September 07, 2007

மார்ச்சுவரியை நோக்கி சிங்கார சென்னை!

சிங்கார சென்னை நகரம் கடந்த ஒரு மாதமாக நாறிக் கொண்டிருக்கிறது. இது குறித்து நமது வலைப்பதிவர்கள் விரிவாக பதிவிட்டுள்ளனர். இருப்பினும் அதன் தற்போதைய அவல நிலையை நகைப்புக்கு மட்டுமல்ல உலகமயத்தின் விளைவையும் விளக்குவதாக உள்ளது.

சென்னையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று சபதமேற்று அதிமுக - திமுக இந்த இருவரும் குப்பையை அள்ளுவதற்கு ஓனிக்ஸ் என்ற நிறுவனத்திற்கு காண்ட்டிராக்ட் விட்டதும். தற்போது ஓனிக்சின் காண்ட்டிராக்ட் முடிவுக்கு வந்து. அந்த இடத்தில் நீல் மெட்டல் பனால்கா என்ற நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல அந்நிறுவனத்தின் துவக்கமே அலங்கோலமாக இருந்தது. மலை மலையாய் தேங்கிய குப்பைகளை அகற்றுவதற்கு போதுமான வாகனங்களோ - ஊழியர்களோ அல்லது உரிய திட்டமிட்ட ஏற்பாடோ இல்லாததால் சென்னை நாறிக் கொண்டிருக்கிறது.

சென்னை தி.மு.க.வின் கோட்டை என்ற கனவை கடந்த சட்டமன்ற தேர்தல் அசைத்து விட்ட காரணத்தால் தற்போதைய குப்பை அரசியல் திமுகவை எங்கே ஓரம் கட்டி விடுமோ என்ற பயத்தில் மாநகராட்சி அவசரம் என்ற பெயரில் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு துரிதமாக குப்பைகளை அகற்றிக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படவில்லை. எஜமான விசுவாசத்தால் பழைய ஓனிக்ஸ் நிறுவனமும் சற்று உதவி செய்தது. இது அடுத்த காண்ட்டிராக்ட்டிற்கு திட்டம் போட்டுதான்.
சிங்கப்பூராக்குவேன் என்றவர்கள் சென்னையை குப்பைக்காடாக்கியதுதான் மிச்சம். சரி. தனியாமயம் குப்பை அகற்றும் தலித் மற்றும் அடித்தட்டு மக்களை நிரந்தர பணியில் இருந்து முதலில் அகற்றியது. பின்னர் அவர்களது வாரிசுகள் ஓனிக்சின் கரங்களில் சிக்கி சின்னபின்னமாகிப் போனதும் தற்போது ஓனிக்சின் ஆயுள் காலம் முடிந்த கையோடு அந்த ஊழியர்களின் வாழ்க்கையும் அமிழ்ந்த போனது. குறைந்த சம்பளம் - நிறைவான உழைப்பு... இருப்பினும் என்ன கிடைத்தது இளமையை இழந்து - நோயோடு பேயாக வாழும் வாழ்க்கைதான் அவர்களுக்கு மிச்சம்.

தற்போதைய புதிய எஜமான் நீல் மெட்டல் பனால்கா அதே ஊழியர்களை மிக குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்த திட்டம் போட்டு வருகிறது. சரி இருக்கட்டும்... தனியார்மயம் ஊழியர்களை மட்டுமா குப்பையாக்கியது சென்னை நகரையும் தானே! மெத்தப் படித்தவர்கள் அனைத்தையும் தனியார்மயமாக வேண்டும் என்று வக்காலத்து வாங்குபவர்கள் கூட முகம் சுளிப்பதைத்தான் இது காட்டுகிறது.

அதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? தற்போதைய நீல் மெட்ட்டல் பனால்கா குப்பைகளை அகற்றுவதற்கான குப்பைத் தொட்டிகளை வாங்குவதற்கு பாங்காக்கிற்கும் - சிங்கப்பூருக்கும் காண்ட்டிராக்ட் விட்டிருக்கிறது. அதன் முலம் தற்போது 1800 குப்பைத் தொட்டிகள் இன்னும் சில நாட்களில் இறக்குமதியாகி விடுமாம். இதில் 1100 குப்பைத் தொட்டிகள் சிங்கப்பூரில் இருந்தும். 700 பாங்காக்கில் இருந்தும் வாங்கப்படுகிறதாம்.

வேடிக்கை என்னத் தெரியுமா? வெளிநாட்டில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த குப்பைத் தொட்டிகளை இறக்குவதற்கு இடம் இல்லையாம். அதனால் அவைகள் மகாராஷ்டிரத்திற்கு திருப்பி விடப்பட்டு - அங்கிருந்து வாகனங்கள் மூலம் தரைவழியாக சென்னை வருகிறதாம். தலையை சுற்றி உங்களால் சாப்பிட முடியுமா? சென்னை மாநகராட்சியும் - உலகமயமும் அதை செய்து காட்டுகிறது!

உலகமயம் என்றால் உலகத்தையே சுற்ற வேண்டும் என்னவா? சென்னை நகரில் குப்பை அள்ளுவதற்கு தேவையான குப்பை தொட்டிகளை கூட உருவாக்க லாயக்கற்றவர்களாகி விட்டனர் தமிழக மக்களும் - இந்திய மக்களும்!

ஆட்சியாளர்கள் சென்னையை சிங்கப்பூராக மாற்றுவார்களோ இல்லையோ? சிங்கப்பூரை உலகமயத்தின் மூலம் வாசிங்டன்னாக மாற்றுவார்கள் போலும்.
தனியார்மயத்தின் பல்ளிக்கும் சாட்சியாக சென்னை நகர குப்பை காட்சிகள் உள்ளது. சென்னை நகரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்க்கு தார்மீக ரீதியாக சென்னை மாநகராட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். நோயால் பாதிக்கப்படப் போவது கூலி ஜனங்கள்தானே பரவாயில்லை... இது உலகமயத்தின் பரிசு! என்று சொன்னாலும்a சொல்லுவார்கள் இந்த ஊழல் குபேரபுரிகள்.

நோயின் அறிகுறி குப்பை அரசியலில் தெரிந்து விட்டது இப்போதே இதற்கான சிகிச்சையை ஆரம்பிக்கவில்லையென்றால்... அப்புறம் இருக்கவே இருக்கிறது... மார்ச்சுவரி...! உலகமயம் என்ற நோயை இப்போதே விரட்டியடிக்கவில்லையென்றால்.... ஆட்கொல்லிக்கு இறையாவதை தவிர்க்க முடியாது!

6 comments:

சிவபாலன் said...

சந்திப்பு

நன்றாக எழுதியுள்ளீர்கள்.

நல்ல தொகுப்பு. நல்ல வாதம்.

நன்றி!

ச.மனோகர் said...

பாவிகளா! குப்பை அள்ளக் கூட நமக்கு தெரியாதா? அதற்குக் கூட நாம் லாயக்கில்லையா? வெளிநாட்டு கம்பெனி வரவேண்டுமா?

சந்திப்பு said...

நன்றி சிவபாலன்...

உலகமயம் - தனியார்மயம் - தாராளமயம் என்ற இந்த மும்மூர்த்திகள்தான் தற்போது நம்மை ஆட்டிப் படைக்கின்றனர். இந்த மூம்மூர்த்திகளும் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை நாம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கொண்டுச் செல்ல வேண்டியுள்ளது. தங்களது ஆதரவுக்கு நன்றிகள்...

சந்திப்பு said...

பாபு மனோகர் உலகமயம் நம்மையெல்லாம் எதற்கும் லாயக்கற்ற குப்பையாக்கி விட்டது. உலகமயம் என்ற குப்பையை ஊதிப்பெருக்கும் ஆட்சியாளர்களுக்கு அதுவும் நம்மால் முடியக்கூடிய தொழில்களில் கூட உலகமயத்தை அனுமதிப்பது பேராபத்தில் முடியும். இது எதிர்கால மற்றும் தற்கால சந்ததியினரை வேலையின்மை என்ற படுகுழிக்குள் தள்ளிவிடும். மொத்தத்தில் நம்மை நடைபிணமாக்கிவிடும். இதற்கு எதிராக நாம் விழிப்புணர்வோடு இருந்து போராட வேண்டும். நன்றி பாபு.

Geetha Sambasivam said...

அருமையான பதிவு. அப்படியாவது மாநகராட்சி விழித்துக் கொண்டு கடமை ஆற்றினால் சரி. எங்களுடைய வீடு இருக்கும் அம்பத்தூரில் எங்கள் வார்டான 6-வது வார்டு கவுன்சிலர் அம்மாளின் கணவருக்கும், நகராட்சித் தலைவருக்கும் உள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாய் எங்கள் வார்டு பூராவும் அதுவும், எங்கள் காலனியே இப்படித் தான் நாறுகிறது. இந்தியா திரும்புவதில் இருக்கும் சந்தோஷமே இதை நினைக்கும்போது வருந்த வைக்கிறது. :(((((((((

சந்திப்பு said...

கீதா சாம்பசிவம் தங்களது கருத்தும் - உணர்வும் நியாயமானது. அரசியல் என்பது உயர்ந்த நோக்கத்தை கொண்டது. மக்கள் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு அடைந்தால்தான் இதற்கு தீர்வு காண முடியும். அதுவரை நம்முடைய கழிசடை அரசியல்வாதிகளின் கைகளில் நாமும் சிக்குண்டு கிடக்க வேண்டியதுதான். அவர்களுக்கு காசுதான் கடவுள். ஒவ்வொரு தேர்தலும் அவர்களுக்கு புது பிசினஸ் ஆரம்பிப்பதுபோல்தான். எனவே நீங்கள் அமெரிக்காவில் இருந்து இங்கே வாருங்கள். நமது காந்தியைப் போல் நீங்கள் உங்கள் வார்டில் இதற்காக போராடினால் அது மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமையுமே. தங்களது கருத்துக்கு நன்றிகள்.