April 30, 2007

மே தின வாழ்த்துக்கள்!


உலகம் முழுவதும் இருக்கும் உழைப்பாளர்களுக்கும், தமிழ் வலைப் பதிவர்களுக்கும் சந்திப்பின் நெஞ்சார்ந்த மே தின வாழ்த்துக்கள்!
‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்ற முழக்கத்தை காரல் மார்க்சும் - ஏங்கல்சும் கம்யூனி°ட் கட்சி அறிக்கையில் முன்வைத்து, உலகத் தொழிலாளர்கள் தங்களுக்கான சுரண்டலற்ற ஒரு சோசலிச அரசை அமைத்துக் கொள்வதற்கு வழிகாட்டினர்.
18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் ஏற்பட்ட முதலாளித்துவ எழுச்சியும், அதன் பகாசூர சுரண்டலும் உலகத் தொழிலாளர்களை ஒரு நாளைக்கு 12 முதல் 16 மணி நேரம் வரை உழைப்பை சுரண்டி கொழுத்தது.
இதற்கு எதிராக உலகம் முழுவதும் 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணி நேர ஓய்வு என்ற முழக்கம் எதிரொலிக்கத் துவங்கியது அன்றைய தினம். அதன் அடிச்சுவட்டில் அமெரிக்காவில் 1886 இல் பிரம்மாண்டமான தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றது. குறிப்பாக சிக்காகோவில் நடைபெற்ற பெரும் எழுச்சியும், அதனை எப்படியாவது தங்களது கொடுங்கரங்களால் ஒடுக்க வேண்டும் என்ற மிருக வேட்கைக் கொண்ட ஆளும் வர்க்க போலீசு எழுச்சி மிக்க ஊர்வலத்தில் வெடி குண்டுகளை வீசியதோடு, தொழிலாளர்கள் மீது மிருகத்தனமாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியாயினர். ஆளும் வர்க்கம் இந்தப் போராட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அப்பட்டமாக மறைத்து விட்டதோடு, தொழிலாளர் தலைவர்களையும் தூக்குமேடைக்கு அனுப்பியது ஆளும் வர்க்க நீதிமன்றம். அன்றைய தினம் தொழிலாளர்களின் உதிரத்தால் சிக்காகோ நகரமே செந்நிறமாகி விட்டது. இது சிக்காககோவோடு மட்டும் நின்று விடாமல், அமெரிக்கா முழுவதுமே பல லட்சக்கணக்கமான தொழிலாளர்கள் மேலும் வீரத்தோடு அடக்குமுறைக்கு எதிராகவும் 8 மணி நேர வேலை கோரிக்கை வெற்றியடை வேண்டும் என்ற நோக்கத்தோடு வீறு கெண்டு எழுந்தனர். இறுதியில் வெற்றியும் அடைந்தனர்.
உலகமய சூழலில் தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி பெற்றெடுத்த 8 மணி நேர வேலை என்பது இன்றைக்கு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையிலும், கால்சென்டர்களிலும், அவுட்சோர்சிங் துறை பணிகளிலும், இன்ஜினியரிங், கட்டிட தொழில் என அனைத்துத் தொழில்களிலும் 12 மணி நேர வேலை என்ற நிலைக்கு தள்ளியுள்ளது உலகமயமாக்கல். இதற்கு எதிராக மீண்டும் உலகத் தொழிலாளர்கள் அணித் திரளவேண்டும். குறிப்பாக நன்கு படித்த, ஒழுங்கமைக்கப்பட்ட வலைப்பின்னலோடு செயலாற்றக்கூடிய ஐ.டி. தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை என்ற நிலையை உறுதியாக பற்றிக் கொள்வதன் மூலம் மீண்டும் ஒரு எழுச்சியை புதிய வரலாற்றை, அதுவும் முதலாளித்துவத்தின் இறுதி அத்தியாயம் நடைபெறும் சூழலில் உருவாக்கிட உறுதியேற்க வேண்டும்.

