Showing posts with label பா.ஜ.க.. Show all posts
Showing posts with label பா.ஜ.க.. Show all posts

April 17, 2009

தலித் மக்களுக்காக கண்ணீர் வடிக்கும் அத்வானி!


ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்! அந்தக் கதையாக, பா.ஜ.க. பிதமர் வேட்பாளர் அத்வானிக்கு தலித்துகள் மீது கரிசனம் வந்து விட்டது. டாக்டர் அம்பேத்கரின் 118வது பிறந்த நாளையொட்டி, "தலித் சேதன ரத யாத்திரை" ஒன்றை துவக்கி வைத்துள்ளார்.
தேர்தல் வந்து விட்டாலே பா.ஜ.க.வுக்கு என்ன செய்வது என்றே புரியாது? ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு ரத யாத்திரை நடத்துவது பா.ஜ.க.வுக்கு வழக்கம். ஏற்கனவே நடத்திய "ரத யாத்திரைகள்" எல்லாம் ராமரின் பெயரால் நடத்தப்பட்டு ரத்த யாத்திரையாக முடிந்தது. ராம ஜன்ம பூமி என்று கதைவிட்டு அப்பாவி இந்து மக்களின் மத உணர்வுகளை பயன்படுத்தி, மதவெறி அஜன்டாவை முன்வைத்த பா.ஜ.க. இசுலாமிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதலை நடத்தி 3000த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களை கொலை செய்து மதவெறி ரத்தத்தில் மூழ்கடித்தது.
பா.ஜ.க.வின் சாயம் மக்களிடம் எடுபடவில்லை. ராம ஜன்ம பூமி என்று கதையளந்த உத்திரப்பிரதேசத்திலேயே அதனை ஓட விட்டனர் மக்கள். ஒவ்வொரு தேர்தலிலும் பின்னடைவை சந்தித்த பா.ஜ.க. தற்போது உத்திரப்பிரதேசத்தில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
வட மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனது தளத்தை விரிவுபடுத்திக் கொண்டே வரும் தருவாயில், தற்போது தலித் மக்களின் நன்பனாக தன்னை முன்னிலைப்படுத்த துடிக்கிறது பா.ஜ.க.!
பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில், ஹரியானாவில் செத்துப்போன மாட்டின் தோலை உரித்தற்காகவே விஸ்வ ஹீந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் நான்கு தலித் அப்பாவி வாலிபர்களை கல்லால் அடித்தே கொன்றார்கள். பா.ஜ.க.விற்கும் ஆர்.எஸ்.எஸ்.சிற்கும் ஒரு தலித்தின் உயிரை விடவும் பசுவின் உயர் மேலானது என்ற சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர்கள் அல்லவா! அதனால் ராமபக்தர்கள் அன்றைக்கு தலித்துக்களின் உயிரை பலிகொடுத்து தனது சித்தாந்தத்திற்கு புத்துயிர் ஊட்டினர்.
அத்துடன் நின்றார்களா! மகாராஷ்டிர மாநிலம், பந்தாரா மாவட்டத்தில் உள்ள கயர்லாஞ்சி கிராமத்தில் பெளத்த மதத்தைத் தழுவிய - சுயகாலில் நின்ற தலித் போட்மாங்கே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மகன்கள் என்று நான்கு பேரை நேருக்கு நேர் கற்பழித்து - சின்னாபின்னப்படுத்தி - நிர்வாணப்படுத்தி கொலை செய்தார்களே உயர்சாதி ஆதிக்க வெறிர்கள். இதனைக் கண்டு நாடும், நாட்டு மக்களும் கொதித்து எழுந்த போது அந்த பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும்., பா.ஜ.க. எம்.பி.யும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக வாயை மூடிக்கொண்டிருந்தார்களே அதன் பின்னால் ஒளிந்துக் கொண்டுள்ள தத்துவம் என்ன? இந்துத்துவ சனாதன மதவெறி சித்தாந்தம்தானே!
அப்போதெல்லாம் தலித் மக்களைப் பற்றி கவலைப்படாத பா.ஜ.க. தேர்தல் நேரத்தில் திடீரென தலித் மக்கள் மீது கரிசனம் காட்டுவதென்ன! இது கசாப்புக் கடையில் காந்தியின் படம் தொங்கவிட்டிருப்பது போலத்தான் பா.ஜ.க. தனது ஓட்டு வங்கியை பெருக்கிக் கொள்ள தலித் ஆதரவு வேடம் பூண்டிருக்கிறது. ஏற்கனவே குஜராத்தில் காந்திய தத்துவத்திற்கு புதை குழி தோண்டிய பா.ஜ.க. காந்தியின் ராமராஜ்யமே எங்களது இந்துத்துவம் என்று புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கையில் தற்போது தலித்துக்களின் சகோதரர்களாக தன்னை அடையாளப்படுத்த முனைகிறார் அத்வானி.
இந்துத்துவம் என்பது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட தத்துவங்களையும், புராணங்களையும், கட்டுக்கதைகளையும், ஏன் மனுதர்மத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த மனுதர்மம்தான் தலித்துக்களை பார்க்கக் கூடாது, தொடக் கூடாது, பேசக் கூடாது, படிக்கக் கூடாது, ஒரு தலித்தை ஒரு மேல்ஜாதி பார்ப்பனன் கொலை செய்தால் அதற்கு தண்டனை வெறும் ஆடு, மாடுகளை கொல்லுவது போன்று என்று கருதி மன்னித்து விடலாம் என்று கூறிய அந்த சனாதர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் இந்துத்துவத்திற்கு சொந்தக்காரர்தான் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் அத்வானி.
உண்மை இப்படியிருக்கும் போது, ஏன் இந்த போலி வேடம்! யாரை ஏமாற்ற இந்த போலி வேடம்! தலித் மக்களின் இடஒதுக்கீடு உட்பட அனைத்திற்கும் வேட்டு வைக்கும் பா.ஜ.க. தலித் மீது பரிவு காட்டுவது வேடிக்கையிலும் வேடிக்கைதான். அது மட்டுமா? மகாராஷ்டிரத்தில் உள்ள மராத்வாடா பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்ற போது அதற்கு வானத்திற்கும் பூமிக்கும் எகிறிக் குறித்து சண்ட மாருதம் செய்தவர்கள்தான் இந்த இந்துத்துவாவாதிகள். எனவே, ஆர்.எஸ்.எஸ்.சின் அடிமையான அத்வானி தலித் நன்பனாக வேடம் பூணுவது தலித் மக்களை ஆட்சிக்கு வந்த பின் ஒடுக்குவதற்காகத்தனே ஒழிய வேறில்லை!
ஒடுக்கப்பட்ட மக்களே உஷார் ஓநாய் வருகிறது! வாக்குகளைப் பெறுவதற்காக அல்ல நம்மையே இரையாக்குவதற்காக!

March 30, 2009

"போஸ்டர் பாய்" காட்சிகளும், காலியான மூளைகளும்!

