Showing posts with label அத்வானி. Show all posts
Showing posts with label அத்வானி. Show all posts

April 17, 2009

தலித் மக்களுக்காக கண்ணீர் வடிக்கும் அத்வானி!


ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்! அந்தக் கதையாக, பா.ஜ.க. பிதமர் வேட்பாளர் அத்வானிக்கு தலித்துகள் மீது கரிசனம் வந்து விட்டது. டாக்டர் அம்பேத்கரின் 118வது பிறந்த நாளையொட்டி, "தலித் சேதன ரத யாத்திரை" ஒன்றை துவக்கி வைத்துள்ளார்.
தேர்தல் வந்து விட்டாலே பா.ஜ.க.வுக்கு என்ன செய்வது என்றே புரியாது? ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு ரத யாத்திரை நடத்துவது பா.ஜ.க.வுக்கு வழக்கம். ஏற்கனவே நடத்திய "ரத யாத்திரைகள்" எல்லாம் ராமரின் பெயரால் நடத்தப்பட்டு ரத்த யாத்திரையாக முடிந்தது. ராம ஜன்ம பூமி என்று கதைவிட்டு அப்பாவி இந்து மக்களின் மத உணர்வுகளை பயன்படுத்தி, மதவெறி அஜன்டாவை முன்வைத்த பா.ஜ.க. இசுலாமிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதலை நடத்தி 3000த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களை கொலை செய்து மதவெறி ரத்தத்தில் மூழ்கடித்தது.
பா.ஜ.க.வின் சாயம் மக்களிடம் எடுபடவில்லை. ராம ஜன்ம பூமி என்று கதையளந்த உத்திரப்பிரதேசத்திலேயே அதனை ஓட விட்டனர் மக்கள். ஒவ்வொரு தேர்தலிலும் பின்னடைவை சந்தித்த பா.ஜ.க. தற்போது உத்திரப்பிரதேசத்தில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
வட மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனது தளத்தை விரிவுபடுத்திக் கொண்டே வரும் தருவாயில், தற்போது தலித் மக்களின் நன்பனாக தன்னை முன்னிலைப்படுத்த துடிக்கிறது பா.ஜ.க.!
பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில், ஹரியானாவில் செத்துப்போன மாட்டின் தோலை உரித்தற்காகவே விஸ்வ ஹீந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் நான்கு தலித் அப்பாவி வாலிபர்களை கல்லால் அடித்தே கொன்றார்கள். பா.ஜ.க.விற்கும் ஆர்.எஸ்.எஸ்.சிற்கும் ஒரு தலித்தின் உயிரை விடவும் பசுவின் உயர் மேலானது என்ற சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர்கள் அல்லவா! அதனால் ராமபக்தர்கள் அன்றைக்கு தலித்துக்களின் உயிரை பலிகொடுத்து தனது சித்தாந்தத்திற்கு புத்துயிர் ஊட்டினர்.
அத்துடன் நின்றார்களா! மகாராஷ்டிர மாநிலம், பந்தாரா மாவட்டத்தில் உள்ள கயர்லாஞ்சி கிராமத்தில் பெளத்த மதத்தைத் தழுவிய - சுயகாலில் நின்ற தலித் போட்மாங்கே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மகன்கள் என்று நான்கு பேரை நேருக்கு நேர் கற்பழித்து - சின்னாபின்னப்படுத்தி - நிர்வாணப்படுத்தி கொலை செய்தார்களே உயர்சாதி ஆதிக்க வெறிர்கள். இதனைக் கண்டு நாடும், நாட்டு மக்களும் கொதித்து எழுந்த போது அந்த பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும்., பா.ஜ.க. எம்.பி.யும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக வாயை மூடிக்கொண்டிருந்தார்களே அதன் பின்னால் ஒளிந்துக் கொண்டுள்ள தத்துவம் என்ன? இந்துத்துவ சனாதன மதவெறி சித்தாந்தம்தானே!
அப்போதெல்லாம் தலித் மக்களைப் பற்றி கவலைப்படாத பா.ஜ.க. தேர்தல் நேரத்தில் திடீரென தலித் மக்கள் மீது கரிசனம் காட்டுவதென்ன! இது கசாப்புக் கடையில் காந்தியின் படம் தொங்கவிட்டிருப்பது போலத்தான் பா.ஜ.க. தனது ஓட்டு வங்கியை பெருக்கிக் கொள்ள தலித் ஆதரவு வேடம் பூண்டிருக்கிறது. ஏற்கனவே குஜராத்தில் காந்திய தத்துவத்திற்கு புதை குழி தோண்டிய பா.ஜ.க. காந்தியின் ராமராஜ்யமே எங்களது இந்துத்துவம் என்று புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கையில் தற்போது தலித்துக்களின் சகோதரர்களாக தன்னை அடையாளப்படுத்த முனைகிறார் அத்வானி.
இந்துத்துவம் என்பது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட தத்துவங்களையும், புராணங்களையும், கட்டுக்கதைகளையும், ஏன் மனுதர்மத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த மனுதர்மம்தான் தலித்துக்களை பார்க்கக் கூடாது, தொடக் கூடாது, பேசக் கூடாது, படிக்கக் கூடாது, ஒரு தலித்தை ஒரு மேல்ஜாதி பார்ப்பனன் கொலை செய்தால் அதற்கு தண்டனை வெறும் ஆடு, மாடுகளை கொல்லுவது போன்று என்று கருதி மன்னித்து விடலாம் என்று கூறிய அந்த சனாதர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் இந்துத்துவத்திற்கு சொந்தக்காரர்தான் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் அத்வானி.
உண்மை இப்படியிருக்கும் போது, ஏன் இந்த போலி வேடம்! யாரை ஏமாற்ற இந்த போலி வேடம்! தலித் மக்களின் இடஒதுக்கீடு உட்பட அனைத்திற்கும் வேட்டு வைக்கும் பா.ஜ.க. தலித் மீது பரிவு காட்டுவது வேடிக்கையிலும் வேடிக்கைதான். அது மட்டுமா? மகாராஷ்டிரத்தில் உள்ள மராத்வாடா பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்ற போது அதற்கு வானத்திற்கும் பூமிக்கும் எகிறிக் குறித்து சண்ட மாருதம் செய்தவர்கள்தான் இந்த இந்துத்துவாவாதிகள். எனவே, ஆர்.எஸ்.எஸ்.சின் அடிமையான அத்வானி தலித் நன்பனாக வேடம் பூணுவது தலித் மக்களை ஆட்சிக்கு வந்த பின் ஒடுக்குவதற்காகத்தனே ஒழிய வேறில்லை!
ஒடுக்கப்பட்ட மக்களே உஷார் ஓநாய் வருகிறது! வாக்குகளைப் பெறுவதற்காக அல்ல நம்மையே இரையாக்குவதற்காக!

April 16, 2009

ரோமாபுரி பாண்டியனும் மன்னர் மன்மோகனும்!


நாடாளுமன்றத் தேர்தல் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கவுள்ளது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஆட்சி புரிந்த காங்கிரசும், ஆட்சியை இழந்த பா.ஜ.க.வும் - இரண்டையும் நிராகரித்து மக்களுக்கான மாற்றை முன்வைக்கும் இடதுசாரி - ஜனநாயக சக்திகளும் தேர்தல் களத்தில் நேருக்கு நேர் முக்கோணமாய் மோதிக் கொண்டிருக்கின்றன.

தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எதற்காக வாக்களிக்க வேண்டும்? என்று வாக்காளர்களை சிந்திக்க வைப்பதற்கு மாறாக, பா.ஜ.க.வும் - காங்கிரசும், அத்வானிக்கும் - மன்மோகன் சிங்குக்கும் இடையில் நடைபெறும் குடும்பச் சண்டையாய் மாற்றிவிட்டன.

கடந்த ஐந்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் அலங்கோலம் பற்றி பா.ஜ.க. இதுவரை வாயே திறக்கவில்லை. மறுபுறத்தில், காங்கிரசும் பா.ஜ.க. எப்படியெல்லாம் பொறுப்பற்ற எதிர்க்கட்சியாக செயலாற்றியது என்பதைப் பற்றியும், அதன் மதவெறியால் நாடும், நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டது குறித்தும் வாய் திறக்கவில்லை. இரண்டும் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகளல்லவா?

மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் என்னவாகும்? எனவே, பக்குவமாய் திசை திருப்பினார் அத்வானி. தொடையை தட்டிக் கொண்டு 'மன்மோகன் சிங் லாயக்கற்றவர் - வீக்கானவர்! என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்தத் தயாரா' என்று மல்லுக்கட்ட. தேர்தல் விவாதமே திசை திருப்பிப் போனது.

அப்புறம் என்ன? பதிலுக்கு மன்மோகன் - 'என்னுடன் விவாதிப்பதற்கு உனக்கு என்னத் தகுதி இருக்கிறது' என்று கேட்க,

அடுத்த கட்டத்தில் அத்வானி, 'காங்கிரஸ் கிழக்கட்டைகளின் கட்சி என்று சொல்ல,' பதிலுக்கு ராகுலும், பிரியங்காவும் பரிதாபமாக 'நாங்கள் எல்லாம் கிழமா?' என்று அப்பாவித்தனமாக அத்வானியைப் பார்த்து கேட்டது.

அத்தோடு விட்டாரா அத்வானி, 'மன்மோகன் ஒரு தலையாட்டி பொம்மை, சோனியாவால் ஆட்டிவிக்கும் பொம்மை. சுயமாக முடிவெடுக்கத் தெரியாதவர்' என்று கூற,

இதுவரை சும்மா இருந்த அம்மையார் சோனியா களத்தில் இறங்கி, 'அத்வானி ஒரு ஆர்.எஸ்.எஸ். அடிமை. உன்னால் எதையும் சொந்தமாக கழட்ட முடியாது' என்று ஒரு குண்டை வீச...

இந்தக் களோபரத்தில் குழம்பிப்போன மன்மோகன் தான் ஒரு ஞான சூன்யம் என்பதை நிரூபித்து விட்டார். நேற்றைய தினம் நடந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போது, "மாநில கட்சிகள் வளர்ச்சிக்கு எதிரானவை. இதனால் தேசிய கட்சிகள் பாதிக்கப்படுகிறது. நிலையான ஆட்சிக்கு மாநில கட்சிகள் உதவாது" என்று ஒரே போடு போட்டுவிட்டார்.

என்னதான் இருந்தாலும் மன்மோகன் சிங் ஒரு உலகவங்கி உருவாக்கிய சித்தாந்தத்தின் கையாள்தானே. அவருக்கு இந்தியாவின் அரசியல் அமைப்பு பற்றியோ அல்லது அரசியல் பற்றியோ என்ன பெரிதாக கவலை இருந்து விடப்போகிறது. அமெரிக்காவும், அந்நிய மற்றும் உள்நாட்டு பன்னாட்டு - பெரும் நிறுவனங்கள் தாங்கள் விரும்புகிறபடி கொள்ளையடிப்பதற்கு ஒரு நிரந்தரமான ஆட்சி தேவை. அதற்கு ஏற்ப ஒரு நிரந்தர ஆட்சி தேவை என்ற கனவைதான் மன்மோகன் இப்படி கொட்டியுள்ளார்.

ஐய்யா டாக்டர் மன்மோகன் சிங். இதற்காகவே காங்கிரசை மக்கள் மீண்டும் புதை குழியில் தள்ளுவார்கள். "இந்தியா ஒரு கூட்டாட்சி ஜனநாயக நாடு. இது பல நாடுகளைக் கொண்ட ஒரு நாடுதான்." பல்வேறு கலாச்சாரம், மொழி, ஏற்றத்தாழ்வான வளர்ச்சி போன்றவற்றைக் கொண்ட மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு நாடு." எனவே, இந்த நாட்டில் ஒவ்வொரு மாநில மக்களின் நலனுக்கு ஏற்ப, அந்தந்த மக்களின் நலன்களை முன்னிறுத்தும் மாநில கட்சிகள் நாள்தோறும் தோன்றுவது இயல்பானது. மக்கள் யார் மீது நம்பிக்கை வைக்கிறார்களோ? அல்லது மக்களின் தேவைகளை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்கள் பின் மக்கள் நிற்பார்கள். இதுதான் ஜனநாயகம்!

