மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் இந்திய - அமெரிக்க அணுசக்தி பேரத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திடம் இதனை மேலும் தொடராதே என்று வலியுறுத்தி வருகின்றன. நம் நாட்டின் பிரதமர் ஜார்ஜ் புஷ் இந்தியாவின் சிறந்த நண்பன் என்றும் அவர் இந்த பேரத்தில் இந்தியாவுக்கு உதவியிருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.
தன் சொந்த நாட்டிலேயே மிகவும் செல்வாக்கிழந்த ஜனாதிபதி என்று பெயர் வாங்கிய நபராக, மக்கள் மத்தியில் மிகவும் அற்பமாக மதிக்கப்படும் நபராக, ஜார்ஜ் புஷ் கருதப்படுகிறார். தன் சொந்த நாட்டு மக்களுடனேயே நட்புரீதியில் இல்லாத ஒரு நபர், திடீரென்று இந்தியாவின் சிறந்த நண்பனாக எப்படி மாற முடியும்? உண்மை இதற்கு நேரெதிராகவே இருக்கிறது. இந்திய - அமெரிக்க அணுசக்தி பேரம் இந்தியாவின் நலன்களுக்கோ அல்லது இந்திய மக்களின் நலன்களுக்கோ எதுவும் செய்திடாது. தேவையில்லையென்றால் கழட்டிவிடக்கூடிய அளவிற்கு ஒரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தனியே நிற்கும் ஒரு ரயில்வண்டி போன்றதல்ல இந்த ஒப்பந்தம். மாறாக, இந்தியாவைப் பலவிதங்களிலும் அமெரிக்காவின் போர்த்தந்திர கூட்டணிக்குள் இழுத்துக் கொள்வதன் ஒரு பகுதியேயாகும்.
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காக ஆசியாவில் திறக்கப்படும் ஒரு கிளை அலுவலகம் போன்றதேயாகும்.இந்திய அரசின் சார்பில் இந்திய மக்களின் வாழ்க்கையில் கடுமையான அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ராணுவம், விவசாயம், தொழில்கள் முதலான துறைகளிலும் பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவுடனான போர்த்தந்திரக் கூட்டணியின் காரணமாக, நம் நாட்டின் அயல்துறைக் கொள்கையே கடும் நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட்டிருக்கிறது.குறைந்தபட்ச பொது செயல் திட்டம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரித்த சமயத்தில், ஒன்றை மிகவும் தெளிவாக்கியிருந்தோம். எங்கள் ஆதரவு என்பது, அரசின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையிலானதாகும் என்று மிகவும் தெளிவாக்கியிருந்தோம். அந்த குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில், இப்போது அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அணுசக்தி பேரம் குறித்து, எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. உண்மையில், ‘‘ஒரு சுயேட்சையான அயல்துறைக் கொள்கை’’ பின்பற்றப்படும் என்றுதான் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்போது, ஐமுகூ அரசாங்கமானது, பாஜக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அமெரிக்க ஆதவு கொள்கையை அமல்படுத்திட, இடதுசாரிகளும் உதவிட வேண்டும் என்று கோருகிறது. இது குறைந்தபட்ச பொது செயல் திட்டத்திலிருந்து மிகத் தெளிவாகவே விலகிச்செல்லும் போக்காகும்.
இதனை நிச்சயமாக ஏற்க முடியாது.நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைஇந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஆயினும், இந்த அணுசக்தி பேரத்தைப் பொறுத்தவரை, இந்தியாவைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய இந்த பேரம் குறித்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் கண்டுகொள்ளப்படவே இல்லை. ஆனால் இதே பிரச்சனை மீது ஒவ்வொரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் தங்கள் கருத்துக்களைக் கூறி இந்தப் பேரத்தின் மீது வாக்களித்திருக்கிறார்கள். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையோர் இந்த பேரத்திற்கு எதிராக இருக்கிறார்கள். ஆனால் இதனை இந்திய அரசாங்கம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. மாறாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பேரம் குறித்து விவாதித்ததோடு மட்டுமல்லாமல், ‘ஹைடு சட்டம்’ என்று புதியதோர் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது.
