Showing posts with label அணு சக்தி உடன்பாடு 123. Show all posts
Showing posts with label அணு சக்தி உடன்பாடு 123. Show all posts

September 03, 2007

அணு சக்தி உடன்பாடு: பிரதமருக்கு நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கடிதம்

அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்டுள்ள அணுசக்தி உடன்பாட்டின் ஆபத்துக்கள் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதன் சுருக்கம் இங்கே தரப்படுகிறது.
காந்திஜிக்கு இருந்த உலகளாவிய கண் ணோட்டத்தையோ, நேருவின் அணிசேராக் கொள்கையையோ வழிகாட்டியாகக் கொண்டு பார்க்கும் போது சர்வதேச விஷயங்களில் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைபாடுகளை மேற்கொள்கிறீர்கள். மற்ற நாடுகளின் இறையாண்மைக்குச் சற்றும் மதிப்பளிக்காத, ஹிரோசிமாவிலும் காபூலிலும் பாக்தாதிலும் ஏகாதிபத்திய ஊடுருவல், தாக்குதல், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட எதேச்சதிகார வல்லரசுடன், நம்முடையது போன்ற அணி சேராத்தன்மையும் இறையாண்மையும் உள்ள ஒரு நாடு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது என்பதுதான் சர்ச்சைக்கு வழிவகுக்கிறது.
சர்ச்சைக்கிடமாகியுள்ள வாஷிங்டன் உடன்பாடு (இந்திய - அமெரிக்க அணுசக்தி உடன்பாடு) விஷயத்தில் இனி பின்வாங்குவதற்கு இல்லை என்பது தங்களின் நிலைபாடாக இருக்கிறது. உடன்பாட்டில் கையெழுத்திட தங்களுக்குத் தூண்டுதலாக இருந்த விஷயம் இந்திய மக்களின் நலன்களைப் பாது காக்க வேண்டும் என்ற உணர்வுதான் என்று தாங்கள் முன்பு எனக்கு எழுதிய கடிதத்தில் கூறுகிறீர்கள், எது எப்படியோ, தேசிய ரீதியில் சர்ச்சையைக் கிளறியுள்ள இப்பிரச்சனை மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க இருக்கிறது.
உடன்பாட்டை ஆட்சேபித்து இடதுசாரி கட்சிகள் மேற்கொண்டுள்ள உறுதியான நிலைபாடு முக்கியத்துவம் அற்றது என்று நான் கருதவில்லை. காரணம் அரசு நீடிப்பதற் கான ஆதரவை அளிப்பது அவர்கள்தான்.அளவில் குறைவாகவும், தரத்தில் மோசமானதாகவும் உள்ள நமது படிம எரிபொருட் களையோ சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எழுப் பும் நீர்மின்சாரத் திட்டங்களையோ வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியத் தேவையான எரிசக்தி விஷயத்தில் நாம் சார்ந்திருக்க முடியாது என்று 2007 ஜூன் 23ம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில் தாங்கள் சுட்டிக் காட்டினீர்கள். “இந்நிலையை சமாளிப்பதற் கான நமது தரப்பிலிருந்து, மேற்கொள்ளத்தக்க நடைமுறை சாத்தியமான நடவடிக்கையாக” அணுசக்தியையும் அமெரிக்காவுட னான அணுசக்தி ஒத்துழைப்பையும் தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்தச் சூழ் நிலைமையில் காற்றில் இருந் தும் கடல் அலைகளில் இருந்தும் பெருமளவில் மின்சாரம் உற்பத்தி செய்வது போன்ற, சுற்றுச்சூழல் பிரச்சனைகளை ஏற்படுத்தாத வழிமுறைகளை நமது நாட்டில் சிறிய அள வுக்குக் கூட பயன்படுத்துவது இல்லை என்ற உண்மையை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
நம்மிடம் நீர்மின்சாரத் திற்கான வளங்கள் நிறைய உள்ளன. நான் கேரளத்தில் நீர்ப்பாசன மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது மாநிலத்தின் நீர்வளங்களைப் பயன்படுத்துவது குறித்து விரிவான திட்டம் ஒன்றை தயாரித்து அன்றைய பிரதமர் நேருவிடம் சமர்ப்பித்தேன்.
சோவியத் நாட்டில் உள்ளது போன்ற சிறிய நீர்மின்திட்டங்களை கேரளம் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்றும் நதிநீரைப் பயன்படுத்தி சிறிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அவர் என்னிடம் ஆலோசனை கூறினார். இத்தகைய திட்டங்கள் உற்பத்திச் செலவையும் வினியோக இழப்பையும் குறைக்கும். ஆக்கப்பூர்வமாக செயல்படக் கூடிய நமது பொறுப்பாளர்களாலும் அரசியல் தலைமையாலும் பெருமளவில் குவிந்து கிடக்கும் இந்த எரிசக்தி வளத்தை பயன்படுத்தவும் சுற்றுச் சூழல் மாசுபாட்டைத் தடுக்கவும் தூரத்தில் உள்ள வெளிநாடுகளுக்கும் கூட மின்சாரம் கொண்டு செல்லவும் முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.