வாழ்க! மே தினம்!! கருத்தாலும் - கரத்தாலும் உழைக்கும் அனைவருக்கும் மே தின புரட்சி வாழ்த்துக்கள்!

April 25, 2007

இன்னொரு பூமி!

பூமியைப் போன்ற தோற்றமுடைய புதிய கிரகத்தை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தில் உயிர் வாழ்வதற்குத் தேவையான தட்ப வெப்ப நிலையும், தண்ணீரும் இருப்பதாக அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், இந்த புதிய கிரகம் குறித்த ஆய்வில் ஈடுபட்ட குழுவின் தலைவருமான ஸ்டீபன் உத்ரி கூறுகையில், சூரிய குடும்பத்திலிருந்து இது தனித்து வெளியே இருக்கிறது. சிவப்பு நிறத்தில் இந்த கிரகம் காணப்படுகிறது.
இதற்கு OGLE-2005-BLG-390Lb என பெயரிடப்பட்டுள்ளது. பூமியை விட மிகப் பெரிதாக இது இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


இது கிளீஸ் 581 என்ற நட்சத்திரத்தை சுற்றி வந்து கொண்டுள்ளது. இந்தப் புதிய கிரகத்தில் பாறைகள் நிறைந்து காணப்படுவதாக கணித்துள்ளோம். அதேபோல உயிரினங்கள் வசிக்க் கூடிய தட்பவெப்ப நிலையும், தண்ணீரும் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த கிரகத்தில் பூஜ்யம் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை தட்பவெப்பம் நிலவுவதாக கணிக்கப்பட்டுள்ளது. தண்ணீர், திரவ நிலையில் இங்கு இருக்கலாம். சூரியக் குடும்பத்திற்கு வெளியே இதுவரை 200க்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்துமே வாயுக்களால் நிரம்பியவை. ஆனால் இந்தப் புதிய கிரகம் கிட்டத்தட்ட பூமியைப் போலவே இருப்பதாக நினைக்கிறோம்.



இந்த கிரகத்தின் சுற்று வட்டம் பூமியின் சுற்று வட்டத்தை விட 1.5 மடங்கு அதிகம். இந்த கிரகத்தில் பல கடல்களும் இருக்கக் கூடும். பூமியைப் போலவே இது இருப்பதால் இந்தக் கிரகம் குறித்த ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும். எதிர்காலத்தில் பல அரிய தகவல்களும், ஆச்சரிய தகவல்களும் நமக்குக் கிடைக்கக் கூடும். இந்தப் புதிய கிரகம் பூமியிலிருந்து 125 டிரில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்றார் உத்ரி. சிலியில் உள்ள லா சில்லா நகரில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன தொலைநோக்கி மூலம் இந்த புதிய கிரகதத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

April 21, 2007

பா.ஜ.க.வின் தூய்மை - நேர்மை

பாரதிய ஜனதா கட்சி தன்னைத்தானே வித்தியாசமான கட்சி என்று அழைத்துக் கொள்வது உண்டு. ஆனால், அந்த கட்சி எந்த வகையில் வித்தியாசமானது என்பது நாளுக்கு நாள் அம்பலமாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு கூட லஞ்சம் வாங்கி பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர் பாஜகவை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் வெளி வந்து 6 மாதத்திற்குள் குஜராத்தை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பாபுபாய் கடரா கனடாவுக்கு ஆள் கடத்த முயன்ற போது கையும் களவுமாக பிடிபட்டு தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். தனது மனைவி மற்றும் மகள் பெயர்களில் உள்ள பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி ஒரு பெண்ணையும், பதினோரு வயது சிறுவனை யும் கனடாவுக்கு சட்டவிரோதமாக கடத்திச் செல்ல முயன்ற போது பாஜக எம்.பி. பிடிபட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டுகளை சோதனை செய்யும் குடியேற்ற அதிகாரிகளிடமிருந்து அதிக விசாரணை இருக்காது என்பதை பயன்படுத்தி இவ்வாறு இவர் சட்டவிரோதமாக பலரை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். இவரது இந்த வித்தியாசமான தொழிலுக்கு பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் பலரையும் புரோக்கர்களாக பயன்படுத்தி வந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.பாபுபாய் கடரா பாஜக எம்பி மட்டுமல்ல. குஜராத் மாநில விஸ்வ இந்து பரிஷத் தலைவராகவும் இருக்கிறார். குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம் மக்களை நரவேட்டையாடியதில் விஎச்பிக்கு முக்கிய பங்கு உண்டு. எத்தகைய கிரிமினல் பேர்வழிகளால் மதவெறி அமைப்புகள் நடத்தப்படுகின்றன என்பதற்கு கடரா ஒரு சமீபத்திய உதாரணமாகும்.
ஹவாலா ஊழலில் சிக்கியவர்தான் பாஜக-வின் தலைவர் எல்.கே.அத்வானி. இந்த விவகாரம் அம்பலமானவுடன் பதவியை ராஜினாமா செய்வதாக நாடகமாடினார். பின்னர் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை என்று தனக்குத் தானே நற்சான்றிதழ் வழங்கிக் கொண்டு வெட்கமின்றி மீண்டும் பதவிக்கு வந்தார். இப்போது கடராவை பாஜகவிலிருந்து நீக்கியிருப்பதாக அவசர அவசரமாக அறிவித்துள்ளனர். பாஜகவை பொறுத்தவரை தவறு செய்பவர்கள் அந்த கட்சியில் இருக்க முடியாது என்பதல்ல. விபரம் இல்லாமல் மாட்டிக் கொண்டவர்கள் நீக்கப்படுவார்கள் என்பதுதான் பாஜக-வின் நடைமுறை தர்மமாக உள்ளது.
பாஜகவின் தேசிய தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக வீடியோ கேமராவால் பிடிபட்டார். வெங்கையா நாயுடு நில மோசடி ஊழலில் சிக்கினார். பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்த போது நடைபெற்ற ஊழல்கள் எண்ணிலடங்கா. அந்த கட்சி மோசடி பேர்வழிகளின் பாதுகாப்பு மையமாகவே செயல்பட்டு வருகிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது. பாபுபாய் கடராவின் மோசடிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரது வெளிநாட்டு பயணங்கள் முழுவதையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே இத்தகைய இழி செயல்களில் ஈடுபடுகிறார் என்றால் பாஜகவில் எத்தகைய நபர்களுக்கு பதவி தரப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். பாஜக ஒரு வித்தியாசமான கட்சிதான். விதவிதமாக மோசடி செய்து பணம் சம்பாதிப்பது எப்படி என்பதில்தான் அந்த கட்சி வித்தியாசம் காட்டி வருகிறது.
Thanks:Theekkathir Editorial

April 20, 2007

தகவல் தொழில்நுட்பத்துறையும் - இளைஞர்களும்

தகவல் தொழில்நுட்பத்துறையும் - இளைஞர்களும்

கருத்தரங்கம்

ஏப்ரல் 21, 2007 - மாலை 05.00 மணி
ஏசியன் காலேஜ் ஆப் ஜார்னலிசம்
அண்ணா சாலை, சென்னை - 600 002.
(அண்ணா சிலை - சுரங்கப் பாதை அருகில்)

பேராசிரியர். சி.பி. சந்திரசேகர்
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், புதுடில்லி

திரு. கிரண் சந்திரா
இலவச மென்பொருள் அமைப்பு, ஹைதராபாத்

ஆகியோர் உரையாற்றுகின்றனர்

கூட்ட ஏற்பாடு
ஏசியன் ஸ்கூல் ஆப் ஜார்னலிசம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

இந்திய மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் உலகளவில் பல சாதனைகளை புரிந்து வரும் நம் தேசத்து இளைஞர்கள் சந்திக்கும் சவால்கள் - நெருக்கடிகள் குறித்தும் - அதன் எதிர்காலம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர். உலகின் நவீன இளம் தொழிலாளர்களாக உருவாகியிருக்கும் ஐ.டி. தொழிலாளர்கள் உலகம் முழுவதும் வலம் வருவதால், இன்றைய உலகை அவர்கள் மிக நன்றாக புரிந்து வைத்துள்ளனர். மேலும், இ-மெயில், பிளாக், இணையம் என பல்வேறு தொடர்புகளை வலைப் பின்னல்களாக பயன்படுத்தி வரும் இத்தகைய தொழிலாளர்கள் நினைத்தால் இந்தியாவின் நிறத்தை மட்டுமல்ல உலகின் நிறத்தையே மாற்ற முடியும்! வாருங்கள் புதிய உலகை படைத்திட!
------------------------------------------------------------------------------------------------
YOUTH & INFORMATION TECHNOLOGY
Seminar

2007 April 21st 5pm - Asian college of Journalism,
Anna salai,Chennai-2(Near Anna statue)
by
Prof. C.P.CHANDRASEKAR
Jawaharlal Nehru University, NeuDelhi
Mr.KIRAN CHANRA
Activist Free Software Foundation,Hydrabad
DEMOCRATIC YOUTH FEDERATION OF INDIA
INDIAN SCHOOL OF SOCIAL SCIENCES
Cordially Invites You
ALL ARE WELCOME

April 10, 2007

மருந்தின் விலை ரூ. 1,20,000 உயிர் குடிக்க வரும் நோவார்ட்டிஸ்


நோவார்ட்டிஸ் (Novartis) எனும் பன்னாட்டு மருந்து நிறுவனம் சுவிஸ் நாட்டை சேர்ந்தது. மருந்து உலகில் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் வருட வருமானம் 1,60,000 கோடி ரூபாய். மருந்து உலகின் பகாசூர நிறுவனமான நோவார்ட்டிஸ் இரத்த புற்று நோயாளிகளுக்கான க்ளிவாக் (Glivec) மருந்து ஒன்றினை உற்பத்தி செய்கிறது. இம்மருந்திற்கு 60 நாடுகளில் காப்புரிமை பெற்று தன்னுடைய ஆக்டோபஸ் கரத்தை நீட்டியுள்ளது.
தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள காப்புரிமை அலுவலகத்தில், க்ளீவாக் மருந்திற்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்திருந்தது.நம்முடைய காப்புரிமை அதிகாரிகள் இம்மருந்து புதிய கண்டுபிடிப்பல்ல; மேலும் இந்திய காப்புரிமை சட்டம் 3ன பிரிவின் படி இதனை புதிய கண்டுப்பிடிப்பாக அங்கீகரிக்க முடியாது என்று சான்று வழங்கி விட்டது. இது ஏற்கனவே புழக்கத்தில் இருக்கக்கூடிய மருந்துகளில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளை வெறுமனே இரசாயன மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது.
நோவார்ட்டிஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய அரசிற்கு எதிராக ஒரு வழக்கினை தொடுத்துள்ளது. என்ன வழக்கு தெரியுமா? இந்திய அரசின் காப்புரிமை சட்டம் 3ன பிரிவை நீக்க வேண்டும். இது காட் (GATT) ஒப்பந்தம் வகுத்துள்ள வர்த்தகம் சார்ந்த அறிவுச்சார் சொத்துரிமை சட்டத்திற்கு எதிரானது என்று இந்திய பாராளுமன்றத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய காப்புரிமை சட்டத்திற்கு வேட்டு வைக்க துணிந்து விட்டது. உண்மையில் இந்த நிறுவனம் தன்னுடைய மருந்து புதிய கண்டு பிடிப்புதான் என்று நிறுவுவதற்கு மாறாக, குறுக்கு வழியில் தன்னுடைய வியாபார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறது. மக்களின் உயிருக்கு வேட்டு வைக்கும் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக வழக்காடுபவர்கள் பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் அட்டர்னி ஜெனரலாக இருந்த சோலி சொராப்ஜி மற்றும் நம்முடைய மாஜி சட்டமந்திரி ஒருவர். இவர்கள் யாருக்கு காவலானர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
சரி, இந்த மருந்துக்கு பின் உள்ள ரகசியம் என்ன என்று பார்த்தால் மிக சுவரா°யமாக இருக்கும். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று சொல்வார்களே, அதுபோலதான் நோவார்ட்டிஸ் தற்போது ஆடிக் கொண்டிருப்பதன் மர்மம் புரிய வரும். இரத்த புற்று நோய்க்கான மருந்துகளை இந்தியாவில் ஏற்கனவே ரான்பேக்ஸ்சி போன்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இம்மருந்துகளின் விலை ஒரு மாதத்திற்கு ரூ. 8000 முதல் ரூ. 12,000 மட்டுமே. ஆனால், இதே வகை மருந்தான நோவார்ட்டிஸின் க்ளீவாக் ஒரு மாதத்திற்கு ரூ. 1,20,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒருவேளை இந்த மருந்திற்கு இந்தியாவில் காப்புரிமை வழங்கப்பட்டால் இந்திய மற்றும் மூன்றாம் உலக நோயாளிகளுக்கு இருக்கும் ஒரே வழி மரணம்தான்.
ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு வளரும் நாடுகளுக்கு இந்தியாவில் இருந்துதான் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்கனவே ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் AIDS நோயாளிகளின் பெருக்கத்தால் அந்நாட்டு மக்கள் பெரும் அவதியில் இருக்கிறார்கள். இந்நிலையில் நோவார்ட்டிஸ் போன்ற நிறுவனங்களின் சதித் திட்டத்திற்கு இரையானால் உலக மக்களின் நிலை என்னவாகும்? கொலைக்காரன் கையில் கத்தியை கொடுத்த கதையாகி விடும். எனவே ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் நோவார்ட்டிஸின் இந்த வழக்குக்கு எதிரான குரல் ஓங்கத் துவங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள பத்திரிகை அறிவு ஜீவிகள் இது சம்பந்தமான விஷயம் குறித்து மூச்சே விடுவதில்லை. இதுதான் வர்க்க பாசம் என்பது.
காட் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதால் இந்திய காப்புரிமை சட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் ஏகபோக மற்றும் பகாசூர நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். வளர்ந்த வரும் அல்லது புதிய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்பவர்களுக்கு ஏற்கனவே சமாதி கட்டப்பட்டு விட்டது உலக வர்த்தக நிறுவனத்தால். அதாவது, ஏற்கனவே இந்திய காப்புரிமை சட்டம் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே காப்புரிமை வழங்கியது. ஆனால், புதிய சட்டப்படி இது 20 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய சட்டத்தில் ஒரு பொருளை செய்யும் முறைக்குதான் காப்புரிமை வழங்கப்பட்டது. இதனால் பல்வேறு செய்முறைகளை கையாண்டு கண்டுபிடிக்கும் பொருட்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மார்க்கெட் ஏகபோகங்களின் பிடிக்குள் செல்லாமல் இருப்பதில் ஒரு குறைந்தபட்ச பாதுகாப்பு இருந்தது. தற்போதை சட்டத்தில், பொருளுக்கு காப்புரிமை வழங்கப்படுகிறது. அதாவது இங்கே செய்முறை என்பது நிராகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒருவர் ஒரு பார்முலாவை பயன்படுத்தி புதிய மருந்து கண்டுப்பிடித்திருந்தால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அதுபோன்ற மருந்து கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வழங்கப்படாது. இத்தகைய சட்டத்தைத்தான் தீவிரமாக அமலாக்க வேண்டும் என்று வாதிடுகிறது நோவார்ட்டிஸ்.
இன்றைக்கு இந்தியாவில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கின்றனர். இது நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. மேலும் பல புதிய பெயர்த் தெரியாத நோய்களெல்லாம் நம்மை பயமுறுத்திக் கொண்டு வரும் சூழலில் நோவார்ட்டிஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் சதி வலைகளுக்கு நம்முடைய சட்டம் எந்த விதத்திலும் வளைந்து கொடுக்காமல் இந்திய நாட்டின் இறையான்மையை காக்க வேண்டும். ஏனென்றால் சமீப காலத்தில், இந்திய நீதித்துறை ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாகவே தன்னுடைய தீர்ப்பை வழங்கி வருகிறது. எனவே, தற்போதைய காப்புரிமை சட்டத்தில் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் வலுவான போராட்டத்தின் பின்னணியில் ஒரு குறைந்தபட்ச வலைப் பாதுகாப்பை உருவாக்கி வைத்துள்ளோம். இதனை இழப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. மேலும், இதனை பாதுகாக்க வேண்டும் என்றால், அது இந்திய மக்களின் கைகளிலேயே உள்ளது. விரட்டியடிப்போம் நோவார்ட்டிசை!