என்.டி. டிவி, டைம்ஸ் நெவ், சிஎன்என்-ஐபின், ஹெட்லைன்ஸ் டுடே... இத்தியாதி, இத்தியாசி ஆங்கிலச் சேனல்களில் 24X7 அந்தப் பையனின் முகத்தை காட்டத் தவறுவதில்லை. கடந்த 15 நாட்களாக அந்தப் பையனின் முகம் தொலைக்காட்சி பார்க்கும் அனைவருக்கும் பரிட்சயமாகி விட்டது. அடையாளமாய்த் தங்கியும் விட்டான்! யார் அந்தப் பையன் என்றா கேட்கிறீர்கள் - வேறு யார்?"இஸ்லாமியர்களின் தலையை வெட்டுவேன்" என்று கூறி மதவெறியை கிளப்பி வன்முறையை தூண்டினானே வருண்காந்தி அவன்தான்.
முதலில் அவனது பேச்சைக் காட்டிய மீடியாக்கள்..
பின்னர் அவன் குறித்த சச்சையை காட்டிக்கொண்டே இருந்தது...
அடுத்து, தேர்தல் கமிஷன் அந்தப் பையனை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தாதீர்கள் என்று பா.ஜ.க.வை கேட்டுக் கொண்டது.. அதையும் சர்ச்சையாக்கியது...
அடுத்து, அந்தப் பையனின் கைது நடவடிக்கைக்கான தடையாணை பெற்றது...
பின்னர் தடையாணை விலக்கிக் கொண்டது...
அப்புறம் ஊர்வலமாகச் சென்று கைதாகியது...
இப்போது அந்தப் பையன் மீது பாய்ந்துள்ள என்.எஸ்.ஏ. (தேசிய பாதுகாப்புச் சட்டம்) பாய்ந்துள்ளது... என்று அந்த குற்றவாளியை ஒரு ஹீரோவாக உயர்த்துவதற்கு இந்த ஆங்கில மீடியாக்கள் சேவகம் புரிந்து வருகின்றன.
அவர்களே அதற்கான டைட்டிலையும் கொடுத்து விட்டார்கள். "இந்துத்துவாவின் போஸ்டர் பாய்". தேர்தல் காலத்தில் நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ளன. குறிப்பாக இந்தத் தேர்தலில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? என்று ஒரு பட்டியலிட்டு அதில் மக்களின் மனநிலைகளை அறிந்து ஒளிபரப்பி வாக்காளர்களுக்கு ஒரு சரியான திசைவழியை அடையாளம் காட்ட உதவ வேண்டிய இந்த மீடியாக்கள், தலையை வெட்டுவேன் என்று சொன்னவருக்கு கண்ணாடியாக செயல்பட்டு பாஜகவுக்கு மறைகமாக சேவகம் புரிந்து வருகிறது.
பா.ஜ.க. இந்த தேர்தலில் மண்ணைக் கவ்வும் என்று அனைவராலும் சொல்லப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் தேர்தல் விளையாட்டில் கூட்டாளியாக சேர்ப்பதற்கே ஆளில்லாத நிலையில், முகமிழந்து நிற்கும் இந்த தாமரைக்கு, "போஸ்டர் பாயை" தூக்கிப் பிடித்து இந்துத்துவா சேவை புரிந்து வாக்குகறை சேரிக்கும் புனிதப் பணியை நிறைவேற்றி வருகின்றன நவீன கோயபல்சு மீடியாக்கள்!
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் பாராளுமன்றத்தில் பா.ஜ.க. எப்படி செயல்பட்டது?
பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்பட்டதா? மக்கள் பிரச்சனைகளில் அவர்கள் எப்படியெல்லாம் ஆர்வம் செலுத்தினார்கள்? எந்தப் பிரச்சனைக்காக குரல் கொடுத்தார்கள்? அப்புறம் எப்படி கேள்வி கேட்பதற்கே பாராளுமன்றத்தில் கையூட்டு பெற்றார்கள்? ஒரிசாவில் நூற்றுக்கணக்கான அப்பாவி பழங்குடி கிருத்துவர்களை எப்படி கொன்றார்கள், வீடுகளை தீயிட்டு கொளுத்தினார்கள்,
அதே போல் காங்கிரஸ் கட்சி பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதில் காட்டிய ஆர்வம் சர்வதேச மார்க்கெட்டில் அடிமாட்டு விலைக்கு கச்சா எண்ணெய் விற்கும்போதுகூட ஏன் பொதுமக்களுக்கு விலையை இறக்க மறுக்கிறது. மாறாக, விமான சர்வீசுக்கான பெட்ரோல் விலைகயை எத்தனை முறை குறைத்து தங்களது விசுவாசத்தை மீண்டும் மீண்டும் நிரூபித்தது? அணு சக்தி விவகாரத்தில் மன்மோகன் சிங் எப்படி மண்ணாக நடந்துக் கொண்டார் பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிட்டது எப்படி? மகாராஷ்டிரா விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்வதற்கு எந்தவிதமான நிவாரணத்தையும் கடந்த ஐந்தாண்டில் தேடாமல் இருந்தது எப்படி! இதற்கான பரிகாரம் என்ன? பட்ஜெட் கூட்டத் தொடர் உட்பட பாராளுமன்ற நடவடிக்கைகள் மிக குறைந்த நாட்களே இந்த காலகட்டத்தில் நடந்ததன் ரகசியம் என்ன?
திமுக தலைவர் கருணாநிதி ஆரம்பத்திலேயே பெரிய பொறுப்புகளை அடைவதற்காக எப்படி மத்திய அரசை மிரட்டினார். அதேபோல் மத்திய அமைச்சர் ராசாவின் 2ஜீ - மொபைல் சர்வீஸ் ஊழல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது - கிட்டத்தட்ட வரலாற்றிலேயே நடக்காத ஊழல் என்று கூறப்படுகிறதே அது உண்மையா? என்ன ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் என்கிறார்களே அது என்ன?
அதேபோல் மலேகானில் பா.ஜ.க.வும்-சங்பரிவாரமும் குண்டு வைத்துக்கொண்டு இந்து பயங்கரவாதமாக எப்படி மாறியது! பயங்கரவாத அச்சுறுத்தலில் பாஜகவின் பங்கு என்ன? இப்படி நூறாயிரம் கேள்விகள் இருக்க ஏதோ வருண் காந்தியின் படத்தை திரும்பத் திரும்ப போட்டுக்காட்டி தங்களது காலியான மூளைகளைத்தான் அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது பெருமுதலாளித்துவ ஆங்கில மீடியாக்கள் அதற்கு ஒத்து ஊதி வருகிறது தமிழ் (சன்-கருணாநிதி) கார்ப்பரேட் மீடியாக்கள்.
மீடியாக்களை விட சிறந்த வலுவான ஆயுதம் மக்களது வாய்தான்! எனவே நாம் வாயாடுவோம்! உண்மைகளை உரைப்போம் மக்களிடம்! காங்கிரசு-திமுக, பாஜக கூட்டாளிகளை அம்பலப்படுத்துவோம்.

March 27, 2009

மகுடம் சூட்டிக் கொண்ட பிரதமர்கள்!

15வது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவருடத்திற்கு முன்னதாகவே பா.ஜ.க. தரப்பில் அத்வானியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டார்கள். அவரும் தானே அடுத்த பிரதமர் என்ற கித்தாப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மறுபுறத்தில் காங்கிரஸ் கட்சியும் தனது பங்குக்கு அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்விக்கு டாக்டர் மன்மோகன்சிங்தான் என்று பதிலுரைத்து விட்டது. மன்மோகன் சிங் பிரதமர் ஆக வேண்டும் என்றால் மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு கட்சி ஆட்சிமுறைக்கு இந்திய ஜனநாயகமும், மக்களும் விடைகொடுத்துவிட்ட பின்னணியில் மத்தியில் யார் வந்தாலும் அது கூட்டாட்சிதான் என்ற மந்திரம் உச்சஸ்தாயில் ஒலிக்கத் துவங்கிவிட்டது.
தானே ராஜா, தானே மந்திரி என்று வலம் வந்த காங்கிரஸ் கட்சியை சீண்டுவதற்கு யாரும் இல்லை. அவர்களது ஐக்கிய முற்போக்கு கூட்டணியெல்லாம் காற்றில் கலந்து கரைந்துவிட்டது. இந்தியாவின் பெரிய மாநிலங்களான உ.பி.யிலும், பீகாரிலும் காங்கிரசுக்கு பார்ட்னர் யாரும் கிடையாது! பா.ஜ.க. மட்டுமென்ன அவர்களும் எவ்வளவோ முயற்சி செய்தாலும் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ள மாட்டேங்கிறார்கள். இப்போதே பல பெரிய மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு முட்டை உறுதியாகி விட்டது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ஆந்திரா, திரிபுரா போன்ற மாநிலங்களில் முட்டைக்கு அட்வான்ஸ் புக்கிங்கெல்லாம் செய்து விட்டார்கள். அப்புறம் என்ன? காங்கிரசும் இதே பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டுமே மூழ்கும் கப்பல் என்று புரிந்து கொண்ட மாநில கட்சிகள் தங்களது அரசியல் மரியாதையை உயர்த்திக் கொள்ள, "என் வழி தனி வழி" என்று ராஜபாட்டையில் நடைபோடத் துவங்கி விட்டது. லாலுவும், ராம் விலாஸ்பஸ்வானும், முலாயமும் காங்கிரசுக்கு டூ... விட்டு விட்டார்கள்.

இந்தப் பின்னணியில்தான் அத்வானி ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார் மன்மோகன் சிங்கைப் பார்த்து... யார் சிறந்த நிர்வாகி என்று பார்க்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்! மக்களுக்குத் தெரியும் இந்த இரண்டு பேருமே உருப்படியானவங்க இல்லையென்று!


அத்வானி ஹவால கேஸ் முதல் பாபர் மசூதி இடிப்பு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றவாளி... அது மட்டுமா? நடப்பு பாராளுமன்றத் கூட்டத்தொடர்களிலும் குறிப்பாக பட்ஜெட் சமர்ப்பிக்கும் காலங்களிலும் உருப்படியான எதிர்கட்சியாக நடந்து கொள்ளாமல், தனது கருத்துக்களை பாராளுமன்றத்தில்கூட தெரிவிக்காமல் மன்மோகன் சிங்கிடம் புறக்கதவு வழியாக சென்று கருத்து தெரிவிக்க முற்பட்டு மூக்கு உடைபட்டவர்தான் அத்வானியும் பா.ஜ.க.வும். இதிலிருந்தே தெரியும் இவர்கள் எவ்வளவு பெரிய ஜனநாயகவாதிகள் என்று?

