June 23, 2006

இந்தியாவில் உணவு பஞ்சம் வருமா?

இந்த கேள்வி பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம், சிலருக்கு நகைப்பாகவும் கூட இருக்கலாம். ஆனால், இப்போதே இது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் இருந்தால், நம்முடைய அடுத்த தலைமுறைக்கோ? ஏன் நம்முடைய தலைமுறையிலேயே கூட நாம் பெரும் உணவு பஞ்சத்தை சந்திக்க வேண்டி வரும்.
மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு முதல் முறையாக ஐந்து லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்துள்ளது. (இறக்குமதி செய்யப்பட்ட இந்த கோதுமையும் கூட, உணவுக்கு லாயக்கு இல்லாதது என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதாவது, இதில் சாதாரண அளவில் இருப்பதைவிட அதிகமான பூச்சுக் கொல்லி மருந்து கலந்துள்ளதாக கூறப்படுகிறது.) இந்தியா ஒரு பெரும் விவசாய நாடு. நம்முடைய நாட்டில் கோதுமையோ, அரிசியோ போதுமான அளவிற்கு உற்பத்தியாகவில்லை என்றால், இறக்குமதி குறித்து யோசிக்கலாம். ஆனால், மத்திய அரசு நம்முடைய கோதுமையும், அரிசி போன்ற உணவு தானியங்கள் நல்ல விளைச்சலில் இருந்தாலும், அதை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு பதிலாக, உலகவங்கி, உட்டோ கட்டளைப்படி வெளி நாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்துள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பினால், நம்முடைய தானிய கையிருப்பை சமப்படுத்துவதற்காகதான் இந்த இறக்குமதி என்று சாக்குபோக்கு சொல்கின்றது மத்திய அரசு.

இந்த விவாதம் முற்றுப் பெறுவதற்கு முன்பே, தனியார் நிறுவனங்கள், தங்களது தேவையை பூர்த்தி செய்துக் கொள்ள வெளிநாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்துக் கொள்ள மத்திய அரசு தற்போது அனுமதித்துள்ளது. மேலும், இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கு முற்றிலும் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இத்தகைய கொள்கை எதிர்கால இந்தியாவிற்கு பெரும் பாதிப்பினை உண்டாக்கும். முதலில், இந்தியாவில் செயல்படும் பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் குறைந்த விலையில் கோதுமை கிடைக்கிறது என்ற பெயரில் வெளிநாட்டில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்வார்கள். இதன் மூலம் உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் தடைப்படும். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த உணவு தானியங்களை கொள்முதல் செய்வாரில்லாமல் கூப்பாடு போட வேண்டிய நிலைமை வரும். பின்னர் அவர்களாகவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிற்கு பணப்பயிர்களை உற்பத்தி செய்திடுமாறு அரசு தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டு, இந்திய விவசாயிகளை உணவு தானிய உற்பத்தியில் இருந்து ஒதுங்கச் செய்வார்கள். இதன் மூலம் நம்முடைய இந்திய நாட்டு மக்களின் அடிப்படை உணவு தானியங்களுக்காக நாம் வெளிநாட்டினரிடையே கையேந்தி நிற்க வேண்டிய நிலைமைக்கு நம்மை தள்ளி விடும்.

ஒரு கட்டத்தில் போர் அல்லது உலகளவில் உணவுதானி பற்றாக்குறை அல்லது வேறு ஏதாவது நெருக்கடி ஏற்படும் சூழலில் நமக்கு வெளிநாட்டு உணவுதானியம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் நம்முடைய மக்கள் உணவுக்காக அடித்துக் கொள்ளும் அவல நிலைதான் ஏற்படும். என்னதான் பணத்தை மூட்டை, மூட்டையாக வீட்டில் திணித்து வைத்திருந்தாலும் அவர்களுக்கு உணவு கிடைக்காத பொருளாக மாறக்கூடிய சூழல் ஏற்படும்.

ஏற்கனவே பிரிட்டிஷ் இந்தியாவில் 1940 வாக்கில் வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மடிந்து போனதை வரலாறு இன்னும் மறக்கவில்லை. இந்த பஞ்சத்தின் கொடூர முகத்தை அறிந்திட வேண்டும் என்றால் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ‘அனந்த மடம்’ என்ற நாவலை படித்துப் பாருங்கள். அப்போதுதான் தெரியும் பஞ்சத்தின் உண்மை முகம்.

எந்த ஒரு நாடும் உணவு போன்ற தன்னுடைய மக்களை காப்பாற்றுவதற்கான இறையாண்மை விஷயத்தில் மிகவும் கறாராக நடந்துக் கொள்ள வேண்டும். ஆனால் மன்மோகன் சிங் அரசின் தற்போதைய உணவு தானிய கொள்கை நம்முடைய நாட்டை திவால்பாதைக்கு இட்டுச் செல்லும். ஏற்கனவே ஆப்பிரிக்காவில் சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் பெரும் பஞ்சத்தால் மக்கள் மடிந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். முதலாளித்துவமே மனித குலத்திற்கு விடுதலை என்று கூக்குரல் எழுப்பும் ஓநாய்கள் இந்த ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தை போக்குவதற்கு பிச்சைக்கூட போடுவதில்லை என்பதுதான் நிகழ்கால வரலாறு. மாறாக வேற்று நாடுகள் மீது போர் தொடுத்திட டிரில்லியன் கணக்கில் கோடிகளை செலவிட்டுக் கொண்டுள்ளனர். இதுதான் ஏகாதிபத்தியத்தின் கருணை கொடையின் வெளிப்பாடு.
இந்தியாவில் தற்போது என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஆந்திராவிலும், மகாராஷ்டிராவிலும் பணப்பயிரான பருத்தியை பயிரிட்ட விவசாயிகள் தற்கொலை பாதைக்கு சென்றுக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஆண்டுக்கு 3000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்தகைய தற்கொலைகளை மேற்கொள்கின்றனர். பணக்கார விவசாயிளாலேயே விவசாயத்தில் ஏற்படும் விளைவுகளை - அதன் மூலம் ஏற்படும் கடன் தொல்லைகளை சமாளிக்க முடியாமல் இந்த தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர். மத்திய அரசு இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு இத்தகைய காரியத்தில் ஈடுபடுவது யாருடைய நலனை காத்திட?

மன்மோகன் சிங் அரசு என்னதான் பல காரணங்களை இந்த விஷயத்தில் கூறினாலும் அது ஏற்கத்தக்கதல்ல. எனவே இந்திய நாட்டின் இறையாண்மையை விலை பேசும் இத்தகைய கேடுகெட்ட செயலினை மத்திய மன்மோகன் சிங் அரசு உடனடியாக நிறுத்திட வேண்டும். இந்தியாவில் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்திடும் அரசின் கொள்கைக்கு எதிராக பெரும் கிளர்ச்சிகளை இந்திய நாட்டில் எழுவதன் மூலம் மட்டுமே இந்த ஆட்சியாளர்களின் பிடரிகளை பிடித்து ஆட்ட முடியும்!

No comments: