1848 இல் கம்யூனிஸ்ட் லீக் சார்பில் வெளியான பாட்டாளி வர்க்கத்தின் முதல் பிரகடனம் காரல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கெல்சால் படைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியாகி 160 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. முதலாளித்துவ வர்க்கத்தை நடுநடுங்கச் செய்யும் அதன் கருத்துச் செறிவு இன்றைக்கும் இளமையோடு அமைந்திருப்பதோடு, பாட்டாளி வர்க்கத்தின் வழிகாட்டியாய், தத்துவார்த்த போரின் முன்னணி தளபதியாய் திகழ்வதை காண முடியும்.
2007 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சியின் 90ஆம் ஆண்டை முன்னிட்டு ரஷ்யாவில் உள்ள பெலாரஸ் - மின்ஸ்க் நகரில் கூடிய சர்வதேச கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளின் 9வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று, கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட 160வது ஆண்டை வெகு சிறப்பாக கொண்டாடுவது; கம்யூனிஸ்ட் அறிக்கையினை உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களிடம் கொண்டுச் செல்வது என்ற அறைகூவலை விடுத்திருந்தது. அந்த நோக்கத்தினை முன்னெடுக்கும் முகமாகவே இந்த கட்டுரை வரையப்படுகிறது.
ஏகாதிபத்திய உலகமயச் சூழலில் வர்க்கப் போராட்டம் பன்முனையில் கூர்மையடைந்து வரும் தருவாயில் கம்யூனிஸ்ட் அறிக்கையின் உள்ளடக்கம் பொதுவாக இன்றைக்கும் பொருத்தப்பாடாக அமைவதோடு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.
அறிக்கை உருவான பின்னணி1840களில் இங்கிலாந்தில் ஏற்பட்ட முதலாளித்துவ நெருக்கடி ஐரோப்பாவிற்கும் பரவியது. இதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் வர்க்கப் போராட்டம் கூர்மையடைந்து கொந்தளிப்பான நிலையில் இருந்தது. எந்த நேரத்திலும் புரட்சி வெடிக்கலாம் என்ற உச்சகட்ட நிலை நிலவியது. இங்கிலாந்தில் சார்ட்டிஸ்ட் இயக்கமும், ஜெர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் 1834 இல் துவக்கப்பட்ட நாடு கடத்தப்பட்டவர்களின் கழகமும் செயலாற்றி வந்தது. இதில் பாரிஸ், ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்று வந்தனர். இந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர் களுக்கு ஆதரவாக மார்க்சும், ஏங்கெல்ஸ்சும் நிவாரண உதவிகள் உட்பட பல்வேறு பணிகளை ஆற்றி வந்தனர்.
மார்க்சும் - ஏங்கெல்சும் தொழிலாளி வர்க்கத்திற்கு ஆதரவாக பல்வேறு கட்டுரைகளை தீட்டி ஐரோப்பா முழுவதும் நன்கு அறியப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக 1847இல் மார்க்சையும் - ஏங்கெல்சையும் நேர்மையாளர் கழகத்தில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட மார்க்சும் - ஏங்கெல்சும் நேர்மையாளர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இக்கழகத்தின் முதல் மாநாடு 1847 ஜூன் மாதம் 2 முதல் 9 ஆம் தேதி வரை லண்டனில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ஏங்கெல்ஸ் கலந்துக் கொண்டார். மார்க்ஸ் பணப் பிரச்சினை காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் இம்மாநாட்டில் மார்க்சுடனான கலந்தாலோசனையின் பேரில் நேர்மையாளர் கழகம், கம்யூனிஸ்ட் லீக் என்று பெயர் மாற்றப்பட்டது. அத்துடன் அதன் முந்தைய மனித நேய கோஷமான அனைவரும் சகோதரர்களே என்ற முழக்கம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!
என்ற புரட்சிகர முழக்கத்தை வைத்தனர். மேலும் கட்சி உறுப்பினர் சேர்ப்பு, அமைப்பு விதிகள் மாற்றம் மற்றும் கீழ்க்கண்ட அடிப்படையில் அதன் நோக்கத்தை புரட்சிகரமாக வடிவமைத்தனர்.
...பூர்ஷ்வா வர்க்கத்தை தூக்கி எறிவது, பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியை ஏற்படுத்துவது, வர்க்கப் பகைமைகளை அடிப்படையாகக் கொண்ட பழைய பூர்ஷ்வா சமுதாயத்தை ஒழித்துக்கட்டி வர்க்கங்களற்ற, தனிச் சொத்துடைமை அற்ற ஒரு புதிய சமுதாய்ததை நிறுவுவது.
- கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, முன்னேற்றப் பதிப்பகம், பக்கங்கள் 143-144.
கம்யூனிஸ்ட் லீகின் இரண்டாவது காங்கிரஸ் 1847 நவம்பர் 29 அன்று லண்டனில் கூடியது. இம்மாநாடு 10 நாட்கள் நடைபெற்றது. இதில் மார்க்ஸ்சும் - எங்கெல்ஸ்சும் கலந்துக் கொண்டனர். பொதுவாக மாநாடு மாலை நேரத்திலேயே நடைபெற்றது. கம்யூனிஸ்ட் லீக் உறுப்பினர்களில் பெரும்பாலோர் தொழிலாளிகளாய் இருந்த காரணத்தினால், அவர்கள் வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பும் பொழுது மாலை நேரத்தில் கலந்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையே இருந்தது.
