அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்டுள்ள அணுசக்தி உடன்பாட்டின் ஆபத்துக்கள் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதன் சுருக்கம் இங்கே தரப்படுகிறது.
காந்திஜிக்கு இருந்த உலகளாவிய கண் ணோட்டத்தையோ, நேருவின் அணிசேராக் கொள்கையையோ வழிகாட்டியாகக் கொண்டு பார்க்கும் போது சர்வதேச விஷயங்களில் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைபாடுகளை மேற்கொள்கிறீர்கள். மற்ற நாடுகளின் இறையாண்மைக்குச் சற்றும் மதிப்பளிக்காத, ஹிரோசிமாவிலும் காபூலிலும் பாக்தாதிலும் ஏகாதிபத்திய ஊடுருவல், தாக்குதல், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட எதேச்சதிகார வல்லரசுடன், நம்முடையது போன்ற அணி சேராத்தன்மையும் இறையாண்மையும் உள்ள ஒரு நாடு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது என்பதுதான் சர்ச்சைக்கு வழிவகுக்கிறது.
சர்ச்சைக்கிடமாகியுள்ள வாஷிங்டன் உடன்பாடு (இந்திய - அமெரிக்க அணுசக்தி உடன்பாடு) விஷயத்தில் இனி பின்வாங்குவதற்கு இல்லை என்பது தங்களின் நிலைபாடாக இருக்கிறது. உடன்பாட்டில் கையெழுத்திட தங்களுக்குத் தூண்டுதலாக இருந்த விஷயம் இந்திய மக்களின் நலன்களைப் பாது காக்க வேண்டும் என்ற உணர்வுதான் என்று தாங்கள் முன்பு எனக்கு எழுதிய கடிதத்தில் கூறுகிறீர்கள், எது எப்படியோ, தேசிய ரீதியில் சர்ச்சையைக் கிளறியுள்ள இப்பிரச்சனை மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க இருக்கிறது.
உடன்பாட்டை ஆட்சேபித்து இடதுசாரி கட்சிகள் மேற்கொண்டுள்ள உறுதியான நிலைபாடு முக்கியத்துவம் அற்றது என்று நான் கருதவில்லை. காரணம் அரசு நீடிப்பதற் கான ஆதரவை அளிப்பது அவர்கள்தான்.அளவில் குறைவாகவும், தரத்தில் மோசமானதாகவும் உள்ள நமது படிம எரிபொருட் களையோ சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எழுப் பும் நீர்மின்சாரத் திட்டங்களையோ வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியத் தேவையான எரிசக்தி விஷயத்தில் நாம் சார்ந்திருக்க முடியாது என்று 2007 ஜூன் 23ம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில் தாங்கள் சுட்டிக் காட்டினீர்கள். “இந்நிலையை சமாளிப்பதற் கான நமது தரப்பிலிருந்து, மேற்கொள்ளத்தக்க நடைமுறை சாத்தியமான நடவடிக்கையாக” அணுசக்தியையும் அமெரிக்காவுட னான அணுசக்தி ஒத்துழைப்பையும் தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்தச் சூழ் நிலைமையில் காற்றில் இருந் தும் கடல் அலைகளில் இருந்தும் பெருமளவில் மின்சாரம் உற்பத்தி செய்வது போன்ற, சுற்றுச்சூழல் பிரச்சனைகளை ஏற்படுத்தாத வழிமுறைகளை நமது நாட்டில் சிறிய அள வுக்குக் கூட பயன்படுத்துவது இல்லை என்ற உண்மையை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
நம்மிடம் நீர்மின்சாரத் திற்கான வளங்கள் நிறைய உள்ளன. நான் கேரளத்தில் நீர்ப்பாசன மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது மாநிலத்தின் நீர்வளங்களைப் பயன்படுத்துவது குறித்து விரிவான திட்டம் ஒன்றை தயாரித்து அன்றைய பிரதமர் நேருவிடம் சமர்ப்பித்தேன்.
சோவியத் நாட்டில் உள்ளது போன்ற சிறிய நீர்மின்திட்டங்களை கேரளம் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்றும் நதிநீரைப் பயன்படுத்தி சிறிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அவர் என்னிடம் ஆலோசனை கூறினார். இத்தகைய திட்டங்கள் உற்பத்திச் செலவையும் வினியோக இழப்பையும் குறைக்கும். ஆக்கப்பூர்வமாக செயல்படக் கூடிய நமது பொறுப்பாளர்களாலும் அரசியல் தலைமையாலும் பெருமளவில் குவிந்து கிடக்கும் இந்த எரிசக்தி வளத்தை பயன்படுத்தவும் சுற்றுச் சூழல் மாசுபாட்டைத் தடுக்கவும் தூரத்தில் உள்ள வெளிநாடுகளுக்கும் கூட மின்சாரம் கொண்டு செல்லவும் முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.
நமது நீர்மின் வளங்கள் குறித்தும் அவற்றின் சுற்றுச்சூழல் விளைவுகள் குறித்தும் தேசிய அடிப்படையில் இதுவரை புள்ளி விபரம் சேகரிக்கப்பட வில்லை.மின்சார உற்பத்தியை அதிகரிக்க அமெ ரிக்காவுடன் உடன்பாடு செய்துகொள்வது தான் ஒரே வழி என்று அணுசக்தி உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.
அதுபற்றி சில விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். மின் உற்பத்திக்கு மற்ற துறைகளில் ஆகும் செலவைவிட அணுசக்தி மூலமான மின் உற்பத்திக்கு செலவு மிக அதிகமாகும். புற்று நோய்போன்ற பல கொடிய நோய்களை அணுக் கதிர் வீச்சுக்கள் ஏற்படுத்துகின்றன. நமது எரிசக்தியை அதிகரிக்க அமெரிக்காவிடமிருந்து கச்சாப்பொருட்களைக் கடன் வாங்கு வதற்கான கொள்கையை வகுக்கும் முன்பு அணுக்கதிர்வீச்சு மக்களிடம் ஏற்படுத்தும் ஆபத்துக்கள் குறித்து அரசு ஆய்வு நடத்த வேண்டும்.
தற்போதைய சர்ச்சைக்குரிய அணுசக்தி உடன்பாட்டின் நாசகர விளைவுகள் குறித்து அறிஞர்கள் பலரும், பொதுநலனில் அக்கறை உள்ளவர்களும் என்னிடம் கூறியுள்ளனர்.
ஆனால், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளும் தேசிய உணர்வு உள்ள ஒரு சாதாரண பொதுநலச்சேவகன் என்ற முறையில், அமெரிக்கா விடமிருந்தான அணுசக்தி எரிபொருள் விநியோகம் குறித்து நான் வெளிப்படுத்தும் கவலைகளை பரிசீலிக்க வேண்டும் என்று தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவின் இறையாண்மையை ஒரு போலியான தாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அமெரிக்கா இங்கு பெருமளவில் முதலீடு செய்கிறது. பல்வேறு ஐயப்பாடுகள் நிறைந்த அணுசக்தி உடன்பாட்டில் பல ஆபத் துக்கள் உள்ளன. இந்த உடன்பாட்டைக் காரணம் காட்டி நமது அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய அமெரிக்க ஆய்வாளர்கள் வருவார்கள். சுயாதிபத்திய உரிமையுள்ள நமது நாட்டின் சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கை, நமது விருப்பப்படி செயல்படுவதற்கான உரிமை ஆகியவையெல்லாம் இதனால் தகர்ந்து போகும்.
வல்லரசுகளின் சூழ்ச்சிகளை அறிந்தவர்களால் இத்தகைய ஆய்வாளர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முடியும்.எப்போதும் ஆக்கிரமிப்பு முஸ்தீபுடன் உள்ள ஜனாதிபதி ஜார்ஜ்புஷ் ஆளும் அமெரிக் காவின் தலைமையிலான ஒரு துருவ உலகில் நாம் வாழ்கிறோம். மற்றவர்களைச் சார்ந்திருக்கக் கூடாது என்பதில் தங்களுக்கு எந்தள வுக்கு அக்கறையும் விழிப்புணர்வும் இருந்தா லும் ஆசியாவில் தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள சம்பந்தப்பட்ட நாட்டில் பல்வேறு சூழ்ச்சிகளையும் அதற்கான வெளிநாட்டுக் கொள்கையையும் வாஷிங்டன் வகுக்கும்.ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள அமெரிக்கா நீசத்தனமான வழி முறைகளைப் பிரயோகிக்கும் என்பதை அன் பிற்குரிய பிரதமரான தாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை கொரியாவும் வியட் நாமும் வலியுறுத்துகின்றன. கேடுகெட்ட மனங்களையும் டாலர்களை உற்பத்தி செய்யும் ஆத்மாக்களையும் உற்பத்தி செய்யும் ஆற்றல் படைத்த அமெரிக்காவின் பிரச்சாரத்தில் அமெரிக்காவுக்கான நமது தூதர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூட நிர்பந்தத்திற்கு பணி யும் வாய்ப்பு உண்டு.
ஏகாதிபத்திய நலன்களுக்காக உண்மையைக் காவுகொடுக்க உதவுகின்ற வகையில்தான் தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மகத்தான சுதந்திரப்பிரகடனமும் அரசியல் கொலைபாதகங்களுக்கு இரையான ஆப்ரஹாம்லிங்கன், ஜான் கென்னடி, மார்ட் டின் லூதல் கிங் (இளையவர்) ஆகியோர் பற்றிய நினைவுகளும் அமெரிக்கா குறித்து என் மனதில் மதிப்பை உருவாக்குகிறது. நீதித் துறையில் புகழ்பெற்ற தலைமை நீதிபதிகளான மார்ஷல், எல்வாரன் ஆகியோர் உள்ளிட்ட போற்றத்தக்க நீதிபதிகளும் அந்த நாட்டின் மீது நான் கொண்டுள்ள மதிப்பை உயர்த்துகிறார்கள்.
தோரியூ, மெர்ஸன், வால்ட் விட்மன், விவேகானந்தரின் சிக்காக்கோ சொற் பொழிவு இவற்றையெல்லாம் எப்படி மறக்க முடியும்.ஹார்வார்ட், ஸ்டார் போர்ட் ‘யேல்’ (பல் கலைக்கழகங்கள்) ஆகியவை கல்வியில் அதிசயங்களாகும். மிகப்பெரிய சாதனைகள் புரிந்த மற்ற பல நிறுவனங்களும் உண்டு, நிச்சயமாக, அமெரிக்காவில் மிகப்பெரும்பான் மையான மக்களும் ஜார்ஜ் புஷ்சுக்கு ஆதரவாக இல்லை.
இவ்வளவும் கூறக்காரணம், ஐய்யப்பாடுகள் நிறைந்த உடன்பாடு குறித்த எனது கருத்து அமெரிக்க எதிர்ப்பிலிருந்து பிறந்தது அல்ல என்பதைத் தெளிவாக்குவதற் காகத்தான். ஆனால், உண்மை உணர்வோடு, சிந்திக்கும் பட்சத்தில், ஆயுதத்திற்காக பிச்சை எடுக்க நாங்கள் சர்வதேசப் பிச்சைக்காரர்கள் அல்ல என்று அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவருக்கு நேரு நாடாளுமன்றத்தில் நினை வூட்டியதை தாங்கள் மறந்துவிடக்கூடாது.
மோதல் ஏற்படும்பட்சத்தில் பாகிஸ்தான் பக்கம்தான் அமெரிக்கா நிற்கும் என்றுதான் பொதுவாக கருதப்படுகிறது. இரண்டு நாடு களுக்கும் இடையேயான துருதிருஷ்டவசமான கருத்து வேறுபாடுகளைத்தான் அமெரிக்கா தனது ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறது. இந்திரா காந்தியின் காலத்தில் அமெரிக்காவின் ஏழாவது கப்பற்படை பாகிஸ்தான் பக்கம் உறுதியாக நிலை கொண்டது. ஆனால், சோவியத் படையின் தலையீடு நமக்கு எதிரான அச்சுறுத்தலைத் தவிர்த்தது.
இப்போது ஏக வல்லரசு என்ற நிலையில் தங்களின் கொள்கைகளுக்குப் பணிந்து நடக்கும்படி அமெரிக்கா நம்மை நிர்பந்திக்க முடியும். நமது ஏகாதிபத்திய எதிர்ப்பு சோசலிச ஆதரவு கண்ணோட்டங்களுக்கும் கோட்பாடுகளுக் கும் எதிரான மிரட்டலாகும் இது.