April 06, 2007

இலங்கை: புதிய அரசியல் திட்டம் மே 1ல் வெளியீடு

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலான புதிய அரசியல் திட்டத்தை இலங்கை அரசு அடுத்த மாதம் வெளியிடுகிறது. மே 1ம் தேதி இந்த புதிய அரசியல் திட்டத்தை அதிபர் ராஜபக்ஷே வெளியிடுகிறார்.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, அதிபருக்குரிய அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, பிரதமர் பதவி, நாட்டின் செயல் தலைவர் பதவியாக மாற்றப்படவுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசின் தலைமைச் செயலாளற் மைத்ரிபாலா சிரிசேனா கூறுகையில், மே 1ம் தேதி புதிய அரசியல் திட்டம் வெளியிடப்படவுள்ளது. இதில் முக்கிய அம்சமாக நாட்டின் செயல் தலைவர் பதவியாக பிரதமர் பதவி மீண்டும் மாற்றப்படவுள்ளது. அவரே இனி நாடாளுமன்றத்திற்குப் பதில் அளிக்கக் கூடிய தலைவராக இருப்பார்.
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க இலங்கை சுதந்திராக் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது. அதேசயம், ஒருங்கிணைந்த இலங்கையின் கீழ்தான் இந்த அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது என்றார் அவர். ராஜபகக்ஷே அரசின் புதிய அரசியல் திட்டத்தின் பிற விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.
Thanks:www.thatstamil.com

April 05, 2007

இலங்கை பிரச்சினைக்கு இந்திய தீர்வு

இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்தி விட்டு அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். 2 நாள் சார்க் மாநாட்டின் நிறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை இனப் பிரச்சினைக்கு போர் தீர்வு அல்ல. இரு தரப்பும் உடனடியாக சண்டையைக் கைவிட்டு விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். நின்று போயுள்ள பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.
இலங்கையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வது தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு இந்தியா சில யோசனைகளைத் தெரிவித்துள்ளது. அதுகுறித்து விவாதித்து விரைவில் ஒரு தீர்வை இலங்கை அரசு காண வேண்டும். இலங்கையில் வசிக்கும் சிங்களர்கள், தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு இனத்தவரின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் விதமான தீர்வு எட்டப்பட வேண்டும். ராணுவத் தீர்வுக்கு சாத்தியமே இல்லை என்பதை இரு தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கு ஆபத்து என்று கூற முடியாது. இந்தியா தீவிரவாதத்தின் விளைவுகளை அனுபவித்து வரும் நாடு. தீவிரவாதம், இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கும் தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றார் முகர்ஜி.
Thanks:www.thatstamil.com
இலங்கை குறித்த முந்தைய பதிவுகள்