பிரதமர் - ஜனாதிபதி பதவிகள்
அந்நியருக்கு காண்ட்டிராக்ட் விடப்படுமா?
அந்நியருக்கு காண்ட்டிராக்ட் விடப்படுமா?
மத்திய அரசு சில்லவரை வர்த்தகத்தில் அந்நியர்கள் 51 சதவீதம் அளவிற்கு முதலீடு செய்வதற்கு அனுமதித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்திய நாட்டில் குளிர்பானத்துறை உட்பட பல்வேறு நுகர்வுப் பொருட்களிலும் - தொழிலகளிலும் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக நம்முடைய இந்திய நாட்டின் மொத்த குளிர்பான மார்க்கெட்டும் இன்றைக்கு பெப்சி- கோக் நிறுவனத்தின் கைக்கு தாவிவிட்டது. இதன் மூலம் இந்திய நாட்டில் குடிசைத் தொழிலாக இருந்த குளிர்பானத் தொழில் மூட்டைக் கட்டி பல ஆண்டுகள் ஆகிறது.
இதுமட்டுமின்றி தற்போது கோக்கும் - பெப்சியும் நம்முடைய குடிநீர் வளத்தை கொள்ளையடித்தும் வருகின்றனர். தாமிரபரணி - வைகை என இந்திய நாடு முழுவதிலும் உள்ள இயற்கைவளத்தை - குடிநீரை - நிலத்தடி நீரை சுரண்டி - கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர். இதற்கு நம்முடைய மத்திய மாநில அரசுகள் அமாம் சாமி போட்டு வருகின்றன.
தற்போது சில்லவரை வர்த்தகத்தில் அந்நியர் முதலீட்டை அனுமதித்தானது நம்முடைய இந்திய நாட்டில் உள்ள பல லட்கக்கணக்கான சில்லவரை வியாபாரிகளை ஊத்தி மூடச் செய்து விடும். தி. நகரில் ஒரு சரவணா ஸ்டோரை சமாளிப்பதற்கு முடியாமல் அங்கே உள்ள சிறு வியாபாரிகள் தத்தளித்துக் கொண்டு - வாழ்வா? சாவா என்ற போராட்டத்தை நடத்திக் கொண்டு வருகின்றனர். சரவணா ஸ்டோரில் காய், கறி முதல் கடுகு, மிளகு, உப்பு, சப்பு - புடவை, வேஷ்டி, நகைகள், பண்ட, பாத்திரங்கள்... இன்னும் எத்தனை இருக்கிறதோ அத்தனையும் ஏகபோகமாக்கப்பட்டு பெரும் வர்த்தகத்தில் ஈடுபடுவதால் தி. நகர் வியாபாரிகளின் பாடு திண்டாட்டமாக மாறி விட்டது.
இந்நிலையில் வால்மார்ட் போன்ற அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் நம்மூரில் கடை திறக்க ஆரம்பித்தால் அதோ கதிதான்! அரசு என்பது மக்களை காப்பதற்கா? அல்லது உலக முதலாளிகளையும் - உள்ளூர் முதலாளிகளையும் காப்பதற்கா? என்பதை மன்மோகன் சிங்தான் விளக்க வேண்டும்.
அனைத்தையும் அந்நியருக்கு விட்டு, விடும் இந்த வெட்கம் கெட்ட அரசுகள் நாளைக்கு பிரதமர் - ஜனாதிபதி பதவிகளைக் கூட அந்நியருக்கு காண்ட்டிராக்ட் விடுவார்களா? என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இன்றைக்கு நம்முடைய பட்ஜெட்டை தயாரிப்பதே உலகவங்கியும், அமெரிக்காவும்தான் என்ற குற்றச்சாட்டு பலமாக உள்ள நிலையில் இத்தகைய கேள்வி எழுவது நியாயமே!
இன்றைக்கு தேவை இன்னொரு காந்தியும், வலுவான சுதேசி இயக்கமும், புதிய மாற்றத்திற்கான சுதரந்திரப்போராட்டமுமே!
No comments:
Post a Comment