ஆனால் மன்மோகன் இது புரியாமல், தான் மன்னராவதற்கு மாநில கட்சிகள்தான் தடையாக இருக்கிறது என்று புரிந்து கொண்டு. மாநில கட்சிகள் மீது பாய்ந்துள்ளார். அதாவது கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவையும், பல மாநிலங்களையும் ஆண்ட கட்சிதான் காங்கிரஸ். அதனால்தான் நாட்டில் உண்மையில் ஏற்படவேண்டிய வளர்ச்சி பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தற்கொலையில் துவங்கி, பசியோடும், பட்டினியோடும், சத்தாண உணவுகள் கிடைக்காமையாலும் நோயாலும் மடிந்து வருகின்றனர் இந்திய மக்கள். ஒரே சீரான கல்வியை இந்தியாவில் இதுவரை அரசாண்ட காங்கிரசால் வழங்க  முடியவில்லை. தொழில் வளர்ச்சியும் அதே கதிதான். இதனால் உருவானதே வடகிழக்கு மாநிலங்களில் நீடிக்கும் பிரச்சனைகள் துவங்கி காஷ்மீர் வரையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் உருவாக்கியது காங்கிரஸ்தான். எனவே, யார் வளர்ச்சிக்கு மத்தியில் தடையாக இருந்தார்களோ அவர்களே தற்போது மாநில கட்சிகள்தான் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது என்று மண்ணை அள்ளிப் போடுவது எதனால்?

காங்கிரசுக்கும் - பா.ஜ.க.வுக்கும் மூன்றாவது மாற்றாக மாநில கட்சிகள் பெரும் சவாலாக உருவெடுத்து ஒரு கட்சி ஆட்சிக்கு சாவு மணி அடித்து விட்டதும். ஒரு உண்மையான கூட்டாட்சி மலர்வதற்கு வழி ஏற்படுத்தியதுமே காங்கிரசுக்கு வயிற்றெச்சல் அதனைத்தான் மன்மோகன் உளறிவிட்டார்.

தமிழகத்தில் உள்ள பாண்டிய மன்னன் கருணாநிதி, எப்போதும் மாநில சுயாட்சிக்கு தான் உறுதியாக பாடுபடுவதாக மார்தட்டுவார். இப்போது மன்மோகன் சிங் மாநில கட்சிகளே கூடாது என்கிறாரே என்னப் பன்னப் போகிறார்? கட்சியை காங்கிரசுடன் இணைத்து விடப்போகிறாரா? அல்லது நானே வீராதி வீரர் என்று கவிதை வசனம் எழுதி மாநில சுயாட்சியை காக்கப் போகிறாரா? மதுரையில் உள்ள பாண்டிய மன்னரைப் பற்றியே சதா காலமும் யோசிக்கும் கருணாநிதிக்கு மாநில சுயட்சி பற்றிதான் கவலை எழுமா என்ன!

மத்திய அரசு மாநிலங்களுக்கு 50 சதவிகித நிதி ஒதுக்க வேண்டும் என்று சும்மா உதார் விடும் கருணாநிதி, தனது அரசாட்சியின் கீழ் இருக்கும் உள்ளாட்சிகளுக்கு வெறும் 9 சதவிகிதம் மட்டுமே பிச்சைப் போடுகிறார். இவர்தானே மன்மோகனை எதிர்த்து விடப்போகிறார்! இவரது வீராப்பு எல்லாம் பாண்டியர்கள் மீதுதான் இருக்குமே ஒழிய மன்மோகன் மீது இருக்காது!

April 01, 2009

அத்வானியின் புதிய இந்துத்துவா!

பாஜக-வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி ஒவ்வொரு நாளும் ஆர்எஸ்எஸ்-இன் கோலாட்டத்திற்கு குரங்காட்டம் போட்டு வருகிறார். வருண்காந்தியின் முகத்தை காட்டி இந்து வாக்காளர்களை கவர திட்டம் போட்ட பாஜக அவரை கம்பி எண்ண வைத்துவிட்டது.
தற்போது அத்வானி வருண்காந்தி விட்ட இடத்திலிருந்து இந்துத்துவா ரிலேவை தொடங்கி வைத்துள்ளார். ஒரே மாற்றம் இது "புதிய இந்துத்துவா"! பழைய இந்துத்தவா மோடியின் முகத்தை அணிந்துக் கொண்டதால், புதிய இந்துத்துவா காந்தியின் முகத்தை தேடுகிறது. இதுதான் அத்வானியின் புதிய கணக்கு.
நேற்று (மார்ச் 31) புதுதில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அத்வானி, "பல கட்சிகளை எங்கள் பக்கம் ஈர்க்க கொள்கைகளைத் தளர்த்திக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. நாங்கள் சொல்லும் ஹிந்துத்துவா என்பது மதம் சார்ந்தது அல்ல, தேசியம் சார்ந்தது." என்று கொள்கை விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் அவர் என்ன வருகிறார் என்று கூர்ந்து நோக்கும் அரசியல் விமர்சகர்களுக்கு ஒரு விசயம் தெளிவாக புரியும். இந்தியாவில் உள்ள பல மதச்சார்பற்ற கட்சிகளுக்கு பாஜகவின் இந்துத்துவா புளித்து விட்டது. அதனால் இந்த தேர்தலில் ச்சீ... ச்சீ... இந்தப் பழம் புளிக்கும் என்று "டூ" விட்டு விட்டனர். அதைத்தான் மேற்கண்டவாறு அத்வானி இவ்வளவு பவ்வியமாக விளக்கியுள்ளார். அத்துடன் அவர் மேலும் அழுத்தமாக கூறியிருக்கும் விசயம் என்ன என்று பார்த்தால், சங்பரிவாரத்தின் உயிர்நாடியான இந்துத்துவா கொள்கையை நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்பதுதான் அதன் அர்த்தம்.
சரி, இவர்களின் இந்துத்துவா என்றால் என்ன என்று சங்பரிவார கும்பல்கள் ஒவ்வொருவரும் ஒரு விளக்கத்தை கொடுப்பார்கள். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் இந்துத்துவா குறித்து கூறும்போது, "இந்த நாட்டின் சிறப்பான தன்மையாக நான் கருதுவது சகிப்புத்தன்மை என எவராவது சொன்னால் என்னால் சகிக்க முடியவில்லை." என்று கூறியிருப்பதி லிருந்தே அது எவ்வளவு உயர்ந்த தத்துவம் என்பதை உணர முடியும்.
உண்மையில் இவர்களது இந்துத்துவா என்பது இவர்களின் தத்துவார்த்த குருவான கோல்வால்கரின் இந்துத்துவாதான்: இந்த கோல்வால்கர் யாருடைய சீடர் தெரியுமா? உலகையே ஆளப் பிறந்த அரிய இனம் என்று கொக்கரித்து யூதர்களை நரவேட்டையாடிய ஹீட்லரின் சீடர். ஹீட்லரிடம் இருந்து கடனாக பெற்ற கொள்கைதான் இந்துத்துவா, அது நாஜீயிசம் என்றால் இது இந்துத்துவாயிசம். அது யூதர்களை வேட்டையாடியது என்றால் இவர்கள் இசுலாமியர்களை வேட்டையாடினார்கள். தற்போது கிறித்துவர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடுவார்கள். மொத்தத்தில் நமது பாரம்பரியமான மதச்சார்பற்ற பாரம்பரியத்தையும், சகிப்புத்தன்மையையும், மனிதாபிமானத்தையும் வேட்டையாடுவார்கள். இவர்களது இந்துத்துவாவில் வேற்றுமையில் ஒற்றுமையில்லை. இந்துத்துவா என்ற குடுவைக்குள்தான் எல்லாம் அடக்கம். இந்தச் சிந்தனைக்கு உடன்படாதவர்கள் இந்தியத்திற்கு எதிரானவர்கள் - பாரதீயத்திற்கு எதிரானவர்கள் என்று அழித்தொழிக்கப்படுவர். இதைத்தான் அத்வானி இந்த தேர்தல் காலத்தில்கூட மறக்காமல் தான் ஆர்.எஸ்.எஸ். சீடன்தான் என்று தனது சங்பரிவார கும்பலுக்கு நம்பிக்கையூட்டும் சிக்னல் தருகிறார். இவர் இவ்வாறு உண்மையான சீடனாக இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ். இவரை சீண்டி விடும் அல்லவா? அதுதான் இதுவும் என்று இருக்க முடியாது.
அதே பேட்டியில் அத்வானி கூறுகிறார்: "எங்கள் பக்கம் சிறுபான்மைச் சமூக மக்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் எங்களுடைய அரசியல் எதிரிகள் எங்களுக்குக் குத்தியிருக்கும் முத்திரைதான் ஹிந்துத்துவா." என்று.
அஹா... கோயபல்ஸ் புளுகு என்று கூறுவார்களே அது இதுதான். ஹீந்துத்துவா என்ற வார்த்தையை கண்டுபிடித்ததே நீங்கள்தானே. அதற்கு தத்துவார்த்த முலாம் கொடுத்து கழுவி சுத்தப்படுத்தி பத்திரப்படுத்தி வைத்திருப்பதும் நீங்கள்தானே அப்படியிருக்கும் போது ஏதோ எதிர் கட்சிகள் எல்லாம் இவர்களை இந்துத்துவா என்று முத்திரைக்குத்தி விட்டதாக அலறுவது ஏனோ? ஒரே விசயம் இதுதான். இந்துத்துவா என்றால் ஓட்டு கிடைக்காது! அதனால் பழியை எதிர் கட்சிகள் மீது போட்டு தப்பிக்க பார்க்கிறார் எதிர்கால பிரதமர்.
அடுத்து அத்வானி தனது கொள்கைக்கு ஆதரவாக யாரை துணைக்கு அழைக்கிறார் பாருங்கள், "தேசப்பிதா மகாத்மா காந்தி ""ராமராஜ்யம்'' அமைய வேண்டும் என்று விரும்பினார். அது மதம் சார்ந்த அரசு நிர்வாகம் அல்ல. தன்னை ""சனாதன ஹிந்து'' என்றே காந்தி அழைத்துக் கொண்டார்." என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது அத்வானியின் இந்துத்துவம் தற்போது காந்திய வடிவில் புதிய முகத்தை பெற முயற்சிக்கிறது. காந்தியின் ராமராஜ்யமும் - பாஜகவின் இந்துத்துவாவும் ஒன்றா? ஆர்எஸ்எஸ் இதை ஏற்றுக் கொள்கிறதா? பிறகு ஏன் மகாத்மாவை கோட்சே கொன்றான்? ராமராஜ்யம் அமைய வேண்டும் என்று கனவு கண்ட சனாதன இந்து பக்தரும், புல்லுக்கும் தீங்கு செய்யக்கூடாது என்று கருதும் சாத்வீ போராளியும் ஆன மகாத்மா தனது போராட்டங்களைக் கூட அகிம்சை வழியிலேயே மேற்கொண்டார். இத்தகைய எளிய உடம்மை சுதந்திரப் போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்களை ஈர்த்த அந்த மாமனிதனின் உடலை சாய்த்தது இந்துத்துவாதானே - வீரசவர்க்கரின் மூளையில் உருவாகி, கோட்சேவின் துப்பாக்கிக்கு இரையாக்கியது உங்களது சங்பரிவார தத்துவமும் - பாசிச வெறித்தனம்தானே!
காந்தியின் ராமராஜ்யத்தில் வன்முறையில்லை; ஆனால் உங்களது இந்துத்துவா தத்துவமே வன்முறைகளை உயிர்ப்பிக்கும் ஆக்டோபஸ்தானே! அதனால்தானே குஜராத்தில் ஒரு மோடியும், கர்நாடகத்தில் ஒரு முத்தலிக்கும், ஒரிசாவில் லட்சுமணானந்த சாமியாரும் என்று இந்தியாவையே ரத்தகளறியாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இத்தகைய இரத்தக்கரையை வரலாற்றின் பக்கங்களிலிருந்து யாராலும் அகற்ற முடியாது. அதற்கு பாவமன்னிப்பும் யாராலும் வழங்க முடியாது! எந்த காந்தியின் பிறந்த குஜராத் மண்ணில் அவரையும், அவரது கொள்கைகளையும் குழிதோண்டி புதைத்தீர்களோ அப்போதே இந்தியாவில் காந்தியின் கனவான ராமராஜ்யத்தையும் அல்லவா சேர்த்துப் புதைத்தீர்கள், எரித்தீர்கள். இப்போது அதே காந்தியின் முகத்தை மோடிக்கும் - அத்வானிக்கும் பயன்படுத்த துடிப்பது ஆட்சிக் கட்டிலுக்காகத்தானே ஒழிய இந்த நாட்டிறக்காக அல்ல!
முஸ்லீம்கள் காந்தியை எதிர்த்தாக கூறி தனது நயவஞ்சக பிரச்சாரத்தை அத்வானி திசை திருப்பவும் இந்த நேரத்தில் தவறவில்லை. மகாத்மாவே இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிவது எனது இதயத்தைப் பிளப்பது போல் என்று கூறினார். அதற்காகவே ஆர்.எஸ்.எஸ். அவரைக் கொன்றது. பிரிவினையை விரும்பிய ஒரு பிரிவினரின் நம்பிக்கையின்மைக்கு அடிப்படையாக இருந்தது ஆர்.எஸ்.எஸ்.தானே ஒழிய மகாத்மா அல்ல. எனவே வருண்காந்தி இசுலாமியர்களின் தலையை எடுப்பேன் என்று பேசி தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளே இருக்கிறான். இந்தப் பேச்சிற்கும் தற்போது அத்வானி பேசியிருப்பதற்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. இரண்டும் ஒன்றுதான், அதாவத தேர்தல் காலத்தில் கூட தனது மதவெறி அஜண்டா மூலம் மதவெறியைத் தூண்டி குளிர்காய நினைக்கும் ஓநாய்த்தனத்திற்கு இந்திய மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள். மாறாக சொந்த நாட்டு மக்களை எதிரிகளாக்க முனையும் இந்துத்துவாவுக்கு சாவு மணி அடிக்கத்தான் போகிறார்கள் இந்தத் தேர்தலில்! வாக்காளர்களே உஷார் இந்துத்துவா எச்சரிக்கை. ஜனநாயகம், மதசார்பின்மை காப்போம்!

