இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாடு தீவிரமான சர்ச்சைக்கும், சந்தேகத்திற்கும் உள்ளாகியுள்ள பின்னணியில், அடுத்த கட்ட சூட்டைக் கிளப்பியுள்ளது ‘மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சி’. வருகிற செப்டம்பர் 4 முதல் 8 வரை வங்காள விரிகுடா பகுதியில் ‘மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சி’ என்ற பெயரில் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ‘இந்தியா - அமெரிக்கா - ஜப்பான் - ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர்’ என ஐந்து நாடுகள் இணைந்து கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளது தேச பக்தியுள்ள அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளதோடு, ஆசிய பகுதியில் அதிகரித்து வரும் அமெரிக்கச் சார்பு இராணுவரீதியான தலையீடுகளால், ஆசிய கண்டத்தின் அரசியல் தட்ப - வெப்ப நிலையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இடதுசாரி கட்சிகள் அணு சக்தி ஒப்பந்தம் குறித்து தங்களது ஆட்சேபனையை தெரிவிக்கும் போது, இந்த ஒப்பந்தத்தை தனித்துப் பார்க்க முடியாது என்று தெளிவுபடுத்தியதோடு, அதனை இந்திய - அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பு உடன்பாட்டு பின்னணியில்தான் இணைத்து பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போதை அணு சக்தி ஒப்பந்தத்தின் முன்னோடிதான் இந்த ‘இந்திய - அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பு உடன்பாடு’ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி 2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்த போது இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டார். அவர் அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்போகிறோம் என்பதைக் கூட இந்திய பாராளுமன்றத்திற்கோ, ஏன் இந்திய மக்களுக்கே கூட அரசல் - புரலாகக் கூடத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க புவிசார் அரசியல் சார்ந்த இராணுவ ஒப்பந்தத்தில் 1995ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது அன்றைய பிரதமர் நரசிம்மராவ் இதனை துவக்கி வைத்தார். அந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சிதான் தற்போதைய ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் இன்னும் 10 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இந்த உடன்பாட்டின் மூலம் இந்தியாவை உலகளாவிய யுத்த தந்திர கூட்டாளியாக அமெரிக்கா மாற்றியுள்ளது.
தற்போது நடைபெறும் இந்த மலபார் கூட்டுப் பயிற்சியில், “18 அந்நிய கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதில் 13 கப்பல்கள் அமெரிக்க கப்பற் படையைச் சேர்ந்தது. அமெரிக்க நீர் மூழ்கி கப்பலான யு.எஸ்.எஸ். சிகாகோ, மற்றும் அணு சக்தி கப்பலான யு.எஸ்.எஸ். நிமிட்ஸ், யு.எஸ்.எஸ். கிட்டி ஹாக் ஆகிய முக்கிய போர்க்கப்பல்கள் இப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.” இந்த கப்பல்கள் அனைத்தும் உலக நாடுகளையும், உலக மக்களையும் மிரட்டுவதற்காகவும், தங்களது யானை பலத்தை நிரூபிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டவைகள். இதனை இந்திய கடல் எல்லைக்குள் பயிற்சியில் ஈடுபடுத்துவதன் மூலம், ஆசிய பகுதியில் உள்ள மக்களிடைய ஒருவித பய உணர்ச்சியையும், பிரம்மிப்பையும் உண்டாக்குவதே அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் நோக்கமாகும். அது மட்டுமின்றி, ஆசிய பகுதியில் பொருளாதார ரீதியாக பலம் பெற்று வரும் சீனாவை தங்களது யுத்த தந்திர எதிரியாக குறி வைத்திருக்கும் அமெரிக்கா, தன்னுடைய புதிய இராணுவ கூட்டணியின் பலத்தை உணர்த்தும் முகமாகத்தான் இந்த பயிற்சியில் ஈடுபட உள்ளது.