இன்று வரை இந்திய மக்களின் உயிர்களை காத்து வந்த தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகளை - தடுப்பூசி மருந்துகளை தயாரித்து வந்த மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான கிண்டியில் உள்ள பி.சி.ஜி. இன்ஸ்டிடியூட், நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டிடியூட், மத்திய பிரதேசம் கசௌலியில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் தடுப்பூசி மருந்து உற்பத்தியை ஜனவரி 22 முதல் நிறுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.
நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த இந்த நிறுவனங்களை மூடுவதற்கு அவர் கூறிய காரணம், உலக சுகாதார அமைப்பின் தரவிதிகளுக்கு உட்பட்டு இந்நிறுவனங்கள் செயல்படவில்லை அதாவது, உலக சுகாதார நிறுவனம் - சிறந்த உற்பத்திக்கான அடிப்படைகள் (ழுடிடின ஆயரேகயஉவரசபே ஞசயஉவஉநள) என்று வகுத்து, அதனை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தியுள்ளது. இந்த அடிப்படையில் இந்நிறுவனங்கள் செயல்படவில்லை; எனவே அவற்றின் உரிமங்களை ரத்து செய்ததோடு, மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு மூட வில்லையென்றால் (என்.ஆர்.ஏ.) தேசிய கட்டுப்பாட்டு ஆணைய அங்கீகாரம் பறிபோய்விடும். இதனால் நம்முடைய நாட்டு மருந்துகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது என்று கூறி இந்நிறுவனங்களின் உற்பத்திக்கு பெரிய பூட்டு போட்டுள்ளார் அன்புமணி இராமதாஸ்.
நாடு முழுவதும் இப்பிரச்சினை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில், இதனால் இந்திய தேசத்திற்கு வரப்போகும் ஆபத்தை அன்புமணி இராமதாஸ் உணர்ந்திருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொள்ளை நோய்கள் என்று அழைக்கப்படும் பெரிய அம்மை, சின்ன அம்மை, காசநோய், கக்குவான், டெட்டனஸ், டிப்தீரியா போன்றவற்றின் பிடியிலிருந்து குழந்தைகளை காப்பாற்றவே இந்த நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு நூற்றாண்டு காலமாக இந்நிறுவனத்தில் உற்பத்தியான மருந்துகளே தற்போதுள்ள 120 கோடி இந்தியர்களின் உடலில் ஊறியுள்ளது - பாதுகாத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிறுவனங்கள் மூலம் கர்ப்பணி தாய்மார்கள் முதல் குழந்தைகள் வரை பி.சி.ஜி. தடுப்பூசியும், டி.பி.டி. தடுப்பூசியும் அனைத்து குழந்தைகளுக்கும் - பிறந்தது முதல் ஒன்பது மாதங்கள் வரை இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான ஏழை - எளிய மக்களின் குழந்தைகளின் உயிர்கள் கடும் நோயிலிருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தற்போது, மத்திய சுகாதார அமைச்சர் உலக சுகாதார அமைப்பை காரணம் காட்டி இந்நிறுவனங்களை மூடியுள்ளதால் எழக் கூடிய அபாயங்கள் என்ன? இனிமேல் நாம் தடுப்பூசி மருந்துகளை தனியார் நிறுவனங்களிடம் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும்தான் வாங்கி பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால் மருந்து விலை கடுமையாக உயருவதோடு - எதிர்காலத்தில் ஏழை - எளிய மக்கள் இம்மாதிரியான நோய்த் தடுப்பிலிருந்து தங்கள் குழந்தைகளை காப்பாற்ற முடியாது சூழலும் எழலாம் என்ற அச்சம் நிலவுகிறது. பறவைக் காய்யச்சல், சிக்குன் குனியா போன்ற தொற்று நோய்கள் வந்தால் அதனை உடனடியாக சமாளிப்பதற்கு திறனற்ற நிலையியே தற்போது உள்ளோம் என்பதை அனைவரும் அறிவர். இந்நிலையில் இருக்கக்கூடிய திறன்மிக்க மருந்து நிறுவனங்களை மூடி விடுவதால் அந்நிய பிசாசுகள்தான் இந்தியாவில் கோலோச்சும் - காசு உள்ளவனின் உயிர் மட்டுமே பிழைக்கும். ஏழை - எளிய மக்கள் குப்பைகளாய் மடியவேண்டியதுதான்.
