சித்தப்பா அவருடைய புதிய வீட்டிற்கு வரும்படி கூறியிருந்தார். வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில் போகலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஏதாவது புதிய வேலைகள் வந்து தடுத்துக் கொண்டே இருந்தன. எப்படியோ இந்த ஞாயிற்றுக் கிழமை போய் விடுவது என்று முடிவு எடுத்து சித்தப்பா வீட்டிற்கு புறப்பட்டேன்.
அவரது வீடு காட்டாங்கொளத்தூரில் இருக்கிறது; சரியான முகவரி கூட தரவில்லை என்று வருத்தம் இருந்தாலும், அதெல்லாம் அவருக்கு தெரியாது என்றே சொல்ல வேண்டும். எப்படியோ தெருவின் பெயரை மட்டும் சொல்லியிருந்தார். கூடவே அடையாளத்திற்கு இரண்டு பேரின் பெயர்களையும் கொடுத்திருந்தார்.
சென்னை கடற்கரையில் இருந்து காட்டாங்கொளத்தூர் செல்வதற்கு புறநகர் ரயிலில் ஏறினேன். வழக்கமாக ரயிலில் செல்லும் போது புத்தகம் படிப்பது வழக்கம். அன்று, புதிதாக வந்திருக்கும் ஜார்ஜ் தாம்ஸனின் “சமயம் பற்றி” என்ற புத்தகத்தை வாசிப்பதற்காக எடுத்துக் கொண்டேன்.
புறநகர் ரயில் புறப்பட்டதும் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். ஐந்தாறு பக்கங்கள் தாண்டியிருக்கும் புத்தகத்தில் கூறியிருந்த விஷயங்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே சிந்தனையை திசை திருப்பிக் கொண்டே இருந்தது. ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால், சரவணா °டோர்ஸூக்கு படையெடுக்கும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டே இருந்த மூளை, தானே ஓய்வு எடுக்கத் துவங்கி விட்டது; கொஞ்ச நேரத்தில் கண்கள் சொக்க ஆரம்பித்து விட்டது. கையில் இருந்த புத்தகமும் இரண்டு முறை கீழே விழுந்து விட்டது. கை நழுவி விழுந்தது போல் பாசாங்கு செய்து கொண்டாலும், தூக்கம் வருகிறது என்பதை மறைக்க முடியவில்லை.
சரி, இப்போதைக்கு தூங்குவோம்; திரும்பி வரும் போது புத்தகத்தை படித்துக் கொள்ளலாம் என்று மூடி வைத்து விட்டேன். தாம்பரத்தை ரயில் நெருங்கும் போதுதான் தூக்கம் கலைந்தது.
தாம்பரம் பிளாட்பாரத்தில் வண்டி நுழைந்துக் கொண்டிருக்கும் போதே, செங்கல்பட்டு வரை செல்லும் அடுத்த வண்டித் தொடர் 9 வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் என்ற அறிவிப்பு ஒலித்துக் கொண்டே இருந்தது. பயணிகள் முண்டியடித்துக் கொண்டு வண்டியை பிடிப்பதற்கு ஓடத் துவங்கினர். நானும் நடையை வேகப்படுத்தினேன். டிரைவர் வண்டி புறப்படுவதற்கான ஹாரனை ஒலித்துக் கொண்டே இருந்தார். வேகமாக சென்று வண்டியை பிடித்துக் கொண்டேன்; வாசற்படியில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் உள்ளே சென்றதும் இரண்டு இருக்கைகள் இருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டேன்.
