January 22, 2008

கயர்லாஞ்சியும் கவுகாத்தியும்!கடந்த ஐந்து தினங்களுக்கு முன் எட்லைன்ஸ் டுடே மற்றும் சி.என்.என். - ஐ.பி.என். போன்ற முக்கிய ஆங்கில தொலைக்காட்சி சேனல்களில் திரும்பத் திரும்ப அசாமில் நடைபெற்ற ஆதிவாசிகளுக்கு எதிரான படுகொலை காட்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியை கண்ட அனைவரின் மனம் துடிதுடித்துப் போயிருக்கும். இப்படியும் நிகழுமோ? மனித குலத்திற்கு எதிராக இன்னொரு மனித குலம் இயங்குமோ! என்ற பல கேள்விகள் மனதை நடுங்க வைக்கும் வன்முறை உச்சக்கட்டம். அப்படி என்னதான் இந்த ஆதிவாசிகள் செய்து விட்டார்கள்? இந்தியா இன்னொரு வல்லரசாக போகிறது என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் பெரு முதலாளித்துவ ஏஜன்டுகளின் பிரச்சார ஒளிவெள்ளத்தில் இதுபோன்ற காட்சிகள் அடித்துச் செல்லப்படாமல் இருப்பதே பெரிய விசயம்தான். இந்தியா 21 ஆம் நூற்றாண்டை நோக்கி வேகமாக செல்கிறதா? அல்லது கற்காலத்தில்தரான் இருக்கிறதா? என்ற கேள்வியைத்தான் ஆதிவாசிகளுக்கு எதிரான அசாம் படுகொலை நிகழ்வுகள் எழுப்புகின்றன.
அப்படி என்னதான் கேட்டு விட்டார்கள் இந்த ஆதிவாசிகள்? காலையில் எழுந்தவுடன் சுடச் சுட டீ போட்டு குடித்து நம்முடைய மனதையும் - உடலையும் வளமாக்கிக் கொள்கிறோமே அதற்கு பின்னால் இருப்பவர்கள் அசாம் டீ எஸ்டேட் தொழிலாளிகள். அசாமில் மட்டும் 800க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து பணிபுரியும் ஆதிவாசி மக்கள் பல்லாண்டுகளாக அடக்கப்பட்டும் - ஒடுக்கப்பட்டும் - வாழ்வின் அடித்தட்டில் நசுங்கிய இருந்து வருகின்றனர். அவர்களின் உரிமை என்று சொன்னால் அது டீ எஸ்டேட்டில் வேலை செய்வது மட்டும்தான். இத்தகைய ஆதிவாசி மக்கள் தங்களது சந்ததியினராவது அடுத்த கட்டத்திற்கு ஓரடி முன்வைக்க தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். இந்த கோரிக்கையில் மிகவும் நியாயம் உண்டு. இருப்பினும் என்ன? ஆட்சியாளர்களின் கையாலாகத்தனம்... வேலையின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத அவலமும். அவர்களது வாழ்வுரிமையை பாதுகாக்க முடியாத வெற்று வீராவேசமும் இந்த மக்களை மேலும் மேலும் அடமட்டத்தில் அழுத்திக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அழுத்தப்பட்ட அம்மக்களின் நியாயமான கோரிக்கை கூட மற்றொரு தரப்பினரின் ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படுவதாக எதிர்ப்பு காட்டப்பபடுகிறது. இதனை நாம் ராஜஸ்தானிலும் கண்டோம். நாடு முழுவதும் இதுதான் நிலைமை! ஏன் தமிழகத்தில் கூட அடித்தட்டில் இருக்கும் அருந்ததி மக்களுக்கு உள் ஒதுக்கீடு கேட்டால் இன்னொரு பிரிவினருக்கு பாதகமாக தெரிகிறது. ஆட்சியாளர்களும் பிரச்சனைக்கு உடனடியாக உரிய தீர்வை மேற்கொள்வதற்கு மாறாக இரண்டு உழைப்பாளி மக்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தி வருகின்றனனர்.

அசாமின் முக்கிய தலைநகரான கவுகாத்தியில் நடத்ப்பட்ட ஊர்வலத்தின் போது இரண்டு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து ஐந்து ஆதிவாசி இளைஞர்கள் நட்ட நடுரோட்டில் நாய்களைக் கொல்வதைப் போல் கற்கலாலும் - கட்டையாலும் - கத்தியாலும் - இரும்பாலும் - பூட்ஸ் காலாலும் அடித்தே கொன்று போட்டனர். இதில் 12 சிறுமியும் அடக்கம். இது தவிர ஆதிவாசி பெண்களின் உடைகளை உறுவி அம்மனமாக்கி மானபங்கப்படுத்தியதோடு - வன்கொடுமைகளையும் நிகழ்த்தியது ஆதிக்க வெறிபிடித்த மனிதவிரோத கும்பல்.
மத்திய - மாநில ஆட்சியாளர்கள் சுதந்திரம் பெற்று இன்னும் 60 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட அடிப்படையான கல்வியையோ அல்லது வேலைவாய்ப்பையோ குறைந்தபட்ச உத்திரவாதம் கூட செய்யாமல் - ஓட்டை வண்டியில் ஓடிக் கொண்டுள்ளனர். மேலும் இந்தியாவில் ஏற்கனவே உள்ள நிலப்பிரபுத்துவ சமூகத்தோடு சமரசம் செய்துக் கொண்டு - இந்திய ஜாதிய முரண்பாடுகளையும் வளர்த்து வருகின்றனர். இதன் விளைவு ஒரு மனிதனை இன்னொரு மனிதனுக்கு எதிரானவனாக சித்தரிக்கும் அவல நிலையில் இந்தியா தத்தளிக்கிறது. இந்தியாவின் ஒரு பகுதி மக்கள் இன்னும் காட்டுமிராண்டி (ஆதிவாசிகள் அல்ல) நிலையில் இருப்பதற்கு யார் காரணம்? இந்தியாவின் அதிவேக வளர்ச்சியை நாளொரு பொழுது வான வேடிக்கையாக வேடிக்கை காட்டும் ஆளும் வர்க்க கும்பல் - நாள்தோறும் சென்செக்ஸ் புள்ளி விவரத்தை காட்டி... உலகின் சுங்பபர் பவராக தன்னை பொருளாதாரத்தில் சுரப்புலியாக காட்டிக் கொள்ளும் சிதம்பரங்களுக்கு இதுவெல்லாம் ஏதோ இரண்டு கும்பல்களுக்குள் ஏற்பட்ட கலவரமாக மட்டுமே தெரியும்.
இந்திய முன்னேற்றத்திற்கு சரியான பாதையை படித்த மேல்தட்டு வர்க்கம் அடையாளப்படுத்தாமல் - தன் மோதாவித்தனத்தை வெளிக்காட்டிக் கொண்டிருப்பதும் இந்திய மக்களுக்கு செய்யும் துரோகமாகவே தெரிகிறது. இந்தியாவின் எதிர்காலம் இடதுபாதையை நோக்கியே அமையட்டும்...
தலித் மக்களுக்கு எதிரான கயர்லாஞ்சி கொடூரம் அடங்குவதற்குள் இன்னனொரு கயர்லாஞ்சியாக கவுகாத்தி வந்திருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள எட்டு கோடி பழங்குடி மக்களும் - 25 கோடி தலித் மக்களும் - இதர உழைக்கும் மக்களோடு கைகோர்த்து சமூகத்தின் அடித்தளத்தை மாற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபடுவதே சரியான திசை வழியாகும்! படித்த மேல் தட்டு வர்க்கம் இந்தியாவின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டிருக்கும் என்று சொன்னால் அது இந்த மக்களை அணிதிரட்டுவதற்கு தன்னுடைய மேனேஜிரியல் ஸ்கில்லை உபயோகப்படுத்த வேண்டும். இதுவே அவர்கள் தேசத்திற்கு செய்யும் தொண்டாகும்!

Links: