Showing posts with label சங்பரிவாரம். Show all posts
Showing posts with label சங்பரிவாரம். Show all posts

November 27, 2008

தேசத்தின் முதல் எதிரி பயங்கரவாதம்!



உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் கடந்த 60 ஆண்டு காலமாக தேசத்திற்கே சவாலாக விளங்கும் பிரச்சனைகள் எழாமல் இருப்பதும் (காஷ்மீர் விதிவிலக்கு), பாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு வருவதும், பொதுவாக அமைதியான முறையில் நமது மக்களின் வாழ்க்கை முறை அமைந்துள்ளதும் நமது நாட்டின் பலத்திற்கு சான்றாகும்.

மேலும் இந்தியாவை உலக மக்கள் பார்ப்பது காந்தியின் கண்ணாடி வழியாகத்தான். அதாவது இந்திய தேசம் பெளத்த தத்துவத்தை மட்டும் உலகிற்கு வழங்கவில்லை. அது அகிம்சையை போதித்த காந்திய போராட்ட முறைகளையும் உலகிற்கு அளித்துள்ளது. (இது குறித்து சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்)பல இனங்கள், மொழிகள், மாநிலங்கள், சாதிகள் என பிரிந்திருந்தாலும் இந்திய தேசம் ஒரே மனிதனாக எழுந்து நிற்பது இன்றைக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய நாடு சிறிது சிறிதாக பயங்கரவாதிகளின் பிடிக்குள் செல்கிறதோ என்ற அச்சம் மக்கள் மனதை ஆட்டிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நேற்றைய தினம் இதுவரை இல்லாத அளவிற்கு பயங்கரவாதிகள் மும்பை நகரத்தையே தங்களது பிடிக்குள் கொண்டு வந்து விட்டார் போன்ற பயங்கரவமான - மிருகத்தனமான - இரத்தவெறிப்பிடித்த பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதுவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குள் இயங்கக் கூடிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களான தாஜ், ஒபராய்... போன்ற ஓட்டல்களில் பயங்கரவாதிகள் தங்களது கைக்குள் கொண்டு வந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுத் தள்ளியுள்ளனர்.