வண்டி மெதுவாக புறப்பட ஆரம்பித்தது. 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி ‘இது தாம்பரம் போகுமா?’ என்று கேட்டார். “இது தாம்மா... தாம்பரம்” என்றவுடன் சுதாரித்துக் கொண்டு, ‘எக்மோர் போகுமா?’ என்று கேட்டார். பரிதாபமும், அறியாமையும் என்னை உறுத்தியது. ஐயோ! இது செங்கல்பட்டு போகுதும்மா? நீங்க அந்த பிளாட்பாரம் போங்க என்று கூறும் முன்னே வண்டி கொஞ்சம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. ஓடும் வண்டியில் இருந்து இறங்கி விடலாம் என்று அந்த பெண்மணி கூட்டத்தை விலக்க ஆரம்பித்தார்.
ஏம்மா, இப்ப இறங்காதீங்க! அடுத்த °டேஷனில் இறங்கி மாறி வந்துடுங்க என்று கூறினேன். சிறிது நேரத்தில் செங்கல்பட்டுக்கு செல்லும் மக்கள் அதிகமாக வரவே டிரைவரும் வண்டியை நல்ல மனதோடு நிறுத்தி விட்டார். எப்படியோ அந்த அம்மா கூட்டத்தில் இருந்து கீழே இறங்கிக் கொண்டார். ஒரு சின்ன பெருமூச்சு... இப்படியுமா?
அடுத்து என் சிந்தனை முழுக்க காட்டாங்கொளத்தூரையே நினைத்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் இருப்பவரை கேட்டேன் இன்னும் எத்தனை °டேஷன் என்று, பார்க்கும் போதே அவர் கிராமத்துவாசி என்று தெரிந்தது. அவரும் ஆர்வத்தோடும், பொறுப்போடும் கை விரலை விட்டு ஒவ்வொரு °டேஷனாக எண்ணி இன்னும் ஐந்து °டேஷன் இருக்குதுன்னார்.
அந்த சின்ன இடைவெளியில் திரும்பவும் புத்தகத்தின் மீது என் கவனம் சென்றது. ஓரிரு பக்கங்கள் தான் சென்றிருக்கும், இரயில் ஒவ்வொரு °டேஷனில் நிற்கும் போதும், காட்டாங்கொளத்தூர் ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது. கூட்ட நெரிசலில் கொட்டாங்குச்சியைத் தட்டி பிச்சை எடுத்துக் கொண்டு வந்தார் ஒரு முதியவர். இசை ரசிக்கும்படி இருந்தது. இருப்பினும் பல ஜெண்டில்மேன்கள் சோப்பையே பார்க்காத சட்டையைப் பார்த்து முகம் சுளிப்பதை பார்க்க முடிந்தது. வெள்ளரி பிஞ்சு விற்றுக் கொண்டு வந்தவரிடம் இரண்டு ரூபாயை நீட்டினேன் அவரும் பெரிய வெள்ளரிக்காயை நான்காக சீவி, உப்புப்போட்டுக் கொடுத்தார். உடலுக்கு நல்லது என்றாலும், அவ்வளவுப் பெரியதாக சாப்பிட மனம் ஒத்துவரவில்லை. அத்துடன் பக்கத்தில் ஐந்து °டேஷன் என்று அடையாளம் காட்டிய பெரியவருக்கு தராமலும் சாப்பிட முடியவில்லை. அவரிடம் கேட்டபோது, எனக்கு இதெல்லாம் ஒத்து வராதுங்க என்று கூறிவிட்டார்.
அதற்குள் காட்டாங்கொளத்தூரில் இரயில் நின்றது. ஐந்தாறு பேர் மட்டுமே அந்த °டேஷனில் இறங்கினர். இறங்கிய வேகத்தில் அவரவர் பாதையில் வேகமாக நடக்க ஆரம்பித்தனர். நான் கிழக்குப் பக்கம் போகலாமா? அல்லது மேற்கு பக்கம் போகலாமா? எப்படி போனால் ஈசியாக இருக்கும் என்ற முடிவுக்கு வராத நிலையில், அங்கு சிக்னலுக்காக கொடிகாட்டும் ஊழியரிடம் “வில்லியர் தெரு” எங்க இருக்குது என்று கேட்டேன். நான் இங்க புதுசுங்க நீங்க இரயில்வே கேட்டுக்கிட்டப் போய் கேளுங்க என்றார்.
