறார்கள் என்ற வன்மம்தான் இன்றைக்கு அகோர வடிவம் எடுத்து, அந்த சாதாரண ஏழை மக்களை இரும்பு கரம் கொண்டு தாக்கியதோடு, துப்பாக்கியாலும் சுட்டுத் தள்ளியுள்ளது. இரண்டு அப்பாவி மக்களின் உயிர்கள் இருந்த இடம் தெரியாமல் சென்றுவிட்டது.

இதெல்லாம் இந்த முதலாளிகளுக்கு திட்டத்தை துவக்குவதற்கு முன்னால் கொடுக்கப்படும் பலிகள் எண்ணிக்கையின் ஒரு பகுதியாக மாறலாம்! எந்த திட்டமாக இருந்தாலும் மக்களின் ரத்தத்தை பிழிந்து விட்டு, உயிர்களை சக்கையாக்கிவிட்டு முடித்து விடலாம் என்று திட்டமிட்டால், அவர்களின் கனவு பலிக்காது!

இந்திய நாட்டில் கங்காரவத்தில் மட்டுமல்ல; குஜராத்தில் நர்மதா அணைக்கட்டு, ஒரிசாவில் போ°கோ திட்டம் என்று தொடர்ச்சியாக உலகமாக்கல் பெயரால் மனிதர்களின் வாழும் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர் கதையாகியுள்ளது. உலக பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்தியா பணம் காய்க்கும் சொர்க்க பூமியாக காட்சியளிக்கிறது. பிரான்சைப்போல் இந்தியாவிலும் அனைத்து தரப்பு மக்களும் இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராக குரலெழுப்பும்போதுதான் புதிய இந்தியாவிற்கு பூபாளம் அமைக்க முடியும்!

March 25, 2006

காங்கிரசு கட்சியா? கலவர கூடாரமா?

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் தொகுதி உடன்பாடு கண்டுள்ள காங்கிரசு கட்சிக்கு, அது போட்டியிடும் 48 தொகுதிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டதில் இருந்தே சத்தியமூர்த்தி பவன், கலவர பவனாக காட்சியளிக்கிறது.

தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை காங்கிரசு தலைமை கேட்டுப் பெறவில்லை என்று அதிருப்தியாளர்கள் தினமும் காங்கிரசு தலைவர் சென்னிதாலாவின் படத்தை எரிப்பதும், செருப்பால் அடிப்பதும், கொடும்பாவிகள் எரிப்பதும், அதற்கு எதிராக இன்னொரு கும்பல் இதேபோல் செயல்படுவதையும் காணும் போது, காங்கிரசு கட்சிதானா? இவர்களுக்கும் தெருச் சண்டையில் மோதிக் கொள்ளும் ரவுடிகளுக்கும் என்ன வித்தியாசம்? என்று தெரியவில்லை.

இன்று ராயபுரம் மனோ கோஷ்டியும், செல்வக்குமார் கோஷ்டியும் உருட்டுக்கட்டைகள், டியூப் லைட்கள், பாட்டில்கள், செருப்புக்களையெல்லாம் கொண்டு தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் வேறு இந்த இராயபுரம் மனோ ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக செய்தி வருகிறது.அரசியலில் இருந்து கிரிமினல்களை விலக்க வேண்டும் என்று சட்டம் வந்துள்ளது. ஆனால் காங்கிரசு கட்சியில்தான் கிரிமினல்களே (அதிகாரப்பூர்வமான ரவுடிகளாக) அரசியல்வாதிகளாக வலம் வருகிறார்கள். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட கட்சிக்கு இவையெல்லாம் பெருமை சேர்க்குமா? மன்னிக்கவும், சுதந்திரப்போராட்டத்தோடு இப்போதைய காங்கிரசை இணைப்பது எந்தவிதமான நியதியும் இல்லை என்பது தெரிகிறது.

இதுபோன்ற ரவுடியிசத்திற்கு காங்கிரசுக்குள்ளேயே இருக்கும் பெரும் தலைவர்களின் ஆசியில்லாமல் இவையெல்லாம் நடைபெறாது. இத்தகைய அரசியல் ரவுடியிசத்தை அனுமதித்தால், தற்போது இவைகளை ஆதரித்து நிற்ககூடிய தலைவர்களுக்கே அது உலையாகலாம்.இவ்வாறு திறந்தவெளியில் ரவுடியிசம் செய்வதற்கு எதிராக சென்னை நகர போலீசு ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா? என்பதும் தெரியவில்லை? அவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளதா? என்றும் தெரியவில்லை. இதே விஷயத்தை சாதாரண மக்கள் தங்கள் தெருவுக்குள் ஏதோ ஒரு காரணங்களுக்காக வாய்ச்சண்டை போட்டுக் கொண்டால் அப்போது பாருங்கள் போலீசின் வீரத்தை?

சொந்தக் கட்சிக்காரர்களிடையே கூட சகோதர பாசமோ, அட குறைந்தபட்ச மனித தன்மையையோ காட்டாதவர்கள், மக்கள் மீது எப்படி அனுதாபம் காட்டுவார்கள்?தமிழக காங்கிரசு தன் ரவுடியிச கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால், தமிழக மக்கள் காங்கிரசை மிக கௌரவமாக பாடை கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

March 21, 2006

பிரான்சில் எழும் இளைஞர் புரட்சி

பிரான்சு அரசு “புதிய வேலை காண்ட்டிராக்ட் சட்டம்” ஒன்றை சமீபத்தில் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் என பிரான்சு சமூகமே கடந்த ஒரு மாத காலமாக பெரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்றைய தினம் நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்தில் மட்டும் 15 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். பாரீசில் மட்டும் நான்கு லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.ஏகாதிபத்திய நாடுகளில் ஒன்றான பிரான்சில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காண முடியாமல் பிரான்சு ஆளும் வர்க்கம் விழி பிதுங்கி நிற்கிறது.

கடந்த ஆண்டு பிரான்சில் வாழும் குடிசை பகுதி மக்களின் எழுச்சி மிக்க போராட்டம், இன வேறுபாடு போன்றவற்றை எதிர்த்து மாபெரும் சமூக புரட்சி வெடித்தது. இந்த மாபெரும் கலகத்தின் மூலம் பிரான்சில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வு, வேலையின்மை, சுகாதாரமின்மை, மிக மோசமான வாழ்க்கை சூழல் போன்றையெல்லாம் உலக மக்களின் கவனத்திற்கு வர நேர்ந்தது.