அதன்படி, அமெரிக்க அரசாங்கம் இந்தியாவுடன் கொண்டுள்ள உறவுகள் குறித்து ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு பதில்கூறக் கடமைப்பட்டவராவார். இவ்வாறு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையோரின் கருத்துக்களை ஏற்க மறுப்பதோடு, இந்திய ஜனநாயகத்திற்குத் தீங்கி விளைவிக்கக் கூடிய மிக மோசமான நடவடிக்கையில் இந்திய அரசாங்கம் இறங்கியிருக்கிறது.ஹைடு சட்டம்சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக இந்திய அரசாங்கமானது, மற்றொரு நாட்டின் சட்டத்திற்கு - ஹைடு சட்டத்திற்குக் - கீழ்ப்பட்டு நடப்பதான ஒரு பேரத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.
2006 செப்டம்பரில் இடதுசாரிக் கட்சிகள் இந்த பேரத்தில் எழுப்பப்பட்டிருந்த ஒன்பது விதமான பிரச்சனைகளின்கீழ் பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதிமொழி அளித்திருந்தார். ஆனால், 2006 டிசம்பரில்தான் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியாவுடனான அமெரிக்க உறவுகளைக் கட்டுப்படுத்தக் கூடிய ஹைடு சட்டம் என்னும் இந்தப் புதியச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியப் பிரதமர் இந்திய நாடாளுமன்றத்தில் அளித்திட்ட உறுதிமொழிகள் சுக்குநூறாகக் கிழிக்கப்பட்டுவிட்டன. ஒரு மாணவன் தேர்வில் தேர்ச்சியடைந்துவிட்டானா அல்லது தவறிவிட்டானா என்று ஓர் ஆசிரியர் அறிக்கை தாக்கல் செய்வதைப் போல, இந்தியாவின் அயல்துறைக் கொள்கை குறித்து, அமெரிக்க ஜனாதிபதியால் ஒவ்வோராண்டும் மதிப்பீடு செய்யப்படும். அதன் மீது இந்திய அரசாங்கமானது, அமெரிக்க நாட்டிற்கு ஒரு நல்ல நண்பனாக நடந்து கொண்டதா என்கிற பரீட்சையில் தேர்ச்சியடைந்து விட்டதா என்பது குறித்து ஓர் இறுதி அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். உதாரணமாக இந்தியா ஈராக் யுத்தத்தை அல்லது ஈரானுக்கு அமெரிக்கா விடுத்து வரும் அச்சுறுத்தல்களை அல்லது உலகில் எங்காவது நடைபெறும் அச்சுறுத்தல்களை எதிர்த்தால், அது இந்தியா குறித்து கரும்புள்ளி வைத்திடும். இத்தகையதோர் மோசமான நிபந்தனையை குறைந்தபட்சம் சுயமரியாதையுடன் உள்ள எந்த இறையாண்மை கொண்ட நாடாவது ஏற்றுக்கொள்ள முடியுமா?அமெரிக்கச் சட்டம், அணுசக்தி பேரம் குறித்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கும் பல நிபந்தனைகளை மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறது.
1. இந்தியாவுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை அமெரிக்கா கொடுக்காது.எ அமெரிக்கா நிரந்தரமாக எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று எந்தவித உத்தரவாதமும் வழங்காது.
2. அமெரிக்கா எந்த நிமிடம் விரும்பினாலும் ஏதேனும் காரணத்தைக் கூறி ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடும்.
3. அவ்வாறு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால், அமெரிக்கா தான் அளித்திட்ட அனைத்து ஈனுலைகளையும் (சநயஉவடிசள) மற்றும் எரிபொருள்களையும் (கரநடள) திரும்பப் பெற்றுக்கொள்ளும்.