எப்படியும் கண்டு பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு மேற்குபக்கத்தில் சென்ற வழித்தடத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அங்கு ஒரு சிறிய பங்க் கடை இருந்தது ஐந்தாறு பேர் இருந்தனர். 60 வயதை தொட்டிருக்கும் பெரியவரிடம் இங்க “வில்லியர் தெரு” எங்க இருக்குதுங்க! என்று கேட்டேன். அவர் ரொம்ப சத்தமாக ‘ஐய்யய்யோ! நான் இந்த ஊருக்கு புதுசுங்க நீங்க அவரைக் கேளுங்க’ என்றார். அவ்வளவு சத்தமாக அவர் பேசியது ஒரு மாதிரியாக இருந்தது. சரி கடைக்காரரிடம் கேட்டபோது, ‘இங்க அந்த மாதிரி ஊரே இல்லை’ என்றவர், ‘அது ரொம்ப தூரம் இருக்குது நீங்க இந்தப் பக்கம் போங்க’ என்று ஒரு வழியைக் காட்டினார்.
அவரது பேச்சில் நம்பிக்கை இல்லாமல் கிராமத்து தார் ரோட்டில் நடக்க ஆரம்பித்தேன். எதிரே பைக் ஒட்டிக் கொண்டு வந்த இளம் வாலிபரிடம் கேட்டேன். அவரும் இது இங்க இல்லைங்க ரொம்ப தூரம் இருக்குது நீங்க இப்படியே நீட்டா போங்க அங்க ஒரு கோயில் வரும் அங்கப் போய் கேளுங்க என்றார்.
ஒரு சின்ன நம்பிக்கையோடு நடைபோட ஆரம்பித்தேன். கிராமமாக இருந்தாலும், ஆங்காங்கே சிறு கடைகள் முளைத்திருந்தன. பாராளுமன்ற தேர்தலுக்கு எழுதிய சுவரெழுத்துக்கள் அப்படியே நிறம் மாறாமல் இருந்தது. கட்சிகளின் சின்னங்களை பல வண்ணங்களில் எழுதியிருந்தார்கள். அந்தப் பக்கத்தில் சின்ன நூலகம் ஒன்று மூடிய நிலையில் இருந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எப்படியோ அவர்கள் கூறிய அந்தக் கோவிலை அடைந்து விட்டேன். அங்கே மூலையில் மூன்று வாலிபர்கள் இருந்தார்கள். இவங்கதான் சரியான ஆள் என்று அவர்களை கேட்டேன். “இங்க வில்லியர் தெரு” எங்க இருக்குது என்று, “இங்க அப்படியொரு தெரு இல்லிங்க” என்றனர். ஒருத்தர் நின்னகரையில் இருக்குது என்றார், இன்னொருவர் காட்டூரில் இருக்குது என்றார்.
சரி, நீங்க யார் வீட்டுக்கு போகனும் என்றார்கள். சித்தப்பா சொல்லி வைத்த இரண்டு பேரை சொன்னேன். ராஜதுரை, ரங்கதுரை வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்குப் போகனுன்னேன். ஓ... அவங்க வீடா, அது நீங்க வந்த வழியே போய் ரயில்வே கேட்டை தாண்டி, அந்தப் பக்கம் போகனுங்க, ரொம்ப தூரம் இரண்டு கிலோ மீட்டர் இருக்கும். நீங்க ஏதாவது ஆட்டோவில் போய்டுங்க என்றனர்...
அவங்களுக்கு தேங்க° சொல்லி விட்டு திரும்பும் போது ஆட்டோ ஒன்று எதிர்பட்டது. அந்த வாலிபர்கள் பரிவோடு அதை நிறுத்தி, சவாரி இருக்கு போப்பா என்றனர்., “ஆட்டோ டிரைவர் நான் சாப்பாட்டுக்குப் போறேன்... இப்ப முடியாது என்று கூறி விட்டு, ஆட்டோவை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே போய் விட்டார்.” ஓகே. தேங்க°ங்க என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்தேன்.