இது குறித்தெல்லாம் அன்புமணி இராமதாசிடம் கேள்வி எழுப்பினால் செங்கல்பட்டு அருகில் 400 ஏக்கர் பரப்பளவில் 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு வேக்சின் பார்க்கை உருவாக்கப்போவதாக கூறுகிறார். இது இன்னும் இரண்டு ஆண்டுகளில் உற்பத்தியைத் துவக்குமாம்! சரி மூடப்பட்ட பாரம்பரிய நிறுவனங்களின் கதை என்ன என்று கேட்டால் அதனை வெறும் பாட்டிலில் மருந்துகளை அடைக்கும் - பாலிட்டிலிங் தொழிலுக்காகவும், ஆராய்ச்சிக் கூடங்களாகவும், வேறு சில மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களாகவும் மாற்றப்படும் என்று கூறுகிறார்?
அதாவது நூற்றாண்டுகளாக தொற்று நோய் குறித்த ஆராய்ச்சியில் முதிர்ந்த அனுபவம் உள்ள ஊழியர்களின் திறனை கொன்று விட்டு, தனியார்களின் காலடியில் குப்பைகளாய் அவர்களை கொட்டக்கூடிய காரியத்தைத்தான் செய்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
இது குறித்து பல்வேறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் பி. மோகன் மற்றும் பிருந்தா காரத் ஆகியோர் கேள்வி எழுப்பிய போது மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்து உருப்படியான பதில் கிடைக்கவில்லை! மேலும் பிருந்தா காரத் இது குறித்து இரண்டு முறை மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் இரண்டு - மூன்று மாதங்கள் கழிந்த பிறகு கூட அவர் அதற்கான முறையான பதிலை அளிக்கவில்லை என்பதையும் பாராளுமன்றத்திலேயே கூறியுள்ளார்? தேசத்தின் முக்கியமான நிறுவனங்கள் குறித்து முடிவு எடுக்கும் போது அதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டாமா? அல்லது நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவர் தனது சந்தேகங்கள் குறித்து கடிதம் எழுதினால் மத்திய அமைச்சர் எதற்காக மவுனம் சாதிக்க வேண்டும்? யாருடைய நலனைக் காப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் செயல்படுகிறார்? மேலும் குறித்து அனைத்து கட்சிகளும் மவுனம் சாதிப்பது வேடிக்கையாகவும், வெட்கக்கேடாகவும் இருக்கிறது.
குறிப்பாக இதற்கு பின்னால் தனியார் மருந்து உற்பத்தி பகாசுர நிறுவனங்களின் கைகள் மறைந்து கிடக்கிறது என்பதுதான் உண்மை. இதற்கு தடுப்பூசி மருந்து நிறுவனங்களின் இயக்குனராக இருந்த டாக்டர் இலங்கேஸ்வரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் அவருடைய நன்பர் சுந்தரபரிபூரணம் மற்றும் தனியார்களின் கூட்டுச் சதியே இந்த நிறுவனங்களின் மூடலுக்கு காரணம் என்று ஊழியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். குறிப்பாக இந்த பாரம்பரிய மருந்து நிறுவனங்களின் உற்பத்தி முடலுக்குப் பின்னால் இவர்களின் முக்கூட்டுச் சதியும் - பெரும் ஊழலும் ஊறிப்போயுள்ளது. இந்த சுயநலவாதிகளின் கூட்டுச் சதியை முறியடிக்க வேண்டிய பெரும் கடமை இந்திய மக்கள் முன்னுள்ளது.
இதற்கு அவர்களது வாக்கு மூலங்களே சாட்சியாக உள்ளது.
குறிப்பாக டாக்டர் இலங்கேஸ்வரன் சன்டே இந்தியனுக்கு அளித்த பேட்டியை பார்ப்போம். அவரது பேட்டியின் ஒரு சில அம்ங்களை மட்டும் இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும்.
அவரது பேட்டி என்ன வென்று பார்ப்பதற்கு முன் சென்னை, கிண்டி பி.சி.ஜி. இன்ஸ்டிடியூட்டில் டைரக்டராக பொறுப்பேதற்கு முன்னால் ஓட்டை ஸ்கூட்டரும், பழைய பியேட் காரும் வைத்திருந்த இலங்கேஸ்வரன் தற்போது சென்னை சைதாப்பேட்டையில் இரண்டு பெரிய பங்களாக்களுக்கு அதிபதி. அதுமட்டுமின்றி பல்வேறு செங்கல்பட்டு உட்பட பல்வேறு இடங்களில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். இவைகள் எப்படி வந்தது? மேலும் அவரது மனைவி - சுந்தர பரிபூரணத்துடன் கூட்டாளியாக இணைந்து கிரீன் சிக்னல் பயோ பார்மா என்ற நிறுவனத்தை துவங்கி கொள்ளையடித்து வருகின்றனர். மேலும் இந்த இலங்கேஸ்வரன் ஊழியர்களிடம் தரக்குறைவாக நடந்துக் கொள்வது-குறிப்பாக பெண் ஊழியர்களிடம் முறைகேடாக நடப்பது. அதைவிடக் கொடுமை என்னவென்றால் யூரின் பிளாடர் கேன்சருக்கு கொடுக்கும் மருந்துகள் காலாவதியாகிப்போன பின்புகூட அதற்கு மறுதேதி லேபிள்களை மாற்றி - ஏமாற்றி வந்துள்ளார். இதுபோன்ற பல அயோக்கியத்தனத்தை செய்து வந்த இலங்கேஸ்வரன் மீது இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அந்த ஊழியர்கள் சுமத்துகிறார்கள். மேலும் சிறந்த விஞ்ஞானிகளை - ஆராய்ச்சியாளர்களை பழிவாங்குவது, இடம் மாற்றம் செய்வது, ஊழியர்களை மிரட்டுவது, நடவடிக்கை எடுப்பது போன்ற தொழிலாளர் விரோத செயல்பாடுகளையும் மேற்கொண்டவர் இந்த அரசு நிறுவனத்தை எப்படி நேர்மையாக செயல்படுத்துவார் என்ற கேள்வியும் எழுகிறது. இப்போது அவரது வாக்கு மூலத்தை பார்ப்போம்!
"உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழுவை கூட்டி வந்ததே தனியார் ஆட்கள்தானே! அர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. அரசு அதிகாரத்துக்கு யார் வந்தாலும், மந்திரியாக யார் வந்தாலும் அதுதான் நடக்கும்.
ஊழியர்கள் செய்த பாவத்தால் பாஸ்டியர் நிறுவனம் உருப்படாது; இந்துஸ்தான் போட்டோ பிலிம் மாதிரி இதுவும் ஒன்றுமில்லாமல் அழிந்து விடும். அக்கிரமக்காரர்களை கடவுள் மன்னிக்க மாட்டார்"
மேற்கண்ட கூற்றுகளே அந்த இயக்குநரின் உள்நோக்கம் என்ன என்று வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதாவது, உலக சுகாதார நிறுவனத்தின் விதிகள் என்று கூறுவதெல்லாம் வெறும் கண்துடைப்புதான். இதில் தனியார் முதலாளிகளின் கொள்ளைதான் அடிப்படை காரணமாக இருக்கிறது. மேலும் எந்த ஒரு இயக்குநராவது தான் பொறுப்பேற்றுள்ள ஒரு நிறுவனம் உருப்படாது என்று கூறுவாரா? அப்படி கூறக்கூடிய இந்த உருப்படாத சோம்பேறியை இந்திய மக்கள் மன்னிக்கலாமா? இவர்கள் ஊழியர்களின் வாழ்க்கையோடு விளையாட வில்லை 10 கோடி இந்திய குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள்?
இந்த இலங்கேஸ்வரன் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளனர். நேரிடியாகவும் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த அயோக்கியன் மீது இதுவரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளார். இந்த ஊழல் பேர்வழி மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக அவருக்கு பச்சைக் கொடி காட்டியதன் மூலம் மேலும் வலுவான கொள்ளையை திட்டமிட்டு நடத்தியுள்ளனர். இதற்கு அன்புமணி இராமதாசும் உடந்தையாக இருந்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கள் வலுவாக எழுந்துள்ளது.
அன்புமணி ராமதாஸ் இது விசயத்தில் கொடுக்கக்கூடிய பேட்டிகளைப் பார்த்தாலே இதில் எந்தவிதமான கொள்கைத் தெளிவும் இல்லாமல் - கொள்ளைத் தெளிவோடு செயல்படும் கூட்டாளிகளின் பங்காளியாக செயல்பட்டுள்ளார் என்பதுதான் தெரிகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாசின் பேட்டிகளே இதற்கு சாட்சியாக உள்ளது. அவரது கூற்றையும் பார்ப்போம்.
21.05.2008 ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறுகிறார்.
"சுற்றுலாத்துறையில் வேண்டுமானால் பழைமை வாய்ந்த நிறுவனங்களுக்கு மவுசு இருக்கலாம். சுகாதாரத்துறையில் புதிது புதிதான அறிவியல் மாற்றங்கள்தானே உதவும்!
உலக சுகாதார நிறுவனம் இந்த மூன்று நிறுவனங்களையும் ஆய்வு செய்து, அவற்றின் தயாரிப்புகளை உபயோகப்படுத்துவது ஆபத்தானது என்று அறிக்கை கொடுத்திருக்கிறது. வளரும் நாடுகளின் தடுப்பூசி மருந்துகள் தேவையை 80 சதவிகிதம் பூர்த்தி செய்வது நம் நாடுதான். உலக நாடுகளுக்கு தரம் வாய்ந்த தடுப்பூசி மருந்துகளை வழங்கி விட்டு, உங்கள் குழந்தைகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்குவீர்களா? என்று என்னிடம் கேட்டது. மருத்துவத்துறையில் சமாதானத்துக்கு இடமில்லை என்பதால் மூன்று நிறுவனங்களின் உற்பத்தியை நிறுத்தி வைத்தது. அவற்றின் கட்டமைப்பை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோமே தவிர அவற்றை மூடவில்லை. அங்கிருக்கும் ஒரு தொழிலாளி கூட வேலை இழக்க மாட்டார். "
மேலோட்டமாக பார்த்தால் ஏதோ புதிய தத்துவத்தை அன்புமணி ராமதாஸ் உபதேசிப்பதுபோல் தோன்றும், ஆனால் உள்ளுக்குள் அவ்வளவும் விஷம்தான் கலந்திருக்கிறது. சுகாதாரத்துறையில் புதிய அறிவியல் மாற்றங்கள்தான் தேவையாம்! சரிதான் இதை அரசுத்துறையில் செய்வதற்கு யார் தடையாக இருந்தார்கள்? என்பதுதான் நமது கேள்வி! மத்திய சுகாதாரத்துறை இதனை யாரிடம் எதிர்பார்க்கிறார்? யார் இதனை இந்த நிறுவனங்களில் நிறைவேற்ற வேண்டும் என்று துடிக்கிறார் என்பது புரியவில்லை? கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த மூன்று நிறுவனத்தையும் அபவிருத்தி செய்வதற்கு என்ன முயற்சி எடுத்தார் என்பதையும் சொல்ல வேண்டுமா இல்லையா? அடுத்து, உலக சுகாதார நிறுவனம் இந்த நிறுவனங்களின் மருந்துகளை பயன்படுத்துவது ஆபத்தானது என்று கூறியுள்ளதாக கூறியுள்ளார்! அவ்வாறு எங்கு கூறியுள்ளது என்பதை நாட்டு மக்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் தெரிவிக்க வேண்டாமா? உண்மை என்ன? இந்த மூன்று நிறுவனங்களின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், சீரமைக்க வேண்டும் என்றுதான் சொல்லியுள்ளதாக ஊழியர்கள் அம்பலப்படுத்துகின்றனர். ஆனால், தனது மனசாட்சியின்படி பதவியேற்ற அன்புமணி ராமதாஸ் இந்திய மக்களிடம் பொய்யைச் சொல்கிறார் என்றால் மானசீகமாக அவர் பதவியில் நீடிக்கலாமா என்ற கேள்வியே எழுகிறது. இது குறித்த முழு உண்மைகளை, வெள்ளை அறிக்கையை அவர் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் தெரிவிக்க வேண்டும்.
எலிகளைக் கொன்ற எமகாதகர்கள்!
