மனித உரிமையும் - மனிதவள மேம்பாடும்
மனித உரிமை குறித்து சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில், ‘தேசிய மனித உரிமை கமிஷன்’ தலைவர் ஏ.எ°. ஆனந்த் பேசும் போது, உலகிலேயே முதன் முதலில் “மனித உரிமை தத்துவம்” தோன்றியது இந்தியாவில்தான் என்றும், சுதந்திரப் போராட்டத்தின் போதே லோகமான்ய திலகர் மனித உரிமைகள் குறித்து குரலெழுப்பியதையும் குறிப்பிட்டு பெருமிதடைந்தள்ளனர்.
அத்துடன் மனித உரிமைகள் என்றால், எழுத்துரிமை, பேச்சுரிமை, பாலின சமத்துவம்... போன்றவைகள் மட்டுமல்ல; “நம் நாட்டில் கோடிக்கணக்கானவர்கள் வறுமையில் வாடுகின்றனர். இதுவும் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளதோடு, உலகில் உள்ள 40 கோடி ஏழைகளின் மொத்த வருமானம் 500 பணக்காரர்களின் வருமானமாக உள்ளது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இது இன்றைய உலகமய உலகில் நிலவும் ஏற்றத் தாழ்வை மிகத் தெளிவாக அம்பலப் படுத்துவதாக உள்ளது.
சமீபத்தில் ஐ.நா. சபை “மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2005”-யை வெளியிட்டது. இதில் 177 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஒவ்வொரு நாட்டு மக்களின் மனித வளத்தையும், எட்ட வேண்டிய இலக்கையும் சுட்டிக்காட்டி வருகிறது. இந்த வரிசையில் நம்முடைய இந்திய நாடு 127வது இடத்தில் இருக்கிறது. இதிலிருந்தே நம்முடைய நாட்டின் மனிதவளத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளலாம். நமக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய இலங்கையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இனச்சண்டைகள் நடந்து வருவதை நாம் அறிவோம். இருப்பினும் கூட மனிதவளத்தில் நம்மை விட அவர்கள் முன்னிற்கின்றனர்; இலங்கை இப்பட்டியலில் 93வது இடத்தை பிடித்துள்ளது.‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பிரச்சாரம் செய்த அத்வானி, வாஜ்பாய், மோடி வகையறாக்கள் நமக்கு பின்னால் 135வது இடத்தில் பாகி°தானும், 139வது இடத்தில் வங்காளதேசமும் இருப்பதைக் கண்டு திருப்தியடையலாம்.
வருங்கால மன்னர்களின் இன்றைய நிலைஅறிக்கை மிக முக்கியமாக சுட்டிக்காட்டியுள்ளது இந்திய குழந்தைகளின் இன்றைய நிலை குறித்தே! “குழந்தை பிறப்பு - இறப்பு விகிதம் மிக கவலையளிப்பதாக உள்ளது; மில்லினிய இலக்கில் இருந்து இந்தியா விலகியிருக்கிறது.
இந்தியாவின் தெற்கத்திய நகரங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி ஓங்கியிருக்கிறது; ஆனால், 11 குழந்தைகளில் 1 குழந்தை அதன் 5 வயதை எட்டுவதற்குள் இறக்கிறது. இதற்கு ஊட்டச்சத்துக் குறைவு, சொற்பத் தொகை ஒதுக்கீடு, குறைந்த தொழில் நுட்பம் போன்றவைகளே! மேலும் 4 பெண் குழந்தைகளில் 1 குழந்தைக்கும், 10 ஆண் குழந்தைகளில் 1 ஒரு குழந்தைக்கும் ஆரம்பக் கல்வி கிடைப்பதில்லை. மொத்தத்தில் இந்திய குழந்தைகளில் 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர்.”
இது வெறும் வெற்று கோஷமல்ல! இந்திய நாட்டின் உயிர் நாடி பிரச்சினை!!குழந்தை இறப்பு உண்மை நிலை!“உலகில் குழந்தை இறப்பில் 5 வது இடத்தை வகிக்கும் இந்தியாவில், ஆண்டுதோறும் 25 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.” மேலோட்டமாக படிப்பவர்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கும்! இது சரியாக இருக்குமா என்ற கேள்விகூட எழும்! உண்மை இதுதான்!சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று வரும் குழந்தை இறப்புச் சம்பவங்களை ‘டெக்கான் க்கிரானிக்க போன்ற ஒரு சில ஆங்கிலப் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள பழங்குடி மக்கள் வசிக்கக்கூடிய விதர்பா மாவட்டங்களில், குறிப்பாக அமராவதி, நாசிப், தேண், நான்-தர்பர், காச்சிரோலி ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் கடந்த ஏப்ரல் - ஜூலை, 2005 மாதங்களில் மட்டும் 2675 குழந்தைகள் இறந்துள்ளன. இந்த புள்ளி விவரம் கூட மகாராஷ்டிர அரசு கொடுத்ததே.சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தில் திரு. கிரண் பதுக்கூர் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கில் மேற்கண்ட குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மாவட்டங்களில் 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் இறந்துள்ளன.
மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் எந்தவிதமான அக்கறையுமின்றி இருக்கின்றன என்று தொடுத்த வழக்கின் மூலம் இது அம்பலத்திற்கு வந்துள்ளது. இது தவிர 33,000 குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் சூம்பி, வயதிற்கேற்ற எடையின்றி சோமாலியாவில் கண்ட எலும்புக்கூடு குழந்தைகளாகவே இருக்கின்றனர். இதில் 16,000 குழந்தைகள் இறக்கும் தருவாயில் இருக்கின்றன.
இக்குழந்தைகளின் படத்தை காணும் எந்தஒரு மனித இதயமும் திடுக்கிடாமல் இருக்க முடியும் நம்முடைய முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ இரக்கமற்ற ஆட்சியாளர்களைத் தவிர.மகாராஷ்டிர அரசு சமர்ப்பித்த புள்ளிவிவரங்களின் படியே 1085 குழந்தைகள் முதல் பிறந்தநாளை எட்டுவதற்குள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டன. 1590 குழந்தைகள் 6 வயதைக்கூட எட்டவில்லை.நம்முடைய தமிழ் பத்திரிகை உலகம் இப்பிரச்சினை குறித்து பெரும் மவுனமே சாதித்தது. பாகி°தான் தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவல் என்று ஏதாவது ஒரு உளறுவாயன் கூறினால் போதும், அது குறித்து பக்கத்திற்கு பக்கம் வண்ணப்படங்களுடன் விளக்கும் பத்திரிகை உலகம், நம்முடைய இந்திய குழந்தைகளின் சுவாசத்தை நிறுத்தும் அரசு பயங்கரவாதத்தை குறித்து மவுனமே சாதிக்கிறது.
மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் கவலையெல்லாம் மும்பை பங்குச் சந்தை சென் செக்° 8000 புள்ளிகள் உயர்ந்துள்ளதும், அதை கீழே விழாமல் பார்த்துக் கொள்ளும் ‘வாட்ச் டாக்’ ஆக செயல்படுவதுமே!மகாராஷ்டிர சம்பவம் ஏதோ திடீரென்று முளைத்த சம்பவமல்ல; கடந்த 5 ஆண்டுகாலமாகவே இதுபோன்ற சம்பங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சமூக ஆர்வலர்கள் இதற்கெதிராக தொடர்ந்து குரலெழுப்பியும் வருகின்னர். ஏன் அமெரிக்க ஆதரவு பத்திரிக்கையான ‘டைம்’ இதழ் கூட டிசம்பர் 2004இல் இது குறித்து ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில் ‘இந்தியாவில் 61,000 மில்லினிய பணக்காரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையில் புதியதாக 11,000 பணக்காரர்கள் இப்பட்டியலில் சேர்ந்துள்ளனர். அதே சமயம் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானம் பெறுவர்கள் 30 கோடி பேர்’ என சுட்டிக்காட்டியுள்ளது. இதுதான் உலகமயமாக்கலின் உண்மையான வெற்றி!பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை போகவோ!நாங்கள் சாகவோ! என்ற பாரதியின் ஆவேசக் கனல் நெஞ்சத்தில் முட்டாமலில்லை. வேலைவாய்ப்பற்ற வளர்ச்சிமனிதவள மேம்பாட்டு அறிக்கையில் அதிகரித்து வரும் வேலையின்மை குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது. “குறிப்பாக கிராமப்புற வேலையின்மை என்பது கடந்த காலத்தை விட தற்போது அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. விவசாய உற்பத்தி என்பது ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்து வருகிறது. அதே சமயம் விவசாய கூலியில் தேக்க நிலை நிலவுகிறது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் “வேலைவாய்ப்பற்ற” வளர்ச்சி நிலவுகிறது. 1980, 1990களில் தேசிய அளவில் ஒரு சதவீத வளர்ச்சி இருந்தால், அது 3 சதவீத வேலைவாய்ப்பை உருவாக்கியது.”“குறிப்பாக பாலின (ஆண் - பெண்) ஏற்றத்தாழ்வு என்பது அதிகரித்து வருகிறது. அதேபோல் மாநிலங்களுக்குள் ஏற்றத்தாழ்வு என்பது நிலவுகிறது.” என்று இந்தியாவின் இன்றைய நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2005.நாடு முழுவதிலும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவதை பல்வேறு ஊடகங்கள் படம் பிடித்து வருகின்றன. அதே போல் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு பிழைப்பைத் தேடி விவசாயிகள் இடம் பெயர்வது என்பது அன்றாட நிகழ்வாகி விட்டது.
பாலின ஏற்றத்தாழ்வு குறித்து கூறும் அறிக்கை, “ஒரு வயது முதல் ஐந்து வரை உள்ள குழந்தை இறப்புகளில் 50 சதவீதத்திற்கும் மேல் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது” மனிதவளத்தை எவ்வாறு அளக்கிறார்கள் என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச அளவில் “உயிர் வாழ்தல், கல்வி, வருமானம், சுகாதாரம், சொத்து, வர்த்தகம், அறிவு” என அந்தந்த நாடுகளில் பல்வேறு அமைப்புகள் மேற்கொள்ளும் கருத்தாய்வுகளை வைத்து சர்வதேச தர அடிப்படையில்தான் இந்த மனிதவள மேம்பாட்டு அறிக்கையினை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்கிறது.இதன்படி 127வது இடத்தில் உள்ள இந்திய மக்களின் உயிர் வாழ்தல் காலம் 64 ஆண்டுகள் மட்டுமே, அதே சமயம் சோசலிச நாடுகளான கியூபாவில் இது 87 ஆண்டுகளாக உள்ளதோடு, மனிதவள மேம்பாட்டில் 52வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல் சீனாவில் 78 ஆண்டுகளாக உள்ளதோடு, மனித வளத்தில் 85வது இடத்தைப் பிடித்துள்ளது.
மக்கள் தொகையில் உலகிலேயே சோசலிச சீனா முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வியட்நாமில் 76 ஆண்டுகளாகவும், மனித வளத்தில் 108வது இடத்திலும் உள்ளது. மனிதவளத்தில் 93வது இடத்தில் உள்ள இலங்கை உயிர் வாழ்தலுக்கு 82 ஆண்டுகளாக உள்ளது.மேற்கண்ட விவரத்தின் மூலம் இந்திய நாட்டில் மனித உயிர் வாழ்தலுக்கான உத்திரவாதம் என்பது மிக குறைந்த ஆண்டுகளாக உள்ளதை அறிய முடிகிறது.
மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான நிலம், உணவு, வேலை ஆகியவற்றை உத்திரவாதம் செய்வதன் மூலம்தான் மனிதவளத்தை உண்மையிலேயே மேம்படுத்த முடியும். சோசலிச நாடுகளில் மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. நமது நாட்டில் செல்வந்தர்களை உற்பத்தி செய்வதிலும், அதில் உலக நாடுகளோடு போட்டியிடுவதற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. உலக பணக்காரர்கள் குறித்து பட்டியலிடும் “போர்ப்°” 2003ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் 5 இந்தியர்களின் சொத்து மதிப்பு 24.8 பில்லியன் டாலர்கள். (1,24,000 கோடி ரூபாய்) இது பிரிட்டனில் உள்ள 5 கோட்டீ°வரர்களின் சொத்து மதிப்பை விட அதிகம். அவர்களது சொத்து மதிப்பு 24.2 பில்லியன் டாலர் (1,21,000 கோடி ரூபாய்).இந்தியா 2020ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய இந்தியா 2020 புத்தகம் இந்திய நாட்டில் மிக புகழ்பெற்றது. படித்த இளம் தலைமுறையினரிடைய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.
“இந்தியா ஒளிர்கிறது” என்று பிரச்சாரம் செய்தவர்கள், “விஷன் 2020”, “வல்லரசு இந்தியா” என்று பல விதங்களில் மீடியாக்கள் மூலம் பெரும் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டாலும், உண்மையில் இவர்களது நலன் யாருக்கானது என்பதை “ஐ.நா. மனிதவள மேம்பாட்டு” அறிக்கையே அம்பலப்படுத்தியுள்ளது.
இவர்களது திட்டங்கள், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற மாயவலைகள் அனைத்தும் பிரம்மையை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்தியா நாட்டில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கையை நாள்தோறும் அதிகரித்து வருகிறது என்பதே உண்மை!
ஏன்! சுதந்திரம் பெற்று 58 ஆண்டுகள் முடிந்தும் கூட இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆரம்ப கல்வி என்ற இலக்கை கூட எட்டவில்லை. “சமீபத்தில் பேராசிரியர் அசக் அஹமது அவர்கள் எழுதிய கட்டுரையொன்றில் இந்திய நாட்டில் ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்பத்தான் கல்வித் திட்டங்கள் அமைகிறது. உயர் கல்வியில் அரசு செலுத்தக்கூடிய பெருங்கவனத்தை, மிகச் சிறிய அளவில் கூட ஆரம்பக் கல்வியில் செலுத்தவில்லை” என்று அம்பலப்படுத்தியிருந்தார். இன்றைக்கும் மூன்றில் இரண்டு பகுதியினர் எழுத்தறிவில்லாத சமூகமாக இந்தியச் சமூகம் இருக்கிறது என்பதை கண்டு வெட்கப்படுவார்களா இந்திய ஆட்சியாளர்கள்.
புதிய சமூகம் படைத்திட - நம் மக்கள் ஆரோக்கியமான வாழ்வு பெற்றிட - முதலில் தேவை விவாதங்கள், நாம் எந்த திசையை நோக்கிச் செல்ல வேண்டும்? படித்தவர்கள் - உயர் கல்வியைக் பெற்றுள்ளவர்கள் - சமூகத்தில் நல்ல அந்த°தில் உள்ளவர்கள் என்று கூறிக் கொள்ளும் நாம் “சமூகத்தில் நிலவும் இத்தகைய ஏற்றத் தாழ்வான நிலையை” மாற்றிட கரங்கள் இணைவோம்! மாற்றங்களை நோக்கி மாற்றுப் பாதையமைப்போம்!