April 14, 2009

தீண்டாத குழந்தைகளும் அம்பேத்கர் பிறந்த நாளும்!

ஏப்ரல் 12, 2009 அன்று "சிங்காரவேலர் 150வது பிறந்த ஆண்டு" சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் "கவிதை வட்டத்தினர்". இக்கூட்டத்திற்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். "சிங்காரவேலரும் சாதி ஒழிப்பும்" என்ற தலைப்பில் நான் பேசினேன். கூட்டம் நடைபெற்ற இடம் சென்னை, தண்டையார் பேட்டையில் உள்ள, இரத்தினசபாபதி தெருவில் உள்ள, "எஸ்.சி.-எஸ்.டி. சமூக சேவகர் மையம்" என்று குறிப்பிட்டிருந்தது. அந்த இடத்திற்கு சென்றவுடனேயே சென்னை நகரில் இன்றும் நீடிக்கும் "தீண்டாமை வடிவம்" தனது கோர பற்களை காட்டி சிரித்துக் கொண்டிருந்தது.
1938-ல் துவக்கப்பட்ட இச்சங்கம் இன்று தாழ்த்தப்பட்டோர் மக்களின் நலனுக்காக சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. 70 வயதை எட்டியிருந்த அந்த கட்டிடம் அதன் முதுமையையும், சேவையையும் ஒருசேர உயர்த்திக் காட்டிக் கொண்டிருந்தது. தற்போது அரசு உதவியுடனும் பல சமூக நல சேவகர்களின் உதவியுடனும் இச்சங்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட, கைவிடப்பட்ட மாணவர்களின் விடுதியாக தற்போது செயல்பட்டு வருகிறது. பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் இங்கு தங்கியிருக்கின்றனர். நான் கண்ட காட்சி வியப்பாக இருந்தது. கிட்டத்தட்ட 65 குழந்தைகள் 12 வயதுக்கு கீழே இருந்த குழந்தைகள்தான் அங்கே தங்கி படித்து வருகின்றனர். பெரும்பாலான குழந்தைகளின் உடலில் சட்டையில்லை. வெறும் உடம்புடன் இருந்த காட்சியும், எண்ணையை பார்க்காத பரட்டைத் தலையும், அதனால் வந்த செம்பட்டை முடியும், கண்களில் வறட்சியும், வாழ்க்கைக்கான எதிர்பார்ப்புடன் இக்குழந்தைகள் இங்கே தங்கி படித்து வருகின்றனர். அக்குழந்தைகள் தங்குவதற்கும், உணவுக்கும் அந்த விடுதியில் உத்திரவாதம் செய்யப்படுகிறது. வெளியில் சென்று அக்குழந்தைகள் படித்து விட்டு மாலையில் விடுதி திரும்ப வேண்டும்.
ஓடி, ஆடி இந்த உலகத்தை ரசிக்க வேண்டிய இந்தக் குழந்தைகள் ஒட்டு மொத்தமாய் இந்த விடுதிக்குள் கூண்டுக் குருவிகளாய் அடைபட யார் காரணம்? பெற்றவர்களா? அல்லது பெற்றவர்களை ஏழ்மையில் தள்ளி ஏதும் இல்லாதவர்களாக்கிய இந்த அரசுகளா? ஆளும் வர்க்கமா? குற்றவாளி அரசும் - அதனை ஆளும் வர்க்கங்களும்தான்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு அநேகமாக மாற்று உடை கூட இருக்குமா என்பதுகூட சந்தேகம்தான். அவர்களது உடைகளை அந்த சிறுவர்களே துவைத்துக் கொள்ள வேண்டும். அவர்களை தாலாட்டுவதற்கும், சீராட்டுவதற்கும் அந்தக் குழந்தைகளுக்குள்ளேதான் நடைபெற வேண்டும். சரி! பள்ளிக்குச் செல்லும் அந்தக் குழந்தைகளுக்கு (இவர்கள் எல்லாம் திங்கட் கிமைக்கு ஒரு யூனி பார்மும், மற்ற நாட்களுக்குவேறு கலர் யூனிபார்மும், டையும் கட்டிக் கொண்டு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கொண்டு டாட்டா காட்டிச்செல்லும் பள்ளிகள் அல்ல - எல்லாம் கார்ப்பரேஷன் பள்ளிக்கூடம்தான்) தக தகவென்று மின்னும் கலர் கலரான பாலித்தீன் பையில் அடைக்கப்பட்டிருக்கும் லிட்டில் ஹார்ட்சும், லேஸ், கார்ன் பிளக்ஸ், ஜெம்ஸ், டோரா புஜீ, சூப்பர் ஸ்டார், லுக்ஸ், குர்குரே, டைமண்ட், ஏன் வேர்கடலை பர்பி இவையெல்லாம் தீண்ட முடியாத பொருட்கள் இவர்களுக்கு. எல்லாம் பகல் கனவுதான். அவர்களுக்கான பாக்கெட் மணியை யார் தருவார்கள்.

சில நேரங்களில் பெற்றோர்கள் உள்ள குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ வரும் போது கிடைக்கும் சில்லறை காசுகளை வைத்துக் கொண்டுதான் தானும், தனது நண்பர்களும் இதுபோன்ற நொறுக்குத் தீனிகளை சுவைக்க வேண்டும்.
ஒரு விளையாட்டுத் திடல் உள்ளது. அதுவும் தனது வயதான தண்மையை வெளிக்காட்டிக் கொண்டுள்ளது. அதாவது, அந்த வெண்யைமான மண் ஆப்பிரிக்கன் கலருக்கு மாறிவிட்டிருந்தது. அந்த மாணவர்களின் நிறத்திலிருந்து எந்தக் காரணத்தைக் கொண்டும் தான் வித்தியாசப்படக் கூடாது என அது நினைத்திருக்கலாம். அவர்களது விளையாட்டுக்கள் எல்லாம் ஓடி ஆடுவதும், மண்ணில் புரள்வதும்தான். செஸ், கேரம், கிரிக்கெட், கோலி, பம்பரம், ஏற்றம், இறக்கம், இராட்டினம், உடற் பயிற்சி எல்லாம் கனவில் மட்டுமே! அவர்களால் போகோ, சுட்டி, ஜெட்டெக்ஸ் டி.வி. எல்லாம் பார்க்க முடியாது. மொத்தத்தில் குழந்தைகளுக்கே உரிய அனைத்தையும் இழந்த நிலைதான் இவர்களுக்கு இப்படி வளரும் மாணவர்களால் எப்படி ஒரு சிறந்த சமூகத்தை படைக்க முடியும்! ஆட்சியாளர்களுக்கு இது தெரியாதா?
இந்த ஹாஸ்டலில் 1-ம் வகுப்பு முதல் + 2 படிக்கும் மாணவர்கள் வரை தங்கலாம். தங்கிக் கொண்டுள்ளனர். தற்போது 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை என்பதால் அவர்கள் எல்லாம் ஊருக்குச் சென்று விட்டதாக கூறினார்கள்.
இங்குள்ள மாணவர்கள் ஒருவருக்கு அரசாங்கம் ஒரு நாளைக்கு 5 ரூபாய் ஒதுக்குகிறதாம். இந்த ஐந்து ரூபாயில் அந்த மாணவர்கள் மூன்று வேளையும் தரமான சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்றால் உலகில் இதைவிட வேறு கின்னஸ் சாதனை இருக்க முடியுமா? ஆனால் தமிழகத்தில் சிறையில் உள்ள கைதிகள் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 12 ஒதுக்கப்படுகிறது. இதுவே குறைவு என்பது வேறு கதை இருந்தாலும், ஒதுக்கப்பட்டு, சீண்டப்படாமல் இருக்கும் இந்த குழந்தைகளின் எண்ணிக்கை கைதிகளின் எண்ணிக்கையை விட மிக மிகக் குறைவாகவே இருக்கும். அப்படியிருக்கும் போது பெரியாரின் வழிவந்த, அண்ணாவின் வழி வந்த திமுக ஆட்சியாளர்களால் ஏன் இதை உயர்த்த முடியாதா? ஏதே தோ இலவசம் என்று வாரி வழங்கும் இந்த ஆட்சியாளர்கள் இந்தக் குழந்தைகளுக்கு வருடத்திற்கு நான்கு சட்டைகளும், கால் சட்டைகளும், இரண்டு ஜோடி செருப்பும், போஷாக்கான உணவும் கொடுத்து ஒரு நல்ல கல்வியும் கொடுத்து உயர்த்த முடியாதா? தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நாலெல்லாம் பாடுபடுகிறோம் என்று கூறுவதெல்லாம் இதுபோன்ற ஹாஸ்டல்களை பார்க்கும் எவருக்கும் அது பெரும் பொய் என்றே தோன்றும்.
இன்றைக்கு டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் இன்று ஒரு நாள் ஒருவேளை அந்தக் குழந்தைகளுக்கு சில கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய இனிப்புகள் வழங்கப்படலாம். தீண்டாமை ஒழிப்புக் குறித்து வீராவேசமான பேச்சுக்கள் பேசலாம். ஆனால் அந்த மாணவர்களின் எதிர்கால வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றால் அது அரசால் மட்டுமே முடியும். ஆட்சியாளர்களால் மட்டுமே முடியும்!
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ஒரிடத்தில் கூறுகிறார், "தீண்டாமையை தீண்டி விட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமா என்று? அதாவது தீண்டாமை ஒழிந்து விட்டால், அந்த தீண்டாமையால் ஏற்பட்ட வறுமையும், நோயும், கல்வியின்மையும், வேலையிண்மையும், வீடின்மையும், சொத்தின்மையும் ஒழிந்து விடுமா?" என்று கேட்கிறார். அதுதான் நினைவுக்கு வருகிறது இந்த விடுதியைப் பார்க்கும் போது. தாழ்த்தப்பட்ட, சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட ஏன் கிராமப்புறத்தில் படித்தாலே ஆதிக்க சாதியினருக்கு பிடிக்காத என்ற நிலையிலிருந்து சென்னை மாநகரத்திற்கு வந்து தனது கல்வியைத் தொடர நினைக்கும் இந்த மாணவர்களுக்கு ஆரோக்கியமான, ஒரு சராசரி மாணவன் வீட்டில் என்னென்ன வசதிகளை அனுபவிப்பானோ அதுபோன்ற குறைந்தபட்ச வசதிகளை இந்த அரசால் ஏற்படுத்த முடியதா? என்பதே எனது கேள்வி!

அரசின் முயற்சியை வலியுறுத்தும் அதே தருணத்தில், சமூகத்தில் ஓரளவு உயர்வு பெற்றவர்கள் இதுபோன்ற குழந்தைகளின் கல்விச் செலவினையும், அவர்களுக்கான உடை போன்றவற்றையும் வழங்கி உயர்த்திட முன்வருவதும் அத்தியாவசியமாகிறது. திருப்பதி வெங்கடாசல பெருமாளுக்கு கோடிக்கணக்கில் காணிக்கையாகவும், சபரிமலை ஐயப்பனுக்கு வாரி வாரி வழங்கும் நமது பக்தர்கள் கோவிலின் சொத்துக்களை பெருக்க வைக்க உதவிடுமே ஒழியே வேறு எதற்கும் பயன்படப்போவதில்லை. இப்படி வீண் விரயம் செய்யும் பொருளுதவிகளை இதுபோன்ற குழந்தைகளுக்கு உதவலாமே!
மேற்கண்ட கருத்துக்கள் உடனடி நிவாரணம் மட்டுமே! இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்பது சமூக மாற்றத்தால் மட்டுமே நிகழும். ஒரு மக்கள் ஜனநாயக புரட்சியை நடத்துவதன் மூலமும், நிலமற்ற ஏழை - எளிய தலித் உட்பட இதர பகுதி மக்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்துவதோடு, அவர்களுக்கான இதர உதவிகளையும் புரிந்து சட்ட ரீதியான பாதுகாப்புகளையும் வழங்குவதன் மூலமே நிரந்தர விடுதலைக்கு வழிவகுக்கும். இருட்டு விடியும் வரை தற்காலிகமாக மின்சார பல்பாக தொண்டாற்றலாமே! மேலும் ஆளும் ஆட்சியாளர்களை இதுபோன்ற விசயங்களில் கவனம் செலுத்திட வலுவான போராட்டங்கள் அத்தியாவசியம். இதுவே டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளில் நாம் முன்னெடுக்க வேண்டிய கடமையாக கருதுகிறேன்.

6 comments:

Suresh said...

நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
நானும் இரு பதிவு நகைச்சுவையாய் போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)

ராமதாஸின் அரசியல் யுக்தியும் அம்மாவின் புத்தியும்
காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு

Suresh said...

நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
நானும் இரு பதிவு நகைச்சுவையாய் போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)

ராமதாஸின் அரசியல் யுக்தியும் அம்மாவின் புத்தியும்
http://sureshstories.blogspot.com/2009/04/ramadoss-and-amma-politics.html

காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html

சந்திப்பு said...

Thanks suresh.

Anonymous said...

மனதை உருக்கும் செய்தியைக் கூறியுள்ளீர்கள். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக நடத்தப்படும் இது போன்ற விடுதிகள் நிலையைக் கேட்டிருக்கிறோம். ஆனால் எவ்வளவு மோசம் என்று தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள். அந்த மாணவர்களுக்கு அடிப்படை வசதியைக் கூட மறுக்கிற அரசும் சமூகமும் இந்த நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளது. ஒதுக்கப்பட்ட ஐந்து ரூபாயில் கூட கமிஷன் கேட்பார்கள்/ பெறுவார்கள் ஆட்சியில் இருப்பவர்கள். இந்தக் கொடுமைகளைப் பார்க்கும் நமக்கும் மனதில் உறைப்பதில்லை.

Anonymous said...

திருப்பதி வெங்கடாசல பெருமாளுக்கு கோடிக்கணக்கில் காணிக்கையாகவும்,

TTD is using that money to run many institutions including hospitals, schools, colleges.
Dont you know that.

தீப்பெட்டி said...

இது நல்ல சந்திப்பு