November 24, 2005

சாய்பாபா 80வது பிறந்தநாள் கொண்டாட்டம்
உணர்த்துவது என்ன
?

ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தி சாய்பாபாவின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டம் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நம்மூர் தினமலர் பத்திரிகை இச்செய்தியினை இரண்டு பக்கங்களில் பல வண்ணப்படங்களுடன் வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் டெண்டுல்கர், ஹைடெக் முதலமைச்சர் (முன்னாள்) சந்திரபாபு நாயுடு ஆகியோர் அவரிடம் ஆசிபெற்றதையும் அழகாக வெளியிட்டுள்ளது. பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் சிறப்பாக இருந்தாலும், சிந்தித்தால் சிறப்பாக இல்லை.புட்டபர்த்தி சாய்பாபா அமர்ந்திருந்த இருக்கையைப் பார்த்தாலே இது புரியும்! அநேகமாக தங்கம் - வெள்ளி போன்ற உயர்ரக உலோகங்களால் வடிவமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தார். இது மட்டுமே பல லட்சம் மதிப்பிருக்கும். அவருடன் இருக்கக்கூடிய சிஷ்யர்களைப் பார்த்தால், கோர்ட், ஷூட் போட்டுக் கொண்டு மிக கவர்ச்சிகரமாக, ஏதோ நாஸா விஞ்ஞானிகளும், மைக்ரோசாப்டில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர்களும், பல்கலைக்கழக இளம் பேராசிரியர்களும் அவருக்கு சிஷ்யர்களாக வந்துவிட்டார்களோ எனத் தோன்றுகிறது.
மொத்தத்தில் சாப்பாபாவின் மாயைகளில் இதுவும் ஒரு மாயைதான். சாதாரண ஏழை - நடுத்தர - அப்பாவி மக்களின் நம்பிக்கைகளை மூலதனமாக்கிக் கொண்டு மதம் - பக்தி என்ற போர்வையில் ஒரு மிக மெல்லிய நூலிழையிலான வலுவான அதிகார மையத்தை கட்டியமைப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.சாமியார்கள் என்றுச் சொன்னால் மக்களின் மனத் திரைக்குள் இன்றைக்கும் பொந்திருப்பது, மிக எளிமையாக காட்சியளித்த, எதன் மீதும் உண்மையாகவே பற்றவர்களாக இருந்த வள்ளலார், பட்டினத்தார் போன்றவர்களையும், பல சித்தர்களையும் (இவர்கள் உண்மையில் சாமியார்கள் அல்ல; மருத்துவம் உட்பட, சமூக முன்னோற்றத்திற்காக இருந்தவர்கள்) தான். ஆனால், இதற்கு மாறாக சங்கராச்சாரியார், சாய்பாபா, ஆனந்தமாயி... போன்றவர்கள் இதற்கு நேர்மாறாக பல கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புகளைக் கொண்ட - நிறுவனமயமான மடமாகவும், அறக்கட்டளைகளை அமைத்துக் கொண்டு, செய்தி ஊடகங்களையும், அரசியல்வாதிகள் - அதிகாரிகள் போன்றவர்களை பக்தியின் பெயரால் ஈர்த்துக் கொண்டு செயல்படுவது சமூகத்தில் உள்ள அடித்தட்டு - நடுத்தர மக்களின் வாழ்க்கை மேம்படவா?சாய்பாபா ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்தார்; அப்படி ஒரு புகைப்படமும் பிரசுரமாய் இருந்தது. என்ன நிலைமை என்றால், மிகவும் நொடிந்துபோன நிலையில், வாழ்க்கையை இழந்து விட்டநிலையில் உள்ள முதியவர் அன்று ஒரு நாள் மட்டும் நல்ல சாப்பாடு சாப்பிட்டார் என்பதைத் தவிர அவரது வாழ்க்கைத்தரம் அடுத்த நொடியோ அதாளா - பாதாளத்திற்கு சென்று விடும். இவர்களது மாயை தத்துவம் இதுபோன்ற மக்களை கரைசேர்ப்பதில்லை என்பதே உண்மை.சமீபத்தில் நான் படித்த ஒன்றையும் இங்கு நினைவூட்டி முடித்துக் கொள்கிறோன். அருட்திரு வள்ளலார் அவர்கள் “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” எனக் கூறினார். இது சமூகத்தில் உள்ள ஏழ்மையை கண்டு இரங்கி எழுந்த மனக்குமுறலாகவே கருதுகிறோம். இதற்கு ஒருவர் பதிலளித்துள்ளார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினால் போதாது? அதை எப்படி வாழ்விப்பது என்பதுதான் பிரச்சினை!சங்கராச்சாரியார், சாய்பாபா, அமிர்தானந்தமயி, மேல்மருவத்தூர் அம்மா... இவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியுமா!மக்களது வாழ்க்கையை, நல்ல சமூகத்தை உருவாக்கிட கரங்கள் இணைவோம் - மாயையில் இருந்து விடுவிப்போம்!

2 comments:

முத்துகுமரன் said...

வழிபாடுகள் நம்பிக்கைகள் என்பது ஒரு தனிமனிதனின் சுதந்திரம் என்ற அளவில் இது போன்ற ஆன்மீகவாதிகளை வணங்குபவர்களை உணர்வுகளை மதிக்கிறேன்...

ஆனால் சாய்பாபா, சங்கராச்சாரி, அமிதானந்தமாயி. மேல்மருவத்தூர் பங்காரு போன்றவர்கள் எல்லாம் இன்று ஆன்மீக சந்தையில் வியாபார ரீதியான வெற்றியாளர்களாக உலா வருகிறார்கள்...

துறவறம் பேணுவதாய் கூறிக்கொண்டு உலகின் அத்துனை சுகங்களையும் அனுபவித்து இவர்கள் போடும் அரிதாரங்கள் எத்தனை எத்தனை... இவர்கள் செய்யும் உதவிகளை மறுக்க முடியாது என்றாலும் அது உதவியாக இல்லாமல் தங்கள் வியாபார எல்லைகளை விரிவாக்க அவர்கள் போடும் முதலீடுகள்தான் என்பதை சமீப கால நிகழ்வுகள் உணர்த்தி வருகின்றன.

இறைவனை அடைய இடைத் தரகர்கள் தேவையில்லை. ஆனால் இந்த இடைத்தரகர்களையே இறைவனாக நினைத்து இரையாகிப்போகின்றனர் பலர்....

சாய்பாவை ஒருவன் தாக்க வந்த போது காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று சொல்லிக் கொண்டே ஓடினாராம். இவர்கள்தான் பக்தர்களை காப்பாற்றும் நவீன கடவுள்கள்.

சங்கராச்சாரி - சொல்லவே வேண்டாம். ஒரு ரவுடி, ஒரு கிரிமினல் எப்படி வழக்குகளை எதிர்நோக்குவானோ அதை போன்றுதான் இவரும் கையாள்கிறார். சத்தியத்தின் மீது நம்பிக்கை இருந்தால் அப்படிச் செய்திருக்க மாட்டார். தன் கறைகளை கலைந்த பின்பே வெளியே வந்திருப்பார். நீதி விசாரணைகளிலிருந்து தப்பிக்க சதுர்மாஸ்ய விரதம் என்ற பெயரில் நாகரீகத் தலைமறைவு....

குடிசைகளில் புழங்கியவர்கள் இன்று கோடிகளில் புரள்கிறார்கள்.விசாரிக்க வேண்டியவர்கள் அவர்கள் காலடியில். இதுதான் இந்தியாவின் விநோதம்.

மக்கள் தங்களை மறந்து விடாமல் இருக்க,
தங்கள் மீது அனுதாபம் வர அவ்வப்போது கொலை முயற்சி நாடகங்கள், பிறகு அவர்களுக்கு மன்னிப்பு வழங்கும் புனிதர் வேடங்கள் என திட்டமிட்டுத் தெளிவாகவே இயங்குகிறார்கள்...

பத்திரிக்கைகள், ஊடகங்கள் எல்லாம் காசுக்கு ''-'' தின்னும் கூட்டங்களாக இருப்பதொன்றூம் வியப்பில்லை....

உங்களிடமிருந்து சிந்திக்கக்கூடிய பதிவுகள் தொடர்ந்து வருவது மகிழ்ச்சியைத் தருகிறது.

முத்து(தமிழினி) said...

பெரிய சிந்தனையாளர்கள் என்ற போர்வையில் அடுத்தவர்களை கிண்டலடித்து இங்கு வாந்தியெடுக்கும் சிலர் இந்த கூத்துக்களை கண்டும் காணாமல் விட்டுவிடுவர். காரணம்
பாபா தான் சொல்லணும்.

பல வித அருவருக்கத்தக்க குற்றச்சாட்டெல்லாம் இருக்கிற ஒரு ஆள் இவ்வளவு இன்பூலியன்ஸ் பெற்றிருப்பது கொடுமை.