பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் 2011 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைத்திடவும், 2016இல் பா.ம.க. தலைமையிலான ஆட்சியமைத்திடவும் சபதமேற்றுள்ளார். அவரது விருப்பத்திற்கு யாரும் குறுக்கே நிற்க முடியாது.
இதற்காக பல்வேறு சாகசங்களை டாக்டர் ராமதாஸ் சமீப காலத்தில் புரிந்து வருகிறார். மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்ட கட்சியாக பா.ம.க.வை முன்னிறுத்த படாதபாடுபடுகிறார். தாமிரபரணி தண்ணீர் பிரச்சனை, டைடானியம் தொழிற்சாலை, சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கல்வி கட்டணம், மது ஒழிப்பு என பல முனைகளில் அதிரடி அரசியலை நடத்தி வருகிறார். மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக நாள்தோறும் ஏதாவது ஒரு ஆர்ப்பாட்டத்திலும் முகம் கொடுத்து வருகிறார்.
இருப்பினும் இராமதாசின் கண்ணுக்கு புலப்படாத பிரச்சனையாக இருப்பது இரயில் பயணிகள் பிரச்சனை மட்டுமே! அவரது கட்சியை சார்ந்த இரா. வேலு இணையமைச்சராக உள்ள இரயில்வே துறையில் கடந்த ஒரு மாதமாக பல லட்சம் பயணிகள் அவதிப்பட்டு, வேறு வழியில்லாமல் சென்னை புறநகரில் நாள்தோறும் ஏதாவது ஒரு வழியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் ஆண்கள் - பெண்கள் - அலுவலகத்திற்கு சொல்வோர் - மாணவர்கள் - கூலித் தொழிலாளிகள் - கூடை வியாபாரிகள் என பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
15 லட்சத்திற்கு அதிகமான பயணிகள் சென்னை மற்றும் புறநகர் இரயில்களில் நாள்தோறும் பயணிக்கின்றனர். இரயில்களை இயக்குவதில் ஏற்பட்டுள்ள நிர்வாக கோளாறு மற்றும் போதுமான இரயில்கள் இயக்கப்படாதது போன்ற பிரச்சனைகளே அடிப்படையானது. இதனை இரயில்வே நிர்வாகமும் - இரயில்வே அமைச்சரும் உணராமல் இருப்பார்களா? சாதாரண பயணிகளுக்கே தெரியும் இப்பிரச்சனைக்கு இதுவரை எந்தவிதமான தீர்வும் ஏன் காணப்படவில்லை?
மாறாக, இரயில்வே அமைச்சர் பயணிகளை ‘போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தனது அதிகார வர்க்க திமிர்த்தனத்தோடு மிரட்டியதோடு நிற்காமல், 30க்கும் மேற்பட்ட பயணிகளை கைது செய்து தனது அதிகாரத்தையும் வெளிக்காட்டியுள்ளார். இதில் 7 பெண்களும் அடங்குவர்.
இவர்கள் எல்லாம், ‘வேறு வேலையே இல்லாமல் இரயில் மறியல் செய்ய வந்தவர்களா?’ வேலைக்கு செல்வதற்காக வந்தவர்களை, உரிய நேரத்தில் இரயில்கள் இயக்கப்படாததால் பாதிப்புக்கு உள்ளானவர்கள். சம்பந்தப்பட்ட இரயில் நிலைய அதிகாரிகளின் அலட்சியத்தால் அவதியுற்றவர்கள். வேறு வழியே தெரியாத காரணத்தால் ஜனநாயக முறையில் எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதற்காக அவர்களை உள்ளே தள்ளிய இரயில்வே காவல்துறையின் செயல் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியதோடு, அவர்களது கையாலாகத தனத்தையே இது வெளிப்படுத்துகிறது.பல்லாயிரக்கணக்கான பயணிகளிடம் தங்களது வித்தையை காட்டாத இந்த வீணர்கள். வெறும் 30 பயணிகளிடம் காட்டியிருப்பது வேடிக்கையாக உள்ளது.
இரயில்வே காவல்துறை பல்லவரத்தில் மறியல் செய்து கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்பதோடு, இரயில் பிரச்சனைக்கு விரைந்து உரிய தீர்வினை காண பயணிகள் அமைப்புகளோடு விவாதம் நடத்தி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
2011 இல் ஆட்சி கனவில் உள்ள டாக்டர் இராமதாஸ் இரயிலில் பயணம் செய்யும் 15 லட்சம் குடும்பங்களை இதன் மூலம் பகைத்துக் கொண்டுள்ளார். ஓடி, ஓடி மற்ற விஷயங்களை நேரடியாக பாவையிடும் டாக்டர் ஐயா இந்த விஷயத்தில் தலையை பூமிக்குள் விட்டுக் கொண்டு இருப்பது ஏனோ?
டாக்டர் இராமதாசின் அரசியல் எல்லாம் மாநில அரசுக்கு எதிராகத்தானே ஒழிய மத்திய அரசுக்கு எதிராக எப்போதும் நடத்தியதே இல்லை. அட வேற என்னங்க... ரிலையன்ஸ் விஷயத்தில் ஆர்ப்பாட்டம் - கண்டனங்களை எழுப்பிய இராமதாஸ் அதனை அமலாக்கிய மத்திய அரசுக்கு எதிராக ஏதாவது போராட்டம் நடத்தினாரா? அங்கே போய் கையெழுத்து போட்டு விட்டு கமுக்கமாக உட்கார்ந்திருக்கும் பா.ம.க. இங்கே வந்து சவுண்டு விடுவது மக்களை உச்... உச்... உச்சென்று உச்... கொட்ட வைப்பதற்காக!
இப்போதும் அப்படித்தான் மத்திய இரயில்வே நிர்வாகத்துக்கு எதிராக ஏதாவது கண்டனத்தை இவர் எழுப்பியிருப்பாரா!ஒருவேளை 2011 நெருங்கும் போது இதை செய்வார் என எதிர்பார்க்கலாம்!
2 comments:
ராமதாஸ் ஒரு கேவலமான ஓட்டுப்பொறுக்கி என்ற உண்மை பல்லிளித்து விட்டதோ?
அட போங்கப்பா அய்யாவே எப்படி அம்மாவோட கூட்டு சேர்ந்து போராடலாம்னு யோசிச்சிக்கிட்டு இருக்காரு நீங்க வேற... கெளம்புங்கப்பா இல்ல உங்களயும் ஜெயில்ல போடுவோம்...
Thank you Thigilan
Post a Comment