August 14, 2007

சுதந்திர எண்ணங்களும் தென்காசி படுகொலைகளும்!

நெல்லை மாவட்டம். தென்காசியில் பட்டப்பகலில் காலை 10.00 மணியளவில் ஆறு பேர் ஓட. ஓட வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தை மட்டுமல்ல. தமிழகத்தையே உலுக்குகிறது.


மத மோதல்களே இந்த சம்பவத்தின் பின்னணியாக செயல்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரை படுகொலை செய்தவர்கள் இவரது நன்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படுகொலையை தொடர்பாக ஹனிபா மற்றும் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் அப்துல்லா இந்து மதத்திலிருந்து முஸ்லீமாக மதம் மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த சம்பவத்தை தொடர்ந்து தென்காசி நகர த.மு.மு.க. தலைவர் மைதீன் சேட்கானை அரிவாளால் வெட்டி படுகொலை செய்ய முயன்றனர். இதில் வெட்டுக்காயங்களுடன் அவர் தப்பித்து விட்டார்.


இந்நிலையில் இந்த தரப்பினருக்கும் இடையில் இன்று பட்டப்பகலில் நடைபெற்ற மோதலில் இருவரும் அரிவாள் மற்றும் வெடிகுண்டுகளுடன் மோதிக் கொண்டனர். இதில் ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் இரு தரப்பிலும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அது மத மோதலாக உருவெடுக்குமா என்ற அச்சமும் மக்களிடையே நிலவுகிறது.


தேசத்தின் 60வது சுதந்திர தினத்திற்கு ஒரு நாள் இருக்கும் நிலையில் ஆறு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரது உள்ளத்தையும் உலுக்கியெடுக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் 150வது ஆண்டு விழாவையும் சேர்த்து கொண்டாடி வரும் இவ்வேளையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்தி நாட்டின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான இந்துக்களும் - இஸ்லாமிய சகோதரர்களும் செய்த மகத்தான தியாகங்களை நினைவு கூறும் மகத்தான நிலையில் நெல்லை சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.


இச்சம்பவத்தின் தாக்கம் மேலும் பரவாமல் இருக்க அரசு உரிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தென்காசி நகர மக்களின் இயல்பான வாழ்க்கை திரும்புவதற்கு ஏற்ப அனைத்துக் கட்சி மற்றும் அனைத்த மதத் தலைவர்களைக் கொண்ட ஒற்றுமை ஊர்வலங்கள் உட்பட அனைத்துவிதமான நல்லிணக்க நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.


மத மோதலை தூண்டும் விதத்தில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கையினை அரசு எடுத்திட வேண்டும். சுதந்திரப் போரின் தியாகங்களை உரிய முறையில் இளைஞர்களுக்கும் - குழந்தைகளுக்கும் கொண்டுச் செல்ல வேண்டும். மத அடிப்படைவாத அமைப்புகளின் சீர்குலைவு நடவடிக்கைகளுக்கு இறையாகாமல் தடுத்திட மதச்சார்பற்ற - ஜனநாயக சக்திகள் விழிப்புடன் இருந்து மக்களை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


மேலும் கடந்த ஓராண்டாக தமிழகத்தில் தலை தூக்கியுள்ள சமூக விரோத செயல்களுக்கு எதிராக அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் தமிழக மக்களை அச்சத்தின் படியில் தள்ளியுள்தை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் இதுவே தமிழகத்தின் இன்றைய முதன்மையான தேவையாகிறது.



இது தொடர்பான இதர பின்னணி செய்திகளுக்கு:






No comments: