January 08, 2009

காவியம் படைத்த அரசியல் கவிஞன்!


மில்டன் அரசவைக் கவிஞர் அல்ல; அரசியல் கவிஞர்! ஆங்கிலக் கவிகளில் தன்னிகரில்லா இடத்தைப் பெற்றிருப்பவர் ஜான் மில்டன். தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்கு துணை புரிந்தவர் மில்டன். டிசம்பர் 9, 2008 மில்டனின்400வது பிறந்த தினம். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது.
மில்டனின் இலக்கிய சுவை மட்டுமல்ல; அவரது எழுத்து நடையும் உலக மக்களிடம் பிரசித்தி பெற்றது. ‘மில்டனைப் போல் எழுதுகிறாயே!’என்று பிற எழுத்தாளர்களை பாராட்டும் அளவிற்கு அவரது எழுத்தாற்றல் புலமை வாய்ந்தது.
மதவாதிகளும், பழமைவாதிகளும்,கொடுங்கோல் ஆட்சியாளர்களும் மனித சமூகம் முன்னேறும் போதெல்லாம், அந்த வரலாற்று சக்கரத்தை பின்னுக்கு இழுத்தவர்கள். மில்டனின் எழுத்து மக்களை கவ்வியபோது,அவரது எழுத்துக்களை ‘தீ’ நாக்குகளுக்கு உணவாக்கி மகிழ்ந்தனர் ஆட்சியாளர்களும்,பிற்போக்கு கிருத்துவ மதவாதிகளும்.
இவர்கள் மட்டுமா? கல்வியாளர்களும் கூடத்தான்; அவர் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் கூட முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் பட்டியலில் இருந்த ‘ஜான் மில்டனின்’ பெயரை 300 ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பு மையிட்டு மறைத்தது. மில்டன் மட்டுமல்ல; ‘குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவனே மனிதன்’ என்று உண்மையை கண்டுரைத்த சார்லஸ்டார்வினையும் மறைத்தார்கள் என்பதையும் இந்நேரத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சீப்சைட், பிரட் ஸ்ட்ரீட்டில் டிசம்பர் 9, 1608 இல் வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஜான் மில்டன். அவரது தந்தை அன்றைக்கு தோன்றிய தூய்மைவாத (Puritanism) இயக்க ஆதரவாளராக இருந்ததோடு, கலை - இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்; இது மில்டனின் இளம் வயதில் தாக்கத்தை உண்டாக்கியது என்பதை சொல்லத் தேவையில்லை. செயின்ட் பால் பள்ளியில் படிப்பைத் துவங்கி, கிருத்துவ கல்லூரியில் பயின்று, 1632 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார் மில்டன். அத்துடன் லத்தீன், எபிரேயம்,இத்தாலிய மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார் மில்டன்.
உலக மகாகவி என்று போற்றப்படும் சேக்ஸ்பியரின் மீது மில்டன் அளவற்ற காதல் கொண்டிருந்தாலும், அவரது எண்ணமெல்லாம் பாதிரியாராக மாற வேண்டும் என்றே இருந்தது. அந்த அளவிற்கு கிறித்துவத்தையும் - பைபிளையும் நன்கு பயின்றிருந்தார். இந்த பயிற்சிதான் பின்னாளில் அவரது உலப் புகழ் பெற்ற படைப்புகளான ‘இழந்த சொர்க்கத்தையும்’, ‘மீண்ட சொர்க்கத்தையும்’எழுதுவதற்கு கருவானது.
கல்வி பயணத்தை மில்டன் முடித்துக் கொண்டாலும், உடனடியாக வேலை எதற்கும் செல்லவில்லை. மாறாக, வீட்டிலிருந்த படியே பல்வேறு அரும்பெரும் நூல்களை கற்றுத் தேர்ந்தார். இந்தக் காலத்திலேயே அவர் ஒரு சில புகழ் பெற்ற கவிதைகளை எழுதியிருந்தார். அதில் குறிக்கத்தக்கது லூசிடாஸ் (Lycidas),கோமாஸ் (Comus)..
அறிவுத் தாகமெடுத்த மில்டன் 1633-ஆம் ஆண்டு வெளியுலக பயணத்தை துவக்கினார். பிரான்ஸ்,இத்தாலி உட்பட பல்வேறு நகரங்களுக்கு இக்காலத்தில் பயணம் செய்தார். அவர் இத்தாலிக்கு சென்றிருந்த போது, டெலஸ்கோப் வழியாக உண்மையை கண்டறிந்து, ‘உலகம் உருண்டையானது - சூரியனைச் சுற்றிதான் இந்த புவிக் கோளம் இயங்குகிறது’ என்ற பேரூண்மையை சொன்ன உலகமகா அறிவியல் விஞ்ஞானி கலிலியோவை கண்டு அவருடன் உரையாடினார். இந்த சந்திப்பை தனது வாழ்நாளில் முக்கியமான ஒன்றாக கருதினார் மில்டன். இந்த சந்திப்பை தனது ‘இழந்த சொர்க்கம்’ என்ற காவியத்திலும் ஓரிடத்தில் கீழ்க்கண்டவாறு வர்ணித்திருப்பார்.
The broad circumference
Hung on his shoulders like the moon, whose orb
Trhough optic glass the Tuscan artist views
At evening, from the top of Fesole,... (Book 1, 286-290
‘டஸ்கன் கலைஞனால் தொலை நோக்கி வழியே முன்னிரவில் துழாவப்பெறும் சந்திரன் போல், சாத்தான் கேடயத்தின் அகன்றவட்டம் அவன் தோளில் தொங்கியது.” - (கம்பனும் மில்ட்டனும், எஸ். ராமகிருஷ்ணன், பக்.54)
கலிலியோ கண்ட உண்மை கடவுளுக்கு எதிரானது என்றுக் கூறி அவரை வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் அடைத்தனர் ஆட்சியாளர்கள். ஆனால், அவர் கண்ட உண்மையை தனது படைப்பிலும் கொண்டு வந்ததன் மூலம் மில்டன் மக்களை மாயையிலிருந்து விடுவிப்பதில் எந்த அளவிற்கு பங்காற்றினார் என்பதை உணர முடியும்.
இதே காலகட்டத்தில் இங்கிலாந்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் அரங்கேறுகின்றன. குறிப்பாக ரோமன் கத்தோலிக்க மதத்தை முன்னிறுத்தி, கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த முதலாம் சார்லஸ் மன்னராட்சியில் சர்வாதிகாரமும், அடக்குமுறையும் தலைவிரித்து ஆடின. இப்பின்னணியில் 1639இல் இலண்டன் திரும்பும் மில்டன் ஒரு பள்ளிக்கூடத்தை துவக்குகிறார். குறிப்பாக அக்காலக் கல்வி மதத்தை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தன. இது குறித்து தனது அதிருப்தி தெரிவித்த மில்டன்1944 இல் ‘கல்வி’ (Of Education) குறித்து சிறந்த கட்டுரையொன்றை வெளியிடுகிறார். கல்வியின் பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கட்டுரையில் விளக்கப்படுகிறது.
சார்லஸ் மன்னராட்சியின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக நாட்டு மக்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாற வேண்டும் என்று சட்டம் இயற்றப்படுகிறது. இதை எதிர்த்து தூய்மைவாதிகளும் - புரோட்டஸ்டான்ட்கிருத்துவர்களும் தங்களது எதிர்ப்புணர்வை காட்டுகின்றனர். மதம் தங்களது தனிப்பட்ட விருப்புரிமைக்கு உட்பட்டது அதனை ஆட்சியாளர்கள் தீர்மானிக்க முடியாது என்று பல இடங்களில் கலகம் எழுந்தது. ஆனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பின்னணியுடன், ஆட்சி அதிகார எந்திரத்தை கையில் வைத்திருந்த கொடுங்கோலன் சார்லஸ் மன்னன் புரோட்டஸ்டான்ட் மக்களை வேட்டையாடினான். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடுமைகளை கண்ட மில்டன் மக்களுக்கான அரசியல் களத்தில் இறங்கி,தொடர்ச்சியாக அரசுக்கு எதிராக பல அரசியல் பிரசுரங்களை எழுதி குவித்தான். இது ஆட்சியாளர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஊட்டியது. அந்த நேரத்தில்தான் சார்லஸ்மன்னன் பத்திரிகை உரிமைக்கு வேட்டு வைக்கும் புதிய சட்டத்தை கொண்டு வந்தான். பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் அனைத்தும் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டன. ஆட்சியாளர்களின் அனுமதியில்லாமல் எந்த துண்டுப் பிரசுரமும் வெளிவராது என்ற நிலையே நிலவியது.
மன்னராட்சியின் இந்த பத்திரிகை தடைச் சட்டத்தை எதிர்த்து ‘ஏரோபிஜிடிகா’ (Areopagitica)என்ற தலைப்பில் பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தி ஒரு பிரசுரத்தை வெளியிட்டார் மில்டன். ‘ஒரு நல்ல புத்தகத்தை தடை செய்வது ஒரு மனிதனை கொல்லுவதற்கு ஒப்பாகும்’ என்று அதில் வலியுறுத்தியிருந்தார். நவீன காலத்தில் பத்திரிகை ஒடுக்குமுறைச் சட்டத்திற்கு எதிராக கொடுக்கப்பட்ட முதல் குரல் மில்டனின் குரல் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறத்தில் ஆலிவர் கிராம்வெல் தலைமையில் படைகள் திரட்டப்பட்டு மன்னராட்சிக்கு எதிராக ஒரு உள்நாட்டு யுத்தம் தொடுக்கப்பட்டது. இதற்கு மில்டனும் தனது எழுத்தாற்றல் மூலமாக துணை நின்றார்.1644இல் சார்லஸ் மன்னனின் ஆட்சி முடிவுக்கு வந்து கொல்லப்பட்டான். பின்னர் ஆலிவர் கிராம்வெல் தலைமையில் முதல் ஜனநாயக அரசு இங்கிலாந்தில் அரியணை ஏறியது. இவரது அமைச்சரவையில் லத்தீன் மொழிக்கான செயலாளராக மில்டன் நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் மில்டன், ‘கொடுங்கோல் மன்னர்களும் அவரது நீதிபதிகளும் கொல்லப்பட வேண்டியவர்களே’ என்ற தலைப்பில் எழுதிய அரசியல் பிரசுரம் மிகவும் புகழ்பெற்றது.
ஆலிவர் கிராம்வெல்லின் ஆட்சி குறுகிய காலமே இருந்தது. அவரது மறைவுக்குப் பின், 1658-இல் 2-ஆம் சார்லஸ் மன்னன் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து பழமைவாதத்தின் பிடிக்குள்சென்றது. குடியரசு ஆட்சிக்கு முழுக்கு ஏற்பட்டது. இந்நிலையிலும் தொடர்ந்து அரசியல் விழிப்புணர்வு பிரசுரங்களை வெளியிட்ட மில்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டாம் சார்லஸ் மன்னன் ஆட்சியில் மில்டன் சிரச்சேதம் செய்யப்பட்டு கொல்லப்படுவார் என மக்கள் அஞ்சினர். மில்டன், ‘தான் இனிமேல் கவிதைகள் படைக்க விரும்புவதாக’ கூறியதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். இவ்வாறு அவர் விடுதலையாகி இருக்காவிட்டால் மில்டன் என்ற மகா கவியை இந்த உலகம் இழந்திருக்கும்.
