Showing posts with label தி.மு.க.. Show all posts
Showing posts with label தி.மு.க.. Show all posts

April 22, 2009

தி.மு.க.வின் தேர்தல் ஜனநாயகம்!

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட்டுகள் துப்பாக்கிமுனையில் வாக்குகளை பெறுவதாக குற்றம் சுமத்திய கருணாநிதியின் தேர்தல் ஜனநாயகம் எப்படி உள்ளது என்பதை இன்றைய தினமணியில் வெளியான கீழ்க்கண்ட செய்தியினை படித்து அறிந்து கொள்ளவும். இதுதான் கருணாநிதியின் உண்மை முகம்!


மேலும், இலங்கை விவகாரத்தில் ஏப்ரல் 23 அன்று பொதுவேலை நிறுத்தம் என்று நாடகம் ஆடியுள்ளார் கருணாநிதி. உண்மையென்னவென்றால், அன்றைய தினம் மதுரையில் 59வது வார்டு கவுன்சிலரான தோழர் லீலாவதி கொலை செய்யப்பட்ட தினம். அன்றைய தினத்தில்தான் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கூட்டம் மதுரையில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களும் உரையாற்ற உள்ளார்கள். இந்நிலையில் அந்தப் பொதுக்கூட்ட நிகழ்வை அன்றைய தினத்தில் சீர்குலைக்கும் நோக்கோடுதான் கருணாநிதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது அரசியல் சாதூர்யம் யாருக்கு வரும்! அவருக்கு நிகர் அவரே! அவரது சாணக்கியத்தனம் எல்லாம் நாட்டு மக்களுக்கானதா? அல்லதது தனது மக்களுக்கானதா? என்பதை மக்கள் சிந்திக்கத் துவங்கி விட்டார்கள். அதுமட்டுமா? இன்றைய தினம் விலைவாசி உயர்வு என்பது இந்தத் தேர்தலில் முதன்மையான பிரச்சனையாக முன்னுக்கு வந்துள்ளது. ஆன்லைன் டிரேடிங் என்பதும் பதுக்கல் பேர்வழிகளாலும்தான் விலைவாசி விண்ணுக்கு ஏறியது. மத்திய அரசியல் இருந்த கருணாநிதி என்றைக்காவது ஒருநாளாவது இது குறித்து கவலைப்பட்டிருப்பாரா? இன்றைய தினம் அவரது கலையெல்லாம் இந்தத் தேர்தலில் எப்படி கரையேறுவது என்பதுதான். காங்கிரசுடன் சேர்ந்து பயணிக்கும் திமுக ஒரு மூழ்கும் கப்பல் என்பதை தமிழக மக்கள் எப்போதோ தீர்மானித்துவிட்டனர்.

August 22, 2008

ஆற்காடு வீராசாமியின் அரசியலுக்கு ஹார்வர்டு யூனிவர்சிட்டி டாக்டர் பட்டம்!



தமிழக அரசியல் கிளைமாக்ஸ் கட்டத்திற்கு வந்துள்ளது. தி.மு.க. - இடதுசாரிகளிடையே நடந்து வரும் அறிக்கை போர் உண்மையை நாட்டு மக்களுக்கு உரைப்பதாக உள்ளது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற கருணாநிதி தனது பேனா முனையில் உதிர்த்த கவிதை அவரது உளவியல் அரசியலை படம் போட்டு காட்டியுள்ளது.
"அவாள் நமக்கு எப்போதும் சவால்தான் என்ற உண்மை!" என்று கூறியதோடு இறுதியில் "நன்றியில்லா உள்ளம் கண்டு நாய்கள் கூட சிரிக்குமய்யா!" என்று முடித்துள்ளார்!

கருணாநிதிக்கு அவாள் என்ற வார்த்தை ஒன்றும் புதிதல்லவே! அவருக்கு எதிராக இந்து பத்திரிகை எழும் போதெல்லாம் இதே பல்லவியைத்தான் அவர் தொடர்ந்து பாடுவார். அதாவது இவரது பாணியில் சொல்ல வேண்டும் என்றால் அவாளாக இருந்தாலும், இவாளாக இருந்தாலும் அவருக்கு அடக்கமாகவும், அவரது விருப்பத்திற்கு ஏற்பவும் நடனம் ஆட வேண்டும். அவ்வடி இருந்தால் அவர் அவாளை தலையில் கூட சுமந்து செல்வார்.

அதைவிட முக்கியமானது கருணாநிதிக்கு பதவி கிடைக்கும் என்றால் அத்வானிக்கு கூட காவடி தூக்குவர். அதைத்தான் 1996-ல் பா.ஜ.க.வோடு நான்கரை ஆண்டுக்காலம் பதவியில் அமர்ந்து அனுபவித்து விட்டு பின்னர் கொள்கை பேசி காங்கிரஸ் பக்கம் தாவி இன்னொரு நான்காண்டுக்காக பதவியில் ஒட்டிக் கொண்டுள்ளார்.

தற்போது இருக்கும் பதவியை காப்பாற்றிக் கொள்ள பாபர் மசூதி இடிப்பு குறித்து பேசுகிறார். மதவாதம் ஆபத்து என்று முழங்குகிறார். தோழமை தேவை என்று உதட்டில் உதிர்க்கிறார். 1992 இல் பாபர் மசூதி இடிப்பு குறித்து பேசும் கருணாநிதி குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த மதக்கலவரம் பற்றி வாயே திறக்க மாட்டேன் என்கிறார்! எதற்காக அப்போது அவர் பா.ஜ.க.வின் இணை பிரியாத சங்பரிவார ஒட்டுண்ணி. இப்போதெல்லாம் பா.ஜ.க. இந்துத்துவா கொள்கையை அமலாக்கும் போது இவருக்கு திராவிட கொள்கை என்ற அவாள் எதிர்ப்பு சித்தாந்தம் மறந்துப் போய்விடுகிறது. அது இவருக்கு அடிக்கடி ஏற்படும் நினைவு மறதி நோய்தான்.

இப்போது இவரது அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு தோழர் ரங்கராஜன் போன்ற சி.பி.எம். தலைவர்கள் இணங்கவில்லை என்பதால் நன்றியில்லா நட்பு - நாய்கள் கூட சிரிக்குமய்யா என்கிறார். நாய்கள் சிரிப்பது கிடக்கட்டும் இவரது மதவாத எதிர்ப்பு என்ற கொள்கை வேட்டியைக் கண்டு கோமணம் கூட சிரிப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

அடுத்து இவரின் மனசாட்சியாம் ஆற்காடு வீராசாமி இவரது அரசியல் சிந்தனை எப்படிப்பட்டது என்பதை நாம் விளக்கத் தேவையில்லை. அது ஊருக்கே வெளிச்சம். இவரை 1975 இல் எமர்ஜென்சியில் கைது செய்து போலீசார் அடித்த போது எப்போதும் போலீசாலின் மேசை காலுக்கும், போலீசாலின் பூட்ஸ் காலுக்கும் அடியில் அழுதுக் கொண்டேயிருபாராம்... அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட்டுகள் சிறைக்குள்ளும் போலீஸ் சித்திரவதையை எதிர்த்து போராடிய வரலாறு அனைவரும் அறிந்ததே.

இந்த கொள்கை கோமாளிதான் இப்போது சொல்கிறார். கம்யூனிஸ்ட்டுகள் - இடதுசாரிகள் சீனாவுக்கு ஆதரவாக இருக்கிறார்களாம், சீன பொருட்கள் எல்லாம் இந்திய சந்தையில் குவிகிறதாம்! இதை கேட்டவுடன் பன்றி கூட சிரிக்கத்தான் செய்யும். கடந்த 10 ஆண்டு காலமாக பா.ஜ.க. - காங்கிரஸ் மந்திரி சபையில் முக்கிய இலாக்களில் உட்கார்ந்துக் கொண்டு ஆட்சி செய்யும் தி.மு.க.வின் பொருளாதார கொள்கைதான் சீனாவை மட்டுமல்ல அமெரிக்கா போன்ற நாய்களைக் கூட உள்ளே கொண்டு வந்துள்ளது. கம்யூனிஸ்ட்டுகள் போய் சீனர்களை அழைத்த வர முடியுமா? அதற்கான அதிகாரம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உண்டா? இந்த அடிப்படை அறிவுகூட கிடையாத ஆற்காட்டார்தான் சீனாவுடன் சேர்ந்து சதி செய்கிறார்கள் என்று ஊளையிடுகிறார்.

ஹார்வர்டு யூனிவர்சிட்டிக்கு இந்த விவரம் தெரியுமேயானால் உடனடியாக கூப்பிட்டு அரசியல் அறிவிலிக்கான டாக்டர் பட்டத்தை நிச்சயம் ஆற்காட்டாருக்கு வழங்கும்.

இடதுசாரிகள் வரும் பாராளுமன்றத் தேர்தலில் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்! அடேயப்பா என்னா பெரிய கண்டுபிடிப்பு! தமிழகத்திலிருந்து இடதுசாரிகளுக்கு வெறும் நான்கு சீட்டுகள்தான் டெல்லிக்கு போகிறது. மற்ற இடத்திலிருந்து 56 சிட்டுக்கள் குறிப்பாக மேற்குவங்கம், கேரளா, திரிபுராவிலிருந்து... என்ற அரசியல் கணக்காவுது ஆற்காட்டாருக்கு தெரியுமா? அல்லது தி.மு.க. என்ன அகில இந்திய கட்சி என்ற அந்தஸ்தை பெற்று விட்டது என்ற மணக்கணக்கா? என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

சி.பி.ஐ., சி.பி.எம், பா.ம.க., காங்கிரஸ் என்று பெரி மெகா கூட்டணி வைத்திருந்தபோதே தி.மு.க.வை மக்கள் நம்பவில்லை. அதனால்தான் இன்னும் மைனாரிட்டியாக தி.மு.க. தனியாக உள்ளது. காங்கிரஸ் தயவில் ஒட்டிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இடதுசாரிகளும் - பா.ம.க.வும் இல்லாத நிலையில் யார் காணாமல் போவார்கள் என்பதை வரலாறு நிரூபிக்கும். அதுவரை ஆற்காட்டார் இதுபோன்ற அரைவேக்காடான அறிக்கைகளை விடாமல் காத்திருக்க வேண்டும்.

அடுத்து எதிர்கால முதல்வர் என்ற கனவில் மிதக்கும் மு.க. ஸ்டாலின் தொழிலாளர்கள் பிரச்சினையில் குறிப்பாக ஏழை எளிய - தலித் கூலி விவசாயிகள் மத்திய அரசின் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் இந்த ஏழை மக்களிடம் ரூ. 80 ஒரு நாளுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றால் ரூ. 40ம் அதற்கு கீழேயும் கொடுத்து விட்டு இந்த அப்பாவி மக்களை ஏமாற்றும் கொள்ளைப் பேர்வழிகளிடம் இருந்து மக்களை காப்பதற்காக உரிமைக்கு குரல் கொடுத்தால் கம்யூனிஸ்ட்டுகள் புரோக்கர் தொழில் செய்கிறார்கள் என்கிறார். இவர்தான் எதிர்கால முதல்வராம்! சாதாரண மக்களுக்கு கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் தொடர்ந்து புரோக்கர் வேலை செய்வார்கள் அதில் பெருமிதமும் கொள்வார்கள். ஆனால் உங்களது கொள்கை மூலம் யாருக்கு புரோக்கர் வேலை செய்கிறீர்கள் என்பதுதான் நாட்டு மக்கள் எழுப்பும் கேள்வி!