ரத யாத்திரைகள் மூலம் மதவெறியைத் தூண்டி சொந்த நாட்டு மக்களை சுய அரசியல் லாபத்திற்காக கொன்ற மதவெறிக் கூட்டத்தின் தலைவர் இந்த தேசத்தின் பிரதமர் என்பதை இந்த நாடு ஒருபோதும் ஏற்காது. இதன் மதச்சார்பற்ற மாண்புகள் ஏற்கனவே உ.பி.யில் இல்லாதது ஒழித்து விட்டது பா.ஜ.க.வை இந்த தேர்தலில் ஒட்டுமொத்த பா.ஜ.க.வும் மண்ணைக் கவ்வும்! இதுவே மக்கள் தீர்ப்பாக மாறிட வேண்டும்.


மன்மோகன் சிங் மக்களை சந்திக்காதவர் என்பதால், இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக்குரலையும் பொருட்படுத்தாமல், பாராளுமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமெரிக்காவுடன் தேனிலவு வைத்துக்கொண்ட அமெரிக்க பித்தர்!

எனவே, இந்த இரண்டு பேர் சார்ந்துள்ள கட்சிகள் முறியடிக்கப்பட் வேண்டியவை என்பதுதான் இந்த தேர்தலின் தீர்ப்பாக மக்கள் எழுதவுள்ளனர்.
அடுத்து, பா.ஜ.க. தனது ஆட்சிக்காலத்தில் தற்போதைய அரசியல் சட்டத்தையும், தேர்தல் நடைமுறைகளையும் கூட மாற்றி தனக்கு சாதகமாக மாற்ற முயன்ற ஒரு பாசிச அமைப்பு. அதாவது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போல பிரதமரை தேர்ந்தெடுக்கலாம் என்ற கனவு கொண்ட அமைப்பு. எனவேதான் நானே பிரதமர் என்று உளறிக் கொண்டிருக்கிறார் அத்வானி. நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் இதில் பெரும்பான்மை பெறுபவர்கள் கூடி தங்களுக்கான பிரதமரை தேர்வு செய்துக் கொள்வார்கள். இதுதான் இந்திய ஜனநாயகம் காட்டியுள்ள வழி. ஆனால் இதனை பை-பாஸ் செய்ய முனையும் காங்கிரஸ்-பா.ஜ.க. இரண்டையும் ஓடவிடுவோம்! மூன்றாவது மாற்றை - மக்களுக்கான மாற்றை - மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட அமைப்பை வலுவாக்கும் போன்ற முழக்கத்துடன் இடதுசாரிகளும் - மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் பலம் பெற்று வருகின்றனர். இவர்களை ஆதரிப்போம்!

March 23, 2009

ஜெய் ஸ்ரீ... ராம்!

ஜெய் ஸ்ரீ... ராம்... என்று தனது இரண்டு கைகளையும் சிக்சருக்கு தூக்குவது போல உணர்ச்சி பெருக்கெடுத்து, கண்களில் வெறியூட்டும் போதையோடு, வாயைப் பிளந்து கர்ஜித்தான் அந்த பால்வடியும் முகம் கொண்ட இளைஞன். அந்த இளைஞனுக்கு எதிரே இருந்த சிறுங்கூட்டமும் அப்படியே அதே வேகத்தோடு வாயைப் பிளந்தது ஜெய் ஸ்ரீ... ராம்... என்று கர்ஜித்தது.

அந்த இளைஞன் ஜெய் ஸ்ரீ... ராம்..., ஜெய் ஸ்ரீ... ராம்... என்று எத்தனை முறை கத்தியிருந்தாலும் யாரும் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது பக்தியின் முக்தி என்றே பரவசப்பட்டிருப்பார்கள்! எப்படியாவது அதிகாரம் என்ற நாற்காலியை பிடிக்க வேண்டுமல்லவா? அதனால் அதன் உச்சத்திற்கே சென்றான் அந்த இளைஞன், அப்புறம் என்ன "முஸ்லீம்களின் தலையை வெட்டுவேன்" என்று ஏதோ சாதாரணமாக தேங்காய் உடைப்பது போல தனது வெறியைக் கக்கினான்.
இப்படி கக்கியது யார்? மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி இவர்கள் வழியில் வந்த சஞ்சய்காந்தி-மேனகா காந்தியின் தவப்புதல்வன் வருண்காந்திதான் இப்படி பேசியுள்ளார். அதாவது, ஜவஹர்லால் நேரு மதச்சார்பற்ற கொள்கையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். இத்தகைய உயர் அரசியல் பின்னணியில் பிறந்து வளர்ந்த இந்த பலகனுக்கு திடீரென்று இப்படி வெறி ஏற்பட என்ன காரணம் என்று ஆராய வேண்டியது கடமையாகிறது.

வருண்காந்தியின் தாய் மேனகாகாந்தி, பிராணிகளை வதைக்கக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக செயல்பட்டவர். அதாவது, ஆராயச்சிக்காகக் கூட குரங்கு, பூனை போன்ற விலங்குகளை பிடிக்கக்கூடாது என்று சொன்னவர். இதனாலேயே பல மருத்துவ கல்லூரி மாணவர்கள் கூட சிறப்பான சோதனை செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். பல ஆராய்ச்சி சாலைகள் இதனாலி விழிபிதுங்கி நிற்கிறது. சரி இதுவாவது பரவாயில்லை; குழந்தைகளின் பெரும் பொழுதுபோக்காக இருந்த சர்க்கசில், புலி, சிங்கம், யானை... போன்ற மிருகங்களை பல வருடங்கள் பழக்கி வித்தை காட்டுவார்கள் இதற்குகூட தடை விதித்தவர்தான் வருண்காந்தியின் தாயார் மேனகா.

இப்படி மிருகத்தின் மீதெல்லாம் அன்பை செலுத்திய அந்த தாய் ஏனோ தனது மகனின் மனதில் இந்த நேசத்தை, மனிதத்தை நேசிக்கும் பண்பை உருவாக்க தவறிவிட்டார். இது அவருடைய குற்றமா? அல்லது தனது மகனின் "கூடா நட்பால்" ஏற்பட்ட வினையா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

காந்தி குடும்பத்தில் பிறந்த வருண் இன்றைக்கு கோட்சேவின் முகாமில் இருக்கிறான். அதாவது பா.ஜ.க.வின் தத்து(வ)ப்பிள்ளையாகி விட்டார். பா.ஜ.க.வும் இவரை உத்திரப்பிரதேசத்தில் உள்ள, பிலிபத் தொகுதியின் வேட்பாளராக அறிவித்து விட்டது. அங்குள்ள இந்துக்களின் ஓட்டுக்களை முழுமையாக வேட்டையாடுவதற்காகத்தான் இப்படி இஸ்லாமியர்களுக்கு எதிராக "வெறிக் கூச்சல்" போட்டுள்ளான் அந்த இளைஞன். அதுவும், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், தேர்தல் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று தேர்தல் கமிசனால் அறிவுறுத்தப்பட்டுள்ள பின்னணியில்தான் இவ்வளவு தைரியமாக! முழங்கியுள்ளான் அந்த பாலகன்.

அப்புறம் இந்த விசயம் மீடியாக்களில் கசிய, பின்னர் தேர்தல் கமிஷனுக்கும் புகார்கள் செல்ல... மீடியாக்கள் கடந்த 10 நாட்களாக 'அவனது குழந்தை முகத்தையும், வெறிக் கூச்சலையும்' ஒருசேர காட்டிக் கொண்டே இருந்தன. (இதனால் பார்ப்பவரின் மனதில் ஒருவிதமான ரசாயண கலவை ஏற்படுவதை டி.வி.யை பார்த்தவர்கள் உணர்ந்திருப்பர்.) இருந்தாலும் என்ன பயபக்தியோடு மீடியாக்கள் முன்னாள் மண்டியிட்ட அந்த வாலிபன். "தான் அவ்வாறு பேசவில்லை" என்றும், இதற்காக மன்னிப்புக் கோர மாட்டேன் என்றும், அது திட்டமிட்ட சதி என்றெல்லாம் தினமும் பவ்யமாக பொய்களையும் அள்ளித் தெளித்துக் கொண்டே வந்தான். இருப்பினும் என்ன? அறிவியல் யுகத்தில், அதுவும் காந்தியின் குடும்பத்தில் வந்த பேரனின் பேச்சை வீடியோ எடுக்காமல் இருப்பார்களா? அதுவும் கோட்சேவின் முகாமில் உள்ள முக்கிய வி.ஐ.பி. ஆச்சே! வீடியோ ஆதாரங்கள் எல்லாம் தேர்தல் கமிஷன் முன் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்குள் பா.ஜ.க. இவ்விஷயத்தில் பலமுறை ஜகா வாங்கியது. அவர் பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இல்லை என்று சொல்லியது. ஏற்கனவே சங்பரிவாரத்திற்குள் குடுமி சண்டைகள் உச்சத்தில் இருக்க இதுவேறவா என்று பம்மியது.