தற்போது, பிரான்சில் வேலையில்லா திண்டாட்டம் 30 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக சமீபத்திய புள்ளி விபரம் ஒன்று தெரிக்கிறது. 18 வயது முதல் 30 வயது வரையில் உள்ள வாலிபர்கள் கிட்டத் தட்ட 30 சதவீதம் பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர். அது மட்டுமின்றி புலம் பெயர்ந்தோர் போன்றவர்களையும் சேர்த்துக் கொண்டால் வேலையில்லாத் திண்டாட்டம் 40 சதவீதம் என்று பட்டியலிடப்படுகிறது.

இந்தப் பின்னணியில், பிரான்சு அரசாங்கம் “வேலையில்லாத் திண்டாட்டம் குறைக்கப்போவதாக கூறிக் கொண்டு “புதிய வேலை காண்ட்டிராக்ட் சட்டம்” ஒன்றை கொண்டு வந்துள்ளது.இந்த சட்டத்தின் விதிகள் சர்வதேச தொழிலாளர் விதிகளுக்கு புறம்பாக உள்ளதோடு, வேலையில்லாத இளைஞர்களை வேல் கொண்டு சாய்ப்பது போல் உள்ளது.

உதாரணமாக, புதியதாக வேலையில் சேரும் எந்த இளைஞரையும் இரண்டு வருட காலத்திற்குள் - எந்த விதமான காரணமும் கூறாமல், வேலையில் இருந்து நீக்கி விடலாம். இதற்காக குறிப்பிட்ட நிறுவனம் எந்தவிதமான ஈட்டுத் தொகையும் தர வேண்டியதில்லை என்று இந்தச் சட்டம் கூறுகிறது.அதே போல் வேலையில் இருந்து ஓய்வு பெறுபவர்கள், தங்களது ஓய்வு காலம் முடிந்து விட்டாலும் விருப்பப்பட்டால் குறைந்த ஊதியத்தில் வேலையில் சேர்ந்து பணியாற்றலாம் என்று கூறுகிறது.இந்த சட்டத்தின் விதிகளை கண்டு பிரான்சு முதலாளிகள் குதுகலத்தில் இருக்கின்றனர். மறுபுறம் பிரான்சு முழுவதும் இருக்கின்ற நூற்றுக்கணக்கான பல்கலைக் கழக மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் - வேலையில்லாத வாலிபர்கள் - தொழிலாளர்கள் என்று பல தரப்பினர் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தொடர் வேலை நிறுத்தத்திற்கும் அறைகூவல் விட்டிருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து பிரான்சு போலீசு கடுமையான அடக்குமுறையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. நூற்றுக்கக்கான வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், போலீசு தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் படுகாயமுற்றுள்ளனர். போலீசு அடக்குமுறை எப்படி இருந்தாலும் போராட்டத்தின் தீவிரம் எரிதழல் போர் மேலும், மேலும் பரவி வருகிறது. இதனால் பிரான்சு பொருளாதாரமே நிலை குலைந்து போயுள்ளது.

மனித குலத்தை விடுவிக்கும் மாமருந்தாக முதலாளித்துவமே இருக்கும் என்பது ஒரு மாயை என்பதை பிரான்சு சமூகம் உணர்த்துகிறது. ஏகாதிபத்திய அரசுகளும், முதலாளித்துவ அரசுகளும் முதலாளிகளின் சொத்துக்களை எப்படியெல்லாம் குவிக்க முடியும் என்பதில்தான் கவனமாக இருப்பார்களேயொழிய தொழிலாளர்களின் வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டிருக்கிறார்களா? அல்லது ஈயத்தை காய்ச்சி ஊற்றிக் கொண்டிருக்கிறார்களா என்பதைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை!
உலகமயமாக்கல் கொள்கையை உலகுக்கு அளித்தவர்கள், அதை உள்ளூரில் கூட வெற்றிகரமாக பயன்படுத்த முடியாதவர்கள்தான், உலகமயமாக்கல் என்ற சரக்கை உரக்க கூவி விற்க முயற்சிக்கின்றனர். அதன் நோக்கம் வேறு ஒன்றும் அல்ல; உலக முதலாளிகளின் லாபத்தை மேலும் குவிப்பதே! பிரான்சு, அமெரிக்க, பிரிட்டன், ஜெர்மானிய முதலாளிகளின் பணக்குவிப்புக்கு உதவிடுவதே உலகமயமாக்கல் - எனவே பிரான்சு தொழிலாளர்களுக்கு ஆதரவாக உலக தொழிலாளர்கள் ஒன்று திரண்டு குரல் கொடுப்பதன் மூலம், உலகமயமாக்கல் கொள்கையை நாம் ஊனமாக்கலாம்.

உலக மாமேதை மார்க்° கூறியது போல் “முதலாளித்துவம் தனக்கான கல்லறையை தானே தோண்டிக் கொண்டிருக்கிறது” என்ற புகழ் பெற்ற நிதர்சனம் பிரான்சு அரசாங்கத்தை தூக்கியெறியப்பட்டு, அந்த இடத்தில் மக்கள் நல அரசு ஒன்று ஏற்படும் என்பதை நம்புவோம்!

பிரான்சில் ஏற்பட்டுள்ள இளைஞர்கள் புரட்சி குறித்து, நம் தமிழ் மக்கள் வலைப்பதிவில் விரிவாக எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

March 16, 2006

அணுசக்தி உடன்பாடும் தாராப்பூர் அணுமின் நிலையமும்

அணுசக்தியை இருகூறாக்கி மக்கள் பயன்பாட்டுக் கான திட்டங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் சோதனை வரம்புக்குள் இட்டு சென்றது மத்திய அரசு. இந்த இருகூறாக்கும் திட்டம் நமது சுயேட்சையான அணுசக்தி திட்டங்களைச் சீர்குலைத்துவிடும் என இடதுசாரிகள் எச்சரிக்கை செய்தபிறகும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பயணத்தின்போது மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் மை உலரும் முன்பே அமெரிக்கா தனது சுயரூபத்தைக் காட்டத் துவங்கி விட்டது.
தாராப்பூர் அணுமின் நிலையம் சுதந்திர இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் அணுமின் நிலையமாகும். இந்த அணுமின் நிலையத்திற்கு எரிபொருள் தருவதாக முதலில் அமெரிக்கா ஒப்புக்கொண்டது. அதன் கட்டுமானப்பணி முடியும்வரை காத்திருந்தது. ஆனால் வழக்கம்போல் கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டது. அப்போதைய பிரத மர் நேரு சோவியத் யூனியனின் உதவியை நாடினார்.
சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியிருந்த இந்தியா போன்ற நாடுகளுக்கு உதவுவதைத் தனது கடமை யாகக் கொண்டிருந்த சோவியத் யூனியன், மறுப்போ நிபந்தனையோ கூறாமல் உடனடியாக எரிபொருள் யுரேனியத்தைத் தந்து உதவியது.
தாராப்பூர் அணுமின் நிலையத்தைத் தடுக்க முடியா மல் போனபின் இந்தியாவின் அணுசக்தித் திட்டங்களின் வளர்ச்சி கண்டதும், அணுமின் நிலையங்கள் அதிக அள வில் அமைக்கப்பட்டு மின் உற்பத்தித் திறனை அதிகப் படுத்தியதும் அமெரிக்காவின் பொறாமைத் தீயை வளர்த் தது. செர்னோபில் அணுமின் நிலைய விபத்தைப் பயன் படுத்திக்கொண்டு, இந்தியாவில் அணுமின் நிலையங்களே துவங்காத அளவுக்கு பீதியூட்டும் பிரச்சாரத்துக்குப் பின்னணியில் இருந்து தூண்டியது. கல்பாக்கம் அணு மின் நிலையமும் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டமும் எத்தனைத் தடைகளைத் தாண்ட வேண்டியிருந்தது என்பதை வரலாறு சொல்லும்.
இந்தச் சூழ்நிலையில்தான் தாராப்பூர் அணுமின் நிலைய விவகாரம் சக்கரத்தின் முழுச் சுற்றைப்போல மீண் டும் உருவாகியுள்ளது. இந்த அணுமின் நிலையத்திற் கான எரிபொருள் மாற்றப்பட வேண்டிய நிலையில் உள் ளது. இதற்கு எரிபொருள் தருமாறு மத்திய அரசு அமெரிக் காவிடம் கேட்டது. ஆனால் இந்தியாவிற்கு யுரேனியம் எரி பொருள் வழங்க, சட்டத்தில் இடமில்லை என்று அமெரிக்கா கைவிரித்து விட்டது.
இதன்பின்னர் வழக்கம்போல் ரஷ்யாவின் உதவியை நாடியுள்ளது மத்திய அரசு. ரஷ்யாவும் முந்தைய சோவி யத் யூனியன்போலவே இந்தியாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டி 60 டன் யுரேனியத்தை வழங்க முன்வந்துள்ளது. ரஷ்யப் பிரதமரின் இந்தியப் பயணத்தின்போது (மார்ச் 16) இதற் காக ஒப்பந்தமும் கையெழுத்தாகவிருக்கிறது. இந்த யுரேனியம் கிடைத்தால்தான் தாராப்பூர் அணுமின் நிலை யத்தை தொடர்ந்து இயக்க முடியும்; மேற்குப் பகுதி மின் தொகுப்புக்கு மின்சாரம் கிடைக்கும். மும்பை போன்ற தொழில் நகரங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எரிபொருள் பெறுவது தங்களுடனான உடன்பாட்டை மீறுவதாகும் என்று அமெரிக்கா அலறத் துவங்கியுள்ளது. அதாவது யுரேனியத்தை இந்தியாவுக்கு வழங்கவும் அமெரிக்கச் சட்டம் இடம் தராது; ரஷ்யாவிடமிருந்து வாங்கினால் அது உடன்பாடு மீறல்; வாங்காவிட்டால் தாராப்பூர் அணுமின் நிலையத்தை மூடவேண்டியதுதான்.

அமெரிக்காவுடன் மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பலன் எத்தகைய விளைவை உடனடியாக ஏற்படுத்தியிருக்கிறது என்பதை தேசத்தின் மீது பற்று கொண்ட ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியப் புலி என்னதான் பசு வேடம் போட்டாலும் அதன் கோர வரிக்கோடு வெளிப்படவே செய்கிறது. தாராப்பூரில் துவங்கியுள்ள அணுமின் நிலைய எரிபொருள் சர்ச்சை கூடங்குளம் வரை நீண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்கள் விழிப்புடன் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி வலையை நறுக்கிப் போடுவது மிகமிக அவசியம்.
நன்றி:http://www.theekkathir.com

March 15, 2006

சங்கிலியில் சந்திப்பு

தமிழ்மணச் சங்கிலியில் என்னை இணைத்து விட்டவர் முத்து (தமிழினி) அவருக்கு என் நன்றிகள். தமிழ் வலைப்பதிவர்களிடையே ஆழமான பினைப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த சங்கிலித் தொடர் என்றால் மிகையாகாது. இந்த சங்கிலியில் சுழலில் சிக்குவது இன்பமயமானது.

தாக்கத்தை ஏற்படுத்திய நான்கு நாவல்கள்

ஏழை படும் பாடு - விக்டர் யூகோ
சிவந்த நிலம் - கிஷன் சந்தர்
பகல் கனவு - கீஜூபாய் பாகே
முதல் ஆசிரியன் - சிங்கிஸ் ஐத்மாத்தவ்


(ஐய்யா உள்ளூர் நாவலை படிப்பதே இல்லையா என்று கேட்காதீர்கள். எனக்கு இலக்கிய
ஆர்வம் குறைவுதான். இந்த ஆர்வத்தை அதிகரிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.)

பிடித்த புத்தகம் நான்கு


கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - மார்க்ஸ், ஏங்கெல்ஸ்
இயற்கை சமுதாய விஞ்ஞானம் - கிருஷ்ணகுமார்
சுந்தரய்யா வாழ்க்கை வரலாறு - சுந்தரய்யா
இயக்கவியல் பொருள் முதல்வாதம் - ஸ்டாலின்

பிடித்த உலகத் தலைவர்கள்

காரல் மார்க்ஸ்
லெனின்
சேகுவேரா
கிராம்சி

பிடித்த உள்ளூர் தியாகிகள்

பகத்சிங்
சந்திரசேகர் ஆசாத்
உத்தம் சிங்
திருப்பூர் குமரன்

பிடித்த உள்ளூர் தலைவர்கள்

இந்திரா காந்தி
ஜோதிபாசு
சுர்ஜித்
ஜீவானந்தம்


பிடித்த உணவு வகைகள்

நூடுல்ஸ்
இடியாப்பம்
தோசை
தயிர் சாதம் (உடன் உருளைக் கிழங்கு கூட்டு இருக்கணும்)


மனதில் பதிந்த (பிடித்த) படங்கள்

மின்சார கனவு
நான் போகும் பாதை
பாஷா
குருதிப்புனல்


பிடித்த நடிகர்கள்

ரகுவரன்

கமல்ஹாசன்

ரஜினிகாந்த் (இவர் படத்திற்கு காமெடியனே தேவையில்லை - இவரது நடிப்பு குழந்தைதனம்
- குறும்பு - கோபம் - சிரிப்பு என பலமுனைகளில் வெளிப்படுத்தும்? இவரெல்லாம் ஒரு
நடிகரா? என்று கேட்காதீர்!)