அந்த வாலிபர்கள் ஆட்டோக்காரரை திட்டியது காதுகளில் விழுந்தது. வெய்யில் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. கொஞ்ச தூரம் நடந்திருப்பேன். அங்கு இருந்த ஒரு கடையில் “டிரிங்° இருக்குதுங்களா?” என்றேன் அந்த கடையில் இருந்த பெண்மணி கோல்டு °பாட் இருக்குது என்றார், அது வேண்டாம் என்றேன். பின்னர் பேன்டா இருக்குது என்றார். அதை வாங்கி குடித்து விட்டு, சரி அவரிடமும் இந்த ஊர் பற்றி கேட்கலாம், மக்கள் தொடர்பகமாக இருக்கிறதே என்று கேட்டேன். “வில்லியர் தெரு எங்க இருக்குது என்று” இங்க எதுவும் இல்லிங்க... என்று கூறியவர்... கடைக்கு வந்திருந்த மற்றொரு பெண்ணிடம், காலனியாளுங்க எல்லாம் அந்தப் பக்கம் தான் இருப்பாங்க என்று குறைந்த சத்தத்தோடு கூறினார்.
நாம் கேட்ட கேள்விக்கும், “காலனிக்கும்” என்ன சம்மந்தம் என்று யோசித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். சமூகத்தின் அடையாளங்களாக சாதியம் வேரூன்றி உள்ளதை அவரின் பேச்சு வெளிப்படுத்தியது.
எப்படியோ கொஞ்சம் தூரம் நடந்து ரயில்வே கேட்டை அடைந்ததும், மீண்டும் யாரையாவது கேட்டு கன்பார்ம் செய்து கொள்ளலாம். இல்லையென்றால், வேறு வழிக்கு சென்று விடுவோமோ என்ற அச்சத்தில், அங்கிருந்த °டுடியோ கடைக்காரரிடம் சென்று கேட்டேன். அவருக்கும் தெரியவில்லை, கடைக்கு வந்த நடுத்தர வயது கொண்ட வாலிபர் நீங்க யார் வீட்டுக்குப் போகனும் என்றார், நான் மீண்டும் ராஜதுரை, ரங்கதுரையை அடையாளப்படுத்தினேன். அவர்கள் வன்னியரா என்றார். இல்லீங்க சின்னதுரை ரெட்டியார்ன்னு சொன்னங்க... அவர் அதை செட்டியார் என்று புரிந்துக் கொண்டதால், செட்டியாரா? என்று விழி பிதுங்க கேட்கும் போதே... இங்க செட்டியார்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது... மீண்டும் அவரிடம் இல்லீங்க ரெட்டியார், நாயக்கர், வன்னியர் எல்லாம் ஒன்னாத்தான் இருக்கும் என்றேன்...
தலையை சொறிந்துக் கொண்ட அவர் பக்கத்தில் டீ கடையில் உள்ள ஒருவரை காட்டி, அவரிடம் கேளுங்க என்றார். கருத்த உருவத்தில் - வெள்ளை சட்டையில், முறுக்கிய மீசையோடு இருந்த பெரியவர் விவரம் தெரிந்தவர் என்பதை காட்டியது. அவரும் சின்னதுரை, பெரியதுரை என்று கூறியவுடன் அதைப் புரிந்துக் கொண்டவராக, உரிய வழியைக் காட்டினார்.
