மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் மகன் அழகிரியை நிற்க வைத்து, முடிசூட்டு விழா நடத்திட கனா கண்டு கொண்டிருக்கும் கருணாநிதி, எளிமையின் இலக்கணமாக திகழும் பி. மோகன் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பிணி பிடித்தவர்போல், பித்துபிடித்து அஞ்சாநெஞ்சருக்கு ஆபத்பாந்தவனாக தொடைதட்டி உடன்பிறப்புகளை உசுப்பிவிட்டுள்ளார். இதற்கு அண்ணாவையும் துணைக்கழைத்து தேர்தல் களம் காண அல்ல மார்க்சிஸ்ட்டுகளுக்கு எதிராக போர்க்களம் புகுவதற்கு கூர் தீட்டியுள்ளார் கருணாநிதி.
இன்று முரசொலியில் "பூச்சாண்டி பொம்மை" என்ற தலைபில் அவரது எழுதுகோல் சிந்திய மைக்கு எத்தனை பேர் இரத்தம் சிந்த வேண்டியிருக்குமோ? அல்லது எத்தனை உயிர்கள் இதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்குமோ? என்றே எண்ணத் தோன்றும் யாருக்கும்! எப்போதெல்லாம் இவர்கள் அரசியலுக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் அண்ணாவை துணைக்கு அழைப்பது வாடிக்கை! தோற்றால் பெரியார் வழி! வெற்றி பெற்றால் அண்ணா வழி என்று முழங்கிய கருணாநிதி எத்தனைமுறை தோல்வி கண்டாலும் உடன்பிறப்புகளின் கட்டளைக்கு இணங்க பணியாற்றுவதாக பிதற்றும் நவீன தசரதனாய் உலாவருபவர்தானே! ஆனால் இப்போது அண்ணாவை துணைக்கு அழைத்திருப்பது அஞ்சாநெஞ்சருக்கு ஆலவட்டம் சூட்டுவதற்காக. இதற்காக தங்களது உடன்பிறப்புகளை தியாகத்திற்கு அறைகூவி அழைக்கிறார்! எதற்காக அழகான தோட்டத்தில் மாங்கனிகளை பறிப்பதற்காக, பூக்களை கொய்வதற்காக அல்ல! தேர்தலில் போட்டியிடும் மகன் வெற்றியை ஈட்ட திருமங்கலத்தில் செய்திட்ட திருகுதாளங்களுக்கு தடையேதும் வந்தால் அவற்றை எப்படியேனும் முறியடித்திடுங்கள் என்ற அழைப்புதான் கருணாநிதியின் உணர்வில் கலந்து உடன்பிறப்புகளுக்கு கட்டளையாய் பிறப்பித்திருக்கிறது "பூச்சாண்டி பொம்மை".
கருணாநிதியின் அறிக்கையைப் பாருங்கள்! மிகுந்திருக்கும் கவலை நாட்டைக் காப்பதற்காக அல்ல. அழகிரியை காப்பதற்காக என்று தெரியும்!
"அழகிரியைப் பற்றி எனக்கே அல்லவா அச்சமாக இருக்கிறது! போட்டிக்கு நாள் குறிப்பதற்கு முன்பே புஜங்களைத் தட்டிக் கொண்டல்லவா; பொய்ப் புகார்களை அடுக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்; வங்கத்தில் துப்பாக்கியேந்தி வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள்!
அழகிரியை என்ன செய்வார்களோ; ஏது செய்வார்களோ; அழகிரி எதற்கும்- எந்தத் தியாகத்துக்கும் தயார்-என் மகன்களில் ஒருவன்; மதுரையில் சிலரது கண்களை உறுத்துவதை இந்த மாநிலம் அறியும். "இருப்பது ஓர் உயிர்; அது போகப் போவதும் ஒரு முறை; அது ஒரு நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே'' என்று அறிஞர் அண்ணா சொன்ன வாசகம் நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது."
வங்கத்தில் துப்பாக்கியேந்தி வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள் என்று அவதூறுகளை அள்ளி வீசியிருக்கும் இந்த பட்டா கத்தி பைரவர்களின் சுயமுகம் உள்ளாட்சித் தேர்தலில் நாறிப்போனதை நாடறியும். சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலல்ல - உள்ளாட்சித் தேர்தலில் பட்டாக் கத்திகள்தானே வாக்காளர்களாய் மாறியது.
ஜனநாயகத்தின் காவலராய் வேடம் பூண்டிருக்கும் கருணாநிதியின் கபட வேடம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவன் உதயகுமாரின் வடிவில் தமிழக மக்களின் கண்முன் எப்போதும் நிழலாடிக் கொண்டேயிருக்கும். "டாக்டர்" கலைஞர் என்பதற்கு பின்னாள் மறைந்திருக்கும் உதயகுமாரின் "தியாகத்தை" நாடறியும். பெற்றவர்களையே விற்றவர்களாக்கிய கருணாநிதி வங்கத்தில் துப்பாக்கி ஏந்தி வாக்கு சேகரிப்பதற்காக சிந்துபாத் கதை கூறுவதை பாலகரும் நகைப்பர்.
மத்தியிலே ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் கூட்டாளியாய் இருந்த ஆட்சியாளர் கருணாநிதி மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது வாக்குபதிவு அதிகாரிகள் உட்பட வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நடத்தப்பட்டதும், நான்கு நாள் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டு பகுதி பகுதியாய் நடத்தப்பட்டபோதும் துப்பாக்கியேந்திய வாக்கு சேகரிக்கும் தொண்டர்களையோ அல்லது வாக்குப் பெட்டிகளை கடத்திச் செல்லும் அஞ்சாநெஞ்சர்களையோ காண முடியவில்லை தேர்தல் கமிஷனால். அவர்கள் காணாததை கருணாநிதி கண்டு விட்டார் என்றால் அவரது கண் நல்லகண்தான்!
சென்னை மாநகர தேர்தல் உட்பட உள்ளாட்சி தேர்தல் களம் அஞ்சாநெஞ்சர்களின் அடியாட்களால் அமர்க்களமாய் நடத்தியதை தமிழகம் அறியும். அதற்கு விலை கொடுக்க தற்போது தமிழக மக்கள் தங்களது புத்தியை கூர் தீட்டிக் கொண்டுதான் உள்ளார்கள். சென்னையிலேயே ஓட்டை ஏற்பட்டு 14-ல் 7 தொகுதி காணாமல் போன கருணாநிதிக்கு மதுரையில் அழகிரியின் டெபாசிட் காணாமல் போகுமோ என்ற அச்சத்தால் வந்த எச்சம்தான் அந்த அறிக்கை.
அடுத்து கூறுகிறார் கருணாநிதி, "மதுரையில் சங்கரராக நின்று சவுராட்டிரர்களின் வாக்குகளைப் பெற்றிட அள்ளிக் கொட்டிய வெள்ளிப்பணம் பற்றித் தெரியாதா யாருக்கும்-அந்தத் தொகுதியில் மனம் கூசாமல் இஸ்லாமியர் வாக்குகளைப் பெற்றிட குல்லாய் அணிந்து சென்ற காட்சியை மதுரை மக்கள் தான் மறக்க முடியுமா?"
தேர்தலுக்கு தேர்தல் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தையும், கள்ளப் பணத்தையும், ஸ்பெக்ட்டிரம் ஊழல் பணத்தையும், ஏன் வீராணம் பணத்தையும் கூட விட்டு வைக்காமல் தண்ணீராய் செலவழிக்கும் கட்சியெது என்று தமிழக தாய்மார்கள் அறிவார்கள்! குல்லாய்களை மட்டுமல்ல, சிலுவைகளையும் சுமந்து காவடி தூக்கி பா.ஜ.கவுக்கு வெஞ்சாமரம் வீசி, குஜராத் பாசிச படுகொலைகளை கண்டிக்காமல் மவுனம் காத்து இந்துக்களின் ஓட்டுக்களை பத்திரமாய் காத்திட அத்வானியையும் - வாஜ்பாயையும் - மோடியையும் காவடியாய் சுமந்த கதையை நாடு அறியும். பதவிக்காய் குல்லா போடுபவர்கள் யாரென்று! நாய் கவிதை பாடி நட்பு பாராட்டிய உலகத் தமிழனின் ஒப்பற்ற பிரதிநிதியாரென்று உலகத் தமிழர்களுக்கு நன்றய் தெரியும்! கூடா நட்பின் பிரதிநிதி கருணாநிதியே என்று!
பாவமாம் அஞ்சாநெஞ்சர். மதுரையில் அவரது கைங்கரியம் மதுரை மக்கள் நன்றாக அறிந்தது தானே! அட்டாக் பாண்டியனும் - அஞ்சாநெஞ்னும் ஒரே உரையில் உள்ள இரு கத்திகளென்று. தினகரன் பத்திரிகையில் கொலையுண்ட 3 பத்திரிகையாளர்களுக்கும், தினகரன் ஊழியர்களுக்கும் அட்டாக்பாண்டியனை ஏவிய கை எதுவென்று தெரியாதா? முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணனின் கொலைக்கு பின்னணியில் இருந்தவர் யாரென்று போலீசாருக்குத்தான் தெரியாதா! 59வது வட்ட மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியின் கொலைக்கு பின்னிருந்த - ஊக்கம் கொடுத்த அஞ்சாநெஞ்சன் யார் என்று தெரியாதா?
மதுரை மக்களே வாக்களியுங்கள் உங்களிடம் வாக்கு எனும் கூர்மையான ஜனநாயக வாள் இருக்கிறது. அதனை தைரியமாக பயன்படுத்துங்கள் ஜனநாயகம் தழைத்திட, மதுரையை காப்பாற்றிட! பணத்தை வைத்து அரசியல் நடத்துபவர் மோகன் அல்ல! பணத்தை மட்டுமே வைத்து அரசியல் நடத்துபவர் அஞ்சாநெஞ்சரே! என்று உறக்கச் சொல்லும் மதுரை மக்களே உங்களது வாக்கு எதிர்கால சமூகத்தை நல்ல வழியில் செலுத்தப்போகும் துடுப்புச் சீட்டு.