இந்த காங்கிரசில் கம்யூனிஸ்ட் லீகின் தத்துவார்த்த மற்றும் நடைமுறைத் தந்திரங்கள் மற்றும் அமைப்பு விதிகள் அனைத்தும் பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டது. இறுதியில் லீகின் அமைப்பிற்கான வேலைத் திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு காரல் மார்க்சையும் - எங்கெல்சையும் காங்கிரஸ் கேட்டுக் கொண்டது. இந்த அப்படையிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் பாட்டாளி வர்க்க சர்வதேச பிரகடனம் ஒரு மாத காலத்திற்குள் உருவாக்கப்பட்டு 1848 பிப்ரவரியில் லண்டனில் வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட பொழுது மார்க்சுக்கு 28 வயது, எங்கெல்சிற்கு 27 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய கம்யூனிஸ்ட் அறிக்கை ஒன்றுதான் உலகிலேயே மதச்சார்பற்ற நூல்களில் முதன்மையாக திகழ்வதோடு, மிக அதிகமான மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. ரஷ்ய புரட்சி நடைபெறுவதற்கு முன்பே 35 மொழிகளில் 544 பதிப்புகள் வெளிவந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ரஷ்யப் புரட்சிக்கு முன்பே 35 மொழிகளில் 70 பதிப்புகள் வெளிவந்ததாக எரிக் ஹாப்ஸ்வம் குறிப்பிடுகிறார். இந்த ஒன்றே கம்யூனிச தத்துவம் உலக மக்களை ஆகர்ஷிக்கும் பெரும் சக்தியாய் மாறியுள்ளதை பறைசாற்றியது.
அறிக்கை அன்றும் - இன்றும்கம்யூனிஸ்ட் அறிக்கையின் முதல் பத்தியிலேயே, "ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது; கம்யூனிசம் என்ற பூதம். பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும், போப்பாண்டவரும், ஜார் மன்னனும், மெட்டர்னிக்கும் கிஸோவும், பிரெஞ்சுத் தீவிரவாதிகளும் ஜெர்மானியப் போலீஸ் ஒற்றர்களும், இந்தப் பூதத்தை விரட்டுவதற்காக ஒரு புனிதமான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருக்கின்றனர். என்று துவங்கும்.
ஆம்! மார்க்சும் - எங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதும் போது அவர்கள் கண்முன்னே நின்றது ஐரோப்பிய முதலாளித்துவ சமூக சூழலே. 1840களில் ஐரோப்பா முழுவதும் கம்யூனிசம் என்ற கருத்தாக்கம் ஒரு பௌதிக சக்தியாய் மாறியிருந்தது. அது மட்டுமின்றி முதலாளித்துவ சுரண்டல் கொடுமையிலிருந்து விடுபட, சுரண்டலுக்கு வக்காலத்து வாங்கும் ஆளும் வர்க்க ஆட்சியாளர்களை தூக்கியெறிவதற்காக பல்வேறு வகையான சோசலிச சிந்தனைக் கொண்டவர்களும், கம்யூனிச எண்ணம் கொண்டவர்களும் செயலாற்றிவந்தனர். கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியான ஒரு சில மாதங்களிலேயே ஜெர்மன், இத்தாலி, பிரான்சில் பெரும் புரட்சி வெடித்தெழுந்ததே இதற்கு சாட்சி. கிட்டத்தட்ட ஐரோப்பாவில் 13 நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்தன.
இந்த முதலாளித்துவ புரட்சிகளில் எல்லாம் முன்னணியில் நின்றது பாட்டாளி வர்க்கமே என்பது குறிப்பிடத்தக்கது. தெருக்களில் பெரும் தடையரண்களை எழுப்பி ஆளும் வர்க்கத்திற்கு எதிராக களத்தில் நின்று, இரத்தம் சிந்தி நேருக்கு நேர் சந்தித்தது. இதில் ஜெர்மனியும், இத்தாலியும் - ஆஸ்திரிய மற்றும் ரஷ்ய அரசுகளின் ஆதிக்கதிலிருந்து விடுபட்டன. பிரான்சில் மட்டுமே, முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தை தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கத்தை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற இலட்சிய நோக்கத்தோடு தொழிலாளி வர்க்கம் செயல்பட்டது என்று ஏங்கெல்ஸ் தனது முன்னுறையில் குறிப்பிடுகிறார். அறிக்கை வெளிவந்த தருணத்தில் ஐரோப்பாவில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் கம்யூனிஸ்ட்டுகளிடையே பெரும் எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கையையும் விதைத்தது. இது குறித்து பிரீட்ரிஹ் லெஸ்னர் என்ற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இவ்வாறு கூறுகிறார் :
பிப்ரவரி புரட்சி பற்றிய இந்தச் செய்தி எங்கள் மீது ஏற்படுத்திய பலமான பிரதிபலிப்பை என்னால் விளக்க முடியாது. உற்சாகத்தால் நாங்கள் போதையுற்றோம். எங்களுள் நிறைந்திருந்த ஒரே உணர்ச்சி, ஒரே சிந்தனை: மனித வர்க்கத்தின் விமோசனத்திற்காக எங்கள் வாழ்வினையும் மற்ற அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே!
- மார்க்ஸையும் எங்கெல்ஸையும் பற்றிய நினைவுக்குறிப்புகள், புரோகிரஸ் பதிப்பகம், மாஸ்கோ. பக்கம் 232.
இவ்வாறு அறிக்கை வெளிவந்தது முதல் இன்றைக்கு வரை உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு நம்பிக்கையூட்டும் அமைப்பாளனாகவே செயலாற்றி வருகிறது. கடந்த 160 ஆண்டு காலத்தில், குறிப்பாக ரஷ்ய சோசலிச புரட்சி துவக்கி வைத்த வெற்றிப் பாதையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் வெற்றி நடைபோட்டதோடு, சின்னஞ்சிறிய கியூபா, வடகொரியா, வியட்நாம், சீனா, லாவோஸ் என்று இன்றைக்கும் சோசலிச சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்து மனித குலத்திற்கு நம்பிக்கையூட்டி வருகின்றன. தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, பொலிவியா, பிரேசில், அர்ஜென்டினா போன்ற நாடுகளில் ஏற்பட்டு வரும் இடதுசாரி மாற்றும், ஆசியாவில் - நேபாளம், இந்தியா என பல நாடுகளில் அரசியலில் இடதுசாரிகள் ஏற்படுத்தி வரும் தாக்கமும் அறிக்கையின் வெற்றிப் படிக்கட்டுகளின் பகுதியே!
அறிக்கையின் முக்கிய கூறுகள்!
கம்யூனிஸ்ட் அறிக்கை பிரதானமாக நான்கு பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.
1. பூர்ஷ்வாக்களும் பாட்டாளிகளும்
2. பாட்டாளிகளும் கம்யூனிஸ்ட்டுகளும்
3. சோஷலிஸ்ட் இலக்கியமும் கம்யூனிஸ்ட் இலக்கியமும்
4. இன்றுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் சம்பந்தமாகக் கம்யூனிஸ்ட்டுகளின் நிலை
மொத்தத்தில் இந்த அறிக்கையின் பிரதான உள்ளடக்கக் கூறுகளாக அமைந்திருப்பது. வரலாற்றை பொருள் முதல்வாத கண்ணோட்டத்தின் அடிப்படையில் அணுகுவதும், வர்க்கப் போராட்டத்தின் பகுதியே வரலாறு என்று உரைத்திருப்பதும், முதலாளித்துவ அமைப்பின் வெற்றி அதற்கு முன்பிருந்த பழைய சமூகத்தையெல்லாம் கவிழ்த்துப் போட்ட சாதனைகளும், அதே முதலாளித்துவ சமூகத்திற்கு சவக்குழி வெட்டப் போகும் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தை உருவாக்கியிருப்பதும், மொத்தத்தில் எதிர்காலத்தில் வர்க்கங்களற்ற சமூகத்தை நிர்மாணிக்கும் இலட்சியத்தையும் பறைசாற்றும் முரசாக கம்யூனிஸ்ட் அறிக்கை விளங்குகிறது.
முதல் பகுதியில்,
இதுவரை இருந்து வந்திருக்கிற வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே (பூர்வீகக் காலத்தில் நிலம் பொதுச் சொத்தாக விளங்கிய முறை கரைந்தொழிந்ததிலிருந்து-ஏங்கெல்ஸ்) என்று துவங்கி, முதலாளித்துவத்தின் புரட்சிகர அசுர வளர்ச்சியின் சாதனைகளையும், அது பல்லாயிரம் ஆண்டுகளாக தனக்கு முன்னிருந்த சமூகங்கள் சாதித்தவைகள் அனைத்தையும் கீழே தள்ளி, குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான சாதனைகளை நிகழ்த்தியதையும், மேலும் மனித குலத்திற்குள் உறைந்து கிடந்த உற்பத்தி ஆற்றலை வெளிக்கொணர்ந்ததையும், தன்னுடைய வளர்ச்சிக்கு தடையாக இருந்த நிலப்பிரபுத்துவ மற்றும் பழமைவாத சமூக அமைப்புகளை துடைத்தெறிந்ததையும், முதலாளித்துவ வளர்ச்சியின் ஊடாக பிறந்த பாட்டாளி வர்க்கத்தை அரசியல் ரீதியாக தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டதையும், பல்வேறு சமூக அமைப்புகளில் நிலவிய சிக்கலான வர்க்க உறவுகளுக்கு மாறாக, மிக எளிமையான வர்க்க உறவுகளை கட்டியமைத்ததையும், முதலாளித்துவம் மனித உறவுகள் அனைத்தையும் வெறும் பண உறவாக மாற்றியமைத்ததோடு, கௌரவமான தொழில் புரிந்த வழக்கறிஞர்கள் முதல் கலைஞர்கள் வரை அனைவரையும் வெறு கூலி உழைப்பாளிகளாக மாற்றியதையும் மிக எளிமையாகவும், கணக் கச்சிதமாகவும், பிரம்மிக்கத்தக்க அளவிலும் சொல் நேர்த்தியோடு அறிக்கையில் பதிவு செய்துள்ள மார்க்சும் - ஏங்கெல்சும் பாட்டாளி வர்க்கமே நிலவும் முதலாளித்துவ சமூகத்திற்கு சவக்குழித் தோண்டப்போகும் புரட்சிகரமான வர்க்கம் என்று அழுத்தமாக வலியுறுத்தியதோடு, பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டுமே சமூகம் முழுமைக்குமான - பெரும்பான்மையோரின் விடுதலைக்கான புரட்சியாக அமையும் என்று அறுதியிட்டு கூறியுள்ளதை நோக்கும் போது மார்க்சிய மூலவர்களின் வரலாற்று பொருள் முதல்வாதப் பார்வை எத்தகைய புரட்சிகரமானது என்பதை உணர முடியும்.
இன்றைய ஏகாதிபத்திய உலகமயச் சூழலில், ஓருலகத் தத்துவம் என்ற பெயரில் உலகம் முழுமையிலும் தனது ஆக்டோபஸ் சுரண்டல் கரங்களை, சுதந்திர வர்த்தகம் என்ற பெயரிலும், நிதி மூலனம் என்ற அரக்கத்தனமான மாய கைகளை பயன்படுத்தி நாடுகளையும், பாட்டாளிகளையும் சுரண்டிச் சூறையாடி வருவதையும், செல்வக் குவிப்பை மிகச் சிறுபான்மையோர் கைகளில் கொண்டுச் சேர்க்கும் இன்றைய உலகமயம் குறித்து கம்யூனிஸ்ட் அறிக்கையில் அன்றைக்கே வெளிப்படுத்தியிருப்பது எவ்வளவு தொலை நோக்கு பார்வை கொண்டது என்பதை அறிய முடியும்.
தன் பொருட்களை விற்பதற்கு, இடைவிடாமல் விரிவடையும் மார்க்கெட் பூர்ஷ்வா வர்க்கத்துக்குத் தேவைப்படுகிறது. இந்தத் தேவை, பூர்ஷ்வா வர்க்கத்தை உலகப் பரப்பு முழுவதற்கும் துரத்துகிறது. அது ஒவ்வோர் இடத்துக்கும் சென்று கூடு கட்டி அடைய வேண்டும், குடியேற வேண்டும், தொடர்புகளை கொள்ள வேண்டும்.
மேலும், முதலாளித்துவ வர்க்கத்தின் உயிர் வாழ்வின் அடிப்படை எதன் மீது கட்டப்பட்டுள்ளது - அதன் விளைவாக சமூக உறவிலும் - அரசியல் ரீதியாக ஏற்படும் தாக்கம் என்ன? என்பதை இரத்தினச் சுருக்கமாக அறிக்கை விளக்கிச் செல்கிறது.
பூர்ஷ்வா வர்க்கம் உயிர் வாழ வேண்டுமானால், அது பொருளுற்பத்திக் கருவிகளைப் புரட்சிகரமான வகையில் இடைவிடாமல் மாற்றிக் கொண்டிருக்க வேண்டும்; அதன் மூலம் உற்பத்தி உறவுகளையும், அத்துடன் சலக சமுதாய உறவுகளையும் இடைவிடாமல் புரட்சிகரமான வகையில் மாற்றிக் கொண்டிருக்க வேண்டும்
இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், குறிப்பாக கணிணித்துறையில் ஏற்படுத்தி வரும் வளர்ச்சி - மாற்றங்கள் மிக அதிவேகமாக நடைபெற்று வருகிறது. ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் துறைகளில் ஒவ்வொரு நாளும் புதிய, புதிய அதிவேக கண்டுப்பிடிப்புகள் நிகழ்ந்துக் கொண்டேயிருப்பதும், மார்க்கெட்டில் புதிது புதிதாக உலாவருவதன் மூலம் நுகர்வோர் அதனைச் சார்ந்து இயங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளுவதும் நடைபெற்று வருவது நிகழ்கால உதாரணமாக திகழ்கிறது.
அதேபோல், தகவல் தொழில்நுட்பத் துறையில் அவுட்சோர்சிங் மூலம் நடைபெற்று வரும் நவீன சுரண்டல் தொழிலாளர்களை கண்டம் விட்டு - கண்டம் மாறிச் செல்ல வைத்ததோடு, மூன்றாம் உலக நாடுகளில் உள்ள அறிவுத் திறன்மிக்க ஊழியர்களை பயன்படுத்தி, குறைந்த கூலிக்கு சுரண்டி கொழுப்பதும் மிக வேகமாக நடந்தேறி வருகிறது. நவீனத் தொழில்நுட்ப உற்பத்தி கருவிகள் மூலம் சுரண்டலை நடத்தி வரும் மைக்ரோ சாப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களே உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளதை காண முடியும்.
இவ்வாறு முதலாளித்துவ சுரண்டல் அம்சங்களையும் நுணுக்கமாக பட்டியலிட்டுள்ள அறிக்கை இந்த முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் வாயிலாக ஏற்பட்டு வரும் சமூக மற்றும் அரசியல் ரீதியான மாற்றத்தையும் சுட்டியுள்ளதோடு, சுரண்டும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்க அரசியல் போராட்டத்தையும் அதன் முக்கிய அம்சங்களையும் அறிக்கை வெளிப்படுத்தும் கருத்துக்கள் இன்றைக்கும் பயனுள்ள அம்சமாக திகழ்கிறது.
மேலும், தொழிலாளர்களின் ஒற்றுமை இடைவிடாமல் விரிவடைந்து கொண்டிருப்பதிலேயே அடங்கியிருக்கிறது. நவீனத் தொழில் படைத்திருக்கும் முன்னேற்றமடைந்துள்ள போக்குவரத்துச் சாதனங்கள், இந்த ஒற்றுமை உருப்பெறுவதற்கு உதவுகின்றன.
அறிக்கையின் மேற்கண்ட கூற்று நவீன தொழில்நுட்ப உலகிற்கும் அப்படியே பொருந்துவதை காண முடியும். இணையதளம் - இமெயில் - வலைப்பதிவு போன்ற நவீன கணிணி நுட்பங்கள் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களையும் ஒரே கண்ணியில் இணைத்திருக்கிறது. மிக விரைவான - குறுகிய காலத்திற்குள் உலகம் முழுவதும் நடைபெறும் விஷயங்களை விரல் நுனியில் கொண்டு வந்திருப்பதோடு - சர்வதேச அளவில் நடைபெறும் போராட்டங்களை உடனுக்குடன் இதர நாட்டு பாட்டாளி வர்க்கத்துடனும் பகிர்ந்துக் கொள்ள முடியும். உலக சமூக மாமன்றத்தின் சார்பில் மாற்று உலகம் சாத்தியமே என்ற கோஷத்தினை முன்வைத்து உலகமயமாக்கலுக்கு எதிராக உலகளாவிய போராட்டம் நடைபெற்றதை இந்தக் காலகட்டத்தில் பார்க்க முடிந்தது.
முதல் பகுதியின் இறுதியில், பூர்ஷ்வா வர்க்கம் எதை உற்பத்தி செய்கிறது? தனக்குச் சவக்குழி தோண்டுகிறவர்களையே. அதன் வீழ்ச்சி. பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி ஆகிய இரண்டுமே தவிர்க்க முடியாதவையாகும். என்ற புரட்சிகர அறிவிப்போடு நம்பிக்கையூட்டி முடிவடைகிறது.
அறிக்கையின் இரண்டாவது பகுதியில், கம்யூனிஸ்ட்டுகளின் நோக்கம் பாட்டாளி வர்க்கத்தின் முழுமையான நலன்களிலிருந்து வேறுபட்ட நலன்கள் ஒன்றுமில்லை என்று பறைசாற்றி துவங்குகிறது. இப்பகுதியில் பாட்டாளிகளுக்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் உள்ள உறவினை விளக்குகிறது.
குறிப்பாக முதலாளித்துவ அறிவுஜீவிகள் கம்யூனிஸ்ட்டுகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் பிரதானமானது, கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்தால், உங்களது சொத்துக்களையெல்லாம் பிடுங்கிக் கொள்வார்கள்; உங்கள் வீட்டில் இரண்டு மாடுகள் இருந்தால் அதில் ஒன்றை எடுத்துக் கொள்வார்கள், மூன்று கோழி இருந்தால் அதில் ஒன்றரை கோழியை எடுத்துக் கொள்வார்கள், ஒரு வீடு இருந்தால் அதை இரண்டாக பிரித்து எடுத்துக் கொள்வார்கள் என்றெல்லாம் பீதியூட்டுவதை அறிவோம். இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு அறிக்கை மிகத் தெளிவாக பதிலுரைக்கிறது.
சொத்துடைமையை ஒழிப்பது என்பது அல்ல, பூர்ஷ்வா உடைமையை ஒழிப்பது என்பதே கம்யூனிசத்தின் விசேஷ அம்சமாகும்இன்றை உலகமயச் சூழலில் ஏகாதிபத்திய சுரண்டல் இருவேறுபட்ட பாதாள உலகத்தை மட்டுமே படைத்துள்ளது. குறிப்பாக 497 பன்னாட்டு முதலாளிகளிடம் மட்டும் 5.3 டிரில்லியன் டாலர் சொத்து குவிந்துள்ளது. (ஒரு டிரில்லியன் = 1000000000000, ) இது உலக மொத்த வருவாயில் (ஜி.டி.பி.) 7 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. பூர்ஷ்வா பொருளுற்பத்தி சமூக அமைப்பு எவ்வாறு ஒரு சிலர் கையில் மட்டும் செல்வாதாரங்களை குவித்துள்ளது என்பதற்கு இடைவிட வேறு என்ன வேண்டும்?
இந்திய அரசு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளில் முதன் முறையாக 2007-2008 ஆம் ஆண்டுதான் 1.16 டிரில்லியன் டாலர் ஜி.டி.பி.யை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (பொருளாதார ஆய்வறிக்கை, எக்கனாமிக் டைம்ஸ், பிப்ரவரி 29, 2008) அதாவது, 115 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டு பொருளாதாரத்தைவிட ஐந்து மடங்கு சொத்துக்கள் வெறும் 497 பேரிடம் குவிந்துள்ளது. ஆஹா இதுதான் முதலாளித்துவ உலகமயமாக்கலின் ஜால வித்தையோ?
அதே சமயம், குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் உள்ள 240 கோடி மக்களிடம் 1.6 டிரில்லியன் டாலர் மட்டுமே உள்ளது. இது உலக மொத்த வருவாயில் 3.3 சதவிகிதம் மட்டுமே!
மறுபுறத்தில், உலக பணக்கார நாடுகளிலுள்ள தோராயமாக 100 கோடி மக்களிடம் 36.6 டிரில்லியன் டாலர் சொத்துக்கள் குவிந்துள்ளது. இது உலக மொத்த வருவாயில் 76 சதவிகிதம்!
மேற்கண்ட புள்ளி விவரங்களிலிருந்து பூர்ஷ்வா சொத்துக் குவிப்பின் மையம் எது என்பதை எளிதில் அடையாளம் காண முடியும். இத்தகைய முதலாளித்துவ உடமையை உடைத் தொழிப்பதன் மூலமே உலக மக்களின் வாழ்வாதாரத்தை நிமிர்த்த முடியும்!
நிலவக்கூடிய ஏகாதிபதிய - முதலாளித்துவ சமூக அமைப்பு பொருள் உற்பத்தி முறையில் எவ்வளவு தூரம் முன்னேறியிருந் தாலும், அதன் சுரண்டல் கரங்கள் நீண்டதே தவிர உலக மக்களின் வறுமை போக்கப்படவில்லை.
உலக மக்களில் கிட்டத்தட்ட 300 கோடி பேர் ஒரு நாளைக்கு வெறும் இரண்டு டாலருக்கு குறைவாகவே வருமானம் ஈட்டக்கூடியவர்களாக உள்ளனர். ஏழ்மை நிலையில் இருக்கும் உலக மக்களின் 40 சதவிகிதம் பேருக்கு உலக வருவாயில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே கிடைக்கிறது.
முதலாளித்துவ அறிவு ஜீவிகள் பெரும்பான்மையாக உள்ள ஏழை - எளிய பாட்டாளிகளிடத்தில் அவர்கள் வைத்துள்ள சொற்ப வருவாயை கம்யூனிஸ்ட்டுகள் ஒழித்துவிடுவார்கள் என்று பூச்சாண்டி காட்டி வருகிறார்கள்.
பூர்ஷ்வாக்களின் இந்த புரளிகளுக்கு அறிக்கை வெகு சிறப்பாக சாட்டையால் விளாசியுள்ளது. ஏழை - எளிய உழைப்பாளி மக்களிடம் இருந்த சொத்துடைமை ஏற்கனவே முதலாளித்துவத்தால் எவ்வாறு சூறையாடப்பட்டு விட்டது என்பதை அறிக்கை கீழ்க்கண்டவாறு விளக்குகிறது.