நமது நீர்மின் வளங்கள் குறித்தும் அவற்றின் சுற்றுச்சூழல் விளைவுகள் குறித்தும் தேசிய அடிப்படையில் இதுவரை புள்ளி விபரம் சேகரிக்கப்பட வில்லை.மின்சார உற்பத்தியை அதிகரிக்க அமெ ரிக்காவுடன் உடன்பாடு செய்துகொள்வது தான் ஒரே வழி என்று அணுசக்தி உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.
அதுபற்றி சில விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். மின் உற்பத்திக்கு மற்ற துறைகளில் ஆகும் செலவைவிட அணுசக்தி மூலமான மின் உற்பத்திக்கு செலவு மிக அதிகமாகும். புற்று நோய்போன்ற பல கொடிய நோய்களை அணுக் கதிர் வீச்சுக்கள் ஏற்படுத்துகின்றன. நமது எரிசக்தியை அதிகரிக்க அமெரிக்காவிடமிருந்து கச்சாப்பொருட்களைக் கடன் வாங்கு வதற்கான கொள்கையை வகுக்கும் முன்பு அணுக்கதிர்வீச்சு மக்களிடம் ஏற்படுத்தும் ஆபத்துக்கள் குறித்து அரசு ஆய்வு நடத்த வேண்டும்.
தற்போதைய சர்ச்சைக்குரிய அணுசக்தி உடன்பாட்டின் நாசகர விளைவுகள் குறித்து அறிஞர்கள் பலரும், பொதுநலனில் அக்கறை உள்ளவர்களும் என்னிடம் கூறியுள்ளனர்.
ஆனால், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளும் தேசிய உணர்வு உள்ள ஒரு சாதாரண பொதுநலச்சேவகன் என்ற முறையில், அமெரிக்கா விடமிருந்தான அணுசக்தி எரிபொருள் விநியோகம் குறித்து நான் வெளிப்படுத்தும் கவலைகளை பரிசீலிக்க வேண்டும் என்று தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவின் இறையாண்மையை ஒரு போலியான தாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அமெரிக்கா இங்கு பெருமளவில் முதலீடு செய்கிறது. பல்வேறு ஐயப்பாடுகள் நிறைந்த அணுசக்தி உடன்பாட்டில் பல ஆபத் துக்கள் உள்ளன. இந்த உடன்பாட்டைக் காரணம் காட்டி நமது அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய அமெரிக்க ஆய்வாளர்கள் வருவார்கள். சுயாதிபத்திய உரிமையுள்ள நமது நாட்டின் சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கை, நமது விருப்பப்படி செயல்படுவதற்கான உரிமை ஆகியவையெல்லாம் இதனால் தகர்ந்து போகும்.
வல்லரசுகளின் சூழ்ச்சிகளை அறிந்தவர்களால் இத்தகைய ஆய்வாளர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முடியும்.எப்போதும் ஆக்கிரமிப்பு முஸ்தீபுடன் உள்ள ஜனாதிபதி ஜார்ஜ்புஷ் ஆளும் அமெரிக் காவின் தலைமையிலான ஒரு துருவ உலகில் நாம் வாழ்கிறோம். மற்றவர்களைச் சார்ந்திருக்கக் கூடாது என்பதில் தங்களுக்கு எந்தள வுக்கு அக்கறையும் விழிப்புணர்வும் இருந்தா லும் ஆசியாவில் தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள சம்பந்தப்பட்ட நாட்டில் பல்வேறு சூழ்ச்சிகளையும் அதற்கான வெளிநாட்டுக் கொள்கையையும் வாஷிங்டன் வகுக்கும்.ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள அமெரிக்கா நீசத்தனமான வழி முறைகளைப் பிரயோகிக்கும் என்பதை அன் பிற்குரிய பிரதமரான தாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை கொரியாவும் வியட் நாமும் வலியுறுத்துகின்றன. கேடுகெட்ட மனங்களையும் டாலர்களை உற்பத்தி செய்யும் ஆத்மாக்களையும் உற்பத்தி செய்யும் ஆற்றல் படைத்த அமெரிக்காவின் பிரச்சாரத்தில் அமெரிக்காவுக்கான நமது தூதர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூட நிர்பந்தத்திற்கு பணி யும் வாய்ப்பு உண்டு.
ஏகாதிபத்திய நலன்களுக்காக உண்மையைக் காவுகொடுக்க உதவுகின்ற வகையில்தான் தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மகத்தான சுதந்திரப்பிரகடனமும் அரசியல் கொலைபாதகங்களுக்கு இரையான ஆப்ரஹாம்லிங்கன், ஜான் கென்னடி, மார்ட் டின் லூதல் கிங் (இளையவர்) ஆகியோர் பற்றிய நினைவுகளும் அமெரிக்கா குறித்து என் மனதில் மதிப்பை உருவாக்குகிறது. நீதித் துறையில் புகழ்பெற்ற தலைமை நீதிபதிகளான மார்ஷல், எல்வாரன் ஆகியோர் உள்ளிட்ட போற்றத்தக்க நீதிபதிகளும் அந்த நாட்டின் மீது நான் கொண்டுள்ள மதிப்பை உயர்த்துகிறார்கள்.
