May 06, 2008

தகர்ந்தது தீண்டாமைச் சுவர்!


மதுரை மாவட்டம் பேரையூரில் உள்ள உத்தப்புரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தலித் மக்களை பிரித்து வைத்திருந்த தீண்டாமை சுவர் தமிழகத்திற்கே அவமானச் சின்னமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. இந்தப் பிரச்சினையை தமிழக மக்களின் கவனத்திற்கும் - அரசின் கவனத்திற்கும் கொண்டு வந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத்திலும் இது தொடர்பாக பிரச்சினையை எழுப்பியது. மேலும் இத்தகைய அவலத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது. நாளைய தினம் சி.பி.எம். பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் மாநில செயலாளர் என். வரதராஜன் உட்பட மாநில - மாவட்டத் தலைவர்கள் உத்தப்புரத்தில் உள்ள தீண்டாமைச் சுவரை பார்வையிடவும் - அம்பலப்படுத்தவும் திட்டமிட்டிருந்தனர். (நாளைய தினம் இந்நிகழ்ச்சி நடைபெறும்)_ இந்நிலையில் மாநில அரசு இப்பிரச்சினையில் துரிதமாக செயலாற்றி தீண்டாமைச் சுவரை இன்று காலையில் ஒரு பகுதியை தகர்த்தெறிந்துள்ளது.
இன்றைய உலகமய யுகத்திலும் - அறிவியல் - தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட யுகத்திலும் தீண்டாமை இந்தியா முழுவதும் பல்வேறு வடிவங்களில் வியாபித்துள்ளது. புதுப் புது வடிவம் எடுத்து தாழ்த்தப்பட்ட - உழைக்கும் வர்க்க மக்களை மன ரீதியாகவும் - வாழ்வியல் ரீதியாகவும் ஒடுக்கி வருகிறது. நாடு முழுவதும் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்படும் நிகழ்வுகள் புதுப் புது வடிவத்தில் நாள்தோறும் வந்துக் கொண்டே உள்ளது. மேல் ஜாதியினர் தெருக்களில் நடந்ததற்காக ஆறு வயது சிறுமியை தீக்குண்டத்தில் தள்ளியுள்ளனர் மேல் ஜாதி ஆதிக்க வெறியர்கள். கயர்லான்சி முதல் உத்தப்புரம் வரை இந்தியாவில் நிலவும் தீண்டாமைக் கொடுமையை பல்வேறு வடிவங்களில் உலகிற்கு அம்பலப்படுத்தி வந்தாலும் - ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கமும் இந்த மக்களின் இழிவை போக்குவதற்கோ அவர்களது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கோ இன்றைக்கு வரை உருப்படியான பணிகளை ஆற்றவில்லை என்பதைதான் இந்த சம்பவங்கள் நிரூபித்து வந்துள்ளது.
நிலச் சீர்திருத்தம் என்ற மகத்தான கடமையை செய்யாமல் இந்த மக்களின் வாழ்வில் விடிவு பிறக்காது. மத்திய - மாநில ஆட்சியாளர்கள் இதை நோக்கி பயணிப்பார்களா? என்பதே நமது கேள்வி? மேலும் தொழில்மயம் என்ற பெயரில் மாநிலத்தில் ஏதோ ஒரு சில இடத்தில் மட்டுமே தொழில் வளத்தை பெருக்குவதில் முதலாளிகளும் - ஆளும் வர்க்கமும் கவனம் செலுத்துகிறது. ஏன் மதுரையில் என்ன தொழில் வளர்ச்சி கண்டுள்ளது? எனவே இந்த தீண்டாமை ஒழிப்பு என்பது நவீன தொழில்கள் வேகமாக வளர்வதையும் பொறுத்துள்ளது. இத்தகைய தொழில் வளர்ச்சி கிராமப்புறங்களில் உள்ள விவசாய பாட்டாளிகளை நிலத்திலிருந்து விடுதலை செய்ய வைக்கும். ஆனால் தற்போது ஆட்சியாளர்களின் கொள்கை அவர்களை கிராமங்களை விட்டே விரட்ட வைக்கும் நிகழ்வாகத்தான் முடிகிறது.
எனவே இதற்கெதிரான ஒன்றுபட்ட போராட்டங்கள் வெடித்தெழ வேண்டும்! இடதுசாரிகள் - ஜனநாயக சக்திகள் - ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்கள் என அனைத்து தரப்பினரும் பொதுவான கோரிக்கைகளுக்காக ஒன்றுபடுவதன் மூலமும் ஒரு ஐக்கிய முன்னணியை அமைத்துக் கொள்வதன் மூலமுமே இதனை சாதிக்க முடியும். இதனை நோக்கி நமது சிந்தனைகளை வளர்த்தெடுப்போம்.
ஒழிக்கப்பட வேண்டியது தீண்டாமை சுவரை மட்டுமல்ல! மனு அதர்ம அடிப்படையிலான சாதிய சமூக அமைப்பையும்தான்! தீண்டாமை சுவரை இடித்துத் தள்ளுவதில் உடன் கடமையாற்றிய தமிழக அரசையும் இந்நேரத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது! தொடர்வோம் தீண்டாமை இடிப்புப் பணியை!


1 comment:

Anonymous said...

திருச்சி தீண்டாமை சுவரை இடிக்க சிபிஎம் முன்வருமா?

திருச்சி இடுகாட்டு 'தீண்டாமை சுவரை' இடிக்க வி.சி. கோரிக்கை
திங்கள்கிழமை, மே 12, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெறநெல்லை: திருச்சி இடுகாட்டில் கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவரையும் தமிழக அரசு இடிக்க வேண்டும் என்று விடுதலைசிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நெல்லையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

உத்தபுரத்தில் தீண்டாமை சுவரில் 10ல் ஒரு பாகத்தை தமிழக அரசு இடித்துள்ளது. இதற்கு அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, முழு சுவரையும் இடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதேபோன்று திருச்சி மாநகராட்சியில் கிறிஸ்தவர்களுக்கான இடுகாட்டில் தலித் மற்றும் தலித் அல்லாதவர்களுக்கு இடையில் தீண்டாமை சுவர் உள்ளது. இந்த சுவரையும் அரசு இடித்துத் தள்ள வேண்டும்.

குறவர் இன மக்களை சில இடங்களில் தாழ்த்தப்பட்டவராகவும், சில இடங்களில் பழங்குடியினராகவும் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அளவில் குறவர் இனத்தை பழங்குடியின மக்களாக அறிவிக்க வேண்டும்.

அவர்களுக்கு எளிய முறையில் சாதி சான்றிதழ் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் குறும்பர் சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டும். கிறிஸ்தவ தலித்துகளை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்
சேர்த்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

வரும் ஜூன் 29ம் தேதி விழுப்புரத்தில் தலித் கிறிஸ்தவர் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடத்தப்படும். கத்தோலிக்க மதத்தில் நிலவுகிற ஜாதிக் கொடுமைகளை களைய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த மாநாட்டில் அந்த கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படும்.

சேரன்மகாதேவி ஸ்காட் கல்வி நிறுவனம், தாழ்த்தப்பட்ட மக்களின் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அந்த நிலம் மீட்கப்பட்டு மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.