மத்திய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றுக் கொண்ட பின்னர். இந்த ஆட்சியை காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் கட்சியும் அதன் எடுபிடிகளும் எடுக்கும் முயற்சிகள் நாட்டு மக்களை வெட்கித் தலைகுனிய வைக்கிறது. பெரும்பான்மையை நிருபிப்பதற்காக எம்.பி.க்கள் 30 கோடி முதல் 50 கோடி வரை விலை பேசுவதும், ஆட்சிக்கு ஆதரவு தருவதற்காக மற்ற சிறிய மற்றும் சுயேச்சைகள் தங்களது சுயநல கோரிக்கைகளை முன்னுக்கு வைத்து மிரட்டுவதும் வேடிக்கையாக அல்ல; வேதனையாக உள்ளது.
இந்திய ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள் கூட தற்போதைய குதிரை வியாபாரத்தை கண்டு வெட்கித் தலைகுனிகின்றனர். ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக தங்கள் கொள்கை - கோட்பாடுகள் என அனைத்தையும் கைவிடத் தயாராகி விட்டனர் காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும்.
இது ஒருபுறம் நடந்துக் கொண்டிருக்கையில் முகேசு அம்பானியும் - அனில் அம்பானியும் அடிக்கும் கூத்தைப் பார்க்கும் போது. இந்தியாவையே ஆட்டிப் படைக்கும் அசுரர்களாக - சர்வ வல்லமைப் படைத்தவர்களாக தங்களைக் காட்டிக் கொள்கின்றனர். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் ஏதோ இந்த இரண்டு பேருக்கும் நிகழும் குடும்பச் சண்டைப் போல இதனை காட்டி திசை திருப்பி இவர்கள் மீது ஒரு கரிசனத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். உண்மை என்ன? கடந்த 10 ஆண்டு காலமாக இந்த அம்பானிகளின் சொத்து மதிப்பு பெரும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இருவருமே உலகப் கோட்டீசுவர்களின் வரிசையில் 10 இடத்திற்குள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அனில் அம்பானி சமாஜ்வாடியைப் பயன்படுத்தி ஆட்சியைக் காப்பாற்றுகிறார். மறுபுறம் முகேசு அம்பானி மன்மோகனை பயன்படுத்தி ஆட்சியைக் காப்பாற்றுகிறார். இருவரும் செய்வது என்ன? இந்த ஆட்சியைக் காப்பாற்றுவதுதான் இருவரின் நோக்கமும். ஆனால் ஏதோ திசை மாறிச் செல்பவர்கள் போல ஒரு காட்சி இங்கே பரப்பப்பப்படுகிறது. இந்த பெரு முதலாளிகள் இந்திய மக்களின் இரத்தத்தை அட்டைப் போல் உறிகின்றனர். இந்தியாவின் முக்கிய கேந்திரமான தொழில்களில் கொடி கட்டிப் பறப்பது இந்த அம்பானிகள்தான். செல்போன் சேவை, தொலைத் தொடர்புத்துறை, பெட்ரோலியப் பொருட்கள், மளிகை வியாபாரம் முதல் மாடு பிடிக்கும் வியாபாரம் வரை இந்த அம்பானிகளின் கைகளிலேயே உள்ளது.
சமீபத்தில் இந்த பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை உயர்வைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான கோடிகளை இலாபமாக ஈட்டிய இந்த அம்பானிகள் மீது வரி விதிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் வலியுறுத்தியபோது மத்திய மன்மோகன் பே.. பே... என்று முழித்தார். என்ன காரணம்? தற்போதைய இவர்களது மாடு பிடி வியாபாரத்திற்கு பின்புலமாக இவர்கள் இருக்க வேண்டும் என்று எண்ணுவதே. மொத்தத்தில் தற்போதைய அ.மு.கூ. அரசு அம்பானிகள் முன்னேற்றக் கூட்டணி அரசாகத்தான் செயல்படுகிறது. தலைமை நிர்வாகியாக மன்மோகன் செயல்படுகிறார் அவ்வளவுதான்.