May 11, 2007

மண்ணை கவ்விய ராமர் அரசியல்!


உத்திரபிரதேச தேர்தல் முடிவு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது போலவே பகுஜன் சமாஜ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தன்னுடைய மக்கள் விரோத - மற்றும் வன்முறை அரசியலால் தனிமைப்பட்டு ஆட்சியை இழந்திருக்கிறது. இருப்பினும் சமாஜ்வாதி கட்சி இரண்டாவது இடத்தை பிடித்து தன்னுடைய செல்வாக்கை நிரூபித்திருக்கிறது.


அதே சமயம் காங்கிரஸ் கட்சி எந்தவிதமான கொள்கை நோக்கும் இன்றி முலாயமை எதிர்க்கும் அரசியல் நிலைபாட்டை மேற்கொண்டதும், உறுதியான இந்துத்துவ எதிர்ப்பு நிலைபாட்டை எடுக்காததும், அரசியல் முதிர்ச்சியற்ற - கவர்ச்சிதன்மையிலான ராகுல் - பிரியங்காவை மட்டுமே நம்பி ஆட்சி கட்டிலை பிடிப்பதற்கு நம்பாசையோடு காத்திருந்தது. உத்திரபிரதேசம் என்றாலே அது காங்கிரசுக்கு வாக்கப்பட்டது என்ற சூழ்நிலை எல்லாம் மாறிவிட்டதை கிஞ்சித்தும் கணக்கில் கொள்ளாத காங்கிரஸ் ஏற்கனவே இருந்த இடங்களில் சிலவற்றை இழந்து கரையொதுங்கிப் போயுள்ளது. மேலும், மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் விலைவாசி உயர்வு, உலகமய ஆதரவு கொள்கை, விவசாயம் சீரழிப்பு, வேலையின்மை மற்றும் அடிப்படை சுகாதாரம் போன்ற மக்களின் அத்தியாவசிய விஷயங்களுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்துவதும், குறைந்தபட்ச செயல் திட்டத்தை அமலாக்குவதிலிருந்து அமெரிக்க ஆதரவு நிலைபாட்டை பா.ஜ.க.வோடு இணைந்து எடுப்பது போன்றவற்றால் நாடு முழுவதும் காங்கிரஸ் மீது கடுமையான அதிருப்தி நிலவுவதைதான் பஞ்சாப், அசாம், உத்ராஞ்சல் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியது. உத்திரபிரதேச தேர்தல் முடிவும் மத்திய காங்கிரஸ் அரசின் தோல்வியை பறைசாற்றுவதாகவே உள்ளது. இனியாவது திருந்துமா அல்லது நான் புதைகுழிக்கு சென்றே தீருவேன் என்ற சபதமேற்று செயல்படுமா என்பதை பார்ப்போம்!