அதற்குள் தேர்தல் கமிஷனும் அனைத்து ஆதாரங்களையும் பரிசீலித்து குற்றவாளி என்று அறிவித்து விட்டதோடு, அவரை தேர்தலில் நிற்பதற்கும் தடை விதித்தது. அத்துடன் மதவெறியையும், இதர மதத்தினர் மீது துவேஷத்தை கக்கிய வருண் காந்தி மீது பல பிரிவுகளில் வழக்குகளையும் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு உறுதியானால் இவருக்கு மூன்று ஆண்டு தண்டணை உறுதி என்றும் கூறப்படுகிறது. ("Varun Gandhi has been booked under Section 153 (a) and Section 188 of the Indian Penal Code as well as Section 125 of the People's Representative Act. Investigations are on," said Senior Superintendent of Police (SSP), Pilibhit, R.K. Chaturvedi. While Section 153 (a) deals with "promoting enmity between different groups on grounds of religion, race, place of birth, residence, language etc and doing acts prejudicial to maintenance of harmony", Section 188 is on "disobedience to order duly promulgated by public servant". Section 125 of the People's Representative Act deals with "offence of promoting enmity between classes in connection with the elections".) இந்தியாவின் மக்கள் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் சீர்குலைவை உண்டாக்கும் வகையில் பேசிய இந்த பாலகனை சட்டம் நிச்சயம் தண்டிக்க வேண்டும். அது ஒருபக்கம் இருக்கட்டும்!

வருண்காந்திக்கு வேண்டும் என்றால் தலையெடுப்பது புதிதாக இருக்கலாம், ஆனால், பா.ஜ.க.வுக்கு தலையை எடுப்பது ஒன்றும் புதிய விஷயம் இல்லையே! ஏற்கனவே, சங்பரிவாரத்தின் முக்கிய அங்கமான விஸ்வ ஹீந்து பரிஷத்தின் தலைவரும், சன்னியாசியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வேதாந்தி என்பவர் தமிழக முதல்வர் கருணாநிதியை தலையை எடுக்க வேண்டும் என்று பேசியவர்தானே! குஜராத்தில் 2000 இசுலாமியர்கள் நரேந்திர மோடியால் துடிக்குத் துடிக்க வேட்டையாடப்பட்டார்களே! பூரண இந்துவான மகாத்மாவையே ஆர்.எஸ்.எஸ். நாதுராம் கோட்சே, சவார்க்கர் உட்பட இந்து மதவெறி கும்பலின் சதித் திட்டத்தால் உருப்பெற்று கோட்சேவின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானவர்தானே நமது தேசப்பிதா? எனவே, காந்தி குடும்பத்தின் ஒரு உறுப்பினராக வருண் இருந்தாலும் அவர் சேர்ந்திருப்பது மதவெறி கூட்டமல்லவா? அந்த சங்பரிவார சோதனைக் கூடத்தில் உருவாக்கப்படுபவர்கள் கோட்சேக்களாகத்தானே இருக்க முடியும்! பாராளுமன்றத் தேர்தலில் பயங்கரவாதம் முக்கிய அஜண்டாவாக உள்ள நிலையில், சாத்வி பிராக்யா சிங்கும், புரோகித்தும் எப்படி மலேகான் குண்டு வெடிப்பில் மூல காரணமாக இருந்தார்கள். மதவெறி குண்டுகளை எங்கெல்லாம் புதைத்தார்கள் பயங்கரவாதத்தை இராணுவத்திற்குள்ளும் புகுத்த முனைந்தவர்களிலிருந்து முளைத்த வருண்காந்தி மன்னிக்கப்பட வேண்டியவர் அல்ல தண்டிக்கப்பட வேண்டியவரே! அவர் மட்டுமல்ல! அவர் சார்ந்திருக்கும் சங்பரிவாரமும் - பா.ஜ.க. கூட்டமும் முறியடிக்கப்பட வேண்டிய ஒன்றே!

December 08, 2008

ராஜஸ்தானில் சரிந்தது இந்துத்துவ சாம்ராஜ்யம்!


2009 பாராளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகவும், சோதனைக் களமாகவும் விவரிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் இந்தி பேசக் கூடிய மாநிலங்களில் உள்ள மக்களின் மனநிலையை நன்றாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பா.ஜ.க. டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் வெற்றி பெறும் என்று கனவுக் கொண்டிருந்தது. ஆனால் மக்கள் தீர்ப்பு எதிர்கால பிரதமர் வேட்பாளர் அத்வானிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

இந்துத்துவாவின் சோதனைக் களங்களில் ஒன்றான ராஜஸ்தானில் 2003-இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பி.எஸ்.பி. (பிஜீலி - அதிகாரம், சடாக் - சாலை, பாணி - தண்ணீர்) என்று வருணிக்கப்பட்ட கவர்ச்சிகரமான கோஷத்தை முன்வைத்தது. தனது வழக்கமான இந்துத்துவா கோஷத்தோடு மக்கள் பிரச்சனைகளையும் தெரிவு செய்து வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு அதிகார வெறிபிடித்த, ஊழல் மற்றும் ஊதாரித்தனமான, தண்ணீர் கேட்ட மக்களுக்கு தண்ணீ காட்டிய அரசாக செயல்பட்டது.

அதாவது, கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் மக்கள் பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்வைத்து செயலாற்றியது வசுந்தரா ராஜ சிந்தியே அரசு. குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையான தண்ணீர் பிரச்சனைக்கு எந்தவிதமான தீர்வையும் கொண்டு வருவதற்கு லாயக்கற்றதாக இருந்தது. மேலும், குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் நாள்தோறும் தண்ணீருக்காக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர். அது மட்டுமா? மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகமான குஜ்ஜாருக்கு ஆட்சிக்கு வந்தால் பழங்குடி அந்தஸ்து தருவதாக கூறி ஏமாற்றியது. இதனால் பல மாதங்கள் ராஜஸ்தானம் அமைதியை இழந்தது. இவையெல்லாம் பா.ஜ.க.வின் தெளிவற்ற வாக்கு வங்கி அரசியலால் ஏற்பட்ட அரசியல் - சமூக குழப்பங்கள்.

அதேபோல், கடந்த ஐந்து ஆண்டுகளில் 45க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கி சூட்டினை நடத்தி 100க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களைப் பறித்து ஓர் அரச பயங்கரவாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டது. குறிப்பாக இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை - எளிய விவசாயிகள்தான். அதுவும் குறிப்பாக தண்ணீருக்காக போராடிய விவசாயிகளை குறி வைத்து தாக்கியது. ராஜஸ்தானத்து மக்களின் தண்ணீர் பிரச்சனைக்காக தொடர்ச்சியாக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கடும் தாக்குதலைத் தொடர்ந்தது.

அது மட்டுமா? தனத இந்துத்துவா கொள்கைகளை கல்லூரிகளிலும், கல்விச் சாலைகளிலும் கொண்டுச் சென்றது. இதற்காக ஜந்தோலியில் 2500 ஏக்கரில் கேசவ் வித்தியாபீத் விஸ்வ வித்யாலாயா என்ற சுயஉதவி பல்கலைக் கழகத்தை ஏற்படுத்தியது. இதில் முழுக்க முழுக்க இந்துத்துவா சித்தாந்தவாதிகளை உருவாக்குவதற்காகவே பாடத் திட்டங்களை வடிவமைத்தது. இதற்காக கல்வி மந்திரி முழுக்க முழுக்க தனது அதிகார எல்லைகளை எல்லாம் மீறி செயலாற்றியது கடும் விமர்சனம் எழுந்தது.

குறிப்பாக மேற்கண்ட பல்கலைக் கழகத்தில் சங்பரிவாரின் கோஷமான, "அறிவியலும் கலாச்சார தேசியமும்" என்ற பாடத் திட்டம் உருவாக்கப்பட்டது. அதேபோல், ஆயூர்வேதா, வேதகால அறிவியல், யோகவூம் - மருத்துவமும் போன்ற தலைப்புகளில் புதிய இந்துத்துவ பாடத் திட்டங்களை ஏற்படுத்தியது. அதாவது ராஜஸ்தான் மக்களின் மதச்சார்பற்ற கலாச்சாரத்திற்கு தத்துவார்த்த ரீதியாகவே வேட்டு வைத்தது.

மேலும், அந்த மாநிலத்தில் தலை தூக்கிய பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தத் தவறியது. குறிப்பாக சாமுண்டி தேவி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் மட்டும் 140 பேர் பலியாகினர். மொத்தத்தில் ராஜஸ்தான் மாநில அரசு அனைத்து முனைகளிலும் தோல்வியைத் தழுவியது. இதன் எதிரொலிதான் இந்துத்துவா என்பது மக்களுக்கு உதாவாத பிரிவினைவாத தத்துவம் என்பதை உணர்ந்துக் கொண்ட ராஜஸ்தான் மக்கள் அதனை ஆட்சியிலிருந்து விரட்டியுள்ளனர். குறிப்பாக 2003 ஆம் ஆண்டு 121 இடங்களை வென்ற பா.ஜ.க. தற்போது வெறும் 74 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களைப் பெற்று முதல் இடத்திற்கு வந்துள்ளது.

அத்துடன் ராஜஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று இடங்களை தன்னந்தனியாக நின்று வென்றுள்ளது. அதாவது ராஸ்தானத்து காவிக் கோட்டை இன்றைக்கு செங்கோட்டையாக - மாறுவதற்காக முதல் துவக்கமாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. இதன் மூலம் எதிர் வரும் காலத்தில் இடதுசாரிகளின் அரசியல் எழுச்சி இந்தி பேசக் கூடிய மாநிலங்களில் வலுவாக கால் ஊன்றுவதற்கான எதிர்பார்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர்.

குறிப்பாக தண்டா ராம்கார்க் தொகுதியிலிருந்து தோழர் அமரா ராம் நான்காவது முறையாக தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பிரேமா ராம் - தூத் (எஸ்.சி.) தொகுதியிலிருந்தும், பவன் குமார் துகால் - அனுப்கார்க் (எஸ்.சி.) தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தானில் உள்ள விவசாயிகள் - தொழிலாளிகள் பிரச்சனைகள் எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும். இந்த தேசத்தில் மக்களை பிளவுபடுத்தி - கொலைவெறித் தாண்டவமாடும் அஜண்டாவை மட்டும் முன்னிறுத்தும் பா.ஜ.க.வின் மதவாத அரசியலை வீழ்த்திட வேண்டும் என்றால் மதச்சார்பற்ற கட்சிகள் கொள்கை ரீதியில் ஓரணியில் திரள வேண்டும். மதச்சார்பற்ற அரசியலை - ஜனநாயக அரசியலை முன்னெடுக்க முன்வரவேண்டும். அதுதான் இந்த தேசத்தை கரை சேர்க்கும் பாதுகாப்பான படகாகும்.

August 15, 2008

கமலாலய காவிக் கம்பத்தில் தேசிய கொடி!

நம் தேசத்தின் 61வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடி வரும் வேளையில், தேசிய கட்சியான பா.ஜ.க.வின் மாநில அலுவலகமான கமலாலயத்தில் இன்று காவிமயமான (காவி - பச்சை நிறக் கம்பம்) பா.ஜ.க. கொடி கம்பத்திலேயே தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். அதன் மாநிலத் தலைவர் இல. கணேசன் உட்பட பல தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
தேசிய கொடியை உபயோகிப்பது குறித்து 2002 ஆம் ஆண்டு 'இந்திய கொடிச் சட்டம் 2002' கொண்டுவரப்பட்டது. அதாவது, தேசிய கொடியை அதற்கே உரிய கண்ணியத்தோடும், விசுவாசத்தோடும், மரியாதையோடும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளது. குறிப்பாக அதனை கண்ட நேரத்தில், கண்ட இடங்களில் எல்லாம் பயன்படுத்தக்கூடாது என்றும், ஏன் சட்டையின் டிசைனாகவோ அல்லது நிறுவனங்களின் விளம்பரங்களிலோ பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளதோடு, அது ஏற்றப்படும் கொடிக்கம்பம் குறித்தும் கூறப்பட்டுள்ளது.
தேசிய கொடியை பயன்படுத்துவது சம்பந்தமான சட்டத்தை கீழ்க்கண்ட இணையதளத்தில் படித்துக் கொள்ளலாம்.
http://india.gov.in/outerwin.htm?id=http://mha.gov.in/pdfs/flagcodeofindia.pdf
ஆறு ஆண்டுக்காலம் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோதுதான் இந்த சட்டமே கொண்டு வரப்பட்டது. ஆனால் தமிழக பா.ஜ.க. தலைமை இது குறித்து எந்தவிதமான கவலையும் படாமல் பா.ஜ.க. கொடி கம்பத்திலேயே தேசிய கொடியை ஏற்றியுள்ளது. தேசிய கொடியை அவமதித்த பெரும் குற்றமாகும்!
இந்த தேசிய கொடியை அவமதித்த குற்றத்திற்காக பா.ஜ.க. தலைமை மீது நம்முடைய நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்குமா? எடுக்க வேண்டும்!


அகண்ட பாரத இந்து தேசியம் பற்றி மட்டுமே கனவு கண்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்திய சுதந்திரத்தின் அருமை தெரியுமா? என்ற கேள்விதான் எழுகிறது!

April 05, 2008

பாரத மாதா கி ஜே

சங்பரிவாரம் தன்னை எப்போதும் கட்டுப்பாடான அமைப்பாக பெருமையடித்துக் கொள்வது வழக்கம். குருஜி வழிபாடு கொண்ட பாசிச அமைப்பல்லவா? அதன் வழிவந்த அரசியல் அமைப்பான பா.ஜ.க.வின் தொண்டர்களும் மிகவும் கட்டுப்பாடானவர்கள் போல் காட்டிக் கொள்வது வழக்கம்.
ஆனால் உண்மை என்ன? பதவிக்கும் - புகழுக்கும் கட்சி தலைமைக்குள்ளே அடிக்கடி அடிதடி நடப்பது வழக்கம். ஒருவர் காலை ஒருவர் வாரி விட்டு உள்ளூர சந்தோசப் பட்டுக் கொள்ளும் அமைப்பே பா.ஜ.க.
ஹேகேனக்கல் விசயத்தில் கர்நாடக பா.ஜ.க. (தமிழக பா.ஜ.க.) அடித்த அரசியல் ஸ்டண்ட் தமிழகத்திலும் - கர்நாடகத்திலும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இரு மாநில மக்களும் ஒருவரை ஒருவர் பகைமை உணர்வோடு பார்க்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. பா.ஜ.க.வின் இந்த சீர்குலைவை எதிர்த்து இன்று பு.தொ.வி.மு. வகையறாக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
தி.நகரில் உள்ள மாநில அலுவலகமான கமலாலயத்தில் இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் (சிலர் குண்டர்களாக இருந்தனர். அவர்களது பேச்சு கேட்பவர் காதை மூடிக் கொள்ளும் அளவிற்கு இருந்தது.) கொஞ்ச நேரத்தில் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த சிலர் பாரத மாதா கி ஜே என்று முழங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்களையெல்லாம் உள்ளே போகுமாறு அறிவுறுத்திக் கொண்டிருந்த பா.ஜ.க. தலைவர் ஒருவரை இன்னொரு ஜி தாக்க... அவ்வளவுதான் கைகலப்பு முற்றி விட்டது. கேமராக்களிலிருந்து தப்புவதற்காக மீண்டும் பாரத மாதா கி ஜே என்று உரக்க முழங்கினர். கட்டுப்பாடான கட்சின்னு சொன்னாங்களே அது இதானான்னு அங்கிருந்த மக்கள் சரியாக புரிந்து கொண்டிருந்தனர். கட்டுப்பாடான கட்சியா? கட்டிப் புரளும் கட்சியா?
வழிபோக்கர் ஒருவர் இந்த வீரத்தை கொஞ்சம் எடியூரப்பாவிடமாவது காட்டியிருக்கலாமே என்று கூறிக்கொண்டே சென்றது நல்ல காமெடியாக இருந்தது.

September 22, 2007

பா.ஜ.க.வின் சுரண்டல் ஆயுதமே ராமர்!


அயோத்தியில் ராமருக்கு கோயில் இது நேற்றைய அரசியல் முழக்கம் பா.ஜ.க.வுக்கு. உத்திரபிரதேச மக்கள் ராம பக்தர்களாக இருந்தாலும் பா.ஜ.க.வின் பித்தர்களாக இருக்க விரும்பவில்லை. ராமரை பா.ஜ.க.விடமிருந்து காப்பாற்றி விட்டனர். அதனால்தான் அவர்களை ஆட்சியில் இருந்தும் ஓரம் கட்டி விட்டனர். ஏன் பா.ஜ.க.வை நான்காவது இடத்திற்கே தள்ளி விட்டனர். அயோத்தி ராமர் கைவிட்டால் என்ன?
தென்னக இராமர் இருக்கிறால் அல்லவா? அதனால்தான் இன்றைக்கு பா.ஜ.க.வின் புதிய அரசியல் முழக்கமாக ராமர் பாலத்தை முன்வைத்து தேசத்தில் பெரும் மதக்கலவரத்தை தூண்டும் உள்நோக்கத்தோடு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையிலேதான் மாற்றுக் கருத்தை தெரிவித்த தி.மு.க. தலைவர் கலைஞரின் அன்பு மகள் செல்வியின் வீட்டில் தாக்குதலை தொட்டுள்ளார்கள். பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதலை தொடுத்துள்ளனர் மதவெறி சங்பரிவார கும்பல். மேலும் தமிழகத்திற்கு வந்து கொண்டிருந்த பேருந்தை மறித்து தீ வைத்து கொளுத்தி இரண்டு பேரை கொன்றுள்ளனர் இந்த இந்துத்துவவாதிகள்.
தற்போது வி.எச்.பி. ராம்விலாஸ் வேதாந்தி முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்றும்ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும் - நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.
ராமர் பாலம் விசயத்தை பயன்படுத்தி எப்படியும் ஆட்சிக் கட்டிலை பிடிக்க வேண்டும் என்ற வெறியோடு இந்த காட்டுமிராண்டி கும்பல் அலைந்து கொண்டிருக்கிறது. இதற்காக மாற்றுக் கருத்துத் தெரிவிப்பவர்களுக்கு எதிராகவும் பாசிச தாக்குதல் தொடுத்திடவும் சங் பரிவாரம் தயாராகி வருவதைத்தான் காட்டுகிறது. இதனை நாம் மிக எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
மகாத்மா காந்தியை கொன்ற கோட்ஷேவின் வாரிசுகள் இவர்கள் என்பதை நாம் மறக்க கூடாது. மேலும் காமராஜருக்கு எதிராகவும் - அவரை கொல்வதற்கும் முயன்ற கும்பல்தான் இந்த சங்பவரிவார கும்பல்.
எனவே மதச்சார்பற்ற கட்சிகள் - ஜனநாக சக்திகள் - இடதுசாரிகள் என அனைத்து தரப்பும் மிகவும் எச்சரிக்கையோடு செயல்பட்டு இந்த காட்டுமிராண்டி கும்பலின் அனைத்துவிதமான சதிகளையும் முறியடிப்பதோடு - இவர்களது இந்துத்துவ தத்துவத்தை இந்த தேசத்திலிருந்தே விரட்டியடிக்க வேண்டியுள்ளது.
இந்த காட்டுமிராண்டிகள் இன்றைக்கு விடுத்துள்ள அறிக்கையில் ராமராஜ்யத்தை அமைப்பதாக கனவு கண்ட மகாத்மாவின் உணர்வுகளை கூட மதிக்கவில்லை என்று வேஷம் போட்டுள்ளனர்.
மகாத்மா கனவு கண்ட ராம ராஜ்யமும் - பா.ஜ.க. - சங்பரிவாரத்தின் ராம ராஜ்ய கனவும் ஒன்றா? இவர்கள் அகன்ட பாரதம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் முதல் பாகிஸ்தான் வரை அனைத்தையும் ஆக்கிரமிக்கும் நோக்கோடு செயல்படும் வெறிகொண்ட காட்டுமிராண்டி கும்பலே இந்த சங்பரிவார கும்பல் என்பதை நாம் மறப்பதற்கு இல்லை.
மகாத்மா காந்தி அவர்கள் இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிக்கப்படுவதற்கு எதிராக உறுதியாக போராடியவர். இந்துக்களும் - இசுலாமியர்களும் இந்தியத் தாயின் ஒரே பிள்ளைகள் என்று வலியுறுத்தியவர். மதனினை மனிதன் மதிக்க வேண்டும் என்ற உன்னதமான சாத்வீக தத்துவ நெறியோடு - அகிம்சையை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர். இந்த சங்பரிவாரங்களின் நெறி எது? அடிப்படை கோட்பாடு எது? இந்த அமைப்பு தோன்றியது முதல் கொலை வெறியையும் - மதவெறியையும் மட்டுமே தனது நோக்கமாக கொண்டு ஆதிக்க வெறியோடு செயல்படும் சங்பரிவாரம் ராம ராஜ்யம் குறித்து பேசுவது வெட்கக் கேடானது.
மதச்சார்பற்ற இந்து பக்தர்கள் - கடவுள் பக்தி கொண்டவர்கள் ராமரை தங்களுடைய சுரண்டல் கேடயமாக பயன்படுத்தும் இந்த மதவெறியர்களிடம் இருந்து மீட்க வேண்டிய தருணம் வந்து விட்டது. கோடிக்கணக்கான இந்து பக்தர்கள் - மசுதிக்கும் - தேவலாயத்திற்கும் சகோதர உணர்வோடு - உண்மையான பக்தியோடு நாள்தோறும் சென்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்! இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் இந்த காட்டுமிராண்டிகளுக்கு எதிராக ஒரே குரலில் இந்திய மக்கள் எழுந்து நிற்க வேண்டிய சரியான தருணம் இதுவே!

September 21, 2007

பா.ஜ.க.வின் அமெரிக்க அடிமைத்தனமும்! கலாச்சார பாசிசமும்!!