விக்ரம் (காசி திரைப்படத்தில் குருடன் பாத்திரம் மிக சிறப்பானது)


தினமும் பார்க்கும் இணையதளங்கள்

தட்ஸ் தமிழ்

கூகுள் நியூஸ்

என்.டி. டி.வி.

தமிழ் மணம்


பிடித்த (பார்க்கும்) வலைப்பதிவுகள்

முத்துவின் தமிழ்

(தமிழ் வலைப்பதிவில் முதல் நண்பர் - என் வலைப்பதிவை
மேம்படுத்த மிக முக்கியமான உதவிகளைச் செய்தவர். சிறந்த விஷங்களை சமூகப்
பார்வையோடு, அவருக்கே உரித்தானி பாணியில் பதிவது.)


முத்துக்குமரன்

(பல தளங்களில் செயல்பட்டு வருகிறார். கவிதை, கட்டுரை, இலக்கியம் என்று. நல்ல
சமூகப் பார்வையோடு விஷயங்களை பதிவிடுகிறார்.)

சமுத்ரா

(என்னுடைய பதிவுகளின் பின்னூட்டங்களில் பெரும்பாலானவை சமுதராவினுடையது. மாற்றுக்
கருத்துக் கொண்டிருந்தாலும், இவருடன் விவாதிப்பது பயனுள்ளது)

நான்காவது இதயத்தில் இடமுள்ள அனைத்து தமிழ் வலைப்பதிவுகளும்.

பிடித்த டி.வி. சேனல்கள்

பொதிகை
என்.டி. டி.வி.
நியூஸ் சானல்
சன் டி.வி. (முரண்பாடாக தோன்றும் வேறு வழியில்லை. அதற்காக மற்ற சேனல்களையெல்லாம்
பார்ப்பதில்லை என்று அர்த்தமில்லை.)


கவர்ந்த விளையாட்டு வீரர்கள்

ராகுல் டிராவிட் - கிரிக்கெட் (மிக நேர்த்தியான -
பொறுமையான பேட்ஸ்மேன்)
சானியா மிர்சா - டென்னிஸ்
விஸ்வநாத ஆனந்த் - செஸ்
தன்ராஜ் பிள்ளை - ஹாக்கி


பிடித்த சுற்றுலா தளங்கள் (மிகக் குறைவாகத்தான்
சென்றுள்ளேன்.)

கன்னியாகுமரி (இயற்கை வளமும், நீர் வளமும் பொருந்திய
சூழல்)
ஊட்டி (இங்கெல்லாம் ரொம்ப நாள் இருக்க முடியாது)
மகாபலிபுரம் (இதுதான் எங்க ஊர். அதனாலேயே ரொம்ப பிடிக்கும்.)
பெங்களூர் (மிதமான வெப்பநிலை கொண்ட சூழல் - அதன் சாலைகள் - ஏற்ற இறக்கமாக
இருப்பது.)


பிடித்த பொழுது போக்கு

கிரிக்கெட் விளையாடுவது
ஓவியம் வரைவது
குழந்தைகளுடன் அரட்டையடிப்பது
அரசியல் பேசுவது

ஹலோ மூச்சு வாங்குதா? எனக்கும்தான் இன்னும் இருக்கு... இப்போதைக்கு இது போதும்.

நோபல் பரிசுக்கு பொருத்தமானவர் ஜெயலலிதா!

உலகத் தமிழ் இளைஞர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அத்துடன் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை ஜெயலலிதா தினமாக கொண்டாடப்போவதாக அறிவித்துள்ளார்.

அமைதிக்கான நோபள் பரிசு! ஜெயலலிதா எந்த அமைதிக்காக பாடுபட்டார் என்று நாமும் அலச வேண்டியுள்ளது.

1. 2000 இசுலாமிய மக்களை கொலை செய்த பாசிச வெறியன் நரேந்திர மோடி பதவியேற்புக்கு சென்று தன்னுடைய ஆதரவை தெரிவித்தாரே ஜெயலலிதா, இதற்காக நோபல் பரிசு கொடுக்கலாம் என்கிறாரா? பிரபாகர். (உலகமே மோடி என்ற அருவருப்பான முகத்தையும், சங்பரிவாரின் ரத்தவெறித்தனத்தையும் கண்டித்து கொதித்து எழுந்த போது மோடியை ஆதரித்தன் மூலம் தன் பாசிச சுய உருவத்தை வெளிக்காட்டிக் கொண்டாரே ஜெயலலிதா இதை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஒரு வேளை நோபல் பரிசு கழகம் மறந்திருக்குமோ?)

2. ஒரே கையெழுத்தில் இரண்டரை லட்சம் அரசு ஊழியர்களை வேலையில் இருந்து விரட்டினாரே! இது ஒரு உலக சாதனை என்று விமர்சகர்களால் கூறப்பட்டது. (அரசு ஊழியர்கள் மட்டுமல்ல; எந்த ஊழியரும் எனக்கு எதிராக போராடினால் இந்த கதிதான் ஏற்படும் என்று தன் அடக்குமுறை சிந்தனையை வெளிப்படுத்தினாரே! ஒரு வேளை உலக முதலாளிகள் வேண்டுமானால் ஜெயலலிதாவின் இந்தச் செயலுக்காக புகழ் பாடலாம் - நோபல் பரிசு வழங்கலாம். மக்கள் வழங்கப் போகும் பரிசு தேர்தலில் தெரியும். ஒருவேளை அரசு ஊழியர்களிடம் ஏற்பட்ட மயான அமைதிக்காக நேபால் பரிசு வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.)

3. மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கியுள்ளார் இது என்ன சாதாரண சாதனையா? ஆம்! கிராமங்களில் சைக்கிள் வழங்கிய ஜெயலலிதா அதை ஓட்டுவதற்கு மட்டும் லைசன்° வழங்க மறந்து விட்டார்! (நேத்து வரைக்கும் கால்ல செருப்பு போடாம போன புள்ளைங்க... இப்போ சைக்கிள்ல போவதா? என்று மேல் ஜாதிக்காரர்களின் ஏளனத்திற்கும், ஏச்சும், கேலிக்கும் உள்ளான அந்த மாணவிகளின் உள்ளங்களில் அமைதியை ஏற்படுத்தினாரோ?)

