பெங்களுரைத் தொடர்ந்து அஹமதாபாத்திலும் தொடர் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அடுத்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு குறி வைத்திருப்பதாக பயங்கரவாதிகள் மிரட்டுகின்றனர். தமிழகத்தில் கூட திருநெல்வேலியில் ஒருவர் பிடிபட்டுள்ளார். இந்த பயங்கரவாதச் செயல்களுக்கு இந்திய முஜாஹீதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக அவர்கள் கூறும் போது 1992ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்று கூறுகின்றனர்.
பயங்கரவாதிகள் எந்தப் பெயரில் வந்தாலும் அது மக்களுக்கு எதிரானதே! குறிப்பாக சாதாரண - ஏழை எளிய உழைப்பாளி மக்கள்தான் இதுபோன்ற செயல்களால் உயிர் பலியாகின்றனர். அப்பாவி மக்களை இவ்வாறு கொல்வதன் மூலம் பயங்கரவாதிகள் எதைச் சாதிக்க விரும்புகின்றனர்? இசுலாமிய மத அடிப்படைவாதம் - குறிப்பாக ஜீகாதி - புனிதப் போர் என்ற பெயரில் மக்களைக் கொல்வதில் இன்பம் கான்பதை இசுலாமிய மதம் அனுமதிக்கிறதா என்பதுதான் சாதாரண மக்களின் கேள்வி? எந்த மதமும் இதனை அனுமதிக்காது! எனவே மத அடிப்படைவாதிகள் உள்நாட்டு - வெளிநாட்டு பயங்கரவாதிகளோடு தொடர்பு வைத்துக் கொண்டு நமது நாட்டின் ஒற்றுமையை துண்டாடுவதையே அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகும். இதற்கு மதச் சாயம் என்பது மிகவும் எளிதில் தீப் பிடிக்கும் மருந்தாகிறது அவ்வளவுதான்.
பயங்கரவாதம் எந்த முகத்தோடு வந்தாலும் அதனை நாம் முறியடிக் வேண்டும். அதனை வேறுடன் பிடுங்க வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதம் - இது இந்து மத உணர்வை பயன்படுத்தி சுயநல அரசியல் ஆதாயம் அடையும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக கலகத்தை தூண்டி விட்டு படுகொலையை நிகழ்த்துகிறது. இந்துத்துவ பயங்கரவாத்தின் உச்ச கட்டம்தான் குஜராத் மோடித்துவ பாசிசம்தான். இந்த இந்துத்துவ பாசிசம் துவக்கி வைத்த பயங்கரவாத விளையாட்டு இந்தியாவை பல்வேறு வடிவங்களில் சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் முறியடிக் வேண்டிய பயங்கரவாதத்தில் முதன்மையானது பெரும்பான்மை இந்துத்துவ பயங்கரவாதமே!
அடுத்து, இந்த இந்துத்துவ பயங்கரவாதத்தை காரணமாகக் கூறிக் கொண்டு பழிக்கு பழி வாங்குவதாக புனிதப் போர் என்ற பெயரில் இந்திய மக்கள் மீது மறைமுகப் போரைத் - குண்டு வெடிப்பு கலாச்சரத்தை நிகழ்த்தும் இன்னொரு பாசிசம் இசுலாமிய மத அடிப்படைவாத பாசிசம்! குறிப்பாக சமீப காலத்தில் இந்த இசுலாமிய மக்கள் மதச்சார்பற்ற - ஜனநாயக சக்திகளுக்கு அணி திரள்வதற்கு மாறாக மத அடிப்படைவாத கண்ணோட்டம் என்ற அமைப்பின் பின்னால் அணி திரள்வதும் - அதனைத் தொடர்ந்து இந்த வாலிபர்களுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டு இத்தயை வெட்கம் கெட்ட பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடச் செய்வதும் கோழைத்தனத்தின் உச்ச கட்டம் என்றே சொல்லலாம். இத்தகைய இசுலாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதத்தையும் நாம் உறுதியாக முறியடிக்க வேண்டும்.
அடுத்து உலகளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா செய்யும் அட்டூழியம். இந்த பயங்கரவாதிகள் பின்லேடனுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரால் ஆப்கானிஸ்தானையும், ஈராக்கையும் தற்போது ஈரானையும் குறி வைத்து செயல்பட்டு வருகின்றனர். ஆப்கானும் - ஈராக்கும் முழுமையாக கபளிகரம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏகாதிபத்திய பயங்கரவாதம் என்பது அனைத்து பயங்கரவாத்திற்கும் தலைமையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் கூட இந்துத்துவ - சங்பரிவார கும்பல் யாருடன் சுகமான கூட்டு வைத்துள்ளது இந்த ஏகாதிபத்திய அமெரிக்காவுடன்தான் அவர்கள் கூட்டு வைத்துக் கொண்டுள்ளனர். அவர்களைத்தான் அவர்கள் உற்ற நன்பர்களாக கருதுகிறார்கள். இத்ன் மூலம் இவர்களுக்கான பாடத்தை வழங்குவது அமெரிக்க பயங்கரவாதம்தான்.
மொத்தத்தில் இன்றைய இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதம், இசுலாமிய பயங்கரவாதம், அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய பயங்கரவாதம் ஆகியவற்றை உறுதியாக முறியடிக்க வேண்டும். இவைகள் ஒன்றுடன் ஒன்று மறைமுகமாகவும், நேரடியாகவும் கூட்டு வைத்துக் கொண்டு தங்களது சுயநல அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. எனவே ஜனநாயக சக்திகள் - இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போர்த் தொடுக்க வேண்டும். அப்போதுதான் மனித குலத்திற்கு முழுமையான விடுதலை கிடைக்கும். மேலும் இந்த பயங்கரவாதம் என்பது தற்போதைய அரசியல் பிரச்சினைகளைக் கூட உணர்வு ரீதியாக பின்னுக்குத் தள்ளும் கருவியாக ஆளும் வர்க்கத்திற்கு பயன்படுகிறது. மக்கள் ரொட்டிக்கும், கூழுக்கும் ஆளாய்ப் பறக்கையில், விலை வாசி உயர்வு என்ற பிரச்சினையால் வதைபட்டு இருக்கையில், அணு சக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய மக்களின் கழுத்தில் பெரிய சுருக்கைப் போடும் மத்திய அரசுக்கு எதிரான போக்கை கண்டுக்கும் தருவாயில் இந்த பயங்கரவாம் நம்மை அச்சுறுத்துகிறது. எனவே பயங்கரவாதம் உழைக்கும் மக்களின் அடிப்படை எதிரி இதை அனுமதிக்கக் கூடாது! இதனை உறுதியாக முறியடிப்போம்!