4. அதுமட்டுமல்ல, மற்ற நாடுகளும் இந்தியாவிற்கு அவற்றை வழங்காது அமெரிக்கா தடுத்திடும். மின்சக்தித் தேவைகள்பிரதமர் மன்மோகன்சிங், இந்த அணுசக்தி பேரமானது, ஒவ்வொரு இந்தியனுக்கும் மின்சாரம் பயன்படுத்தும் வாய்ப்பை, ஏற்படுத்தும் என்று கூறியிருக்கிறார்.
நாட்டின் கிராமங்களில் மூன்றில் ஒரு பங்கு இன்னமும் இருளில் மூழ்கிக்கிடக்கிறதென்றால் அதற்குக் காரணம், மின்சக்தித் துறையில் (யீடிறநச ளநஉவடிச) போதுமான பணத்தை அரசு செலவிடத் தவறியதும், இத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவித்ததுமே காரணங்களாகும். மின்சாரக் கட்டணம் பல மாநிலங்களில் விஷம்போல் உயர்ந்துள்ளன. விவசாயிகள் பெருவாரியாகத் தற்கொலை செய்து கொள்வதற்கு, அவர்களின் மின்கட்டணங்கள் அதிகரித்ததும் ஒரு காரணமாகும்.
அணுசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் செலவினம் அதிகமாகும். இன்று, நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.50 செலவாகிறது. ஆனால் அணுசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு அது யூனிட் ஒன்றுக்கு ரூ.5.10 முதல் 5.50 வரை செலவாகும். இது நுகர்வோரைச் சென்றடையும்போது மேலும் அதிகமாகும். ஒரு விவசாயி அல்லது ஒரு நடுத்தர ஊழியர் இவ்வளவு கூடுதலாக மின்கட்டணத்தைக் கொடுக்க முடியுமா? இதனால் பயனடையப் போவது யார்? அமெரிக்காவில் உள்ள அணுசக்தி ஈனுலைத் தொழில் நிறுவனங்கள் (சநயஉவடிச iனேரளவசல) தற்சமயம் மிகவும் ஆழமான நெருக்கடியில் சிக்கி வெளிவரமுடியாமல் விழிபிதுங்கித் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களின் ஈனுலைகளை ஒருசில நாடுகள்தான் வாங்கிக்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவிலேயேகூட 1996க்குப்பின் ஒரு ஈனுலை கூட நிறுவப்படவில்லை.
தங்கள் நாட்டில் மின்சாரத்துறையை விரிவுபடுத்திட தங்களிடம் பணம் இல்லை என்று அந்த நாட்டு அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அதே ஈனுலைகளை பல லட்சம் கோடி ரூபாய்களுக்கு இந்தியாவின் தலையில் கட்ட அமெரிக்க அணுசக்தி தொழில்நிறுவனங்கள் தற்போது தயாராகிவருகின்றன. அணு எரிசக்தி வாணிகத்தின் மூலம் பயனடையப்போவது அமெரிக்க நிறுவனங்களே.
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் என்ரான் பேரம் நாட்டை எந்த அளவிற்கு சீரழித்தது என்பதை நன்கறிவர். இந்த என்ரான் அமெரிக்க கம்பெனி, ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 7 ரூபாய்க்கும் மேல் விலை நிர்ணயம் செய்தது. அதுநாள்வரை மிகவும் இலாபகரமாக இயங்கி வந்த மகாராஷ்ட்ரா மின்வாரியம், என்ரான் புகுந்தபின் திவாலாகிப் போனது.
அணுமின் சக்தி விஷயத்தில் இது இன்னும் மோசமான விளைவுகளைக் கொடுக்கும். தற்சமயம், நாட்டின் மொத்த மின்உற்பத்தியில், அணுமின்சக்தி 3 சதவீத அளவிற்கே இருக்கும். மற்ற 97 சதவீதம் அனல் மின்சாரம் மற்றும் புனல் அல்லது நீர் மின்சாரம் மூலமே இருந்துவருகிறது. இந்த அணுசக்தி ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டால் அரசாங்கத்தின் கணக்குப்படியே அடுத்த 20 ஆண்டுகள் கழித்து, இந்தியாவின் மின்சாரத் தேவையில் 7 சதவீத அளவிற்கே இருந்திடும். இவ்வளவு அற்ப அளவிற்காக, நாட்டின் இறையாண்மையையே அமெரிக்காவின் காலடிகளில் அடகு வைக்க வேண்டுமா?மாற்று வழிமுறைகள்இந்தியா, தன் அணுசக்தித் துறையை வளர்த்துக்கொள்ள வேண்டியது, அவசியமா? நிச்சயம் அவசியம்தான். ஆனால் அதேசமயத்தில், தன் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு, அதே அளவு எண்ணெய் மற்றும் எரிவாயு (டிடை யனே பயள) வழிமுறைகளைப் பயன்படுத்துவதும் அவசியம். நாட்டில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை வெளிக்கொணர, மேலும் முதலீடு செய்யப்பட வேண்டியது இன்றைய தேவையாகும். அதேசமயத்தில், மேற்று மற்றும் மத்திய ஆசிய நாடுகள் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களின் பிரதான மையங்களாகும். இந்நாடுகளுடன் இந்தியா தன்னுடைய பாரம்பர்ய உறவைகளை வலுப்படுத்திக்கொண்டு, இவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வது அவசியம்.
ஆனால், இதனை அமெரிக்கா விரும்பவில்லை. அமெரிக்கா, ஈராக் மீது வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தொடுப்பதையும், ஈரானை அச்சுறுத்துவதையும், நாம் ஆதரிக்க வேண்டுமென்று விரும்புகிறது. இது எந்த விதத்தில் நாட்டின் நலன்களைக் காத்திடும்? அயல்துறைக் கொள்கையின் தாக்கம்அணுசக்தி பேரத்தின் காரணமாக, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி, சர்வதேச அணுசக்தி கழகத்தில் மிகவும் வெட்கக்கேடான வழியில் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் நின்று - அணிசேரா இயக்கத்தில் உள்ள மற்ற மூன்றாம் உலக நாடுகளைப் போலல்லாமல் - இந்தியா, ஒருமுறை அல்ல இருமுறை வாக்களித்ததைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
இப்போது இந்தியா அமெரிக்காவிடமிருந்து பல லட்சம் கோடி ரூபாய்கள் செலவு செய்து அமெரிக்காவின் ஈனுலைகளை வாங்கினால், அதன்பின் தன்னுடைய அணுஎரிசக்தித் தேவைகளுக்கு முற்றிலுமாக அமெரிக்காவைச் சார்ந்து நின்றால், மேலும் அதிகமான அளவில் அமெரிக்கா நம்மை பிளாக்மெயில் செய்வதற்கும் நிர்ப்பந்திப்பதற்கும் வகைசெய்யும். அமெரிக்காவின் புதிய ராணுவக் கூட்டாளிஇந்தியா, 2005 ஜூனில் கையெழுத்திட்டுள்ள ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலமாக, அமெரிக்காவுடன் ஒரு ராணுவக் கூட்டணிக்குள்ளும் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தில் கண்டுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:
* இந்த ஒப்பந்தம் முதன்முதலாக மூன்றாம் நாடுகளில் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புக்கொள்கிறது. இதுநாள்வரை, மற்ற நாடுகளில் இந்தியாவின் நடவடிக்கைகள் என்பது ஐ.நா. அமைப்பின் கட்டளைக்கிணங்கவே இருந்தது.
* இரு நாட்டின் ராணுவம், கப்பல்படை, விமானப்படை வீரர்களின் கூட்டுப் பயிற்சிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
* அமெரிக்க ஆயுதங்கள் வாங்கப்படுவது உத்தரவாதப்படுத்தப்படும். அதன் மூலமாக அமெரிக்க ஆயுதத் தொழிற்சாலைக்கு உதவிட இந்தியாவில் இணைந்து உற்பத்தி மேற்கொள்ளப்படும். இதன்மூலம் பல கோடி டாலர்கள் அமெரிக்காவின் ஆயுதத் தொழிற்சாலைகளுக்கு இந்தியா அளித்திடும்.எ புதிதாக செய்துகொள்ளப்பட்டுள்ள கப்பல்படை கூட்டுப் பயிற்சி ஒப்பந்தங்கள் மூலமாக, இந்தியாவின் கப்பல் மற்றும் விமானத்தளங்கள், அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய கப்பல்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும்.
அவை இந்தியாவில் உள்ள இத்தளங்களுக்கு வந்து, எரிபொருள்களை நிரப்பிக்கொள்ளலாம் மற்றும் மராமத்து வேலைகளையும் பார்த்துக் கொள்ளலாம். உதாரணமாக, அமெரிக்க விமானங்கள் ஈராக் மீது குண்டுமாரி பொழிந்து, நூற்றுக்கணக்கானோரைக் கொன்று குவித்துவிட்டு, இந்தியாவின் தளங்களில் வந்து இளைப்பாறிக்கொள்ளலாம்.
பின்னர் மீண்டும் ஈராக் சென்று மக்களைக் கொன்று குவிக்கலாம். இவை அனைத்திற்கும் இந்தியா ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்திட வேண்டும்.அமெரிக்காவுடன் மட்டும் கூட்டுப்பயிற்சி என்பதல்ல. தற்போது அமெரிக்காவின் மற்ற பங்காளி நாடுகளுடனும் சேர்ந்து கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் நாம், அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளிகளான ஜப்பான், ஆஸ்திரேலியாவுடனும் நெருங்கிய அளவில் ராணுவக் கூட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால்தான் வங்காள விரிகுடாவில் இந்நாடுகளின் கப்பல்படைகள் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன. இந்திய அரசின் இந்த ஒப்பந்தத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற இடதுசாரிக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.விவசாயிகளின் நலன்களைக் காவு கொடுத்து ...2005இல் பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்காவுடன் மற்றுமோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
அது நம் நாட்டின் விவசாயிகளுக்கு மிகவும் தீங்கு பயப்பதாகும். அந்த ஒப்பந்தத்தின் கீழ் இரு நாட்டிற்கும் இடையே ஓர் கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் சார்பாக உலகையே கொள்ளையடித்து வரும் மான்சாண்டோ மற்றும் வால்மார்ட் பன்னாட்டு நிறுவனங்கள் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.
இந்த நிறுவனங்கள் நம் நாட்டின் விதைச் சந்தை மற்றும் வேளாண்வணிகத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.வால்மார்ட் நிறுவனத்தின் பேராசை பிடித்த வர்த்தக நடைமுறைகள் குறித்து உலகம் முழுவதற்கும் நன்கு தெரியும். இது உலகில் உள்ள கோடிக்கணக்கான சில்லரை வர்த்தகர்களை அழித்து ஒழித்துவிட்டது. இந்தியாவில், ஐந்து கோடி குடும்பங்களுக்கும் மேல் சில்லரை வர்த்தகத்தைச் சார்ந்து ஜீவித்து வருகின்றன.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடித் தலையீட்டை நாம் எதிர்த்து வருகிறோம். ஆனால், மத்திய அரசு அமெரிக்காவுடன் கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், உலகையே அழித்துவரும் இந்த பகாசுரக் கம்பெனிகள் நம் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மான்சான்டோ பன்னாட்டு நிறுவனமானது, விவசாயிகளிடமிருந்து விதை உரிமைகளைப் பறித்ததன் மூலமாக, பல கோடி டாலர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இந்த நிறுவனம் தன்னுடைய அதீத விலையுள்ள பூச்சி மருந்துகளின் மூலமாக உலகச் சந்தையையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கிறது. அவ்வாறு இந்திய விவசாயிகளையும் கொள்ளையடிக்க இப்போது அவர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, உலக வர்த்தக அமைப்பு மற்றும் அதன் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் வழியாக, இந்திய விவசாயிகளுக்கு எதிராக ஒரு யுத்தத்தையே நடத்தி வருகிறது.
உதாரணமாக, அமெரிக்க அரசாங்கத்தின் மிகவும் மான்யவிலையில் உற்பத்தி செய்யப்பட்ட மிகவும் மலிவான விலையுள்ள பருத்தி, இந்தியாவிற்குள் வர அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக இந்திய பருத்தி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் தற்கொலைகளுக்கு இது ஒரு முக்கிய காரணமாகும். இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதன் மூலம் மேலும் விவசாயிகள் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுப்பது அதிகமாகும்.
மக்கள் விரோத உலகமயக் கொள்கைகளை உந்தித்தள்ள ...இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கிடையேயும் ஒரு போர்த்தந்திர பொருளாதாரக் கூட்டினை வளர்த்திட (வடி னநஎநடடியீ ய ளவசநவநபiஉ நஉடிnடிஅiஉ யீயசவநேசளாiயீ), இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் கூட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதற்காக இந்தக் கூட்டு? ஒரு நாளைக்கு இருபது ரூபாய் கூட ஈட்ட முடியாது தத்தளிக்கும் நாட்டில் உள்ள 77 சதவீத உழைக்கும் மக்களுக்கு உதவுவதற்காகவா? நிச்சயமாக அல்ல. இந்தக் கூட்டமைப்பானது முதல் கட்டமாக ஏற்கனவே தன்னுடைய 30 பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
அவற்றில் 21, அமெரிக்க நிறுவனங்கள் இந்திய சந்தையில் நுழைவதற்கான அனுமதி கோரியவையாகும். அவற்றின் கோரிக்கைகள்:எ சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடுஎ கல்வித்துறையில் அந்நிய நேரடி முதலீடுஎ இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடுஎ நிதித்துறையை திறந்து கொள்ள அனுமதிஇந்த அமைப்பிற்கு சட்ட அங்கீகாரம் இந்திய அரசால் கொடுக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடாகும்.இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டபின், அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று நிர்ப்பந்தங்கள் கொடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.மனிதாபிமானமற்ற நவீன-தாராளமயக் கொள்கைகளை எதிர்த்து கடுமையாகப் போராடிவரும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களை, இந்த ஒப்பந்தமான மேலும் கடுமையான முறையில் பாதிக்கும்.அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாதேமேற்கண்ட காரணங்களுக்காகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் இந்த ஒப்பந்தத்தில் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டாம் என்று கோரி வருகின்றன. இந்த பேரமானது, அணுஎரிசக்தி பேரத்தோடு நின்றுவிடாது. நம் நாட்டு மக்களின் அனைத்து அம்சங்களிலும் அமெரிக்கா தலையிடுவதற்கு வகை செய்யும் ஒரு ஆரம்பமேயாகும். இந்தியாவின் இறையாண்மை மற்றும் தொழிலாளர் - விவசாயி - ஊழியர்களின் நலன்கள் அனைத்தும் கடும் பாதிப்புக்குள்ளாவதற்குக் கொண்டு செல்லும்.
இந்த பேரத்தை நாம் கடுமையாக எதிர்ப்பதனால், மார்க்சிஸ்ட் கட்சி மீதும் இடதுசாரிக் கட்சிகள் மீதும் இழிவான முறையில் துஷ்பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. பொய்களைப் பரப்பிடுவதில் சாமர்த்தியசாலிகளாக உள்ள பலரை அமெரிக்கா தன் நண்பர்களாகக் கொண்டுள்ளது என்பதை நாமறிவோம். ஏழை எளிய மக்களின் உரிமைகளை, நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாத்திடும் ஒளிமயமான பாரம்பர்யத்தைப் பெற்றவர்கள் நம் நாட்டு மக்கள்.
இந்திய சுதந்திரத்தின் அறுபதாண்டு தினத்தைக் கொண்டாடும் இந்த சமயத்தில், நாம் அனைவரும் ஒற்றுமையுடன் நின்று, இந்த அரசாங்கத்தைக் கோருவோம்:நாட்டு மக்களுக்குக் கேடுபயக்கும் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடராதே!குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை அமல்படுத்து!நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையோரின் குரலுக்கு செவிசாய்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தின் தமிழாக்கம். தமிழில்: ச. வீரமணி