
January 23, 2010
சந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்

May 15, 2009
சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்
இப்பின்னணியில், தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டான சிங்காரவேலரின் 'சாதி ஒழிப்பு' சிந்தனைகள் மிக முக்கியமான குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்துள்ளது. சாதி குறித்து இந்தியாவில் மார்க்சிய அடிப்படையில் ஒரு சரியான புரிதலை முதன் முதலில் ஏற்படுத்தியவர் சிங்காரவேலர். மகாத்மா காந்தி, அயோத்திதாச பண்டிதர், பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற சாதி ஒழிப்பு போராளிகள் செயல்பட்ட அதே காலகட்டத்தில் செயல்பட்ட சிங்காரவேலரின் சிந்தனைகள் 'சாதி ஒழிப்பில்' எவ்வாறு ஒரு அறிவியல் பார்வை கொண்டதாக இருந்தது என்பதும், சாதியம் ஏன் இந்தியாவில் இன்னும் வேறோடிக் கொண்டிருக்கிறது; அதன் இருப்புக்கான காரணம் என்ன? என்பதை மார்க்சியப் பார்வையில் அதனை அணுகுவதோடு, சாதி ஒழிப்புக்காக நாம் செய்ய வேண்டிய வேலைகள் என்ன? என்பதையும் விஞ்ஞானக் கண்கொண்டு அணுகுவதை உணர முடியும். சீனப் புரட்சி நாயகன் மாவோ 'நூறு பூக்கள் பூக்கட்டும்' என்ற சிந்தனைக்கேற்ப மாற்றுச் சிந்தனையாய், சிவப்பு மலரின் நறுமணம் வீசும் சிந்தனையாய் சிங்காரவேலரின் சிந்தனைகள் மலர்ந்திருப்பதை காணலாம்.
திராவிட இயக்கம் முதற்கொண்டு தலித் இயக்கங்கள் வரை கம்யூனிஸ்ட்டுகள் மீது வைக்கக்கூடிய அவதூறுகளில் ஒன்றுதான், “கம்யூனிஸ்ட்டுகள் வர்க்கம் பேசுவார்கள், அவர்களுக்கு வர்ணம் தெரியாது”. அதாவது, “வர்க்க பேதம் பார்க்கும் கம்யூனிஸ்ட்டு களுக்கு சாதிய ஏற்றத்தாழ்வு தெரியாது” என்ற விஷமத்தனமான கருத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி தங்களது தத்துவப் பார்வையை விரித்துரைப்பார்கள். மறுபுறத்தில், கம்யூனிஸ்ட்டு களோ தலித் இயக்கங்களையும், திராவிட இயக்கங்களையும், சாதி ஒழிப்பு அமைப்புகளையும் நேச சக்தியாக அடையாளம் கண்டு, அவர்களோடு இணைந்து இயக்கம் கண்டு சாதி ஒழிப்பு என்கின்ற நிலப்பிரபுத்துவ காலத்திய கொடுமையான ஏற்றத்தாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்க களத்தில் நின்று போராடிக் கொண்டிருப் பதை வரலாறு அறியும்.
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் இந்திய சாதி அமைப்பு குறித்து ஓரிடத்தில் கூறும்போது, “உலகில் முதன் முதலில் சோசலிச புரட்சி நடந்தது ரஷ்யாவில்தான்; ஆனால், இது நடந்திருக்க வேண்டிய நாடு இந்தியா; சாதிய வேறுபாடுகளால் இப்புரட்சி இங்கே நடைபெறவில்லை” என்று கூறுவார்.
மேற்கண்ட கருத்தின் மூலம் சிங்காரவேலர் உணர்த்துவது என்ன? இந்திய புரட்சிக்கு ஒற்றுமையாய் ஒன்றிணைய வேண்டிய தொழிலாளிகள், விவசாயிகள், சிறு விவசாயிகள் வர்க்கம் சாதி ரீதியாக சிதறுண்டு போயிருக்கிறது. தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் கருவியாக சாதியத்தை முதலாளித்துவம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்திய தொழிலாளிகளின் ஒற்றுமைக்கு முதன்மையான எதிரியாய் சாதி இருக்கிறது என்ற கருத்தைத்தான் அவர் இவ்வாறு எடுத்துரைக்கிறார்.
1925 டிசம்பரில், கான்பூரில் நடைபெற்ற முதலாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்கு தலைமையேற்ற சிங்காரவேலர், தன்னுடைய தலைமையுரையில் இந்திய சமூகத்தில் நிலவும் கொடுமையான சாதிய சமூக அமைப்பு குறித்து மார்க்சிய பார்வையில் கீழ்க்கண்டவாறு அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்:
“தீண்டாமைப் பிரச்சனையை நாம் ஆராய்வோம். அப்பிரச்சனை குறித்து நம் கட்சியின் நிலை குறித்து என் கருத்தைக் கூறுகிறேன். கம்யூனிசக் கொள்கையைப் பார்க்குமிடத்து தீண்டாமைப் பிரச்சனை முற்றிலும் பொருளாதாரப் பிரச்சனை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகுப்பினர் ஆலயங்களிலும் அல்லது குளங்களிலும் அல்லது தெருக்களிலும் அனுமதிக்கப்படுகிறார்களா என்பது நமது சுயராஜ்ஜியப் போராட்டத்துடன் தொடர்புள்ள பிரச்சனையன்று. சுயராஜ்ஜியம் வரும்போது, இச்சமூக, மதத்தகுதியின்மைகள் தாமாகவே வீழ்ச்சியடையும். கம்யூனிஸ்ட்டு களுக்கு ஜாதியோ சமயக் கோட்பாடுகளோ கிடையா. இந்துக்கள், முஸ்லீம்கள் அல்லது சிறித்துவர்கள் அவைகளைப் பற்றி எத்தகைய சொந்தக் கருத்துக்களையும் கொண்டிருக்கலாம். கோடிக்கணக்கிலுள்ள இவ்விந்திய மக்களின் தீண்டாமைப் பிரச்சனை சிறப்பாகப் பிணைந்துள்ளது. அவர்களது பொருளாதாரச் சார்பு நிலை தீர்க்கப்பட்டவுடனேயே, தீண்டாமை என்ற சமூகக் கறை மறையத்தான் போகிறது. நிலவுடைமையில் உள்ள இந்த ஏற்றத்தாழ்வே கோடிக்கணக்கான அடக்கியொடுக்கப்பட்ட இவ்வகுப்பாரின் அடிமைத்தனத்திற்குத் தலையாய காரணமாகும். கோயில்கள், குளங்கள், சாலைகள் இவைகளைப் பயன்படுத்தும் உரிமை பெற்று விட்டாலே சமூகத்தில் இந்த அவல நிலையிலுள்ளவர்கள் வளமார்ந்த சகோதரர்களுக்கு நிகராக உயர முடியாது. தீண்டாமைப்பிரச்சனை என்பதே சிறப்பாக விவசாயப் பிரச்சனையாகும். இந்தப் பொருளாதாரச் சார்புடைமையிலிருந்து விடுபட்டாலொழிய, தீண்டாமையொழித்தலென்ற பேச்சு இழிவானதும் நேர்மையற்றதுமாகும். நம் சகோதரர்களை நேர்மையற்ற, இரக்கமற்ற முறையில் நடத்துவது குறித்துப் பகட்டாக, மாற்றம் வேண்டாதவன் பேசுகிறான். ஆனால் அவர்கள் பட்டினி, கடும் பசியால் துன்புறும் இல்லங்கள் பற்றி குறிப்பிடுவதை விழிப்புடன் தவிர்க்கிறான். சமூக அநீதிகளை எதிர்த்துப் பெரிதும் பேசுகின்ற இந்தியச் சீர்திருத்தக்காரன் நாட்டின் கோடிக்கணக்கான நமது விவசாயத் தொழிலாளர்களைப் பணக்காரர்கள் பொருளாதார இழிநிலை சிறைக்குள் வைத்திருப்பதைப் பற்றி வாளாவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியச் சீர்திருத்தக்காரனின் பணக்கார மனப்பான்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.”
(சிந்தனைச் சிற்பி சிங்காரவேலு வாழ்வும் சிந்தனையும், கே. முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியம், பக்கம்385, வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை-18)
மேலும், இந்தியாவில் நீடித்து நிலைபெற்று புரையோடிப் போயிருக்கும் சாதிய கட்டுமானத்தின் அஸ்திவாரம் எவ்வளவு பலமானது என்பதை மிக எளிமையாக விளக்கியிருப்பார் சிங்காரவேலர். ஒரு கட்டிடத்தை உடைத்தெறிய வேண்டும் என்றால், அதன் அஸ்திவாரம் எவ்வளவு வலுவானது என்பதை நாம் கண்டறிய வேண்டும். இதனை முதலில் கண்டறிந்தால்தான் சம்மட்டியைக் கொண்டு அந்தக் கட்டிடத்தை சிதைக்கலாமா? புல்டோசரைக் கொண்டு இடிக்கலாமா? அல்லது வெடிவைத்து வேரோடு தகர்க்கலாமா? என்பதை முடிவு செய்ய முடியும்.
“ஆயிரம் வருஷங்களாக ஜாதியில்லாத மகமதியர் நமது நாட்டை ஆண்டும், 200 வருஷமாக ஆங்கிலேயர் நமது நாட்டைக் கைப்பற்றியும், இன்றுவரை ஆண்டுவந்தும், ஜாதியொழியவில்லை. கடந்த 50 வருஷங்களாகச் சீர்திருத்தக்காரர்கள் ஜாதியை ஒழிக்கப் பிரயத்தனப்பட்டுவந்தும், ஜாதிக் கொடுமை குறைந்தபாடில்லை. காங்கிரஸ் சென்ற 10 வருஷமாக, தீண்டாமை ஒழிய வேண்டுமெனத் திட்டங்கள் போட்டும், எல்லாம் வாய்த்திட்டமாகவும், பேப்பர் திட்டமாகவுமே கிடக்கின்றன.”
அத்துடன், “ஜாதியொழியாமைக்கு முக்கியக் காரணம், ஜாதியைப் பாராமுகமாய்ப் பார்த்து வரும் அரசுகளென அறிக.”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி-1, பக்கம் 322-323, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)
அதாவது, மேற்கண்ட பல்வேறு மத, தத்துவச் சிந்தனைகளைக் கொண்ட ஆட்சியாளர்கள் நீண்டகாலம் ஆட்சி புரிந்து வந்தாலும் ஏன் சாதியைத்தை தகர்க்க முடியவில்லை! நிலப்பிரபுத்துவ சமூகத்தைத் தாங்கிப் பிடித்த ஆட்சியளர்கள், அரசுகள் ஜாதியை ஒழித்திட எந்தவிதமான திட்டமும் இன்றி, நிலப்பிரபுத்துவ சுரண்டலின் காப்பாளர்களாக சேவகம் புரிந்ததுதான் அடிப்படைக் காரணம் என்று சிங்காரவேலர் அறுதியிட்டு தனது வாதத்தை முன்வைக்கிறார்.