அது மட்டுமின்றி மும்பை இரயில்வே நிலையத்திற்குள் சென்று அங்கும் அப்பாவி பயணிகளை சுட்டுத் தள்ளியுள்ளனர். எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி இந்திய மக்கள் மீது மாபெரும் மறைமுகப்போரை இந்த பயங்கரவாதிகள் தொடுத்துள்ளதைத்தான் இது காட்டுகிறது. மேலும் இந்த பயங்கரவாதிகள் அடுத்தடுத்த இடத்திற்கு போலீஸ் ஜீப்பிலேயே தப்பியுள்ளதாக கூறுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தொடர்ந்து இதுபோல் 7 இடங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதோடு, 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு இடத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வந்துள்ளது. அதுவும் பயங்கரவாதிகள் உள்நாட்டிலிருந்தும் - வெளிநாட்டிலிருந்தும் பயிற்சி எடுத்துக் கொண்டு திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருவதை அவ்வப்போது நமது காவல்துறை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக சமீபத்தில்தான் வி.எச்.பி.ஐயச் சார்ந்த இந்து பயங்கரவாத அமைப்பு எப்படி மலேகானில் குண்டு வைத்தது என்பதை மகாராஷ்டிரா போலீஸ் வெளிப்படுத்தியது. அதுவும் இந்த பயங்கரவாதிகள் சாதுவின் வடிவமாக காட்சியளித்து நாட்டை ரணகளமாக்கியவர்கள் என்பதையும் அம்பலப்படுத்தியது. அத்துடன் இந்த இந்து பயங்கரவாதிகளுக்கு துணையாக இராணுவத்தில் உள்ளவர்கள் எப்படி ஒத்துழைத்தார்கள் என்பதையும், இந்து பயங்கரவாதிகளின் மிலிட்டரி பள்ளியில் பயிற்சி பெற்றவர்களின் செயல்களையும் சமீபத்தில்தான் நமது மீடியாக்களும் - அரசும் வெளிப்படுத்தி வந்தது. இதுவரை எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தை மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்த இந்தியா தற்போது உள்நாட்டிலேயே காவி உடையில் பயங்கரவாதிகள் திரிவதை பார்க்க முடிந்தது. இந்த விசாரணைகளை இந்திய மகக்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில்தான் தற்போதைய மும்பை தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்த மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் எந்த மதத்தை பின்பற்றுபவராக இருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு கடுமையான தண்டனைகளை அளிக்க வேண்டும். அத்துடன் பயங்கரவாதம் இந்திய மண்ணில் வேறுன்றுவதற்கான அரசியல் காரணங்களையும் இந்திய அரசு ஆராய வேண்டும். சகிப்புத் தன்மையில்லாமல் - இந்திய மக்களிடையே மதக் காழ்ப்புணர்சிகளை தூண்டி விடும் மதவாத அமைப்புகள் அனைத்தையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். அவற்றை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக பாபர் மசூதி இடிப்பில் குற்றவாளிப் பட்டியலில் இருந்து தப்பியுள்ள அத்வானி உட்பட, குஜராத்தில் நடைபெற்ற மதப்பாசிச வன்முறைச் செயல்களுக்கு மோடி உட்பட தொடர்புள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய நாட்டில் சிறுபான்மை - பெரும்பான்மை மக்கள் ஒன்றுபட்ட சகோதரர்களாக வாழ்வதை உத்திரவாதப்படுத்துவது முதன்மையான ஒன்றாக மாறியுள்ளது. மேலும் ஏகாதிபத்திய சதியுடன் - வெளிநாட்டு பயங்கரவாதிகள் நடத்தும் இதுபோன்ற வெறியாட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு போராட வேண்டும். குறிப்பாக நமது உளவுத்துறை இன்னும் பலப்படுத்த வேண்டும். தற்போதைய மும்பை தாக்குதலில் உளவுத்துறை இப்படி அப்பாவித்தனமாக செயல்பட்டு நமது மக்கள் பலி கொள்வதற்கு காரணமாகி விட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது. மத்திய காங்கிரஸ் அரசு இதில் அரசியல் சித்து விளையாட்டுக்களில் எல்லாம் ஈடுபடாமல் நமது தேசத்தில் பாதுகாப்பை - குறிப்பாக உள்நாட்டு பாதுகாப்பு பலப்படுத்த அனைவரின் ஒத்துழைப்பை நாட வேண்டும். இது குறித்து தேசிய அளவில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு அதன் அடிப்படையில் முடிவெடுத்து நேர்மையாக செயலாற்ற வேண்டும். பயங்கரவாதிகளின் பெயர்கள் வெவ்வேறு வடிவங்களில் இருக்கலாம். ஆனால் பயங்கரவாதம் என்பது உலக மக்களின் முதல் எதிரி! அது எந்த வடிவில் வந்தாலும் அதனை முறியடிக்க வேண்டியது இந்திய மக்களின் கடமை!

September 22, 2007

பா.ஜ.க.வின் சுரண்டல் ஆயுதமே ராமர்!


