August 14, 2007

என் நினைவில் நின்ற சுதந்திர தினங்கள்!

60வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் இவ்வேளையில் என்னுடைய சிறு வயது முதல் நினைவில் நின்ற ஒரு சில சுதந்திர தின நினைவுகளையே இங்கே பதிவிட்டுள்ளேன். இது ஒரு சுயபுராணமே!
அநேகமாக எனக்கு 6 அல்லது 7 வயதிருக்கும். என்னுடைய அப்பா (கே. கண்ணன்) எங்கள் வீட்டின் வாசலில் கொடி கம்பத்தை நாட்டி, சுதந்திர தின கொடியேற்றுவார். அவர் ஆரம்பகால காங்கிர° இயக்க ஆதரவாளர் என்றாலும், காங்கிர° கட்சியின் சார்பில் நடைபெறும் இத்தகைய விழாவில் கலந்து கொண்டது இல்லை. ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டு வாசலிலேயே கொடியேற்றுவார். அந்த சுதந்திர தின கொடிக்கம்பம் நான்கு ஐந்து ஆண்டுகள் எங்கள் வீட்டு வாசலிலேயே இருந்தது. இதுதான் என்னுடைய அரசியல் ஈடுபாட்டின் துவக்கம். எனக்கு அப்போது எந்த கட்சியும் தெரியாது. காங்கிர° என்ற பெயரும் - சுதந்திர கொடி மட்டுமே தெரியும். இத்தகைய சுதந்திர நாளில் காலையில் எழுந்து குளித்து விட்டு, கொடியேற்றி, மிட்டாய் கொடுப்பதில் அலாதி பிரியம் இருக்கும். அப்போது கலர் கலரான கொஞ்சம் பெரிய சைசான ஆரஞ்ச் மிட்டாய்தான் பேம°. அதைதான் நாங்களும் கொடுப்போம்.
அதற்கடுத்த ஆண்டுகளில் எதிர் வீட்டில் இருக்கும் தற்போதைய சக தோழர் குப்பனுடன் இணைந்து கொடி ஒட்டுவது, தோரணம் கட்டுவது, °டார் செய்வது என என்னுடைய வேலைகள் தொடர்ந்தது.
அடுத்து, நாள் படித்த பள்ளியில் தூய சின்னப்பர் மகாஜன மேல்நிலை பள்ளி (அப்போது 8ஆம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது) அநேகமாக நான் 5வது படிக்கும் போது என நினைவு. காலையில் அனைத்து மாணவர்களையும் ஒரே இடத்தில் குழுமச் செய்து, லெப்ட் - ரைட் - அட்டேன்சன் எல்லாம் போடச் சொல்லி பிறகு வெட்ட வெளியில் - நல்ல வெயிலில் உட்காரச் செய்து பாடல், நாடகம், கொடியேற்று நிகழ்ச்சி, உரை நிகழ்த்துவது என நடக்கும். அந்த நேரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய நாடகம் என்னை மிகவும் கவர்ந்தது. இதுபோன்ற வாய்ப்பு நமக்கும் தரமாட்டாங்களா என்ற நினைப்பும் இருந்தது. அது தவிர அங்கே மேடையில் பேசுபவர்களைப் பார்த்து இதுபோல் நாமும் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டது உண்டு. இப்போ என்னாங்கீறிங்களா.... அரசியல் பேச்சாளர்தான்...
அதேபோல் எங்கள் வீட்டருகே ஒரு இலவச டியூசன் சென்டர் இருந்தது. இந்த டியூசன் சென்டரிலும் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவாங்க... அப்ப நானும் நாடகத்தில் ஏதோ ஒரு பாத்திரத்தில் நடித்தேன். அது தவிர யோகாவும் மேடையில் குரூபாக்க செய்து காண்பித்ததாக ஞாபகம் இருக்கிறது. அந்த டியூசன் சென்டர் மறக்க முடியாதது. என்னுடைய அப்பா இறந்த செய்தியை கூட அந்த டியூசன் சென்டரில் இருந்தபோதுதான் எனக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது எனக்கு வயது 11. (அது ஒரு ஆக்சிடெண்ட்) சுதந்திர தினத்திற்கு இரண்டு நாளைக்கு முன், அதாவது ஆக°ட் 13, 1981.
அதற்கு பிறகு வந்த சுதந்தர தின பங்கெடுப்புகள் எதுவும் நினைவில் நிற்பதாக இல்லை. பின்னர் நான் +2 முடித்த பிறகு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்தேன். எனக்கு அப்போது வயது 17. அதற்கு பிறகு வாலிபர் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தேன்.
அப்போது 1989ஆம் ஆண்டு சுதந்திர தின நாளில் இரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அது எழும்பூரில் உள்ள பெண்கள் மேல் நிலைப் பள்ளி - நல்ல கொட்டும் மழையில் நானும், சகதோழர் கே. ராமமூர்த்தி, எம். முகமது அலி ஆகியோர் இரத்ததானம் செய்ய வந்தோம். கிட்டத்தட்ட 2000த்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் கலந்து கொண்டனர். இரத்ததானம் செய்வதற்கு கொட்டும் மழையிலும் கூட்டம் முந்தியடித்துக் கொண்டு - போட்டிப் போட்டுக் கொண்டு ஒரு விதமான அர்ப்பணிப்பு உணர்வுடன் வந்திருந்தனர். இதில் பல பேர் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நானும் - ராமமூர்த்தியும் இரத்ததானம் செய்தோம். ரத்ததானம் செய்து விட்டு எழுந்து நிற்கும் போது சற்று மயக்கம் வந்தாற்போல் இருந்தது. அப்புறம் சரியாகி விட்டது. ரத்ததானம் செய்து விட்டு, அதை வீட்டுக்கு சொல்ல மாட்டோம். திட்டுவார்கள் என்ற பயம். அதுவும் எங்க அம்மா ரத்ததானம் செய்து விட்டு வந்திருக்கேன் என்றால் அழவே செய்து விடுவார்கள். ‘ஏன்டா நான் ஊட்டி ஊட்டி வளக்கிறேன்... நீ போய் இரத்தத்த கொடுத்துட்டு வந்துட்டீய...” என்று பாசத்தோடு திட்டுவார்கள் என்ற பயம். அதனால ரத்ததானம் செய்த அடையாளத்தை மறைப்பதற்காக கையில் ஒட்டியிருந்த பாண்டேசை பாதி வழியிலேயே கழட்டி எறிந்து விட்டோம். அப்புறம் பல பேருக்கு ரத்தம் கொடுத்துருக்கிறோம்.
அதற்கு அடுத்த வருடத்தில் எங்கள் பகுதி, திருவொற்றியூரிலேயே ரத்ததானத்திற்கு முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்த முகாமிலும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது சகதோழர் எம். முகமது அலியின் தங்கை மைதீன் ரத்ததானம் செய்தது எங்களுக்கு வித்தியாசமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது. அதுவும் ஒரு இசுலாமிய பெண் என்ற உணர்வு வேறு. அந்த முகாமில் இரத்ததானம் குறித்த நாடகம் ஒன்று விடியல் கலைக்குழு சார்பில் நடத்தப்பட்டது. அதை பார்க்கும் யாராக இருந்தாலும் இரத்ததானம் செய்ய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும்.
அதற்கு அடுத்த சுதந்திர தினம் ஒன்றில் (வருடம் சரியாகத் தெரியவில்லை) வாலிபர் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விளையாட்டு போட்டி நடத்தினோம். இதில் திருவொற்றியூர் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வாலிபர்கள் கலந்து கொண்டனர். அப்போது சக தோழர் அருண், இவர் கராத்தே பிளாக் பெல்ட் மற்றும் ஓட்டப் பந்தய வீரர். இருப்பினும் என்ன, நடைபெற்ற போட்டியில் நானும் கலந்து கொண்டு ஓடினேன் நான்காவது இடம் கிடைத்தது. அதை எல்லோரும் பாராட்டினர். வீரர்களுக்கு நடுவே நீ நல்லாதான் ஓடினேன் என்று... அன்று நடைபெற்ற அத்தனை நிகழ்ச்சிகளும் மிகவும் பசுமையானது.
அதற்கு பிறகு அறிவொளி இயக்கத்தில் பணியாற்றியபோது பள்ளி மாணவர்களை வைத்து சுதந்திர தின விழாக்களை கொண்டாடியதும் பசுமையான நினைவுகளாய் நினைவில் நிற்கிறது.
தற்போது நான் சி.பி.ஐ.எம். முழுநேர ஊழியராக பணியாற்றும் அலுவலகத்தில் வருடந்தோறும் நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டாங்களில் கலந்து கொள்வது தொடர்ந்த நடைபெறுகிறது. இதில் பாரதியார் பாடல் முதல் சுதந்திர பாடல்கள் வரை கர்நாடிக் பின்னணி இசையோடு பாடும் பீட் கலைஞர்களின் குரல் என்னை கவர்ந்துள்ளது. அத்தோடு சுதந்திரப் போராட்ட வீரர் என். சங்கரய்யா போன்றவர்களோடு கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவைகள் இனிமையான நிகழ்சிகள். நாளைக்கும் தோழர் என். சங்கரய்யாதான் எங்கள் அலுவலகத்தில் கொடியேற்றுகிறார். முடிந்தால் அவருடந் ஒரு புகைப்படம் எடுத்து அதை நமது பதிவர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

சாரி இறுதியாக இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...
50வது சுதந்திர தினத்தை சிறப்பாக நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடி தருணத்தில், நாங்களும் குறைந்தது 30 பேருக்கும் எங்கள் பகுதியில் சரியாக இரவு 12 மணியளவில் சுதந்திர தின தியாகிகளை நினைவு கூர்ந்து கோஷம் போட்டு சென்றது. அதில் சங்கர் தி.மு.க.வில் எங்களில் பகுதியில் இருந்த என்கின்ற இளைஞரும் உற்சாகமாக கோஷம் போட்டு வந்தார். அப்போதைய சேர்மன் விசுவநாதன் வீட்டருகே நின்று மிக சத்தமாக கோஷம் போட்டு விட்டு வந்தோம். சில நேரங்களில் இதுபோன்ற விஷயங்கள் அந்த நேரத்தில் பெரும் உணர்ச்சிகளை ஏற்படுத்தியது உண்டு.


உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளலாமே....

No comments: