நேற்று தெலுங்கு மொழி தொலைக்காட்சியான தேஜா டி.வி. இந்த கங்காவரம் மீனவ மக்களின் போராட்டம் - போலீசின் துப்பாக்கி சூடு காட்சியை ஒளிபரப்பியது. இந்த காட்சியைப் பார்த்த எவருக்கும் இதயம் ஒரு நிமிடம் அதிராமல் இருக்காது. ஆந்திர போலீசின் அதிரடி தாக்குதல் எதிரிநாட்டு வீரர்களை துவம்சம் செய்வது போல், தன் சொந்த நாட்டு மக்களை - ஏதுமறியா அப்பாவி மக்களை துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டுத் தள்ளியதும், பெரும் தடிகளைக் கொண்டு - அதுவும் குறிப்பாக மண்டையைப் பார்த்து தாக்கியதும் கல்மனதையும் கலங்க வைத்திருக்கும். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், அதுவும் கைக் குழந்தைகளுடன், தங்களுடைய கைக் குழந்தைகளைக் கூட கீழே விடாமல், தங்கள் பகுதியில் என்ன நடக்கிறது என்று அறிந்துக் கொள்வதற்குள் எல்லாம் முடிந்து விட்டதுபோன்ற சூழலை போலீசின் துப்பாக்கித் தோட்டக்கள் சீறி வந்து - இரண்டு உயிர்களைப் பறித்தது. நூற்றுக்கணக்கான மக்கள் - குறிப்பாக பெண்கள் - பித்துப் பிடித்தார்போல், கையில் அந்த நேரத்தில் கூட வேப்பிலையை வைத்துக் கொண்டு சாமியாடுவதுபோல் - அந்த நேரத்திலும் தங்களது கொதித்தெழுந்த ஆவேசத்தோடு போராடிய காட்சி நெஞ்சை உலுக்கியது. இந்த சூழலிலும் போலீசின் மிருக வெறித்தனம் - கோர நர்த்தணம் ஆடியது.
எதற்காக இந்த துப்பாக்கி சூடு? யாரை காப்பதற்காக இந்த துப்பாக்கி சூடு? அப்படியென்ன தேச துரோகம் செய்து விட்டார்கள் இந்த அப்பாவி மக்கள்?
ஆந்திர மாநில அரசு (முன்னாள் - இன்னாள்) விசாகப்பட்டினத்தில் உள்ள கங்காரவத்தில் ---தனியார் துறைமுகம்--- ஒன்றை கட்டிக் கொள்ள துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கும், டி.வி.எ°. ராஜூ என்ற நிறுவனத்திற்கும் அனுமதியளித்தது. ரூ. 2000 கோடி அளவிலான இந்த திட்டம் 2007ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத் துவங்கவுள்ளது.
இந்த திட்டம் குறித்த பேச்சுவார்த்தை துவங்கும் போதே, கங்காவரம் உள்ளிட்ட மீனவ கிராம மக்களின் வாழ்க்கை குறித்த விவாதமும் முன்னுக்கு வந்தது. ஆளும் மாநில அரசு அந்த மக்களுக்கு மாற்று இடம், நிவாரணம் தருவதாக கூறியது. 3600 குடும்பங்கள் இந்தி கிராமங்களில் இருப்பதாக கூறப்படுகிறது, 18000த்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது வாழ்க்கையை கடலோடும், கட்டுமரத்தோடும், மீன்பிடித் தொழிலோடும் பிணைத்துக் கொண்டவர்கள். எழுதப்படிக்கத் தெரியாத இந்த மக்களை வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றால் என்ன செய்வார்கள்? எந்த தொழிலைச் செய்வார்கள்? அதனால்தான் இந்த மக்கள் தங்களது வாழ்க்கைக்கு நிரந்தரமாக ஒரு தொழிலுக்கான ஏற்பாடும், வாழ்விடமும் தேவை என்று தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.பெரும் முதலாளிகளும் - ஆளும் மாநில அரசுக்கும் இந்த மக்களின் குரல் எட்டாத தொலைவில் இருந்தன. இந்த சூழ்நிலையில் கட்டாயமாக இந்த தனியார் நிறுவனம் துறைமுக கட்டுமானத் திட்டத்தை அந்த பகுதியில் துவக்கியது, அதையொட்டி மீனவ மக்களின் படகுகள் உட்பட அனைத்தையும் நிர்ப்பந்தமாக அப்புறப்படுத்தத் துவங்கியது. அதை எதிர்த்துதான் இந்த மக்கள் ஒன்றுபட்டு போராடினர்.
இந்த மக்களின் நியாயத்தை உணராத காவல்துறையும், மாநில அரசும், முதலாளிகளும் எப்படியும் தங்கள் திட்டத்தை நிறைவேற்றிட துப்பாக்கி குண்டுகளை பரிசாக அளித்து விட்டு, அதையே நிரந்தரமான நிவாரணமாக்கி விடலாம் என்று முடிவு செய்து விட்டனர்.
தனியார்மயம், உலகமயம், தாராமயம் இவையெல்லாம் யாருக்காக? உள்நாட்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கையை உயர்த்தவா? அல்லது பன்னாட்டு முதலாளிகளின் பணமூட்டையை வீங்க வைக்கவா? பிரான்சில் கூட 15 லட்சம் மாணவர்கள் - இளைஞர்கள் போராடி வருகிறார்கள். அங்கெல்லாம் கூட இத்தகைய போலீசின் அடக்குமுறைiயும், மிருகத்தனத்தையும் பார்க்க முடியவில்லை. ஏன் இந்த நிலைமை இந்திய மக்கள் ஏதுமறியாதவர்கள், எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், சுதந்திரத்தின் சுவாசக் காற்று அவர்களுக்கு தெரியாது? ஜனநாயகம், போராட்டம் இதெல்லாம் இவர்களுக்கு ஒத்துவராது - அகிம்சை வழியில் கோரிக்கை வைப்பவர்கள் - இதுதான் இந்திய பாரம்பரியம் என்று முடிவு கட்டி விட்டீர்களா? இல்லை! இந்திய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால், இந்திய மக்கள் குமுறி எழுவார்கள் - உங்களது உலகமயக் கொள்கை ஊரை விட்டே ஓட்டப்படும். துப்பாக்கிகள் உங்களுக்கு காவலாகலாம் - எங்களிடம் உழைத்து உருக்கேறிய - வலுவான கோடிக்கணக்கான கைகள் உள்ளன!
எங்கள் மீது சமாதி எழுப்பலாம் என்று கணா கண்டால், உங்கள் ஆட்சி அதிகாரத்தின் மீது நிரந்தர சமாமி எழுப்பிட உழைக்கும் மக்கள் தயாராவார்கள்!