அயோத்தியில் ராமருக்கு கோயில் இது நேற்றைய அரசியல் முழக்கம் பா.ஜ.க.வுக்கு. உத்திரபிரதேச மக்கள் ராம பக்தர்களாக இருந்தாலும் பா.ஜ.க.வின் பித்தர்களாக இருக்க விரும்பவில்லை. ராமரை பா.ஜ.க.விடமிருந்து காப்பாற்றி விட்டனர். அதனால்தான் அவர்களை ஆட்சியில் இருந்தும் ஓரம் கட்டி விட்டனர். ஏன் பா.ஜ.க.வை நான்காவது இடத்திற்கே தள்ளி விட்டனர். அயோத்தி ராமர் கைவிட்டால் என்ன?
தென்னக இராமர் இருக்கிறால் அல்லவா? அதனால்தான் இன்றைக்கு பா.ஜ.க.வின் புதிய அரசியல் முழக்கமாக ராமர் பாலத்தை முன்வைத்து தேசத்தில் பெரும் மதக்கலவரத்தை தூண்டும் உள்நோக்கத்தோடு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையிலேதான் மாற்றுக் கருத்தை தெரிவித்த தி.மு.க. தலைவர் கலைஞரின் அன்பு மகள் செல்வியின் வீட்டில் தாக்குதலை தொட்டுள்ளார்கள். பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதலை தொடுத்துள்ளனர் மதவெறி சங்பரிவார கும்பல். மேலும் தமிழகத்திற்கு வந்து கொண்டிருந்த பேருந்தை மறித்து தீ வைத்து கொளுத்தி இரண்டு பேரை கொன்றுள்ளனர் இந்த இந்துத்துவவாதிகள்.
தற்போது வி.எச்.பி. ராம்விலாஸ் வேதாந்தி முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்றும்ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும் - நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.
ராமர் பாலம் விசயத்தை பயன்படுத்தி எப்படியும் ஆட்சிக் கட்டிலை பிடிக்க வேண்டும் என்ற வெறியோடு இந்த காட்டுமிராண்டி கும்பல் அலைந்து கொண்டிருக்கிறது. இதற்காக மாற்றுக் கருத்துத் தெரிவிப்பவர்களுக்கு எதிராகவும் பாசிச தாக்குதல் தொடுத்திடவும் சங் பரிவாரம் தயாராகி வருவதைத்தான் காட்டுகிறது. இதனை நாம் மிக எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
மகாத்மா காந்தியை கொன்ற கோட்ஷேவின் வாரிசுகள் இவர்கள் என்பதை நாம் மறக்க கூடாது. மேலும் காமராஜருக்கு எதிராகவும் - அவரை கொல்வதற்கும் முயன்ற கும்பல்தான் இந்த சங்பவரிவார கும்பல்.
எனவே மதச்சார்பற்ற கட்சிகள் - ஜனநாக சக்திகள் - இடதுசாரிகள் என அனைத்து தரப்பும் மிகவும் எச்சரிக்கையோடு செயல்பட்டு இந்த காட்டுமிராண்டி கும்பலின் அனைத்துவிதமான சதிகளையும் முறியடிப்பதோடு - இவர்களது இந்துத்துவ தத்துவத்தை இந்த தேசத்திலிருந்தே விரட்டியடிக்க வேண்டியுள்ளது.
இந்த காட்டுமிராண்டிகள் இன்றைக்கு விடுத்துள்ள அறிக்கையில் ராமராஜ்யத்தை அமைப்பதாக கனவு கண்ட மகாத்மாவின் உணர்வுகளை கூட மதிக்கவில்லை என்று வேஷம் போட்டுள்ளனர்.
மகாத்மா கனவு கண்ட ராம ராஜ்யமும் - பா.ஜ.க. - சங்பரிவாரத்தின் ராம ராஜ்ய கனவும் ஒன்றா? இவர்கள் அகன்ட பாரதம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் முதல் பாகிஸ்தான் வரை அனைத்தையும் ஆக்கிரமிக்கும் நோக்கோடு செயல்படும் வெறிகொண்ட காட்டுமிராண்டி கும்பலே இந்த சங்பரிவார கும்பல் என்பதை நாம் மறப்பதற்கு இல்லை.
மகாத்மா காந்தி அவர்கள் இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிக்கப்படுவதற்கு எதிராக உறுதியாக போராடியவர். இந்துக்களும் - இசுலாமியர்களும் இந்தியத் தாயின் ஒரே பிள்ளைகள் என்று வலியுறுத்தியவர். மதனினை மனிதன் மதிக்க வேண்டும் என்ற உன்னதமான சாத்வீக தத்துவ நெறியோடு - அகிம்சையை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர். இந்த சங்பரிவாரங்களின் நெறி எது? அடிப்படை கோட்பாடு எது? இந்த அமைப்பு தோன்றியது முதல் கொலை வெறியையும் - மதவெறியையும் மட்டுமே தனது நோக்கமாக கொண்டு ஆதிக்க வெறியோடு செயல்படும் சங்பரிவாரம் ராம ராஜ்யம் குறித்து பேசுவது வெட்கக் கேடானது.
மதச்சார்பற்ற இந்து பக்தர்கள் - கடவுள் பக்தி கொண்டவர்கள் ராமரை தங்களுடைய சுரண்டல் கேடயமாக பயன்படுத்தும் இந்த மதவெறியர்களிடம் இருந்து மீட்க வேண்டிய தருணம் வந்து விட்டது. கோடிக்கணக்கான இந்து பக்தர்கள் - மசுதிக்கும் - தேவலாயத்திற்கும் சகோதர உணர்வோடு - உண்மையான பக்தியோடு நாள்தோறும் சென்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்! இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் இந்த காட்டுமிராண்டிகளுக்கு எதிராக ஒரே குரலில் இந்திய மக்கள் எழுந்து நிற்க வேண்டிய சரியான தருணம் இதுவே!