மேலும் பயிற்சியில் ஈடுபட உள்ள கடல் எல்லை என்பது வர்த்க ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரமான பகுதியாகும். தற்போது 94,000 கப்பல்கள் இந்த கடல் வழிப் பகுதியில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளது. எதிர் காலத்தில் இது 1,41,000 ஆக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. உலகில் நான்கில் ஒரு பகுதி எண்ணெய் வளம் இந்த கடல் வழியாகத்தான் கொண்டுச் செல்லப்படுகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கடல் எல்லையில் அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகளோடு இணைந்து கடற் பயிற்சியில் ஈடுபடுவது, நம்முடைய கடல் வழி உட்பட, யுத்த தந்திர ரீதியாக நம்முடைய கடற் பாதுகாப்பிற்கு எதிர் காலத்தில் இது அச்சுறுத்தலாக அமையும். இதனை நமது ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவர்களின் கவலையெல்லாம், இந்த கூட்டுக் கடற் பயிற்சிக்கு எந்தவித பங்கமும் வந்து விடக் கூடாது என்பதில்தான் கண்ணும் - கருத்துமாய் உள்ளனர். இது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறும்போது, “இந்த கடற் கூட்டுப் பயிற்சி ஏதாவது ஒரு காரணத்தால் நிறுத்தப்படுமேயானால் அது சர்வதேச அளவில் இந்தியாவின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தாது என்று கூறுகிறார்” இவர்கள் பணியாற்றுவது இந்திய மக்களுக்கா? அல்லது அமெரிக்க எஜமானர்களுக்கா என்பதே புரியவில்லை!மேலும், இந்திய - அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளுக்கு எதிரானது என்பதை இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. கடந்த வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ஈராக்கில் நம்முடைய இராணுவ வீரர்களை பணியாற்றுவதற்கு அனுப்புவதற்கு எல்லா விதத்திலும் இசை தெரிவித்த பா.ஜ.க. பின்னர் நாடு முழுவதும் இதற்கு எதிராக எழுந்த கண்டன குரல்களைத் தொடர்ந்து பின்வாங்கியது நினைவுறுத்தலாம். எனவே இந்த ஒப்பந்தம் என்பது அமெரிக்க அரசியல் நலன் சார்ந்த ஒன்று; அவர்களது நலனை காப்பதற்காக எந்த நாட்டோடும் அவர்கள் மோதும் போது இவர்களின் இளைய மற்றும் இனிமையான கூட்டாளியாக இந்தியாவை மாற்றுவதுதான் அமெரிக்காவின் நோக்கம்.
குறிப்பாக, இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக “இரு நாடுகளும் புது யுகத்தில் நுழைந்துள்ளதாக அமெரிக்கா புகழ்ந்துரைத்துள்ளதோடு, இரு பெரும் ஜனநாயக நாடுகளும் இதன் மூலம் அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரம் - ஜனநாயக கூறுகள் - இராணுவம் - பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் உலகளாவிய வாய்ப்புகளை பயன்படுத்திட உறுதி பூண்டுள்ளதாக கூறுகிறது.”
அமெரிக்க ஜனநாயகம் எத்தகையது என்பதை உலகம் நன்கு அறியும். ஈராக்கிலும், ஆப்கானிலும் அவர்கள் எவ்வாறு ஜனநாயகத்தை நிலை நாட்டினார்கள்? இத்தகைய ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அந்தந்த நாடுகளின் இறையாண்மையை தங்களது காலில் நசுக்கி கபளிகரம் செய்ததோடு, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்து அவர்களின் பிணங்களின் மீது ஏறி நின்று அமெரிக்க ஜனநாயக சுதந்திர கொடியை பறக்க விட்டுள்ள கதை உலகம் முழுவதும் நாறிக் கொண்டுள்ளது. இத்தகைய கொலைகார கூட்டத்தோடு, இந்தியாவும் இணைந்து நின்று ஜனநாயகத்தை காக்கப்போகிறதாம்!