March 27, 2009

மகுடம் சூட்டிக் கொண்ட பிரதமர்கள்!

15வது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவருடத்திற்கு முன்னதாகவே பா.ஜ.க. தரப்பில் அத்வானியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டார்கள். அவரும் தானே அடுத்த பிரதமர் என்ற கித்தாப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மறுபுறத்தில் காங்கிரஸ் கட்சியும் தனது பங்குக்கு அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்விக்கு டாக்டர் மன்மோகன்சிங்தான் என்று பதிலுரைத்து விட்டது. மன்மோகன் சிங் பிரதமர் ஆக வேண்டும் என்றால் மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு கட்சி ஆட்சிமுறைக்கு இந்திய ஜனநாயகமும், மக்களும் விடைகொடுத்துவிட்ட பின்னணியில் மத்தியில் யார் வந்தாலும் அது கூட்டாட்சிதான் என்ற மந்திரம் உச்சஸ்தாயில் ஒலிக்கத் துவங்கிவிட்டது.
தானே ராஜா, தானே மந்திரி என்று வலம் வந்த காங்கிரஸ் கட்சியை சீண்டுவதற்கு யாரும் இல்லை. அவர்களது ஐக்கிய முற்போக்கு கூட்டணியெல்லாம் காற்றில் கலந்து கரைந்துவிட்டது. இந்தியாவின் பெரிய மாநிலங்களான உ.பி.யிலும், பீகாரிலும் காங்கிரசுக்கு பார்ட்னர் யாரும் கிடையாது! பா.ஜ.க. மட்டுமென்ன அவர்களும் எவ்வளவோ முயற்சி செய்தாலும் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ள மாட்டேங்கிறார்கள். இப்போதே பல பெரிய மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு முட்டை உறுதியாகி விட்டது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ஆந்திரா, திரிபுரா போன்ற மாநிலங்களில் முட்டைக்கு அட்வான்ஸ் புக்கிங்கெல்லாம் செய்து விட்டார்கள். அப்புறம் என்ன? காங்கிரசும் இதே பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டுமே மூழ்கும் கப்பல் என்று புரிந்து கொண்ட மாநில கட்சிகள் தங்களது அரசியல் மரியாதையை உயர்த்திக் கொள்ள, "என் வழி தனி வழி" என்று ராஜபாட்டையில் நடைபோடத் துவங்கி விட்டது. லாலுவும், ராம் விலாஸ்பஸ்வானும், முலாயமும் காங்கிரசுக்கு டூ... விட்டு விட்டார்கள்.