சிறு கைத்தொழிலாளி, சிறு விவசாயி ஆகியோரின் சொத்தை - பூர்ஷ்வா சொத்து வடிவத்துக்கு முன்பிருந்த அந்தச் சொத்து வடிவத்தை - குறிப்பிடுகிறீர்களா? அதை ஒழிக்க வேண்டிய அவசியமில்லை; முன்பே தொழில் வளர்ச்சி அதைப் பெரிய அளவுக்கு அழித்து விட்டது; இப்பொழுதும் தினசரி அதை அழித்துக் கொண்டிருக்கிறது.
மேலும், நாங்கள் தனி உடைமையை ஒழித்து விட உத்தேசித்திருக்கி றோமென்பதைக் கண்டு நீங்கள் நடுங்குகிறீர்கள். ஆனால் தற்காலத்திலுள்ள உங்களுடைய சமூகத்தில், ஜனத்தொகையில் பத்தில் ஒன்பது பேரின் தனி உடைமை முன்பே ஒழிக்கப்பட்டு விட்டது. இந்தப் பத்தில் ஒன்பது பேருக்குச் சொத்து இல்லாமல் இருக்கும் ஒரே காரணத்தால்தான் ஒரு சிலருக்கு சொத்து இருக்கிறது.
முதலாளித்துவ கூலி அறிவு ஜீவிகளின் வாதம் கம்யூனிஸ்ட் அறிக்கையில் சுக்குநூறாக்கப்படுவதை காணமுடிகிறது.!
முதலாளித்துவவாதிகள் தனியுடைமையை ஒழித்துவிட்டால், சமூகத்தில் சோம்பேறித்தனம் மலிந்து விடும், யாரும் உழைக்க மாட்டார்கள் என்று கம்யூனிசத்திற்கு எதிராக இன்றும் கூட குற்றம்சாட்டுவதை நாம் அறிவோம். இதுபோன்ற மலிவான குற்றச்சாட்டுகளுக்குள்ளும் அறிக்கை மிகச் சிறப்பாக கவனம் செலுத்தி பதிலடி கொடுத்திருக்கிறது.
உண்மை என்ன? சமூகத்தில் உழைக்கின்ற பெரும் பகுதி மக்களின் சொத்துக்கள் ஏற்கனவே முதலாளித்துவத்தால் அபகரிக் கப்பட்டுவிட்டது.
அவர்களுக்கு எந்தவிதமான சொத்துக்களும் இல்லை. மேற்கண்ட குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் இந்த முதலாளித்துவ சமூகம் பாழ்பட்டுப் போயிருக்க வேண்டும். ஆனால் நிலைமை என்ன? உழைக்கின்ற மக்களுக்கு சொத்துக்கள் இல்லை! சொத்து வைத்திருப்போர் எந்த உழைப்பையும் செலுத்துவதில்லை என்று அறிக்கை பதிலுரைக்கிறது.
முதலாளித்துவ அறிவு ஜீவிகள் கம்யூனிஸ்ட்டுகள் மீது சாட்டப்படும் இன்னொரு அற்ப குற்றச்சாட்டு, நீங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களையும் பொதுவாக்கி விடுவீர்கள் என்பதே! இந்த மலிவான குற்றச்சாட்டிற்குள் ஒளிந்திருக்கும் சுரண்டல் வர்க்கத்தன்மையினை அறிக்கை அம்பலப்படுத்துகிறது.
பூர்ஷ்வா தன் மனைவியை ஓர் உற்பத்திக் கருவியாக மட்டுமே பார்க்கிறான். உற்பத்திக் கருவிகள் பொதுவில் பயன்படப் போகின்றன வென்று அவன் கேள்விப்படுகிறான். எனவே, எல்லோருக்கும் பொதுவாகப் பயன்படும் நிலைமை பெண்களுக்கும் ஏற்பட்டுவிடுமென்றுதான் அவன் இயல்பாகவே முடிவு செய்ய முடியும்.
அதாவது, சோசலிச மற்றும் கம்யூனிச சமூகத்தில் முதலாளித்துவ உற்பத்திக் கருவிகள் அனைத்தையும் பொதுவுடைமையாக்கப்படும். இந்த உற்பத்தி கருவிகளின் தனியுடைமை அம்சம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். இதனை அடிப்படையாக வைத்தே முதலாளித்துவ அறிவு ஜீவிகளின் மட்டரகமான சிந்தனை பெண்களை வெறும் உற்பத்தி கருவிகளாகவே பார்க்கும் மனப்போக்கு கொண்டவர் களாக உள்ளனர். அதனால் சோசலிச மற்றும் கம்யூனிச சமூகத்தில் பெண்களையும் பொதுவாக்கிவிடுவார்கள் என்ற வெட்கம் கெட்ட பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
மாறாக, கம்யூனிஸ்ட்டுகள் பெண்களை வெறும் உற்பத்திக் கருவிகளாக பார்க்கும் போக்கினையே ஒழிக்க விரும்புகிறார்கள் என்று முகத்திலிறைகிறது அறிக்கை.இதன் தொடர்ச்சியாக அறிக்கை, கம்யூனிஸ்ட்டுகள் பெண்களைப் பொதுவாக்கத் தேவையில்லை; பெண்களைப் பொதுவாக்குவது அனாதி காலந்தொட்டு இருந்து வந்திருக்கிறது. என்று அறிக்கை குற்றஞ்சாட்டுவதோடு, அதிலிருந்து பெண்களை முழுமையாக விடுதலை செய்வது குறித்தும் தனது கருத்தை ஆழமாக பதிக்கிறது.அதாவது, இன்றைய உற்பத்தி முறையை ஒழிப்பதன் மூலம் அந்த முறையிலிருந்து தோன்றியிருக்கும் பொது மகளிர் முறையும் ஒழியும் என்பது, அதாவது பகிரங்க விபசாரம், ரகசிய விபசாரம் இரண்டும் ஒழியும் என்பது நிதர்சனமான விஷயமாகும்.
தொடர்ந்து முதலாளித்துவ சமூக அமைப்பில் உள்ள கல்வி முறை எவ்வாறு ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தி, அதனை ஆளும் வர்க்க செல்வாக்கிலிருந்து மீட்க வேண்டும் என்று கல்வி குறித்த தனது ஆழமான வர்க்கப் பார்வையை அறிக்கை செலுத்துகிறது.
பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ சுரண்டல் ஆட்சியதி காரத்தை பலாத்காரமாக வீழ்த்தி, உற்பத்தி கருவிகளை படிப்படியாக முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து பிடுங்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் அறிக்கை, இது, பொருளுற்பத்தி முறையை முற்ற முழுக்கப் புரட்சிகரமாக்கு வதற்குரிய சாதனங்கள் என்ற முறையில் இந்த நடவடிக்கைள் தவிர்க்க முடியாதவை என்று சுட்டுகிறது. அதே சமயம் இத்தகைய நடவடிக்கைகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறாகத்தான் இருக்கும் என்றும் மிக அழுத்தமாக வலியுறுத்துவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சோசலிசத்தை நோக்கிய முன்னேற்றப் பாதை என்பது உலகம் முழுமைக்குமான ஒரே பாதைல்ல; அது ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் உற்பத்தி உறவு மற்றும் வர்க்க முரண்பாடுகளுடன் இணைந்த ஒன்று என்று தெளிவுபடுத்துகிறது. கம்யூனிசத்தை கணித சூத்திரம் போல் அமலாக்க முடியாது என்பதை வெகுவாக சுட்டிக் காட்டுகின்றனர் மார்க்சும் - எங்கெல்சும். இந்தியாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரஷ்யா பாதையையோ, சீனப் பாதையையோ பின்பற்றாமல், இந்திய சூழலுக்கேற்ப மக்கள் ஜனநாயகப் புரட்சி என்கிற புரட்சிகர பாதையை உயர்த்திப் பிடிக்கிறது. இந்தக் கட்டத்தில், ஏகாதிபத்தியத்துடன் சமசரம் செய்துக் கொண்டுள்ள பெரு முதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அமைப்பினை வீழ்த்துவது என்ற கடமையினை முன்னெடுத்துச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சோஷலிச, கம்யூனிச இலக்கியம் என்ற மூன்றாவது பகுதியில், ஐரோப்பாவில் நிலவிய பல்வேறு ரகமான கற்பனாவாத சோசலிச மற்றும் கம்யூனிச வகைகளை பட்டியலிடும் அறிக்கை. ஒவ்வொரு சித்தாந்தத்திற்குள்ளும் ஒளிந்துக் கொண்டிருக்கும் வர்க்க பாசத்தை நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.
1. பிரபுத்துவ சோசலிசம், 2. கிறித்துவ துறவு சோசலிசம், குட்டிப் பூர்ஷ்வா சோசலிசம், 4. கற்பனாவாத சோசலிசம், 5. முதலாளித்துவ சோசலிசம்... என பல வகைகளை பட்டியலிடுகிறது. பிரபுத்துவ சோசலிசம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தால் வீழ்த்தப்பட்ட பிரபுத்துவம் அதனை பழிவாங்குவதற்காக பாட்டாளிகள் பக்கம் பேசுவது போல் நாடகமாடுகிறது. அத்தோடு முதலாளித்துவ வர்க்கத்தின் மூலம் கிடைக்கும் பலன்களையும் அனுபவிக்கத் தவறுவதில்லை. தன்னுடைய நலனை காத்துக் கொள்வதற்காக பாட்டாளிகளின் பிச்சைப் பாத்திரத்தை கொடிகளாக தூக்கி திறிந்தது என்று ஏளனம் செய்கிறது.
அதேபோல் கிறித்துவ துறவு மனப்பான்மையை சோசலிசம் என்று முத்திரை குத்துவதை விட எளிய விஷயம் வேறு எதுவுமில்லை என்று உரைப்பதோடு, பிரபுத்துவக் கோமானுடைய மனப்புகைச்சலைப் புனிதம் பெறச் செய்வதற்காக சமயகுரு தெளித்திடும் புனித தீர்த்தமே கிறிஸ்தவ சோஷலிசம்.
இதேபோல்தான் குட்டி முதலாளித்துவ சோஷசலிசமும் முதலாளித்துவ வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட நகர வணிகத்தார்கள், சிறு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து முதலாளித்துவ வர்க்கத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நாளொரு மேனியாக பாட்டாளி வர்க்கத்திற்குள் தள்ளப்படுகின்றனர். இவர்கள் பாட்டாளிகள் பக்கமும் - முதலாளிகள் பக்கமுமாக ஊசலாடிக் கொண்டிருப் பார்கள். இவர்களது சித்தாந்தமும் தனது வர்க்க நிலையிலிருந்து எழுந்ததே தவிர பாட்டாளிகளை விடுவிப்பதற்கானது அல்ல!
கற்பனாவாத சோசலிசம்! இது முதலாளி வர்க்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நடத்துவதை கைவிட்டு, மனிதநேய அடிப்படையில் அனைவருக்கும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது, சலுகைகள் வழங்குவது போன்றவற்றின் மூலம் நிலவக்கூடிய சமூகப் பிரச்சினைக்கு தீர்வுகாண முற்பட்டது. அதாவது முதலாளித்துவ வர்க்கத்திற்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் சோசலிசம் பேசியது!
