ஹலோ தலைவரே! என்னங்க திடீருன்னு அம்மாத்துவான்னு சொல்றீங்களேன்னு குழப்பமா இருக்கா... இந்த புத்தாண்டின் சிறப்பே அதுதாங்க...
இந்துத்துவாவின் தமிழக பரிணாமமே அம்மாத்துவா... அதாங்க... அம்மா மோடியின் வெற்றியால் அகம் மகிழ்ந்ததோடு நிற்காமல், வீட்டுக்கு அழைத்து விருந்தும் கொடுத்தார்.
மரண வியாபாரியின் வெற்றி குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், அது பாசிச அணுகுமுறைக்கு - அச்சத்தின் பிடியிலுள்ள மக்கள் குஜராத்தில் தற்போதும் நிர்வாணமாக இருப்பதை நிரூபிக்கும் வெற்றிதான் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
குஜராத்தில் அகிம்சை - இம்சிக்கப்பட்டுள்ளது. அதனை தமிழகத்திற்கு தாம்பளமிட்டு கொண்டுவர முற்படுகிறார் ஜெயம்மா...
கோத்ரா ரயில் எரிப்பில் உண்மை மட்டுமா எரிக்கப்பட்டது? சிறுபான்மையினரின் உடல்களும்தானே... என்னதான் திரும்பத் திரும்ப உண்மையை வெளிச்சம் போட்டு காட்டினாலும் அது இந்துத்துவ - மோடித்துவ ஜோதியிலல்லவா கரைந்து விட்டது.
காந்தியை கோட்சே கொன்றதைவிட நம்முடைய காங்கிரஸ்காரர்கள் அவரது சிந்தனையை அணுதினமும் கொன்றுக் கொண்டேயிருப்பதுதான் மோடித்துவ வெற்றியின் அகோரம்.
எந்த கடைச் சரக்கை விற்றால் அதிகாரத்தின் உச்சியில் செல்லலாம் என்பது புதிய தாராக மந்திரமாக மாற்றப்பட்டுள்ள சுழலில், அம்மா மட்டும் விதிவிலக்கா என்ன? தமிழினத்தை மீட்கப்போவதாக - அண்ணா - பெரியாரின் கொள்கைகளை மீட்டு தமிழகத்தில் புரட்சிப் புயலாய் சுழலப்போவதாக கூறியவர்கள் எல்லாம் அம்மாவின் அரசியல் சுழலில் அடங்கிப்போய்விட்டதும், அவர்களது புது சரக்கை ஏற்க மக்கள் தயாராக இல்லாதபோது... அண்ணாவாவது, பெரியாராவது... அம்மாவே சரணம்... மோடித்துவாவே வாழ்க... என்ற குரல்களே விம்மிக்கொண்டு வருகின்றன.
திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியும் - காந்தியத்தின் சிதைவுகளும் இந்துத்துவ - மோடிகளுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருக்கின்றன. நாகரீக உலகில் மனிதனை மனிதன் கொல்லும் அரக்கர்களுக்கு அரசியல் வாழ்வளிப்பது... கொலைகாரன் கையில் பெரும் அணுகுண்டை கொடுத்தது போலாகியுள்ளது.
கடந்த காலத்தில் அம்மாவின் அரசியலில் இந்துத்துவா வாடை நாற்றமெடுத்தது. அது ஆடு - கோழி பலியிடலை தடை செய்து சரணம் போட்டபோது மென்மையான இந்துத்துவாவாக பரிமாணம் எடுத்து, தற்போது ஆட்சியையும் - அதிகாரத்தையும் இழந்த ஜனநாயக விரோதி மோடித்துவ வெற்றியில் மஞ்சும் குளிக்க கனா கண்டுக் கொண்டிருக்கிறார்.
அதிகாரத்தையும்- ஆட்சியையும் இலக்காக வைத்தவர்கள் வேண்டுமானால் அவர்கள் ஏற்றுக் கொண்ட கொள்கைகளை புதைத்திருக்கலாம்... ஆனால் மக்கள்?
அம்மாத்துவா என்பது அரசியலில் அழிவு என்பதை ஆணித்தரமாக நிரூபிக்க காத்திருக்கிறார்கள்!