தகர்க்க முடியாத எஃகுக் கோட்டையாக சாதியம் மாறியதற்கு சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட அரசுகளும், அதற்கு துணை நிற்கும் மனுநீதி போன்ற தத்துவங்களும்தான். இத்தகைய எஃகுக் கோட்டையை தகர்ப்பதற்கான அஸ்திரம் என்ன? என்பது குறித்து சிங்காரவேலர் பின்னர் குறிப்பிடுவதை பார்க்கலாம்.
சாதியம் என்பது இந்தியாவில் மட்டும் தோன்றிய கருத்தியலா? உலகில் வேறு நாடுகளில் சாதியம் தோன்றவில்லையா? இக்கேள்விக்கு ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் சாதிய கட்டமைப்பு நீடித்ததையும் அவைகள் எவ்வாறு ஒழிக்கப்பட்டன என்பது குறித்தும் சிங்காரவேலர் கூறுவதைப் பாருங்கள்:
“ஜப்பான் தேசத்தில் ஒருவித தீண்டாதார் இருந்து வந்தார்கள். அவர்கள் பெயர் அயினோ (Aino). அவர்களும் நமது நாட்டு தீண்டாதாரை நடத்துவதுபோல் நடத்தப்பட்டு வந்தார்கள். அந்நாட்டில் சாமுரெ (Samurai) என்ற உயர்குலத்தோர் நமது நாட்டுப் பிராமணரைப் போல் அவ்வூர் தீண்டாதாரை நடத்தி வந்தனர். 60 வருஷத்திற்கு முந்தி ஜப்பானியருக்கு ஓர் புது உணர்ச்சி வந்ததை முன்னிட்டு சாமுரே அனைவரும் தங்கள் தன்னல வாழ்வை (Exclusivenes) விட்டு அயினோக்களைத் தங்கள் சமூக வாழ்க்கையில் சகல சமத்துவத்துடன் வாழ்ந்துவர அவர்களுடைய பொருளாதாரத் தாழ்வை நீக்க வேண்டிய வசதிகளைவுண்டு பண்ணியதின் காரணமாக இன்று, ஜப்பான் தேசம் வல்லரசுகளில் வொன்றாக மதிக்கப்பட்டு வருகிறது.
ஆங்கில நாட்டிலும், ஆங்கில பிரபுக்கள் தங்கள் தேச சாமான்ய ஜனங்களை, பண்டைக் காலத்தில், ஓர் விதமான தீண்டாதாரைப் போல் நடத்தி வந்தார்கள். ஆனால், சில நூற்றாண்டுகளாக செல்வந்தர் கிளர்ச்சியால், பல துறைகளிலும் விலக்கப்பட்டிருந்த சாமான்ய ஜனங்கள் சற்று பொருளாதார பெருக்கைப் பெறவும், ஆங்கில தீண்டாமையொழிந்து சாமான்ய மக்கள், ஏறக்குறைய பல சமத்துவங்களை அனுபவிக்க இடம் கொடுத்தது.
பிரஞ்சு தேசத்திலும், மற்ற உலக முழுமையுமே, பொருளாதார விடுதலையால், பாமர மக்கள் சிற்சில சுதந்திரங்களையு பெற நேர்ந்தது. மனித குலம் சுகமுடன் வாழ வேண்டுமானால், பல கோடிப் பல்லாயிர பாமர மக்களின் பொருளாதார தாழ்வு நீங்க யாவருக்கும் பொருளாதார சமத்துவம் வரவேண்டுமென அறிக. எண்சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம்.”
(நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? ம. சிங்காரவேலர், பக்கம் 61, வெளியீடு : பாரதி புத்தகாலயம்)
நால்வருண அமைப்பும் வர்க்கச் சிந்தனையும்
“ஜாதியும் பொருளாதார நட்பிலேயே கலந்துள்ளது. நான்கு வருணத்தார்களாகிய பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர்களுக்குள் ஏற்பட்ட வேற்றுமை பொருளாதாரத்தையொட்டியே ஜனித்திருக்க வேண்டும். எப்படியெனில் கடை வருணத்தாராகிய சூத்திரன் ஏழையாகவே இருந்து வந்திருக்கிறான். இன்றைக்கும் பிராமணர்கள், பெரும்பான்மை சூத்திரர்களைவிட பொருள் பெற்றிருப்பதை பார்க்கலாம். எந்தக் கிராமத்திலும் பிராமணர்கள்தான் செல்வத்திலும், செல்வாக்கிலும் மிகுந்தவர்கள்.
ஆதிவேத காலத்திலும், பிராமண ஜாதியர்கள் செல்வாக்கைப் பெற்றிருந்ததை ரிக் வேத சம்ஹீதைகளில், 'யானை மேல் பொன்னைக் கொண்டு போக வேதியன் பெற்றான்' எனவும் கூறியுள்ளது. மற்ற ஜாதியாலும் அடுத்தாற்போல் செல்வத்தைப் பெற்று இருத்தலால், அந்தந்த வர்ணத்தார் பொருள் படைத்துள்ள ஜாதிப் பதவிகளைப் பெற்றுள்ளார். கடைசியில் நின்ற சூத்திரன் பொருளற்றவனாதலால், கஷ்ட வேலை செய்து பிழைக்க நேரிட்டது. இவனுக்கும் கடையாயுள்ள பஞ்சமனோ (ஐந்தாம் ஜாதியான்) எந்தப் பொருளும் இல்லாத தோஷத்தால் கிராமத்திற்கு அப்புறம் கிடத்தப்பட்டிருக்கிறான்.”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, பக்கம் 388-389, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)
இன்றைய சாதி எதிர்ப்பு ஆதரவாளர்கள் பெரும்பாலோர், சாதி எதிர்ப்பு உணர்வினை வெறும் பிராமண எதிர்ப்பு உணர்வாகவும், மனுநீதிக்கு எதிரான உணர்வாகப் பார்க்கும் சடங்குத்தனமானப் பார்வைதான் மிஞ்சுகிறது. ஆனால், அதற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வினை, சுரண்டல் மனப்பான்மையினை அம்பலப்படுத்தத் தவறுகின்றனர். இந்த ஏற்றத்தாழ்வினை உருவாக்கிய பொருளாதார உடைமைத் தனத்தை காணத்தவறுவது, ஒடுக்கப்பட்ட கடைநிலை மக்களாகிய தாழ்த்தப்பட்ட மக்களிடையே வர்க்கத்தன்மையற்ற உணர்ச்சிவயப் பட்ட சாதிப் பார்வைக் கொண்டதாக மாற்றும் போக்கே காணப்படுகிறது.
இதற்கு தமிழகத்தில், பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கத்தை நடத்திய நீதிக்கட்சியை உதாரணமாகக் குறிப்பிடலாம். இவர்களது நோக்கம் ஒட்டுமொத்த சாதியையும் ஒழிப்பது அல்ல; மாறாக, பார்ப்பனர்களின் அரசியல் - பொருளாதார செல்வாக்கில் தங்களுக்கு உரிய பங்கை நிலைநாட்டிக் கொள்வது தானே தவிர வேறு ஏதும் இல்லை. இதிலிருந்து மாறுபட்டதன்மை கொண்டது தான் சிங்காரவேலர் மற்றும் பெரியாரால் உருவாக்கிய சுயமரியாதை - சமதர்ம இயக்கம். இன்றைய திராவிட இயக்கங்கள் சுயமரியாதை - சமதமர்ம இயக்க பாரம்பரியத்தை கைகழுவி விட்டு, நீதிகட்சி பாரம்பரியத்தை சுவீகரித்துக் கொண்டதாக மட்டுமே உள்ளது. அதனால்தான் தமிழகத்தில் 40 ஆண்டுகால திராவிட இயக்கத் தலைமையிலான ஆட்சி கோலோச்சியிருந்தாலும் தீண்டாமை தணிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை என்பதை இந்நேரத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
சாதி என்பது ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது, ஒன்றைவிட ஒன்று தாழ்ந்தது என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பல அடுக்குகளை உள்ளடக்கியதாகும். இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டைகளாக ஒட்டுமொத்த சாதிய சமூகத்தின் சுரண்டல் சுமைகளால் அமுக்கப்பட்டவர்களாக, அழுத்தப்பட்டவர்களக மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் நிற்காமல், தீண்டாமை பிரச்சனை குறித்து நன்கு ஆராயும் சிங்காரவேலர் வர்க்கத்தன்மையற்ற பகட்டுத்தனமான தீண்டாமை ஒழிப்பு சீர்திருத்தவாதிகளின் சிந்தனை கூர் மழுங்கிப் போயுள்ளது குறித்து கீழ்க்கண்டவாறு நேரிடையாக கேள்வி எழுப்புகிறார்:
“தீண்டாமை, தீண்டாமை என்ற பூச்சாண்டியைக் காட்டிக் கொண்டு, தாழ்த்தப்பட்டிருக்கும் மக்களை அதனால் திருப்தி அடையும்படி ஏமாற்றப்போகின்றார்களா? தீண்டாமை மாத்திரம் நீங்கினால், தீண்டாமையால் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு வறுமையும், பிணியும், அறியாமையும் நீங்கிவிடுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.
(நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? ம. சிங்காரவேலர், பக்கம் 13, வெளியீடு : பாரதி புத்தகாலயம்)
மேற்கண்ட கேள்வியின் மூலம் தீண்டாமை ஒழிப்பின் அடிப்படை “பொருளாதார உரிமையே” அன்றி வேறொன்றில்லை என்று உறுதியாக நம்புகிறார். இந்த பொருளாதார உரிமையைப் பற்றி பேசாத எந்த தீண்டாமை ஒழிப்புச் சிந்தனையும் போகாத ஊருக்கு வழிகாட்டுவதாகவே இருக்கும்.
சாதியால் பலனடைவது யார்?
மேலும், கடவுள், மதம், சாதி போன்றவைகள் எல்லாம் கற்பனையானவை. இவைகள் அனைத்தும் பொருளற்ற தன்மை கொண்டது என்பதை சிங்காரவேலர் கீழ்க்கண்டவாறு உரைக்கிறார்:
“கடவுள் எனுஞ் சொல், மதமென்ற சொல், ஜாதியbன்ற சொல் முதலிய சொற்கள் கற்பனா சொற்களென அறிதல் வேண்டும். ஆதலின், மனிதன் பேசும் வன்மையால், இவ்வித கற்பனா சொற்களை சிருஷ்டி செய்து கொள்ள, துர்அதிர்ஷ்டம் பெற்றன். மற்ற மிருகாதிகள் பேசுந்திறமையைப் பெறாமையால், கற்பனை செய்ய முடியவில்லை.
ஆதலின் மிருவர்க்கங்கள் யாவும் கடவுள், ஜாதி, மத கற்பனைகள் இல்லாமல், பல கோடி வருஷங்களாக, சுகித்து வாழ்ந்து வருகின்றன. மனினோவெனில், பேசுந்திறமையை நல்வினியோகப்படுத்தி வந்ததோட, கற்பனைகளாலும், புராணக் கட்டுக்கதைகளாலும் தனக்கே தீங்கிழைத்துக் கொள்ள, கடவுளென்ற பதத்தையும், ஜாதி என்ற பதத்தையும், மதமென்ற பதத்தையும் சிருஷ்டித்துக் கொண்டான். இதுதான் இந்த சொற்களின் சரித்திரம்.”
(நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? ம. சிங்காரவேலர், பக்கம் 58, வெளியீடு : பாரதி புத்தகாலயம்)
சாதி, மதம் போன்றவற்றின் தொடர்ந்த நீட்டிப்பிற்கு அடிப்படை காரணிகளில் ஒன்று; “சொந்த வாழ்க்கையில் - இல்வாழ்வில் அதனைக் கடைப்பிடிப்பது” என்று விமர்சித்து அதன் வேரை தொட்டுக் காட்டுகிறார். ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், பூப்பெய்துதல், காதுகுத்துதல்... போன்று பல்வேறு நிகழ்வுகளில் சாதியமும், மதமும் தங்களுக்கு உரிய இடத்தை தக்க வைத்துக் கொள்கிறது. மனிதனின் இல்வாழ்க்கையில் அதனை இல்லாமல் போக்கும் வரை அதன் பிடியில் தளர்ச்சியை ஏற்படுத்திட இயலாது என்பதைத்தான் சிங்காரவேலர் சுட்டிக் காட்டுகிறார்.
காந்தியும் - தீண்டாமை ஒழிப்பும்
மற்றொரு இடத்தில், தீண்டாமை குறித்து பொருளுள்ள ஒரு கேள்வியை சிங்காரவேலர் எழுப்புகிறார். குறிப்பாக மகாத்மா காந்தி தாழ்த்தப்பட்ட மக்களை “அரிஜன்” என அழைத்தார். அதாவது, அரியின் ஜனங்கள் - கடவுளின் குழந்தைகள் என அழைத்தார். இருந்தாலும் என்ன மகாத்மா சொல்லிவிட்டதால் தீண்டாமை ஒழிந்து விட்டதா? இல்லையே! அதுமட்டுமா? சுதந்திரப்போராட்டக் காலத்தில் 'சமபந்தி போஜனம்' என்று போடுவார்கள். அதாவது அனைவருக்கும் சமமாக விருந்து படைப்பதைத்தான் இவ்வாறு கூறுகிறார்கள். இருந்தாலும் என்ன தீண்டாமை ஒழிந்து விட்டதா? அல்லது சமபந்தி போஜனத்தில் கலந்து கெண்டவர்கள்தான் அதனை விட்டு விட்டார்களா? இத்தகைய நடவடிக்கைகளில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால் இதுபோன்ற நடவடிக்கைகளாலேயே சாதியத்தை ஒழித்து விட்டிருக்கலாமே! ஏன் முடியவில்லை? இதைத்தான் சிங்காரவேலர் வானில் பெரும் இடியிடிப்பதுபோல் கேட்கிறார், “தீண்டாதானை தீண்டி விட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமா?” என்று கேள்வி எழுப்புவதோடு நின்று விடாமல், இவ்வளவு ஆண்டுகளாக இந்தத் தீண்டாமையால் வந்த வறுமையும், ஏழ்மையும் தலித்துக்களை தீண்டுவதால் ஒழிந்து விடுமா என்று கேட்பதில்தான் உண்மையான அர்த்தம் பொதிந்துள்ளது.
எனவே தாழ்த்தப்பட்ட மக்களின் இன்றைய பிரச்சனை என்பது வெறும் தீண்டாமை மட்டுமல்ல; அதனுடன் சேர்ந்துள்ள வறுமையும், ஏழ்மையும்தான் என்று தனது வர்க்கப் பார்வையை 1930களிலேயே சிங்காரவேலர் முன்வைத்துள்ளார். எனவே, தீண்டாமை ஒழிப்பு என்பது அவர்களது வறுமையையும், வாட்டத்தையும் போக்கும் முதல் படியிலிருந்து தொடங்க வேண்டும் என்பதைத்தான் சிங்காரவேலர் அப்படி கூறுகிறார். வர்க்க ஏற்றத்தாழ்வால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் வறிய நிலைக்கு, கடை நிலைக்கு, தீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்று மார்க்சிய அணுகுமுறையோடு இப்பிரச்சனையை அணுகுகிறார் சிங்காரவேலர்.
அடுத்து, காந்தியின் சுயராஜ்ய கனவுகள் எல்லாம் முதலாளிகளின் ராஜ்யமாகவே இருக்கும். அது ஏழைகளுக்கும், தலித்துக்களுக்கும் ஒருபோதும் பயன்தராது என்று அன்றைக்கே காந்தியத்தின் வர்க்கத்தன்மை குறித்து அம்பலப்படுத்தினார் சிங்காரவேலர். மேலும், இந்தியாவிற்கான சுதந்திரம் குறித்த பேச்சுவார்த்தைகள் எழுந்தபோது, நடைபெற்ற வட்டமேஜை மாநாடு குறித்தும், அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு இருந்தன என்பனவற்றை சிங்காரவேலர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
“வட்டமேஜை மாநாட்டில் ஆங்கிலப் பிரதிநிதிகளும், தேசியப் பிரதிநிதிகளும், தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதிகளும் சேர்ந்து நமது இந்தியத் தேசத்தில் வழங்கவேண்டிய அரசியல் திட்டமொன்றைத் தயாரித்து வருகின்றார்கள். முதலில் அரசியல் பாதுகாப்புகளை யோசித்து (1) சொத்துரிமை, (2) மதசமூக உரிமை, (3) ஜாதி உரிமைகளை அந்தந்தப் பொருளுடையோருக்கும், அந்தந்த ஜாதியாருக்கும் அரசியல் பாதுகாப்பு அளிக்கப்படுமென்று தீர்மானித் திருக்கின்றார்கள். இதன் பொருள் என்னவெனில் சொத்து, மதம், ஜாதி இம்மூன்றும் சமூக ஏற்பாட்டில் (Social System) எந்த மாறுதலும் செய்யப்படாதென்பதே.”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, பக்கம் 397, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)
மேற்கண்ட கருத்தை அம்பலப்படுத்தும் சிங்காரவேலர், அத்துடன் நிற்காமல், வட்டமேஜை மாநாட்டுத் தீர்மானத்தை தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மை நிலையிலிருந்து விமர்சிப்பது கீழே பார்ப்போம்:
“6 கோடி பேர் தீண்டப்படாதவர்களென்றும், தாழ்த்தப்பட்டவர்க ளென்றும், ஒடுக்கப்பட்டவர்களென்றும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த 6 கோடி மக்களுக்கு ஒரு செண்டு நிலமாவது தங்களுக் கில்லையாதலால் இவர்களுக்கு எவ்வித சொத்தைப் பாதுகாக்க நமது வட்டமேஜை கூட்டத்தால் சொத்தைப் பாதுகாக்கும் திட்டத்தை முதன்முறையாக அரசியல் திட்டத்தில் செய்ய மனம் வந்தது என்று கேட்கின்றோம்?
சொத்துவொன்றில்லாத ஏழையனாதிகளாகிய 2000 லட்சம் பேருக்கு என்னத்திற்காகச் சொத்து பாதுகாப்பு வேண்டுமெனவும் கேட்கின்றோம். சொத்தில்லாத பஞ்சை, பனாதிகளுக்கு வேறெந்தப் பாதுகாப்பும் செய்யாமல் சொத்து பாதுகாப்பு செய்யத்தான் நமது எம்.சி. ராஜாவும், அம்பேத்கரும் வட்டமேஜைக்குட் புகுந்திருக்கின்றனர்களா என்று கேட்கின்றோம். உணவு இல்லாதவனுக்கு உணவு கிடைக்கப் பாதுகாப்பும், ஆடை இல்லாதவனுக்கு ஆடை கிடைக்கப் பாதுகாப்பும், வீடில்லாதவனுக்குக் வீடு கிடைக்கப் பாதுகாப்பும், ஞானமில்லாத வனுக்குக் கல்வி கிடைக்கப் பாதுகாப்பும், வேலை இல்லாதவனுக்கு வேலை கிடைக்கப் பாதுகாப்பும் செய்வதன்றோ, சமதர்ம ராஜரீக முறையாகும்?
இதை எல்லாம் விட்டு விட்டுச் சொத்து யாதென்றுமில்லாதானுக்குச் சொத்து பாதுகாப்பும், மதமில்லாதவனுக்கு மத பாதுகாப்பும், ஜாதியில்லாதனுக்கு ஜாதி பாதுகாப்பும் செய்ய திட்டம் செய்வதென்றால், இதைவிட பயித்தியக்காரத்தனம் என்ன இருக்கின்றது?”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, பக்கம் 398-399, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)
மிக எளிமையாக, அதே சமயம் ஆழமாக சிங்காரவேலர் எழுப்பிய கேள்விக்கான விடையின் திசைவழியில் கூட சாதி ஒழிப்பு இயக்க ஆதரவாளர்கள் நகராதது வருத்தத்திற்குரிய விஷயம்தான். சாதிய சமூகம் இன்றைக்கும் இந்தியாவில் உயிர் வாழ்வதற்கு அடிப்படையே, சொத்துரிமை என்பதுதான். கடந்த 3000 ஆண்டுகளாக ஆதிக்கசாதிகளின் கையிலிருந்த அதே நிலைதான் தற்போது வேறு, வேறு வடிவங்களில் தலை தூக்குகிறது. இந்திய சுதந்திரமும், இந்திய அரசியல் சட்டமும் இதில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏன் இன்று வரைக்கும் கல்வி மற்றும் வேலை பெறும் உரிமையைக் கூட அடிப்படை உரிமையாக அரசியல் சட்டத்தில் உத்திரவாதப்படுத்தப்படவில்லை. நிலவு டைமை இன்னும் தகர்க்கப்படவில்லை என்பதோடு மட்டுமல்ல; முதலாளித்துவ நிலச்சீர்திருத்தம் கூட இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அரசுகள் உள்ள மேற்குவங்கம், கேரளம், திரிபுரா தவிர வேறெங்கும் அமலாக்கப்படவில்லை என்பதே இன்றைய 60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் எதார்த்த நிலை. அது மட்டுமல்ல; சாதி மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற உத்திரவாதத்தையும் இவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். சாதி ஒழிப்பு என்பது இவர்களின் முதன்மையான அரசியல் நிகழ்ச்சி நிரல் அல்ல; இதுதான் தீண்டாமை என்ற நோய் இந்தியாவில் நீடிப்பதற்கான அடிப்படை.
இதனை அடிப்படையாகக் கொண்டுதான் சிங்காரவேலர் சாதி ஒழிப்புக்கு மிகவும் அடிப்படையானது எது என்று கீழ்க்கண்டவாறு உரைப்பதை பார்க்கலாம்:
“ஜாதியொழியாமைக்கு முக்கியக் காரணம், ஜாதியை பாராமுகமாய்ப் பார்த்து வரும் அரசுகளென அறிக. ஜாதியை ஆதரிக்கும் அரசுகள் எதுவாயினும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யமாய் இருந்தாலும் சரி அல்லது காந்தி சுயராஜ்யமாய் இருந்தாலும் சரி, அல்லது மிதவாதிகளின் டொமீனின் (Dominion) அரசாய் இருந்தாலும் சரி அல்லது ஜஸ்டிஸ் கட்சியின் கான்ஸ் டிடூஷனல் டிமாக்கிரஸியாய் இருந்தாலும் சரி, அல்லது பெசந்தம்மையின் ஹோம்ரூலாய் (Home Rule) இருந்தலாலும் சரி, நமது இந்திய நாட்டை விட்டு ஜாதியொழிப் போவதில்லை.
