February 09, 2006

பரித்ரானா: புதிய கட்சி - புது மாதிரியான கட்சி

அரசியல் என்றாலே சாக்கடை, எல்லாம் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள் என்று நம் வாய்கள் எப்போதும் முனுமுனுத்துக் கொண்டே இருக்கும். அரசியல் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் ஊழல் பேர்வழிகள், பொறுக்கிகள், அடிதடி பேர்வழிகள் உள்ள இடம். எனவே படித்தவர்கள் நாம் அரசியலில் ஈடுபடலாமா? ஐய்யய்யோ! கூடவே கூடாது. நமக்கு ஏங்க வீண் வம்பெல்லாம் என்று புலம்பி வருகிறோம்.

இதோ! பரித்ரானா வழிகாட்டுகிறது.

நம் இந்திய நாட்டில் ஆயிரக்கணக்கான அரசியல் கட்சிகளுக்கு இடையே புதிதாக தோன்றியிருக்கிறது பரித்ரானா. இந்த அரசியல் கட்சியை தோற்றுவித்தவர்கள் யார் தெரியுமா? நம்முடைய இந்திய நாட்டில் உயர் படிப்பு என்றாலே ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். என்று சொல்கிறோமே! அங்கே படித்த இளைஞர்கள் ஐந்து பேர் கூட்டாக இணைந்து இந்த அரசியல் கட்சியை தோற்று வித்துள்ளார்கள். பரித்ரானாவுக்கு வாழ்த்துக்கள்! 21ஆம் நூற்றாண்டுக்கான இந்திய அரசியல் கட்சி என்று என்று குறிப்பிட்டுள்ளனர். வளரட்டும் புதிய அரசியல் கட்சி!! செல்லட்டும் ஏழை மக்களிடம்... இது நமது முழக்கம்.

சரி! பரித்ரானாவின் அகில இந்திய தலைவர் டான்மே ராஜ்புரோகித், பாம்பே ஐ.ஐ.டியில் ஏரோபிக் துறையில் பி.டெக் பட்டம் பெற்றவர். இது தவிர அமெரிக்காவில் அதே ஏரோபிக் துறையில் எம்.எ°. பட்டமும், பொருளாதாரத்தில் எம்.எ°. பட்டமும் பெற்றுள்ளார். (ஐய்யோ... மலைக்காதிங்க...) இக்கட்சியின் துணை தலைவர் அஜித் அசுவால்யன் சுக்லா இவரும் பாம்பே ஐ.ஐ.டியில் எம்.டெக் பட்டம் பெற்றுள்ளார். இவர்களைத் தவிர மற்றவர்களும் ஐ.ஐ.டியில் பட்டம் பெற்ற இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சூழலில் இம்மாணவர்களின் முயற்சி வரவேற்கத்தக்கது. இம்முயற்சி வெற்றி பெறுமா? இவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? என்பது போன்ற ஆராய்ச்சி இப்போது தேவையில்லை என்று நினைக்கிறேன்.

இது போன்ற எழுச்சி நம்முடைய இந்திய நாட்டில் சுதந்திரப் போராட்டக் காலத்தில்தான் நடைபெற்றது. பிரிட்டன் சென்று வாலிபர்கள்தான் சுதந்திரப் போராட்டத்தின் அடிவேறாக திகழ்ந்தார்கள். இன்றைக்கும் இந்தியாவில் ஊழலற்ற தலைவராக திகழும் ஜோதிபாசு ஐ.சி.எ°. பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல தலைவர்கள் இருக்கிறார்கள்.

அரசியல் என்பது உலகின் மிக முக்கியமான துறை இத்துறையில் படித்தவர்களும் - பாமரர்களும் நிச்சயம் பங்கேற்க வேண்டும். வேடிக்கைப் பார்ப்பவராகவோ, வெறும் ஓட்டளிப்பவராகவோ, வாயடிப்பவராக இருப்பதை விட பங்கேற்பதே மிகச் சிறந்தது.

மக்களுக்கு தேவையான சிறந்த அரசியல் கட்சி எதுவோ! அது நிச்சயம் வரலாற்றில் இடம் பெறும். உலகையே குலுக்கி எடுத்த இட்லரின் இடமும், அவரது தத்துவங்களும் இன்றைக்கு புதைக்கப்பட்டு விட்டது. எனவே, தகுதியுள்ளது வெற்றி பெறும்.

வாழ்த்துக்கள் பரித்ரானா!

No comments: