November 25, 2005

தண்ணீருக்காக கண்ணீர் விட்டோம்! இன்று?தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மழை பெய்துள்ளதால், தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் பெரும்பாலான மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்களின் இயல்பான வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளது வருத்தத்தை அளிக்கிறது. தமிழக கிராமப்புற பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது இன்றைய நிலை!
தமிழகத்தின் முக்கிய நரங்களான சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெரும்பாலான கிராமங்களில் கூட மக்கள் குடிநீருக்காக அலையாய் அலைந்ததை நாம் கடந்த காலங்களில் கண்டோம். குடிநீரும், குடமும் அரசியலை தீர்மானிக்கும் விஷயமாகிப்போனது; நம் வீட்டுப் பெண்களின் பெரும் பகுதி நேரம் குடிநீர் பிடிப்பதிலேயே கழிந்தது! இரவு - பகல் என கண்களும், கால்களும், மனமும் குடிநீர் பிடிப்பதிலேயே குறியாய் இருந்தது.இதே நேரத்தில் தனியார் குடிநீர் நிறுவனங்களுக்கு மட்டும் எந்தவிதமான பஞ்சமும் இல்லாமல் குடிநீர் வியாபாரம் கனஜேராய் நடந்தது. ஏன் நம் தாமிரபரணி, வைகை ஆறுகள் கூட பெப்சிக்கும் - கோக்குக்கும் விற்கப்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல; இந்திய நாடு முழுமையிலும் தண்ணீர் வியாபாரம் கார்ப்பரேட் வர்த்தகமாக மாறியது. ஆட்சியாளர்களும் - காண்ட்டிரக்டர்களும் குடிநீர் லாரிகள் மூலம் தங்களது மூலதனத்தை பெருக்கிக் கொண்டனர்.இந்திய நதிகள் இணைப்பு கோரிக்கைஇதே நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறைப் போக்க! விவசாயத்தை காக்க! இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோஷமும் புதுப்புது அரசியல்வாதிகளாளும், அறிவாளிகளாலும் எழுப்பப்பட்டது. இவர்களது சிந்தனை நியாயமானதாக இருந்தாலும், நடைமுறையில் இது சாத்தியமா? என்ற வினாவும் எழத்தான் செய்தது! ஏனெனில் அநேகமாக இந்திய நாட்டில் உள்ள நதிகளையெல்லாம் இணைக்க வேண்டும் என்றுச் சொன்னால் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் செலவாகும்! இவ்வளவு பெரிய செல்வாதாரம் நம்நாட்டில் தற்போது இல்லை! இதற்காக அந்நியர்களிடம் கையேந்தவேண்டிய நிலை ஏற்படும் - மீண்டும் வெளிநாட்டு கொள்ளைக்கும், கட்டுப்பாட்டுக்கும் இந்த நதிகள் போகும் என்பது ஒரு வாதம்! இது மட்டுமா? ஒவ்வொரு மாநிலத்திலும் ஓடும் நதிகளின் போக்கு, புவியியல் அமைப்பு ஏற்ற இறக்கங்கள், விதவிதமான நீரினங்களின் புழக்கம், தண்ணீரை சிராக கொண்டுச் செல்லத் தேவைப்படும் கனரக ஜெனரேட்டர்கள் - இதற்காக செலவிடவேண்டிய மின்சாரம், என... இன்னும் பல விஷயங்கள் கூறப்பட்டது!இதில் எது சரி! தவறு என ஆராய்ந்து முடிவு காணவேண்டியது அவசியம் என்றாலும், இந்திய நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தையும், கிடைத்துள்ள மழை நீரையும் முறையாக சேமிப்பதற்கோ-அவற்றையெல்லாம் முறைப்படுத்துவதற்காக தமிழகத்தில் மாறி, மாறி ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்? என்பதே நம் கேள்வி! தமிழகத்தின் பண்பாடு பேசுபவர்கள், ஏரியைத் தூர் வாருபவர்கள் எல்லாம் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்டது கல்லணை என்று சொன்னால் போதுமா? தற்போது என்ன நிலைமை! தமிழகத்திலும், வீடுகளில் மழைநீர் சேமிக்கச் சொன்னவர்கள், நாட்டில் சேமிக்க என்ன செய்தார்கள்?தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் தீர தேவை உண்மையான தண்ணீர் கொள்கை! அரசும் - ஆட்சியாளர்களும் - அரசியல்வாதிகளும் உணருவார்களா?நம்முடைய சிவில் சமூகம்தான் இதற்குத் தீர்வு காண வேண்டும்.

1 comment:

முத்து(தமிழினி) said...

தேசிய நதி நீர் கொள்கை பற்றி, முதல்ல இந்தியன் அப்புறம் தான் தமிழன் என்றெல்லாம வாய்கிழிய பேசும்தேசியம் பேசுபவர்கள் ஏதாவது பண்ணலாம்.