September 21, 2007

பா.ஜ.க.வின் அமெரிக்க அடிமைத்தனமும்! கலாச்சார பாசிசமும்!!


பா.ஜ.க. தேசிய செயல்குழு கூட்டம் மத்திய பிரதேசத்தில் உள்ள ராஜா போஜ் நகரில் இன்று துவங்கியது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க.விற்குள் ஏற்பட்டுள்ள தலைமை நெருக்கடி மற்றும் அஸ்தமிக்கும் அதன் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. கூட்டத்தில் உரையாற்றிய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தங்களது அமெரிக்க அடிவருடித்தனத்தையும், பொய்யையும், புளுகையும் கொஞ்சம் கூட கூசாமல் உரையாற்றி சங்பரிவார தொண்டர்களை புல்லரிக்க வைத்துள்ளார்.
அதில் ஒரு சிலவற்றை இங்கே பட்டியலிடுவது பொருத்தமாக இருக்கும். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். ஆனால் பாசிஸ்ட்டுகளின் புளுகு எட்டு நிமிடம் மட்டுமே!
இந்தியாவின் 60 ஆண்டு சுதந்திர தினத்தையும், 1857 இல் நடைபெற்ற இந்திய முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150 வது ஆண்டு குறித்தும் நினைவு கூர்ந்த ராஜ்நாத் சிங், அதனை நாடு முழுவதும் கொண்டாடப் போவதாக கூறியுள்ளார்.
எந்த முகத்தை வைத்துக் கொண்டு என்பதை மட்டும் அவர் விளக்கவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் வீர் சவார்க்கார் இனியும் நான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்று எழுதி கொடுத்து விட்டு சுதந்திரப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்து, பிரிட்டிஷ் காவல் நாய்களாக (வாட்ச் டாக்) கலாச்சார தேசியம் என்ற பெயரில், இந்திய மக்களுக்குள் மோதலை உருவாக்கி - பிரிவினைக்கு வித்திட்டு, இந்தியாவின் ஆன்மாவாக திகழ்ந்த மகாத்மாவை கொலை செய்த கோட்சேவின் வாரிசுகள் எப்படியெல்லாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடிமைச் சேவகம் புரிந்தார்கள் என்பதை பேசப்போகிறார்களோ என்னவோ! போலி தேச பக்திக்கு சங்பரிவாரங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?
அடுத்து, இந்தியா உலகளவில் பொருளாதாரத்தில் சூப்பர் பவராக வளர்ந்து விட்டதாம், உலகளவில் அறிவாளிகளின் மையமாக இந்தியா திகழ்கிறதாம், அத்தோடு உலகளவில் இராணுவ சூப்பர் பவராக திகழ்கிறராம்! இதற்கெல்லாம் காரணம் இவர்கள் 6 ஆண்டுகள் ஆட்சி செய்ததால்தானாம்!
இந்தியா ஒளிர்கிறது என்று முழக்கத்தை வைத்து தேர்தலை சந்தித்த பா.ஜ.க.வை மக்கள் விரட்டியடித்ததை இன்னும்கூட மறக்கவில்லை என்றே தெரிகிறது! அதனால்தான் அதே கோஷத்தோடு, வேறு மொழியில் பேசத் துவங்கியுள்ளனர். இந்தியா பொருளாதாரத்தில் சூப்பர் பவராக வளர்ந்து இருக்கிறதாம்? ஐயா படித்தவர்களே இது உண்மையா? தண்ணிர் தனியார்மயமாகி விட்டதால் தண்ணீருக்காக கண்ணீர் விடும் கதையெல்லாம் பா.ஜ.க.வினருக்கு தெரியாது போலும், அதை விடுங்கள் புதிய பொருளாதார கொள்கை என்ற பெயரால் எத்தனை பேர் வேலையிழந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள், ஏன் பென்ஷன் திட்டம் முதல் பல சேம நலத் திட்டங்கள் படாத பாடுபடுகிறதே, இன்னும் கூட வறுமைக் கோட்டுக்கு கிழே உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறானே! எதற்காக? இவர்கள் வழிவந்த பொருளாதார கொள்கையால் இந்தியா சூப்பர் பவராக மாறி விட்டது என்றால் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து விட்டதா? சுகாதார திட்டங்கள் எப்படி செயல்படுகிறது? என்பதையெல்லாம் விளக்குவார்களா? இவர்களைப் பொருத்தவரை சூப்பர் பவர் என்றால் வேறு எதுவும் இல்லை! அதையும் ராஜ்நாத் சிங்கே கூறிவிட்டார். கோரஸ் என்ற இந்திய நிறுவனம் ஐரோப்பாவில் கூட்டு வைத்துக் கொண்டு தொழில் தொடங்கி விட்டதாம்! ஐயா முதலை கண்ணீர் என்பார்களே அது இதுதான்!
விவசாயிகள் தற்கொலை குறித்தும் அவர் மறக்காமல் பேசியுள்ளார். இது பற்றியும் தேசிய அளவில் விவாதிக்க வேண்டுமாம்!
ஐயா ராஜ்நாத் சிங் அவர்களே கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் 10,000த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்களே இதற்கு நீங்கள் சொந்தம் கொண்டாட மாட்டீர்களா? இந்த தற்கொலைகளுக்கு உங்கள் கொள்கை வழிவகுக்கவில்லையா? இதைத்தான் சூப்பர் பவர் பொருளாதாரம் சாதித்ததா? ஏன் உங்கள் கூட்டணி ஆட்சி செய்த மகாராஷ்டிராவில்தானே விதர்பா உள்ளது! இந்திய நாட்டு விவசாயிகளை குழிதோண்டி புதைத்த கொள்கை வீரர்களே இன்னொரு தேர்தலுக்காக மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் உங்களை அடியோடு விரட்டியடிக்கத்தான்!
இந்தியா அறிவாளிகளின் மையமாக திகழ்கிறதா? அப்புறம் ஏன் சங்பரிவாரங்களை சார்ந்த வீரப் புலிகள் எல்லாம் அமெரிக்காவில் தஞ்சம் அடைகிறது! குறிப்பாக மென்பொருள் துறையில் அமெரிக்கா என்று அவர்களுக்கு சேவகம் செய்து - இங்கே கலவரத்தை உருவாக்க நிதியனுப்புவதற்காகவே என்று மக்கள் கேட்பது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?
இராணுவத்தில் சூப்பர் பவராக இருக்கிறோமா? எப்படி என்பதை கொஞ்சம் விளக்குவீர்களா? நீங்கள் ஆட்சி செய்த காலத்தில் நமது எல்லையான கார்கிலுக்குள் பயங்கரவாதிகள் புகுந்து கொண்டது கூட தெரியாமல் இருந்ததாலா? அல்லது நமது எல்லையில் இருந்து அவர்களை விரட்டியடித்து விட்டு பெரும் சாதனைப் போல் டமாரம் அடித்துக் கொண்டிர்களா? அதனாலா? அல்லது பாராளுமன்ற வளாகத்திற்கு உள்ளேயே நுழைந்து தாக்குதல் நடத்தியதும் உங்கள் ஆட்சிக்காலத்தில் தானே! உங்களது இன்டிலிஜன்ஸ் திவலானதைக் கூட நீங்கள் எப்போதும் ஒத்துக் கொள்வதில்லை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்! அதை விடங்கப்பா ஈராக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு கோடிக்கும் மேல் மக்களை கொன்று குவித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு கூஜா தூக்குவதற்காக இந்தியா இராணுவத்தினரை அனுப்ப உத்தேசித்தீர்களே அதனால் சூப்பர் பவராகி விட்டது என்று கதைக்கிறீர்களா?
அவரது பேச்சில் கோதுமை இறக்குமதிக்காக கொஞ்சம் கவலைப் பட்டுள்ளார்! பா.ஜ.க. ஆட்சியில் 6 கோடி டன் கோதுமை புளுத்துப் போனதும், எலிக்கு இரையாக்கியதையும் அதே நேரத்தில் விவசாயிகள் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி இறக்க நேரிட்டதையும் இன்னும் மறக்கவில்லையா? உங்களது ஆட்சியில்தான் இந்த இறக்குமதி கொள்கைகை முதன் முதலில் துவக்கி வைத்தீர்கள்! இப்போது நீலிக் கண்ணீர் வடிப்பதெல்லாம் பாட்சா பலிக்காது.
அணு சக்தி ஒப்பந்தத்தில் தங்கள் நிலையை தெளிவாக விளக்கியுள்ளார்கள்? என்ன விளக்கினார் என்று ராஜ்நாத் சிங்கிற்கோ அல்லது கூட்டத்தில் இருந்த பரிவாரங்களுக்கே ஒன்றும் தெரியாது! ஏனென்றால் அவர்களது நிலையை அவ்வப்போது விளக்கி விட்டார்களாம். மேலும் அவர்கள் ஆட்சியில் அணு குண்டு வெடித்து சோதனை செய்ததை சாதனையாக கூறியதோடு, அமெரிக்காவோடு தற்போதைய இராணுவ கூட்டாளி ஒப்பந்தத்தையும் அவர்கள் துவக்கி வைத்ததையும், கேந்திர கூட்டாளியாக அமெரிக்காவோடு கைகோர்த்ததையும் வெட்கம் இன்றி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அத்தோடு இதனை விவாதிப்பதற்காக கூட்டு பாராளுமன்ற குழு அமைக்க வேண்டுமாம்! இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இந்திய பாராளுமன்றத்தில் விவாதிப்பதை அனுமதிக்க கூடாது என்ற நோக்கத்தில்தானே பாராளுமன்ற நடவடிக்கைகளையே முற்றிலும் கேலிக்கூத்தாக்கி - ஜனநாயக நடவடிக்கைகளை முடக்கினீர்களே அதை நாங்கள் மறக்கவில்லை! மக்களும்தான்....
இறுதியாக சேது சமுத்திரம் தொடர்பாக மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அது நம்பிக்கை சார்ந்த விஷயமாம் எனவே ராமாயணம் குறித்தோ அல்லது ராமர் குறித்தோ கேள்வி எழுப்புவது அபத்தமாம்! ஆனால் பாபர் மசூதி மட்டும் இசுலாமியர்களுக்கு நம்பிக்கை சார்ந்த விஷயம் இல்லையாம்! அது அவமானச் சின்னமாம்...! இந்த நம்பிக்கை குறித்தெல்லாம் உலகளவில் அறிவுஜிவிகளாக இருக்கும் இந்தியர்கள் யாரும் கேள்வி கேட்கக் கூடாது! உஷ்.... உஷ்.... உஷ்....
இறுதியாக, பா.ஜ.க. கலாச்சார தேசியம் என்ற தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிறதாம். ஆனால் தற்போது நவீன பொருளாதார வளர்ச்சியால் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறதாம்! எப்பா என்ன கருணை! என்ன கருணை!! ஒரு பக்கம் பொருளாதார வளர்ச்சி என்று குத்தாட்டம் போடும் பா.ஜ.க. அதனால் ஏற்பட்ட சீரழிவுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பார்களாம் அதற்கு மற்றவர்கள்தான் காரணமாம்! ஹலோ பா.ஜ.க. தலைவரே உங்களது இதுபோன்ற தேசிய செயல்குழு கூட்டம் ஒன்று நடைபெறும் போது ஜோஷி என்ற மகாராஷ்டிர சங்பரிவார தலைவரின் அஜால் குஜால் சி.டி. யெல்லாம் உங்களது பார்வைக்கே அனுப்பி வைக்கப்பட்டதே அதை மறந்து விட்டீர்களா! அடுத்து உங்களது பா.ஜ.க. எம்.பி.க்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி அம்பலப்பட்டுப் போனார்களே அதை மறந்து விட்டீர்களா? முதலில் சங்பரிவாரத்திற்குள் கலாச்சார தேசியத்தை நிலைநாட்டுங்கள்... இந்திய மக்களின் ஒற்றுமை எனும் கலாச்சாரத்தை கெடுத்து தேசத்தை பிளவுபடுத்துவதே நீங்கள்தான் என்பதை மக்கள் மறக்கவில்லை! தற்போது உங்களிடம் மிச்சமிருப்பது அமெரிக்க அடிமைத்தனம் மட்டுமே!