1667 ஆம் ஆண்டு வாக்கில் இரண்டு கண் பார்வையையும் இழந்து விட்டார் மில்டன். இதனால் மிகவும் மனம் வருத்தமுற்ற மில்டன் தனது உலகம் இருண்டு விட்டதை உணர்த்தும் வகையில் “ஆன் ஹிஸ் பிலைன்ட் லெஸ்” (On His Blindness) என்ற கவிதை மூலம் வருந்துகிறார். கண்ணிருக்கும் போது செய்ய வேண்டிய பல கடமைகள் செய்ய முடியாமல் போனதே என்பதற்காக!
இருப்பினும், இதில் மனம் தளராத மில்டன்,தனது உதவியாளர் மூலம் தான் சொல்லச் சொல்ல பல்வேறு கவிதைகளை படைக்கிறார். இந்தக் காலத்தில்தான் ‘இழந்த சொர்க்கம்’(Paradise Lost) என்ற புகழ்மிக்க காவியத்தை1667-இல் படைத்தார் மில்டன். 12 காண்டங்கள் என்று சொல்லத்தக்க வகையில், 12புத்தகங்களாக 10,565 வரிகளைக் கொண்டஆங்கில மொழி நடையில் - கவிதை உலகில் ஒரு புது நடையை வழங்கி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தார் மில்டன்.
குறிப்பாக இழந்த சொர்க்கம் காவியம் - பைபிள் கருவை பின்னணியாக கொண்டு எழுதப்பட்டிருந்தாலும், அதில் அவரது புனைவு என்பது ‘கடவுளை வென்ற சாத்தான்’ என்ற பொருளுடக்கத்தை கொண்டு எழுதப்பட்டது. குறிப்பாக சாத்தானை ஒரு ஹீரோவாக மையப்படுத்தி புகழ்ந்துரைத்த முதல் இலக்கியம்தான் மில்டனின் இழந்த சொர்க்கம். இதற்காகவே இந்த புத்தகத்தை அன்றைக்கு மக்கள் தொடுவதற்கே அஞ்சினர். இதுவும் சாத்தானின் வடிவமே என்று அவதூறு கிளப்பினர் பழமைவாதிகள்.
விண்ணுலகில் சாத்தானுக்கும் - கடவுளுக்கும் சண்டை மூளுகிறது. கடவுளின் சேவர்களில் ஒரு பகுதி தேவர்கள் கூட சாத்தான் பக்கம் சாய்ந்து கடவுளுக்கு எதிராக போரிடுகின்றனர். இந்நிலையில் தோல்வியுள்ள சாத்தான் கூட்டத்தினர் மீளாக உறக்கத்தில் இருக்கையில்,புதிய உலகை படைக்கிறார் கடவுள். அதில் ஈடன் தோட்டத்தில் ஆதாமையும் - ஏவாளையும் படைக்கிறார். இந்த தோட்டத்தில் உள்ள அறிவுக் கனியை உண்ணக்கூடாது என்று கடவுள் அவர்களுக்கு கட்டளையிடுகிறார். இதை அறிந்து கொண்ட சாத்தான் விண்ணுலகிலிருந்து கடவுளால் படைக்கப்பட்ட புதிய உலகிற்கு வந்து ஈடன் தோட்டத்தில் உள்ள ஏவாளை மயக்கி அந்த அறிவுக் கனியை உண்பதற்கு தூண்டுகிறார். ஒரு கட்டத்தில் சாத்தான் ஒரு பாம்பின் உடலுக்குள் புகுந்து கொண்டு,ஏவாளிடம் சென்று மனிதனைப் போல் மிக அழகாக பேசுகிறது. பாம்புக்கு எப்படி பேச்சு வந்தது என்று ஆச்சரியப்பட்டு கேள்வி எழுப்பிய ஏவாளிடம் தான் அந்த அறிவுக் கனியை உண்டதாக கூறியதோடு, ஆதாம் அதை உண்பதற்கு தூண்டுகிறது. அது பாவம் என்று ஏவாள் மறுக்க, இல்லை; ‘பாம்பான நான் இந்தக் கனியை உண்டதால் மனிதனிப் பேச்சு திறமை கிடைக்கப்பெற்றேன். அதையே நீங்கள் சாப்பிட்டால் தேர்வர்களின் நிலைக்கு உயரலாம்’ என்று நயமாக பேசி தன்னுடைய வாதத் திறமையால் ஏவாளை அந்த அறிவுக் கனியை (ஆப்பிள்) சாப்பிட வைக்கிறார். அவ்வளவுதான்; இந்த கனியை சாப்பிட்ட பின் தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை ஏவாள்,ஆதமிடம் சொல்ல அவனும் ஏன் இதைச் சாப்பிட்டாய் என்று கேள்வி எழுப்பினாலும்,மனைவியின் அன்புக்கு கட்டுப்பட்ட ஆதாமும் அந்த கனியை சாப்பிடுகிறான். இந்த செயலின் மூலம் கடவுளின் திட்டத்தை முறியடிக்கிறான் சாத்தான். கனியை சாப்பிட்டதால் நிரந்தரமாக மனித குலம் பாவத்திற்கு உள்ளாகிறது. இதனால் அவர்கள் சொர்க்கத்தை நிரந்தரமாக இழக்கிறார்கள்; பாவத்திற்கு ஆளாகிறார்கள். பின்னர் ஆதாமும் - ஏவாளும் கடவுளிடம் இறைஞ்சுவதால் கடவுளின் குமாரன் மனித குலத்தில் பிறந்து அந்த பாவத்திலிருந்து விடுதலை பெறுவதாக கதை முடிகிறது. இதுதான் இழந்த சொர்க்கத்தின் மிகச் சுருக்கமான கதையம்சம்.
இந்த காவியத்தில் பல இடங்களில் சாத்தான் தனது அணிக்கு நம்பிக்கை ஊட்டுவதாக கூறப்படும் கவியம்சங்கள் மிக அற்புதமானவை.
What though the field be lots? All is not lost.
(களத்தை இழந்தோமல்லது; அனைத்தையும் இழந்தோமன்று) என்று கூறி நம்பிக்கை யூட்டுவதையும்,
Better to reign in Hell then serve in Heaven
(பொன்னுலகத்தில் தொண்டு புரிவதைக் காட்டிலும், நரகத்தில் ஆட்சி புரிவதே மேல்) என்று நயமாக எடுத்துரைத்து தனது அணிக்கு பலம் சேர்க்கிறார் மில்டன்.
400 வருடத்திற்கு முன் மதவாதிகளின் அரியாசனங்கள் கோலோச்சிய நேரத்தில், ‘சாத்தான் கடவுளை வென்றதாக’ காவியம் இயற்ற வேண்டும் என்றால் எவ்வளவு துணிச்சல் இருந்திருக்க வேண்டும் மில்டனுக்கு. அது மட்டுமல்ல; இந்த கதை குறித்து விமர்சகர்கள் கூறும்போது, ‘இதன் மூலம் சாத்தான் கடவுளை எதிர்த்து போராரிடுவது போல் மக்கள் மன்னர்களை எதிர்த்து போரிட வேண்டும்’ என்று தூண்டுவதாக வர்ணிப்பர்.
மில்டனின் ‘இழந்த சொர்க்கம்’ ஆங்கில கவிதை உலகில் முடி சூட முடியாத உயர்த்தில் இருக்கிறது என்றால் மிகையாகாது. மேலும் மில்டன் பார்வைகளை இழந்திருந்தாலும், தனது அறிவுக் கூர்மையால் தொடர்ந்து பல்வேறு படைப்புகளை கொண்டு வந்தார். இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு காவியம்‘மீண்ட சொர்க்கம்’ (Paradise Regained).
இது தவிர ஆங்கிலத்தில் சொனாட்டோ என்று சொல்லக் கூடிய 14 வரிகளைக் கொண்ட கவிதைகள் பலவற்றை எழுதி அதில் தனக்கென தனியிடைத்தை பிடித்துக் கொண்டவர் மில்டன்.
தனது இறுதி நாட்களில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மில்டன் என்ற மகத்தான கவி நவம்பர் 8, 1674 இல் மரனமடைந்தார்.
400 ஆண்டுகள் கடந்த பின்பும் மில்டனின் படைப்புகள் மனித குலத்திற்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஊட்டுவதாக உள்ளது. குறிப்பாக கலை கலைக்காகவே என்று இயங்குபவர்கள் மத்தியல் கலை மனிதனுக்காக என்றும் அது மாற்றத்திற்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கோடு படைப்புகளை வழங்கியவர் மில்டன் என்பதில் மனித குலம் பெருமைப்படத்தக்கது. இதில் இறுதியாக குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் எஸ்.ராமகிருஷ்ணனின் கம்பனும் - மில்டனும்,தொ.மு.சி.யின் வள்ளுவனும் - மில்டனும் போன்ற படைப்புகள் தவிர, தமிழில் மில்டன் குறித்து போதுமான அளவிற்கு அவரது படைப்புகள் தமிழாக்கம் செய்யப்படவில்லை என்பது தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு குறையாகவே உள்ளது. அவரது 400வது ஆண்டில் இதில் ஒரு சில படைப்புகள் வெளிவந்தால் அது அவருக்கு செய்யும் சிறப்பாகும்.


கே. செல்வப்பெருமாள்

9 comments:

சந்திப்பு said...

அன்பு நன்பரே உங்களது தளத்திற்கான பெயரையே சந்திப்பு என்று வைத்துள்ளீர்கள். அதாவது "santhibu" நான் 2005 நவம்பர் மாதம் முதல் சந்திப்பு என்ற பெயரை "santhipu" பயன்படுத்தி வருகிறேன். எனவே தற்போதைய தங்களது பெயர் குழப்பத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். எனவே வாய்ப்பிருப்பின் அதனை மாற்றி உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அடுத்து உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய இ- மெயிலைக் கூட கொடுக்கவில்லை. மேலும் நீங்கள் கம்யூனிசத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர் என்று கூறியிருக்கிறீர்கள். குழப்பத்தை தவிர்த்திட உதவுங்கள்.

சந்திப்பு said...

பாரதி மகத்தான புரட்சிக் கவி"ன்.

சந்திப்பு said...

போலி சந்திப்பு - தொடை நடுங்கி ம.க.இ.க. நக்சலிச பதிவரே! கொள்கை ரீதியாக திவால் ஆகிப் போனதால் தற்போது இணையத்தில் போலியாக சந்திப்பு என்ற பெயரில் சீர்குலைவு வேலையைத் துவக்கியுள்ளீர்கள். இந்த விளையாட்டை நீங்கள் தாராளமாக தொடரலாம்! வாழ்த்துக்கள்.........

சந்திப்பு said...

மேலும் நான் நினைத்தால் உங்களுடைய அனைத்து கமெண்டுகளையும் டெலிட் செய்ய முடியும். இருப்பினும் அதனை அனுமதிப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? உங்களது போலி முகங்கள் மற்றவர்களுக்கு தெரிய வேண்டாமா அதுதான்!

மணி said...

நண்பரே எனது மெயில் முகவரியை எனது அலுவலகத்தில் யாரோ எடுத்து விளையாடுகிறார்கள். எப்படி அதை சரி செயய என ஆலேசனை தருக. சரி அது கிடக்கட்டும். எனது கம்யூனிச புரட்சி பற்றி புரிதலுக்கும் விவதத்திறக்கும் தயவு செய்து விவாதியுங்கள். fmvasanthy@gmail.com

சந்திப்பு said...


எனது கம்யூனிச புரட்சி பற்றி புரிதலுக்கும் விவதத்திறக்கும் தயவு செய்து விவாதியுங்கள்.


தேசத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற தங்களது விருப்பதை வரவேற்கிறேன். எனவே இந்திய தேசத்தில் எத்தகைய மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கான தருணம் என்ன என்பது குறித்து தனிப்பதிவாக விவாதிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். மேலும் உங்களுக்கு இந்திய புரட்சி பற்றி எத்தகைய கருத்துக்கள் உள்ளன என்பதையும் அறிய விரும்புகிறேன். நன்றி.

மணி said...

நண்பரே
சமூக மாற்றம் அவசியம் என்பது தெரிகின்றது. கம்யூனிஸ்டுகளால்தான் அது சாத்தியம் என்று புரிகின்றது. தனிப்பதிவுதான் புரிய வைக்கும் என்ற உங்களது கருத்தில் நான் மாறுபடுகிறேன். கம்யூனிஸ்டுகள் சிறைச்சாலையைக் கூட அரசியல் மேடைகளாக மாற்றியவர்கள் என கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த மாமனிதர்களுக்கெல்லாம் கிட்டாத ஒரு மேடையாக அரசியலை விளக்குங்கள் ? எப்படி வேலை செய்ய வேண்டும் ? அதன்வழி விதர்பா தற்கொலை, கயர்லாஞ்சி, திண்ணியம், மேலவளவு, வெண்மணி ... துவங்கி எல்லா ஒடுக்குமுறைகளையும் எப்படிப் பழிதீர்ப்பது எனத் தவிக்கிறேன். மக்களுடைய அறிவுமட்டம் அவசியமா ? ஒரு கம்யூனிஸ்டால் தான் என்ன செய்யப் போகின்றோம் என்பதை வெளிப்படையாக விளக்க முடியும் என நம்புகிறேன்.

தன் வாழ்க்கையின் இளமைப்பருவத்தை ஒரு உயர்ந்த லட்சித்திற்காக செலவிடுபவர் இயல்பாகவே என்ன செய்யப் போகின்றோம் என்பதை ஒரு சித்திரமாகவே சொல்லுவார் என நினைக்கிறேன். இதற்கு கேள்வி கேட்டவருக்கு என்ன புரிதல் உள்ளது என்பது என்ன அவசியம்

சந்திப்பு said...

அன்பு தளபதி (இது உண்மையான பெயர் என்று நம்புகிறேன்) திண்ணியத்திற்கும்... உத்தப்புரத்திற்கும்... பழிதீர்க்க வேண்டும் என்ற உங்களது உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால் பிரச்சனை என்ன? திண்ணியத்தையும், உத்தப்புரத்தையும், அதன் உடன் பிறந்த சாதியத்தையும் இந்த மண்ணுக்குள் திணித்தது நிலப்பிரபுத்துவ - சனாதன ஆளும் வர்க்கம். தற்போது இதனை ஆளக்கூடிய முதலாளித்துவ - ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும் எந்தவிதமான மாற்றமும் இன்றி காப்பாற்றிக் கொண்டு வருகின்றனர். எனவே, சாதியம் என்ற கொடிய சமூக நோயை விரட்ட வேண்டும் என்றால் அதனை உருவாக்கிய நிலப்பிரபுத்துவத்தையும் அதன் அடியொற்றி வளர்ந்த குப்பைகளையும் முதலில் ஒழிக்க வேண்டும். தற்போதைய இந்திய ஆளும் வர்க்கம் என்பது முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ ஆளும் வர்கக்ம் - இது ஏகதிபத்தியத்துடனும் சமரசம் செய்துக் கொண்டு செயலாற்றுகிறது. இந்த ஆளும் வர்க்கம் சாதியத்தை ஒருபோதும் ஒழிக்காது. எனவே இதனை ஒழிக்க வேண்டும் என்றால் இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தும் ஒரு மக்கள் ஜனநாயக புரட்சி அவசியம். இது எப்போது நடக்கும் என்பதற்கு ஆரூடம் கொடுக்க முடியாது. ஆனால் இதை நோக்கிய நமது பயணத்தை தொடர வேண்டியுள்ளது. தீவிரமாக. இந்தியா என்பது கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட ஒரு நாடு. எனவே மேற்கண்ட பழமைவாத சிந்தனைகளை ஒரே நாளில் குப்புற கவிழ்த்து விட முடியாது!. இதற்காக பல தரப்பான மக்களையும் அரசியல் ரீதியாக அணிதிரட்ட வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் இந்தியாவில் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக வலுவாக செயலாற்றுவதால் மக்களுக்கு அதன் மீது நம்பிக்கையும் உள்ளது. எனவே இந்த மாயைகளிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை காரணியாக செயல்படும் அந்த அரசியலுக்குள் இறங்கித்தான் நீந்த வேண்டியிருக்கும். அதனைத்தான் சி.பி.எம். தற்போது செய்து கொண்டு வருகிறது. உங்களுக்கு கம்யூனிசத்தின் மீது நம்பிக்கை உள்ளது நல்லது. இந்தியாவில் தற்போதைய சூழலில் கம்யுனிசம் என்ற கருத்தாக்கத்தையும் - அதைச் சார்ந்த அரசியலையும் முன்னெடுத்துச் செல்வதில் சி.பி.எம். மற்றும் இடதுசாரிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. நக்சலிச அரசியல் என்பது அதன் நோக்கத்திலிருந்து விலகி தற்போது சிறு சிறு குழுக்களாக சிதறுண்டு போனதுதான் மிச்சம். எனவே வெகுஜ அரசியல் களத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டு இந்த முதலாளித்துவ சமுகத்தை அம்பலப்படுத்தும் செயலில் ஈடுபடுவதே நீங்கள் குறிப்பிடும் அந்த பழி தீர்த்தலுக்கு முதல்படி என கருதுகிறேன். அதில் நான் முழுமையான நம்பிக்கையும் வைத்துள்ளேன். நன்றி.

மணி said...

நண்பரே என்னுடைய பெயரை உங்கள் ஆள்கள் மூலமாகவே உறுதிப்படுத்த சொன்னேன். ஆனால் தங்களது இயற்பெயருக்கு ஏன் நீங்கள் உங்கள் சொற்படி தளத்தை மாற்றவில்லை.

1. மக்கள் ஜனநாயக புரட்சியில் நம் பக்கம் யார் யார் இருப்பர், எதிரிகள் பக்கம் யார் யார் இருப்பர்.
2. நமது பக்கம் குறிப்பாக புரட்சிக்கு தலைமை தாங்க வரும் கட்சி உறுப்பினர் அய்யர் சாதியில் பிறந்தவராக இருந்தால் பூணூல் அணியலாமா?
3. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பெருகிவரும் இக்காலத்தில் அங்கே ஆளும்வர்க்கம் யார்?
4. சாதி ஒழிப்பில் நமது பக்கம் யார் இருப்பர், என்ன செய்ய திட்டம் உள்ளது.
5. ''முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக'' என குறிப்பிட்டீர்கள். பழைய ராஜாக்களின் பிள்ளைகளும், நிழக்கிழார் வீட்டுப் பிள்ளைகளும் பெருவாரியான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக் கருதுகிறேன். சரியா? எனில் இவர்கள் எப்படி முதலாளிகள் பற்றி பேசுவார்கள். தவறு எனில் நடைமுறையில் சமூக உற்பத்தியில் முதலாளியம் முழுமுற்றாக வளர்ந்து அதன் அரசியல் கோரிக்கையான தேசியத்தை கட்டியமைத்தமைக்கு உதாரணம் தருக.
6. பாராளுமன்றத்தில் பங்கேற்பது பற்றி, மக்கள் அதன்மீது நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறினீர்கள். அதே மக்கள் சாதி தீண்டாமையையும் விருப்பத்துடன் கடைபிடிக்கின்றனர். அதற்காக உத்தபுரத்தில் நீங்கள் அமைதி காத்திருக்கலாமே. மக்களுக்கு வால் பிடிக்கமுடியாது எனக் கருதுகிறேன்.
7. மக்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கலாம். ஆனால் அதைப் பின்பற்றுவது என்ற நடைமுறை நமது முன்னேறிய தொழிற்சங்கத்தை ஆயுதபூஜை கொண்டாட வைப்பது வரை போகும்தானே.
8. நக்சல்பாரிகள் சிறுசிறு குழுக்களாகப் போனது பற்றி சொல்லியிருந்தீர்கள். அதனால் மாத்திரமே அவர்களது லட்சியமும், பாதையும் தவறா? ஏன்?
9. சோம்நாத் சட்டர்ஜியின் தற்போதைய நிலைபற்றி கட்சி என்ன கருதுகிறது.
10. இப்படி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிந்தால் என் போன்ற சிலருக்கு உதவும். பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் விளக்கினால், நானே பிரிண்ட் எடுத்து மக்களிடம் விநியோகிப்பேன்.
11. வெகுஜன அரசியல் களத்தில் நம்முடைய எதிரி யார், நண்பன் யார்
12. எதிரிகள் மாறுவார்கள் எனில் அளவுகோல் என்ன?
13. வெகுஜன அரசியல் களத்தில் எப்படி ஊடாடுவது? புரட்சி எப்படி அதனால் சாத்தியமாகும். ஒரு சினிமா காட்சி போல விளக்கினால் குறைந்தது ஒரு ஆயிரம் பேரிடமாவது இதனை விளக்கி அணிசேர்ப்பேன்.