குன்னூரில் உள்ள பாஸ்டர் இன்ஸ்டிடியூட்டில் அபூர்வமான வெள்ளை எலிகள் வளர்க்கப்படுகிறது. இதனை கினிஃபீல் என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த எலிகள் மூலம்தான் முதற் கட்டமாக சோதனை செய்யப்பட்டு அந்த மருந்துகளால் ஏற்படும் மாற்றங்களை அறிந்து, சோதனை வெற்றியடைந்த பின்னர் மனிதர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த கினிஃபில் எலிகளை வளர்ப்பதற்கும், பக்குவப்படுத்துவதற்கும் குறைந்தது 10 வருடங்கள் ஆகுமாம். அதாவது இந்த எலிகள் குறிப்பிட்ட சீதேஷ்ன நிலையில்தான் வாழும். இந்த எலிகளை குழந்தைகளை விட குழந்தையாக அந்த நிறுவன ஊழியர்கள் பாதுகாத்து வந்தார்கள். திடீரென்று ஒரு நாள் இந்த நிறுவன இயக்குநர் இலங்கேஸ்வரன் தொலைபேசி மூலமாக கட்டளையிட்டு அந்நிறுவனத்தில் உள்ள 544 எலிகளையும் உடனடியாக சென்னைக்கு அனுப்ப வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்! இதற்கு ஊழியர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இந்த எலிகள் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாறினால் செத்துவிடும் என்று தங்களது அச்சத்தை தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை சட்டை செய்யாத சீனியர் மைக்ரோலஜிட் என்று அழைக்கப்படும் டைரக்டர் இலங்கேஸ்வரன் இது அமைச்சர் அன்புமணியின் கட்டளை எனவே உடனே அனுப்புங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். ஊழியர்களும் மிகப் பத்திரமாக ஏ.சி. வண்டியில் அனுப்பியுள்ளார்கள். ஆனால் நடந்தது என்ன குன்னூரை விட்டு தாண்டியவுடன் அந்த 544 எலிகளும் இறந்து விட்டது. இதில் 240 எலிகள் கர்ப்பமடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ஊழியர்கள் இலங்கேஸ்வரனுக்கு தெரிவித்தவுடன் - பரவாயில்லை. அந்த கினிஃபில் துறையையே மூடிவிடுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். இதிலிருந்தே இவர்களின் செயல்பாடு இந்த நிறுவனத்தை கறுவறுக்க எப்படியெல்லாம் சதி செய்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.
அதாவது இலங்கேஸ்வரனும் - டாக்டர் அன்புமணி ராமதாசுமே இந்த எலிகளின் மரணத்திற்கு முழு காரணமாக இருந்துள்ளார்கள். இந்த எலிகளின் தன்மைக் குறித்து அறியாத இந்த மாங்கா மடையன் இலங்கேஸ்வரன் எப்படி இந்த நிறுவனங்களுக்கு டைரக்டராக இருக்க முடியும்! திடீரென எலிகளை மாற்றுவதற்கான தேவை என்ன? செத்துப் போன எலிகளைப் போல் மீண்டும் உருவாக்க வேண்டும் என்றால் இன்னும் 10 ஆண்டுகள் ஆகுமே என்ன செய்யப்போகிறார்கள்? இதன் மேல் மத்திய சுகாதாரத்துறை எடுத்த நடவடிக்கை என்ன என்று நாட்டு மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மக்களின் உயிரைக் காப்பதற்கு தங்கள் உயிரை பணம் வைத்த எலிகளை கொன்ற எமகாதகர்களை மன்னிக்கலாமா? எனவே இவர்கள் மக்கள் மக்கள் உயிர்களை எப்படிக் காப்பார்கள்?
அதேபோல் தாய் சீட் (மதர் சீட்) என்று சொல்லக்கூடிய தாய் உயிரியை தனியார் நிறுவனங்களுக்கு திருட்டுத்தனமாக கொடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் கும்மிடிப்பூண்டில் உள்ள கிரின் சிக்னர் பயோ பார்மா என்ற நிறுவனத்திலிருந்து ரூ. 3.5 கோடிக்கு உயிரி பொருளை விலைக்கு வாங்கி உள்ளார்கள். இந்த உயிரி பொருள் இலவசமாக கிடைக்ககூடிய ஒன்றாம். இப்படி பல்வேறு ஊழல்கள் இதற்கு பின்னால் மறைந்துள்ளன. இது குறித்தெல்லாம் ஆங்கில மற்றும் தமிழ் பத்திரிகைகள் விரிவாக எழுதியுள்ளன அன்புமணியும் - டாக்டர் ஐயவும் சாராய சாவுகள் குறித்து கவலைப்படுகிறார்களே ஒழிய மக்களின் எதிர்கால வாழ்க்கைப் பிரச்சினை குறித்த இந்த மருந்து நிலையங்கள் குறித்து கள்ள மவுனம் சாதிப்பது ஏனோ?
இந்தியாவில் செயல்படும் தனியார் தடுப்பூசி மருந்து நிறுவனங்கள் ஆண்டுக்காண்டு பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றனர். இந்நிறுவனங்கள் மூலம் வெளி நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் உள்ள மார்க்கெட்டும் இவர்களுக்கு திறந்து விடப்பட வேண்டும் என்றால், அதற்கு தடையாக இருப்பது மத்திய நிறுவனங்கள் சார்ந்த தடுப்பூசி மருந்து நிறுவனங்களே! எனவேதான் இதன் கழுத்தை முதலில் நெறித்து விட்டார்கள்.
மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் தரத்தை எட்டுவதற்கு இந்த மூன்று நிறுவனங்களுக்கும் வெறும் 50 கோடி ரூபாய் போதும் என்று சொல்லப்படுகிறது. இந்த தொகையை ஒதுக்கி மேம்படுத்துவதற்கு மாறாக அதன் உயிரை கொள்ளை நோய் வந்து அமுக்குவதுபோல் அமுக்குவது யாருடைய நலன் காப்பதற்கு. இதுதான் உலகமயம் - தாராளமயம் - தனியார்மயம். மொத்தத்தில் அன்புமணி என்ற வைரஸ் இந்திய மக்களை தாக்கத் துவங்கி விட்டது! நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதுபோன்ற பிரச்சினை சீனாவுக்கும் ஏற்பட்டது. ஆனால் சீன அரசு என்ன செய்தது தெரியுமா? எங்கள் நாட்டு மருந்து தரமானது; அதுவே எங்கள் குழந்தைகளுக்கு போதுமானது என்று சொல்லிவிட்டு, அவர்கள் ஏற்றுமதியை நிறுத்திக் கொண்டார்கள். சீன மக்களுக்கு அவர்களது மருந்துகளே விநியோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இங்கே நிலைமை தலைகீழாக உள்ளது. அன்புமணியின் பாசம் இந்திய மக்கள் மீதா பன்னாட்டு - உள்நாட்டு முதலாளிகள் மீதா?
அடுத்து, இந்தப் பிரச்சினை எப்போது துவங்கியது. அவர்கள் மன்மோகன் தலைமையிலான அரசு ஆட்சிக்குப் வந்த போதே இப்பிரச்சினை அரசுக்கு தெரியும்! அன்புமணி ராமதாஸ் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் நமது கேள்வி? புதிய நிறுவனத்தை செங்கல்பட்டில் சர்வதேச தரத்துடன் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடித்து உற்பத்தியை துவக்க முடியும் என்றால், ஏற்கனவே இருக்கும் நிறுவனத்தை மேம்படுத்த ஒரு வருடம் போதாதா? இதுவரை என்ன செய்தார்?
சாராயத்தால் மக்கள் வாழ்வு பறிபோகிறது என்று கதறும் டாக்டர் ஐயா அவர்கள் தடுப்பூசி மருந்துகளால் எதிர்கால சந்ததியே பறிபோகப்போகிறதே என்ன சொல்லப்போகிறார்? தமிழகத்தில் ஒரு கொள்கை! மத்தியில் ஒரு கொள்கையா?
நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஊட்டச்சத்து குறைவான உணவை சாப்பிடுகிறார்கள் என்று தமிழோசையில் புள்ளி விவரம் வெளியிடும் பா.ம.க.வைச் சார்ந்த அமைச்சர் அன்புமணி அவர்களே! இதுபோன்ற ஊட்டச்சத்து குறைவானவர்களைத்தான் முதலில் தொற்றுநோய்கள் தங்கள் விருந்தாளிகளாக வந்து தாக்கும் என்பதை அறியாதவரா நீங்கள்! தொற்று நோய் மருந்து உற்பத்தி தனியார் வசம் போனால் ஏழைகளுக்கு எட்டுமா இந்த இலவச மருத்துவ வசதி! இது குறித்தெல்லாம் கேள்வி எழுப்பினால் இது வடநாட்டவர் சதி என்று கூறி நீங்கள் திசை திருப்புவதை யாரும் ஏற்க மாட்டார்கள். மாறாக இதன் உண்மை விவரத்தை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதன் மூலமே நீங்கள் சுத்த சுயப்பிரகாசம் என்பதை நம்புவார்கள்! மேலும் இலங்கேஸ்வரன் விவகாரத்தில் இதுவரை நீங்கள் எடுத்த நடவடிக்கை பற்றி எதுவுமே கூறாமல் இருப்பதன் மர்மம் என்னவோ?
இந்தப் பிரச்சினைகள் குறித்து அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டும்! இல்லையென்றால் இந்தியாவில் உள்ள குழந்தைகள் - மாணவர்கள் தெருவிலிறங்கி போராடாமல் இதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது!