June 14, 2006

200 கோடி கால்களும் ஒரு உதை பந்தும்

தலைப்பை பார்த்ததுமே புரிந்து கொண்டிருப்பீர்! இது இந்தியாவை பற்றிதான் என்று. ஆம்! நம்ம நாட்டைப் பற்றிதான். உலகம் முழுவதும் கால் பந்து ஜூரம் நாளுக்கு, நாள் ஏறிக் கொண்டே இருக்கிறது. ஒரு கோடி மக்கள் தொகைக் கொண்ட சின்னஞ் சிறு நாடுகள் கூட இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் இடம் பெற்று, தங்கள் நாட்டின் விளையாட்டுத் திறனை உலகிற்கு பறைசாற்றியிருக்கிறார்கள்.

அதிலும் ஜெர்மனியை எதிர்த்து ஆடிய கோசுடாரிக்கா இரண்டு கோல் அடித்தது கால் பந்து ரசிகர்களிடம் பெரும் ஆச்சரியத்தையும், அடுத்து வரும் போட்டிகளில் என்னவெல்லாம் நடைபெறுமோ என்ற எதிர்பார்பையும் தூண்டியிருக்கிறது. கால்பந்தில் ஜெர்மன் மலைபோல் உயர்ந்து இருந்தாலும், சின்னஞ்சிறு நாடு கோசுடாரிக்கா இரண்டு கோல் அடித்ததே உலக கோப்பையை வென்ற திருப்தி அந்த நாட்டிற்கு ஏற்பட்டிருக்கிறது.

இதுபோல் பல நாடுகளும் தங்களது திறமையை நிரூபிப்பதற்கு முனைந்து கொண்டிருக்கின்றனர். இதில் குறிப்பாக கறுப்பின மக்களின் விளையாட்டுத் திறன் மிக அபாரமாக வெளிப்பட்டிருக்கிறது. இதை இப்படியும் சொல்லலாம் நாகரீகத்தை நாங்கள்தான் ஆப்பிரிக்காவிற்கு கொண்டு சென்றோம் என்றவர்கள் எல்லாம் அந்த கறுப்பின மக்களின் விளையாட்டு திறன் முன் மண்டியிடும் நிலைமைதான் தற்போது எழுந்திருக்கிறது.

100 கோடி மக்களைக் கொண்ட, 200 கோடி கால்களைக் கொண்ட நம்ம இந்திய நாட்டில் உலக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கால்பந்து போட்டியில் நம்முடைய அணி அதன் முகட்டைக்கூட தொடாமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷமே! ஏனெனில் இங்கு முக்கியத்துவம் தரப்படுவதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்கு வழிகோலும் கிரிக்கெட்டுக்கே இங்கே முக்கியத்துவம் மிக அதிகமாக தரப்படுகிறது.

இந்தியாவில் விளையாட்டு என்றால் அது பெரு முதலாளிகளுக்கு லாபம் தருவதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் விசுவநாத ஆனந்த் போன்றவர்களும், சானிய மிர்சா போன்றவர்கள் தங்களது திறமையால் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கலாம். ஆனால் நம்முடைய இந்திய அரசியல்வாதிகளும், ஆளும் வர்க்கமும் விளையாட்டுக் கலையை திட்டமிட்டு ஊக்குவித்து, அதனை மேம்படுத்தும் எண்ணம் துளியும் இல்லாதது வெட்கப்பட வேண்டிய விஷயமே! மத்திய - மாநில அரசுகள் விளையாட்டுத்துறைக்கு அமைச்சர்களை போடுவது, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது டூர் போய்விட்டு வருவதற்கா? என்று தெரியவில்லை.

இந்தியாவின் பாரம்பரியமாக ஹாக்கியில் நிலைநாட்டி வந்த ஆதிக்கத்தைக்கூட தற்போது இழந்து வருவதும், உலக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விளையாட்டுக்களில் நமது இளைஞர்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பதிலாக விளையாட்டில் கிரிக்கெட் போதையை ஊற்றி, ஊற்றி வளர்க்கிறார்கள். இந்த கிரிக்கெட் போதையில் இருந்து விடுபடும் நாளே, இந்திய நாடு விளையாட்டுத்துறையில் விடுதலை பெற்ற நாடாக மாறும்!

3 comments:

வவ்வால் said...

கிரிக்கெட் என்பது T.V விளம்பரத்திற்கு ஏற்ற ஒரு விளையாட்டு ,ஒவ்வொரு ஒவர் இடைவெளியிலும் விளம்பரங்களை போட்டுக் காசுபார்க்கலாம் ,அது போல கால்பந்தில் வாய்ப்பு குறைவு எனவே தான் பெரிய அளவில் ஸ்பான்சர்களோ ,தொலைக்காட்சிகளோ கண்டுக்கொள்வது இல்லை

சந்திப்பு said...

வவ்வால் கலக்கிட்டீங்க... அதாங்க சரி! கிரிக்கெட்டை ஒழிக்காமல் இந்திய விளையாட்டு உலகம் முன்னேறாது. இது ஆத்திரத்தில் வரும் ஏசல் அல்ல. விளையாட்டுத்துறையில் எந்த இடத்திலும் நாம் கால் பதிக்காததற்கு தடையாக இருப்பதால் வரும் உணர்ச்சிதான்.
நன்றி வவ்வால்.

முத்து(தமிழினி) said...

வருத்தப்படவேண்டிய விஷயம்தான் சந்திப்பு. வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறேன்.

அதுவும் ஹாக்கியில் மானம் கப்பலேறி ரொம்ப நாள் ஆகுது.