பசுவின் புனிதம் அரசியலின் அங்கமாகியுள்ளது. அது பெரும்பான்மை இந்து மக்களின் உணர்வுகளோடு ஒன்றுவதாக அடையாளப்படுத்தப்படுகிறது. அந்த வழியில் அம்மாவின் கருணை இன்றைக்கு பசுவின் மேல் வெளிப்பட்டுள்ளது ஆச்சரியப்படுவதற்கில்லை.
இராமேஸ்வரத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 55 பசுக்களில் 15 பசுக்கள் இறந்துவிட்டதாகவும்இ மேலும் சில பசுக்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் வருத்தப்பட்டு - ஆழ்ந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா.
வாயில்லா பிராணியான பசுவின் மீதான கருணை புள்ளிலரிக்கச் செய்கிறது. கோவில்களுக்கு நேர்ந்து விடும் இதுபோன்ற பசுக்களை பராமரிப்பதற்காக நாளொன்றுக்கு :ரு. 900 (900 ரூபாயா? 90 ரூபாயா? என்பதை அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்)வழங்கப்படுவதாகவும். இது முழுமையாக செலவிடப்படுவதில்லை என்று குறைப்பட்டுள்ளதோடு. அறநிலையத்துறை அமைச்சர் பசுவின் மீது எந்தவிதமான அக்கறையும் செலுத்தவில்லை என்றும் கண்டித்துள்ளார்.
அம்மாத்துவா தலைவர் சொல்லித்தான் ஒரு பசுவின் பராமரிப்புக்கு நாளொன்றுக்கு ரூ. 900 வழங்கப்படுவதாக தெரிகிறது. தமிழகத்தில் மாடு வைத்துக் கொண்டுள்ள யாரையாவது கேட்டுப் பாருங்கள். ஒரு பசுவிற்கு ஒரு நாளைக்கு பராமரிப்புச் செலவிற்காக எவ்வளவு ஆகிறது என்று? மிக அதிகப்பட்சமாக போனால் ரூ. 100 கூட ஆகாது என்பதுதான் உண்மை.
அது சரி சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வான விளைவுகளால் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் கைதிகளாக ஆயிரக்கணக்கில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது பராமரிப்பு செலவு எவ்வளவு தெரியுமா? நாள் ஒன்றுக்கு ரூ. 50 கூட ஒதுக்கப்படுவதில்லை. இதனால் பல்வேறு கைதிகளுக்கு தேவையான அடிப்படை ஊட்டச் சத்துக்கள் கூட கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம்.
மேலும் தமிழகத்தில் வறுமையால் உழலக்கூடிய மக்கள் தொகை ஆண்டுக் காண்டு அதிகரித்து வருகிறது. நாளென்றுக்கு ரூ. 20க்கும் குறைவான வருமானமுள்ள பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பட்டினியாலும் - நோய் - நொடிகளாலும் - சத்துணவுப்பற்றாக்குறையாலும் நாள்தோறும் இறந்து வருகின்றனர். இத்தகைய வறுமைப்பட்ட மக்கள் மீதெல்லாம் அம்மாவிற்கு கருணை ஏற்படாதது ஏனோ?
பசுவைப் பேசினால் அரசியலாக்கலாம்... வறுமைப் பேசினால் அரசியலாக்க முடியுமா? இதுதானே அம்மாவின் லாஜிக்.
அம்மாவின் அதிமுக - கருப்பு - சிவப்பு வண்ணத்தை காவியிடம் படிப்படியாக அடகு வைத்து வருகிறது. திராவிட இயக்கப் போர்வைக்குள் ஒளிந்துக் கொண்டிருக்கும் தமிழக இந்துத்துவ இயக்கமாக அதிமுக மாறி வருவதைத்தான் இவையெல்லாம் காட்டுகிறது.
அம்மாவின் இந்துத்துவ அரசியல் பெரியார் மண்ணில் எடுபடாது என்று சொல்லிக் கொண்டு ஏமாறாமல் இருப்பார்களா? நமது திராவிட இயக்க கண்மணிகள் என்பதே நமது கவலையாக உள்ளது.