அவர் காட்டிய பாதையில் நடக்க ஆரம்பித்தேன். உச்சி வெயில் சுள்ளென்று தாக்கினாலும், காற்றின் அருமை அதை தணித்துக் கொண்டே வந்தது. ஆள் அரவமற்ற சாலையில் நடக்க ஆரம்பித்தேன். அந்த ஊரிலும் பெரிய மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடம்! ஒரு நடுத்தர வர்க்கம் உருவாகியிருப்பதை உணர்த்தியது. அப்பள்ளிக்கூடத்தை தாண்டி சென்று கொண்டிருந்தேன். கிராமப்புறத்தில் கூட அழகாக சாலைகள் போடப்பட்டிருக்கிறதே என்ற சந்தோஷம். உண்மையில் அது கிராமத்துக்காரர்களுக்காக போடப்பட்ட சாலையல்ல என்பதை கொஞ்சம் தூரம் சென்றவுடன் காண முடிந்தது. அது புதிதாக பிளாட் வாங்குபவர்களின் வசதிக்காக போடப்பட்டிருந்ததை ரியல் எ°டேட்டுக்களின் வண்ண, வண்ணமான வளைவுகளுடன் கூடிய வரவேற்பு விளம்பரப் பலகைகள் வெளிப்படுத்தியது. அதையும் தாண்டி சென்ற போது மீண்டும் கரடு, முரடான ஒரிஜினல் கிராமத்துச் சாலை.
காற்றை கிழித்துக் கொண்டிருந்தது குருவிகளின் குரல்... ஏ! குருவி... சிட்டுக் குருவி... பாடலை ஞாபகப்படுத்தியது. இன்னும் கொஞ்ச காலத்தில் மறையவுள்ள வறண்ட வரப்புகளில், ஆடுகளும், மாடுகளும் மேய்ந்துக் கொண்டிருந்தன. உயர்ந்த பனைமரங்கள் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன. மனம் கிராமியத்தை வட்டமிட்டுச் சென்றாலும் எண்ணம் வில்லியர் தெரு மீதே இருந்தது. கொஞ்சம் தூரத்தில் குடிசைகளும், வீடுகளும் தென்பட்டன. தெருவில் ஆட்கள் யாரையும் காண முடியவில்லை.
ரொட்டிக்கடைக்காரர் ஒருவர் வேகமாக சைக்கிளில் வந்து, ஒரு வீட்டின் முன் நிறுத்தினார். அங்கே ஏதோ கடையிருக்கும் என்ற நம்பிக்கையோடு சென்றேன். கடையில்லை. வியாபார விஷயமாக யாரையோ பார்க்க வந்தவரிடம், மீண்டும் வழிகேட்டேன் அவருக்கும் தெரியவில்லை. அவர் குடிசைக்குள் இருந்து ஒருவரை அழைத்தார். அவரிடம் “வில்லியர் தெரு” எங்கே இருக்கிறது என்று கேட்டேன். இன்னும் ஒரு கிலோ மீட்டர் போகனுங்க... அங்க ஒரு கோவில் இருக்கும் அங்கப் போய் கேளுங்க என்றார்..., கூட இருந்த வியாபாரி, “இவருக்கு அந்த ஊர் எல்லாம் தெரியுமுங்க” என்று நம்பிக்கையூட்டினார். விவரம் தெரிவித்த கிராமத்துக்காருக்கு மகிழ்ச்சி, கூடவே வியாபாரியிடம் கூறினார். எங்க கழனியில அவுங்கத்தான் வேலை செய்யறாங்க என்றார்.
கிராமத்து அடையாளம் நடு கல்லும், பனைமரங்களும், வயல் வரப்புகள் மட்டுமல்ல சாதீயமும்தான்; நிலமற்ற கூலி உழைப்பாளிகள் தாழ்ந்த நிலையில் இருப்பதை அவரது பேச்சு வெளிப்படுத்தியது.
