September 12, 2007

ஆட்டம் காணும் அம்மாவின் மனக் கணக்கு!


ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு (அதாங்க அம்மா கூட்டணி) பிள்ளையார் சுழி போட்டு மூன்று மாதங்களே ஆன நிலையில் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்றாவது அணி ஆரம்பிக்கும் போதே ஆட்சியை இழந்தவர்களின் அந்திமக் கூட்டணி! என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை சந்திப்பில் போட்டிருந்தேன். இந்த கொள்கையற்றவர்களின் கூட்டணியின் அந்திமக் காலம் துவங்கி விட்டதைதான் அம்மாவின் அறிக்கை காட்டுகிறது.
அம்மாவின் அரசியலை தமிழகம் நன்கு உணர்ந்துள்ளது. அம்மாவின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக் கூறினால் அடுத்த நிமிடமே முகத்தை மாற்றிக் கொள்ளும் பேராதிக்க குணம் படைத்தவர். அது மட்டுமா? தோழமை கட்சியினராக இருந்தால் கூட தான் சொல்வதை மட்டுமே ஏற்க வேண்டும் என்ற குணம் கொண்டவர். இவரது அரசியல் சுபாவம் சந்திரபாபுவுக்கோ அல்லது முலாயமுக்கு தெரிந்திரிக்க நியாயம் இல்லை. அந்த ரகசியத்தை நன்கு உணர்ந்து அரசியல் நெருக்கம் கொண்டிருக்கும் ஒரே தலைவர் வைகோ மட்டுமே!
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் விசயத்தில் இடதுசாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் முலாயமும். சந்திரபாபும் கலந்து கொண்டார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை இவர்களது விரிசலுக்கு. அம்மாவுக்கு யாரும் தகவல் சொல்லவில்லையாம்! இவரும் கூட அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஏன் இவர் இடதுசாரிகளோடு ஒத்துழைக்கவில்லை. இவரது எதிர்ப்பு என்பது பா.ஜ.க.வின் எதிர்ப்பைபோலத்தான் இரட்டை தன்மை கொண்டது. அது இந்த ஆட்சி எப்போது கவிழும் என்ற நோக்கத்தை கொண்டதே தவிர உண்மையான தேச நலன் சார்ந்தது இல்லை.
அம்மா எப்போதும் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்பவராம்! அது சரி ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணி பா.ஜ.க. வேட்பாளர் பைரோன் சிங் செகாவாத்துக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றா தீர்மானம் எடுத்தது! இல்லையே! இவர் என்ன செய்தார்? திடுதிப்பென்று இவருக்கே தெரியாமல் அவர்களது சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு விட்டார்களாம்! மணலை கயிராக திரிக்கும் கலையில் அம்மாவுக்கு ஆஸ்கர் அவார்டே தரலாம்! பாவம் முலாயமும். சந்திரபாபுவும் யாருக்கும் ஓட்டுப் போடாமல் நடுநிலை வகித்தனர். (நடுநிலை என்ற ஒரு கொள்கையே இல்லை). அப்போதுதான் புரிந்தது அம்மாவின் அரசியலுக்குள் ஒளிந்திருக்கும் சங்பரிவார - பா.ஜ.க.வின் குரல்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் பா.ஜ.க. பொறுப்பாளர் ரவி சங்கர் வர்மா அம்மாவை சந்தித்து ஒரு மணி நேரம் அரசியல் ஆலோசனை செய்துள்ளார். அதற்கு பின்தான் அம்மாவின் அறிக்கை வந்துள்ளது! தற்போது அத்வானி வரப் போகிறாராம் அம்மாவை சந்திக்க! இவரது மூன்றாவது அணி யாருடைய நலனை காப்பதற்கு என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
விழித்துக் கொண்ட முலாயமும். சந்திரபாபுவும் அம்மா விரித்த வலையில் சிக்காமல் மீண்டால் சரி!
இடதுசாரிகளைப் பொறுத்தவரை மூன்றாவது அணி என்பது குறைந்தபட்ச கொள்கை கொண்டதாக இருக்க வேண்டும். குறிப்பாக மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள். உறுதியான மதச்சார்பின்மை - மதவாத அரசியலுக்கு எதிர்ப்பு - சுயேச்சையான அயலுறவு கொள்கை போன்ற அடிப்படை விசயங்களிலாவது சரியான புரிதல் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். அம்மாவுக்கு ஆட்சி கனவைத் தவிர வேறு என்ன கொள்கை இருக்க முடியும்!
நான் மதவாத பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன். என்று அம்மா மெரீனா கடற்கரையில் முழங்கினார். அவரது தொண்டர்கள் அதனை மறந்திருப்பார்கள் ஆனால் மக்கள் மறக்க மாட்டார்கள். எந்த அடிப்படையில் மதவாதிகளோடு கள்ளத்தனமாக உறவு கொள்ள துடிக்கிறார் என கேட்கத் துவங்கி விட்டனர். எம்.ஜி.ஆரின். கொள்கை பற்றாளர்கள் விழிப்பார்களா?

3 comments:

thiru said...

தோழரே,

ஜெயலலிதாவிற்கு என்று தான் கொள்கை இருந்தது? தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகளின் விளைவான ஒருவகை பழிவாங்கும் குணத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இதை தான் அசாத்தியமான துணிச்சல் என்கிறார்கள் 'மேதாவிகள்'.

தனக்கு வேண்டியதை சாதிக்கவும், தான் எதிர்ப்பவர்களை துன்புறுத்தவும் என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்காத, யாரோடும் கூட்டுசேர முன்வருபவர் தான் ஜெயலலிதா.

//எம்.ஜி.ஆரின். கொள்கை பற்றாளர்கள் விழிப்பார்களா?//

எம்.ஜி.ஆர் கொள்கை என்ன?

Anonymous said...

// எம்.ஜி.ஆர் கொள்கை என்ன? //

கொள்கை - "ஏழை மற்றும் அடித்தட்டு மக்கள் அவர் மீது கொண்டுள்ள அன்பைக் குறையாமல் பார்த்துக்கொள்வது"

அது சரி,
இங்கு எவன் தான் கொள்கைப்பிடிப்போடு இருக்கான் ?

ஜீன் said...

அத்வானி இந்தம்மாவை வந்து சந்திக்கிறாரா? அப்படின்னா போன முறை இந்தம்மா அவருக்கு செலக்டிவ் அம்னீசியானு சொன்னது உண்மை தானோ?
பாவம் அத்வானி. சென்ற முறை செலக்டிவ் அம்னீசியா. இந்த முறை என்ன-வோ??? அம்மாவுக்குத் தான் தெரியும்.