ஐக்கிய நாட்டு சபையில் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் ‘பெண்கள் முன்னேற்றம் குறித்த’ அரங்கில் பீகாரைச் சேர்ந்த தலித் பெண் திருமதி கிரிஜா தேவி அவரது சொந்த மொழியான போஜ்பூரியில் உரையாற்ற உள்ளார்.
பீகாரின் கிழக்கு சம்ப்ரான் மாவட்டமான மோத்திஹரியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் திருமதி கிரிஜா தேவி 125 கிராமங்களில் சாராய சாம்ராஜ்யத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.தலித் பழங்குடி சமூகத்தில் பிறந்த கிரிஜா தேவியின் வயது 59, முஷார் என்ற பழங்குடியினத்தை சார்ந்த இவர்களது உணவு பழக்கமே எலிகளை பிடித்து சாப்பிடுவதுதான்.
இந்த சமூகத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். இதனால் அனைத்து குடும்பங்களிலும் வறுமை தாண்டவமாடியது. கூலி வேலைக்கு சென்று வீடு திரும்பும் ஆண்கள் சாராயக் கடைக்கு சென்று தண்ணி போடாமல் வீட்டுக்கு வருவதே இல்லை.இந்த கொடிய போதை பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என தீர்மானித்த கிரிஜா பிரசாத் முதலில் தன்னுடைய கணவரை திருத்தும் பணியில் இறங்கினார்.
இவரது வழிமுறை மிகவும் வித்தியாசமாக இருந்தது. குடித்து விட்டு வரும் ஆண்களுக்கு மொட்டை போடுவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அத்துடன் நிற்காமல் சாராயக் கடைகளுக்கும், சாராயம் காய்ச்சும் இடங்களுக்கும் நேரடியாக சென்று அந்த கடைகளை அடித்து நொறுக்கினார். கிட்டத்தட்ட கடந்த ஐந்து ஆண்டு காலமாக விடாப்பிடியாக போராடியதன் விளைவு இன்றைக்கு 125 கிராமங்களில் சாராயத்தின் சுவடே இல்லாமல் போய்விட்டது.
மகாத்மாவின் அறைகூவலால் கூட சாதிக்க முடியாத விஷயத்தை கிரிஜா தேவி சாதித்துள்ளார். இவருக்கு எழுத படிக்கத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சேவை இத்துடன் நின்று விடாமல், பீகாரில் நிலப்பிரபுக்களிடம் கூலி விவசாயிகளாக வேலை செய்யும் விவசாயிகளுக்கு கூலி உயர்வு உட்பட, பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.
இவருக்கு உருதுணையாக ஆக்ஷன் எய்ட் என்ற அமைப்பும், வேறு சில தன்னார்வ அமைப்புகளும் செயல்பட்டுள்ளன. ஐக்கிய நாட்டு சபை கிரிஜா தேவியின் சேவையை பாராட்ட முன்வந்துள்ளதோடு, ஐ.நா. சபையில் உரையாற்றவும் அவரை அழைத்துள்ளது. இந்த தாயின் செயல்பாடு பெண்களிடையே ஏற்பட்டு வரும் விழிப்புணர்வை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
இவரது கிராமத்தில் ஒரு உயர்நிலை பள்ளியை அமைக்க வேண்டும் என்பதும், ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைக்க வேண்டும் என்பதும் இவரது ஆசை. இதற்காக மாநில முதல்வரை சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். கிரிஜா தேவி அந்த கிராமத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து போர்டு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது முஷால் சமூகத்தில் 99 சதவீதம் பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது! அனைவரும் கூலி வேலை செய்பவர்கள். நிலப்பிரபுக்களின் தயவிலேயே தங்களது வாழ்க்கையை ஓட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பவர்கள். இந்த மக்களுக்கு சொந்த நிலம் என்பதே இல்லை!
50 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் கல்வியறிவையோ, சிறிதளவிலாவது நிலத்தையோ, உத்திரவாதமான வேலையையே, சுhதார வசதியையோ ஏற்படுத்த முடியாதது சுதந்திர இந்தியாவின் தோல்வியைத்தான் காட்டுகிறது.
எந்த தலித் மக்களை பார்க்கக் கூடாது, தீண்டக்கூடாது, மலம் அள்ளுவதற்கு மட்டுமே பிறந்தவர்கள், நிலங்களில் உழைப்பதற்கு மட்டுமே பிறந்தவர்கள், பொது குளங்களில் ஆடு, மாடு, பன்றிகள் கூட தண்ணீர் குடிக்கலாம். ஆனால் தலித் மக்கள் குடிக்கக்கூடாது என்று விரட்டினார்களோ அப்படிப்பட்ட மக்களின் பிரதிநிதியாக திருமதி கிரிஜா தேவி உலக பெண்ணினத்திற்கே வழிகாட்டியாக திகழ்கிறார்! இவரது பயணம் வெல்லட்டும், சந்திப்பு வாழ்த்துகிறது! மலரட்டும் புதிய சமுதாயம்!
சுதந்திர இந்தியாவில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை இந்த தாயிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது!
11 comments:
சந்திப்பு,
இப்பத்தான் பார்த்தேன். ஒரு அருமையான பெண்மணியை பற்றி எழுதி உள்ளீர்கள்.
உண்மையில் இது மிகவும் போற்றப்படவேண்டிய சாதனை. கிரிஜா தேவி அம்மாவிற்கு என் வணக்கங்கள்.
