January 04, 2008

புத்தாண்டு சம்பவங்கள் யார் பொறுப்பு?


2008 புத்தாண்டு தமிழகத்தையும். இந்தியாவையும் உலுக்கும் வகையில் பிறந்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் உச்சகட்டம் சென்னை சவேரா ஓட்டலில் இளைஞனின் உயிரை பறித்துக் கொண்டது. மும்பையில் இரண்டு இளம் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களாலும் இந்தியா உறைந்துப்போயுள்ளது.


இந்த இரண்டு சம்பவங்களையும் தனித்தனியான சம்பவமாக பார்க்க முடியாது. இது ஏதோ தன்னிச்சையாக ஏற்பட்டது என்று ஒதுங்கிக் கொள்ளவும் முடியாது. இந்திய கலாச்சாரக் கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக ஆங்கிலப் புத்தாண்டு மாறியுள்ளது. தமிழ் புத்தாண்டு போன்ற மொழிவாரி மாநிலப் புத்தாண்டுகள் சம்பிரதாயப் பூர்வமாக மாறிவிட்டது. அது வீட்டுக்குள்ளிருக்கும் பெண்களுக்காக மாற்றி விட்டனர். அது பழமையின் அடையாளமாக மாறிக் கொண்டிருக்கிறது.



ஆங்கிலப் புத்தாண்டை ஆரவாரமாக கொண்டாடுவதை நாம் தவறாக விமர்சிக்க முடியாது. இவ்வளவு விபரீதமாக - அலங்கோலமாக - அநாகரீகமாக கொண்டாடுவதற்கு யார் காரணம் என்பதை நாம் அலசியேயாக வேண்டும்.



உலகமயம் நம்மைப் போன்ற நாடுகளுக்கு வெறும் அந்நிய மூலதனத்தை மட்டும் கொண்டுவரவில்லை. கூடவே அதன் நச்சுக் கலாச்சாரத்தையும் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக இத்தகைய கலாச்சாரங்கள் கார்ப்பரேட் பன்னாட்டு முதலாளிகளால் திட்டமிட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்குள்ளும் அவர்களது மறைமுக சுரண்டல் யுத்தியே அடங்கியுள்ளது என்பதை நாம் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்.



மில்லினியம் - 2000 ஆம் ஆண்டை ஓராண்டுக்கு முன்னாலேயே கொண்டாடியதை உலகம் அறியும். இதற்காக ஒரு பெரும் பிரச்சார டைனோசர்களையே இறக்கி விட்டனர் உலகமய காப்பாளர்கள். இதன் மூலம் தங்களை உலக பணக்காரர்கள் வரிசையில் முந்திக் கொண்டனர்.



மில்லினியத்தில் தொடங்கிய இந்த சீரழிவு கலாச்சாரம் இன்றைக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது. குறிப்பாக நமது நவீன தகவல் தொழில்நுட்ப இளைஞர்கள் அல்லும் - பகலும் 12 மணி நேரம் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அவர்களது மூளை மானிட்டர்களின் திரைக்கு நாள்தோறும் இரையாகிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக கால் சென்டர்கள் - பி.பி.ஓ. என ஐ.டி. துறைகளில் அவடு் சோர்சிங் கலாச்சாரத்தின் மூலம் விரைவாக சுரண்டிக் கொழுக்கின்றனர். ஐ.டி. படித்த நவீன இளைஞர்கள் குடும்பத்தை மறந்து - உறவினர்களை மறந்து ஐ.டி. வளாகங்களும் - இணையதளங்களுமே உலகமாகிப் போயுள்ளது. உணவுக் கலாச்சாரம். மொழிக் கலாச்சாரம். உடைக்கலாச்சாரம் என அனைத்தும் அந்நியமாகிப்போன இளைஞர்கள் - யுவதிகளின் மனதை மேலும் சுரண்டுவதற்கு - அவர்களை எப்போதும் ஜாலியான உலகத்தில் மிதக்கச் செய்வதற்கு இந்த பன்னாட்டு கலாச்சார காவலர்கள் ஏற்பாடு செய்து கொடுத்ததுதான் டிஸ்கொத்தே முதல் ரிசோர்ட் கலாச்சார திருவிழாக்கள் வரை.



இதன் தொடர்ச்சியே இந்த புத்தாண்டை இனிதே வரவேற்க - நமது நவீன இளைஞர்களின் பாக்கெட் மணியை களவாட பெரும் மூன்று நட்சத்திர - ஐந்து நட்சத்திர ஓட்டல்களும் - பன்னாட்டு நிறுவனங்களும் பெப்சி - கோக் மற்றும் இதர மதுபான நிறுவனங்கள் - ஐ.டி. நிறுவனங்கள; உட்பட பலரும் ஸ்பான்சர் செய்து இந்தப் புத்தாண்டை நவீன முறையில் வரவேற்க இளைஞர்களுக்கு வலை வீசுகின்றனர். இதற்கு ஒரு இரவிற்கு ரூபாய் 5000 வரை உறக்கப்படுவதாக கூறப்படுகிறது. இங்கே குட்டி - புட்டி - ஆட்டம் - பாட்டம் - கொண்டாட்டம் - முழு சுதந்திர உலகமே இங்கேதான் இருப்பதைப் போன்ற ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றனர்.

ஏன் நமது தமிழ் சின்னத்திரை என்ன செய்து கொண்டிருக்கிறது. கனவன் - மனைவி நடனம் ஆடுவதை பெரும் பொழுது போக்காக மாற்றியுள்ளது. தற்போது திருமண விழாக்களில் கூட சர்வ சாதாரணமாக பெண்கள் நடனம் ஆடுவதை பார்க்க முடிகிறது. சினிமாவை மிஞ்சும் நடனக் குழுக்கள் எல்லாம் இன்றைக்கு புற்றிசல்போல் உருவெடுத்துள்ளது. இத்தகையவர்களின் ஆசிகள் எல்லாம்தான் இன்றைக்கு புத்தாண்டு சீரழிவின் உச்சத்திற்கு சென்றுள்ளது.
மற்றொரு புறம் சவேரா ஓட்டர் நிர்வாகம் சட்டவிரோதமாக அதன்கான விசேஷ வசதிகள் இல்லாத சுழலில் நீச்சல் களத்திலேயே மேடையெழுப்பியுள்ளது. இந்த சுரண்டல்வாதிகளுக்கு புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தைவிட எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இவர்கள் மீது தமிழக அரசு - காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களது கவனக்குறைவும் - அலட்சியப்போக்குமே இந்த இளைஞரின் உயிரிப் பறிப்புக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மேலாளர் ஒரு நாள் இரவிற்குள் ஜாமின் பெற்று விடுகிறார். நீதிமன்றம் இதுபோன்ற விசயங்களுக்கு உடனடியாக ஜாமின் வழங்குவது எந்த வகையில் நியாயம் என்றுத் தெரியவில்லை. சாதாரண மனிதனுக்கு சிறைக் கம்பிகளை மட்டுமே கொடையாக வழங்குகின்றனர் சிறு குற்றத்திற்கு கூட. பணம் படைத்தவர்களுக்கே சட்டம் சாதகமாக இருக்கறிது. இதுவும் உலகமயக் கலாச்சாரத்தின் ஒரு பகுதிதான்.



மேலும் சமீப ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எதிராக இந்துத்துவ சக்திகள் தாக்குதல் தொடுத்து வருகின்றன. இது வெறும் மத அடிப்படையில் நின்று மட்டுமே பார்க்கப்படுகிறது. இவ்வாறு கொண்டாடுபவர்களுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதும் நடைபெற்று வருகிறது.



மும்பை சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 80 பேர் கொண்ட கும்பல் என்று கூறப்படுகிறது. அவர்கள் அத்துனைப் பேரையும் கைது செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இந்த கார்ப்பரேட் பன்னாட்டு கலாச்சார உற்பத்தியாளர்களின் பிடியிலிருந்து நமது இளைஞர்களை விடுவிக்க வேண்டும். அதன்றகு துணை போகும் நமது சின்னத்தரை - பெரியதிரை - பத்திரிகை - மீடியா உலகம் என அனைத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். மாற்றுக் கலாச்சார விழாக்களை தெருக்கள்தோறும் கொண்டாட வேண்டும் கட்டுப்பாட்டிற்குள் நின்று. இதுவே இதுபோன்ற கலாச்சார பாசிஸ்ட்டுகளின் பிடியிலிருந்து நமது நாட்டை விடுவிப்பதற்கான வழியாகும்.

1 comment:

Unknown said...

அட, அருமையான பதிவு! இதே ரீதியில் இப்பதான் ஒரு பதிவு சுடச்சுட எழுதினேன்: http://thanjavuraan.blogspot.com/2008/01/blog-post.html

நான் உங்கள் கருத்துக்களோடு முழுமையாக ஒத்துப் போகிறேன்!

தொடருங்கள்...நன்றி!