விரிந்த இந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும் என்று “21ம் நூற்றாண் டில் உலக சூழ்நிலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை” மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசியல் விவகார துணை அமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் குறிப்பிட்டிருப்பது நமக்கு கவலையை ஏற்படுத்த வில்லையா? நமது அறிவிப்புகள் என்னவாக இருப்பினும் ஹைடு சட்டம் முடிந்த முடிவாக அமெரிக்காவின் விருப்பப்படி உடன்பாட்டின் அர்த்தத்தையோ மாற்றிவிடக் கூடியதாகும். முற்போக்கான எனது நண்பர் (அவர் கம்யூனிஸ்ட் அல்ல) அண்மையில் எனக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார். இன்றைய சர்வதேச சூழ்நிலைமையில் ஜார்ஜ்புஷ் விஷயத்தில் இந்தியா மேற்கொள்ளத்தக்க சிறந்த மார்க்கம்.
அவரது கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்காவுக்கு உள்ளேயே பேராதரவைப் பெற்றுவிட்ட சர்வதேசிய இயக்கத்தின் முன்வரிசையில் நிற்பதுதான். சுதந்திரமான கண்ணோட்டத்தை நான் கொண்டிருந்தாலும், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரான இயக் கத்தின் பிரச்சாரகன் அல்ல என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்.
நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கடும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலைமையில் தங்களுக்கும் சோனியா காந்திக்கும் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜிக்கும் எனது நிலைபாட்டை தெரிவிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதினேன். தேசபக்தனும் இந்திய மக்களின் சுதந்திரத்தை மதித்துப் போற்றக் கூடியவனுமாகிய எனது கருத்துக்களை தயவு கூர்ந்து ஏற்க வேண்டுகிறேன். நாடு கடும் நெருக் கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிற வேளை யில் மவுனம் சாதிப்பது குற்றமாகும். அதனால் எனது கடமையைச் செய்கிறேன்
தமிழாக்கம்: வீரா
3 comments:
தமிழாக்கத்திற்கும் பதிவுக்கும் நன்றி. இது போன்ற கட்டுரைகள் அதிகம் படிக்கப்பட வேண்டும்.
தோழர் சந்திப்பு,
பதிவிற்கு நன்றி! மன்மோகன் சிங் அவர்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்காமலே விடாப்பிடியாக இருப்பது இது முதல் முறையல்ல. நரசிம்மராவ் பிரதமராக இருந்த வேளை, மன்மோகன்சிங் அவர்கள் நிதியமைச்சராக இருந்த போது GATT உடன்பாட்டில் கையெழுத்திடும் முன்னர் புதிய பொருளாதார கொள்கையின் சாதக, பாதகங்களை பாராளுமன்றத்தில் விவாதிக்காமலே கையெழுத்திட்டார். திரைமறைவில் ஒன்றும், வெளியுலகத்திற்கு இன்னொன்றுமான இந்த நிலை மக்களாட்சி முறைக்கு எதிரானது. பெரும்பகுதி மக்களின் நிலையை பற்றி கவலைப்படாமல் வெகுஜன ஊடகங்களும், சில அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் அமெரிக்காவின் பாதைதான் வளர்ச்சிக்கு நல்லது என திட்டங்களை வகுப்பது மக்களுக்கு எதிரானது. அணுசக்தி ஒப்பந்த விடயத்தில் ஏற்படுத்தியிருக்கும் குழுவின் முடிவுவரை எந்த நடவடிக்கையும் தொடராமல் காத்திருக்குமா இல்லை இதுவும் வழக்கமான உறுதிமொழியாக காற்ரில் கரைந்துவிடுமா என்பது வரும் நாட்களில் தெரியும்.
நன்றி திரு. நல்ல வரலாற்று குறிப்பையும் இங்கே பயன்படுத்தியுள்ளீர்கள். மன்மோகனிசம் என்பதை இனி மறைமோகனிசம் என்று மாற்றலாம் போலிருக்கிறது. வாழ்த்துக்கள்.
Post a Comment