எப்போது ஜாதி ஒழியுமென்றால், ஜாதியும் மதமும் அற்ற நமது சுயமரியாதையோர் கோரும், சமதர்ம ஆட்சி பாமர மக்களுக்கு ஏற்பட்டால் அப்போதுதான்....”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, பக்கம் 323, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)
3000 ஆண்டுகளாக சூத்திரன் என்றும், பஞ்சமன் என்றும், தலித் என்றும் பல்வேறு பெயர்களில் தீண்டப்படாத மக்களாக மாற்றியதோடு, அவர்களை ஏதும் அற்றவர்களாக மாற்றிய இந்த சமூக அமைப்பில் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பின்னும் கூட தலித்துகளுக்கு அதே நிலை நீடிக்கிறது என்றால் இதற்கு யார் காரணம்? இந்தியாவை ஆளும் நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய பிடியை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொண்டிருப்பதால்தான் இந்திய ஆட்சியாளர்களால் அதிலிருந்து தப்ப முடியவில்லை என்ற உண்மையை அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்திய சுதந்திரப் போரில் பல லட்சக்கணக் கான மக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் கூட, அந்த மக்கள் வர்க்க ரீதியாக அணித்திரட்டப்படாததன் விளைவாகவும், தங்களுக்கு ஆதரவாக அந்த மக்களை பயன்படுத்திக் கொண்ட காங்கிரசும், முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சக்திகளும் சுதந்திர இந்தியாவிலும் தலித்துக்களையும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களையும் சுரண்டுவதற்கும், தாங்கள் சுரண்டி சேர்த்து வைத்திருக்கிற செல்வத்தை மேலும் பெருக்கிக் கொள்வதற்கு வழியுள்ள ஒரு நாடாக இந்தியாவை எப்படி மாற்றுவது என்ற நோக்கத்தில்தான் தற்போதைய இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பாதுகாப்பு அரணாக அவர்களுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசியல் சட்டத்தில், “தீண்டாமை ஒரு குற்றம், ஒரு பாவச் செயல்” என்று எழுதி வைத்ததால் மட்டும் தீண்டாமை விட்டதா, இல்லையே? ஒழியாது! மாறாக, அந்த நிலமற்ற, சொத்துக்களற்ற மக்கள் குறைந்தபட்சம் தங்களது வாழ்க்கையை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் அளவிற்கான வாழ்க்கையை உத்திரவாதம் ஏற்படாத வரையில், ஆதிக்க சாதிகளின் அடிமை சேவகர்களாக தலித்துக்கள் இருப்பதிலிருந்து விடுதலையடைப் போவதில்லை. எனவேதான், மார்க்சிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகள் சிங்காரவேலர் காலம் தொட்டு இப்பிரச்சனையை வெறும் சாதியப் பிரச்சனையாக மட்டும் அணுகாமல், அதற்குள் ஒளிந்து கொண்டுள்ள வர்க்கப் பிரச்சனைகளையும் கூர்மையாக நோக்கு கின்றனர். வர்க்கப் பிரச்சனையை மறைத்துவிட்டு சாதி ஒழிய வேண்டும், சாதி ஒழிய வேண்டும் என்று கனா காண்பவர்கள் உண்மையில் ஆதிக்க சாதிக்கும், சாதி அடிமைத்தளையில் உள்ள மக்களை சுரண்டிக் கொழுக்கும் பெரும் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சக்திகளின் மறைமுக காப்பாளர்களாக திகழ்கின்றனர். அத்தகைய மறைமுக சேவையைத்தான் சில சாதி ஒழிப்பு பித்தர்கள் செய்து வருகிறார்கள். அவர்களது நோக்கம் சரியாக இருக்கலாம். பார்வை சரியாக இல்லாவிட்டால், வெறும் பிதற்றலாக முடிவது இயற்கைதானே!
மதமும் ஜாதியும்
தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை குறித்து பல்வேறு கோணங்களில் ஆராயும் சிங்காரவேலர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மதம் ஒன்று இல்லவே இல்லை என்று ஆணித்தரமாக தனது வாதத்தை எடுத்துரைப்பதை கீழே நோக்கலாம்:
“நமது 6 கோடி தாழ்த்தப்பட்டவர்களுக்கு மதம் ஒன்று இருப்பதாகச் சொல்ல முடியாது. அவர்கள் இந்துக்கள் அல்ல. இந்துத் தெய்வங்களை அவர்கள் தொழ முடியாது. இந்து கோயில்களில் நுழைய முடியாது. இந்துக் குளங்களில் அவர்கள் குளிக்க முடியாது. இந்து தெய்வங்களாலும், கோயில்களாலும், குளங்களாலும் ஆதரிப்புவொன்றுமில்லாத தீண்டாதாருக்கு மதபாதுகாப்பு ஏன் வேண்டும்? மதமில்லாதவர்களுக்கு மதபாதுகாப்பினால் என்ன பிரயோசனம்? இந்து தெய்வங்களைத் தொழ முடியாத, இந்து கோயில்களில் நுழைய முடியாத, இந்து குளங்களிலும், கிணறுகளிலும் குளிக்க முடியாத, ஏழு கோடி பஞ்சமர்களுக்குச் சமயப் பாதுகாப்பு என்னத்திற்கு?”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, பக்கம் 399, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)
“இன்னொரு கூச்சல் பத்திரிகைகளில் எழுகின்றது. கோயிலைத் திறந்து விடுங்கள்; குளங்களைப் பொதுவாக விடுங்கள்; பஞ்சமர்களை வீதிகளில் போக விடுங்கள் என்று காசி முதல் ராமேஸ்வரம் வரை கூக்குரல் போடுகின்றார்கள். இதனால் என்ன லாபம்? என்று கேட்கின்றேன். கோயிலையும், குளங்களையும் பஞ்சமர்களுக்குத் திறந்து விட்டால் அவர்களுக்கு என்னாகும் என்று கேட்கின்றேன்? அவர்கள் வயிறு நிரம்புமா? அவர்கள் குழந்தைகளுக்கு வயிறு நிறையப் பால் கிடைக்குமா? அவர்கள் பெண்களுக்குப் பிரசவ உதவி (Minimum Comforts) கிடைக்குமா? அவர்கள் வாழ்வுக்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகள் (ஆiniஅரஅ ஊடிஅகடிசவள) என்ன ஏற்படுமெனவும் கேட்கின்றேன்?
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பஞ்சமர்களுக்குக் கோயிலைத் திறந்து விடுவதும், குளங்களைத் திறந்து விடுவதும், பஞ்சமர்களுக்கு உயிரை விடுகின்றேன் என்று சொல்வதும் நமது 5 கோடி ஏழை பஞ்சமர்களை இனியும் மூட பக்தியிலும், மூட நம்பிக்கையிலும், தரித்திரத்திலும், அறியாமையிலும் தாழ்வடைந்து கிடந்து உழலச் செய்யும் தந்திரமென அறிக.”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, பக்கம் 399, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)
இதேபோல், இன்னொரு இடத்தில் தலித்துக்கள் இந்து மதத்தை விட்டு விலகி வேற்று மதத்திற்கு மாறினால் அவர்களது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என்ற வாதத்தில் உள்ள அபத்தத்தை சுட்டிக்காட்டுகிறார். அதாவது, “ஒரு மூடத்தனத்தில் இருந்து இன்னொரு மூடத்தனத்திற்கு மாறுவதால் என்ன பயன் என்று” வினா எழுப்பும் சிங்காரவேலர், ஒரு மதத்தைச் சேர்ந்த சுரண்டலாளரின் அடிமை என்பதிலிருந்து இன்னொரு மதத்தின் புதிய அடிமையாக மாறுவதைத் தவிர வேறு என்ன ஏற்படப் போகிறது என்று கேள்வி எழுப்புகிறார்.
காந்தியின் உண்ணாவிதம்
அதேபோல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் தலித்துக்களுக்கு தனி வாக்காளர் தொகுதி தேவை என்ற கோரிக்கை எழுந்தது. இதே கோரிக்கை சுதந்திரப் போராட்டக் காலத்தில் எழுந்தபோதுதான், மகாத்மா காந்தி அவர்கள், எரவடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். தலித்துக்களுக்கு தனி வாக்காளர் தொகுதி ஒதுக்குவது என்பது அவர்களை இந்துக்களில் இருந்து பிரித்துச் செல்வது என்று காந்தி கருதினார்.
இத்தகைய கோரிக்கை குறித்து அன்றைக்கே சிங்காரவேலர் மார்க்சிய அடிப்படையில் இதனை அணுகி காந்தியின் உண்ணாவிரதம் ஒரு தற்கொலை முயற்சி - சிறு பிள்ளைத்தனமானது என்று இடித்துரைத்துள்ளார். அதாவது? தலித்துக்களுக்கு கூடுதல் தொகுதிகள் தந்து விடுவதால் ஒன்றும் யாரும் குறைந்து விடப்போவ தில்லை என்று சொல்வதோடு, இவ்வளவு நாட்கள் நீங்கள் எல்லாம் அமைச்சர் மற்றும் இதர பொறுப்புகளில் இருந்து எதைச் செய்தீர்கள் அவர்களுக்காக என்று கேள்வி எழுப்புவதோடு, அந்த கோரிக்கைக்கு வலுவான ஆதரவாளராக அன்றைக்கு திகழ்ந்தவர் சிங்காரவேலர்.
தொழிலாளி வர்க்கத்திற்கு பொருத்திய இதே விஷயத்தை சிங்காரவேலர் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ ஹெஜிமனி (Hegemony) எவ்வாறு இந்தியாவில் உள்ளது என்பதை வெகுச் சிறப்பாக அம்பலப்படுத்துகிறார்.
“ஜாதியும், மதமும் சொத்துரிமையும், முதலாளிகள் தங்கள் செல்வத்தையும் செருக்கையும், ஆதிக்கத்தையும், உரிமையையும், காப்பதற்குக் கட்டிக்கொண்டிருக்கும், கோட்டை மதில்கள் என அறியவேண்டும். இவ்வாயில்கள் திறந்து இருக்கும்வரை சமதர்மம் நிலையாதெனவும் அறிதல் வேண்டும்.”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14 )
இப்படி பல்வேறு கோணங்களில் சாதியின் பிடிமானம் எவ்வாறு உள்ளது? அதனை எதிர் கொள்பவர்கள் வைக்கும் வாதங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த சிங்காரவேலர் தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மையான விடுதலைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் மார்க்சியப் பார்வையில் வழிகாட்டியுள்ளார். இது என்றென்றைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. அதனை அவரது எழுத்துக்கள் மூலமே கீழே பார்க்கலாம்.
சாதியை ஒழிப்பதற்கு அரசியல் தீர்வுதான் அடிப்படையானது என்பதை வலியுறுத்தும் சிங்காரவேலர், அத்துடன் நிற்காமல் மக்களிடையே ஒரு மெய்ஞான உணர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார். மெய்ஞான உணர்ச்சி என்றால், சமூகத்தைப் பற்றியும், மனித உடலியல் மற்றும் இயற்கை சார்ந்த விஷயங்கள் குறித்தும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திட வேண்டும் என்பதோடு, குழந்தைகளிடத்தில் இத்தகைய அறிவியல் பார்வையை போதிப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுவதோடு சோசலிச சமூகத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உண்மையான விடுதலை கைகூடும் என்று வலியுறுத்தி அதனை செயலாக்கம் செய்திட வேண்டும் என்று உரைக்கிறார்.
“ஜாதி வேற்றுமையொழிய வேண்டுமானாலும், ஜாதிக் கொடுமை களால் தீண்டாமை, பொது ஸ்தாபனங்களில் நுழையாமை, ஜாதிக் கட்சி மற்றும் பல வகையான கொடுமையுள்ள கட்டுதிட்டங்களை ஒழிக்குமாறு சட்டங்கள் ஏற்படுத்த வேண்டும். இதனடுவில் பாமர மக்களுக்கு மெய்ஞானம் உண்டாகும்படிப் பல நூல்களை இந்தப் பாஷைகளில் இயற்றியும், சினிமா மூலமாகவும், ஆகாய தொனிகள் மூலமாகவும், பாமர மக்கள் வாழும் கிராமங்களில் உலக உற்பத்தி, ஜீவ உற்பத்தி, பிரபஞ்ச உற்பத்தி, வான சாஸ்திரம், பூகோள சாஸ்திரம், பூர்வ மனித சாஸ்திரம், வைத்திய நூல் முதலிய சிறந்த ஞானங்களைக் கொண்டு மூடப்பக்தி ஜாதிபக்தி, மதபக்தி ஒழியுமாறு முயற்சித்தல் வேண்டும்.”
(நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? ம. சிங்காரவேலர், பக்கம் 49-50, வெளியீடு : பாரதி புத்தகாலயம்)
மற்றொரு இடத்தில் சிங்காரவேலர் கூறுகிறார், இந்த ஜாதி வித்தியாசங்களையும், மத வித்தியாசங்களையும், பொருளாதார வித்தியாசங்களையும் ஒழிக்க வேண்டும் என்றால் தொழிலாளிகள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துக் கொள்ளும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் ஆட்சி அமையவேண்டும். சாதி, மத, கடவுள் நம்பிக்கைகளற்ற ஆட்சி நிலைக்கும்போதுதான் இவற்றை சமூக்திலிருந்து ஒழிப்பதற்கான முதற்படியில் காலடியெடுத்து வைக்க முடியும் என்று.
“உண்மை சுதந்திரம் பெற வேண்டுமாயின் பொது ஜன சுயராஜ்யம் நிலைக்கப் பாடுபட வேண்டும். இந்த சுயராஜ்யத்தில் பொது மக்களின் வறுமையும், தரித்திரமும் முதலில் வொழியுமாறு சமூகத் திட்டங்கள் செய்ய வேண்டும். மக்கள் கற்பனைகளும் ஜாதி வேற்றுமைகளும் இந்திய சமூக வாழ்விலிருந்து பற்றவே யொழிதல் வேண்டும்.”
என்று வலியுறுத்தி அரசியல் ரீதியாக சோசலிச சமூகத்தில்தான் இந்த ஜாதிய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று வலியுறுத்தும் சிங்காரவேலர் இதற்காக தீர்மானமுள்ள வேலைகளை (பாசிட்டிவ் ஒர்க்) செய்ய வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்.
(நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? ம. சிங்காரவேலர், வெளியீடு : பாரதி புத்தகாலயம்)
சிங்காரவேலர் சுட்டிய வழியில் சாதி ஒழிப்பு இயக்கங்களும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் களத்தில் ஓரணியாய் - வர்க்க ரீதியாக அணித்திரள்வதும், சாதியொழிப்பு போராட்டங்களை பொருளதார கோரிக்கைகளோடு ஒன்றிணைப்பதும், சுரண்டல் வேர்களை அம்பலப்படுத்துவதன் மூலமே சமூகத்தில் அரசியல்-பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி தீண்டாமைக்கு தீ வைக்க முடியும். இதற்கு, சிங்காரவேலர் சுட்டிக்காட்டிய தீர்மானமுள்ள வேலையை நோக்கியதாக நமது பயணங்கள் அமையட்டும்!
May 04, 2009
கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு! கருணாநிதியின் புளுகு 2 நாளைக்கு!

தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறய திமுக மீது அனைத்து எதிர்க்கட்சிகளும், ஜனநாயக உள்ளங்களும் கடுமையாக கண்டித்தன. தமிழக தேர்தல் கமிஷனும் இது அப்பட்டமான விதிமுறை மீறல் என்று தனது கண்டனத்தை பதிவு செய்ததோடு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் இது குறித்து புகார் செய்தது.
மறுபுறத்தில் இது குறித்து கருணாநிதியும், கே.என். நேருவும் ஆளுக்கு ஆள் மாறி, மாறி "நாங்கள் ஏற்றவும் இல்லை இறக்கவும் இல்லை" என்று லாலி பாடியதோடு 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்த நடைமுறையைத்தான் கடைப்பிடிக்கிறோம் என்று அபாண்டமான பொய்யை சுமத்தினார்கள்.
மறுபுறத்தில் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தான் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் இது குறித்து வலுவான கண்டனத்தை தெரிவித்ததோடு, இவ்வளவு நாள் ஏற்றிய கட்டணங்களை திமுகவினர் கொள்ளையடிப்பதற்கும், பொய் கணக்கு எழுதி அந்தப் பணத்தை சுருட்டிக் கொள்வதற்கும் செய்யப்பட்ட சதி வேலை என்பதை அம்பலப்படுத்தினார்.
அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் மே தினக் கூட்டத்தில் சென்னையில் உரையாற்றியபோது, சென்னை மாநகரத்தில் மட்டும் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரு நாளைய வருமானம் 1.75 கோடி என்றும், தற்போது கட்டணம் குறைக்கப்பட்ட பின்னர் அது 1.25 கோடி மட்டுமே வருமானமாக உள்ளது என்று கூறியதோடு சென்னை மாநகரத்தில் மட்டும் நாள்ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்படுவதாக அம்பலப்படுத்தினார்.
இதன் மீது மத்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமைச் செயலாளரை அழைத்து விசாரித்தது. தற்போது இன்று காலை முதல் திடீரென்று ஏற்கனவே இருந்த அதே நிலைக்கு பேருந்து கட்டணங்கள் உயர்ந்து விட்டது. டீலக்ஸ் பஸ்சில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் என்றும், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாய் என்றும், எம். சர்வீசில் குறைந்தபட்ச கட்டணம் 2.50 ரூபாய் என்றும் மாறிவிட்டது. நாங்கள் ஏற்றவும் இல்லை இறக்கவும் இல்லை என்று வசனம் பேசியவர்கள் தற்போது முகத்தில் கரியை பூசிக் கொண்டுள்ளனர். இது யாரை ஏமாற்றுவதற்காக இந்த நடவடிக்கை. அதுவும் போக்குவரத்து மந்திரி நேரு கூறும்போது, பேருந்துகளை தேவைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அதிகப்படுத்தி பயன்படுத்தினோம் என்று வினோதமான விளக்கம் கூறினார். அது சரி தற்போது ஏன் அதைச் செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் வெள்ளை கலர் போர்டு பேருந்துகளையாவது அதிகமாக இயக்கலாமே! ஏன் முடியவில்லை. கொள்ளைக்காரன் புத்தி கொள்ளையடிக்கத்தான் போகும் என்பதுபோல தமிழக அரசு மறைமுகாக பிக்பாக்கெட் அடிக்கத் துணிந்து விட்டது. மக்கள் உங்கள் முகத்தில் கரியை பூச காத்திருக்கிறார்கள்.
கால் முளைத்து, சிறகு முளைத்து பறக்கும் பேருந்து கட்டணம் தமிழக அரசின் சாதனைகளிலேயே தலயாய சாதனைதான்! யாருமே ஏற்றாமலேயே தானாக ஏறிக் கொள்ளும் அதிசயம் தமிழகத்தில் மட்டும்தான் - அதுவும் கருணாநிதி ஆட்சியில் மட்டும்தான் நடக்கக்கூடியது.
May 01, 2009
மே தின வாழ்த்துக்களும்! நாம் சந்திக்கும் நெருக்கடிகளும்!!
உலகம் இன்றைக்கு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்று பிரச்சாரப்படுத்தப்படுகிறது. இது ஏதோ, திடீரென்று யாருக்கும் தெரியாமல் ஏற்பட்டதுபோல் ஊடகங்களின் வழியாக ஊடுருவுகிறது. யாரால் தோற்றுவிக்கப்பட்டது இந்த நெருக்கடி? இதனால் பாதிக்கப்படப்போவது யார்? என்ற கேள்விகள்தான் மக்கள் மனதில் முட்டி மோதவேண்டியவை. ஆனால், மக்களின் மனங்களில் எல்லாம் ‘பொருளாதார நெருக்கடி’ என்று கண்ணீரை கசிய வைத்து விட்டது முதலாளித்துவம்.
உலக ‘நிதி மூலதனத்தை’ தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ள, பன்னாட்டு பெரு முதலாளிகளும், ஏகாதிபத்திய சுரண்டல் சக்திகளும், பணத்தை வைத்து பணத்தை பெருக்க வைத்தன. பணங்கள் அனைத்தும் பணம் காய்க்கும் மரங்களாக மாறின அவர்களுக்கு, பணம குட்டிப்போடும் அபூர்வ எந்திரமாக மாறியது முதலாளிகளுக்கு; அதாவது, பணத்தை உற்பத்தி மூலதனமாக மாற்றுவதற்கு பதிலாக, பணத்தையே பெருக்க வைக்கும் கலையை கற்றதன் விளைவே இன்றைய நெருக்கடி.
உதாரணமாக, 10 ரூபாய் மட்டுமே விலை மதிப்பு கொண்ட பென்சில் ஒன்றை 100 ரூபாய் மதிப்புக் கொண்டதாக மாற்றினர். இந்த பணம் பெருக்கும் மந்திர சூதாட்டம் நடைபெற்றது பங்கு வர்த்தகத்தில், 10 ரூபாய் பொருளின் மதிப்பு ஒவ்வொரு நாளும் செங்குத்தாக உயர்ந்துக் கொண்டே சென்று அது 100 ரூபாயை எட்டியதும்; பணத்தை வைத்து பணத்தை பெருக்கிய பங்கு வர்த்தக சூதாடிகளான - காளைகளும், கரடிகளும் தாங்கள் பெற்ற கொள்ளை லாபத்தை மாயமாய் வேறு ஒரு தொழிலில் திருப்பும்போது திடீரென்று பென்சிலின் உண்மை விலையான ரூ. 10-லிருந்து ரூ. மூன்றுக்கு மாறிவிட்டால் என்ன நடக்கும் பென்சிலின் மீது 100 ரூபாய் மூலதனம் இட்டவரின் பணம் திடீரென மயமாய் 97 ரூபாய் காணாமல் போய்விடும். இது எங்கே போனது? யாருக்கு போனது? என்பதுதான் கேள்வி! இப்படித்தான் பெரும் நிறுவனங்களும், பன்னாட்டு வங்கிகளும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் பணத்தை வைத்து சூதாட ஆரம்பித்து மதிப்பிழந்த மண்ணுக்கு கூட விண்ணை விலைக்கு வாங்கும் அளவுக்கு உயர்த்தி பின்னர் அதை அப்படியே தொப்பென்று போட்டு விட்டன. இப்படி ஏற்பட்டதுதான் இந்த முதலாளிய நெருக்கடி. அதாவது, இதனை உருவாக்கியது சொத்தாசை பெற்ற முதலாளிகள். இதில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கே இடமில்லை! எல்லாம் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள்தான்.