(சிங்காரவேலர் பற்றி மிகவும் விளக்கமாக எழுதி உள்ளீர்கள்.நன்றி)
Good post
நன்றி முத்து, ஆதிரை, சாரா. இன்றைய சூழலில் இதுபோன்ற செய்தியை மிக விரிவாக எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
முத்து சிங்காரவேலர் குறித்த பதிவு என்னுடைய நன்பர் சுடலை முத்துவினுடையது. அவர் ஒரு பத்திரிகைக்கு அனுப்பியிருந்தால் உரிய காலத்தில் அது பிரசுரிக்கப்படவில்லை. எனவே, சந்திப்பில் அதை வெளியிட்டுள்ளேன். வாசிப்புக்கு நன்றி: தமிழகத்தின் மிக முக்கியமான தலைவர்களில் முன்னோடி சிங்காரவேலர். தமிழகத்தின் எதிர்கால ஹீரோவாக இருப்பார் என்று நான் அணித்தரமாக நம்புகிறேன்.
She has done a very good job which cannot be done even by educated persons nowadays
//ஐக்கிய நாட்டு சபையில் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் ‘பெண்கள் முன்னேற்றம் குறித்த’ அரங்கில் பீகாரைச் சேர்ந்த தலித் பெண் திருமதி கிரிஜா தேவி அவரது சொந்த மொழியான போஜ்பூரியில் உரையாற்ற உள்ளார்.//
நிகழ்ச்சி நாள் பிப்ரவரி 24 என்று நினைக்கிறேன். தினமணியில் (25-02௨006 என்று நினைக்கிறேன்) அவரின் பயணத்திற்கான பாஸ்போர்ட் கடந்த 25 ஆம் தேதிதான் கொடுக்கப்பட்டட்து என்பதால் தாழ்ந்த சாதியைச் சார்ந்த புரட்சிப் பெண்மனிக்கு உலக அளவில் கிடைக்கும் அங்கீகாரத்திற்கு வழக்கம் போல் மேல்சாதி ஆதிக்க வர்க்கம் திட்டமிட்டே பாஸ்போர்ட் கிடைப்பதை தாமதப் படுத்தியதாகத் தெரிகிறது. இதன் மூலம் அப்பெண்மணி ஐநா சபையில் பேசவில்லை என்பது வருத்தமான செய்தி.
மிகச்சிறந்த பெண்மணி. அவர் கல்வியறிவு இல்லாதவராக இருந்தும் எத்தனையோ கிராமங்களிலிருந்து குடியை வெளியேற்றியது மிகமிகப் பெரிய காதனை.
"நிகழ்ச்சி நாள் பிப்ரவரி 24 என்று நினைக்கிறேன். தினமணியில் (25-02௨006 என்று நினைக்கிறேன்) அவரின் பயணத்திற்கான பாஸ்போர்ட் கடந்த 25 ஆம் தேதிதான் கொடுக்கப்பட்டட்து என்பதால் தாழ்ந்த சாதியைச் சார்ந்த புரட்சிப் பெண்மனிக்கு உலக அளவில் கிடைக்கும் அங்கீகாரத்திற்கு வழக்கம் போல் மேல்சாதி ஆதிக்க வர்க்கம் திட்டமிட்டே பாஸ்போர்ட் கிடைப்பதை தாமதப் படுத்தியதாகத் தெரிகிறது. இதன் மூலம் அப்பெண்மணி ஐநா சபையில் பேசவில்லை என்பது வருத்தமான செய்தி"
நம்ம நாட்டு சார்பாக ஒரு தலித்தான் கிடைத்தாரா? அந்த மாதிரி ஆள் இருக்கிற 5 சதவிகிதத்திலே ஒன்று கிடைக்காதா?. விட்டுருவோமா? நல்லடியாருக்கு விளங்க மாட்டேங்குது.
நன்றி, சுல்தான், பொலிட்டிக்கலி-இன்கரெக்ட்-கை, நல்லடியார். இதுபோன்ற சாதனைப் பெண்களின் - புரட்சிகர செயல்களை நம் மக்களிடம் கொண்டுச் செல்வதன் மூலம் ஒரு சிறந்த முன்னுதாரணத்தை - தாக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்திட முடியும்.
அவரின் சாதனை பெரியது. நன்றி சந்திப்பு இங்கே பகிரந்தமைக்கு. அவரின் பாஸ்போர்ட் விடயம் வருத்தம் தருகிறது.
சாதனை பெண்ணை அறிமுகம் செய்த பதிவுக்கு நன்றி.
பீகார் மாநிலம் மற்ற மாநிலங்களைப் போல எப்பொழுது வளர்ச்சி பாதையில் செல்ல ஆரம்பிக்கும் என்று கவலையாக உள்ள நிலையில் இந்த பெண்மணி நம்பிக்கை அளிக்கிறார்.
நன்பரே இரண்டு மாதத்திற்கு முன் அம்மையார் கிரிஜா தேவியின் சாதனைக் குறித்தும், இதுபோன்றவர்களின் சேவை இன்றைக்கு இந்தியாவுக்கு தேவை... ஆனால் இந்த பதிவு அப்போது சரியான கவனிக்கப்படாமல் - பின்னூட்டம் கிடைக்காமல் இருந்தது. தற்போது நல்லடியார், குமரன், சுல்தான், செல்வநாயகி, பொலிட்டிக்கலி-இன்கரெக்ட்-கை மூலம் மீண்டும் இது புத்தூயிர் பெற்றுள்ளது.
தலித் தலைவர்களெல்லாம் - தலித் விரோத ஆதாய அரசியலுக்கு ஆட்பட்டிருக்கும் பின்னணியில், ஒரு தலித் பெண்மணி ஐ.நா. சபையால் கௌரவிக்கப்படுவதென்பது - ஐ.நா. சபையையே ஒரு படி உயர்த்தியுள்ளது. இதற்காக இந்த அம்மையாரின் சேவையை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்.
நன்றிகள் அனைவருக்கும்.
Post a Comment