July 10, 2008

123... மன்மோகன் அரசு!


இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு மன்மோகன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதி தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. தேச நலனை முன்னிட்டே இதனைச் செய்வதாக கூறிக் கொள்ளும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் உண்மையில் ஜார்ஜ் புஸ்சுக்கு காவடித் தூக்கிக் கொண்டுள்ளனர் என்பதைதான் அவர்களது நடைமுறை காட்டுகிறது.


அணு சக்தி பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் கூட ஐ.ஏ.இ.ஏ.வுடனான ஒப்பந்தம் தொடர்பான உண்மையான அறிக்கையை சமர்ப்பிக்க மாட்டோம் என்று அடம் பிடித்த பிரணாப் முகர்ஜீ இது அரசின் ராஜீய ரீதியான உறவு சம்பந்தப்பட்டது. எனவே இதனை முன்வைக்க முடியாது என்று கூறினார்.


மறுபுறத்தில் ஜீ-8 கூட்டத்தில் ஒரு இளைய பங்காளியாக கலந்து கொள்ளச் சென்ற மன்மோகன் சிங், போகும் போதே இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டை நிறைவேற்றியே தீருவோம். இடதுசாரிகளின் மிரட்டலுக்கு நாங்கள் அசரப்போவதில்லை என்று சவடால் அளித்துச் சென்றார். பின்னர் அங்கு சென்று புஸ்சுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு உரையாடிய அவர். இரண்டு நாடுகளுக்கும் நெருக்கம் அதிகப்பட்டிருப்பதாகவும் - உறவு பலப்பட்டிருப்பதாகவும் பேட்டியளித்தார்.


இன்னொரு புறத்தில் இடதுசாரிகள் - காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எந்த விசயமாக இருந்தாலும் வெளிப்படையாக பேசித் தீர்த்துக் கொள்ளுவோம் என்று உறுதியளித்து பின்னர் இந்த கூட்டுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த ஐ.மு. அரசு தற்போது அறிக்கையை இடதுசாரிகளுக்கும் காட்டாமல் - நாட்டு மக்களுக்கும் காட்டாமல் துரோகம் இழைத்தது. மறுபுறத்தில் தற்போது என்ன நடந்துள்ளது. இந்த ஐ.ஏ.இ.க. பாதுகாப்பு தொடர்பான நகல் அறிக்கை தற்போது அமெரிக்க மற்றும் இந்தியத் தளங்களில் இலவசமாகவே கிடைக்கிறது. யார் வேண்டும் என்றாலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்ற நிலையில் உள்ளது. இதன் மூலம் இவர்களது ரகசியம் எல்லாம் யார் நன்மையைக் காப்பதற்காக என்று வெளிச்சமாகியுள்ளது.


தற்போது மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றுக் கொண்டதையடுத்து, உத்திரப்பிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த முலாயமுடன் கொள்கையற்ற கூட்டுச் சேருவதற்கு காங்கிரஸ் துடித்துக் கொண்டுள்ளது. அவர்களும் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர். மறுபுறத்தில் தேர்தல் வருவதற்கு இன்னும் 6 மாதமே உள்ள நிலையில் எதற்காக இந்த காங்கிரசுடன் போக வேண்டும் என்று முலாயம் கட்சி எம்.பி.க்கள் இப்போதே கட்சி மாறி தங்கள் இடத்தை உத்திரவாதப்படுத்தத் துவங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சி தற்போது என்ன விலை கொடுத்தாவது ஆட்சியை காப்பாற்ற குதிரை வியாபாரத்தில் இறங்கியுள்ளது.


மத்திய அரசின் மீது இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாடு தவிர இந்த தேசத்தையே அமெரிக்காவுக்கு அடிமையாக்கத் துடிக்கும் இராணுவ ஒப்பந்தம் உட்பட பல்வேறு பேரங்களின் மூலம் அமெரிக்காவுக்கு சேவகம் செய்யும் இந்த காங்கிரஸ் எப்படியெல்லாம் இடதுசாரிகள் முன்வைத்த பல்வேறு முக்கிய கோரிக்கைகளை உதாசீனப்படுத்தியது என்ற குற்றப் பத்திரிகையை மக்கள் முன் வைத்துள்ளது.


குறிப்பாக ரேசன் பொருட்களை அனைத்து மக்களுக்கும் வழங்குவதில் உத்திரவாதம் வேண்டும் என்று கோரியதையும்,


பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதையும்,


ஆன் லைன் வர்த்தக சூதாட்டத்திற்கு தடை செய்ய வேண்டும் என்று கோரியதையும்,


பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையும் எடுக்காதது மற்றும் ரிலையன்ஸ் போன்ற பெரும் நிறுவனங்கள் மீது விண்ட்பால் வரி விதிக்க வேண்டும் என்று கோரியது


உட்பட எதனையும் மத்திய அரசு நிறைவேற்ற முன்வராமல் எப்படியெல்லாம் அமெரிக்க ஆதரவு கொள்கைகளுக்கு குத்தாட்டம் போடுகிறது என்பதையும் மக்கள் முன் வைத்துள்ளது.


மொத்தத்தில் இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டின் மூலம் இந்திய இறையாண்மையை பலி கொடுத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் மற்றும் ஐ.மு.கூ. ஆட்சியாளர்களுக்கு நாட்டு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். மறுபுறத்தில் அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்ற நிலையில் மதவாத பா.ஜ.க. துடித்துக் கொண்டிருக்கிறது. முற்போக்கு வேடம் போட்டுத் திரியும் அரசியல் வியாபாரிகள் மதவாதமே பெரிய ஆபத்து என்று அணு ஒப்பந்தத்திற்கு பச்சைக் கொடிக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். எனவே, இவர்களின் உண்மை முகத்தை தோலுரிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.

2 comments:

Anonymous said...

//முற்போக்கு வேடம் போட்டுத் திரியும் அரசியல் வியாபாரிகள் மதவாதமே பெரிய ஆபத்து என்று //

Are you not in this list? When Manmohan has signed Nuclear pact you haven't withdraw your support in the name of "மதவாதமே பெரிய ஆபத்து".

What is the difference then?

You helped Nuclear pact half and SP is helping remaing Half. That is the only difference.

சந்திப்பு said...

அனானி நன்பரே!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதவாதிகளுக்கு எதிராக சமரசமற்ற போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் காங்கிரஸ் அரசை ஆதரித்ததும் கூட. அதே சமயம் கருணாநிதி, முலாயம் போன்றவர்கள் மதவாதமே பெரிய ஆபத்து என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இவர்களது கடந்த கால வரலாறு மதவாதிகளோடு குலாவியதை மறக்க முடியாது.

சி.பி.எம். மதவாத எதிர்ப்பு என்ற கோசத்தை முன்வைத்த அதே நேரத்தில் ஏகாதிபத்திய அமெரிக்க அடிமைத்தனத்தையும் வலுவாக எதிர்த்தது எதிர்த்து வருகிறது. இவர்களது அரசியல் எந்த வழியில் என்பதுதான் இங்கே கேள்வி.

சமாஜ்வாடியின் தற்போதைய நிலையால் அவரது கட்சியையே காப்பாற்ற முடியாத நிலையில் உள்ளார். கொள்கையற்ற கூட்டுக்கள் எப்போதும், எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாதது. வரலாறு அவர்களுக்கு பாடம் புகட்டும். குறிப்பாக தமிழகத்தில் வைகோ இதற்கு ஒரு பெரிய உதாரணம்.