May 23, 2008

போற்றுதலுக்குரிய சேவை!


இந்திய நாட்டின் மிக உயர்ந்த பொறுப்புகளில் மிக முக்கியமானது ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். இது இன்றைய வாலிப உள்ளங்களின் கனவு. இந்திய ஆட்சிப் பணியில் தேறியவர்கள் மாவட்ட ஆட்சியராகவும் - வேறு பல முக்கிய அரசுத்துறைகளிலும் உயர் பதவியை வகிக்க முடியும். குறிப்பாக இத்தகைய தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு கடுமையான பயிற்சியும் - வசதி வாய்ப்பும் அத்தியாவசியமானது. குறிப்பாக இத்தகைய தேர்வுகளில் வசதி படைத்தவர்களே பெரும்பாலும் வெற்றி பெறுகின்றனர் என்பதை நாம் அறிவோம். அதிகார வர்க்கத்திற்கு அதிவார வர்க்கத்திலிருந்தே தேர்வு பெறுகின்றனர் என்பதுதான் உண்மை.
இந்நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை துரைசாமி அவர்கள் தன்னுடைய சொந்த முயற்சியால் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அகாடமி என்ற பயிற்சி நிறுவனத்தை துவக்கி சேவை செய்து வருகிறார். முதல் முறையாக இந்த ஆண்டு இக்கல்வியகத்தில் படித்த மாணவர்களில் 12 பேர் ஐ.ஏ.எஸ். படிப்பதற்கு தேர்வாகியுள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விசயம். இந்த கல்வியகத்தில் 27 பேர் பயின்றதில் 12 பேர் தேர்ச்சி என்றால் நல்ல முறையிலான ரிசல்ட் என்றே கூறலாம். மேலும் இதில் படித்தவர்கள் யாரும் காசு கொடுத்து படித்த பணக்கார வீட்டுப் பிள்ளைகள் கிடையாது. சாதாரண ஏழை - எளிய - நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பிள்ளைகளே இந்த கல்வியகத்தில் பயின்றுள்ளனர். இதில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு தலித் மாணவர்கள் தேர்வாகியுள்ளனர் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியே.
இந்த கல்வியகத்தில் பயிலும் மாணவர்களிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிப்பதில்லை. மேலும் அவர்களுக்கு உரிய புத்தகம் - தங்குமிடம் - தரமான, சத்தான உணவு வகைகள் கொடுக்கப்படுகிறது. 100 பெட் வசதியுடன் இந்நிறுவனம் நல்ல தரமான கட்டமைப்போடு செயல்படுகிறது. இதில் பயிற்சியளிப்பவர்களில் முக்கியமானவர் முன்னாள் துணை வேந்தர் வ.செ. குழந்தைசாமி என்பது குறிப்பிடத்தக்கது. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி இதுபோன்ற முன்னுதரணமான சேவையை சைதை துரைசாமி ஆற்றி வருவது பாராட்டுக்குரியதே. (இவர் அ.இ.அ.தி.மு.க. கட்சியை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.) தன்னுடைய மற்றும் தனது மனகனின் ஐ.ஏ.எஸ். கனவுகள் நிறைவேறாவிட்டாலும் இதுபோன்ற சேவை மூலம் மகிழ்ச்சியடைவதாக கூறியுள்ளார். இது குறித்த செய்தி இன்றைய (23.05.2008 டெக்கான் கிரானிக்கல் - சென்னை பதிப்பில் வந்துள்ளது)
தன்னைப் போல் வசதியானவர்கள் இதுபோன்ற சேவைகளை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். நம்முடைய புதுப் பணக்காரர்கள் ஐ.டி. மற்றும் இந்தியாவில் இந்திய அரசின் செலவில் படித்து வெளிநாட்டில் மிக வசதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் சுகவாசிகள் இதுபோன்ற சேவையில் ஈடுபடுவார்களா?
நர்சரி மற்றும் மெட்ரிக் கல்வி மூலமும் - பொறியியல் கல்லூரிகளை திறப்பதன் மூலம் காசு பார்க்கும் கல்வி வியாபார உலகில் இதுபோன்ற சேவையை மனதார வரவேற்க வேண்டும். கல்வி வெறும் கடைச் சரக்காக மாறிவிட்ட இன்றைய உலகமய யுகத்தில் பெரும்பாலான ஏழை - எளிய மக்களுக்கு தரமான கல்வி கைகூடுமா? என்ற ஏக்கத்திற்கு ஆறுதலான விசயமே இது.
வாழ்த்துக்கள் திரு. சைதை துரைசாமி அவர்களே:!

No comments: