‘குடி’ மக்களால் ஆளப்படும் அரசு!
தமிழக சட்டமன்றத்தின் இறுதி கூட்டத் தொடர் வழக்கம் போல் ஜெயலலிதாவின் பல்லவி பாடும் கொலு மண்டபமாகவே காட்சியளிக்கிறது. இருப்பினும், அவ்வப்போது அதிமுகவினரே கேள்வி கேட்டு, அதற்கு மந்திரிகள் அளிக்கும் பதில்களில் இருந்து சில உண்மைகள் வெளிவரத்தான் செய்கிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் இந்த ஆண்டு ரூ. 5795 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளதாக ஓ. பன்னீர் செல்வம் புளகாங்கிதம் அடைந்துள்ளார். தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது என்று ஜெயலலிதா கூறுவது இதற்கும் பொருந்துமா?
2002-03ஆம் ஆண்டு ரூ. 2996 கோடி ரூபாயாக இருந்த டாஸ்மாக் வருமானம் தற்போது ரூ. 5795 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதில் இருந்து தமிழகத்தில் குடிமக்களின் எண்ணிக்கை எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது நாம் அறிந்து கொள்ளலாம்.
சுனாமி பாதித்த பகுதிகளிலும், வெள்ள நிவாரணத்திற்காகவும் அரசு ஒரு புறம் நிவாரணம் கொடுத்து விட்டு அதை டா°மாக் மூலம் பெற்றுக் கொள்கிறது என்று சாதாரண மக்கள் நகைப்பதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. டா°மாக் வருமான உயர்வு மூலம்.
இந்த குடி மக்களில் பெரும்பாலானோர் சாதாரண ஏழை - எளிய உழைப்பாளி மக்கள்தான். இவர்களை குடி மன்னர்களாக்கி, அவர்கள் மூலம் வருமானம் ஈட்டுவதில் அரசு பெருமைப்படலாம். ஆனால், பல வீடுகளில் அடுப்பு எரியாமல் போவதும், அந்த வீட்டு குழந்தைகளுக்கு கல்வி எட்டாக்கனியாக மாறிவருவதைப் பற்றியும் அரசுக்கு ஏதாவது கவலையுண்டா. இத்தகைய குடி மக்களில் எத்தனை சதவீதம் பேரின் வாழ்க்கை அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது என்பது குறித்து சட்டமன்றத்தில் விளக்குவார்களா?
சரி! டாஸ்மாக்கில் கிடைக்கும் வருமானம் குறித்து பெருமிதம் அடையும் அரசு அதில் பணிபுரியும் ஊழியர்களின் பணி நிரந்தரம் குறித்து ஏதாவது செய்ததா? சங்கம் வைக்கப் பார்க்கிறார்கள் என்ற தகவல் கிடைத்ததுமே அவர்களை மிரட்டும் வேலையில் அல்லவா அரசு ஈடுபடுகிறது?
டாஸ்மாக்கில் போலிகளும் உண்டு என்று கூறப்படுகிறது? இதன் மூலம் கிடைக்கும் வருமானம் எங்குச் செல்கிறது? யாருக்கு செல்கிறது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்!
ஒரு பக்கம் அரசு மது விற்பனை மூலம் தனியார் கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைத்ததை வரவேற்கலாம். ஆனால், அதன் மூலம் கிடைக்கும் தொகையை அரசு குறைந்தபட்சம் தமிழகத்தில் எழுத்தறிவின்மையை போக்குவதற்காகவாவது பயன்படுத்தலாம். இதற்காக மது அருந்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல; கல்வியறிவு கிடைக்கப்பெற்றாலே பெரும் பகுதி மக்கள் இதிலிருந்து விடுபடுவார்கள். இன்றைக்கும் தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் ஓராசிரியர் பள்ளிகளே செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கிராமப்புற - நகர்ப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்பது வெறும் பெயரளவிற்கே செயல்படுகிறது. இதை பலப்படுத்தலாம். மதுவின் மூலம் கிடைக்கும் தொகையை நேரடியக அந்த ஏழை - எளிய மக்களுக்கு கிடைக்கச் செய்வதே அரசு மக்களுக்கு செய்யும் தொண்டாக இருக்கும். இவர்களிடம் இதை எதிர்ப்பது சரியா?
மேலும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் ஏற்படும் குடும்பச் சீரழிவுகள் குறித்தும் பாப்புலர் நடிகர்களை வைத்துக்கூட அரசே திட்டமிட்டு படம் எடுத்து பிரச்சாரம் செய்யலாம்.
குடிமக்களை காக்க அரசு இதை செய்யுமா? அல்லது எதிர்காலத்தில் ஆட்சியில் அமையப் போகிறவர்களாகவது இதைச் செய்வார்களா?
2 comments:
பெருமாள்,
தனியார் சாராய முதலாளிகளுக்கு போய் கொண்டிருந்த பணம் அரசாங்க கஜானாவிற்கு வருவது வரவேற்க தக்கது என்பது ஒரு உண்மை.
முழு மதுவிலக்கு சாத்தியம் இல்லை என்றால் கள், சாராயக்கடையை அனுமதித்தால் என்ன? குவார்ட்டர் செலவு குறையுமே?
முத்து! தாங்கள் சொல்வதும் சரிதான்! மொத்தத்தில் மக்கள் பணம் மறு உருவம் பெற்று அது மக்களுக்கே பயன்பட வேண்டும் என்ற ஆதங்கம் தவிர வேறு எதுவும் இல்லை!
எனக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தங்கள் பதிவு உட்பட முக்கியமான பதிவுகள் எதையும் வாசிக்க இயலவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் பழைய நிலைக்கு வந்து விடுவேன். முத்துக்குமரனின் நட்சத்திர பதிவு, யோகா, டோண்டுவின் கோட்சே, தங்களின் வம்பு, வள்ளுவர் கோட்டம், இலக்கியத்திற்கான நோபர் பரிசு உட்பட வாசிக்க வேண்டியுள்ளது.
தங்களது தேர்தல் பதிவு என்ன ஆச்சு!
Post a Comment