தோரியூ, மெர்ஸன், வால்ட் விட்மன், விவேகானந்தரின் சிக்காக்கோ சொற் பொழிவு இவற்றையெல்லாம் எப்படி மறக்க முடியும்.ஹார்வார்ட், ஸ்டார் போர்ட் ‘யேல்’ (பல் கலைக்கழகங்கள்) ஆகியவை கல்வியில் அதிசயங்களாகும். மிகப்பெரிய சாதனைகள் புரிந்த மற்ற பல நிறுவனங்களும் உண்டு, நிச்சயமாக, அமெரிக்காவில் மிகப்பெரும்பான் மையான மக்களும் ஜார்ஜ் புஷ்சுக்கு ஆதரவாக இல்லை.
இவ்வளவும் கூறக்காரணம், ஐய்யப்பாடுகள் நிறைந்த உடன்பாடு குறித்த எனது கருத்து அமெரிக்க எதிர்ப்பிலிருந்து பிறந்தது அல்ல என்பதைத் தெளிவாக்குவதற் காகத்தான். ஆனால், உண்மை உணர்வோடு, சிந்திக்கும் பட்சத்தில், ஆயுதத்திற்காக பிச்சை எடுக்க நாங்கள் சர்வதேசப் பிச்சைக்காரர்கள் அல்ல என்று அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவருக்கு நேரு நாடாளுமன்றத்தில் நினை வூட்டியதை தாங்கள் மறந்துவிடக்கூடாது.
மோதல் ஏற்படும்பட்சத்தில் பாகிஸ்தான் பக்கம்தான் அமெரிக்கா நிற்கும் என்றுதான் பொதுவாக கருதப்படுகிறது. இரண்டு நாடு களுக்கும் இடையேயான துருதிருஷ்டவசமான கருத்து வேறுபாடுகளைத்தான் அமெரிக்கா தனது ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறது. இந்திரா காந்தியின் காலத்தில் அமெரிக்காவின் ஏழாவது கப்பற்படை பாகிஸ்தான் பக்கம் உறுதியாக நிலை கொண்டது. ஆனால், சோவியத் படையின் தலையீடு நமக்கு எதிரான அச்சுறுத்தலைத் தவிர்த்தது.
இப்போது ஏக வல்லரசு என்ற நிலையில் தங்களின் கொள்கைகளுக்குப் பணிந்து நடக்கும்படி அமெரிக்கா நம்மை நிர்பந்திக்க முடியும். நமது ஏகாதிபத்திய எதிர்ப்பு சோசலிச ஆதரவு கண்ணோட்டங்களுக்கும் கோட்பாடுகளுக் கும் எதிரான மிரட்டலாகும் இது.
விரிந்த இந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும் என்று “21ம் நூற்றாண் டில் உலக சூழ்நிலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை” மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசியல் விவகார துணை அமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் குறிப்பிட்டிருப்பது நமக்கு கவலையை ஏற்படுத்த வில்லையா? நமது அறிவிப்புகள் என்னவாக இருப்பினும் ஹைடு சட்டம் முடிந்த முடிவாக அமெரிக்காவின் விருப்பப்படி உடன்பாட்டின் அர்த்தத்தையோ மாற்றிவிடக் கூடியதாகும். முற்போக்கான எனது நண்பர் (அவர் கம்யூனிஸ்ட் அல்ல) அண்மையில் எனக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார். இன்றைய சர்வதேச சூழ்நிலைமையில் ஜார்ஜ்புஷ் விஷயத்தில் இந்தியா மேற்கொள்ளத்தக்க சிறந்த மார்க்கம்.
அவரது கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்காவுக்கு உள்ளேயே பேராதரவைப் பெற்றுவிட்ட சர்வதேசிய இயக்கத்தின் முன்வரிசையில் நிற்பதுதான். சுதந்திரமான கண்ணோட்டத்தை நான் கொண்டிருந்தாலும், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரான இயக் கத்தின் பிரச்சாரகன் அல்ல என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்.
நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கடும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலைமையில் தங்களுக்கும் சோனியா காந்திக்கும் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜிக்கும் எனது நிலைபாட்டை தெரிவிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதினேன். தேசபக்தனும் இந்திய மக்களின் சுதந்திரத்தை மதித்துப் போற்றக் கூடியவனுமாகிய எனது கருத்துக்களை தயவு கூர்ந்து ஏற்க வேண்டுகிறேன். நாடு கடும் நெருக் கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிற வேளை யில் மவுனம் சாதிப்பது குற்றமாகும். அதனால் எனது கடமையைச் செய்கிறேன்
தமிழாக்கம்: வீரா

August 21, 2007

123 உடன்பாடும் அமெரிக்க நீலிக் கண்ணீரும்!


இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாடு நாடு முழுவதும் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அடுத்து என்ன நடைபெறப் போகிறது என்று நம்மை உற்று நோக்கியுள்ளன. அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம். குறிப்பாக இடதுசாரிகள் முன்வைத்துள்ள - எழுப்பியுள்ள கேள்விகளுக்கு - சந்தேகங்களுக்கு அரசு என்ன தீர்வு காணப்போகிறது?

தற்போது ஏற்பட்டுள்ள இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாடு யாருடைய நலனை முன்னிறுத்தியுள்ளது? எதிர்காலத்தில் எப்படிப்பட்ட விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது? இதுவரை நாம் கடைப்பிடித்து வந்த அணி சேரா கொள்கை முதல் சுயேச்சையான வெளியுறவு கொள்கை வரை அனைத்தும் கேள்விக்குறியாகி உள்ளது!

2005 ஆகஸ்டில் புஷ் - மன்மோகன் கூட்டறிக்கை வெளியிட்ட போதே இடதுசாரிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். இது நம்முடைய சுயேச்சையான அணு சக்தி மற்றும் இராணுவம் சார்ந்த நலனை பாதிக்கும் என்று அறுதியிட்டு கூறி வந்தன.

