அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்யை சிவப்புக் கம்பளத்துடன் வரவேற்க இந்திய அரசு ஆவலோடு காத்திருக்கிறது. மற்றொரு புறம் இந்திய இடதுசாரிகளும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களும், ஜனநாயக சக்திகளும், தேசபற்றுக் கொண்டோரும் புஷ்ஷே இந்தியாவுக்கு வராதே! திரும்பிப் போ! என்ற முழக்கத்துடன் எதிப்பு நடவடிக்கைக்காக திட்டமிட்டு வருகின்றனர்.
இச்சூழலில் புஷ் இந்தியாவின் அணு தொழில்நுட்பம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளதோடு, அணுசக்திக்காக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்°, ரஷ்யா போன்ற நாடுகளிடம் கையேந்தவேண்டும் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.இந்திய நாடு சுயேச்சையான அணுசக்தி கொள்கையை பின்பற்றி வருகிறது. மிக பாதுகாப்பான முறையில் அணுஉலைகளை இயக்கி மிக ஆக்கப்பூவர்மான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகிறது. இந்த அணு உலைகளில் இருந்து வரும் கழிவுகளை மறு செறிவூட்டலும் இந்தியா மிகப் பாதுகாப்பாக செய்து வருகிறது.
ஜார்ஜ் புஷ் இனிமேல் இந்தியா அணுகழிவுகளைப் பயன்படுத்தி மறுசெறிவூட்டலை செய்யக்கூடாது என்று கண்டித்துள்ளதோடு, இத்தகைய மறுசெறிவூட்டல் தொழில்நுட்பம் எங்களிடம்தான் இருக்கிறது. எனவே, மறுசெறிவூட்டலை மேற்கண்ட ஏகாதிபத்திய நாடுகளிடம்தான் இந்தியா செய்யவேண்டும் என்று புஷ் கூறியுள்ளார்?புஷ்ஷின் இந்த அத்துமீறிய செயலை இந்திய விஞ்ஞானிகள் கடும் கண்டனம் செய்துள்ளனர். இது இந்திய விஞ்ஞானிகளை கேவலப்படுத்தும் செயலாகும்.
புஷ்ஷின் இந்த கூற்றை மீறினால் இந்தியாவும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கழுகுக் கண் கீழ் இனிமேல் வரலாம்! அதையடுத்து பல்வேறு பொருளாதார தடைகள் உட்பட, இந்தியாவை ஐக்கிய நாடுகளின் சபைக்கும் இட்டுச் செல்லலாம் இதுவெல்லாம் வெறும் கற்பனை என்று நினைத்துவிட வேண்டாம்! அமெரிக்காவின் தொடர்ச்சியான மிரட்டலைத் தொடர்ந்து தற்போது அணுசக்தி விவகாரத்தில் நம்முடைய தொழில்நுட்பத்தை கேலிக்கூத்தாக்குவதோடு, அணுசக்தி தொழில்நுட்ப வல்லமை கொண்ட நாடாக இந்தியாவை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
புஷ் இத்துடன் நிற்காமல் “அணுசக்தி ஆற்றல் கொண்ட நாடுகளின்” புதிய கூட்டணியையும் ஏற்படுத்தியுள்ளார். (நம்முடைய தமிழக ஜனநாயக கூட்டணிகளுக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.)இத்தகைய பின்னணியில் ஜார்ஜ் புஷ் இந்தியாவுக்கு வருவது இந்திய பாதுகாப்பிற்கும், ஜனநாயகத்திற்கும், சுயாதிபத்தியத்திற்கும் முட்டுக்கட்டையாக விளங்கும்! எனவே மன்மோகன் சிங் அரசு ஜார்ஜ் புஷ் வருகையை உடனடியாக நிறுத்திட வேண்டும்.
இதுவே இந்திய மக்களின் எதிர்பார்ப்பு!நேற்று ஈராக்! இன்று ஈரான்! நாளை இந்தியா!