அமெரிக்காவின் தற்போதைய ஜனநாயக விரிவாக்கம் ஈரான் துவங்கி, வடகொரியா, சிரியா, கியூபா, வெனிசுலா என பட்டியல் போட்டு இந்த அசுரர்களை நசுக்க வந்த மகா அசுரனாக வேடம் தரித்துள்ளது அமெரிக்கா. தற்போது இவர்களின் கண் ஆசியப் பகுதியில் சீனாவின் மீதும் விழுந்துள்ளது. இவர்களோடு கூட்டுச் சேர்ந்துள்ள எந்த நாடாவது நிம்மதியாக வாழ்ந்தது உண்டா?இது தவிர உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் உலகு தழுவிய அளவில் தங்களது ஆக்டோபஸ் கால்களை பதித்து வரும் அமெரிக்காவோடு கூட்டுச் சேர்ந்து பயங்கரவாதத்தை எதிர்க்கப்போவதாக இந்த ஒப்பந்தம் கூறுகிறது!
மேலும், இரு நாடுகளும் தங்களது இராணுவ ரீதியான வர்த்தகத்தை விரிவாக்குவது என்றும் குறிப்பிடுகிறது. இந்தியா அமெரிக்காவுக்கு எத்தகைய ஆயுதத்தை வியாபாரம் செய்யப்போகிறது என்று நமக்குத் தெரியவில்லை! அமெரிக்காவின் ஒரு வழி வியபாரா நோக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துவதுதான் இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சம். குறிப்பாக இந்தியாவுக்கு பேட்ரியாட், எப் - 16, எப் - 18 போன்ற ஏவுகணைகளையும், இலகுரக விமானங்களையும், இதர ஆயுதங்களையும் தலையில் கட்டுவதன் மூலம் 100 பில்லியன் டாலர்களை வரும் 15 ஆண்டுகளில் கறக்கலாம் என்பதோடு, இதனைப் பயன்படுத்தி ஆசியப் பகுதியில் ஒரு இராணுவ வியாபார போட்டியின் மூலம் குளிர்காய்வதும், அதன் மூலம் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி பாதுகாப்பதே அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது.
இவைகள் தவிர இரு நாடுகளும் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது மற்றும் தொழில் நுட்பங்களை பரிமாறிக் கொள்வது மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடுவது என இந்த ஒப்பந்தம் விரிவாக கூறிச் செல்கிறது.
இந்தியாவுக்கான ராக்கெட் மற்றும் அணு சக்தி தொழில்நுட்பத்தை தர மறுத்த நாடுதான் அமெரிக்கா என்பதை நாம் மறக்க முடியுமா? இந்த விசயத்தில் ஆபத்பாந்தவனாக ஓடி வந்து கிரியோஜினிக் என்ஜின்களை கொடுத்து நம்முடைய ராக்கெட் தொழில்நுட்பத்திற்கும், கூடங்குளத்தில் அணு மின் உலைகளை அமைப்பற்கும் வலுவூட்டியது முந்தைய சோசலிச சோவியத் ரஷ்யா என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டியுள்ளது.இறுதியாக, இதுபோன்ற இராணுவ கூட்டுப் பயிற்சிகளுக்கு பின்னே ஒளிந்துக் கொண்டுள்ள அமெரிக்காவின் உண்மையான நலன் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் 2006ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்திய - அமெரிக்க இராணுவ கூட்டிற்கு எதிரான கூட்டத்தில் வலியுறுத்தியதை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும்.
‘சர்வதேச அளவில் இத்தகைய இராணுவ கூட்டுப் பயிற்சிக்கான திட்டம் ஒன்று அமெரிக்காவில் உள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாறுகளைப் படித்தால், அங்கு எழுந்த, பல ஆயுதந்தாங்கிய கிளர்ச்சிகளை இப்படிப்பட்ட இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் மூலதான் ஒடுக்கினார்கள் என்பது தெரிய வரும். சிலி, பிரேசில், கவுதமாலா என்று பல நாடுகளில் இப்படித்தான் நடந்தது. ஒவ்வொரு நாட்டின் இராணுவ தளபதிகளும் அமெரிக்கா சென்று பயிற்சி பெற்றவர்கள்தான். அவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் தங்களது நாட்டிற்கோ, மக்களுக்கோ விசுவாசமாக இருப்பதைவிட பென்டகனுக்கே கூடுதல் விசுவாசத்தோடு செயல்பட்டார்கள் என்பது வரலாறு”
அமெரிக்காவோடு பயிற்சி பெறுவதற்கு முன்னரே வாசிங்டன் மீதான விசுவாசம் நமது ஆட்சியாளர்களுக்கு வசீகரமாகியுள்ளது! எaனவே இந்திய - அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்திய மக்களுக்கும் - உலக மக்களுக்கும் எதிரானது என்பதை பறைசாற்றுவதோடு, இதற்கு எதிராக மக்களை எழுச்சியூட்டுவதும், அமெரிக்க ஏகாதிபத்தியதிற்கு எதிராக செப்டம்பர் 4 முதல் 8 வரை நடைபெறும் பிரச்சார இயக்கத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதே நமது கடமையாகும்!
இது தொடர்பான முந்தைய கட்டுரைகள்
3 comments:
வாஷிங்டன் விசுவாசிகளை தாங்கிப் பிடிப்பது கம்யூனிஸ்ட்டுகள்தானே.
வீதியில் நின்று கத்துவதை விடுத்து ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளலாமே?
சீனாவிலிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லையா?இந்த ஆட்சியின் அனைத்து நிகழ்வுகளுக்கும் கம்யூனிஸ்ட்டுகள்தான் முக்கிய காரணம்.
சர்க்கஸில் வரும் கோமாளிபோல் ஆகிவிட்டது கம்யூனிஸ்ட்டுகளின் நிலைமை.
குப்பைத் தொட்டி இராவணன் தற்போதைய ஆட்சியாளர்கள் வாசிங்டன் விசுவாசிகள் என்பதில் சந்தேகமேயிலலை. ஆனால் இவர்களுக்கு பின்னால் அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போது காலியாகும் எனக் காத்திருக்கும் அத்வானி - பா.ஜ.க. வகையறாக்கள் அமெரிக்காவின் அடிமைகள். அதனால்தான் இந்த 123 ஒப்பந்தம் குறித்து தினம் ஒரு பல்டி அடிக்கிறார்கள். தேபற்றுள்ள மற்றும் தேசத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் ஆட்சியாளர்களாக வரும் வரை இவர்களுக்கு எதிரான போராட்டத்தை உங்களைப் போன்ற குப்பைத் தொட்டிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. நீங்கள் எல்லாம் இவர்களின் முகமூடியை கிழிக்க இரவணனாக மாறிவிட்டால் அப்புறம் என்ன நீங்கள்தான் தேச பற்றுள்ள ஆட்சியாளராக மாறும் வாய்பு. அது சரி இடதுசாரிகள் இப்போதும் எந்த நாட்டுக்கும் வால் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் அல்ல. சர்வதேச அளவில் உழை:ககும் வர்க்கத்தை நேசிக்கும் அதே நேரத்தில் இருக்கின்ற தேசத்திற்கும் அதில் தொழலாளர்கள் - விவசாயிகள் மற்றும் மக்கள் நலன் காப்பதற்காககவும் அயராது உழைப்பவர்கள். எனவே அந்த அடிப்படையில்தான் இந்த 123யை அணுகுகிறோம். தங்களது பார்வை அடிப்படையில் கோளாறு கொண்டதாக உள்ளது. மாற்றிக் கொள்ளவும்.
Good Article
Rohan
Singapore
Post a Comment