அமெரிக்காவில் இப்படித்தான் வங்கிகள் ஏராளமானவர்களுக்கு வீடு வாங்குவதற்கு கடன் கொடுக்கிறோம். அதற்கு நீங்கள் எந்த டாக்குமெண்டும் காட்ட வேண்டாம்! ஏன் எங்களுக்கு அதனை திருப்பி அடைக்க வழியிருக்கிறதா? என்று கூட நாங்கள் பார்க்க மாட்டோம் என்று ஆசை வார்த்தைகள் காட்டி. கடனை தலையில் கட்டி, அந்த வீட்டையும் பங்கு மார்க்கெட்டில் ஏலம் விட்டு பணத்தை பெருக்கி... பெருக்கி... ஊதி... ஊதி.... ஒரு கட்டத்தில் வெடித்துச் சிதறியதுதான் இந்த நெருக்கடி. தற்போது பணம் கொடுத்த வங்கிகள் திவாலாகி விட்டது. 10 கோடி ரூபாய் விற்ற வீடுகள் இன்றைக்கு ஒரு லட்சத்திற்கு விலை போகிறது என்றார் பாருங்கள்! பணத்தின் விளையாட்டை! தற்போது இந்த ஒரு லட்சம் கொடுத்து வீடு வாங்குவதற்கு கூட அமெரிக்காவில் ஆள் இல்லையாம்! அதாவது அவர்கள் உருவாக்கிய நெருக்கடி சூறைக்காற்றாய் அவர்களை பூமராங் போன்று தாக்குவதோடு உழைக்கும் மக்களையும், அப்பாவிகளையும் வீதிக்கு தள்ளி விட்டது.
இதனால் என்னென்ன விளைவுகள் தற்போது ஏற்பட்டுள்ளன?
உலகின் கோடீஸ்வர நாடான அமெரிக்காவில் மட்டும் ஒரு நாளைக்கு 17,000 வேலைகள் காலியாகின்றன. அதாவது, 17,000 பேர் வீதிக்கு தள்ளப்படுகிறார்கள். வேலை பார்த்த நிறுவனங்களிலிருந்து கழுத்தை பிடித்து தள்ளுகிறார்கள். இந்த எண்ணிக்கை டிசம்பர் 2008லிருந்து துவங்கி கடந்த 5 மாதங்களில் மட்டும் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் வேலையிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்கு 800 பேர் வேலையிழப்பதாக பத்திரிகையாளர் பி. சாய்நாத் கூறுகிறார்.
அமெரிக்காவில் தொடங்கிய இந்த வேலை பறிப்பு நடவடிக்கை - அதாவது முதலாளிகளின் சிக்கன நடவடிக்கை என்றாலே அது தொழிலாளிகளின் கழுத்தில் சுருக்கு கயிற்றை மாட்டுவது என்று அர்த்தம். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 7,72,000 பேர் வேலையிழந்துள்ளனர் அமெரிக்காவில். உலகிலேயே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா மாறிக் கொண்டிருக்கிறது. 7.2 சதவிகிதம் வேலையின்மை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. உண்மையில் இது 15 சதவிகிதம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பொருளாதார நெருக்கடியால் அனைத்து தொழில்களும் ஆட்டம் கண்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் இதன் தாக்கம் எந்த அளவிற்கும் குறையாத வகையில் சுனாமி அலைகளைப் போல் தாக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் ஐ.டி. துறையில் மட்டும் இரண்டு லட்சம் வேலைகள் பறிபோயுள்ளனர். மேலும் ஒரு லட்சம் பேர் வரும் ஆண்டுகளில் வேலையிழப்பர் என்று கூறப்படுகிறது. இது தவிர, டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல் என்று பெருந்தொழில்கள் எல்லாம் இன்றைக்கு தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இதன் பக்க விளைவாக 5 பேர் முதல் 100 பேரை வரை செய்யும் சிறு தொழில்கள் எல்லாம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உற்பத்தியில்லாமல் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர். இது தவிர பல இடங்களில் கடுமையான சம்பளவெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வேலை! ஓ.டி., இன்சென்டிவ் என்று வேலைபார்த்த அசோக் லேலண்ட் தொழிலாளர்களின் வருமானம் 20,000த்திற்கும் குறையாமல் இருந்தது. இன்றைக்கு அவர்களின் வருமானம் 5,000த்திற்கு சென்று விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைச் சூழலுக்கு பழக்கப்பட்டு விட்ட தொழிலாளர்கள். தற்போதைய பண நெருக்கடியால் குடும்பத்தில் நிம்மதியிழந்து தவிப்பது பெரும் கதையாக மாறிக்கொண்டுள்ளது. இவைகள் ஒருபுறம் என்றால், சென்னை - ஸ்ரீ பெரும்புத்தூரில் உள்ள ஹூண்டாய் மோட்டர்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிலளிகள் தங்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை வேண்டிய இரண்டு - மூன்று ஆண்டுகளாக களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். விளைவு என்ன? சங்கம் வைக்க உரிமையில்லை என்று நிர்வாகம் மறுக்கிறது. இதனால் சங்கத்தின் முன்னணி ஊழியர்கள் பந்தாடப்படுகின்றனர். பழிவாங்கப்படுகின்றனர். 65 பேரை வேலை நீக்கம் செய்துள்ளது நிர்வாகம். 34 பேரை இடைநீக்கம் செய்துள்ளனர். 7 பேரை வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளது. 1500 கேஷூவல் தொழிலாளிகளை பணி நீக்கம் செய்துள்ளது. தற்போது சங்கம் வைக்கும் உரிமை வேண்டி கடந்த ஒரு வாரகாலமாக வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளிக்கு ஆதரவாக சிஐடியூ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் நின்று போராடி வருகிறது. அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் நேரடியாக இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, இதற்காக நாடு தழுவிய முறையில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளார். கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தை ஓயாமல் ஒளிபரப்பிய ஊடகங்கள் பாதிக்கப்படும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக சில நிமிடங்கள் கூட ஒளிபரப்ப முன்வருவதில்லை என்பதிலிருந்தே இவர்களின் வர்க்கத்தன்மையை அறிய முடியும்! முர்டோக் போன்றவர்களின் முரட்டுக்கரங்கள்தான் ஊடகங்களை கட்டுப்படுத்துகின்றன. இதற்கு இந்திய ஊடகங்களும் எந்தவிதத்திலும் சளைக்காதவர்கள் அல்ல.
எனவே, இந்த மே தினம் என்பது சவால்கள் மிகுந்த மே தினமாக நம்முன் நிற்கிறது. முதலாளிகளால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியால் பாதிக்கப்பட்டது கரையோர அப்பாவி மீனவர்கள் என்பதுபோல் தொழிலாளிகளும், உழைக்கும் மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் மன்மோகனாமிக்ஸ், சிதம்பர நடனம் மற்றும் அத்வானி வகையறாக்களை இந்த தேர்தலில் தோல்வியடைச் செய்வது இந்த மே தினக் கடமையாக நம் முன் நிற்கிறது. மாற்று அரசு ஒன்று மத்தியில் ஆட்சியமைப்பதன் மூலமே இந்த நெருக்கடியிலிருந்து சிக்கித் தவிக்கும் மக்கள் மூச்சு விடுவதற்கான ஆரோக்கியமான காற்று சுவாசிப்பதற்கு கிடைக்கும்! மே தின சபதமேற்போம்! பன்னாட்டு மற்றும் இந்நாட்டு கொள்கை ஏஜண்டுகளான காங்கிரஸ் - பாஜகவை வீழ்த்துவோம்! மூன்றாவது மாற்றை மத்தியில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவோம்!
April 30, 2009
ஓட ஓட துரத்தும் வாக்குகளும்! கலர் மாறாத கருணாநிதியும்!
April 29, 2009
ஒபாமாவுக்கு சாவேஸ் கொடுத்த புத்தகம்!
இந்நிலையில் அமெரிக்க நாடுகளின் மாநாடு ஏப்ரல் 17-18 தேதிகளில், டோபாகோ-டிரீனிடாட்டில் நடைபெற்றது. இதில் 34 நாடுகள் கலந்து கொண்டனர். குறிப்பாக இம்மாநாட்டில் கியூபா மீதான தடையை நீக்கக்கோரும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட வெனிசுலா அதிபர் யூகோ சாவேஸ் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு "லத்தீன் அமெரிக்காவின் வெளிப்படையான வேதனைகள்" (Open Veins of Latin America) என்ற புத்தகத்தை வழங்கினார்.
இப்புத்தகத்தை எழுந்து நின்று, கைகுலுக்கி சாவேசிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஒபாமா, "நான் நினைக்கிறேன் இது சாவேசின் புத்தகங்களில் ஒன்று என" கூறியதோடு, "என்னுடைய புத்தகம் ஒன்றை உங்களுக்கு கொடுக்கிறேன்" என நகைச்சுவையோடு கூறினார்.
இந்தச் செய்தி பரவ ஆரம்பித்த சில மணிநேரங்களில் "லத்தீன் அமெரிக்காவின் வெளிப்படையான வெதனைகள்" என்ற புத்தகத்தின் விற்பனை கொடிகட்டி பறக்க ஆரம்பித்துவிட்டது. உருகுவே எழுத்தாளரான இடுரானோ காலியானோவால் ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்ட இப்புத்தகம் 1971-இல் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கிலப் பதிப்பு 1972-ல் வெளிவந்தது.
அமேசான் டாட்காம் நிறுவனத்தின் வியாபார பட்டியலில் 54,295 இடத்தில் இருந்த இப்புத்தகம் 24 மணி நேரத்தில் 6வது இடத்திற்கு வந்து விட்டது, தற்போது இது இரண்டாவது இடத்தை பிடித்துவிட்டது. ஒரே ஒரு வாரத்தில் இதன் விற்பனை உச்சத்திற்கு சென்று விட்டது. லட்சக்கணக்கான பிரதிகள் வெகு விரைவாக விற்றுத் தீர்ந்துவிட்டது.
லத்தீன் அமெரிக்காவின் வரலாற்றை சொல்லும் இப்புத்தகம், கடந்த 500 ஆண்டுகாலமாக அமெரிக்கர்களாலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளாலும் எப்படி ஒட்டச் சுரண்டப்பட்டது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. லத்தீன் அமெரிக்காவிலிருந்து லோடு கணக்கில் தங்கமும், மலைபோல் வெள்ளியும், பெட்ரோலிய பொருட்களும், கோகோ, பருத்தி, ரப்பர், பழங்கள், அலுமினியம், நிக்கல், என்று அனைத்து கனிமவளங்களையும் எப்படி சுரண்டிச் சென்றனர் என்பதை விளக்குகிறது இப்புத்தகம்.
இப்புத்தகம் குறித்து சாவேஸ் கூறும்போது, "லத்தீன் அமெரிக்காவின் வரலாற்றைச் சொல்லும் இப்புத்தகம், வரலாற்றை கற்றுக் கொள்வதற்கு உதவுவதோடு, வரலாற்றை உருவாக்கிடவும் உதவுகிறது" என்று கூறுகிறார்.
மொத்தத்தில் புதிய வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கும் லத்தீன் அமெரிக்கா கியூபாவின் சுவடுகளை பின்பற்றி வெனிசுலா, பொலிவியா, பிரேசில், ஈக்குவாடர் என்று வரிசையாக இடதுசாரிகளின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன. வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்பையும் கைக்கொண்டு உலகின் போராடும் சக்திகளுக்கு ஊக்க மருந்தாக திகழ்கிறது.
மறுபுறத்தில் உலக ஏகாதிபத்தியத்தின் சாம்ராஜ்யமாக திகழ்ந்த அமெரிக்காவின் பொருளாதாரம் இன்றைக்கு ஆட்டம் கண்டுள்ளது. அதன் பணச்சூதாட்டம் அப்பாவி மக்களை வீதிக்கு தள்ளியுள்ளது. கோட்டீஸ்வர நாட்டின் குடிமகன்கள் இன்றைக்கு வீதிகளில் கையேந்திக் கொண்டிருக்கின்றனர். அன்றைக்கு சோவியத் யூனியன் வீழ்ந்தபோது அதற்காக உலகம் முழுவதும் பெரும் பிரச்சாரத்தை கட்டவிழித்து விட்ட அமெரிக்காவும் அதன் எடுபிடிகளும் தற்போதைய நெருக்கடி குறித்து கள்ள மெளனம் சாதிக்கின்றனர். இருப்பினும் மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடியின் ஊடாக அதனை உணர்ந்துக் கொண்டுள்ளனர்.
லத்தீன் அமெரிக்காவை சுரண்டிய கைகள்தான் தற்போது 123-ஹைடு சட்டத்தின் மூலம் அணுசக்தி ஒப்பந்தம் மூலம் இந்தியாவை சுரண்டி திவாலான பொருளாதாரத்தை நிலைநிறுத்த துடிக்கிறது அமெரிக்காவும் - பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும். இதற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது காங்கிரசும் - பாஜகவும். எனவே இத்தேர்தலில் இவர்களை மூழ்கடிப்பதன் மூலமே தேசத்தை சுரண்டலிலிருந்து காப்பாற்ற முடியும். நமது வாக்குகள் அனைத்தும் மூன்றாவது மாற்றை நோக்கியதாக அமையட்டும் காஸ்ட்ரோ - சாவேசின் பாதையில் அடிவைக்கும் முதல் அடியாக மாறிட உங்கள் வாக்குகள் அதற்கு பயன்படும்.
April 27, 2009
வாக்களிப்பீர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு!
அன்பான நன்பர்களே, நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மூன்றாவது மாற்று அரசை அமைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதனுடன் அணிச்சேர்ந்துள்ள இடதுசாரி - ஜனநாயக அணிக்கும் வாக்களிப்பீர்! தமிழகத்தில் அஇஅதிமுக தலைமையில் இடம் பெற்றுள்ள சிபிஐ, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு வாக்களிப்பீர்! 40 தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்வீர்! பாதைகள் அனைத்தும்... வாக்குகள் அனைத்தும் மூன்றாவது மாற்றை நோக்கியதாக அமையட்டும். கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் வலுவான போராட்டத்தை நடத்தியதை நாடு அறியும். குறிப்பாக நம்முடைய வெளியுறவுக் கொள்கைகைய அமெரிக்காவின் காலடியில் அடகுவைத்ததோடு, அணு சக்தித்துறையில் நமது சுயச்சார்பை கேள்விக்குள்ளாக்கிய காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு எதிராக உறுதியுடன் போராடியது இடதுசாரி கட்சிகள். இவர்களது கொள்கைகளுக்கு ஒத்தூதியது திராவிட முன்னேற்றக் கழகம். அத்துடன் மதவாத பாஜக தொடர்ந்து மதக்கலவரங்களை ஏற்படுத்தி நாட்டையும், நாட்டு மக்களையும் தீவிரவமாக பிளவுபடுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதை எதிர்த்து உறுதியாக போராடியது இடதுசாரி கட்சிகள். எனவே அந்த கொள்கை உறுதியோடு எதிர்காலத்தில் வலுவான இந்தியாவை - உழைக்கும் மக்களுக்கான இந்தியாவை உருவாக்கும் பாதையை அமைத்திட மூன்றாவது மாற்றை தேர்வு செய்வீர்!
April 22, 2009
இலங்கை : அப்பாவும், அன்பு மகனும்!
தி.மு.க.வின் தேர்தல் ஜனநாயகம்!
மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட்டுகள் துப்பாக்கிமுனையில் வாக்குகளை பெறுவதாக குற்றம் சுமத்திய கருணாநிதியின் தேர்தல் ஜனநாயகம் எப்படி உள்ளது என்பதை இன்றைய தினமணியில் வெளியான கீழ்க்கண்ட செய்தியினை படித்து அறிந்து கொள்ளவும். இதுதான் கருணாநிதியின் உண்மை முகம்!
April 17, 2009
தலித் மக்களுக்காக கண்ணீர் வடிக்கும் அத்வானி!
தேர்தல் வந்து விட்டாலே பா.ஜ.க.வுக்கு என்ன செய்வது என்றே புரியாது? ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு ரத யாத்திரை நடத்துவது பா.ஜ.க.வுக்கு வழக்கம். ஏற்கனவே நடத்திய "ரத யாத்திரைகள்" எல்லாம் ராமரின் பெயரால் நடத்தப்பட்டு ரத்த யாத்திரையாக முடிந்தது. ராம ஜன்ம பூமி என்று கதைவிட்டு அப்பாவி இந்து மக்களின் மத உணர்வுகளை பயன்படுத்தி, மதவெறி அஜன்டாவை முன்வைத்த பா.ஜ.க. இசுலாமிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதலை நடத்தி 3000த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களை கொலை செய்து மதவெறி ரத்தத்தில் மூழ்கடித்தது.
பா.ஜ.க.வின் சாயம் மக்களிடம் எடுபடவில்லை. ராம ஜன்ம பூமி என்று கதையளந்த உத்திரப்பிரதேசத்திலேயே அதனை ஓட விட்டனர் மக்கள். ஒவ்வொரு தேர்தலிலும் பின்னடைவை சந்தித்த பா.ஜ.க. தற்போது உத்திரப்பிரதேசத்தில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
வட மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனது தளத்தை விரிவுபடுத்திக் கொண்டே வரும் தருவாயில், தற்போது தலித் மக்களின் நன்பனாக தன்னை முன்னிலைப்படுத்த துடிக்கிறது பா.ஜ.க.!
பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில், ஹரியானாவில் செத்துப்போன மாட்டின் தோலை உரித்தற்காகவே விஸ்வ ஹீந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் நான்கு தலித் அப்பாவி வாலிபர்களை கல்லால் அடித்தே கொன்றார்கள். பா.ஜ.க.விற்கும் ஆர்.எஸ்.எஸ்.சிற்கும் ஒரு தலித்தின் உயிரை விடவும் பசுவின் உயர் மேலானது என்ற சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர்கள் அல்லவா! அதனால் ராமபக்தர்கள் அன்றைக்கு தலித்துக்களின் உயிரை பலிகொடுத்து தனது சித்தாந்தத்திற்கு புத்துயிர் ஊட்டினர்.
அத்துடன் நின்றார்களா! மகாராஷ்டிர மாநிலம், பந்தாரா மாவட்டத்தில் உள்ள கயர்லாஞ்சி கிராமத்தில் பெளத்த மதத்தைத் தழுவிய - சுயகாலில் நின்ற தலித் போட்மாங்கே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மகன்கள் என்று நான்கு பேரை நேருக்கு நேர் கற்பழித்து - சின்னாபின்னப்படுத்தி - நிர்வாணப்படுத்தி கொலை செய்தார்களே உயர்சாதி ஆதிக்க வெறிர்கள். இதனைக் கண்டு நாடும், நாட்டு மக்களும் கொதித்து எழுந்த போது அந்த பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும்., பா.ஜ.க. எம்.பி.யும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக வாயை மூடிக்கொண்டிருந்தார்களே அதன் பின்னால் ஒளிந்துக் கொண்டுள்ள தத்துவம் என்ன? இந்துத்துவ சனாதன மதவெறி சித்தாந்தம்தானே!
அப்போதெல்லாம் தலித் மக்களைப் பற்றி கவலைப்படாத பா.ஜ.க. தேர்தல் நேரத்தில் திடீரென தலித் மக்கள் மீது கரிசனம் காட்டுவதென்ன! இது கசாப்புக் கடையில் காந்தியின் படம் தொங்கவிட்டிருப்பது போலத்தான் பா.ஜ.க. தனது ஓட்டு வங்கியை பெருக்கிக் கொள்ள தலித் ஆதரவு வேடம் பூண்டிருக்கிறது. ஏற்கனவே குஜராத்தில் காந்திய தத்துவத்திற்கு புதை குழி தோண்டிய பா.ஜ.க. காந்தியின் ராமராஜ்யமே எங்களது இந்துத்துவம் என்று புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கையில் தற்போது தலித்துக்களின் சகோதரர்களாக தன்னை அடையாளப்படுத்த முனைகிறார் அத்வானி.
இந்துத்துவம் என்பது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட தத்துவங்களையும், புராணங்களையும், கட்டுக்கதைகளையும், ஏன் மனுதர்மத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த மனுதர்மம்தான் தலித்துக்களை பார்க்கக் கூடாது, தொடக் கூடாது, பேசக் கூடாது, படிக்கக் கூடாது, ஒரு தலித்தை ஒரு மேல்ஜாதி பார்ப்பனன் கொலை செய்தால் அதற்கு தண்டனை வெறும் ஆடு, மாடுகளை கொல்லுவது போன்று என்று கருதி மன்னித்து விடலாம் என்று கூறிய அந்த சனாதர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் இந்துத்துவத்திற்கு சொந்தக்காரர்தான் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் அத்வானி.
உண்மை இப்படியிருக்கும் போது, ஏன் இந்த போலி வேடம்! யாரை ஏமாற்ற இந்த போலி வேடம்! தலித் மக்களின் இடஒதுக்கீடு உட்பட அனைத்திற்கும் வேட்டு வைக்கும் பா.ஜ.க. தலித் மீது பரிவு காட்டுவது வேடிக்கையிலும் வேடிக்கைதான். அது மட்டுமா? மகாராஷ்டிரத்தில் உள்ள மராத்வாடா பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்ற போது அதற்கு வானத்திற்கும் பூமிக்கும் எகிறிக் குறித்து சண்ட மாருதம் செய்தவர்கள்தான் இந்த இந்துத்துவாவாதிகள். எனவே, ஆர்.எஸ்.எஸ்.சின் அடிமையான அத்வானி தலித் நன்பனாக வேடம் பூணுவது தலித் மக்களை ஆட்சிக்கு வந்த பின் ஒடுக்குவதற்காகத்தனே ஒழிய வேறில்லை!
ஒடுக்கப்பட்ட மக்களே உஷார் ஓநாய் வருகிறது! வாக்குகளைப் பெறுவதற்காக அல்ல நம்மையே இரையாக்குவதற்காக!
April 16, 2009
ரோமாபுரி பாண்டியனும் மன்னர் மன்மோகனும்!
April 14, 2009
தீண்டாத குழந்தைகளும் அம்பேத்கர் பிறந்த நாளும்!
April 10, 2009
நவீன அடிமைகள்!
யார் இவர்கள், எதற்காக இவர்கள் இப்படி காத்திருக்கின்றனர் என்ற கேள்வி மேலிடாமல் இல்லை. இவர்கள் எல்லாம் வெளி மாநிலத்திலிருந்து அழைத்துவரப்பட்ட கூலித் தொழிலாளர்கள். பீகார், சட்டீஸ்கர், ஒரிசா போன்ற மாநிலங்களிலிருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் கூலித் தொழிலாளர்களாக, காண்ட்டிராக்ட் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை துறைமுகம், எம்.ஆர்.எல்., திருவொற்றியூர் - எண்ணூரில் உள்ள இரும்பு ஆலைகள், சென்னை பெருங்குடியில் உள்ள நவீன ஐ.டி. கட்டிடங்களைக் கட்டும் தொழிலாளர்களாகவும், சாலைகளை தோண்டி புதுப்பிக்கும் தோழர்களாகவும், பாதாள சாக்கடை முதல் அனைத்து கீழ்நிலைத் தொழில்களில் ஈடுபடும் புதிய ரக பிசாசுகளைக் (முதலாளிகள் இவர்களை இப்படித்தான் அழைக்கின்றனர்)கண்டுப்பிடித்துள்ளனர் நமது காண்ட்டிராக்டர்களும், முதலாளிகளும்.
நாள் முழுவதும் வற்றலும், தொற்றலுமாக - எலும்பும், தோலுமாக இருக்கும் அந்த தொழிலாளர்கள் குறைந்தது 12 நேரத்திற்கு மிகாமல் வேலை செய்கின்றனர். அதுவும் கடினமான வேலைகளில் அமர்த்தப்படுகின்றனர். நமக்கெல்லாம் மாதத்திற்கு 30 நாட்கள் என்றால், இவர்களுக்கு மட்டும் 50 நாட்கள். என்ன வித்தியாசமாகத் தெரிகிறதா ஆம் அப்படித்தான் கணக்கு. இவர்களுக்கு ஒரு மாதக் கணக்கு என்றால் 50 நாட்கள் என்று அர்த்தம். இந்த 50 நாட்களுக்கு கொடுக்கப்படும் கூலி எவ்வளவுத் தெரியுமா? 4000 முதல் 4500 வரை மட்டுமே. 17-18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கும், இங்கிலாந்திற்கும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பிடித்துவரப்பட்ட அடிமைகள் கப்பலில் ஏற்றிக் கொண்டு வருவார்கள். கப்பலில் கையிலும், காலிலும் விலங்குகள் பூட்டப்பட்டு பல்வேறு அடுக்குகளை அமைத்து அதில் கட்டிப்போட்டுக் கொண்டு வருவார்கள். சில நேரங்களில் பல அடிமைகள் நோய்வாய்ப்பட்டோ, அல்லது துன்புறுத்தப்பட்டோ இறப்பதும் நடக்கும். அப்போதுகூட பக்கத்தில் அவரது கையில் இணைக்கப்பட்டுள்ள கைதிகள் அந்த பிணத்துடனேயே பயணம் செய்ய வேண்டி வரும். சுகாதார சீர்கேடும், துர்நாற்றமும் கப்பல் முழுவதும் வீசும். அந்தக் காட்சிகளைத்தான் தற்போது சென்னை மாநகரமும், தமிழகத்தின் முக்கிய நரங்களும் சந்தித்து வருகின்றன என்றால் மிகையாகாது.
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து கோவளத்திற்கும், கேளம்பாக்கத்திற்கும் புறப்படும் பேருந்துகளில் 50 சதவிகிதம் பேர் வெளி மாநில தொழிலாளர்களே! மறைமலை நகர் முதல் ஹுண்டாய் கார் கம்பெனி வரை பல பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் காண்டிராக்ட் அடிமைகளாக இந்தத் தொழிலாளிகள் பயன்படுத்தப்படுகின்றனர்.
மேலும், கேளம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடி கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் இத்தொழிலாளர்களுக்கு பன்றி குடிசைகள் போன்று வெறும் தகர கொட்டாய்கள் அமைத்து ஒரு அறைக்கு 5 முதல் 10 பேர் வரை தங்க வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு குளிப்பதற்கும், கழிப்பிடத்திற்கும் கூட போதுமான தண்ணீர் கூட கிடைக்காத நிலையே நீடிக்கிறது. அது மட்டுமா? ஒரு ரூபாய் அரிசியைக் கொண்ட இவர்களது காலம் ஓட்டப்படுகிறது. மேலும் இத்தொழிலாளர்கள் பக்கத்து ஊர்களில் உள்ள காலியிடங்களில் காலைக் கடனை கழிப்பதற்கு சென்றால் அங்குள்ளவர்கள் துரத்துவதும், கல்லால் அடிப்பதும்கூட நடக்கிறது. ஏன் இவர்களை ஊருக்குள்கூட செல்வதற்கு அனுமதிப்பதில்லை. கார்ப்பரேட் முதலாளிகளும், காண்டிராக்ட் கொள்ளையர்களும் இவர்களுக்கு தேவையான அடிப்படையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில்லை. உண்மையில் கல்லைக் கொண்டு அடிக்க வேண்டியவர்கள் இந்த நவீன கொள்ளையர்கள்தான்.
பல இடங்களில் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்யும் தொழிலாளிகள் விபத்துக்களால் மரணம் அடைவதும் நிகழ்கிறதாம். அப்படிப்பட்ட சூழலில் வேலை செய்யும் நிறுவனமோ? அல்லது காண்டிராக்டரோ பொறுப்பேற்பதில்லை என்றும் கூறப்படுகிறது. பல மரணங்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைப்பதும் நடப்பதாக கூறப்படுகிறது.
சென்னை துறைமுகத்தில் பணியாற்றும் இதுபோன்ற வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இராயபுரத்தில் ஒரு திருமண மண்டபம் எடுத்து அங்கேயே 100க்கும் மேற்பட்டவர்களை அடைத்து வைத்துள்ளனர். இத்தகைய நரக வாழ்க்கைகூட இந்தத் தொழிலாளர்களுக்கு சுகம் அளிப்பதாக கூறப்படுகிறது. உண்மையில் ஒரிசாவிலும், பீகாரிலும், சத்தீஸ்கரிலும், இன்னும் பல மாநிலங்களில் உள்ள இதுபோன்ற சாதாரண உழைப்பாளி மக்களுக்கு உரிய வேலைவாய்ப்பையோ அல்லது பாதுகாப்பான வாழ்க்கையேயோ ஏற்படுத்திக் கொடுக்காத மாநில அரசுகளும், 60 ஆண்டு காலம் நாட்டை ஆண்ட காங்கிரசும், இதுபோன்ற தொழிலாளர்களை வைத்தே பில்லினியர்களாகவும், டிரில்லினியர்களாகவும் கணக்கை காட்டிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுமே இவர்கள் விஷயத்தில் முதல் குற்றவாளிகள்.
சென்னை உட்பட தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தொழிலாளர்கள் இதுபோன்ற நவீன அடிமைகளாக பணிபுரிகின்றனர். உலகமயச் சுரண்டலுக்கு கிடைத்துள்ள நவீன பிசாசுகளாய் முதலாளிகள் இவர்களை பார்க்கின்றனர்.
60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் எதை சாதித்தது காங்கிரசும், பா.ஜ.கவும். - இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்தியா ஒளிர்கிறது என்று கூறிய பா.ஜ.க. இன்றைக்கு அதனை அப்படியே மறந்து விட்டு, அத்வானி ஆட்சிக்கு வந்தால் ஐ.டி. துறையில் பல லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கப் போவதாக வாய்ச்சவடால் அடிக்கிறார். இதுபோன்ற அடிமட்டத் தொழிலாளர்கள் என்ன செய்வார்கள். ஐ.டி. பார்க்கில் புல் வெட்டுவார்களா? புல் புடுங்குவார்களா? என்பது அத்வானிக்கே வெளிச்சம்.
ஏன் திமுக அரசு மட்டும் என்ன செய்து கொண்டிருக்கிறது. சென்னையில் உருவாகிக் கொண்டிருக்கும் மாநில அரசின் தலைமைச் செயலகம் உருவாக்கும் பணியில் கூட இத்தகைய தொழிலாளர்களே ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களது வாழ்க்கைக்கும், பாதுகாப்புக்கும் தமிழக அரசு ஏதாவது உத்திரவாதம் செய்துள்ளதா? அல்லது முறையான கூலியை இந்தத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு உத்திரவாதம் செய்துள்ளதா? என்ற கேள்வியை இந்த நேரத்தில் எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
அது மட்டுமா? எதிர்கால முதல்வர் என்றும், இளையவர் மு.க. ஸ்டாலின் என்ன சொன்னார், கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சட்டக் கூலியான ரூ. 80 வழங்க வேண்டும் என்று போராடிய போது, போராடியவர்களைப் பார்த்து, இவர்கள் தூண்டி விடுகிறார்கள் என்றும், புரோக்கர்களாக செயல்படுகிறார்கள் என்றும் கூறினார். இதுதான் எதிர்கால முதல்வரின் கரிசனப் பார்வை! அதாவது மாநில அரசால் தீர்மானிக்கப்பட்ட சட்டக்கூலியைக் கூட ஒழுங்காக வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல வேண்டியவர். கொள்ளையர்களுக்கு துணை போகும் போது, இவர்கள் எப்படி வெளி மாநிலத் தொழிலாளர்களை கண்டு கொள்ளப் போகிறார்கள். கண்டு கொள்வார்கள். ஒருவேளை இந்த தொழிலாளர்களை வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வரும் தரகர் வேலையைக் கூட திமுகவினர் எடுத்துள்ளார்களோ என்னவோ! என்ற சந்தேகமே மேலிடுகிறது.
மொத்தத்தில் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்களை பாதுகாத்திடும் கடமையாற்ற, இவர்களுக்காக குரல் கொடுக்க, தமிழக தொழிலாளி வர்க்கம் எழவேண்டும். அப்போதுதான் இவர்களைப் பயன்படுத்தி சுரண்டும் இந்த கூட்டத்திற்கு வேட்டை வைக்க முடியும். ஓட்டு கேட்கும் காங்கிரசே, பா.ஜ.க.வே, திமுகவே உங்கள் ஆட்சிகளின் அலங்கோலமே மேற்கண்ட அவலம் என்று பறைசாற்ற வேண்டிய நேரமாகவே இதனை கருதுகிறேன்.