ராமர் அரசியலை வைத்தே கடந்த காலத்தில் மத்திய ஆட்சியைப் பிடித்ததைப்போல் தற்போதும் உத்திரபிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என சங்பரிவாரம் கனா கண்டு கொண்டிருந்தது. இதற்காக ராமர் பாலம் அரசியலை கையில் எடுத்துக் கொண்டு நாடு முழுவதும் பெரும் முக்கியத்துவத்தோடு தனது இழிவான அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டது பா.ஜ.க., அத்தோடு புதிய தலைவர் ராஜ்நாத் சிங் உத்திரபிரதேசத்தில் ராமருக்கு கோயில் கட்டுவோம் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தார். அதைத் தவிர மக்களிடையே மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் - விஷத்தனமான மதவாத அடிப்படையில் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு சி.டி. தயாரித்து விட்டு அரசியல் சந்தர்ப்பவாதத்தை மேற்கொண்டது. ஆரம்பத்தில் நாங்கள் தனித்தே ஆட்சியைப் பிடிப்போம் என்று கடை விரித்தவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் தனது குரலை மாற்றிக் கொண்டு, இறுதியில் கூட்டாட்சிக்கும் தயார் என்றெல்லாம் வாக்குறுதியளித்துப் பார்த்தார்கள்! இருப்பினும் என்ன! மக்களுக்கு ரொட்டியும், சாப்படும்தான் முக்கியமே தவிர ராமர் அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். மதவாத பா.ஜ.க.வின் மதவெறியைத் தூண்டும், உணர்ச்சிகளில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து போராடி வருவதன் எதிரிரொலிதான் பா.ஜ.க.வின் இந்த படுதோல்விக்கு அடிப்படை காரணம். இடதுசாரிகளைப் பொறுத்தவரை திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை வலியுறுத்தி வந்தது. உ.பி.யில் மதச்சார்பற்ற கட்சிகளின் வாக்குகள் பிரியக்கூடாது என்று! இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாதவர்கள் மண்ணைக் கவ்வியுள்ளனர். சங்பரிவாரம் மற்றும் பா.ஜ.க.வின் மதவெறி விஷத்தனத்திற்கு முற்றிலுமாக சவக்குழி தோண்டப்பட்டுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் உட்பட அனைத்திலிருந்தும் அதனை முழுமையாக வீழ்த்த வேண்டிய கடமை மதச்சார்பற்ற கட்சிகளுக்கு உண்டு.


தேர்தல் வெற்றியை ஈட்டியுள்ள மாயாவதி தலித் மக்களை முன்னிறுத்தி செயல்பட்டாலும், கடந்த கால அனுபவங்களில் இருந்து சிறந்த பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது. இங்கே ஓயாது கூப்பாடு போடு “மனு” அரசியலை மாயாவதி நிராகரித்து விட்டு, உத்திரபிரசேதத்தில் உள்ள பிராமணர்களுடனும், உயர்ஜாதி இந்துக்களுடனும், பிற்படுத்தப்பட்ட மக்களுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டு, மொத்ததில் உத்திரபிரதேச மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்தல் உத்தியை கையாண்டது அவருக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

மனுவாத அரசியலை கைகொண்டுள்ள பா.ஜ.க.கூட பெரும்பான்மையான உயர்ஜாதி இந்துக்களிடம் இருந்து தனிமைப்பட்டுள்ளதைத்தான் 40 இடங்களுக்கு மேல் அது இழந்துள்ள சீட்டுக்கள் காட்டுகிறது. மனுவாத சிந்தனைகள் எதிர்க்கப்பட வேண்டியதே! அதற்காக இதையே வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த பிராமணர்களை எதிர்க்கும் போக்குதான் நிலவுகிறது. மொத்ததில் இந்திய மக்களின் வாழ்வு சிறக்க எதிர்கால அரசியல் மதச்சார்பின்மை + மக்கள் நலன் சார்பு + குறுகிய பிராந்திய நலன் - ஜாதி - இனவாத நலன்கள் இவற்றுக்கு எதிரான அரசியல் கொள்கைகளே வெற்றிபெறும் இனியாவது திருந்துவார்களா நமது பங்காளிகள்! உழைக்கும் மக்களை மதவெறி மூலமோ, ஜாதிவெறி மூலமோ, இனவெறி மூலமே பிரிக்க முடியாது. அவர்களது வர்க்க ஒற்றுமையே அவர்களுக்கு பலம்! வாழ்த்துக்கள் மாயாவதி!

2 comments:

உடன்பிறப்பு said...

//மக்களுக்கு ரொட்டியும், சாப்படும்தான் முக்கியமே தவிர ராமர் அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்//

நல்ல கருத்துக்கள்

வெற்றி பெற்ற மாயாவதியை கழகத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்

சந்திப்பு said...

நன்றி உடன்பிறப்பு!

உடன் பிறப்பின் அடையாளம் மாற்றப்பட வேண்டியுள்ளது! கவனத்தில் கொள்க! வாழ்த்துக்கள் உங்களது எதிர்கால அடையாளத்திற்காக.