பா.ஜ.க. தேசிய செயல்குழு கூட்டம் மத்திய பிரதேசத்தில் உள்ள ராஜா போஜ் நகரில் இன்று துவங்கியது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க.விற்குள் ஏற்பட்டுள்ள தலைமை நெருக்கடி மற்றும் அஸ்தமிக்கும் அதன் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. கூட்டத்தில் உரையாற்றிய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தங்களது அமெரிக்க அடிவருடித்தனத்தையும், பொய்யையும், புளுகையும் கொஞ்சம் கூட கூசாமல் உரையாற்றி சங்பரிவார தொண்டர்களை புல்லரிக்க வைத்துள்ளார்.
அதில் ஒரு சிலவற்றை இங்கே பட்டியலிடுவது பொருத்தமாக இருக்கும். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். ஆனால் பாசிஸ்ட்டுகளின் புளுகு எட்டு நிமிடம் மட்டுமே!
இந்தியாவின் 60 ஆண்டு சுதந்திர தினத்தையும், 1857 இல் நடைபெற்ற இந்திய முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150 வது ஆண்டு குறித்தும் நினைவு கூர்ந்த ராஜ்நாத் சிங், அதனை நாடு முழுவதும் கொண்டாடப் போவதாக கூறியுள்ளார்.
எந்த முகத்தை வைத்துக் கொண்டு என்பதை மட்டும் அவர் விளக்கவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் வீர் சவார்க்கார் இனியும் நான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்று எழுதி கொடுத்து விட்டு சுதந்திரப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்து, பிரிட்டிஷ் காவல் நாய்களாக (வாட்ச் டாக்) கலாச்சார தேசியம் என்ற பெயரில், இந்திய மக்களுக்குள் மோதலை உருவாக்கி - பிரிவினைக்கு வித்திட்டு, இந்தியாவின் ஆன்மாவாக திகழ்ந்த மகாத்மாவை கொலை செய்த கோட்சேவின் வாரிசுகள் எப்படியெல்லாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடிமைச் சேவகம் புரிந்தார்கள் என்பதை பேசப்போகிறார்களோ என்னவோ! போலி தேச பக்திக்கு சங்பரிவாரங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?
அடுத்து, இந்தியா உலகளவில் பொருளாதாரத்தில் சூப்பர் பவராக வளர்ந்து விட்டதாம், உலகளவில் அறிவாளிகளின் மையமாக இந்தியா திகழ்கிறதாம், அத்தோடு உலகளவில் இராணுவ சூப்பர் பவராக திகழ்கிறராம்! இதற்கெல்லாம் காரணம் இவர்கள் 6 ஆண்டுகள் ஆட்சி செய்ததால்தானாம்!
இந்தியா ஒளிர்கிறது என்று முழக்கத்தை வைத்து தேர்தலை சந்தித்த பா.ஜ.க.வை மக்கள் விரட்டியடித்ததை இன்னும்கூட மறக்கவில்லை என்றே தெரிகிறது! அதனால்தான் அதே கோஷத்தோடு, வேறு மொழியில் பேசத் துவங்கியுள்ளனர். இந்தியா பொருளாதாரத்தில் சூப்பர் பவராக வளர்ந்து இருக்கிறதாம்? ஐயா படித்தவர்களே இது உண்மையா? தண்ணிர் தனியார்மயமாகி விட்டதால் தண்ணீருக்காக கண்ணீர் விடும் கதையெல்லாம் பா.ஜ.க.வினருக்கு தெரியாது போலும், அதை விடுங்கள் புதிய பொருளாதார கொள்கை என்ற பெயரால் எத்தனை பேர் வேலையிழந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள், ஏன் பென்ஷன் திட்டம் முதல் பல சேம நலத் திட்டங்கள் படாத பாடுபடுகிறதே, இன்னும் கூட வறுமைக் கோட்டுக்கு கிழே உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறானே! எதற்காக? இவர்கள் வழிவந்த பொருளாதார கொள்கையால் இந்தியா சூப்பர் பவராக மாறி விட்டது என்றால் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து விட்டதா? சுகாதார திட்டங்கள் எப்படி செயல்படுகிறது? என்பதையெல்லாம் விளக்குவார்களா? இவர்களைப் பொருத்தவரை சூப்பர் பவர் என்றால் வேறு எதுவும் இல்லை! அதையும் ராஜ்நாத் சிங்கே கூறிவிட்டார். கோரஸ் என்ற இந்திய நிறுவனம் ஐரோப்பாவில் கூட்டு வைத்துக் கொண்டு தொழில் தொடங்கி விட்டதாம்! ஐயா முதலை கண்ணீர் என்பார்களே அது இதுதான்!
விவசாயிகள் தற்கொலை குறித்தும் அவர் மறக்காமல் பேசியுள்ளார். இது பற்றியும் தேசிய அளவில் விவாதிக்க வேண்டுமாம்!
ஐயா ராஜ்நாத் சிங் அவர்களே கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் 10,000த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்களே இதற்கு நீங்கள் சொந்தம் கொண்டாட மாட்டீர்களா? இந்த தற்கொலைகளுக்கு உங்கள் கொள்கை வழிவகுக்கவில்லையா? இதைத்தான் சூப்பர் பவர் பொருளாதாரம் சாதித்ததா? ஏன் உங்கள் கூட்டணி ஆட்சி செய்த மகாராஷ்டிராவில்தானே விதர்பா உள்ளது! இந்திய நாட்டு விவசாயிகளை குழிதோண்டி புதைத்த கொள்கை வீரர்களே இன்னொரு தேர்தலுக்காக மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் உங்களை அடியோடு விரட்டியடிக்கத்தான்!
இந்தியா அறிவாளிகளின் மையமாக திகழ்கிறதா? அப்புறம் ஏன் சங்பரிவாரங்களை சார்ந்த வீரப் புலிகள் எல்லாம் அமெரிக்காவில் தஞ்சம் அடைகிறது! குறிப்பாக மென்பொருள் துறையில் அமெரிக்கா என்று அவர்களுக்கு சேவகம் செய்து - இங்கே கலவரத்தை உருவாக்க நிதியனுப்புவதற்காகவே என்று மக்கள் கேட்பது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?
இராணுவத்தில் சூப்பர் பவராக இருக்கிறோமா? எப்படி என்பதை கொஞ்சம் விளக்குவீர்களா? நீங்கள் ஆட்சி செய்த காலத்தில் நமது எல்லையான கார்கிலுக்குள் பயங்கரவாதிகள் புகுந்து கொண்டது கூட தெரியாமல் இருந்ததாலா? அல்லது நமது எல்லையில் இருந்து அவர்களை விரட்டியடித்து விட்டு பெரும் சாதனைப் போல் டமாரம் அடித்துக் கொண்டிர்களா? அதனாலா? அல்லது பாராளுமன்ற வளாகத்திற்கு உள்ளேயே நுழைந்து தாக்குதல் நடத்தியதும் உங்கள் ஆட்சிக்காலத்தில் தானே! உங்களது இன்டிலிஜன்ஸ் திவலானதைக் கூட நீங்கள் எப்போதும் ஒத்துக் கொள்வதில்லை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்! அதை விடங்கப்பா ஈராக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு கோடிக்கும் மேல் மக்களை கொன்று குவித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு கூஜா தூக்குவதற்காக இந்தியா இராணுவத்தினரை அனுப்ப உத்தேசித்தீர்களே அதனால் சூப்பர் பவராகி விட்டது என்று கதைக்கிறீர்களா?
அவரது பேச்சில் கோதுமை இறக்குமதிக்காக கொஞ்சம் கவலைப் பட்டுள்ளார்! பா.ஜ.க. ஆட்சியில் 6 கோடி டன் கோதுமை புளுத்துப் போனதும், எலிக்கு இரையாக்கியதையும் அதே நேரத்தில் விவசாயிகள் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி இறக்க நேரிட்டதையும் இன்னும் மறக்கவில்லையா? உங்களது ஆட்சியில்தான் இந்த இறக்குமதி கொள்கைகை முதன் முதலில் துவக்கி வைத்தீர்கள்! இப்போது நீலிக் கண்ணீர் வடிப்பதெல்லாம் பாட்சா பலிக்காது.
அணு சக்தி ஒப்பந்தத்தில் தங்கள் நிலையை தெளிவாக விளக்கியுள்ளார்கள்? என்ன விளக்கினார் என்று ராஜ்நாத் சிங்கிற்கோ அல்லது கூட்டத்தில் இருந்த பரிவாரங்களுக்கே ஒன்றும் தெரியாது! ஏனென்றால் அவர்களது நிலையை அவ்வப்போது விளக்கி விட்டார்களாம். மேலும் அவர்கள் ஆட்சியில் அணு குண்டு வெடித்து சோதனை செய்ததை சாதனையாக கூறியதோடு, அமெரிக்காவோடு தற்போதைய இராணுவ கூட்டாளி ஒப்பந்தத்தையும் அவர்கள் துவக்கி வைத்ததையும், கேந்திர கூட்டாளியாக அமெரிக்காவோடு கைகோர்த்ததையும் வெட்கம் இன்றி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அத்தோடு இதனை விவாதிப்பதற்காக கூட்டு பாராளுமன்ற குழு அமைக்க வேண்டுமாம்! இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இந்திய பாராளுமன்றத்தில் விவாதிப்பதை அனுமதிக்க கூடாது என்ற நோக்கத்தில்தானே பாராளுமன்ற நடவடிக்கைகளையே முற்றிலும் கேலிக்கூத்தாக்கி - ஜனநாயக நடவடிக்கைகளை முடக்கினீர்களே அதை நாங்கள் மறக்கவில்லை! மக்களும்தான்....
இறுதியாக சேது சமுத்திரம் தொடர்பாக மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அது நம்பிக்கை சார்ந்த விஷயமாம் எனவே ராமாயணம் குறித்தோ அல்லது ராமர் குறித்தோ கேள்வி எழுப்புவது அபத்தமாம்! ஆனால் பாபர் மசூதி மட்டும் இசுலாமியர்களுக்கு நம்பிக்கை சார்ந்த விஷயம் இல்லையாம்! அது அவமானச் சின்னமாம்...! இந்த நம்பிக்கை குறித்தெல்லாம் உலகளவில் அறிவுஜிவிகளாக இருக்கும் இந்தியர்கள் யாரும் கேள்வி கேட்கக் கூடாது! உஷ்.... உஷ்.... உஷ்....
இறுதியாக, பா.ஜ.க. கலாச்சார தேசியம் என்ற தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிறதாம். ஆனால் தற்போது நவீன பொருளாதார வளர்ச்சியால் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறதாம்! எப்பா என்ன கருணை! என்ன கருணை!! ஒரு பக்கம் பொருளாதார வளர்ச்சி என்று குத்தாட்டம் போடும் பா.ஜ.க. அதனால் ஏற்பட்ட சீரழிவுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பார்களாம் அதற்கு மற்றவர்கள்தான் காரணமாம்! ஹலோ பா.ஜ.க. தலைவரே உங்களது இதுபோன்ற தேசிய செயல்குழு கூட்டம் ஒன்று நடைபெறும் போது ஜோஷி என்ற மகாராஷ்டிர சங்பரிவார தலைவரின் அஜால் குஜால் சி.டி. யெல்லாம் உங்களது பார்வைக்கே அனுப்பி வைக்கப்பட்டதே அதை மறந்து விட்டீர்களா! அடுத்து உங்களது பா.ஜ.க. எம்.பி.க்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி அம்பலப்பட்டுப் போனார்களே அதை மறந்து விட்டீர்களா? முதலில் சங்பரிவாரத்திற்குள் கலாச்சார தேசியத்தை நிலைநாட்டுங்கள்... இந்திய மக்களின் ஒற்றுமை எனும் கலாச்சாரத்தை கெடுத்து தேசத்தை பிளவுபடுத்துவதே நீங்கள்தான் என்பதை மக்கள் மறக்கவில்லை! தற்போது உங்களிடம் மிச்சமிருப்பது அமெரிக்க அடிமைத்தனம் மட்டுமே!

May 17, 2007

மனுவாதி குருமூர்த்தியின் புலம்பலும் மாயாவதியின் மாட்சிமையும்!




உத்திரபிரதேசத்தில் மாயாவதி தலைமையில் மதச்சார்பற்ற அரசு அரியனை ஏறியுள்ளதை சங்பரிவார கூட்டத்தால் ஜீரணிக்க முடியவில்லை; அதுவும் யாருமே எதிர்பார்க்காத வகையில் தனிபெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்ததை சங்பரிவார கூட்டத்தை கதிகலங்க வைத்துள்ளது.


இன்றைய (17.5.2007) தினமணியில் ‘மனுவாதி - மாயாவதியுடன் உடன்பாடு’ என்ற தலைப்பில் எஸ். குருமூர்த்தி தீட்டியுள்ள கட்டுரை சங்பரிவாரத்திற்குள் இருக்கும் வெக்கையை உணர முடிகிறது.


பா.ஜ.க.வின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ச்சி செய்வதை விட்டு, விட்டு மாயாவதி எப்படி ஆட்சியைப் பிடித்தார் என்பதை விளக்கெண்ணையை விட்டு ஆராய்ந்துக் கொண்டிருக்கிறார் குருமூர்த்தி.


கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பது தமிழ் பழமொழி! அதுபோல மாயாவதி கடந்த இரண்டு வருட காலமாக எப்படி பிராமணர்கள் உட்பட உயர்ஜாதியினரோடு உடன்பாடு கண்டு, அவர்களை தன் பக்கம் வளைப்பதில் வெற்றி கண்டு வந்தார் என்பது உலகறிந்த விஷயம். அரசியல் சாணக்கியத்தனம் என்பது சங்பரிவார மனுவாதிகளுக்கு மட்டுமே உரியதாக கருதிக் கொண்டிருக்கையில் அதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் மாயாவதி. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத குருமூர்த்தி மனுவாதியோடு கூட்டு என்று குற்றம் சுமத்துகிறார்!


மாயாவதி மனுவாதியோடு கூட்டு வைத்தாரா? அல்லது ஏழ்மையில் உழலும் உயர்ஜாதியினரோடு கூட்டு வைத்தாரா? மனுவாதம் என்றால் என்ன? மனுவாதத்தை இன்றைக்கும் தோளில் போட்டு சுமக்கும் கட்சிதான் பா.ஜ.க.வும் சங்பரிவாரமும்! ஆம்! ஆர்.எஸ்.எஸ்.இல் இன்றைக்கும் பெண்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவதில்லை! மேலும், மக்களின் பிரச்சனைகளை முழுக்க முழுக்க திசை திருப்பி ராமருக்கு கோவில் என்றும், ராமர் பாலம் இடிப்பு என்றும், இசுலாமியருக்கு எதிரான கட்டுக்கதைகளை திரிப்பதும், பாகிஸ்தான் பூச்சாண்டி காட்டுவதும், கிறித்துவ கோயில்களை தாக்குவதும், கன்னியாஸ்திரிகளை கற்பழிப்பதும், இந்திய மக்களை இந்தியாவிலேயே அகதிகளாக்குவதும்தான் உண்மையான மனுவாத சிந்தனை.


மனுவாதத்தின் நவீன அடையாளமே சங்பரிவாரம்தான். ஹரியானாவில் செத்த மாட்டை உரித்ததற்காக நான்கு தலித் இளைஞர்களை கல்லால் அடித்தே கொன்ற காட்டுமிராண்டி கூட்டம்தான் பா.ஜ.க.வும் - சங்பரிவாரமும். தலித் மக்களை இன்றைக்கும் தீண்டத்தக்காதவர்களாக பார்க்கும் கூட்டம்தானே சங்பரிவாரம். இத்தகைய கேடு கெட்ட கூட்டம் மாயாவதியை மனுவாதத்தோடு கூட்டு என்று அவரை மனுவாதத்தோடு இணைக்கப் பார்ப்பதே உண்மையான மனுவாத சிந்தனையின் வெளிப்பாடு!


இந்த சீரழிந்த சிந்தனையில் செயல்படும் பா.ஜ.க.வை உ.பி.யில் ராமேரே கைவிட்டு விட்டார் என்பதுதான் உண்மை!


உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தியாவையே ஒரு குஜராத் போல் மாற்றியிருப்பார்கள். அதற்கான வழியை அடைத்து விட்டார்கள் உத்திரபிரசேத மக்கள்! இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் ஒரு விஷயத்தில் குறியாக இருந்தார்கள் அது உ.பி.யில் மதச்சார்பற்ற அரசு அமையவேண்டும் என்பது மட்டும்தான்! இந்தியாவை சூழ்ந்துள்ள பெரும்பான்மை பாசிச மனுவாத சிந்தனைக் கொண்ட இந்துத்துவா ஆபத்தை உணராத காங்கிரசையும் உ.பி. மக்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளதோடு, பா.ஜ.க. போலி தேச பக்திக்கும் சம்மட்டியடி கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே பெற்ற 43 இடங்களில் பா.ஜ.க. தற்போது துடைத்தெறியப்பட்டுள்ளது.


இதற்கான ஆத்ம பரிசோதனையை குருமூர்த்தி நடத்துவதை விட்டு, விட்டு - புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மாயாவதியின் புதிய சித்தாந்தத்தின் மீது தாக்குதல் தொடுக்கவும், கறையேற்றவும் துடிக்கிறார் குருமூர்த்தி! இவர்களது திசை திருப்பல்களுக்கு தமிழக மக்களும், இந்திய மக்களும் இறையாக மாட்டார்கள்!


இன்றைய தினம் தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது போல், சேது - சமுத்திர திட்டத்தை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தேச துரோகிகள்தான் என்பது மிக நிதர்சனமான கூற்று. இந்திய மக்களையே கடத்தி வேற்று நாட்டுக்கு விற்கும் தரம் குறைந்த வியாபாரிகள்தான் இந்த சங்பரிவாரத்தினர் என்பதை நாடு உணர்ந்துக் கொண்டது இனியும் எடுபடாது உங்கள் ராமர் அரசியல்!


இந்தியாவின் எதிர்காலம் மதச்சார்பற்ற - கூட்டாட்சி அரசியலே! பா.ஜ.க. - சங்பரிவார - இந்துத்துவ அரசியலால் இந்தியா ஒருபோதும் ஒளிராது.

April 21, 2007

பா.ஜ.க.வின் தூய்மை - நேர்மை

பாரதிய ஜனதா கட்சி தன்னைத்தானே வித்தியாசமான கட்சி என்று அழைத்துக் கொள்வது உண்டு. ஆனால், அந்த கட்சி எந்த வகையில் வித்தியாசமானது என்பது நாளுக்கு நாள் அம்பலமாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு கூட லஞ்சம் வாங்கி பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர் பாஜகவை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் வெளி வந்து 6 மாதத்திற்குள் குஜராத்தை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பாபுபாய் கடரா கனடாவுக்கு ஆள் கடத்த முயன்ற போது கையும் களவுமாக பிடிபட்டு தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். தனது மனைவி மற்றும் மகள் பெயர்களில் உள்ள பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி ஒரு பெண்ணையும், பதினோரு வயது சிறுவனை யும் கனடாவுக்கு சட்டவிரோதமாக கடத்திச் செல்ல முயன்ற போது பாஜக எம்.பி. பிடிபட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டுகளை சோதனை செய்யும் குடியேற்ற அதிகாரிகளிடமிருந்து அதிக விசாரணை இருக்காது என்பதை பயன்படுத்தி இவ்வாறு இவர் சட்டவிரோதமாக பலரை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். இவரது இந்த வித்தியாசமான தொழிலுக்கு பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் பலரையும் புரோக்கர்களாக பயன்படுத்தி வந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.பாபுபாய் கடரா பாஜக எம்பி மட்டுமல்ல. குஜராத் மாநில விஸ்வ இந்து பரிஷத் தலைவராகவும் இருக்கிறார். குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம் மக்களை நரவேட்டையாடியதில் விஎச்பிக்கு முக்கிய பங்கு உண்டு. எத்தகைய கிரிமினல் பேர்வழிகளால் மதவெறி அமைப்புகள் நடத்தப்படுகின்றன என்பதற்கு கடரா ஒரு சமீபத்திய உதாரணமாகும்.
ஹவாலா ஊழலில் சிக்கியவர்தான் பாஜக-வின் தலைவர் எல்.கே.அத்வானி. இந்த விவகாரம் அம்பலமானவுடன் பதவியை ராஜினாமா செய்வதாக நாடகமாடினார். பின்னர் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை என்று தனக்குத் தானே நற்சான்றிதழ் வழங்கிக் கொண்டு வெட்கமின்றி மீண்டும் பதவிக்கு வந்தார். இப்போது கடராவை பாஜகவிலிருந்து நீக்கியிருப்பதாக அவசர அவசரமாக அறிவித்துள்ளனர். பாஜகவை பொறுத்தவரை தவறு செய்பவர்கள் அந்த கட்சியில் இருக்க முடியாது என்பதல்ல. விபரம் இல்லாமல் மாட்டிக் கொண்டவர்கள் நீக்கப்படுவார்கள் என்பதுதான் பாஜக-வின் நடைமுறை தர்மமாக உள்ளது.
பாஜகவின் தேசிய தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக வீடியோ கேமராவால் பிடிபட்டார். வெங்கையா நாயுடு நில மோசடி ஊழலில் சிக்கினார். பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்த போது நடைபெற்ற ஊழல்கள் எண்ணிலடங்கா. அந்த கட்சி மோசடி பேர்வழிகளின் பாதுகாப்பு மையமாகவே செயல்பட்டு வருகிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது. பாபுபாய் கடராவின் மோசடிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரது வெளிநாட்டு பயணங்கள் முழுவதையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே இத்தகைய இழி செயல்களில் ஈடுபடுகிறார் என்றால் பாஜகவில் எத்தகைய நபர்களுக்கு பதவி தரப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். பாஜக ஒரு வித்தியாசமான கட்சிதான். விதவிதமாக மோசடி செய்து பணம் சம்பாதிப்பது எப்படி என்பதில்தான் அந்த கட்சி வித்தியாசம் காட்டி வருகிறது.
Thanks:Theekkathir Editorial