இந்தப் பின்னணியில்தான் அத்வானி ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார் மன்மோகன் சிங்கைப் பார்த்து... யார் சிறந்த நிர்வாகி என்று பார்க்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்! மக்களுக்குத் தெரியும் இந்த இரண்டு பேருமே உருப்படியானவங்க இல்லையென்று!


அத்வானி ஹவால கேஸ் முதல் பாபர் மசூதி இடிப்பு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றவாளி... அது மட்டுமா? நடப்பு பாராளுமன்றத் கூட்டத்தொடர்களிலும் குறிப்பாக பட்ஜெட் சமர்ப்பிக்கும் காலங்களிலும் உருப்படியான எதிர்கட்சியாக நடந்து கொள்ளாமல், தனது கருத்துக்களை பாராளுமன்றத்தில்கூட தெரிவிக்காமல் மன்மோகன் சிங்கிடம் புறக்கதவு வழியாக சென்று கருத்து தெரிவிக்க முற்பட்டு மூக்கு உடைபட்டவர்தான் அத்வானியும் பா.ஜ.க.வும். இதிலிருந்தே தெரியும் இவர்கள் எவ்வளவு பெரிய ஜனநாயகவாதிகள் என்று?

ரத யாத்திரைகள் மூலம் மதவெறியைத் தூண்டி சொந்த நாட்டு மக்களை சுய அரசியல் லாபத்திற்காக கொன்ற மதவெறிக் கூட்டத்தின் தலைவர் இந்த தேசத்தின் பிரதமர் என்பதை இந்த நாடு ஒருபோதும் ஏற்காது. இதன் மதச்சார்பற்ற மாண்புகள் ஏற்கனவே உ.பி.யில் இல்லாதது ஒழித்து விட்டது பா.ஜ.க.வை இந்த தேர்தலில் ஒட்டுமொத்த பா.ஜ.க.வும் மண்ணைக் கவ்வும்! இதுவே மக்கள் தீர்ப்பாக மாறிட வேண்டும்.


மன்மோகன் சிங் மக்களை சந்திக்காதவர் என்பதால், இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக்குரலையும் பொருட்படுத்தாமல், பாராளுமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமெரிக்காவுடன் தேனிலவு வைத்துக்கொண்ட அமெரிக்க பித்தர்!

எனவே, இந்த இரண்டு பேர் சார்ந்துள்ள கட்சிகள் முறியடிக்கப்பட் வேண்டியவை என்பதுதான் இந்த தேர்தலின் தீர்ப்பாக மக்கள் எழுதவுள்ளனர்.
அடுத்து, பா.ஜ.க. தனது ஆட்சிக்காலத்தில் தற்போதைய அரசியல் சட்டத்தையும், தேர்தல் நடைமுறைகளையும் கூட மாற்றி தனக்கு சாதகமாக மாற்ற முயன்ற ஒரு பாசிச அமைப்பு. அதாவது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போல பிரதமரை தேர்ந்தெடுக்கலாம் என்ற கனவு கொண்ட அமைப்பு. எனவேதான் நானே பிரதமர் என்று உளறிக் கொண்டிருக்கிறார் அத்வானி. நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் இதில் பெரும்பான்மை பெறுபவர்கள் கூடி தங்களுக்கான பிரதமரை தேர்வு செய்துக் கொள்வார்கள். இதுதான் இந்திய ஜனநாயகம் காட்டியுள்ள வழி. ஆனால் இதனை பை-பாஸ் செய்ய முனையும் காங்கிரஸ்-பா.ஜ.க. இரண்டையும் ஓடவிடுவோம்! மூன்றாவது மாற்றை - மக்களுக்கான மாற்றை - மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட அமைப்பை வலுவாக்கும் போன்ற முழக்கத்துடன் இடதுசாரிகளும் - மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் பலம் பெற்று வருகின்றனர். இவர்களை ஆதரிப்போம்!