April 30, 2008

மே தினம் : பறிபோகும் பெற்ற உரிமைகள்!

கரத்தாலும், கருத்தாலும் உழைக்கக் கூடிய உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின புரட்சி வாழ்த்துக்கள்!
அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய உலகமயம் இன்றைக்கு உலகை நெருக்கடியின் விளம்பிம்பிற்குள் தள்ளியுள்ளது. விலைவாசி உயர்வு, உணவு பொருள் பற்றாக்குறை, வேலையின்மை, பணவீக்கம், வீட்டு வாடகை உயர்வு, வேலை நேரம் அதிகரிப்பு என அனைத்து முனைகளிலும் தொழிலாளர்களும் - உழைக்கும் மக்களும் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆட்பட்டுள்ளனர்.
மறுபுறத்தில் ஆளும் வர்க்கமும் - ஆட்சியாளர்களும் இந்த கொள்கைகளுக்கு ஆதரவாக முலாம் பூசி மொழுகி வருகின்றனர். பன்னாட்டு மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளின் பைகள் மட்டும் நிரம்பிக் கொண்டே இருக்கும் அட்சயப் பாத்திரமாக மாறியுள்ளது. பல புதிய கோட்டீஸ்வரர்களைக் கூட இந்தியா உலகிற்கு அளித்துள்ளது எப்படி? கோடிக்கணக்கான இந்திய உழைப்பாளிகளின் இரத்தமும் - சதையும் உறிஞ்சப்பட்டு பெரு முதலாளிகளும் - பன்னாட்டு முதலாளிகளும் இரத்தம் குடிக்கும் அட்டைகளாய் உருமாறியுள்ளனர். எட்டு மணி நேர வேலைக்காக தங்களது இன்னுயிரை ஈந்த பல்லாயிரக்கணக்கான உழைப்பாளி மக்களின் தியாகம் உலகமயம் என்ற பெயரில் கண்ணெதிரே பறிக்கப்பட்டு வருவதை காண்கிறோம். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இது வேக - வேகமாக அமலாகி வருகிறது. இந்த நோய் மற்ற தொழில்களையும் வேகமாக பற்றி வருகிறது.
மேலும் உலகமயத்தின் நவீன முகம் தொழிலாளர் உரிமை பறிப்பு முகமாகவும், ஜனநாயக உரிமை பறிப்பு முகமாகவும், தொழிற்சங்க உரிமை, கூட்டம் கூடும் உரிமை பறிப்பு முகமாகவும் மாறியுள்ளது. மத்திய - மாநில ஆட்சியாளர்கள் இந்த கொள்கைகளுக்கு ஆதரவாக வெஞ்சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர்.
இந்திய உழைப்பாளி மக்களின் அடித்தட்டு மக்களாகவும் - அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களாகவும் உள்ள தலித் மக்களின் வாழ்நிலை அவலங்கள் மேலும் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தீண்டாமை கொடுமைகளுக்கு நாள்தோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பலியாவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இத்தகைய அவலங்களுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட நடவடிக்கையை மேற்கொள்வது இம் மேதினத்தின் கடமையாக முன்னுள்ளது.
தமிழகத்தில், அதுவும் சென்னை தலைநகரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனமான ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் கடந்த ஒரு வருடமாக தொழிலாளர்களுக்காக சங்கம் வைக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் நிர்வாகமும் - ஆளும் வர்க்கமும் - காவல்துறையும் முக்கூட்டு நடத்திக் கொண்டு தொழிலாளர் உரிமையை முற்றிலுமாக காலில் போட்டு நசுக்கி வருகிறது.
ஏப்ரல் 29 அன்று தொழிலாளர்கள் ஏற்றிய சி.ஐ.டி.யூ. கொடியையும், கொடிக்கம்பத்தையும் நிர்வாகமும் - போலீஸ் கூட்டாளிகளும் சேர்ந்துக் கொண்டு இரவோடு இரவாக அடித்து உடைத்துள்ளனர். இதனை எதிர்த்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த தொழிலாளர்களின் புகாரை கூட காவல்துறை ஏற்க மறுத்துள்ளது. இத்தகைய முக்கூட்டு ஜனநாயக விரோத செயலைக் கண்டித்து மறியல் செய்த தொழிலாளர்களை போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். நாளைய தினம் மே தினத்திற்கு நாங்கள்தான் அரசு விடுமுறை அளித்தோம் என்று பறைசாற்றிக் கொள்ளும் தி.மு.க. அரசு எப்படி தொழிலாளர் உரிமைகளுக்காக விழுந்து விழுந்து பாடுபடுகிறது என்பதற்கு ஹூண்டாய் சம்பவமே சாட்சியாய் விளங்குகிறது.
உலகமய அவலங்களுக்கு எதிராக உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுவோம்! ஏகாதிபத்திய - உலகமய கொள்கைகளை வீழ்த்துவோம்! மே தினத்தில் சபதமேற்போம்!

2 comments:

PROLETARIAN said...

Dear Santhipu,

You are telling that India is an Democratic Country. So by participating in the Govt we can achieve all rights for people in ur anti-naxal posting.

Bur here CPI-M supported Govt and Democratic Constitiency we do not have the rights to start Union.

Still you say this is Democratic and can acheive Socialism with this fake Democratic setup.

Still All Giant of CPI,CPM Comrade.Nallakannu, Com.Samkaraiah,Com.Soundarrajan had HumanChain against Hyundai.

Oru sangamey indha setupkulla vaikka mudiyalaiye communisathai katta mudiyumaa enna?


Please answer for this.

சந்திப்பு said...

நன்பரே இந்தியாவை நான் ஜனநாயக நாடு என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அவ்வாறு எங்கும் கூறவில்லை. இது முதலாளித்துவ ஜனநாயக நாடு. பாட்டாளி வர்க்க ஜனநாயக நாட்டை இந்தியாவில் உருவாக்கவே நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

எனவே இந்த முதலாளித்துவ ஜனநாயக நாட்டில் தொழிலாளிகளின் உரிமையை அவர்கள் நசுக்கவே முனைவார்கள். இதை எதிர்த்த போராட்டத்தை தொழிலாளி வர்க்கம் வீறு கொண்டு நடத்த வேண்டும். நடத்திக் கொண்டிருக்கிறது. அதைத்தான் ஹுண்டாயில் பார்க்கிறோம். நவீன பாட்டாளி வர்க்கம் பன்னாட்டு முதலாளிகளின் எந்த மிரட்டலுக்கும் அடிபணியாமல் இதுவரை நெ;"சை நிமிர்த்தி போராடிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் வெற்றியும் பெறும்.

அதே போல் சோசலிசத்தை அடைவது என்ற கட்டம் தற்போது இந்தியாவில் இல்லை. அதற்கு முன் நிபந்தனையாக இருப்பது பாட்டாளி வர்க்க ஜனநாயக செட்டப். அதாவது மக்கள் ஜனநாயக புரட்சி இந்த கடமையின் கடமைகள் நிறைவு பெறும் போதுதான் நாம் சோசலிச கட்டத்தை நோக்கிய பணத்தில் பயணிக்கச் செய்வோம்.

அதுவரை சங்கரய்யா, சவுந்தரராசன்... போன்ற தலைவர்கள் மனித சங்கிலியாக தொழிலாளி வர்க்கத்துடன் கை கோர்க்க வேண்டியது அவசியமாகிறது. நீங்களும்தான் நன்பரே! வணக்கம். மே தின வாழ்த்துக்கள்.