September 21, 2007

பா.ஜ.க.வின் அமெரிக்க அடிமைத்தனமும்! கலாச்சார பாசிசமும்!!


பா.ஜ.க. தேசிய செயல்குழு கூட்டம் மத்திய பிரதேசத்தில் உள்ள ராஜா போஜ் நகரில் இன்று துவங்கியது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க.விற்குள் ஏற்பட்டுள்ள தலைமை நெருக்கடி மற்றும் அஸ்தமிக்கும் அதன் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. கூட்டத்தில் உரையாற்றிய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தங்களது அமெரிக்க அடிவருடித்தனத்தையும், பொய்யையும், புளுகையும் கொஞ்சம் கூட கூசாமல் உரையாற்றி சங்பரிவார தொண்டர்களை புல்லரிக்க வைத்துள்ளார்.
அதில் ஒரு சிலவற்றை இங்கே பட்டியலிடுவது பொருத்தமாக இருக்கும். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். ஆனால் பாசிஸ்ட்டுகளின் புளுகு எட்டு நிமிடம் மட்டுமே!
இந்தியாவின் 60 ஆண்டு சுதந்திர தினத்தையும், 1857 இல் நடைபெற்ற இந்திய முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150 வது ஆண்டு குறித்தும் நினைவு கூர்ந்த ராஜ்நாத் சிங், அதனை நாடு முழுவதும் கொண்டாடப் போவதாக கூறியுள்ளார்.
எந்த முகத்தை வைத்துக் கொண்டு என்பதை மட்டும் அவர் விளக்கவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் வீர் சவார்க்கார் இனியும் நான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்று எழுதி கொடுத்து விட்டு சுதந்திரப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்து, பிரிட்டிஷ் காவல் நாய்களாக (வாட்ச் டாக்) கலாச்சார தேசியம் என்ற பெயரில், இந்திய மக்களுக்குள் மோதலை உருவாக்கி - பிரிவினைக்கு வித்திட்டு, இந்தியாவின் ஆன்மாவாக திகழ்ந்த மகாத்மாவை கொலை செய்த கோட்சேவின் வாரிசுகள் எப்படியெல்லாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடிமைச் சேவகம் புரிந்தார்கள் என்பதை பேசப்போகிறார்களோ என்னவோ! போலி தேச பக்திக்கு சங்பரிவாரங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?
அடுத்து, இந்தியா உலகளவில் பொருளாதாரத்தில் சூப்பர் பவராக வளர்ந்து விட்டதாம், உலகளவில் அறிவாளிகளின் மையமாக இந்தியா திகழ்கிறதாம், அத்தோடு உலகளவில் இராணுவ சூப்பர் பவராக திகழ்கிறராம்! இதற்கெல்லாம் காரணம் இவர்கள் 6 ஆண்டுகள் ஆட்சி செய்ததால்தானாம்!
இந்தியா ஒளிர்கிறது என்று முழக்கத்தை வைத்து தேர்தலை சந்தித்த பா.ஜ.க.வை மக்கள் விரட்டியடித்ததை இன்னும்கூட மறக்கவில்லை என்றே தெரிகிறது! அதனால்தான் அதே கோஷத்தோடு, வேறு மொழியில் பேசத் துவங்கியுள்ளனர். இந்தியா பொருளாதாரத்தில் சூப்பர் பவராக வளர்ந்து இருக்கிறதாம்? ஐயா படித்தவர்களே இது உண்மையா? தண்ணிர் தனியார்மயமாகி விட்டதால் தண்ணீருக்காக கண்ணீர் விடும் கதையெல்லாம் பா.ஜ.க.