இந்த 123 உடன்பாட்டின் மூலம் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது? அமெரிக்காவுக்கு என்ன கிடைக்கப் போகிறது? இத்தகைய உடன்பாட்டை மேற்கொள்வதன் மூலம் ஏகாதிபத்திய சிலந்தி வலையில் நம்மை எவ்வாறு சிக்க வைக்க அமெரிக்கா முனைகிறது என்பதே பிரதானமானது.

இந்தியாவின் மின் சக்தி தேவையை பூர்த்தி செய்வதற்கு அணு மின் நிலையங்களாலேயே முடியும் என நமது ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே அத்தகைய மின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும் - அணு உலைகளை இயக்குவதற்கும் தேவைப்படும் யுரேனியம் மற்றும் அணு தொழில்நுட்பத்தை இதுபோன்ற ஒப்பந்தத்தின் மூலம் பெற முடியும் என்று கருதுகின்றனர். மேலும் அணு தொழில்நுட்பத்திலும் - அணு குண்டு சோதனையிலும் வெற்றிகரமாக செய்து முடித்துள்ள இந்தியாவை உலக நாடுகள் அணு சக்தியுள்ள நாடாக அங்கீகரிக்கவில்லை. எனவே அத்தகைய தனிமைப்படுதலிலிருந்தும் இது உதவும் என்று நமது ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.

அதே சமயம் தற்போது இந்தியாவின் மின் சக்தியை பூர்த்தி செய்வதில் அணு மின்சாரத்தின் பங்கு என்பது வெறும் 3 சதம் மட்டுமே. 2020க்குள் இதனை 7 சதமாக உயர்த்த வேண்டும் என்பதே நமது ஆட்சியாளர்களின் கனவாக உள்ளது. இந்த குறைந்தபட்ச மின் தேவையை - அணுவை பயன்படுத்துவதற்காக சர்வதேச அளவில் நாம் எத்தகைய விலையை கொடுக்க வேண்டும் என்பதே தற்போது முன்னெழுந்துள்ள கேள்வி?

இது ஒரு புறம் இருக்க அமெரிக்காவோ இந்தியா பொக்ரானில் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அணு வெடிப்பு சோதனை செய்வதற்காக பல்வேறு விதமான தடைகளை விதித்தது. மேலும் இந்தியா இதுவரை நம்முடைய சுயேச்சையான அணு சக்தி நலனை காப்பதற்காக அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் நமது சுயேச்சையான பாதையில் நடைபோட்டு வருகிறோம். அமெரிக்கா நீண்ட காலமாக NPT-யில் யையெழுத்திட நீண்ட காலமாக நம்மை நிர்ப்பந்தித்து வருகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத எந்த நாட்டுடனும் அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தை செய்து கொள்வதில்லை நிலையை தற்போது இந்தியா விசயத்தில் தளர்த்தியுள்ளது. சர்வதேச அளவில் புதிய முரண்பாட்டை தோற்றுவித்துள்ளதோடு - அமெரிக்காவே அந்த என்.பி.டி.க்கு சவக்குழி தோண்டி புதைத்து விட்டது என்று விமர்சிக்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கு இந்தியா மீது ஏன் இந்த திடீர் கரிசனம் என்ற கேள்வியைத்தான் நாம் முதலில் எழுப்ப வேண்டியுள்ளது? மாறியுள்ள உலகச் சுழ்நிலையில் - ஆசியாவில் ஒரு வலுவான கூட்டாளி தேவை என அமெரிக்கா கருதுகிறது. அதன் அடிப்படையிலேயே அது இந்தியாவோடு தற்போது கூடி கொஞ்சுகிறது. தற்போது பொருளாதார ரீதியாகவும் - தொழில்நுட்ப - இராணுவ ரீதியாகவும் ஒரு பலமான நாடாக உருவெடுத்து வரும் சீனாவை எதிர் கொள்வதற்கு யுத்த தந்திர ரீதியாக இந்தியாவை பயன்படுத்துவதே அதன் நோக்கமாக மிஞ்சுகிறது. மேலும் தற்போது மத்திய ஆசியாவில் ஏற்பட்டு வரும் அரசியல் - பொருளாதார மாற்றம் குறிப்பாக ஈராக் ஆக்கிரமிப்பு. ஈரானை மிரட்டிக் கொண்டிருப்பது. ஆப்கானிஸ்தான் கைவசம் என தனது ஏகாதிபத்திய ஆக்டோபஸ் கரத்தை விரிவுபடுத்திடும் திட்டத்தில் இந்தியாவை பயன்படுத்துவது என்பதும் அதன் நோக்கமாக இருக்கிறது.

இந்த பின்னணியில்தான் இந்தியாவை தனது நம்பகமான கூட்டாளியாக அமெரிக்கா தேர்ந்தெடுத்துள்ளது. இந்த அடிப்படையிலேயே அணு சக்தி உடன்பாட்டை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

இது தவிர இத்தகைய உடன்பாடு அமலுக்கு வரும் பட்சத்தில் இராணுவ ரீதியான வர்த்தகத்தில் இந்தியாவை ஈடுபடுத்துவதன் மூலம் 100 பில்லியன் டாலர் வரை அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான வாய்பும் கிடைக்கும். இதைத் தொடர்ந்து ஆயுத வியாபாரத்தில் நாம் இதுவரை கடைப்பிடித்து வந்துள்ள நிலையில் தலை கீழ் மாற்றம் ஏற்படும். இவ்வாறான ஆயுத போட்டியை ஏற்படுத்துவன் மூலம் ஆசியாவில் தங்களது ஆயுத வியாபாரத்தை வலுவாக நிலைநாட்ட உதவும் என கருதுகிறது.

இத்தகைய உள்ளார்ந்த நலன்கள் அமெரிக்காவிடும் இருக்கும் நிலையில் 123 அணு சக்தி உடன்பாட்டின் முலம் அது லகானை தன்னுடைய கையில் வைத்துக் கொண்டே இந்தியாவை இந்த உடன்பாட்டில் சிக்க வைத்துள்ளது.

இந்த 123 என்பது அமெரிக்க அணு சக்தி சட்டம் 123 பிரிவின் கீழ் வருவதால். அந்த பிரிவின் அடிப்படையில் - இந்தியாவை கட்டுப்படுத்த முடியும். அதாவது எதிர்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி இந்த உடன்பாட்டையே முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆபத்தும் உள்ளது. அப்புறம் என்ன வழக்கமான சண்டித்தனம்தான்.

இந்த 123 தவிர இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டிற்காக ஹைட் ஆக்ட் (Hendry Hyde Act) ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த ஹைடு சட்டத்தின் மூலம் இந்தியாவை அனைத்து விதத்திலும் கட்டுப்படுத்த முடியும்.
குறிப்பாக எதிர் காலத்தில் இந்தியா அணு வெடிப்பு சோதனை எதிலும் ஈடுபடக் கூடாது என்பதும்.

அமெரிக்கா மற்ற நாடுகள் மீது புரியும் சண்டித்தனத்திற்கு துணை போக வேண்டும் என்பதும்.

குறிப்பாக ஈரான் விசயத்தில் அமெரிக்க நலன் சார்ந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதும். தற்போது ஈரானோடு செய்து கெண்டுள்ள ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா குழாய் வழி எரிவாயு திட்டத்தை தூக்கி எறிய வேண்டும் என்பது உட்பட நிர்ப்பந்திக்கபடுகிறது.

மேலும் நமது சுயேச்சையான வெளியுற கொள்கையை காற்றில் பறக்க விட்டு விட்டு. அமெரிக்கா சொல்படி கேட்கும் சட்டாம் பிள்ளைத் தனத்திற்கு உட்பட வேண்டும் என ஹைடு சட்டம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு ஹைடு சட்டம் என்பது பல்வேறு அமெரிக்க நலன் சார்ந்த மறைமுக அஜண்டாகை கொண்டுள்ளது. எனவேதான் இந்த ஹைடு சட்டத்தை விரிவாக பரிசீலிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இதர இடதுசாரிகள் வலுவாக எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர்.

இதற்கெல்லாம் மேலாக இது ஒரு அணு சக்தி ஒப்பந்தம் மட்டும் அல்ல. புவிசார் அரசியல். இராணுவம். யுத்த தந்திரம். பொருளாதாரம். வெளியுறவு கொள்கை என அனைத்து அம்சங்களையும் கொண்டது. மொத்தத்தில் இந்திய இறையாண்மையையே கேள்விக்கு உள்ளாக்கும் படு பயங்கரமான அதாள பாதாள உடன்பாடு இந்த 123. எனவேதான் இடதுசாரிகள் இதனை ஏற்க முடியாது என்று கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பான இதர நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக் கூடாது என வலியுறுத்துகின்றனர்.

அதாவது இந்த 123 உடன்பாடு அமெரிக்காவோடு செய்து கொண்டாலும் இதனை முழுமையாக்க வேண்டும் என்றால் சர்வதேச அணு சக்தி கழகம் மற்றும் அணு சக்தி வழங்கும் குழுமத்துடன் ஒரு உடன்பாட்டை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளும் பட்சத்தில் IAEA-ஐ.ஏ.இ.ஏ. நமது அணு உலைகளை அவர்களது கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டி வரும். மேலும் அணு சக்தியை கையாளுவது என்ற நமது சுதந்திர தன்மையை முற்றிலுமாக நாம் இழக்க வேண்டி வரும். எனவேதான் இந்திய அரசு இந்து உடன்பாடு குறித்து மேற்கண்ட நிறுவனங்களோடு எந்த பேச்சுவார்த்தையும் நடத்தக் கூடாது என உறுதியாக எதிர்த்து வருகிறது.

இந்தியாவின் சுயாதிபத்தியம் மற்றும் இறையாண்மை குறித்த அடிப்படை அம்சமாக இருப்பதால் இந்த விசயத்தில் சமரசம் என்பதை ஏற்க முடியாது. இதனை இடதுசாரிகள் தெளிவாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இந்திய பாராளுமன்றத்தில் விரிவான விவாதத்தையும் முழுமையாக நடத்த வேண்டும் என்று இடதுசாரிகள் வலியுறுத்துகின்றனர். பா.ஜ.க.வுக்கு இந்த விசயத்தில் அரசு எப்போது கவிழும் திண்ணை எப்போது காலியாகும் என்ற ஆர்வத்தை தவிர இந்திய இறையாண்மை குறித்த நலன்கள் எல்லாம் ஏதும் இல்லை. அதனால்தான் அவர்கள் பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை கோருகின்றனர். இந்த விசயத்தில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அரசின் நிலையை இந்த இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டை ஏற்கவில்லை என்பது வெளிப்படையாக இருக்கும் போது ஓட்டெடுப்பு என்ற கேள்வியே எழவில்லை. அதனால்தான் இந்திய அரசு தார்மீக ரீதியாக பெரும்பான்மையான உறுப்பினர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த உடன்பாட்டை முழுமையான சந்தேகங்கள் தீரும் வரை அமலாக்க கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.

மேலும் தற்போதைய இந்திய அரசின் நிலைக்கு வழியமைத்து கொடுத்தவர்கள் இந்துத்துவ பா.ஜ.க.வினர் என்பதையும் நாம் மறக்க கூடாது.

இது தவிர சர்வதேச அளவில் ஈரான் NPT-என்.பி.டி.யில் கையெழுத்திட்ட நாடு. அந்த நாடே தன்னுடைய வளர்ச்சி பணிக்காக சிவில் அணு சக்தியை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா எத்தகைய முட்டுக் கட்டைகளை போட்டு வருகிறது என்பதை வெளிப்படையானது. அவர்களின் நிலைபாட்டுக்கு ஆதரவாக இந்தியாவை இரண்டு முறை ஐ.ஏ.இ.ஏ.வில் வாக்களிக்க வைத்தார்கள். இது இந்தியாவுக்கு வைக்கப்பட்ட ஆசிட் டெஸ்ட் என்று வேறு கூசாமல் கூறியது அமெரிக்கா. இதன் மூலம் அமெரிக்காவின் ஒரு கண்ணில் வெண்ணை - ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற இரட்டை கொள்கை அதன் வளர்ச்சிக்கும் - அதன் நலன் காப்பதற்குமே உதவிடும்! இதனை மன்மோகன் போன்ற அமெரிக்க ஆதரவாளர்களால் உணர முடியாது!