4. பாப்பா பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டகச்சியேந்தல் இந்த பஞ்சாயத்துக்களில் தேர்தல் நடத்தி பெரும் ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்தி - அந்த மக்களிடையே அமைதியை ஏற்படுத்திய ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு நிச்சயம் கொடுத்தேயாக வேண்டும்! (5 ஆண்டு காலமாக ஒரு ஊராட்சியில் கூட தலித் மக்களை மனுசனாக நிமிர வைக்க முடியாத ஜெயலிதாவுக்கு நோபல் பரிசு - நல்ல ஜோக்குடா சாமி! அய்யோ இத்தோடு இதையும் சேத்துக் கொள்ளுங்கள் நம்ம திருமா! அவருடைய வீரம் என்ன, விவேகம் என்ன, சூரத்தனம் என்ன இப்ப என்னடான்னா... எல்லாம் அம்மாதான். தேர்தல் முடியும் முன்னே ஒருவேளை திருமாவே பரிந்துரைத்தாலும் பரிந்துரைப்பார்)

5. கடைசியா! இப்போ சிறுசேரி நிலம் விற்பனை விவகாரத்தில் - அவசர, அவசரமாக ஒப்பந்தத்தை ரத்து செய்தாரே ஜெயலலிதா! தமிழக மக்களின் மனசாட்சியாக - நியாயமாக நடத்துக் கொண்டாரே அதற்காக நிச்சயம் நேபால் பரிசு கொடுத்தேயாக வேண்டும்.
6. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக அடிக்கடி ஜெயலலிதா கூறுவார்! அதாங்க போலீசுக்கே முழு அதிகாரம் கொடுத்து 10க்கும் மேற்பட்டவர்களை என்கவுன்டர் செய்தார்களே! அது என்ன சாதாரண விஷயமா? நீதியை போலீசுக்கே வழங்கியதன் மூலம் அல்லவா ஜெயலலிதா தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றி விட்டார்!

அருந்ததி ராய்க்கு சாகித்திய அகாடமி பரிசு கொடுத்ததும், அதை அவர் வாங்க மறுத்து பெரிய கடிதம் எழுதினார். ஒரு வேளை இனிமேல் யாருக்காவது நோபல் பரிசு கொடுக்க முன்வந்தால் அதை யாராவது வாங்க முன்வருவார்களோ? ஒரு வேளை நோபல் பரிசு வழங்குவது ஜெயலலிதாவுக்கே கடைசி என்று அவரே அறிவித்துக் கொள்வாரோ!

March 13, 2006

திராவிட இயக்கத்தின் அவுட்புட் ‘வேப்பில்லைகாரி’

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வேப்பில்லைக்காரி’ சீரியல் பார்க்க நேர்ந்தது. அதில் வந்த காட்சிகளுக்கும் - என் மனதில் எழுந்த கேள்விகளுக்கும் விடை கிடைக்கவில்லை. ஆதலால்தான் இந்த பதிவைப் போடுகிறேன்.

21ஆம் நூற்றாண்டில் வல்லரசு இந்தியா, விரல் நுனியில் உலகம், அசுர தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்று எவ்வளவுத்தான் பேசினாலும் நாம் என்னவோ 17ஆம் நூற்றாண்டில் தான் இருக்கிறோம் என்பதை உணர்த்தியது சன் தொலைக்காட்சியின் வேலைப்பில்லைக்காரி.

அப்படி என்னத்த ஒளிபரப்பினார்கள் என்று கேட்கிறீர்களா? இருங்க பொறுமையா - சுருக்கமாக சொல்றேன்.
இரண்டு பெரும் பண்ணைகளைக் கொண்ட விவசாய குடும்பங்கள் - அதில் இவர்களுக்குள் ஏற்படும் சண்டைகள் இதுதான் இந்த தொடரின் எபிசென்டர்.
சந்திரசேகரின் தம்பி திடகாத்திரமான உடல் வாகு கொண்டவர். நல்ல நிலையில் வேலைக்குப் போகிறார். மாலையில் ஏதோ அரிப்பு ஏற்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த அரிப்பு அதிகமாகி உடம்பெல்லாம் தீயைப் போல் எரிய ஆரம்பிக்கிறது. தீக்காயங்கள் போல ஆங்காங்கே வட்டம், வட்டமாக தோலில் அரிப்பு... அவரால் தாங்க முடியவில்லை.
இந்த விஷயத்தை அண்ணன் சந்திரசேகரிடம் அவர் கூற, அதை கேட்ட சந்திர சேகர் ஏதாவது பூச்சி கடிச்சுதா? என்று கேட்க:
இல்லன்னா, நான் வயல்ல கூட இறங்குல என்று சொல்கிறார்... கூடவே எரிச்சலால் துடி துடித்துக் கொண்டிருக்கிறார்.
(இந்த நேரத்தில் என்னுடைய மனதில் அவரை அவசர, அவசரமாக காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது...)
அடுத்த காட்சியில், சரிடா கொஞ்சம் பொறுத்துக்கோ! விபூதி தடவினால் எல்லாம் சரியாயிடும் என்று கூறுகிறார் சந்திரசேகர்.அதே போல் வீட்டுக்குச் சென்று, மிக பொறுமையாக - அன்பாக விபூதி தடவுகிறார், வீட்டில் உள்ள அவரது மனைவி - தம்பிகள் என குடும்பமே மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகிறது...அதற்குள் அவருக்கு எரிச்சல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவரால் தாங்க முடியவில்லை.இந்த நிலையில் விபூதி பத்தாது என்று, வேப்பில்லையை அரைத்து சந்திரசேகரின் மனைவி ஆங்காங்கே பூசிக் கொண்டிருக்கிறார்...அதற்குள் அவரால் தாங்க முடியாத வாந்தி ஏற்படுகிறது.
(இப்போதாவது மருத்துவமனைக்கு அவரைச் தூக்கிச் செல்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்... ஆனால் நடக்கவில்லை.)
திரும்பவும் ஒரு டயலாக் பேசுகிறார் சந்திரசேகர்: போய் ஐந்து ரூபாய் காசை ஒரு துணியில் முடித்து வேப்பில்லைக்காரிக்கிட்ட வைச்சுட்டு, அவன் கையில கட்டு - எல்லாத்தையும் வேப்பில்லைக்காரி பார்த்துக் கொள்வாள் என்று கூறுகிறார்.அதற்குள் வேறு காட்சி காட்டப்படுகிறது.
.அந்தக் காட்சி இவர்களது எதிர் முகாம் தரப்பு குறித்து: அந்த காட்சியில் துஷ்ட தேவதைகள் - வேலைப்பில்லைக்காரிக்கு எதிராக எப்படி செயல்படுவது போன்ற அறிவுரைகளை வழங்குகிறது.மொத்தத்தில் வேப்பில்லைக்காரி - துஷ்ட தேவதைகள் - பெரும் கடவுளை மிஞ்சம் - சிறிய தீங்கான கடவுள்கள் என்று இந்த சீரியல் செல்கிறது.
இதைத் தொடர்ந்து என் மனதில் எழுந்த சில கேள்விகள்...மனிதர்களிடத்தில்தான் ஏற்றத்தாழ்வும் - பொறாமையும் - கெடு செயல்களும் நிறைந்திருக்கிறது என்றால் இந்த கடவுள்களிடம் கூடவா? ஏற்றத்தாழ்வுகளும் - சதிச் செயல்களும் நிறைந்திருக்கிறது?
இந்த துஷ்ட தேவதைகளின் வேலையே பில்லி, சூனியம், ஏவல் போன்ற வேலைகச் செய்வதுதான்.இது போன்ற காட்சிகளை இந்த விஞ்ஞான யுகத்தில் காட்டுவதன் மூலம் மக்களிடமும் - குழந்தைகளிடமும் எதை விதைக்கிறது திராவிட மீடியா (சன் தொலைக்காட்சி)
சரி! குறைந்த பட்சம் அரிப்பு ஏற்பட்டவரை மீட்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்ற காட்சிகளை அமைத்தாலாவது இந்த நூற்றாண்டில் கிராமப்புற மக்களை விழிப்புணர்வு அடைய வைக்க உதவிடும்.ஆனால், இதற்கு நேர் மாறாக - மருத்துவ உலகம் இன்டர்நெட் - வீடியோ கான்பிரன்சு முறைகள் மூலம் அமெரிக்காவில் உள்ள ஒரு டாக்டர் - இந்தியாவில் உள்ள ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க கூடிய அளவிற்கு மருத்துவம் வளர்ந்துள்ளது.
இந்த சூழலில் கிராமப்புறங்களில் உள்ள மக்களிடையே நிலவி வரும் மூடப்பழக்கங்களை உடைத்து - அவர்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்க்க மருத்துவமனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் மேலும் மூட நம்பிக்கையில் திராவிட மீடியா ஏன் அழுத்துகிறது.
மூட நம்பிக்கைக்கு எதிராக பெரியார் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தாலும், அவருக்கு பின்னால் வந்த திராவிட இயக்கங்கள் சராணாகதி அடைவது வேலைப்பில்லைக்காரியாக இருக்கும் போது! பெரியார் ஏற்படுத்திய விழிப்புணர்வு இங்கே கேள்விக்குள்ளாக்கப்படுவது நியாயமே!
பெரியாரிய சிந்தனையை மக்கள் கடைப்பிடிக்கவில்லையென்றால் அதை புரிந்து கொள்ளலாம். ஆனால் திராவிட தலைவர்களே கடைப்பிடிக்காத போது - கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்று கூறிய வள்ளலார் போல் - பெரியாரியத்துக்கும் மணியடித்து விட்டார்களோ!

March 10, 2006

தேசத்தின் வலிமை அணு குண்டுகளில் அல்ல!

இரண்டு நாட்களுக்கு முன் இந்தியாவையே உலுக்கிய குக்கர் குண்டு வெடிப்பின் மூலம் 22க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாயின. நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பயங்கரவாதிகளின் இந்த சதிச்செயல் கோழைத்தனமானது.

பயங்கரவாதிகளின் இந்த செயலை நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களும் ஒருமித்த குரலில் கடும் கண்டனம் செய்துள்ளதோடு, இந்திய அரசும் இத்தகைய பயங்கரவாத இயக்கங்களை ஒழிப்பதற்கு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

இந்த குண்டு வெடிப்புச் சம்பவதிற்கு காஷ்மீர் பயங்கரவாத இயக்கம் -லஷ்கர் இ ககார்- என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. காஷ்மீரில் நூற்றுக்கணக்கான தீவிரவாத - பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய தேசத்தின் ஒற்றுமையை சிதைப்பதில் தொடர்ந்து இந்த இயக்கங்கள் செயலாற்றி வருகின்றன.

இந்த முறை இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் வாரணாசியில் - அதுவும் ஒரு இந்துக் கோவிலில் வெடி குண்டை வைத்து வெடிக்கச் செய்ததின் மூலம் பயங்கரவாதிகளின் நோக்கம் பல உயிர்களைக் கொல்வது மட்டுமல்ல; இதன் மூலம் பெரும் கலகம் இந்தியாவில் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளடங்கியிருப்பதாக தெரிகிறது. இத்தகைய பயங்கரவாதிகளின் பின்னால் எத்தகைய உள்நாட்டு - வெளிநாட்டு தொடர்புகள் இருந்தாலும் அதனையும் முழுமையாக வேறறுப்பதோடு முழுமையாக அதனை கண்டு பிடித்து இந்திய மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இதுபோன்ற குண்டு வெடிப்புகள் - இரயில் எரிப்புச் சம்பவங்கள் போன்று உணர்ச்சிகளை தூண்டி விடும் சம்பவங்கள் நிகழும் போது, மக்களின் சேவகர்களாக செயல்படும் தேசிய - மாநில அரசியல் கட்சிகள் மிகப் பொறுப்புணர்வோடு மக்களிடையே எந்தவிதமான பதட்டமும் ஏற்படாமல் காப்பதோடு, அவர்களுக்குள் மோதல் ஏற்படாமல் ஒற்றுமை காப்பதற்கு பாடுபட வேண்டும்.

மத்தியில் 7 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பொறுப்பான கட்சி பா.ஜ.க. இந்த கட்சி ஆட்சியில் இருக்கும் போதே மக்கள் ஒற்றுமையை காப்பதற்கு தவறியதால்தான் - இந்திய ஒளிர்கிறது என்று கூறினாலும் மக்கள் இவர்களை ஆட்சிக் கட்லில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளார்கள்.

இதிலிருந்து எந்தவிதமான பாடத்தையும் கற்காமல் வாரணாசி சம்பவத்தை பயன்படுத்தி பா.ஜ.க. தலைவர் அத்வானி ரதயாத்திரை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இதன் நோக்கம் என்ன? அமைதியை ஏற்படுத்துவதா? ஏற்கெனவே அத்வானி ரதயாத்திரை போனபோதெல்லாம் நடைபெற்ற சம்பவங்கள் துன்பத்தையும் - இரத்த ஆறறையும் அல்லவா ஏற்படுத்தியது? ஏன் இப்படியொரு நடவடிக்கை? பா.ஜ.க.வின் சரிந்து வரும் செல்வாக்கையும், அத்வானியின் பெயர் மறைந்து வருவதையும் இதன் மூலம் சரிகட்டுவதற்கு மக்களது ஒற்றுமையை சமாதியாக்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று பா.ஜ.க. தலைமை சிந்திக்கிறதா? புதிய தலைவர் ராஜ்நாத் சிங்கும் இதைத்தான் எதிர்பார்க்கிறாரா?

சமீபத்தில்தான் குஜராத் சபர்மதி இரயில் எரிந்த சம்பவமும் - அது குறித்த பானர்ஜி கமிஷனின் அறிக்கையும் வெளியாகியுள்ளது. பானர்ஜி கமிஷன் அது ஒரு விபத்து என்று தெளிவாக கூறியுள்ளது. அன்று குஜராத்தில் நடந்தது என்ன? ஏதோ வெளியில் இருந்து இசுலாமிய தீவிரவாதிகள் இராம பக்தர்களை உள்ளே வைத்து எரித்து விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்து 2000 உயிர்களை மாய்த்தது போதாதா? இந்த 2000 உயிர்களை இந்த மதம் திரும்பக் கொடுக்கப்போகிறது? அல்லது மோடித்தான் இதனை ஈடுகட்டுவாரா? இட்லரை மிஞ்சம் இந்த சம்பவத்தின் பின்னணி போலியானது என்று கூறிபின்னும் பதவி விலக மறுக்கும் பா.ஜ.க.வும் - மோடியும் மனிதர்கள்தானா?

இந்திய நாட்டில் செயல்படும் எந்த பயங்கரவாத குழுக்களாக இருந்தாலும் சரி! உங்களுடைய நோக்கம் நியாயமானது என்று நீங்கள் எதைக் கூறிக்கொண்டாலும் அதை வெடி குண்டுகள் மூலம் தீர்க்க முடியாது! மேலும் இதனை பயன்படுத்திக் கொண்டு வலதுசாரி பயங்கரவாதங்கள் இந்தியாவில் தலைதூக்குவதற்குத்தான் பயன்படும். எனவே பயங்கரவாத இயக்கங்கள் குறித்தும் - மக்கள் ஒற்றுமை குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது வலைப்பதிவர்களது கடமைகளில் ஒன்றாக நான் கருதுகிறேன். நமது தேசத்தின் வலிமை அணு குண்டுகளில் அல்ல! மக்கள் ஒற்றுமையிலேயே உள்ளடங்கியிருக்கிறது.

March 09, 2006

அண்ணாயிசத்துக்கு புது மெருகூட்டும் கருணாநிதி

திமுக - காங்கிரசு கட்சிகளுக்கிடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு விட்டது. காங்கிரசுக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிசுட்டு கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் பா.ம.க.வுடனும், மார்க்சிசுட்டு கட்சியினுடனும் தொகுதி உடன்பாடு எட்டப்பட வேண்டியுள்ளது - இந்த இரண்டு கட்சிகளும் தங்களுக்கு நியாயமான தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டு வருகின்றன.

பாராளுமன்ற தேர்தலுக்காக திமுக தலைமையில் உருவாக்கப்பட்டதுதான் ஜனநாயக முற்போக்கு கூட்டணி (DPA). மதிமுக விலகி விட்ட சூழலில், இந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணி தொடர்கிறதா? என்பதை திமுக தலைவர்தான் விலக்க வேண்டும். ஏற்கெனவே கம்யூனி°ட்டுகள் தங்களை ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் அங்கமாக கூறிக்கொள்ளவில்லை என்பதை நோக்க வேண்டியுள்ளது. அல்லது திமுக கூட்டணிக்கு கருணாநிதி வேறு பெயர் சூட்டுவாரா? என்றும் தெரியவில்லை.

இந்த ஆராய்ச்சி ஒரு புறம் நடந்தாலும், காங்கிரசுக்கு எந்த அடிப்படையில் 48 தொகுதிகள் ஒதுக்கினர் என்பது ஆச்சரியமாக உள்ளது. தமிழகத்தில் காங்கிரசுக்கு அடிமட்ட தொண்டர்களே கிடையாது. அதில் வெறும் தலைவர்கள் மட்டுமே உள்ளனர். எங்காவது கிராமங்களில் காங்கிரசு இருக்கிறது என்று சொன்னால் அதுவும் வார்டு அடிப்படையில் கொடுக்கப்பட்ட பொறுப்பாகத்தான் இருக்கும். மேலும் காங்கிரசுக்குள் எத்தனை கோஷ்டிகள் உள்ளன என்று காங்கிரசு தலைவர்களுக்கே தெரியாது!இத்தகைய ஒரு கட்சிக்கு 48 தொகுதி என்பது சற்று அதிகமாகவே தெரிகிறது. மேலும் காசு இல்லாமல் வேலை செய்யும் தொண்டர்களைக் கொண்ட கம்யூனி°டுகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் கஞ்சத்தனம் காட்டும் கருணாநிதி காங்கிரசிடம் தாராளமாக நடந்துக் கொண்டதின் ரகசியம் என்ன? மத்தியில் காபினட் மந்திரிகளாக உலா வருகிறார்களே திமுகவினர் அதற்கு கைமாறா? இது என்றும் புரியவில்லை.

சரி! ஏற்கெனவே காங்கிரசு கூட்டணி ஆட்சி என்று பல்லவி பாடிக் கொண்டிருக்கும் பின்னணியில் திமுக தனித்த மெஜராட்டி வருமா? என்பதும் ஆருடமாகவே இருக்கிறது. அறிஞர் அண்ணா 1967இல் காங்கிரசை தமிழகத்தில் இருந்து ஓட, ஓட விரட்டினார். அந்த காங்கிரரோடு - திமுக கரம் கோர்த்து அண்ணாயிசத்துக்கு புது மெருகூட்டுமா?
பா.ஜ.க. ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல என்று கூறி அதனை கட்டி அணைத்து - அதனோடு கொஞ்சி, குலாவி திராவிட கொள்கைகளெல்லாம் காலத்திற்கு ஒவ்வாதது என்று பெரியாரின் கொள்கைக்கு சமாதி கட்டியதையும் மக்கள் மறக்கவில்லை.

தேர்தல் கூட்டணிக்கு புது விளக்கம் கொடுத்துள்ள வைகோ - தொகுதி உடன்பாட்டில் திமுகவின் நியாயமற்ற போக்கு - அதிமுகவின் அராஜக ஆட்சி!

இத்தகைய சூழ்நிலையில் மக்களின் மனங்களே எதிர்கால ஆரோக்கிய அரசியலுக்கு வழிகாட்டியாக அமையும்! வாழ்க ஜனநாயகம்!!

March 08, 2006

நந்தவனத்தில் ஒரு ஆண்டி

தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார். மூன்று நாள் ஆராய்ச்சிக்குப் பின் இந்த முடிவிற்கு வந்துள்ளனர்.
உண்மை என்ன? யாராவது பா.ஜ.க.வை கூட்டணிக்கு அழைத்தார்களா? இல்லையே! ஏன் விஜயகாந்த்கூட பா.ஜ.க.வை சீண்ட வில்லையே! இவர்களாகவே வலியப் போய் நாங்கள் விஜயகாந்தின் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைப்போம் என்று கடந்த 6 மாதமாக பேசி வந்தனர். ஆனால் விஜயகாந்த் பக்கம் இருந்து மூச்சுக் காற்றுக்கூட இவர்கள் மீது படவில்லை.அது மட்டுமா! பா.ஜ.க. எம்.பி. திருநாவுக்கரசர் அதிமுகவுடன் கூட்டு சேர்வோம் என்று அறந்தாங்கியில் பொதுக்கூட்டத்தில் முழங்கினார். போய° கார்டன் பக்கமே இவர்கள் தலைகாட்டக்கூடாது என்று அம்மா தரப்பில் கூற! அலறியடித்துக் கொண்டு ஓடி வந்து விட்டனர்.
பா.ஜ.க.வில் சேர்ந்த பு.தா. இளங்கோவன் கூட, ஐயோ இந்த கும்பலோடு சேர்ந்துட்டோமே என்று வருத்தப்பட்டு புதிய கட்சி துவங்கி விட்டார்.
நேற்று முளைத்த கட்சிகள் கூட பா.ஜ.க.வை சீண்டத் தயாராக இல்லாத போது, தாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என்று வெங்கய்யா கூறியிருப்பதை தேர்தல் ஜோக்கில் சேர்த்துக் கொள்ளலாம்!பா.ஜ.க.வின் மதவாத அரசியல் காலாவதியாகிப் போனதைத்தான் இந்த தேர்தல் எடுத்துக் காட்டுகிறது.
மதத்தை அரசியலில் கலப்பதை இந்திய நாட்டில் முற்றிலும் தடை செய்ய வேண்டும். மத்திய அரசு இது குறித்த ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தால் மிகச் சிறப்பாக இருக்கும். இது இசுலாமிய மதஅடிப்படைவாத கட்சிகளுக்கும், கிறித்துவ மத அடிப்படைவாத கட்சிகளுக்கும் பொருந்தும்.
மதம், ஜாதி இவைகள் தனிநபர் விருப்பாக மட்டும் இருக்கட்டும்! பொது வாழ்வில் இவைகள் தலை காட்டுவது தேச நலனிற்கு தீங்கானது!.
நந்தவனத்தில் ஒரு ஆண்டி
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதை கூத்தாடி கூத்தாடி
போட்டு உடைத்தாண்டி
என்ற கதையாகிப் போனது பா.ஜ.க.வின் நிலை...

March 03, 2006

அணு அடிமைகளாகும் நாடுகள்...

புஷ்-மன்மோகன் சந்திப்பின் போது அணுசக்தி விவகாரம் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக :
  • அணுசக்தியை இராணுவம் சார்ந்து பயன்பாடு, இராணுவம் சாராத (சிவில் உபயோகம்) பயன்பாடு என பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • இதன் மூலம் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கண்காணிப்பின் கீழ் சிவில் உபயோகம் சார்ந்த 14 இந்திய அணு உலைகள் கொண்டு வரப்படும்.
  • இவ்வுடன்பாட்டில் பா°ட் பீரிடர் (அதிவே ஈனுலை) அணு உலைகளை கொண்டுவரவில்லை என்று கூறப்படுகிறது.
  • மேலும் அணு உலை செயல்பாட்டிற்கு அமெரிக்காவிடம் இருந்து யுரேனியம் பெறுவதற்கு வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
  • இது தவிர வர்த்தகம், விவசாயம், மருத்துவம் என பலதுறைகளில் இந்தியா - அமெரிக்க ஒத்துழைப்பு - உதவி குறித்தும் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
  • மிக முக்கியமாக ஜூலை 18 அன்று மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றிருந்தபோது எட்டப்பட்ட அணுசக்தி உடன்பாடு அமலாக்கம் குறித்து உறுதிபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்கள்.
  • தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா - இந்தியா கூட்டாக போராடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாம் எழுப்பும் கேள்விகள்:
அ. மன்மோகன் சிங் அரசு இந்திய பாராளுமன்றத்திற்கும் - மக்கள் மன்றத்திற்கும் ஜூலை 18 அன்று அமெரிக்காவுடன் செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை முதலில் பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
ஆ. நேற்றைய உடன்பாட்டின் மூலம் இந்தியாவை “அணு ஆயுதங்களை வைத்திருக்கும்” நாடாக அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. மாறாக அணுவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலின் கீழ்தான் நம்மை வைத்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நாம் அணு ஆயுத சோதனை உட்பட - அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு தடை - கட்டுப்பாடுகள் வரலாம்!
இ. அமெரிக்கா இன்றைக்கு உலகை மூன்றாக பிரித்து விட்டது. அணு ஆயுதங்கள் உள்ள நாடு, இந்திய பாணி அணு ஆயுதங்கள் அற்ற நாடு, அணுவே இல்லாத நாடுகள்.... என பிரித்துள்ளது. இது எதிர்கால உலகில் அணு சார் பொருளாதார சூழலை உருவாக்கலாம். அல்லது உலக நாடுகளின் அணு அடிமைகளாக ஆக்கப்படலாம்...
ஈ. தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா - அமெரிக்கா போராடும் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவோ --சிரியா, வடகொரியா, கியூபா-- என பல சின்னஞ்சிறிய மிகக் குட்டி நாடுகளையெல்லாம் தீமைகளின் அச்சு என்று வர்ணித்துள்ளது. இந்த நாடுகளையெல்லாம் இந்தியா எதிர்க்கப்போகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது...
அதைவிட இந்த நூற்றாண்டின் மகா கேலமான சம்பவம் எது என்றால் அகிம்சாவாதி மகாத்மாவின் சமாதியில் - உலக கொலைகாரன் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டதுதான்! அகிம்சாவாதிகளின் வரலாற்றில் இது பெரும் கரை... இது குறித்து தமிழ் வலைப்பூவில் கவிதை வடிவில் வாசித்தால்தான் அதன் சாரத்தை உடலிலும் - உள்ளத்திலும் ஏற்ற முடியும்...

இந்தியாவின் புதிய நம்பகமான கூட்டாளியாக இந்தியா மாறி வருவது உலக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் சீனாவை மிரட்டுவதற்குதான்.