வினருக்கு தெரியாது போலும், அதை விடுங்கள் புதிய பொருளாதார கொள்கை என்ற பெயரால் எத்தனை பேர் வேலையிழந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள், ஏன் பென்ஷன் திட்டம் முதல் பல சேம நலத் திட்டங்கள் படாத பாடுபடுகிறதே, இன்னும் கூட வறுமைக் கோட்டுக்கு கிழே உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறானே! எதற்காக? இவர்கள் வழிவந்த பொருளாதார கொள்கையால் இந்தியா சூப்பர் பவராக மாறி விட்டது என்றால் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து விட்டதா? சுகாதார திட்டங்கள் எப்படி செயல்படுகிறது? என்பதையெல்லாம் விளக்குவார்களா? இவர்களைப் பொருத்தவரை சூப்பர் பவர் என்றால் வேறு எதுவும் இல்லை! அதையும் ராஜ்நாத் சிங்கே கூறிவிட்டார். கோரஸ் என்ற இந்திய நிறுவனம் ஐரோப்பாவில் கூட்டு வைத்துக் கொண்டு தொழில் தொடங்கி விட்டதாம்! ஐயா முதலை கண்ணீர் என்பார்களே அது இதுதான்!
விவசாயிகள் தற்கொலை குறித்தும் அவர் மறக்காமல் பேசியுள்ளார். இது பற்றியும் தேசிய அளவில் விவாதிக்க வேண்டுமாம்!
ஐயா ராஜ்நாத் சிங் அவர்களே கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் 10,000த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்களே இதற்கு நீங்கள் சொந்தம் கொண்டாட மாட்டீர்களா? இந்த தற்கொலைகளுக்கு உங்கள் கொள்கை வழிவகுக்கவில்லையா? இதைத்தான் சூப்பர் பவர் பொருளாதாரம் சாதித்ததா? ஏன் உங்கள் கூட்டணி ஆட்சி செய்த மகாராஷ்டிராவில்தானே விதர்பா உள்ளது! இந்திய நாட்டு விவசாயிகளை குழிதோண்டி புதைத்த கொள்கை வீரர்களே இன்னொரு தேர்தலுக்காக மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் உங்களை அடியோடு விரட்டியடிக்கத்தான்!
இந்தியா அறிவாளிகளின் மையமாக திகழ்கிறதா? அப்புறம் ஏன் சங்பரிவாரங்களை சார்ந்த வீரப் புலிகள் எல்லாம் அமெரிக்காவில் தஞ்சம் அடைகிறது! குறிப்பாக மென்பொருள் துறையில் அமெரிக்கா என்று அவர்களுக்கு சேவகம் செய்து - இங்கே கலவரத்தை உருவாக்க நிதியனுப்புவதற்காகவே என்று மக்கள் கேட்பது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?
இராணுவத்தில் சூப்பர் பவராக இருக்கிறோமா? எப்படி என்பதை கொஞ்சம் விளக்குவீர்களா? நீங்கள் ஆட்சி செய்த காலத்தில் நமது எல்லையான கார்கிலுக்குள் பயங்கரவாதிகள் புகுந்து கொண்டது கூட தெரியாமல் இருந்ததாலா? அல்லது நமது எல்லையில் இருந்து அவர்களை விரட்டியடித்து விட்டு பெரும் சாதனைப் போல் டமாரம் அடித்துக் கொண்டிர்களா? அதனாலா? அல்லது பாராளுமன்ற வளாகத்திற்கு உள்ளேயே நுழைந்து தாக்குதல் நடத்தியதும் உங்கள் ஆட்சிக்காலத்தில் தானே! உங்களது இன்டிலிஜன்ஸ் திவலானதைக் கூட நீங்கள் எப்போதும் ஒத்துக் கொள்வதில்லை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்! அதை விடங்கப்பா ஈராக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு கோடிக்கும் மேல் மக்களை கொன்று குவித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு கூஜா தூக்குவதற்காக இந்தியா இராணுவத்தினரை அனுப்ப உத்தேசித்தீர்களே அதனால் சூப்பர் பவராகி விட்டது என்று கதைக்கிறீர்களா?
அவரது பேச்சில் கோதுமை இறக்குமதிக்காக கொஞ்சம் கவலைப் பட்டுள்ளார்! பா.ஜ.க. ஆட்சியில் 6 கோடி டன் கோதுமை புளுத்துப் போனதும், எலிக்கு இரையாக்கியதையும் அதே நேரத்தில் விவசாயிகள் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி இறக்க நேரிட்டதையும் இன்னும் மறக்கவில்லையா? உங்களது ஆட்சியில்தான் இந்த இறக்குமதி கொள்கைகை முதன் முதலில் துவக்கி வைத்தீர்கள்! இப்போது நீலிக் கண்ணீர் வடிப்பதெல்லாம் பாட்சா பலிக்காது.