அவர் காட்டிய பாதையில் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். சாலை ஓரமாக இருந்த பெரிய கைப்பிடி கொண்ட கிராமத்து பம்பை பார்த்ததும் மகிழ்ச்சி! தாகத்தை தணித்துக் கொண்டு, முகத்தை கழுவிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். காற்று முகத்தில் பட்டு ஏற்படுத்திய சுகமே தனி! மனதுக்குள் ஒரே போராட்டம்! உண்மையில் வில்லியர் தெரு என்று உண்டா? அங்கு வில்லிகள் என்ற மக்கள் வசிக்கிறார்களா? அது ஒரு வேளை வேறு மாதிரியாக இருந்தால், வழியில் எதிர்படுபவரிடம் நாம் இதை கேட்கப் போய் விபரீதம் ஏற்படுமோ? மேல் தட்டு வர்க்கத்தினர் இந்த சொல்லை எப்படி எதிர்கொள்வார்கள் என்று பலவாறு எண்ணங்கள்...
பிளாட் போடப்பட்டு இருந்த வயல்களில் நடக்க ஆரம்பித்தேன். ஆட்களின் நடமாட்டமே தெரியவில்லை. ஏதோ ஓரிடத்தில் மட்டும் புதிதாக கட்டத் துவங்கி வீடு காட்சியளித்துக் கொண்டிருந்தது. ரியல் எ°டேட் உரிமையாளர்கள் இந்த காலி மைதானத்தை 50க்கும் மேற்பட்ட தெருக்களாக பிரித்து வைத்திருந்தனர். அழகர் தெரு, கண்ணன் தெரு, அலிமுல்லா தெரு, திருவள்ளுவர் தெரு, கம்பர் தெரு, ஆழ்வார் தெரு.... இப்படி பல....
நமக்கு ஒரு தெருவை கண்டுப்பிடிக்கவே இத்தனை சிரமம். இந்த இடத்தில் 50க்கும் மேற்பட்ட தெருக்களின் பெயர்களை எழுதி வைத்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் போ°ட் மேன் என்ன பாடு படுவாரோ என்ற எண்ணத்தோடு... நடைபோட்டேன்.
தூரத்தில், இளம் காளைகள் கிணற்றில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு கும்பல் கிராமத்துக் கோவிலுக்கு அருகே உள்ள செடி கொடிகளை வெட்டிக் கொண்டு இருந்தது. அடர்த்தியான மரங்களுக்கு நடுவே இருந்த கிராமத்து கோவில் எந்த சலனமும் இல்லாமல் இருந்தது. பல வண்ணங்களில் பெரிய வால்களுடன் உட்கார்ந்த நிலையில் உயரமாக இருந்த ஐந்து கிராமத்துச் சிலைகள் கலை நயத்தோடு காட்சியளித்தன.
அந்த மக்களிடம் கவலையை விட, சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. இறுக்கமான சிந்தனைகளோடு ஓடிக் கொண்டிருக்கும் நகரத்து மனிதர்களை சிந்தித்தால்... இவர்கள் கொடுத்து வைத்தவர்களே...
நகரத்தில் மூளைக்கு 32 மருத்துவமனைகள் இருக்கும் போதே பேஷண்டுகளை காப்பாற்றுவது சிரமமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு இரவில் ஜூரம் வந்து விட்டால் எந்த ஆ°பத்திரி திறந்து இருக்கும் என்ற பதைபதைப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. இங்க ஆ°பத்திரியும் இல்லை; மருத்துவரும் இல்லை... இவர்களுக்கு ஏதாவது அவசர சிகிச்சை தேவைப்பட்டால் என்ன செய்வார்கள்? எங்கே செல்வார்கள் என்ற சிந்தனை மனதை உலுக்கியது. ஒரு வேளை தூய்மையான காற்றுதான் இவர்களை காப்பாற்றுகிறதோ! என்ற எண்ணத்தோடு நகர்ந்துக் கொண்டிருந்தேன்.
கிராமத்துச் சாலையில் ஒருவர் வேகமாக சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்தார். அவர் வரும் போதே நாம் ஏதாவது அவரிடம் கேட்போம் என்ற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் தொற்றிக் கொண்டிருந்தது. அதை புரிந்து கொண்ட நான், அவரிடமும் வில்லியர் தெரு... ராஜதுரை... என்ற அடையாளத்தோடு கேட்டேன். இன்னும் கொஞ்சம் தூரம் போங்கள் அங்க அவுங்கத்தான் இருப்பாங்க என்றார்.