இது குறித்து 1888ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்கான முன்னுரையில் ஏங்கெல்ஸ் குறிப்பிடும் போது, பல்வேறு வகையான போலி சோசலிசம் நிலவிய காரணத்தினாலேயே இதற்கு கம்யூனிஸ்ட் அறிக்கை என்று பெயர் சூட்டினோம். இருப்பினும் இந்த பெயரை விலக்கிவிடும் எண்ணம் எங்களுக்கு கொஞ்சமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
நம்முடைய இந்திய நாட்டிலும் இப்படிப்பட்ட பல்வேறு வகையான சோசலிச சித்தாந்தங்கள் வலம் வந்ததை நாம் அறிவோம்! காந்திய சோசலிசம், நேருவின் ஆவடி சோசலிசம், ஜெயப்பிரகாஷ் நாராயணன் சோசலிசம் என அவ்வப்போது தோன்றி காணாமல் போவதை கண்டுள்ளோம்.
எனவே விஞ்ஞானப் பூர்வ கம்யூனிச தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட, முதலாளித்துவ சுரண்டல் நுகத்தடியிலிருந்து விடுதலை பெறுவதற்கான பாட்டாளி வர்க்க விடுதலை என்ற உண்மையான முழக்கத்தை உயர்த்திப்பிடிப்பதும், போலி சோசலிச வைத்தியர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம் என்பதையே இதன் மூலம் அறிக்கை வலியுறுத்தியது.
இறுதியாக, முதலாளித்துவ சமூக அமைப்பின் கொடுமையி லிருந்து விடுபடுவதற்காக சோசலிச மற்றும் ஜனநாயக இயக்கங்களோடு இணைந்து நிற்க வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தி, பாட்டாளி வர்க்கத்தின் முழுமையான விடுதலைக்கான விஞ்ஞானப்பூர்வமான வழிகாட்டுதலை அளிப்பதோடு, நிலவக் கூடிய முதலாளித்துவ சமூக அமைப்பை பலவந்தமாக வீழ்த்த வேண்டும் என்று பாட்டாளிகளுக்கு அறை கூவுகின்றனர்.
கம்யூனிஸ்ட் புரட்சியை நினைத்து ஆளும் வர்க்கங்கள் நடுங்கட்டும்! பாட்டாளிகளுக்குத் தமது அடிமைத் தளைகளைத் தவிர இழப்பதற்கு வேறொன்றுமில்லை. அவர்கள் வெல்வதற்கு ஓர் உலகம் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!
என்ற புரட்சிகர அறிவிப்போடு அறிக்கையை நிறைவு செய்கிறார்கள்.பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றியடைவதற்கு, பாட்டாளி வர்க்க கட்சி அமைப்பின் முக்கியத்துவத்தையும், தொழிலாளர்களுக் கிடையிலான ஒற்றுமையையும் மிக அழுத்தமாக வலியுறுத்து கின்றது. மேலும், எதிர்காலத்தில் அமையக்கூடிய சோசலிச மற்றும் கம்யூனிச சமுதாயத்தில் ஒவ்வொருவரின் சுதந்திரமான வளர்ச்சியையும் - சமுகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என்று கீழ்க்கண்டவாறு அறிக்கையில் வலியுறுத்துகின்றனர்.
வர்க்கங்களையும், வர்க்க விரோதங்களையும் கொண்ட பழைய முதலாளித்துவ சமூகத்துக்குப் பதிலாக, ஒவ்வொருவருடைய சுதந்திரமான வளர்ச்சியும், அனை வருடைய சுதந்திர வளர்ச்சிக்கு அவசியமாயுள்ள ஒரு அமைப்பை நாம் பெறுவோம் கம்யூனிஸ்ட் அறிக்கையை திரும்பத், திரும்ப படிப்பதன் மூலம் பல்வேறு கருத்துக்களை நுட்பமாக அறிந்துக் கொள்ள முடியும். நிலவக்கூடிய சமூக அமைப்பின் முரண்பாடுகளையும், இயங்கியல் விதிகளையும், வர்க்க கண்ணோட்ட அணுகுமுறையையும் பகுப்பாய்வு செய்வதற்கு பாட்டாளி வர்க்கத்திற்கு கிடைத்த பேராயுதமே கம்யூனிஸ்ட் அறிக்கை! 160வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்நேரத்தில் பரவலான பாட்டாளிகளிடமும், இளைஞர்களிடமும் கொண்டுச் செல்வதன் மூலம் சமூக மாற்றத்திற்கான களத்தினை விரிவுபடுத்திடவும், விரைவுபடுத்திடவும் முடியும்.
தமிழகத்தில் மார்க்சிய சிந்தனைகளை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். 1930களில் பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகையின் வாயிலாக பொதுவுடைமை கருத்துக்களை மிக எளிய முறையில் மக்களுக்கு புரியம் வகையில் எழுதி வந்த சிங்காரவேலரே 1931 இல் முதன் முதலில் கம்யூனிஸ்ட் அறிக்கையை தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். இருப்பினும் கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஒரு பகுதி மட்டுமே அன்றைக்கு வெளி வந்தது. பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், ஜனசக்தி ஏட்டில் இஸ்மத் பாஷா மொழி பெயர்ப்பில் முழுமையான அறிக்கை 1948-லேயே வெளியானது என்பதையும் இந்நேரத்தில் நினைவுகூறத்தக்கதாகும்.
பயன்படுத்திய நூல்கள்:
கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, அயல் மொழிப் பதிப்பகம்.
கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, சோவியத் நாடு வெளியீடு.
மார்க்சையும் எங்கெல்ஸையும் பற்றிய நினைவுக் குறிப்புகள், புரோகிரஸ் பதிப்பகம், மாஸ்கோ.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, கி. இலக்குவன், பாரதி புத்தகாலயம்.
வெல்வதற்கோர் பொன்னுலகம், பாரதி புத்தகாலயம்.
மார்க்சியத்தின் எதிர்காலம், தொகுப்பு : ஞானி, நிகழ் வெளியீடு.
http://www.globalissues.org/ - Poverty Facts and Stats