அணு சக்தி ஒப்பந்தத்தில் தங்கள் நிலையை தெளிவாக விளக்கியுள்ளார்கள்? என்ன விளக்கினார் என்று ராஜ்நாத் சிங்கிற்கோ அல்லது கூட்டத்தில் இருந்த பரிவாரங்களுக்கே ஒன்றும் தெரியாது! ஏனென்றால் அவர்களது நிலையை அவ்வப்போது விளக்கி விட்டார்களாம். மேலும் அவர்கள் ஆட்சியில் அணு குண்டு வெடித்து சோதனை செய்ததை சாதனையாக கூறியதோடு, அமெரிக்காவோடு தற்போதைய இராணுவ கூட்டாளி ஒப்பந்தத்தையும் அவர்கள் துவக்கி வைத்ததையும், கேந்திர கூட்டாளியாக அமெரிக்காவோடு கைகோர்த்ததையும் வெட்கம் இன்றி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அத்தோடு இதனை விவாதிப்பதற்காக கூட்டு பாராளுமன்ற குழு அமைக்க வேண்டுமாம்! இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இந்திய பாராளுமன்றத்தில் விவாதிப்பதை அனுமதிக்க கூடாது என்ற நோக்கத்தில்தானே பாராளுமன்ற நடவடிக்கைகளையே முற்றிலும் கேலிக்கூத்தாக்கி - ஜனநாயக நடவடிக்கைகளை முடக்கினீர்களே அதை நாங்கள் மறக்கவில்லை! மக்களும்தான்....
இறுதியாக சேது சமுத்திரம் தொடர்பாக மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அது நம்பிக்கை சார்ந்த விஷயமாம் எனவே ராமாயணம் குறித்தோ அல்லது ராமர் குறித்தோ கேள்வி எழுப்புவது அபத்தமாம்! ஆனால் பாபர் மசூதி மட்டும் இசுலாமியர்களுக்கு நம்பிக்கை சார்ந்த விஷயம் இல்லையாம்! அது அவமானச் சின்னமாம்...! இந்த நம்பிக்கை குறித்தெல்லாம் உலகளவில் அறிவுஜிவிகளாக இருக்கும் இந்தியர்கள் யாரும் கேள்வி கேட்கக் கூடாது! உஷ்.... உஷ்.... உஷ்....
இறுதியாக, பா.ஜ.க. கலாச்சார தேசியம் என்ற தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிறதாம். ஆனால் தற்போது நவீன பொருளாதார வளர்ச்சியால் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறதாம்! எப்பா என்ன கருணை! என்ன கருணை!! ஒரு பக்கம் பொருளாதார வளர்ச்சி என்று குத்தாட்டம் போடும் பா.ஜ.க. அதனால் ஏற்பட்ட சீரழிவுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பார்களாம் அதற்கு மற்றவர்கள்தான் காரணமாம்! ஹலோ பா.ஜ.க. தலைவரே உங்களது இதுபோன்ற தேசிய செயல்குழு கூட்டம் ஒன்று நடைபெறும் போது ஜோஷி என்ற மகாராஷ்டிர சங்பரிவார தலைவரின் அஜால் குஜால் சி.டி. யெல்லாம் உங்களது பார்வைக்கே அனுப்பி வைக்கப்பட்டதே அதை மறந்து விட்டீர்களா! அடுத்து உங்களது பா.ஜ.க. எம்.பி.க்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி அம்பலப்பட்டுப் போனார்களே அதை மறந்து விட்டீர்களா? முதலில் சங்பரிவாரத்திற்குள் கலாச்சார தேசியத்தை நிலைநாட்டுங்கள்... இந்திய மக்களின் ஒற்றுமை எனும் கலாச்சாரத்தை கெடுத்து தேசத்தை பிளவுபடுத்துவதே நீங்கள்தான் என்பதை மக்கள் மறக்கவில்லை! தற்போது உங்களிடம் மிச்சமிருப்பது அமெரிக்க அடிமைத்தனம் மட்டுமே!

1 comment:

Anonymous said...

உத்திர பிரதேசத்திலேயே பா.ஜ.க.வை ராமர் கை விட்டுவிட்டார் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.