இப்படி ஒரு சிறிய பயணம் தேவையா? ஏன் சித்தப்பா இப்படி செய்தார்? நம்மை சோதித்து விட்டாரே என்று அவர் மீதும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. உண்மையில் அவருக்கு விலாசம் தெரியவில்லையா? அல்லது ஏனோ, தானோ என்று சொல்லி விட்டாரா? சரி, எப்படியும் கண்டு பிடித்து விடுவது என்று வைராக்கியத்துடன் நடக்க ஆரம்பித்தேன்.
இரயில் நகர் என்னை வரவேற்றது. பெரிய பங்களாக்கள்... வெளியில் ஆட்களின் தலையை காணவே முடியவில்லை. நகரத்தில் தெருக்களில் வாலிபர்கள் கூட்டமாக அரட்டை அடித்துக் கொண்டிருப்பது போலவோ, மூன்று குச்சிகளை வைத்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பது போலவோ, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பது போலவோ எதையுமே காண முடியவில்லை...
அந்த நல்ல தார் சாலையை தாண்டியவுடன்... என்றோ போடப்பட்ட கிராமத்துச் சாலை நம்மை வரவேற்க பல்லிளித்தது. கொஞ்சம் தூரம் தள்ளிப் போனவுடன் இரண்டு பக்கங்களிலும் தாழ்வான குடிசைகள், ஆடு, மாடு என வீடுகளில் கட்டியிருந்தார்கள். பெண் பிள்ளைகளும், குழந்தைகளும், கிழவர்களும் கண்ணில் பட்டனர். ஒரு வீட்டில் குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், வயதான பெரிசுகள் என கும்பலாக வீட்டின் முன் உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த தெருவில் உள்ள ஒரே டி.வி. இதுவாகத்தான் இருக்கும் என்பதை உணர்த்தியது. ஹைடெக் உலகில் இப்படியுமா? என வியக்க வைத்தது.
வீட்டிற்கு வெளியில் இருந்த ஒரு பெண்ணிடம் நம் அடையாளத்தை கூறி கேட்டபோது, அவர் வேறு ஒரு தெருவை அடையாளம் காட்டினார். இதுவே கடைசி முயற்சி என்று மனதில் எண்ணிக் கொண்டு நடையைக் கட்டினேன். புதிதாக எழும்பியிருந்த வீடு நம்பிக்கையூட்டியது. அதுதான் வில்லியர் தெரு என்பதையும் கண்டு கொண்டேன்; தூரத்தில் வரும் போதே சித்தியும்..., தங்கையும் என்னை கண்டு கொண்டனர்.
தங்கை கேட்ட முதல் வார்த்தையே எப்படிண்ணா... கண்டுப்பிடிச்சே... என்றுதான். அப்புறம் என்ன, என்னுடைய அடையாள அனுபவங்களை... சொல்லிக் கொண்டே இருந்தேன்.
தங்கை கூறினாள், இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து பாருங்க, எல்லாப் பிளாட்டும் கட்டி முடித்தால், இந்த அடையாளமே தேவைப்படாது என்று... நம்பிக்கையூட்டியது... நகரமயமாக்கல் ஜாதிய அடையாளத்தை அகற்றும் என்று.
நகரமயமாதலால், வில்லியர்களுக்கு நிலமோ, வீடோ கிடைக்காது... இடம் பெயர்ந்து போய் விடுவார்கள்... தெருவின் பெயர் மட்டுமே அடையாளமாக மிஞ்சும் என்ற சிந்தனையோடு இரயில் நிலையத்தை நோக்கி புறப்பட ஆரம்பித்தேன்....
- கே. செல்வப்பெருமாள்